ஒரு முறை S ராமகிருஷ்ணன் நாவல்களை ஒரு மணி நேரத்தில் நூறு பக்கங்கள் வரை வாசிக்க முடிகிறதெனவும் ஆனால் கவிதைகளை அப்படி வாசிக்க முடிவதில்லை எனவும் கூறியிருந்தார்.ஏனென்றால் கவிதைகள் சொல்லவந்தவைகளை நேரடியாகவும் சொல்லாது,ரொம்ப விரிவாகவும் சொல்லாது.சூட்சுமம் மிகுந்தவை.
 
நாவல்கள் விஷயத்திலயே என் நிலைமை படு மோசம் மிக வேகமாக நாவல்களை படிக்கும் போது continous concentrationனால் மனது வேறெங்கோ தாவி விடுகிறது,உதாரணமாக டெலிபோன் டவர் முதலிய உயரமான இடங்களுக்கு  படிகளில்  ஏறுபவர்கள்  தற்காப்புக்காக  இடுப்பில் கயிறு ஒன்றை கட்டி இருப்பார்கள்,ஏனென்றால் ஒரே விஷயத்தை தொடர்ந்து,ஆழ்ந்து செய்து கொண்டே இருப்பதால் நிச்சயம் கவனம் இடரும்.என்னுடைய கவனம் பொதுவாக நாவலையொட்டிய   சம்பவங்களில்,அது தரும் அதிர்வாக எனக்குள்ளும் கற்பனை ஓடத் தொடங்கிவிடும்..சில சமயங்களில் மணிக்கணக்காக! ஆகவே வேகமாய் படிக்க முடிந்தாலும் இந்த அசை போடும் நிகழ்ச்சியால் நாவலை முடிக்க வாரக்கணக்கில் ஆகும்.
 
நாவலே இந்த லட்சணத்தில் இருக்க,கவிதைகளின் நிலைமை அதை விட மோசம் அதுவுமில்லாமல் சில கவிஞர்களின்  கவிதைகள் ரோட்டு தாரை குடிப்பதை போல அவ்வளவு கடினமாக இருக்கும்.தமிழில் இல்லாத வார்த்தைகளை  போட்டு கவிதை  என்று ஒப்பேற்றி  இருப்பார்கள்.கவிதைகள் படிக்காததற்கு இன்னொரு காரணம் நானும் "கவிதை" என்று தலைப்பிட்டு அப்படி ஒன்றை எழுத முயற்சி செய்வதாலும்,அதன் சாயல் வராமல் இருப்பதற்காகவும்!ஆனால் சிலரது கவிதைகளை படித்தவுடன் எளிமையாகவும்,அழகாவும் இருப்பதாக தோன்றும் கல்யாண்ஜியின் கவிதைகளை அந்த வகையில் ஒன்று,அவரது கவிதைகளில் எனக்கு பிடித்தவை இங்கே சில
சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை
தானாய் முளைத்த
செடி என்கிறார்கள்
யாரோ வீசிய
விதையிலிருந்து தானே


தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்திறந்து பார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவே எந்தக்கடிதமும் இல்லாத ஏமாற்றம்.
இன்று எப்படியோஎன்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்
எந்தப் பறவை எழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.


நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது


இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத்தொலைக்கலாம்.
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்.

அன்புடன்
நான்

3 Responses so far.

  1. D.R.Ashok says:

    ஏற்கனவே படித்தது என்றாலும் நல்ல் கவிதைகளை திரும்ப திரும்ப வாசிக்கும்போது சுகமே.

  2. Ibrahim A says:

    வருகைக்கு நன்றி திரு.அசோக்

  3. கடைசிக் கவிதை வண்ணதாசனுடையதுதானே!????

- Copyright © துளி கடல் -