Archive for December 2009

துண்டான கையும்,மிட்நைட் ஆட்டோ சவாரியும்.

"நாளைக்கு pathalogy லேப் இருக்குடா,கண்டிப்பா சினிமா போயே ஆகணுமா?"கேட்டான் வசந்த்.
"ஆமா படிச்சிட்டு போய் மட்டும் என்னத்த பண்ண போற,இன்னும் ரெண்டு வருஷம் இருக்குல்ல அதுக்குள்ள முடிச்சிடலாம்,வாடா"என்றவனை இழுத்தேன்.

தியேட்டர் போய் சேரும்போது நியூஸ் ரீல் சத்தம் கதவிடுக்கு வழியே குதித்து வந்தது ."டேய் சீக்கிரம்டா" என்றபடி கவுன்டரை நோக்கி ஓடினேன்.சொங்கிப்போய் உக்கார்ந்திருந்த கவுன்ட்டர் ஆள்,எந்த அவசரமும்,அக்கறையுமில்லாமல் டிக்கெட்டை பிய்த்து கையில் கொடுத்தான்.

சுமாரான கூட்டத்துடன் இருந்த தியேட்டரில் எங்கள் சீட்டை தேடிப்போய் அமர்ந்து ,வியர்வை துடைத்து நிமிர்ந்த போது டைட்டில் போட்டான்.
காட்சி ஆரம்பித்த சிறிது நேரத்தில் மூட்டை பூச்சியும்,அதைவிட அதிகமாக படமும் கடித்ததால் அந்த இருட்டிலும் வசந்த் என்னை திரும்பி முறைப்பது தெரிந்தது....நான் ஆர்வமாக படம் பார்ப்பது போல முகத்தை வைத்துக்கொண்டேன்.நான் திரும்பியவுடன் திட்டுவதற்காக என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து திரும்பினேன்(அவன் ஆசை படியே) "டேய் வசந்த்,பாத்ரூம் போகணும் கொஞ்சம் துணைக்கு வரியா?" கேட்டவுடன் அவன் முறைப்பின் உஷ்ணம் அதிகமாகியது ,"படுத்தாதடா போய் தொலைடா....நான் தூங்கிகிட்டு இருக்கேன் படம் முடிஞ்சி போகும் போது எழுப்பு" என்றபடி சீட்டில் நன்றாய் அமிழ்ந்தான்.

மூன்று மெட்டி போட்ட கால்களையும்,ஒரு கொலுசு போட்ட காலையும் மிதித்து "சாரி"கேட்டு வெளியே வந்தேன்.

மைதானம் போன்ற இடம் வெறிச்சோடி போயிருந்தது..ஊரை விட்டு மிக தள்ளியிருந்த தியேட்டர் ஆதலால் ஒரே ஒரு பெட்டிக்கடை மட்டும்,அதுவும் நம்பர் போடப்பட்ட பலகைகளால் சாத்தியிருந்தது...தியேட்டரோடு கோபித்துக்கொண்டது போல ஒரு மூலையில் இருந்த பாத்ரூம் வரிசைகளை நோக்கி நடந்தேன்.

அந்த இடந்திற்கு மொத்தமாக ஒரேஒரு ஊசிப்போன பல்ப் தான் கஞ்சத்தனமாய் ஓளி தந்தது....தண்ணீர்,நிரம்பிய தொட்டியில் இருந்து வழிந்து என் செருப்பை தொட்டது.எல்லா கழிவறைகளிலும் இருட்டு உக்கார்ந்திருந்தது.

பந்த் நாள் கடைதெரு போல வெள்ளிகளற்ற வானம்.....பொட்டு வெளிச்சமில்லாத கருமேகங்களின் சொந்த வானம் ....எப்போதாவது லேசாய் தொடும் காற்று அத்துடன் வரும் உள்ளே ஓடும் படத்தின் சத்தம்......

ஒரு மூத்திரக்கோப்பைக்கு முன்னே நின்று ஜிப்பை இறக்கினேன்.....சொர்ர்ர்ர்ர்ர்ர்ர் (புவி ஈர்ப்பு விசை). பின் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து கை கழுவி....எதேச்சையாக...மிக எதேச்சையாக தான் பார்த்தேன்....

ஒரு மூத்திரப்பிறையில்...அது...அது...
ஒரு கை
வெள்ளை வெளேரென்று வெட்டப்பட்ட ஒரு துண்டான கை....
புதியதாய் ரத்தம் ஒழுகிக்கொண்டு....தீயில் கருகி நாற்றத்துடன்...
லேசாய் துடித்துக் கொண்டிருந்தது.....

பார்த்தவுடன் என் இருதயப்பகுதியில் சிலநொடிகள் எந்த அசைவும் இல்லை... நம்ப முடியாமல் மீண்டும் மலங்கப்பார்தேன்..அது உண்மையென மண்டையில் உரைத்து..... அதிர்ச்சியில் வாய்குழறி....."யிஈஈஈஈஈஈஈ"என்று அசிங்கமாய் கத்தி திரும்பி ஓட எத்தனித்து நீரில் வழுக்கி விழுந்து பின் எழுந்து ஓடினேன்.........

சோடா மூஞ்சில் அடிக்கப்பட்டு கண்விழித்த போது,என் முகத்தருகில் வசந்தின் கவலையான முகம் "என்னடா ஆச்சு",என்றான்.
"ஒரு கைடா,துண்டான கை...துடிச்சிகிட்டு இருக்குடா அங்கே"பாத்ரூம் நோக்கி கை காட்டி கோர்வையில்லாமல் உளறினேன்.

சுற்றி நின்றவர்கள் என்னை "மேல் மாடி" காலியானவனாய் பார்த்தார்கள்.
"எதையோ பார்த்துட்டு...."என்றவனை இடைமறித்து "இல்லடா கண்டிப்பா பார்த்தேன்"என்றேன் பயம் விலகாமல்.

இப்போது சுற்றி நின்றவர்கள் லேசாய் கலவரமானார்கள்.

"சரி,யாரவது ரெண்டு பேர் வாங்க போய் பாப்போம்"என்றது ஒரு நாட்டாமை.

நானும்,வசந்தும்,வேறு தைரியசாலிகள் இருவரும் மெதுமெதுவாய் பாத்ரூம் அறைகளை நோக்கி சென்றோம்.மற்றவர்களெல்லாம் எங்களை,பத்த வைத்த லக்ஷ்மி வெடியாய் பார்த்தார்கள்.
                ------------*****-----------

நான் முழுவது உள்ளே போகாமல் "அங்கே"என்று கை காட்டினேன்.

தைரியசாலி நே.1 லேசாய் போய் எட்டி பார்த்தார் "இங்க வந்து பாருங்க சார்"என்றார் என்னை நோக்கி.வேர்வை அருவியாய் உடலெங்கும் ஓட,வசந்தின் கையை இறுகப்பற்றிக்கொண்டு போய் எட்டிப்பார்த்தேன்...அங்கே.....

ஒன்றும் இல்லை.....எம்ப்டி...சூன்யம்.....

"எதையோ பார்த்து பயந்துருக்கு தம்பி" இது தைரியசாலி நே.2.
"என்னடா நீ இப்படி பண்ணிட்ட,இன்னும் ரெண்டு வருஷத்தில டாக்டர் ஆகபோறவன் நீ "கண்டிந்து கொண்டான் வசந்த்.

வெளியே வந்த மற்ற இருவரும் "ஏதோ நிழலை பார்த்து பயந்துட்டாரு"என்று மற்றவர்களிடம் ஒப்புவித்தார்கள்.
"காலா இருந்தாகூட நடந்து போயிருக்கும் கை எங்க போவும்" என்று ஜோக்கடித்தார் ஒருவர்.
"நான் பார்த்தேண்டா"என்று ஏழாவது தடவையாய் சொன்ன என்னை இடைமறித்து "எதுவும் பேசாதே,கிளம்பு நீ" என்று வாசலுக்கு கூட்டிப்போனான்.

"கண்ணால பார்த்தேன்,விளையாடேல்லாம் இல்ல"ஆட்டோவில் வரும் போதும் புலம்பலை விடவில்லை நான்.
"வெள்ளையாய்,கருகிப்போய்......" சொல்லிகொண்டே வந்தேன்.
"அமைதியாய் வா,hostelல பேசிக்கலாம்".

அப்போது ஆட்டோ ஒரு குலுங்கலுடன் brake அடித்து நின்றது...."சார்",என்று திரும்பினான் ஆட்டோகாரன்.......
"நீங்க பார்த்தது இந்த கையா பாருங்க"என்று இளித்தபடி சட்டையை தூக்கி காட்டினான்.

வெள்ளை வெளேரென்று...புதியதாய் ரத்தம் ஒழுகிக்கொண்டு....
தீயில் கருகி நாற்றத்துடன் ....லேசாய் துடித்தபடி.....அது...அது....அதே கை.
                                -----------*****-----------

பி.கு:என் இருதயத்தில் ஆர்டரீஸ்,வெயின்ஸ் எல்லாம் வீங்கிபோய்,நெருக்கியடித்து வெடித்து இன்ஸ்டன்ட்டாய் செத்துப்போனேன் என்பதை சொல்வதற்காக இந்த பின்குறிப்பு.

"பூவே இளைய பூவே"ஏன் சிறந்த பாடல்?

எனக்கு பிடித்த சில பாடல்களை இந்த தலைப்பின் கீழ் அலசி,ஆராயலாம் என்றிருக்கிறேன்.

"கோழி கூவுது"படத்தில் "பூவே இளைய பூவே"பாடல் எழுதியவர் வைரமுத்து,இசை(வேற யாரு) இளையராஜா.
இந்த பாடல் ஒரு பட்டணத்து வாலிபன்,தன் அழகான கிராமத்து காதலிக்கு பாடுவதாய் இருக்கும்.கேட்கும் போதே ஜில்லென்று,ஒரு ecstasyக்கு கொண்டு போய் விடும். இனி பாடல்...

"காமாட்சி இங்க இருக்கிற பூவெல்லாம் பார்க்கும் போது
எனக்கு உன் ஞாபகமாகவே இருக்கு,
இந்த லெட்டர் உனக்கு ஒரு வித்தியாசமான லேட்டராவே இருக்கும்.
பின் குறிப்பு ,தம்பி ராமகிருஷ்ணா கூச்சபடாமல் மத்த வரிகளையும் படித்து காட்டவும்"

"பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமேஏஏஏஏ.
மடிமீது தேங்கும் தேனேஏஏஏ.....
எனக்குதானே,எனக்குதானேஏஏஏஏ......."

முதல் இரண்டு வரிகளை லேசான voiceஇலும்,அடுத்த இரண்டு வரிகளும் high pitch இலும் வருவதும் அதற்கு மிக அருமையான பின்னணியும் இந்த பாடலின் தரத்தை சொல்லும்.இது ஒரு romantic song ஆனாலும் மலேசியா வாசுதேவனுக்குரிய கரடு,முரடுத்தனம் தெரியும்.அதுவே எனக்கு இந்த பாடலில் இளையராஜாவை விட M.Vயே அதிகம் பளிச்சிடுவதற்கு காரணம்.

"குழல் வளர்ந்து அலையானதே...இரவுகளின் இழயானதே"(இருமுறை)
"விழி இரண்டும் கடலானதே,எனது மனம் படகானதே.....
இளம் பளிங்கு நகம் சேர்த்ததே,நிலவு அதில் முகம் பார்த்ததேஎஎஎஎ"

இருமுறை வரும் முதல் வரி high pitch இல்,கத்திப்பாடுவது போல வரும்,
அடுத்த இரண்டு வரிகளும் ஸ்ருதி இறங்கி,காதலியிடம் சரணடைந்து விட்டாற்போல்,அவள் அழகில் மனம் லேசாகி,இளைப்பாறி பாடுவது போல தோன்றும்.Beautiful.

"இனிக்கும் தேனேஎஎஎஎ.......எனக்குத்தானேஎஎஎஎ........."
"இளஞ்சிரிப்பு ருசியானது...அதுகனிந்து இசையானது...(இருமுறை&high pitch)
குயில் மகளின் குரலானது,இருதயத்தில் மழை தூவுது.......
இரு புருவம் இரவானது....இருந்தும் என்ன வெயில் காயுதேஎஎஎஎஎஎஎ"

முதல் வரி highpitch இல் வரும்,அடுத்த வரி பள்ளத்தில் விழுந்து நம்மை தாலாட்டி தூக்கிப்போகும்.அதுவும் அந்த "காயுதேஎஎஎஎஎஎஎ" வில் ஒரு நீண்ட இழுவை வரும்...யப்பா chanceஎ இல்ல.இந்த பாடல் எனக்கு மிகபிடித்ததற்கே அந்த வரி தான் காரணம்.அந்த வரிகளின்  போது பாடலின் மீது அதிக concentrate பண்ண ஆரம்பித்துவிடுவேன்.

The very best song of Ilayaraaja+Malaysia vasudevan i think.
பி.கு:வைரமுத்து, பிரபுவுக்கு எழுதியதில் தனக்கு பிடித்த பாடல் என எங்கோ படித்தாய் நினைவு.

கொடியின் துணிகள்கொடியின் துணிகள்
ஒவ்வொரு வீட்டின் கொடிகளும்
அதில் காயும் துணிகளும்-காதுகொடுத்தால்
கதைகள் ஆயிரம் சொல்லும்
கேளுங்கள்.

கணவன் மனைவி வாழும் வீட்டின் கொடியில்
புடவைகளும்,சட்டைகளும் வெவ்வேறு திசை
நோக்கி பறந்தபடி இருக்கும்-ஆனால்
உள்ளாடைகளோ பிணைந்தபடி இருக்கும்.

குழந்தைகள் வாழும் வீட்டில்
பொம்மைகள் போட்ட சட்டைகளும்,மூதிரத்துணிகளும்
காற்றில் மிகுந்து ஆடும் -பின்
தரைவிழுந்து புரண்டோடத்தொடங்கிவிடும்.

வேலையற்றவன் வீட்டின் கொடிகளில்
கறைபடிந்த வேட்டியும்,பழுப்பேறிய பனியன்களும்
யாராலும் எடுக்கப்படாமல்-வேறுதுணிகளோடு
சேராமல் ஒதுங்கித்தொங்கியபடி இருக்கும்.

ரிப்பன்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிகள்
கன்னிப்பெண் வாழும் வீட்டை சேர்ந்தவை-அவை
காய்ந்து விட்ட பின் அடுத்த மாடிக்கு
தப்பியோடிப்போய் விழுந்திருக்கும்.

விதவை வாழும் வீட்டின் கொடிகள்
எப்போதும் அறுந்துபோய் இருக்கும்-அங்கே
சாயம்போன புடவைகளும்,கவர்ச்சியற்ற உள்ளாடைகளும்
மதில் மேல் காய்ந்திருக்கும்.

கொடியில் காயும் துணிகள் இப்படிதான்-
வீட்டில் வாழ்பவர்களின்
இருப்பை மட்டுமல்ல,
நிலையையும் சொல்வதாய்
ஆகிவிடுகின்றது.


***உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது***

அன்புடன்
நான்

- Copyright © துளி கடல் -