Archive for July 2010

Forrest Gump (1994):ஜென் குருவின் வாழ்க்கை-2

படத்தின் விமர்சனத்தின் (என் பார்வையில்) முதல் பகுதிக்கு செல்ல இங்கே கிளிக்கவும்
ஒரு ஜென் குருவின் வாழ்க்கை:Forrest Gump 1


வின்ஸ்டன் க்ரூம் 1986 இல் எழுதிய நாவலை படமாக எடுத்திருக்கிறார் ராபர்ட் ஜேமிக்ஸ்.
படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு ஆழமான அர்த்தம் புதைந்திருக்கும்....
1 .முதல் காட்சியில் கம்ப் பேச தொடங்கும் முன் ஒரு இறகு பறந்து வந்து அவன் காலடியில் விழுகிறது,அதை எடுத்து அவன் புத்தகத்தில் வைத்துக்கொள்கிறான்.பின் இறுதிக்காட்சியில் தன் மகனை பள்ளிக்கு அனுப்பும் போது அதே இறகு கீழே விழுந்து காற்றில் எழும்பி பறக்கும்.காற்றில் அடித்துச்செல்லப்படும் இறகு தான் வாழ்கை,அது போகிறபோக்கில் நாமும் போகிறோம்...இந்த கதையின் நாயகனும் அப்படி தான் எதையும் தனக்கென வைத்துக்கொள்ளது அன்பையும்,எளிமையையும் காட்டிச்செல்கிறான் ,எதுவும் அவன் போக்கை திசை திருப்புவதில்லை.....a very good motivational movie.
     நம்ம படங்களில் ஒரு ஊனமுற்றவனயோ,மனநிலை சரியில்லாதவனயோ,கர்பவதியயோ காட்டினால் நிச்சயமாக ஏதோவொரு காட்சியில் அவர்களை அடித்தோ,சித்ரவதை செய்தோ பார்வர்களுக்கு இருக்கும் மனதின் மென்மையான ஓரத்தை bladeஆல் கீறி காசு பார்பார்கள். (நக்கலாக சொல்லவில்லை,ஆற்றாமையில் சொல்கிறேன்).   டாம் ஹான்க்ஸ்:இவரது நடிப்பை "saving private ryan,The Terminal,Cast Away,Philadelphia" போன்ற படங்களை பலமுறை பார்த்து வியந்திருக்கிறேன்.லேசாய் மனநிலை பிறழ்ந்த,அறிவுத்திறன் குறைந்த வாலிபராகவே வாழ்ந்திருக்கிறார் எனலாம்.டாம் ஹான்க்ஸ்ஐ சுற்றி தான் மொத்த படமே இவர் (கொஞ்சம் லூசுத்தனமாக,திக்கி பேசும்) வாய்ஸ்-ஓவரிலையே நகரும்.ஆனாலும் இவரது நடிப்பும்,உடல்-மொழியும் (body language?) அந்த குரலுக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கும். கம்ப்ஆக நடித்திருக்கும் சிறுவனிடம் இருக்கும் மேனரிசம்,வாய்ஸ் டோன் படம் முழுவதும் டாம் ஹான்க்ஸ்இடம் தெரியும்.

அலன் சில்வெஸ்டிரி யின் டைட்டில் இசை என்னை மிகவும் கவர்ந்தது.படம் முழுவதும் ஆர்ப்பாட்டமில்லாத இசை.

செயல்திறன் அதிகமற்ற கம்ப் வாழ்கையை லேசாகவும்,பற்றில்லாமலும் எடுத்துக்கொண்டு அன்பாலும்,பிரியதாலும் நிறைத்தால் பணத்தையும்,புகழையும் எளிதாக வென்று,எளிதாக அதைத்தாண்டியும் போகின்றான்.

பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்சிகளை தொட்டுச்செல்லும் இப்படம் எடுக்க ஒன்றே ஒன்று தான் தேவைபட்டிருக்கும் "Keep things simple", possitive attitude .....மனிதர்களின் உள்வாழ்கையை,உணர்ச்சிகளை காட்டுகிறேன் பேர்வழி என்று ரொம்பவும் குழப்பி,நம்மையும் குழப்ப முயற்சிக்கவில்லை.

இந்த படம் ஒரு அனுபவம்,காற்றில் பறக்கும் இறகானதை போல ஒரு அனுபவம்.

பின்குறிப்பு:Forrest Gump (1994) ஆம் ஆண்டு வெளிவந்து 6 ஆஸ்கார்களை வாங்கிய இந்த படத்தை என்ன விமர்சனம் செய்தாலும் சாதாரணமாகவே தோன்றும்.பார்த்து அனுபவிப்பது நல்லது.மேலும் போன பதிவில் திரு.ஸ்ரீதர் அவர்கள் பின்னூட்டமிட்டதை போல இதில் கவனிக்க வேண்டியது நிறையதான் இருக்கிறது.ஆனால் ரஜினி நடித்த சிவாஜி படத்திற்கு விமர்சனம் எழுதுவதை போல எழுதிவிடமுடியாது.ஏனெனில் நமக்கு காட்சிகளின் முக்கியத்துவத்தை விட ரஜினியின் செயல்களே முக்கியமாகப்படும்.அவரை வைத்தே காட்சிகள் நகர்த்தபட்டிருக்கும்.ஆனால் இதுபோன்ற படங்களுக்கு காட்சியின் making ,built-up தான் உயிரே,அப்படியிருக்க எல்லா காட்சிகளையும் உணர வைக்கவோ,புரிய வைக்கவோ எழுதத்தேவையில்லை என எண்ணுகிறேன்.
 
அன்புடன்
Ibrahim A

                                                                  **|||**

Forrest Gump (1994):ஜென் குருவின் வாழ்க்கை-1

முக்கியமான முன்குறிப்பு:இந்த படத்திற்கு எப்படியும் ஒரு சிறந்த விமர்சனத்தை செய்து விட முடியாது.படம் பார்க்கும் பொது எழுந்த மறைந்த உணர்ச்சிகளை வெள்ளை பக்கங்களிலும் எழுதிவிட முடியாது.நான் அனுபவித்த அந்த ecstasyஐ முழுதாக முடியாவிட்டாலும் கொஞ்சமாவது பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். 

கதை:Keep things simple என்று சொல்வர்....அதுதான் ஒரு ஜென் குருவின் வாழ்கை முறை.ஆனால் இப்படத்தின் கதாநாயகனுக்கு அந்தளவிற்கு ஞானமோ,அறிவோ இல்லை இருந்தாலும் அவனின் எளிமையே அவனை உயர்த்துகின்றது. 
      பாரஸ்ட் கம்ப் ஒரு பஸ் ஸ்டாப்இல் அமர்ந்துகொண்டு அருகில் இருப்பவர்களிடம் தன்னுடைய கதையை சொல்லத்தொடங்குவதாக ஆரம்பிக்கிறது படம்.அவர்கள் கேட்கிறார்களா இல்லையா என்பதை பற்றியெல்லாம் அவனுக்கு கவலை இல்லை,சொல்லிக்கொண்டே இருக்கிறான்.கதை போகப்போக அவன் பஸ்ஸ்டாப் மாந்தர்கள் மாறுகின்றார்கள்,சிலர் நம்புகின்றார்கள்,சில நம்ப மறுக்கின்றனர் ஆனாலும் அவன் கதை சொல்வதை நிறுத்துவதே இல்லை.படம் முழுவதும் வாய்ஸ் ஓவர்/narration முறையிலேயே வரும்.
 
 1951ல் க்ரீன்போவ்,அலபாமாவில் வாழும் கால் செயலிழந்த,IQ குறைவான கம்ப்ஐ ஒரு நல்ல பள்ளியில் சேர்க்க அவன் தாய் முயலுகின்றாள்.ஆனால் தலைமை ஆசிரியரோ இவனை இங்கே படிக்க லாயக்கற்றவன் (கால் ஊனம்,IQ (அறிவு திறன்) போதிய வளர்ச்சியில்லை) அதனால் இங்கே சேர அனுமதியில்லை ,வேறு காப்பகத்தில் சேர்க்குமாறு சொல்கிறார்.ஆனாலும் அவன் தாய் தலைமை ஆசிரியரை தன் உடலை விலையாக கொடுத்து சேர்க்கிறாள்.பள்ளிக்கு போகும் முதல் நாள் பேருந்தில் ஜென்னி அவனுக்கு இடம் கொடுக்கிறாள் ,அவனுக்கு தோழியாகவும் ஆகின்றாள்.
    
   கம்ப் ஆர்பாட்டமில்லாதவன்,அடுத்தவர் மேல் எளிதில் பரிதாபப்படுபவன்,பெரும் அப்பாவி,நீரில் அடித்து செல்லும் சருகை போல அவன் வாழ்கை இருக்கிறது,பணமோ,பதவியோ எதுவும் அவனை அசைப்பதில்லை,அதை அவன் பொருட்படுத்துவதும் இல்லை.அன்பிற்கு மாறுமே லேசாய் சலனப்படுபவன்......இதெல்லாம் "அந்த வானத்தை போல மனம் படைச்ச" என்று ஒரே பாடலில் வருவதில்லை...படம் முடியும் போது நமக்கே விளங்கும்.
   அவனது அறிவுத்திறன் குறைவு ஆதலால் யார் சொன்னாலும் அதை அப்படியே கேட்பான் ,அது அவனது சிறப்பம்சம்.ஒரு நாள் அவன் தோழியுடன் விளையாடிக்கொண்டிருக்க சில சிறுவர்கள் கல்லால் அடித்து துரத்த ஆரம்பிக்கும் போது அவன் தோழி ஜென்னி "ஓடு,ஓடு" என அவனை பணிக்கிறாள்.அவன் எழுந்து ஓடத்தொடங்குகின்றான்.....விந்தி விந்தி வேகமாய் ஓட முயற்சிக்கின்றான்....அப்படி ஓடும் போது அவன் செயலிழந்த கால்களில் கம்பிகள் கொண்ட ஷூ (leg brace) தெறித்து விழுகின்றது.....இப்போது நன்றாகவும் வேகமாகவும் அவனால் ஓட முடிகின்றது....ஓடிக்கொண்டே இருக்கிறான்.
  
   அவன் கல்லூரிக்கு சென்றதும் அவன் காலேஜ் புட்பால் (american football) டீம்இல் இடம் கிடைக்கிறது,அதனாலயே பின்னர் ஜான் கென்னடியின் (அப்போதைய அமெரிக்காவின் ப்ரெசிடென்ட்) விருந்துக்கு போகிறான்,விருந்து முடிந்து கென்னடி அவர்கள் கைகொடுத்து "எப்படி இருக்கு உங்களுக்கு" என கேட்கிறார் ,அதற்க்கு கம்ப்ஒ (Mr.Pepper என்னும் பானத்தை நிறைய குடித்துவிட்டதால்) "அவசரமாய் மூத்திரம் போகணும் போல இருக்கு"என்கிறான் அவரிடமே.
   அவன் தோழி ஜென்னியோ ஏழை குடும்பத்தில்,தந்தையின் பொறுப்பற்ற கண்டிப்பில் வளர்பவள்...வளர்ந்தபின் எப்படியாவது பணம் சம்பாதிக்க நினைப்பவள்.கல்லூரியில் படிக்கும் போதே "playboy" பத்திரிக்கையில் போஸ் கொடுக்கிறாள் ,நிர்வாண கிளப்களில் இரவுகளில் பாட்டு பாடுகிறாள்...கிட்டத்தட்ட (விரும்பியோ/விரும்பாமலோ) ஒரு விபச்சாரியை போல வாழ்கிறாள்.   
   கம்ப் கல்லூரி வாழ்கை முடிந்ததும் ராணுவத்தில் சேர்ந்து வியட்நாம் போருக்கு செல்கிறான்.அங்கே இன்னோர் வீரனான பூபாவையும் ,அவர்களது குழு தலைவர் Leutinant.டேன்ஐ சந்திக்கின்றான்.இதில் பூபாவின் குடும்ப தொழில் இறால்(shrimp) பிடிப்பது,அந்த தொழில் சரியாக போகாததால்,குடும்ப சூழ்நிலையால் ராணுவத்திற்கு வரவேண்டியதாகிறது.ஒரு சிறிய மீன்-பிடி படகு வாங்கி நிறைய இறால் பிடிக்கவேண்டும் என்ற கனவே அவன் கண்களில் தேங்கியிருக்கிறது ,அந்த படகுக்கு கேப்டன்ஆக இருக்கவேண்டும் என்பதேயாகும்.மேலும் கம்ப்பிடம் நீ எனக்கு அந்த கப்பலில் partner ஆக இரு என்கிறான்.

    இதற்கிடையில் போரில் எதிரிப்படை தாக்குதலில் அவன் நண்பன் பூபா குண்டடிபட்டு இறந்துவிடுகிறான்.பாரஸ்ட் கம்ப் தன் பின்புறத்தில் அடிபட்டும் Lt.டேன்ஐயும்,மேலும் சிலரையும் தூக்கிக்கொண்டு ஓடி ஓடியே காப்பாற்றிவிடுகிறான் .போரில் ரெண்டு கால்களை இழந்த Lt.டேன் "என்னை ஏன் காப்பாற்றினாய்,நான் களத்திலேயே பெருமையாய் இறந்திருப்பேனே"என ஆவேசப்படுகிறார்.மருத்துவமனையில் ஒருவன் கம்ப்பிற்கு பிங்-பாங் (table tennis) சொல்லித்தருகிறான் "இதை விளையாடுவது ஒரு பெரிய விஷயமே இல்லை,எந்த கிறுக்கனும் எளிதாக விளையாடலாம்,என்ன ஒன்று பந்திலிருந்து மட்டும் கண்ணை எடுத்துவிட கூடாது,அவ்வளவுதான்"என்கிறான்.அதையும் நேரங்காலமின்றி விளையாடி கற்றுத்தேறுகின்றான் நம்ம கம்ப்.
   
  போரில் மற்றவர்களை காப்பாற்றிய வீரசெயல்களுக்காக அவனுக்கு மறுபடியும் ப்ரெசிடென்ட்இடம் (congressional medal of honour) பதக்கமும் (பதக்கம் அணிவிக்கும் போது ப்ரெசிடென்ட்"போரில் உங்களுக்கு எங்கயாவது அடிபட்டிருக்கும் அல்லவா" என்கிறார்,சிறிது தயங்கி,பின் லேசாய் சிரித்து "இங்கே அடிபட்டிருக்கிறது"என pantஐ கழற்றி தன் பின்புறத்தில் உள்ள காயத்தை காட்டுகின்றான்,அப்பாவியாய்),பதவி உயர்வும் கிடைக்கிறது.
  அங்கேயே (வாஷிங்டன்ல்) வியட்நாம் போர்-எதிர்ப்பு ஊர்வலத்தில் மறுபடியும் அவன் தோழியை/காதலியை சந்திக்கின்றான்(இப்படி பலமுறை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்சிகளில் எதிர்பாராவிதமாக தலையை காட்டிவிடுகிறான்),அவளை விரும்புவதாகவும் தன்னோடு வைத்துக்கொள்ள ஏங்குவதாகவும் சொல்கிறான்.ஆனால் அவளோ அவனுக்கு ஆறுதல் சொல்லி தன்னுடைய பாய்-ப்ரென்ட் உடன் சேர்ந்து ஒரு இசை குழுவுடன் சேர்ந்து (ஹிப்பியாக) சுற்றுகிறாள்,போதை பழக்கத்துக்கும் அடிமை ஆகின்றாள்,சில தடவை மனம் வெறுத்து தற்கொலைக்கும் முயல்கிறாள்.
    
இதற்கிடையில் கம்ப் பிங்-பாங் இல்,நாட்டுக்காக முதல் முறையாக சீனா வரை சென்று விளையாடி புகழ்பெருகின்றான்.அவன் ராணுவ சர்வீசில் இருந்து ஓய்வு பெற்று வீடு வரும்போது பிங்-பாங் பேட்டுக்கு அவன் sponsorship கொடுத்ததனால் 25 ,000 டாலர் பணம் கிடைத்திருப்பதாக அவன் தாய் கூறுகின்றாள்.அந்த பணத்தை வைத்துக்கொண்டு பூபாவின் ஆசையை நிறைவேற்ற நினைக்கிறான்.இதற்கிடையில் இரண்டு கால்களும் இன்றி,தண்ணியடித்து கொண்டு ரூமில் அடைந்து கிடக்கும் Lt.டேன்ஐ சந்திக்கின்றான் அவரிடம் ".....என் நண்பன் ஆசைப்படி நான் ஒரு மீன்-பிடி படகை வாங்கி,இறால்(shrimp) பிடிக்கபோகிறேன்,நீங்கள் என்னுடைய பார்ட்னர் ஆக வந்துவிடுங்கள்" என்று அழைப்புவிடுத்து,பூபாவின் குடும்பத்தை சந்தித்து அங்கேயே ஒரு போட் வாங்கி இறால் பிடிக்க தொடங்குகின்றான்.
பின் Lt.டேன் உம் சேர்ந்து கொண்டு பேரு முயற்சிக்குபின் நொந்து போயிருக்கும் எறால் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கின்றனர்."பூபா-கம்ப்" எறால் கம்பனியை முன்னணி நிறுவனமாக்கி அமெரிக்காவின் பணக்காரர்களுள் ஒருவராகின்றனர்(இப்படத்திற்கு பின் 1996ல் உண்மையாகவே "Gubba-Gump shrimp" என்றொரு உணவகம் திறக்கப்பட்டு புகழ்பெற்று விளங்குகிறது)ஆனால் பணமோ புகழோ அவனை தடம் புரட்டுவதில்லை,அவையெல்லாம் அவன் வாழ்வின் ஒரு சில பக்கங்கள் அவ்வளவே.எப்போதும் எளிமையாகவே வாழ்கிறான்.அவன் விரும்புவதெல்லாம் அவன் தாயையும்,காதலி ஜென்னியின் அண்மையும் தான்.
வரும் லாபத்தில் பூபாவின் பங்கை அவன் குடும்பத்திற்கு கொடுத்துவிட்டு,கம்பனியின் மொத்த பொறுப்பையும் Lt.டேனிடம் கொடுத்துவிட்டு உடல் நிலை சரியில்லாத தன் தாயை காண செல்கிறான்."எதையுமே எனக்கு புரியும்படி எளிதாகச்சொல்பவள் என் தாய் தான்"என நம்பும் கம்பிடம் "சாவும்,வாழ்வின் ஒரு பகுதி தான்" என்கிறாள் மேலும் "Life's a box of chocolates, Forrest. You never know what you're gonna get"என்று மீண்டும் கூறி இறக்கிறாள்.(எவ்வளவு ஆழமான வாசகம்!).

    மீண்டும் அவனோடு ஜென்னி வந்து சேர்கிறாள்,அவள் மீது அவனுக்கு காதல் பெருகத்துவங்குகிறது ,அவளது அண்மையை விரும்பி அவளுக்காகவே,அவளுடனே இருக்கத்தொடங்குகின்றான்.தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக சொல்லும் கம்பிடம் நான் உன்னக்கு பொறுத்தமில்லாதவள் என்று கூறி அவனோடு ஒரு இரவைக்கழித்து அவனுக்கு தெரியாமல் போய் விடுகிறாள்.அடுத்த நாள் கம்ப் தனித்தவனாக எழுகிறான்,இயலாமையாலும்,கோபத்தாலும் எழுந்து ஓடுகின்றான்...எப்போதும் போல நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறான்.கிட்டத்தட்ட 3 வருடம்,8 மாசம் ஓடுகின்றான்...பேட்டி எடுக்கவரும் மீடியாகாரர்களிடம் "பசிக்கும் போது சாப்பிடுகின்றேன்,தூக்கம் வரும்போது தூங்குகின்றேன்...ஓட நினைக்கும் போது ஓடுகின்றேன்"என்கிறான்.மீண்டும் அமெரிக்க முழுவதும் பிரபலமாகின்றான்.
     இதுதான் பாரஸ்ட் கம்ப் பஸ்ஸ்டாப்பில் காத்திருக்கும் போது சொல்லும் பிளாஷ்-பேக் ...பின் அங்கிருந்து தன்னை லெட்டர் எழுதி ஜென்னி வரச்சொன்ன ஜென்னியை பார்க்க செல்கிறான்.அங்கே ஒரு சிறுவனை பார்த்து அவன் யாரென கேட்கிறான்...அப்போது நடக்கும் உரையாடல்.....

Jenny : His name is Forrest.
Gump : Like me. (என்கிறான் லேசான ஆச்சரியத்துடன்).
Jenny : I named him after his daddy.
Gump: He got a daddy named Forrest, too?
Jenny : You're his daddy, Forrest.

என்று ஜென்னி சொல்லும் போது தப்பு செய்துவிட்டதாக சில நொடிகள் கலங்கி பின் தன் மகனை கண்டு கலங்கி நிற்கிறான்.பின் "இவனும் என்னை போலவா,இல்லை அறிவாளியா?" என்கிறான். (டாம் ஹான்க்ஸ் இந்த இடத்தில மிக அருமையாக நடித்திருப்பார்..ஆஸ்கார் கொடுத்திருக்கிறார்களே சும்மாவா?).
    
தனக்கு பெயர் தெரியாத நோய் இருப்பதாக கூறும் ஜென்னியயும்,சிறுவன் பாரஸ்டயையும் கிரீன் போவிற்கு அழைத்து போகின்றான்.ஜென்னியை திருமணமும் செய்து கொள்கிறான்.திருமணதிற்கு வரும் Lt .டேன் செயற்கை கால் பொருத்திக்கொண்டு தனது வருங்கால மனைவியுடன் வருகிறார்.வாழ்வை வெறுத்து சாக விழைந்த தனக்கு ,தன்னம்பிக்கை தந்த கம்ப்பை நன்றியோடு பார்த்து செல்கிறார்.
    சில நாட்களில் ஜென்னி இறந்துவிடுகிறாள்,பின் ஒரு நாள் அவள் கல்லறையின் முன் நின்று தன் மகனுக்கு எல்லாம் தானே செய்வதாகவும்,அவன் மிக அறிவாளியாக திகழ்வதாகவும் சொல்கிறான்.(தொடரும்)
படத்தின் சிறப்பம்சங்களையும் ,இயக்குனர்,டாம் ஹான்க்ஸ் (Forrest gump) பற்றி அடுத்த பகுதியில் பார்போம்.
பின்குறிப்பு:Forrest Gump (1994) ஆம் ஆண்டு வெளிவந்து 6 ஆஸ்கார்களை வாங்கிய இந்த படத்தை என்ன விமர்சனம் செய்தாலும் சாதாரணமாகவே தோன்றும்.பார்த்து அனுபவிப்பது நல்லது.நான் சொல்ல வந்ததை முழுமையாய் சொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை.

விரைவில் "The shawshank redention","The god father" போன்ற படங்களுக்கு விமர்சனம் பதிவேற்றம் செய்யப்படும்.

அன்புடன்
Ibrahim A
                                                               ****

- Copyright © துளி கடல் -