Archive for August 2010

ராஜேஷ்குமார்,சுபா,பட்டுக்கோட்டை பிரபாகர்

    

 எப்போதிலிருந்து ஆரம்பித்தேன் என்று நினைவில்லை....ஆறாவது படித்துக்கொண்டிருக்கும் போது என நினைக்கிறன்.மழைகால பள்ளி விடுமுறை நாளொன்றில் கட்டிலின் மேல் போர்வைக்கடியில் சுருண்டு கொண்டு அந்த திகில் கதையை படித்தேன்.கதை சுத்தமாக நினைவில் இல்லை.ஒரு கிராமம்,பாழடைந்த பங்களா,இருட்டு உருவம்,இலைச்சருகு போன்ற காட்சிகள் தீற்றலாக தெரிகிறது.அப்போதிலிருந்து துவங்கியது அந்த பைத்தியம்(பைத்தியக்காரத்தனம் என்று வீட்டில் திட்டுவார்கள்).  என் வீட்டில் அப்போது நிறைய புத்தகங்கள் குவிந்திருக்கும் (இலக்கிய கழிவுகளெல்லாம் இல்லை....மாலைமலர்,கண்மணி,ரமணி சந்திரன் போன்றவை தான்....)அதிலிருந்து பேய் கதைகளை மட்டும் வாசிக்க ஆரம்பித்தேன்....பின்பு பேய்கள் இல்லா நேரத்தில் எல்லா புத்தகங்களையும் வாசிக்க ஆரம்பித்தேன்(பாடபுத்தகங்கள் நீங்கலாக).பின் முதன் முதலாக ராஜேஷ்குமாரை படிக்க தொடங்கினேன் (வாசிக்க..வாசிக்க என்று வரிக்கு வரி எழுதுவது ரொம்ப இலக்கியத்தனமாக இல்லை?).பள்ளி நாட்களில் எல்லாம் என்னுடைய பொழுதுபோக்கு அதுதான்.அந்த புத்தகங்கள் படிப்பதை பார்த்தல் வீட்டில் கண்டபடி அடிவிழும் (உபயம்:தாத்தா,அம்மா) இருந்தாலும் ரகசியமாய் அதன் சுவையில் பல நாட்கள் முயங்கிக்கிடந்திருக்கிறேன்.

      ராஜேஷ்குமாரின் பல நாவல்கள் மிகவும் அற்புதமாக இருக்கும்(ஒத்துக்கொள்ள வேண்டும்).அதிலும் விவேக்-ரூபலா வரும் நாவல்கள்...ரஜினி படங்களை பார்க்கும் போது ரஜினி என்ன செய்தாலும் நமக்கும் துடிப்பாக இருக்கும்...அதுபோல விவேக்கின் ஒவ்வொரு அசைவும்,செயலும்,திறனும் வியக்கவைக்கும்.அதுவும் ஒன்றுமே புரியாத இடத்தில வந்து நச்சென்று ஒரு க்ளு சொல்லுவார் பாருங்கள் ,நமக்கு ஜிவ்வென்றிருக்கும்.சில கதைகளை இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன் .ராஜேஷ்குமார் பாணிஎன்றால் கதையின் ஆரம்பத்திலிருந்து முடிசுகள் விழுந்து கொண்டே இருக்கும்,ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியில் அதிர்ச்சி காத்திருக்கும்.நாவல்களில் இரு வேறு கதைகளுடன் தொடங்கி கடைசியில் இணைந்து முடியும்.படிப்பதற்கு எளிமையாகவும் ஆபாசமற்றதாகவும் இருக்கும்.மேலும் அவர் கதையின் மாந்தர்களில் அரசியல்வாதிகள் அழுக்கானவர்களாகவும்,காதலர்கள் தூய்மையற்றவர்களாகவும், கணவன்-மனைவிகள் துரோகம் செய்பவர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும் .நினைவில் இருக்கும் சில சிறந்த நாவல்கள் :நீல நிற நிழல்கள்,கறுப்பு ரத்தம்.

     பட்டுக்கோட்டை பிரபாகர்,சுபா நாவல்களில் நிறைய மசாலாத்தனங்கள் நிறைந்திருக்கும்.பி.கே.பி நாவல்களில் பல கதைகளில் கொலைகாரன் கொள்ளைகாரன் பார்வையிலிருந்தே கதை தொடங்கும்,அவன் எந்த தடயங்களையும் விட்டு வைக்காமல் சென்றிடுவான்.நம் ஹீரோ அதிலிருந்தும் ஏதாவதொரு க்ளுவை கண்டுபிடித்து இறுதியாக கள்ளனின் சட்டையை பிடித்துவிடுவார்.கதை சொல்லும் பாங்கும் நகைச்சுவையாகவும்,தெளிவாகவும் இருக்கும். சில கதைகளில் நடுத்தர குடும்பத்து காதலும்,காமமும்,சோகமும்,வறுமையும் அழகாய் சொல்ல பட்டிருக்கும்.முதிர்கன்னியை நாயகியாகக் கொண்ட நாவல் ஒன்றில்,நாயகிக்கும் அவளுடன் ஜெராக்ஸ் கடையில் வேலை பார்க்கும் இளவயது பெண்ணிற்கும் நடக்கும் உரையாடல் :
முதிர்கன்னி கேட்பாள் "அதோ அந்த ஸ்கூட்டரில் இருக்க கட்டிக்கொண்டு போகும் ஜோடியை பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது?"என்று.அதற்கு அந்த சிறுபெண் "நாமும் நம் காதலனுடன் இது போல போகவேண்டுமென தோன்றும்"என்பாள்.நாயகி "ஆனால் நானோ,அந்த ஸ்கூட்டர் பெண்ணாய் அந்த இடத்தில நான் இருக்க கூடாதாவென ஏங்குவேன்" என்பாள்.பின் காலப்போக்கில்(கதையின் போக்கில்) அந்த கடையின் முதலாளிக்கு கள்ளத்தனமாய் மனைவியாவதாக கதை முடியும்.
      இப்படி பல கதைகள் எளிமையாய் நெஞ்சை தொடுவதாய் இருக்கும்.அவர் கதைகளின் மாந்தர்க்கலெல்லாம் வேலையற்ற காதலனாகவோ,ஜன்னலோரத்தில் கம்பிகளுகிடையில் அமர்ந்து தெருவை வெறிக்கும் முதிர்கன்னிகளாகவோ,எதிர் வீட்டு விதவையின் நிறம் நிறமான உள்ளாடையை பற்றி பேசும் ஆச்சார மாமியாகவோ விவரிக்கப்பட்டிருப்பர் .நாம் கடந்து செல்லும்,புழக்கத்தில் இருக்கும் மனிதர்களாகவும்,அவர்கள் வாழ்க்கையும்,காதலும் இயல்பானதாகவும் புனயப்படிருக்கும்.
பரத்-சுசீலா வரும் நாவல்கள்,கடிந்தங்களில்,உரையாடல்களில் நகரும் நாவல்கள் என் வெரைட்டி கொடுத்து கலக்குவார்.

       சுபா நாவல்களெல்லாம் செம லோக்கலாக இருக்கும்,பலசாகச சண்டைகள்(கழுத்தில் ஜூடோ வெட்டு வெட்டினான்,அடி வயிற்றில் முஷ்டியை இறக்கினான்).சில படங்களில் உண்மையாகவே ஆங்கிலப்படங்களின் சாயல் தெரியும்.ராணுவம் நிறைய கதைகளில் வரும் .செல்வா-முருகேசன்-டில்லி போன்ற கதை மாந்தர்கள் வழியாக சென்னை பாஷையில் புகுந்து விளையாடியிருப்பார்கள்.வாசிக்க கொண்டாட்டமாக இருக்கும் எழுத்து மொழி சுபாவினுடயது.பல நாவல்கள் படித்திருந்தாலும் தலைப்புகள் நினைவிலில்லை."ஐ லவ் யு" ,பேரநோயா(paranoya) வை மையமாக வைத்து எழுதப்படிருக்கும் "என் மன்னனுகென ஒரு நிலா" போன்றவை நன்றாக இருந்ததாகப்பட்டது.
       பள்ளிப்பருவ வயதில் நிறைய மர்மங்களும்,சாகசங்களும் ,லேசான காதலும் ,அதன் கவர்ச்சியுமே நம்மை இழுத்திருக்கும்.நம் பதின்மவயதில், படங்களில் டைட்டில் ஓடும் போது "சண்டை காட்சி" யாரென அதிமுக்கியமாக கவனித்திருப்போம்.இன்று அதிகமாக கேலிகளுக்குள்ளாகும் விஜயகாந்தின் சண்டை காட்சிகளை நம் எத்தனை பேர் ஆர்வமாய் பார்த்திருப்போம்.கை தட்டி ரசித்திருப்போம்.குப்பைகள் என எதையும் கூறிவிட முடியாது.பள்ளி கல்லூரி நாள்களில் ஒசியிலும்,நூலகத்திலும் நாவல்(மட்டுமே) படித்து திரிந்திருக்கிறேன்.ஓடும்(ஆடும்) பேருந்திலும்,ரயிலிலும்,மொபைல் வெளிச்சத்திலும் படித்துப்படித்தே இன்று பவர் கண்ணாடி போட்டிருக்கிறேன் என்பது இங்கு தேவையில்லாதது.

      எந்தவொரு வாசிப்பின் தொடக்கத்திற்கும் பின் அதை தொடர்வதற்கும் இது போன்ற எழுத்தாளர்களின் நாவல்களே ஊக்கியாய் இருந்திருக்கும் எனப்படுகிறது.இவையெல்லாம் இப்பொழுது படிக்க இயலாவிட்டாலும் கூட சிறுவயதில் இவையில்லாமல் மேலே வந்திருக்க முடியாது. பெரிதும் அறியப்படும் எழுத்தாளர்.எஸ்.ரா கூட தன் சிறுவயதில் காமிக்ஸ் சாகச புத்தகங்களில் திளைத்திருந்ததாக கூறியுள்ளார்.இன்று இதையெல்லாம் குப்பயென்று ஒதுக்கித்தள்ளும் பலரும் பிறக்கும் போது,வளரும் போது இலக்கியக்குஞ்சாக இருந்திருக்க முடியாது.இது போன்ற எழுத்துகளை ஒருமுறையேனும் வருடிதான் வந்திருக்க வேண்டும்.

       ராஜேஷ்குமார்,சுபா,பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்களை இன்னும் கிராமங்களிலும்,சிறு நகரங்களிலும் காலை எழுந்தவுடன் ரேடியோவை திருகி ரெயின்போ பன்பலையும்,"நீங்கள் கேட்ட பாடல்களையும்" கேட்கும் வாசகர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்.படிப்பறிவு குறைந்த தொழிலாளிகளும், விவசாயிகளும் இவர்களை விரும்பி படிப்பதை அறிந்திருக்கிறேன் .இன்று தமிழ் இலக்கியச்சமுதயமே இன்டர்நெட்டில் சிதறிக்கிடக்கின்றது.எந்த எழுத்தாளரின் புத்தகத்திற்கான,விளம்பரமும்,விற்பனையும் இதில் தான் காணகிடைகின்றன,எனவேதான் இந்த வாசனை எதுவும் தீண்டாத அவர்களுக்கு மிக குறைந்த விலையில்,எளிதாய் கிடைக்கும் பாக்கெட் நாவல்களெல்லாம் அவர்கள் வாழ்வின் அங்கமாகிவிடுகிறது.

பின்குறிப்பு :இப்படியாக க்ரைம் நாவல்கள்,காமிக்ஸ்ல் தொடங்கிய என் வாசிப்பனுபவம் (ஆரம்பிச்சுட்டாண்டா!) இன்று சுந்தர ராமசாமி,சாருநிவேதிதா,எஸ்.ரா,அசோகமித்திரன்,கி.ரா,தி.ஜா etc. வரை தான் வந்திருக்கிறது,இன்னும் போக வேண்டியது நிறைய .இதன் நீட்சியாகத்தான் இந்த ப்ளாக் கிறுக்கல்.அதன் நீட்சியாக இப்படி அறிவாளித்தனமான! ஒரு பதிவு.

அன்புடன்
நான்

                                                                 ***|||***

- Copyright © துளி கடல் -