Archive for 2011

ஒரு துளி கடல்

கடலை பார்த்து,கரையில் ஆடி ரொம்ப வருடங்கள் ஆகின்றது. முழித்துக்கொண்டே இருக்கையில் வரும் ஏக்கமான அந்த கனவு,அடிக்கடி என்னை காலத்தின் பின்னோக்கி இழுத்துச்செல்லும்.
        என் சிறு வயதுகளில் வீட்டிற்க்கு மிக அருகில்,எட்டி நடை போட்டு விடும் தூரத்தில் கடல் இருக்கும்.காற்றில் அதன் வாசமும்,கூச்சலும் எப்போதும் இருக்கும்.மழையில்லாத நாட்களின் பொழுது சாயும் நேரங்கள் அந்த கடற்கரையில் தான் செலவாகும்.கால் பாதங்களை நனைத்தலில் தொடங்கும் எங்கள் விளையாட்டு கண்,மூக்கு,வாயெல்லாம் உப்புநீர் ஏறி சிவந்து போய்விடுவதில் தான் முடியும்.பின் கிளம்ப எத்தனித்து சிறிது தூரம் நடந்து விட்டு "மண்ணாயிடுச்சம்மா" என்று புட்டத்தில் கால் தடுக்க ஓடி அந்த இரவின் கடைசி அலையில் காலை நனைத்துவிட்டு திரும்புவேன்.
        கடல் பார்த்திராத ஊரிலிருந்து யாரவது வந்து விட்டால் போதும்,அவர்களை இழுத்துக்கொண்டு ஓடுவேன் என் கடலை  அறிமுகம் செய்ய.அவர்களிடம் என் புதிய காரை,அமெரிக்க விசாவை,ஹோம் தியேட்டரை,எனக்கான பெண்ணை காட்டுவது போல காட்டி பெருமை படுவேன்.ஆழமான பகுதிகளை பற்றியும்,அலைகளின் சீற்றத்தையும் எடுத்துக்கூறி  எனது மேதாவித்தனத்தை நிறுவமுற்படுவேன். கேட்பதில் அவர்களுக்கு சுவாரசியம்  இல்லையென்றாலும்  ஒவ்வொரு  முறையும் அதை எடுத்துரைப்பதில்  அப்படி ஒரு மகிழ்ச்சி எனக்கு. கடலுக்கும் எனக்குமான நெருக்கம் அப்படிதான் இருந்தது.
      கடற்கரைக்கு வரும் யாருடைய மனதையும் பிரதிபலிப்பதில் அது மோனலிசா ஓவியம் போன்றது.நமது இன்பமான தருணங்களில் அதன் ஆட்டம் ஒரு தெருக்கூத்தை போல இருக்கும்.சோகம் கவ்விய  சமயங்களில் "சரி,வா பாத்துக்கலாம்" என்று தோளில் கைபோடும் நண்பனாக தோன்றும்.உற்று அதன் பக்கம் உங்கள் மனதை திருப்பினால் அது உங்களோடு பேச முற்படுவதை உணர முடியும்.பகலில் காணின் அதன் மீது ஒரு வெறுமையும்,இரவில் கவர்ச்சியையும்,நெருக்கத்தையும் தோற்றுவிக்கும்.அதன் பிரமாண்டத்தின் முன்பு மனதிலுள்ள அனைத்தும் கரைந்து போய் ஆடையில்லாத குழந்தை போல நம்மை காட்டும்.
       அதன்பின் வந்த வருடங்களில் கடலை விட்டு தூரம் போக தொடங்கிவிட்டேன்,வீடு மாற்றங்கள்,படிப்பு,இன்ன பிற வலிகளின் காரணமாக.எலிச்சந்துகள் போல கிடைக்கும் நேரத்தில் அங்கே போய் சேர்ந்தால், அலையின் ஆட்டங்களும்,தூரமான நீலமும் , சத்தங்களுக்கு கொஞ்சமும் குறைவின்றி என்னை பொறாமை கொள்ள வைக்கும் கடல்,என்னிடம் எவ்வளவோ மாற்றம் இருக்க,சிறிதும்  சாயம்போகாமல் இருக்கும் கடல் மீது கொண்ட பொறமை அது.
       குதூகலமோ,விளையாட்டோ அற்று போய்,காலத்தின் இருட்டான மூலையில் ஒடுங்கத்தொடங்கிய அந்த நாட்களில்.அந்த மாபெரும் சமுத்திரத்தின் முன் நின்று அதன் அமைதியில் சிலைத்துபோய் "என் இறுதியில் உன்னிடம் தான் வருவேன்,நீ உன் நீண்ட கரங்களில் என்னை வாரி எடுத்து,உன் மடியோடு அனைத்துக்கொள்ள வேண்டும்" என்ற கோரிக்கையை வைப்பேன்.
       கொஞ்சம் யோசித்து பார்த்தல் கடலின் அருகாமையை விட்டு விலகிச் செல்ல செல்ல வேதனைகள்,சுமைகள் கூடிகொண்டே போயிருக்கின்றது. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் பிழைப்புக்காக இப்போதிருக்கும் இந்த ஊரில் வந்து இறங்கிய முதல் நாளே பிடிக்காமல் போய்விட்டது.உயிர் வாழ,பணத்தை வயிறு முட்ட தின்று செரித்தாக வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக இந்த கூட்டத்தையும்,நெரிசலான வீடுகளையும்,கரியை துப்பும் வாகனங்களையும் மூச்சுத்திணறலுடன் பொறுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.இங்கே கடல் என்பது காலையில் தெருக்குழாயில் சொட்டு சொட்டாக வரும் குளோரின் கலந்த நீரின் வடிவே.
     ஒருவகையில் நானும் கடலை போலதான் என்று நினைகிறேன் ,அதன் ஆழத்தில் இல்லை,அமைதியில்லாத அதன் அலைகளில்,அதன் அனாதைத்தன்மையில். 
         அதைத்தவிர, எனக்குள்ளும் இருக்கிறது கொஞ்சம் கடல்.

அன்புடன்
நான்.

ஜெயகாந்தன்:ஒரு மனிதன்,ஒரு வீடு,ஒரு உலகம்

                               

ஜெயகாந்தன் தனது நாவல்களில் தனக்கு ரொம்பவும் விருப்பமான நாவல் என இதை குறிப்பிட்டிருந்தார்.படிக்கும் நமக்கும் அப்படிதான்,நாவலுக்கான வழக்கமான ஏற்றஇறக்கமில்லாத,எவ்வித ஜிகினாத்தனங்களும் இல்லாத
தனித்துவமான படைப்பு.
           ஆங்கிலோ-இந்திய பின்னணியில் வாழ்ந்த ஹென்றி தந்தையின் 
பூர்வீக மலை கிராமத்துக்கு   வந்து    அம்மனிதர்களிடம்     எப்படி ஒன்றிப்போகிறான்,அதனால் அந்த கிராமம் அடையும் பாதிப்பு என்னென்ன என்பதை பற்றியதே நாவல்.ஹென்றி,களிமண்ணை போல,குழந்தையை போல,வாழ்கை அடித்துச்செல்லும் பாதையில் நீந்திப்போகிறான்.ஓடும் ஆற்றையும்,கிணற்றையும் கண்டதும் ஆடையின்றி நீந்திக்களிக்கிறான்.கூழையும்,கிழங்கையும் விரும்பி உண்கிறான்.மின்சாரத்தால் உலகம் எவ்வளவு தான் பயன்பட்டாலும் அகல் விளக்கின் வெளிச்சமே போதும் என்னும் வரிகளை கடக்கும் போது ஏதாவதொரு கிராமத்தில் நிறைய புத்தகங்கள் படித்துக்கொண்டும் ,அன்றைய தேவைகளை மட்டுமே தீர்த்துக்கொள்ள ஒரு பெட்டிக்கடை வைத்து வாழ்கையை ஓட்ட வேண்டும் என என் நினைவில் வரும் ஆசை(பேராசை!) எட்டிப்பார்க்கின்றது. இதெல்லாம் நடைமுறைக்கு சிறிதும் சாத்தியமில்லாத,சோம்பேறித்தனமான யோசனையாவும் வைத்துக்கொள்ளலாம்,ideal thought !
            முதன்முதலில் ஹென்றிக்கு அறிமுகமாகும் தேவராஜ்,அவ்வூரில்
அத்தனை காலமாக இருந்தும் தன் கண்களில் படாத  அழகையும்
வனப்பையும் ஹென்றியின் ரசிப்பாலும்,குதூகலதாலும் அறிந்து வியக்கிறான்.ஹென்றியின் ஒவ்வொரு செயலிலும் பெருதும் ஈர்க்கப்பட்டு பிரிதிருக்கும் தன் மனைவியோடு சேர்ந்துவிடுவது மனிதன் எந்த அளவுக்கு அன்பு நிறைந்தவனாகவும்,positive approch உடன் இருக்கவேண்டும்,அப்படி இருப்பதனால் எதனையும் வெல்லலாம் என்பது விளங்குகிறது.
            சொத்தின் மீதான பாகபிரிவினையின் போது ஊர் பெரியவர்கள் தீவிரமான  வாதத்தில் ஈடுபட்டிருக்கையில்,கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் சிறுவர்கள்  பம்பரம் விடுவதை ரசித்துக்கொண்டிருக்கின்றான் ஹென்றி.தன் தந்தையின் ஏராளமான சொத்துக்கள் மீது அவனுக்கு எவ்வித பற்றும் இல்லை,அதை மீட்டெடுக்க அவன் வரவில்லை என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் ரொம்பவும் அழகாக விளக்கி விடுகிறார் ஜெயகாந்தன்.நம்மில்  நிறைய பேர் வாழத்தவறிய வாழ்கை அது இல்லையா?
          அத்தனை வருடமாக தன் தந்தையின் வீட்டையும் , நிலங்களையும் பாதுகாத்த  ஹென்றியின் தந்தையின் தம்பி அவனை பயத்துடனும் லேசான விரோதத்துடன் எதிர்கொள்ள,ஹென்றியோ எல்லா பொறுப்பையும் அவரிடமே விட்டுவிட்டு அவர் வீட்டுக்கே சென்று உறவாடி மகிழ்கிறான்.
    
       கதையின் இறுதியில் வரும் நிர்வாண,சித்தம் கலங்கிய பெண்ணை பற்றி கொஞ்சம் தீவிரமாக யோசிக்கையில் ஹென்றி என்ற பாத்திரத்தின் miniature ஆக அவள் இருக்கிறாள்.மொத்த கதையுடைய சாராம்சமும் அந்த பெண்ணின் வடிவாகவே இருக்கிறது.

     எனக்கு  ஜெயகாந்தனை படிப்பதில் எப்பொழுதுமே கொஞ்சம் பெருமையும்,ஆர்வமும் உண்டு ஏனெனில் எங்கள் ஊர் மொழி வழக்கில் இருக்கும் உரையாடல்கள்.உ.தா மல்லாட்டை-நிலாக்கடலை,கொறடு-தாழ்வாரம்,வேறெங்கிலும் இப்படி பேசி கேட்க முடியாது.மொத்தமாக சொல்லவேண்டுமெனில் ஜெயகாந்தனுக்காகவும்,நாவலில் சொல்லப்படும் நேர்கருத்துகளுக்காகவும்,பாத்திரங்களும்,அவற்றின் ஈர்ப்புத் தன்மைகளுக்காகவும் "ஒரு மனிதன்,ஒரு வீடு,ஒரு உலகம்" படித்து,பாதுகாக்க வேண்டியதொரு நூலாகிறது.

ஓட்டு போட்டுட்டு முடிஞ்சா கமெண்டும் போட்டுட்டு போங்க!

அன்புடன்
நான்.
     

பூக்களை விட அழகானவள்பூக்களை விட அழகானவள்

யாருக்கு தெரியும்,
நீ பிறப்பதற்கு முன்
பூக்களுக்கெல்லாம் பேசும் சக்தி
இருந்திருக்கலாம்!
உன் அழகை கண்டபின் தான்
அவையெல்லாம்
பேச்சை தொலைத்துவிட்டதோ என்னவோ !

                                                         ****
நேற்றிரவு
நீ என்னிடம் பேசியதை கேட்டு
வெக்கத்தில்
சிவந்து போயிருக்கிறது
என் தொலைபேசி!

அன்புடன்
நான்.

நமக்கான வார்த்தைகள்:கவிதை

நமக்கான வார்த்தைகள்

விடுமுறை நாளொன்றை,
நமக்காய் மட்டும் செலவிட
சித்தம் கொண்டோம்.

பாடல் கேட்டபடி காரில் சென்றோம்
உன் தங்கையிடம் நீயும்,என் நண்பனிடம் நானும்
போனில் பேசியபடியே பூங்காவில் நடந்தோம்.
நூறாவது புடவை ஒன்றை நீயும்,
அழுக்கு நீலத்தில் எனக்கொரு ஜீன்சும் வாங்கிக்கொண்டோம்.
உயர்தர பப்பொன்றில் லேசான
போதையின் மிதப்பில் நடனமாடினோம்-தெளிந்தபின்
வயிறுமுட்ட உண்டு வீடுதிரும்பினோம்.
கட்டில் அதிரக்களித்திருந்தோம்.

இப்படி நமக்கு செலவிட்டதாய்
எண்ணிக்கொள்ளும்
எந்த நாளிலும்,
உனக்கான என் வார்த்தைகளையும்
எனக்கான உன் வார்த்தைகளையும்
நாம் பேசிக்கொண்டதே இல்லை.

அன்புடன்
நான்.

மோகமுள்-தி.ஜானகிராமன்கொடுங்காமம்
சில மாதங்களுக்கு முன்பு தி.ஜாவின் "அம்மா வந்தாள்" நாவலை படித்திருந்தேன்.ஆண்-பெண் உறவுகளை பற்றியும்,பெண்ணியம் பற்றி பெருங்கேள்வி எழுப்பிய நாவல் அது.மிகவும் திகைப்படையச்செய்தது.மோகமுள் நாவலையும் ஒரு எதிர்ப் பார்ப்போடுதான் துவங்கினேன்.
   நாவலின் ஆரம்பம் முதல் கும்பகோணத்து வீடுகளும்,தெருக்களும்,கோயில்களும்,நீர் நிறைந்து ஓடிய காவிரியும் படக்காட்சி போல கண்முன்னே விரிகின்றது.கன்னத்தில் கையூன்றி அருகில் அமர்ந்து கதைவாசிகளான பாபு,யமுனா,ரங்காவின் உரையாடல்களை பார்ப்பது போல போன்றொரு அனுபவம் மோகமுள்.
   கதை மிகுதியாக பாபுவின் பார்வையில் வருவதால் மற்றவர்களுடைய இயல்பும்,மனநிலையும் அவன் மூலமாகவே நமக்கு நிறைய இடங்களில் தெரிகின்றது.அதுபோல நடக்கும் எல்லா சம்பவங்களும்,பாத்திரங்களுமே பாபுவின் சிந்தனை ஓட்டத்தையும், மனநிலையையும் நிர்ணயம் செய்கின்றது.அவனுடைய குழப்பமும்,வலியும்,தவிப்பும் நமக்குள்ளே அழகாக கடத்தப்படுகின்றது.
      கும்பகோணத்தில் தங்கிப்படிக்கும் பாபுவிற்கு தனது தந்தையின் நண்பரான சுப்பிரமணிய அய்யரின் இரண்டாம் மனைவி பார்வதி,அவரது மகள் யமுனாவின் அறிமுகம் கிடைக்கிறது.யமுனாவின் அழகும்,லட்சணமும் அவன் மனதில் அவள் தெய்வத்தின் உருவாக குடிகொள்கிறது.மனிதப்பெண்கள் செய்யும் பெண்பார்க்கும் சடங்கு,திருமணம்,குழந்தை பெறுதல்,குடும்பம் இவைகளுக்கு அப்பாற்பட்ட ஜீவனாக அவளை நினைக்கிறான்.ஆனால் அவள் தாயோ அவளுக்கு திருமணம் தள்ளி போவதை நினைத்து வெதும்புகிறாள்.ஒழுக்கம் பற்றியும்,அதனால் உள்ளம் ஒளி பெறுதல் பற்றியும் பாபுவின் தந்தை வைத்தி,அவரின் குரு ராஜுவின் போதனைகளை தெரிவிக்கிறார்.மானிடத்தவறுகளிலிருந்து  விடுபட என்னும் அதே காலகட்டத்தில் பாபுவிற்கு யமுனாவின் பால் தடுமாற்றம் ஏற்படுவது விந்தைதான்.  
                                                                 -----
      பாபு இசை பயிலும் ரங்கண்ணாவின் வாயிலாக தி ஜாவின் இசை மீது கொண்ட மோகம் புத்தகம் முழுவது தெறித்து கிடக்கின்றது.பழைய தஞ்சாவூர்,கும்பகோணத்துக்காரர்களின் வாழ்வோடு குழைந்து கிடந்த கர்நாடக இசை பற்றியும்,அவர்களின் இசையோடிணைந்த வாழ்கை முறை மீதும் நமக்கு தனியார்வம் வருகின்றது. ராகத்தின் உச்சியில் அதிராமல்,குலைக்காமல் பாடும் சாரீரம் தான் தெய்வத்தை தொடும் என்பது ரங்கண்ணாவின் நம்பிக்கை.உலகின் சுத்தங்கள் எல்லாம் ஒருங்கே அமைந்து வந்தவர் ரங்கண்ணா,தன்னுடன் இருக்கும் எல்லோரையும் பாதிக்கும் தன்மையுடைய அவர் இலையில் சொட்டும் நீரிலும்,ஓடும் அணிலிடம் கூட சங்கீதம் கண்டு மகிழும் குழந்தை போன்றவர்.                                                                 
                                                                 -----
    ஒருசமயத்தில் பாபு,பக்கத்துவீட்டு கிழவனின் இளம்மனைவி தங்கம்மாவுடன் தன் நிலை கட்டவிழ்ந்து போய் கூடிவிடுகிறான்.தவறிழைத்து விட்டதாக எண்ணி வாடும் அந்த நேரத்தில் தான் யமுனா மீதான காதல் அவனுக்கு புலனாகிறது.வேறொரு பெண்ணை தொடுகையில் தானே நமக்கான பெண் நினைவுகளில் வருவாள்?.இவ்வளவையும் யமுனாவிற்கு துரோகம் இழைத்த கதையாக யமுனாவிடமே கூறுகின்றான்.ஆனால் யமுனா அவன் வார்த்தைகளை சமுதாயத்தை காரணம் காட்டி அப்போது ஒதுக்கிவிடுகிறாள்.பாபுவை அது பெருந்தவிப்புக்கு ஆளாக்குகிறது.     யமுனாவின் மீதான அவனது மோகம் திசை மாறி இசை மீது பயணிக்கிறது.கண்களை மூடி இசையோடிணைந்து ரங்கண்ணாவிடம் சரணாகின்றான்.நிராகரிப்பின் வலியும்,ஏக்கமும் அவனது ஞானத்தின் மீது படர்ந்து அதை ஒளிவுபெறச்செய்கிறது.தனது குருவிற்கும் இஷ்ட மாணவனாக ஆகின்றான்.                                                                                                                      
                                                            -----
   நாவலின் இரண்டாம் பாகத்தை போன்றது சென்னையில் நிகழும் பாபு-யமுனாவின் மறு சந்திப்பும்,பாபு-ராமுவின் இசை பற்றிய வாதங்களும். ரங்கண்ணாவின் இறப்பிற்கு பின் மெட்ராசுக்கு வந்து பல வருடங்களாக வேலை செய்யும் பாபுவைதேடி யமுனா(வயதயும்,நிறைய பொலிவையும் இழந்து விட்ட யமுனா) உதவி கேட்டு வருகின்றாள்.பெற்றோர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அன்று போலதான் இன்றும் பிடிவாதமாக அதே சிந்தனையுடன் தான் இருக்கிறான் என்பதை அறிகின்றாள்.இதுவரை யாருக்கும் பயன்படாத தன் இளமையை,இத்தனை காலமாய் தனக்காய் எவ்வளவோ செய்துவிட்டு காத்திருக்கும் பாபுவிற்கு கொடுக்க விழைகிறாள்.இந்த இடத்தில் அவர்கள் சேர்வதற்கு தடையாக இருப்பவற்றை தி.ஜா (கொஞ்சம் செயற்கைத்தனமாக) விலக்கிவிடுகிறார்.
  மூச்சும்,வியர்வையும் கலந்து முடிக்கையில்,இத்தனை நாள் காத்திருப்பும்,தவிப்பும் இதற்குத்தான் என்றும் பாபுவை வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறாள் யமுனா.இத்தனை வருடங்களாக குத்திக்கொண்டிருந்த மோகமுள் இனி என்ன செய்யும்?அவளை முதலில் பார்த்த நாளில் இருந்து யமுனாவின் தெய்வீக அழகின்,அம்சத்தின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக மோகத்துடன்(infatuation),காதலும் வளர்ந்திருக்கிறது அதனாலேயே அவளோடு அவன் நிரந்தரமாக வாழ்வை இணைத்துக்கொள்ள நினைக்கிறான்.
     விதியின் கையில் தன்னை கொடுத்து விட்ட "நாளைபோக்கி"களின் சாமான்ய வாழ்கையை அவன் வெறுப்பதாலும்,யமுனாவின் உந்துதலாலும், கலையை காசுக்காக ,ரசிகர்களின் தன்மைக்கொப்ப மாற்றிப்பாடும் ராமுவிடம் (ரங்கண்ணாவின் சீடன்) ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாதிப்படைந்ததாலும் மகாராஷ்டிராவிற்கு தனது ஞானத்தை மெருகேற்றச் செல்கிறான் பாபு.செல்லும் அவனை யமுனா கணவனாக ஏற்றுக்கொண்டதாக கதை முடிகிறது.
                                                                   -----  
 கதையில் தங்கம்மாவின் பாத்திரப்படைப்பு ரொம்பவும் அற்புதமானது,பாபுவின் மீதான தன்னுடைய (கள்ளக்)காதலுக்காக கூட உண்மையாக இருந்து உயிரை விட்டு விடுகிறாள்.தங்கம்மா பாபுவின் மீது கொண்டாடும் காதல் போன்றது தான் தான் பாபு யமுனாவின் மீது கொண்டிருப்பதும்.ஆனால் தங்கம்மாவின் காதலில் அழுத்தமும்,சமுதாயத்தை மதிக்காத தைரியமும் அதிகம் அதனாலேயே அவள் உயிர் போய்விடுகின்றதோ என்னவோ?
  என்னை ரொம்பவும் கவர்ந்தது யமுனா தான்.கதையுடைய மொத்தக்கவர்ச்சியும் அவளை சுற்றியே இருப்பதெல்லாம் காரணமில்லை.கும்பகோணத்திலும் சரி,சென்னையிலும் சரி அவளது மனநிலையை ஆசிரியர் கதை முழுவது ஒளித்தே வைத்திருப்பதால் தான். தாஸ்தாவஸ்கியின் வெண்ணிற இரவுகளின் நாயகி இரு வேறு ஆண்களிடம் மனதை பறிகொடுப்பதை போன்றதொரு சூட்சமம் மிக்க பாத்திரம் யமுனா.
       தெரியாததை எழுதும் மேதாவித்தனத்தை விட்டுவிட்டு தெரிந்ததை மட்டும் வாண்ணமாக குழைத்து நாவல் முழுவதும் பூசியிருக்கிறார் தி.ஜா.கர்நாடக சங்கீதத்தில் ஒரு தேர்ந்த வித்வானுக்குரிய ஞானம் ஆங்காங்கே ஒளிவிட்டு அந்தக்கலையின் மீது நமக்கு ஒரு மரியாதை வருகின்றது.எளிமையான நடையும்,சொல்லழகும்,காமமும் கவர்ச்சியும்,மனதை தொடும் பல இடங்களும் நிரம்பிய இந்நாவல் இன்றளவும் சிலேகிக்கப்படுகின்றது.                                                                                                -----
   கதையை படித்த உடனே படத்தை பார்த்தேன்,நாவலுக்கு மட்டுமே உரிய நுண்ணழகை திரையில் கொண்டுவருவது சிரமம் தான்.ஆனாலும் படத்தில் நிறைய குறைகின்றது,எந்த impact உம் கொடுக்கவில்லை.நாவலின் சாராம்சம் படத்திற்கு முழுமையாக கடத்தப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  
                                                                    -----
மனதிற்கும்,வாழ்கைக்கும் நெருக்கமாக இருப்பது சில இலக்கியங்கள் தான்.மோகமுள் அதிலொன்று.

இந்த பதிவை பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்கவும் :-)

அன்புடன்
நான்.

சட்டப்படி குற்றம்:மரணமொக்கை


என்ன நினைத்துகொண்டு இந்த மாதிரி படமெல்லாம் எடுப்பார்கள்?
கதை,கன்றாவியெல்லாம் யோசிக்காமல் நேராக காட்டுக்கு கேமரா பெட்டியை தூக்கிக்கொண்டு போயிருப்பார்கள் என்று நினைக்கிறன்.

படத்தின் கதை என்ன? (ஹுக்கும்)
சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களை திரட்டி,புரட்சி தமிழன் சத்யராஜ் ஒரு புரட்சி இயக்கம் நடத்துகிறார்.புரட்சியாளர்கள் சூட்கேஸ் உறையில் தைத்த ஆடையில்(இந்த costumeஐ மாத்தவே மாட்டிங்களாப்பா)அட்டை துப்பாக்கியை பிடித்தபடி காட்சிக்கு காட்சி சத்யராஜிற்கு சல்யூட் வைக்கிறார்கள்,கயிற்றில் ஏறுகின்றார்கள்,இறுக்கமாக உடை அணிந்திருக்கும் பெண்களிடம் கடலை போடுகின்றார்கள்,விஜய் பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆடுகின்றார்கள்.
     படம் முழுக்க சத்யராஜ் வேகாத வெயிலில் இரண்டு,மூன்று சட்டை,மேல்கோட்டு,கழுத்தில் மப்ளர்,சைடு தொப்பி எல்லாம் போட்டுகொண்டு,சைடு வாயில் சுருட்டை இழுத்துக்கொண்டு,புல்லட்டில் போய்கொண்டு (இப்படி எல்லாம் டிரஸ் போட்டால் மட்டும் சே குவாரா ஆகிவிடவும் முடியாது,புரட்சியை கொண்டு வந்து விடவும் முடியாது என யாராவது இவர்களுக்கு சொன்னால் தேவலை) பெரியார்,சே வசனங்களை ஸ்க்ரீனை பார்த்து எச்சில் தெறிக்க பேசுகின்றார்.பார்க்கும் நமக்கும் நம் தலைமுடி,வயிறு,கழுத்து,போட்டிருக்கும் ஜட்டி,அமர்ந்திருக்கும் சீட் எல்லாம் புரட்சி தீ பற்றி எரியத்தொடங்குகின்றது.

   இவர்களெல்லாம் சேர்ந்து எல்லா அரசு இலாகாவிலிருந்தும் பத்து பத்து பெருந்தலைகளை கடத்துகின்றார்கள் (ரமணா படத்தை பார்த்திருப்பார்கள் என நினைக்கிறன்),அவர்களுக்கும் சத்யராஜ் கடுங்காப்பி,சோறு எல்லாம் போட்டு சிலபல வசனங்கள் பேசி திருத்தி,தங்கள் வழிக்கு கொண்டு வருகின்றார்கள்.அவர்களும் நம்ம நித்யானந்தா(நித்யானந்தா மாதிரி),ராசா (ராசா மாதிரி) சமுதாயகிருமிகளையெல்லாம் பினாயில் போட்டு சுத்தப்படுதுகின்றார்கள்.

   இன்றைக்கு டி.வி சீரியல்களில் கூட மீட்டிங் என்றால் ஏசி ஹாலை காட்டுகின்றார்கள்,இந்தப்படத்தில் போலீஸ் மீட்டிங் ஏதோ ஒரு ஓட்டு வீட்டில் நடக்கிறது,CM மீடிங்கில் எம்.ல்.எ கள் இடமில்லமில்லாமல் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்திருக்கிறார்கள்.விஜய் SAC யிடம் பணம் தரமாட்டேன் என்றிருப்பார் போல!எல்ல காட்சிகளிலும் சரி ,நடிப்பவர்களிடமும் மகா மொன்னைத்தனம்.

     சத்யராஜ் அண்ட் கோ வை தேடிப்போகும் சுரேஷ் அண்டர்வேர் தெரிய கைலியில் மாறுவேடத்தில் சத்தியமங்கலம் பஸ்ஸ்டாண்டில் இறங்குகிறார்.இறங்கியதுமே துப்பாக்கியை வாங்கி பப்பரக்காவென்று பின்புறம் சொருகிக்கொள்கிறார்......ங்கொய்யால இதுக்கு எதுக்கு மாறு வேஷம்னு புரியல.....நேரா பூ விக்கிற பொம்பளைகிட்ட போய் "ஏம்மா...இந்த காட்ல தீவிரவாதிங்க யாராவது இருக்காங்களாம்மா?" என்கிறார்.அந்த இடத்திலேயே இந்தப்படம் உலகத்தரத்தை எட்டி விடுகின்றது.

   SAC படத்தில் கோர்ட் சீன்,கற்பழிப்பு சீன் இருந்தே தீரும்.இப்படத்தில் வரும் கோர்ட் சீனில் வக்கீல் பிரபாகர்(சீமான்) வாதாடுகையில் "ஜட்ஜ் அய்யா....நாம வாங்கற ஒவ்வொரு பொருளுக்கும் வரி கட்றோம்....சோப்பு தூளுக்கு,அரிசி பருப்புக்கு...ஏன் உப்புக்கு கூட வரி கட்றோம்...இது யாருக்குமே தெரியறதில்லை" என்கிறார்.அதற்க்கு ஜட்ஜ் ராதாரவி "அட எனக்கே இது புதுசா இருக்கே பிரபாகர்"என்று டைமிங் காமெடி செய்கிறார்.நமக்கும் சிப்பு,சிப்பா வருது!

   க்ளைமாக்சில் ஜெயிலில் இருந்து அசால்டாக தப்பிக்கும் மத்திய மந்திரி ராசராமனும்,இன்னொரு எதிரியான வெங்கடேஷும் போலீசால் நெருங்க முடியாத சத்யாராஜை கொல்ல வருகின்றார்.அவர்களை ஒரு சிறுவன் வதம் செய்ய "இனி வரும் காலம் இளையதளபதிகளின் காலம்" என்ற முழக்கத்துடன் படம் முடிகின்றது.இதுபோல படத்தில் பல காட்சிகள் மயிர்கூசச்செய்கின்றன. முழு படம் முடிகையில் மயிர் கொட்டிப் போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

   இவரை போன்ற ஒரு இயக்குனருக்கு ஏன் நிறைய படங்களை தரக்கூடாது?இவருக்கு நிகரான சமகால இயக்குனர் விஜய.டி.ஆர் மட்டுமே.இவர்கள் இருக்கும் வரை நமக்கு காமடிக்கு பஞ்சமில்லை. இப்படத்தை ஆஸ்காருக்கு அனுப்ப நம்மை நம்மை போன்ற ரசிகர்கள் ஏன் போராட்டம் நடத்தக்கூடாது?படத்தில் கலைஞர் குடும்பத்தையும்,ராசா,திமுகாவையும் போட்டு சாணி மிதிப்பதால் அம்மா ஆட்சிக்கு வந்தால் அதையும் செய்வார்கள்.

    இவ்வளவு திராபையான படத்தை சமீபத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் கண்டதில்லை.குருவி,வில்லு படத்தில் கூட ரசிக்கும்படியான விஷயங்களை கண்டுபிடித்துவிடலாம் (முடியுமா?)...இந்த படத்தில.....ஹு..ஹும் ஒன்றும் சொல்றதுக்கில்லை.நிறைய தமிழ் இயக்குனர்களுக்கு புரட்சி,காதல் போன்றவைகளின் ஆழமோ,உண்மையோ புரிவதே இல்லை.அதனை தப்பர்த்தம் எடுத்துக்கொண்டு இவர்கள் வழியில் படமெடுத்து கொச்சைபடுத்துகின்றார்கள்.

  மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னை-வடபழனியில் தங்கியிருக்கையில்-வாயில் எப்போதும் சினிமாவை,ஸ்டுடியோவை பற்றிய பேச்சும்,அழுக்கேறிய ஜீன்சுமாக,சிகரெட்டையே உணவாகக்கொண்டு வாழும்,நல்ல கதையை வைத்துக்கொண்டு சினிமா சான்ஸ் தேடி அலையும் எத்தனையோ இளைஞர்களை பார்த்திருக்கிறேன்.இது போன்று காசை வைத்துகொண்டு சினிமா என்ற பெயரில் ஒன்றை எடுத்து பார்பவர்களை சாகடிப்பதை விட முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு 30-40 லட்சம் உதவி செய்து புண்ணியம் தேடிக்கொள்ளலாம்.

பி.கு:முதன் முதலில் எழுதியிருக்கும் தமிழ் படத்திற்கான விமர்சனம் இது.படத்தை பார்த்த எரிச்சலினாலும்,ஆற்றாமையினாலும் இது போன்ற படைபிற்கு எழுத வேண்டியதாகப் போய்விட்டது.

அன்புடன்
நான்.

ஜப்பானின் பூகம்பம்
ஜப்பானின் பூகம்பம்

நல்லவேளை,
ஜப்பானின் பூகம்பம்
இந்தியாவிற்கு வரவில்லை,
வந்திருந்தால்?

உதவிக்குழு ஏற்படுத்தி
லட்சம் கோடிகளில்
கொள்ளை நடந்திருக்கும்.
பிணக்குவியல்களை
படமெடுத்துக்காட்டி
அனுதாப வோட்டிற்கு
முயற்சிக்கும்-ஆளுங்கட்சி.
அதையெதிர்த்து
அறிக்கை விடும்-எதிர்கட்சி.

கிரிக்கெட் பார்க்கத்தொடங்கியிருப்பான்
தப்பிப்பிழைத்தவன்.
கவிதையாய் எழுதிக்கொண்டிருப்பான்
என்னை போன்ற கயவன்.

அன்புடன்
நான்.

இந்தியா ஜெயித்ததும்,இலங்கை தோற்றதும்;எப்படி?

முதலில் இலங்கை தோற்றதற்கான காரணங்கள்:
-இந்த உலக கோப்பையில் எல்லாம் மட்சுகளையும் தங்கள் நாட்டிலேயே விளையாடி திடீரென்று பைனலில் புதிய condition ல விளையாடியது.
-Quater,semi எல்லாம் westindies ,newzealand போன்ற சுமாரான டீம்களுடன் விளையாடி எளிதாக ஜெயித்தது ,ஆனால் இந்தியாவோ ஆஸ்திரேலியா,பாகிஸ்தான் உடன் விளையாடி நல்ல பார்மில் இருந்தது.
-இந்தியாவுடன் நன்றாக பௌலிங் செய்யும் குலசேகரா அன்று சொதப்பி விட்டார்.
-பார்மில் இல்லாத தோனி (34 தான் அதற்க்கு முந்தைய அதிக பட்ச ஸ்கோர்) களமிறங்கியவுடன் மலிங்காவை எறியச்சொல்லி இருக்கவேண்டும்,தோனியை சில ஓவர்கள் நிற்க விட்டது பின்னால் பேராபத்தாகி விட்டது.
-பிட்சின் ஈரத்தன்மையால் முரளி,ரண்டிவ்விற்கு Grip கிடைக்காமல் சரியாக போடவில்லை.
-பார்மில் இருந்த மென்டிஸ்ஐ வெளியே எடுத்தது.

ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட டீம்,அருமையான பிளேயர்களை கொண்டது.272 ரொம்பவும் நல்ல ஸ்கோர் தான்...என்ன சொல்ல எல்லாம் தோனியின் நேரம் தான்.

இப்போ இந்தியா பற்றி:

உண்மையாகவே நாம் இந்த கோப்பைக்கு தகுதியானவர்கள் தான்.ஏனென்றால் ஒரு மேட்ச் என்றால் ஒரு மேட்ச் கூட நாம் எளிதாக வெல்லவில்லை.quarter ,semi யில் ரொம்பவும் போராடியது இந்தியா.
பைனலில் அணியின் பீல்டிங்கை போல நாம் இதுவரை பார்த்திருக்க மாட்டோம்.
அஸ்வின் ஐ ட்ரை பண்ணி இருக்கலாம் விக்கெட் எடுக்கிறாரோ இல்லையோ ரன்களை கட்டுப்படுத்தி இருப்பார்.ஸ்ரீசாந்தை எடுத்து உபயோகப்படுத்தவே இல்லை.
இலங்கையில் ஆப்-ஸ்பின்னர்கள் (ரண்டிவ்,முரளி,தில்ஷன்) இருப்பதை தெரிந்து இடது கை யுவராஜை விட ,தான் நன்றாக ஆட முடியுமென நம்பி முன்னமே இறங்கி தோனி எடுத்த ரிஸ்க் (successfull!!).
நல்ல பார்மில் இருந்த தில்ஷன்-தரங்காவை ஆடவிடாமல் செய்தது.
அவுட் ஆனா முந்தைய பந்து வரை பொறுப்புடன் ஆடிய கம்பீர்,சச்சின் சேவாக் ஆட்டமிழந்தபின் பொறுமையாக விளையாடிய கம்பீர்-கோலி.
யாருமே எதிர்பார்க்க வண்ணம் இந்த போட்டியில் மட்டும் விளையாடி புகழை சம்பாதித்துக்கொண்ட நம்ப தோனி.
சச்சின்:பைனல்ல கொஞ்சம் ஏமாற்றம் தான்.எவ்வளவு நாள் தான் டீமை நானே தூக்கிட்டு ஓடறது,வேற யாரவது பிடிங்கப்புன்னு விட்டுட்டார் போல.பயபுள்ள ஷாட் எல்லாம் எப்படி அடிக்குது ,ஏதோ ப்ரோக்ராம் பண்ண ரோபோட் மாதிரி.(தனிப்பதிவு எழுதனும் இவரபத்தி.)

சேவாக்:எப்பவும் முக்கியமான மட்சுல அடிச்சு கொடுப்பார்,இதுல பண்ணல.அவுட்னு தெரிஞ்சும் பாகிஸ்தான்,இலங்கை கூட உடனே review கேட்டது கொஞ்சம் ஓவர் தான்.இவரும் உலகத்தரமான பிளேயர் தான் ஆனா என்ன மத்த பிளேயர்கள் (like sachin,dravid,kallis,ponting)
ஒரு மாறி four அடிச்சா,இவர் வேற மாறி அடிச்சு பேர் வாங்கிட்டார்.
யுவராஜ்:உலக கோப்பைக்கு முன் டெஸ்ட்,ஒன்-டேவிலிருந்து நீக்கப்பட்டவர்,பல புகார்களுக்கு ஆளானவர்.சொல்லபோனால் இவரால் தான் உலக கோப்பை ஜெயித்தோம் எனலாம்.எல்ல போட்டிகளிலும் முக்கிய விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். நின்று ஆடவும்,அடித்து ஆடவும் செய்வார் ,எந்த சூழலிலும் நம்பக்கூடியவர்.dangerous batsman too.

கோலி,ரைனா:வருங்கால டீமின் தூண்கள் இவர்கள்.உலக கோப்பைக்கு முன் ரைனா பார்ம்-அவுட்டில் இருந்தாலும் கொடுத்த சான்ஸ்ஐ பயன்படுத்திக்கொண்டார்.அற்புதமான பீல்டர்.கோலி இருந்த பாமிர்க்கு அவர் விளையாடியது சுமார் தான்,இருந்தாலும் பைனலில் நின்று விளையாடி விட்டார்.

கம்பிர்,டோனி:டெஸ்ட்,ஒன்-டே,20-20 என அனைத்து format களிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர் கம்பிர்.பைனலில் இரண்டு விக்கட்டுகள் விழுந்த பின்பு அவர் விளையாடியது ஒரு முதிர்ந்த இன்னிங்ஸ்.பரபரப்பின்றி விளையாடக்கூடியவர்.Foot work நன்றாக இருக்கும்.
எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஆட்டக்காரர் தோனி.அவர் பாட்டிங்இல் நிறைய குறை இருக்கிறது. ஆனால் நல்ல கேப்டன் என்பதை நிறைய தடவை நிருபித்து விட்டார்.இம்முறையும் தான்.

சாகிர்,ஹர்பஜன்:சாகிர் இந்தியாவின் அருமையான ஒரே உருப்படியான ஸ்விங் பவுலர்.பைனல்ஸ் தவிர மற்ற எல்லா மேட்சுகளிலும் பாட்டிங் பவர்ப்ளே ஓவர்களை நன்றாகவே போட்டிருக்கிறார்.நம்பிக்கையான பௌலர்.இவரது தரம் உயந்து கொண்டே போகிறது.ஹர்பஜன் செமி பைனலில் எடுத்த உமர் அக்மலின் போல்ட்,மறக்கவே முடியாத டெலிவரி.ஒரு வேளை இவரது பௌலிங் பிரஷர் கொடுப்பதால் தான் யுவராஜிற்கு விக்கெட் விழுகிறதோ என்னவோ.

92 இல் படு தோல்வி,96 இல் இதே ஸ்ரீலங்காவிடம் அழுது கொண்டே வெளியேறியது,2003 பைனலில் மட்டும் கேவலமாக விளையாடி வெளியேறியது,2007 இல் முதல் ரவுண்டு கூட தேராமல்....இன்னும் பல தோல்விகள்.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக பார்வையாளனாக மட்டுமின்றி கிரிகெட்டை சுவசிப்பவனாகவே இருக்கும் எனக்கு இது ஒரு மகத்தான மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள் டீம் இந்தியா!அன்புடன்
நான்.

ஜனித்தலின் விதி

ஜனித்தலின் விதி
பெருத்த வயிறும்
கடின மார்புகளும்
ஒன்றாய்ச் சேர்ந்து பெரிதாய் மூச்சிரைப்பாள்.

பனிக்குடம் உடைந்த நீரும்
ரத்தமும்,வியர்வையும்-அவள்
தொடைகளின் ஊடே வழிந்தோடும்.

"முக்கு,முக்கித்தள்ளு" என்றபடி
வயிற்றின் மேல் அழுத்துவாள்
மருத்துவதாதி.

பத்துமாத சுமையை
ஒற்றை நொடியில் வெளித்தள்ள
பற்களை கடித்து முக்குவாள்.

அகண்ட கால்களின் மத்தியில்
பிண்டத்தின் தலை தெரிகையில்
உயிரை பிழிந்த வலியில் கத்துவாள்.

வீறிட்டழும் சிசு,
தேடித்தேடி அவள் முலையை கவ்வுகயில்,
ஜனிப்பாள்.

ஒரு தாய்!

அன்புடன்
நான்.

கேப்டன் டோனிக்கு அவசர அறிவுரைகள்


டோனிக்கும்  நம்ம மொத்த டீமிற்கும் சில டிப்ஸ்கள்:

உண்மையை சொல்லப்போனால் முன்பு போலெல்லாம் டோனி ஆடுவதே இல்லை.அவர் நின்று ஜெயிக்கவைத்த காலமெல்லாம் பழங்கதையாய் போய்விட்டது.என்ன ஆனால் என்ன தன்னுடைய இயல்பான ஷாட்டுகளை அவர் ஆட வேண்டியது தானே,எதற்கு இந்த டிராவிட் தனமெல்லாம்.ஹெலிகாப்ட்டர் shot எல்லாம் விளம்பரங்களில் தான் போலும்.

கேப்டனிடம் நிறைய தடுமாற்றம் தெரிகின்றது.நடந்து முடிந்த இந்தியா-இங்கிலாந்து மேட்சில்,பொறுமையாக துவங்கிய இங்கிலாந்து பின்னர் அதிரடியாக ஆடி டார்கெட்டை நெருங்க,என்னசெய்வதென்றே தெரியாமல் டோனி திணறியது நன்றாகவே தெரிந்தது.அதுவுமின்றி இதுபோன்ற சமயங்களில் நம் அணியினர் எல்லாம் ஏதோ சாவு விழுந்ததை போல நின்று விடுகின்றனர்.படு கேவலமான,தோல்விச்சாயம் பூசப்பட்ட உடல்மொழி தெரிந்தது.
ஆஸ்திரேலியாவை போல கடைசி பந்து வரை போராடும் குணம் இவர்களுக்கு என்று தான் வருமோ?இறைவா!.

   அன்று ஸ்ட்ராஸ்-பெல் இருவரும் நிறைய ரன்களை ஓடியே எடுத்தனர்.டோனி என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா,பீல்டர்களை ஆரம்பத்திலிருந்தே 30 -யார்டிர்க்குள் நெருக்கியிருக்க வேண்டும்.4 பந்துகள் ரன் எடுக்காமல் போனால்,5 பந்தில் பாட்ஸ்மேனுக்கு ஏதாவது செய்ய தோன்றும் இல்லையென்றால் அவர்கள் ரன்ரேட் எகிறும்.நிச்சயம் ஏதாவது தவறு செய்து மாட்டுவார்கள்.
அவர்கள் batting-powerplay எடுத்தும் விக்கட்டுகள் மளமளவென விழுந்ததும் அதனால் தான்.

அன்றைய மாட்சில்  பீல்டிங்கில்,பந்துவீச்சில் சரியாக கவனம் வைக்கததுதான் தோற்றத்திற்கு காரணம் என்று சொல்வேன்.அதுவுமில்லாமல் சாவ்லாவும்,யுவராஜ்ம் போட்டது நிறைய short -pitched பந்துகள். இந்ததவறுகளில் இருந்து இப்போது விழித்துக்கொண்டால் தான் உண்டு.
இந்திய அணியின் பீல்டிங்ஐ பற்றி இனி பேசி எந்தப்பலனும் இல்லை அது இனி முன்னேற போவதும் இல்லை.அந்த தொகுதியை விட்டு விடுவோம் பவுலிங்கு வருவோம்.

முதல் பத்து ஓவர்களில் நன்றாக பந்தை ஸ்விங் செய்யும் பிரவீன் குமாரை ரொம்பவும் மிஸ் பண்ணுகிறோம்.ஸ்ரீசாந்தை இனி எடுக்க தேவையில்லை என்று நினைக்கிறன்.ஆஷிஷ் நெஹ்ரா தேறி வந்தால் நலம்.பலவருடமாக இந்தியாவிற்கு இந்தியாவில் விளையாடாத சாவ்லாவை எதற்கு எடுத்தார்கள் என்று தெரியவில்லை,அவரை தூக்கிபோட்டு நம்ப "carrom - ball " அஸ்வினை எடுக்கலாம் அடுத்துவரும் மே.இ தீவுகள்,சவுத் ஆப்ரிக்க மட்ச்களில் உபயோகப்படுவார் என எண்ணுகிறேன்.நம்ம ஹர்பஜன் ரன்களை கட்டுப்படுத்துவதோடல்லாமல்  விக்கெட் எடுக்கத்தொடங்கினால் நன்று.முதல் பதினைந்து ஓவர்களில்,கடைசி ஐந்து ஓவர்களில்(batting power play) ரொம்பவும் நம்பி இருப்பது ஜாகிர் கானை தான்.ஆனால் எப்படி பார்த்தாலும் பந்து வீச்சு சுமாராகத்தான்.யூசுப் படான் 6 பந்துகளில்,4 சிக்ஸர் அடிப்பது பார்க்க நன்றாகதான் இருக்கிறது,அத்துடன் தேவையான போது நின்று நிதானமாக ஆடுவார் என நம்புகிறேன்.கோலியிடம் நிறையவகை ஷாட்ஸ் இருக்கிறது,நல்ல பார்மில் இருக்கிறார் அதை தொடரட்டும்.சச்சின்,சேவாக்,கம்பிர் இவர்களை பற்றி கூட புதிதாக ஒன்றும் இல்லை நல்ல ஸ்கோரை எட்ட இவர்கள் நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டும்.யுவராஜ் டீமில் அதிமுக்கியமானவர் மைகேல் பெவன்,ஹஸ்ஸியை போல ,அதை அவர் உணரவேண்டும் அவர் முழுபார்மில் இருந்தால் வெற்றி உறுதி.சச்சின் செய்யமுடியாததை கூட அவர் நிறைய தடவை செய்து கொடுத்திருக்கிறார்.

பிறசேர்க்கை:அயர்லாந்து,நெதெர்லாந்து இவ்விரு அணிகளுடன் இந்தியாவின் வெற்றி அவ்வளவு திருப்திகரமாக இல்லையென்றே சொல்லவேண்டும்.கால் இறுதிக்கு தகுதி அடைந்து விட்டாலும்,இனி வரும் சவுத்ஆப்ரிகா,மே.இ அணிகளுடன் பட்டையை கிளப்புவார்கள் என நம்புவோம்.என்ன செய்ய,பல வருடங்களாக இவர்களை நம்பி தானே 30,000 & 40,000 பேர்களாக மைதானத்திலும்,பல கோடிப் பேர்களாக டிவியின் முன்னையும் அமர்ந்திருக்கிறோம்.வாழ்த்துக்கள் டீம் இந்தியா!

அன்புடன்
I

ஆண்கள் அப்படித்தான்

ஆண்கள் அப்படித்தான்

பஸ்சோ,ரயிலோ
அலுவலக நேரப்பிதுங்கி வழியும்
காலையோ,மாலையோ
கூட்ட நெரிசலில்
தொத்தித்தொங்கிக்கொண்டு வரும்-நீங்கள்
யாருடைய தாயோ,தமக்கையோ
யோசித்ததில்லை நாங்கள்.
லேசாய் சரியதொடங்கியிருக்கும்
உங்கள் முந்தானையின் மீதேஇருக்கும்
எம் கண்கள்.
நாங்கள் அப்படித்தான்.

____________

பெரியவிழிகளும்,நெடுங்கொண்டையுமாய்
அமர்ந்திருப்பாள் அம்மன்-அவளுக்கு
சந்தனமும்,பாலுமாய் அபிஷேகமும்
பூவும்,பொன்னுமாய் அலங்காரம் நடக்கும்
தெய்வீகபோதை சூழ்ந்திருக்கும் அங்கே-ஆனாலும்
மேடையில் ஆடும்
கரக்காட்டகாரியின்
கூரான மார்புகளிலேயே இருக்கும்
எம் கண்கள்
நாங்கள் அப்படித்தான்.
_____________


குறிப்பு:ஒரே தலைப்பில் எழுதப்பட்ட இரு வேறு கவிதைகள்.

அன்புடன்
Ibrahim A

எதையேனும் சார்ந்திரு

     பிரசன்னாவை பார்க்கும் போது அப்படியெல்லாம் தோன்றவே இல்லை எங்களுக்கு.ஒல்லியாய் தோள்களற்று,படியவாரிய தலையுடன்,வெளிர்நிறமாய் தயிர்சாத வாசனையுடன் இருப்பான்.எப்போதும் கண்களை விட்டிறங்கி மூக்கின்மேல் நிற்கும் அவன் கண்ணாடி,அதனால் யாரையும் தலைதாழ்த்தி தான் பார்ப்பான். எங்களை விட இருவயது மூத்தவன் என்று அவன் வகுப்பின் முதல் நாள் சொன்னபோது நம்பவே முடியவில்லை.

     +2 படிக்கவேண்டியவனாம் அவன்,எங்களுடன் பத்தாம் வகுப்பில் வந்து அமர்ந்திருந்தான்.வெள்ளை பஞ்சுமிட்டாய் போல தலை வைத்திருக்கும் பால்ராஜ் வாத்தியார் காரணம் கேட்ட போது "பர்சனல் ரீசன்ஸ்" என்று கூறி உடனே அமர்ந்துவிட்டான்.அதற்க்கு மேல் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை அவர்.
     எங்களில் யாருடனும் அவன் பேசமாட்டான்,சின்னபசங்க கூட என்ன பேச்சு என்று நினைப்பான் போல.ஆனால் எங்களுக்கோ அவன் ஏன் 2 வருடம் பின்தங்கியிருக்கிறான்,அவன் கூறிய பர்சனல் ரீசன்ஸ் என்ன என்பதை பற்றிய ஆர்வம் எகிறியது.

    அதன் பின் வந்த நாட்களில் பிரசன்னாவை பற்றி அழகேசன் சார் டியூஷன்,கலர்பென்சில்,எழுத்துப்பேடு,பிக்-பபுள் சுயிங்கம்(அதற்க்கு ஒரு குட்டி போஸ்டர் ப்ரீ கிடைக்கும்),கட்டி ரஸ்னா போன்றவைகளை விற்கும் அக்கா கடை வாசல்,ஹாக்கி கோர்ட் அருகே வரிசையாய் நிற்கும் தூங்கு மூஞ்சி மரத்தடி போன்ற இடங்களில் எங்கள் குழு கூடிக்கூடி விவாதித்தது.இறுதியாக அவன் ரகசியங்களை கண்டுபிடிக்கும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டது.நானும் சரியென்று தலையாட்டிய பின் தான் தெரிந்தது பிரசன்னா நோஞ்சான்தனமாய் இருந்தாலும் ரொம்பவும் கோவக்காரனாம்,போனவாரம் குண்டுரமணி அவனை 'வாடா,போடா' என்றழைத்ததற்காக,பாத்ரூம் வாசலில் வழிமறித்து தொடைச்சதையை பிடித்து திருகிவிட்டானாம்.எனக்கு அப்பொழுதே தலை சுற்றிக் கொண்டு வந்தது.

      ஓரிரு வாரம் முட்டிமோதி அவனுடன் பழகத்தொடங்கியிருந்தேன்.மற்றவர்கள் சொன்னது போலெல்லாம் இல்லை ரொம்பவும் கணிவாகதான் இருந்தான்.நிறைய பேசினான்,அவன் பேச்சு எப்போதும் கார்களை பற்றி தான் இருக்கும் எப்பொழுதும்..எப்போழுதென்றால் எப்பொழுதுமே கார்களை பற்றி தான் பேசுவான்,தன்னால் எந்த கார்களையும் ஓட்ட முடியும் என்பான்(முதலில் நான் இதை நம்பவில்லை).போர்ட்,காடியலிக் என பழைய கார்களின் தகவல்களை கூட சொல்வான்.புத்தகப்பையில் இரண்டு தடித்த நைஸ் பேப்பர் மேகசின் வைத்திருப்பான்,அதில் முழுவதும் கார்களை பற்றிய குறிப்புகள்,படங்களை நிரம்பியிருக்கும்.அவன் கார்களை பற்றி பேசுவது புரியாவிட்டாலும் சுவாரசியமாக இருக்கும்.நாங்களெல்லாம் வாடகை சைக்கிள் எடுத்துச்சுற்றிய காலத்தில் அவனது கார்களை பற்றிய அறிவும்,ஆர்வமும் அவன்பால் என்னை ஈர்த்தது.

      மாருதி காருக்கு தான் பெரிய பீப் லைட் இருக்கும்,பென்ஸ் தான் உலகின் காஸ்ட்லியான கார்,வெளிநாடுகளில் கார்கள் விபத்தானால் உள்ளிருக்கும் ஏர்-பேக் விரிந்து டிரைவரை காப்பாற்றும் போன்ற தகவல்களை அவனிடமிருந்தே முதலில் தெரிந்து கொண்டேன்.நானும் அவனும் பிறரால் நண்பர்களாக அறியப்பட்டோம்.அவனது தினசரி உணவான தயிர்சாதம்,அந்த தயிர் சாதத்தை மூடியிருக்கும் துண்டு மாம்பழத்தையும் எனக்கும் கொஞ்சம் தரத்தொடங்கினான்.அவனது பொக்கிஷமான கார் மேகசினை இரண்டொருமுறை வீட்டிற்க்கு எடுத்துப்போகக்கூட அனுமதித்தான்.அவனிடம் கற்ற விஷயத்தை தங்கை,தம்பிகளிடம் காட்டி வாய் பிளக்கவைத்தேன்.

     ஒரு நாள் பள்ளி முடிந்த ஒரு சாயங்கால வேலையில்,மனதை அரித்த அந்த கேள்வியை கேட்டுவிட்டேன் "நீங்க ஏன் திரும்பவும் டென்த் படிக்கறிங்க? பெயில் ஆயிட்டிங்களா?" என்றேன் அப்பாவியாய் முகத்தை வைத்து,இரு தொடைகளையும் கைகளால் மூடிக்கொண்டேன்.
       பிரசன்னா முகம் வாடிவிட்டான்,அழப்போகிறான் என்று நான் நினைக்கும் போது தழுதழுத்த குரலில் சொன்னான் "ரெண்டு வருஷம் முன்னாடி எங்க புது காரிலே குலதெய்வம் கோயிலுக்கு போனோம்,அப்பவே நான் தான் கார் ஓட்டினேன்.ஆனா வழியில பெரிய ஆக்சிடென்ட் ஆகி எங்க அம்மா,அப்பா,அண்ணன் என் கண்ணு முன்னாடியே இறந்துட்டாங்க,எனக்கு ஒரு கை எரிஞ்சு போய்,முதுகெலும்பு நொறுங்கி ரெண்டு வருஷம் ஹாஸ்பிடல்ல கிடந்தேன்......" அதற்க்கு மேல் அவன் சொன்னதெதுவும் காதில் விழவே இல்லை.எனக்கு அழுகையாக வந்தது,உடனே பாத்ரூம் போகவேண்டும் போல இருந்தது.
     அதன் பின் அவனோடு பேசும் போது ஏனோ அவன் கருகிய கைகளை பார்ப்பதை தவிர்த்து வந்தேன்.
     அவனோடு நட்பாயிருந்த பலவருடங்களில் ஒன்றை தெளிந்துகொண்டேன் . "எதன் மீதாவது பற்றோ,காதலோ கொள்வதுதான் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது".

அன்புடன்
Ibrahim A

பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999)சில படங்களை பார்த்துக்கொண்டிருக்கும் போதே உணர்ச்சியின் மிகுதியால் கண்களில் நீர் மறைத்துக்கொள்ளும்,வெகுநாட்கள் அந்த வழியில் தவிக்கும் மனது.மிகக்குறைந்த படங்களே இப்படிப்பட்ட தன்மையுடையது.  இந்தப்பதிவில் பார்க்கபோகும் தி கிரீன் மைல் அந்த வகையைச்சார்ந்தது.Frank Darabont(இயக்குனர்),இவரின் முந்தைய படமான shawshank redemption IMDB No.1 ஆக பலவருடம் இருந்துவருகிறது.இந்த இரு படங்களின் கதை கருக்களும் Stephen king என்ற எழுத்தாளரின் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.இப்படி நாவலில் இருந்து தமிழில் படங்கள் வந்தால் "குருவி,வில்லு" போன்றவை வராதென்பது வருத்தமே!

         108 வயதான பால் எட்ஜ்கொம்ப் (Tom Hanks) தன் கிழத்தோழியிடம் கதையை சொல்வதில் தொடங்குகிறது படம்.1935ம் வருடம் பால் மரணதண்டனை நிறைவேற்றும் சிறைத்தலைமை அதிகாரியாக இருக்கிறார் அவருக்கு கீழே புரூடஸ்,டீன்,கவர்னரின் சொந்தமான பெர்சி என்பவனும் துணை அதிகாரிகளாய் இருக்கின்றனர்.மரணதண்டனை பெறப்போகும் கைதிகள் தத்தம் வாழ்நாளின் இறுதி மைலை அமைதியாகவும் நிம்மதியாகவும் செலவிடவேண்டுமென்பதே அவர்கள் எண்ணம்.ஆனால் பெர்சியோ அடக்கமின்றி,இரக்கமின்றி அந்த பதவிக்கு முற்றிலும் தகுதியற்றவனாய் இருக்கிறான்.பால் அவனுக்கு,முன்பே காத்திருக்கும்,நிறைய பணம் கிடைக்கும்,மனநிலை மருத்துவமனை-சூப்பர்வைசர் வேலைக்கு போகச்சொல்கிறார்.


    இரு சிறுமிகளை கற்பழித்துக்கொன்ற குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட ஜான் அங்கு வருகிறான்.ஜெருசுலம் இயேசுவை போல அவனுக்கு நோய்களை தீர்க்கும்,சாவிலிருந்து மீட்க்கும் சக்தியும் இருக்கின்றது.அவன் கறுப்பர் இனத்தை சேர்ந்தவனாக இருக்கிறான் (ஏசுவும் கருப்பராக இருக்கலாம் என்ற வாதமுண்டு).யாருமற்ற ஒரு பொழுதில்,தன் சிறுநீரக கோளாறால்பெரும்வலி வலிகண்டு துடித்துவிழும் பால்ஐ அழைத்து அவ்விடத்தை நீவி அந்த அவதியை நீக்குகிறான்,நிரந்தரமாகவே!மற்றவர்களின் வலியை தனக்குள் அனுபவிப்பவன் ஆகையால் ஜானின் முகம் எப்போதும் கறுத்து,கண்ணீர் செறிந்து இருக்கின்றது.
       ஜான்,பெர்சி,ப்ருடசிடமிருந்து விளையாட்டுக்காட்டி தப்பிக்கும் வெள்லெலியொன்று அங்கிருந்த எட்வர்ட் என்னும் கைதியிடம் தஞ்சம்புகுந்து அவன் செல்லமாய் மாறுகிறது.அவனால் Mr.ஜிங்கிள்ஸ் என பெயர் சூட்டிக்கொள்கிறது.பாசமோ,காதலோ எங்கேயும் உதிக்கலாம் என்பதை போல் அவர்களுக்கிடையே நட்பு பெருகி சில நாட்களில் அவனிடம் பயிற்சி பெற்று சிறு வித்தைகள் கற்று சிறை காவலர்கள் அனுமதியுடன் கவர்னரிடம் செய்து காட்ட ஏற்பாடாகிறது.
      அந்த நட்பிலும்,சந்தோஷத்திலும் எரிச்சலுரும் பெர்சி,தன் கூண்டை விட்டு வெளியே வந்த அந்த எலியை பூட்ஸ் காலால் மிதித்து கொல்கிறான்.எட்வர்ட் பெருங்குரலெடுத்து அழத்தொடங்குகின்றான்.அதே சிறையில் இருக்கும் இன்னொரு சைக்கோ கொலையாளியான வார்டனும் கத்தி மகிழ்கிறான்(இவனுடைய பாத்திரமும் படத்தில் தெளிவாக விவரிக்கப்படுகின்றது).பெருமிதத்தில் சிரித்துகொண்டே போகும் பெர்சியை அனைவரும் விஷப்புழுவென பார்கின்றனர்.இந்த காட்சியில் பெர்சியாக நடித்திருக்கும் Doug Hutchison ஐ பார்க்கும் போது அப்படியொரு ஆத்திரம் வரும் நமக்கு.(கதாபாத்திரத்தின் வெற்றி!).ஆனாலும் இறந்து போன எலியை எடுத்து ஜான் அதற்க்கு உயிர் ஊதுகின்றான்.அது முன்னிலும் வேகமாய் ஓடி தன் நண்பன் எட்வர்ட்ஐ சேருகிறது.
     
     அங்கே மரணதண்டனை என்பது நாற்காலியில் அமரவைத்து அதிவேக மின்சாரத்தை பாய்ச்சி கொல்வதாகும்.கை,கால்கள் கட்டப்பட்டு,தலையில் இரும்புக்கவசம் அணிவித்து,கவசத்திற்கும் உச்சந்தலைக்குமிடயே ஈரப்பஞ்சை வைப்பதினால்.மின்சாரம் வேகமாய் கடத்தப்பட்டு,நேராக மூளையை தாக்கி,உடனே மரணம் ஏற்படும்.மரணத்தின் வலியை குறைக்கவே அது.
    எட்வர்டிற்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாளில் ,பெர்சி முன்வந்து தான் வேறு வேலைக்கு செல்ல விரும்புவதாகவும்,இதை தான் நினைவேற்ற நினைப்பதாக கூறுகின்றான்.எட்வர்ட் மீதுள்ள துவேஷத்தால்,நீரின்றி வெறும் பஞ்சினை வைக்கின்றான்,அதனால் எட்வர்ட் வெகுநேரம் துடிதுடித்து கருகிச்சாகிறான்.அவனது மரணம் காணச்சகியாததாக இருக்கின்றது.இதையடுத்து பெர்சியை பாலும்,ப்ருடசும் அடித்து துவைகின்றனர்.எதிர்பாராமல் அவன் ஜானின் கைகளில் சிக்கிக் கொள்கிறான்.தன்னுடன் வைத்திருக்கும் பிறரின் துன்பக்கழிவுகளை,வலிகளை  அவனுள் இறக்குகின்றான்.பித்துப்பிடித்தவனை போல பெர்சி சிறையிலிருக்கும் வார்டனை சுட்டு கொல்கிறான்.பின்னர் தான் சூபர்வைசராக சேர விரும்பிய மனநிலை மருத்துவமனைக்கே ஒரு நோயாளியாய் சேர்க்கப்டுவதாக அவன் கதை முடிகிறது.
          மூளைகட்டியால் கொஞ்சம் கொஞ்சமாய் தன் மனைவி இறந்து கொண்டிருப்பதாக புலம்பிக்கொண்டிருக்கும் தன் உயர் அதிகாரி வாலின் வீட்டிற்க்கு ஜெயிலில் இருந்து ஜானை சிறை அதிகாரிகள் கொண்டு போகின்றனர்,அவர் மனைவியை நோயிலிருந்து மீட்கின்றனர்.பின்பொரு நாளில் பெர்சி சுட்டுகொன்ற சைகோ வார்டன் தான் அந்த இரு குழந்தைகளையும் கொன்றதாக தெரிகின்றது.அப்பிஞ்சுகளை காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்து ஜான் அவ்வழக்கில் சிக்குகின்றான்.
       சிறை அதிகாரிகள் முடிவு செய்து அந்த அற்புதபடைப்பை வெளியே விட்டுவிட விரும்புகின்றனர்.. ஆனால் அவன் இவ்வுலகம் துயரமிக்கது என்றும் இனி வாழவிருப்பமில்லை என்று கூறும்போது,அந்த பாத்திரத்தின் மீது மரியாதை கொண்டு கலங்குகிறோம்.(அதிசய சக்தி கொண்ட ரஜினி அதை வைத்து பட்டம்,கொசு போன்றவற்றை சிரத்தையாக பிடிப்பதை இங்கே நினைவு படுத்திக்கொள்ளுங்கள்).ஜானின் இறுதி நாளும் வருகின்றது,இறைவனின் மகத்தான நாசரேத்தின் அதிசயத்தை யூதர்கள் சிலுவையில் அறைந்ததை போல் நாற்காலியில் அறைந்து மின்சாரம் பாய்ச்சிக்கொல்கிறான் ஜான்.அன்றிலிருந்து மீளாத்துயரில் ஆழ்கிறான்.
    அதன் பின் ஜானால் உயிர் பெற்ற Mr.ஜிங்கில்சும்,பாலும் இறவாமல் வாழ்கின்றனர்.தன் நெருங்கியவர்கள் ஒவ்வொருவர்களின் மரணமும் அவனை கடந்து செல்கிறது.வாழ்வு அவனுக்கு பெரும்தண்டனையாக இருப்பாதாக எண்ணுகிறான்,ஆம் ஜானை கொன்றதற்கு தண்டனையாக! 

அன்புடன்
Ibrahim A
படங்கள் உதவி: கூகுளாண்டவர்.

- Copyright © துளி கடல் -