பிரசன்னாவை பார்க்கும் போது அப்படியெல்லாம் தோன்றவே இல்லை எங்களுக்கு.ஒல்லியாய் தோள்களற்று,படியவாரிய தலையுடன்,வெளிர்நிறமாய் தயிர்சாத வாசனையுடன் இருப்பான்.எப்போதும் கண்களை விட்டிறங்கி மூக்கின்மேல் நிற்கும் அவன் கண்ணாடி,அதனால் யாரையும் தலைதாழ்த்தி தான் பார்ப்பான். எங்களை விட இருவயது மூத்தவன் என்று அவன் வகுப்பின் முதல் நாள் சொன்னபோது நம்பவே முடியவில்லை.

     +2 படிக்கவேண்டியவனாம் அவன்,எங்களுடன் பத்தாம் வகுப்பில் வந்து அமர்ந்திருந்தான்.வெள்ளை பஞ்சுமிட்டாய் போல தலை வைத்திருக்கும் பால்ராஜ் வாத்தியார் காரணம் கேட்ட போது "பர்சனல் ரீசன்ஸ்" என்று கூறி உடனே அமர்ந்துவிட்டான்.அதற்க்கு மேல் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை அவர்.
     எங்களில் யாருடனும் அவன் பேசமாட்டான்,சின்னபசங்க கூட என்ன பேச்சு என்று நினைப்பான் போல.ஆனால் எங்களுக்கோ அவன் ஏன் 2 வருடம் பின்தங்கியிருக்கிறான்,அவன் கூறிய பர்சனல் ரீசன்ஸ் என்ன என்பதை பற்றிய ஆர்வம் எகிறியது.

    அதன் பின் வந்த நாட்களில் பிரசன்னாவை பற்றி அழகேசன் சார் டியூஷன்,கலர்பென்சில்,எழுத்துப்பேடு,பிக்-பபுள் சுயிங்கம்(அதற்க்கு ஒரு குட்டி போஸ்டர் ப்ரீ கிடைக்கும்),கட்டி ரஸ்னா போன்றவைகளை விற்கும் அக்கா கடை வாசல்,ஹாக்கி கோர்ட் அருகே வரிசையாய் நிற்கும் தூங்கு மூஞ்சி மரத்தடி போன்ற இடங்களில் எங்கள் குழு கூடிக்கூடி விவாதித்தது.இறுதியாக அவன் ரகசியங்களை கண்டுபிடிக்கும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டது.நானும் சரியென்று தலையாட்டிய பின் தான் தெரிந்தது பிரசன்னா நோஞ்சான்தனமாய் இருந்தாலும் ரொம்பவும் கோவக்காரனாம்,போனவாரம் குண்டுரமணி அவனை 'வாடா,போடா' என்றழைத்ததற்காக,பாத்ரூம் வாசலில் வழிமறித்து தொடைச்சதையை பிடித்து திருகிவிட்டானாம்.எனக்கு அப்பொழுதே தலை சுற்றிக் கொண்டு வந்தது.

      ஓரிரு வாரம் முட்டிமோதி அவனுடன் பழகத்தொடங்கியிருந்தேன்.மற்றவர்கள் சொன்னது போலெல்லாம் இல்லை ரொம்பவும் கணிவாகதான் இருந்தான்.நிறைய பேசினான்,அவன் பேச்சு எப்போதும் கார்களை பற்றி தான் இருக்கும் எப்பொழுதும்..எப்போழுதென்றால் எப்பொழுதுமே கார்களை பற்றி தான் பேசுவான்,தன்னால் எந்த கார்களையும் ஓட்ட முடியும் என்பான்(முதலில் நான் இதை நம்பவில்லை).போர்ட்,காடியலிக் என பழைய கார்களின் தகவல்களை கூட சொல்வான்.புத்தகப்பையில் இரண்டு தடித்த நைஸ் பேப்பர் மேகசின் வைத்திருப்பான்,அதில் முழுவதும் கார்களை பற்றிய குறிப்புகள்,படங்களை நிரம்பியிருக்கும்.அவன் கார்களை பற்றி பேசுவது புரியாவிட்டாலும் சுவாரசியமாக இருக்கும்.நாங்களெல்லாம் வாடகை சைக்கிள் எடுத்துச்சுற்றிய காலத்தில் அவனது கார்களை பற்றிய அறிவும்,ஆர்வமும் அவன்பால் என்னை ஈர்த்தது.

      மாருதி காருக்கு தான் பெரிய பீப் லைட் இருக்கும்,பென்ஸ் தான் உலகின் காஸ்ட்லியான கார்,வெளிநாடுகளில் கார்கள் விபத்தானால் உள்ளிருக்கும் ஏர்-பேக் விரிந்து டிரைவரை காப்பாற்றும் போன்ற தகவல்களை அவனிடமிருந்தே முதலில் தெரிந்து கொண்டேன்.நானும் அவனும் பிறரால் நண்பர்களாக அறியப்பட்டோம்.அவனது தினசரி உணவான தயிர்சாதம்,அந்த தயிர் சாதத்தை மூடியிருக்கும் துண்டு மாம்பழத்தையும் எனக்கும் கொஞ்சம் தரத்தொடங்கினான்.அவனது பொக்கிஷமான கார் மேகசினை இரண்டொருமுறை வீட்டிற்க்கு எடுத்துப்போகக்கூட அனுமதித்தான்.அவனிடம் கற்ற விஷயத்தை தங்கை,தம்பிகளிடம் காட்டி வாய் பிளக்கவைத்தேன்.

     ஒரு நாள் பள்ளி முடிந்த ஒரு சாயங்கால வேலையில்,மனதை அரித்த அந்த கேள்வியை கேட்டுவிட்டேன் "நீங்க ஏன் திரும்பவும் டென்த் படிக்கறிங்க? பெயில் ஆயிட்டிங்களா?" என்றேன் அப்பாவியாய் முகத்தை வைத்து,இரு தொடைகளையும் கைகளால் மூடிக்கொண்டேன்.
       பிரசன்னா முகம் வாடிவிட்டான்,அழப்போகிறான் என்று நான் நினைக்கும் போது தழுதழுத்த குரலில் சொன்னான் "ரெண்டு வருஷம் முன்னாடி எங்க புது காரிலே குலதெய்வம் கோயிலுக்கு போனோம்,அப்பவே நான் தான் கார் ஓட்டினேன்.ஆனா வழியில பெரிய ஆக்சிடென்ட் ஆகி எங்க அம்மா,அப்பா,அண்ணன் என் கண்ணு முன்னாடியே இறந்துட்டாங்க,எனக்கு ஒரு கை எரிஞ்சு போய்,முதுகெலும்பு நொறுங்கி ரெண்டு வருஷம் ஹாஸ்பிடல்ல கிடந்தேன்......" அதற்க்கு மேல் அவன் சொன்னதெதுவும் காதில் விழவே இல்லை.எனக்கு அழுகையாக வந்தது,உடனே பாத்ரூம் போகவேண்டும் போல இருந்தது.
     அதன் பின் அவனோடு பேசும் போது ஏனோ அவன் கருகிய கைகளை பார்ப்பதை தவிர்த்து வந்தேன்.
     அவனோடு நட்பாயிருந்த பலவருடங்களில் ஒன்றை தெளிந்துகொண்டேன் . "எதன் மீதாவது பற்றோ,காதலோ கொள்வதுதான் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது".

அன்புடன்
Ibrahim A

6 Responses so far.

 1. fathima says:

  Unga thalaipuku nenga kuduthrukra example simple a irunthalum, kathai solirukra vitham interesting a iruku.

 2. thanks for commenting femi..adhenna example?

 3. Anonymous says:

  arumaiyana thalaipu...kadaisi statement :"எதன் மீதாவது பற்றோ,காதலோ கொள்வதுதான் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது".

  rombave unmai.

 4. Based on School days memory ? but how its possible to have very much affection on something which actually caused a tragedy in his life :) !

 5. @siddiq:வரும் கண்டிப்பாக affection வரும்....மனிதமனது இந்த மாறி விஷயத்தில ரெண்டு extreme ல எதாவது ஒரு சைடு இருக்கும்.
  ஒன்னு அதை விட்டு ரொம்ப விலகி போயிடும் (like phobia) ...இல்லேன்னா அதுலேயே இறங்கி ரொம்ப தீவிரமா ஆகிடும்.
  நிறைய example சொல்லலாம்.
  லைட் அ ஒண்ணு: பெண்களாலும்,அவர்களுடன் கொண்ட உறவாலும் நாம ரொம்ப கஷ்டப்பட்டிருப்போம்,அடிபட்டிருப்போம் ....அவங்களால லைப் ல எவ்ளோ பெரிய tragedy நடந்திருந்தாலும்.......அவர்களை நாடியே நாம திரும்ப திரும்ப செல்வோம்.
  (அனுபவம் தம்பி)
  see ஒருத்தவங்க மேல அன்போ,காதலோ அதிகமாக வைப்பதால்தான் அவர்களை விட்டு பிரிய நேரும் போது நம்மால் அந்த வலியை தாங்கிக்க முடியறதில்லை.
  ஒருவேளை அப்படி யார் மீதும் அன்பு பாராட்டாமல் இருந்தால் அவங்கள பிரியற வலியே நமக்கு தெரியாது...ரொம்ப casual ஆக இருக்கலாம் சரியா?
  ஆனா அப்படி ஆழமான அன்போ காதலோ வைக்காம வாழ முடியுமா?முடியாது!
  இப்படி தெரிஞ்சே நாம ஏன் அதுபோல அன்பு வைக்கறோம்? புரிஞ்சிக்க முடியாது அதை.

  இதுக்கிடையில தான் வாழ்க ஓடுது.ஓடனும்

 6. super philosophy :) ... but its quite impractical cause human wanna spend life without worries...i mean he should come out of it and should enjoy his life...

- Copyright © துளி கடல் -