என்ன நினைத்துகொண்டு இந்த மாதிரி படமெல்லாம் எடுப்பார்கள்?
கதை,கன்றாவியெல்லாம் யோசிக்காமல் நேராக காட்டுக்கு கேமரா பெட்டியை தூக்கிக்கொண்டு போயிருப்பார்கள் என்று நினைக்கிறன்.

படத்தின் கதை என்ன? (ஹுக்கும்)
சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களை திரட்டி,புரட்சி தமிழன் சத்யராஜ் ஒரு புரட்சி இயக்கம் நடத்துகிறார்.புரட்சியாளர்கள் சூட்கேஸ் உறையில் தைத்த ஆடையில்(இந்த costumeஐ மாத்தவே மாட்டிங்களாப்பா)அட்டை துப்பாக்கியை பிடித்தபடி காட்சிக்கு காட்சி சத்யராஜிற்கு சல்யூட் வைக்கிறார்கள்,கயிற்றில் ஏறுகின்றார்கள்,இறுக்கமாக உடை அணிந்திருக்கும் பெண்களிடம் கடலை போடுகின்றார்கள்,விஜய் பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆடுகின்றார்கள்.
     படம் முழுக்க சத்யராஜ் வேகாத வெயிலில் இரண்டு,மூன்று சட்டை,மேல்கோட்டு,கழுத்தில் மப்ளர்,சைடு தொப்பி எல்லாம் போட்டுகொண்டு,சைடு வாயில் சுருட்டை இழுத்துக்கொண்டு,புல்லட்டில் போய்கொண்டு (இப்படி எல்லாம் டிரஸ் போட்டால் மட்டும் சே குவாரா ஆகிவிடவும் முடியாது,புரட்சியை கொண்டு வந்து விடவும் முடியாது என யாராவது இவர்களுக்கு சொன்னால் தேவலை) பெரியார்,சே வசனங்களை ஸ்க்ரீனை பார்த்து எச்சில் தெறிக்க பேசுகின்றார்.பார்க்கும் நமக்கும் நம் தலைமுடி,வயிறு,கழுத்து,போட்டிருக்கும் ஜட்டி,அமர்ந்திருக்கும் சீட் எல்லாம் புரட்சி தீ பற்றி எரியத்தொடங்குகின்றது.

   இவர்களெல்லாம் சேர்ந்து எல்லா அரசு இலாகாவிலிருந்தும் பத்து பத்து பெருந்தலைகளை கடத்துகின்றார்கள் (ரமணா படத்தை பார்த்திருப்பார்கள் என நினைக்கிறன்),அவர்களுக்கும் சத்யராஜ் கடுங்காப்பி,சோறு எல்லாம் போட்டு சிலபல வசனங்கள் பேசி திருத்தி,தங்கள் வழிக்கு கொண்டு வருகின்றார்கள்.அவர்களும் நம்ம நித்யானந்தா(நித்யானந்தா மாதிரி),ராசா (ராசா மாதிரி) சமுதாயகிருமிகளையெல்லாம் பினாயில் போட்டு சுத்தப்படுதுகின்றார்கள்.

   இன்றைக்கு டி.வி சீரியல்களில் கூட மீட்டிங் என்றால் ஏசி ஹாலை காட்டுகின்றார்கள்,இந்தப்படத்தில் போலீஸ் மீட்டிங் ஏதோ ஒரு ஓட்டு வீட்டில் நடக்கிறது,CM மீடிங்கில் எம்.ல்.எ கள் இடமில்லமில்லாமல் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்திருக்கிறார்கள்.விஜய் SAC யிடம் பணம் தரமாட்டேன் என்றிருப்பார் போல!எல்ல காட்சிகளிலும் சரி ,நடிப்பவர்களிடமும் மகா மொன்னைத்தனம்.

     சத்யராஜ் அண்ட் கோ வை தேடிப்போகும் சுரேஷ் அண்டர்வேர் தெரிய கைலியில் மாறுவேடத்தில் சத்தியமங்கலம் பஸ்ஸ்டாண்டில் இறங்குகிறார்.இறங்கியதுமே துப்பாக்கியை வாங்கி பப்பரக்காவென்று பின்புறம் சொருகிக்கொள்கிறார்......ங்கொய்யால இதுக்கு எதுக்கு மாறு வேஷம்னு புரியல.....நேரா பூ விக்கிற பொம்பளைகிட்ட போய் "ஏம்மா...இந்த காட்ல தீவிரவாதிங்க யாராவது இருக்காங்களாம்மா?" என்கிறார்.அந்த இடத்திலேயே இந்தப்படம் உலகத்தரத்தை எட்டி விடுகின்றது.

   SAC படத்தில் கோர்ட் சீன்,கற்பழிப்பு சீன் இருந்தே தீரும்.இப்படத்தில் வரும் கோர்ட் சீனில் வக்கீல் பிரபாகர்(சீமான்) வாதாடுகையில் "ஜட்ஜ் அய்யா....நாம வாங்கற ஒவ்வொரு பொருளுக்கும் வரி கட்றோம்....சோப்பு தூளுக்கு,அரிசி பருப்புக்கு...ஏன் உப்புக்கு கூட வரி கட்றோம்...இது யாருக்குமே தெரியறதில்லை" என்கிறார்.அதற்க்கு ஜட்ஜ் ராதாரவி "அட எனக்கே இது புதுசா இருக்கே பிரபாகர்"என்று டைமிங் காமெடி செய்கிறார்.நமக்கும் சிப்பு,சிப்பா வருது!

   க்ளைமாக்சில் ஜெயிலில் இருந்து அசால்டாக தப்பிக்கும் மத்திய மந்திரி ராசராமனும்,இன்னொரு எதிரியான வெங்கடேஷும் போலீசால் நெருங்க முடியாத சத்யாராஜை கொல்ல வருகின்றார்.அவர்களை ஒரு சிறுவன் வதம் செய்ய "இனி வரும் காலம் இளையதளபதிகளின் காலம்" என்ற முழக்கத்துடன் படம் முடிகின்றது.இதுபோல படத்தில் பல காட்சிகள் மயிர்கூசச்செய்கின்றன. முழு படம் முடிகையில் மயிர் கொட்டிப் போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

   இவரை போன்ற ஒரு இயக்குனருக்கு ஏன் நிறைய படங்களை தரக்கூடாது?இவருக்கு நிகரான சமகால இயக்குனர் விஜய.டி.ஆர் மட்டுமே.இவர்கள் இருக்கும் வரை நமக்கு காமடிக்கு பஞ்சமில்லை. இப்படத்தை ஆஸ்காருக்கு அனுப்ப நம்மை நம்மை போன்ற ரசிகர்கள் ஏன் போராட்டம் நடத்தக்கூடாது?படத்தில் கலைஞர் குடும்பத்தையும்,ராசா,திமுகாவையும் போட்டு சாணி மிதிப்பதால் அம்மா ஆட்சிக்கு வந்தால் அதையும் செய்வார்கள்.

    இவ்வளவு திராபையான படத்தை சமீபத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் கண்டதில்லை.குருவி,வில்லு படத்தில் கூட ரசிக்கும்படியான விஷயங்களை கண்டுபிடித்துவிடலாம் (முடியுமா?)...இந்த படத்தில.....ஹு..ஹும் ஒன்றும் சொல்றதுக்கில்லை.நிறைய தமிழ் இயக்குனர்களுக்கு புரட்சி,காதல் போன்றவைகளின் ஆழமோ,உண்மையோ புரிவதே இல்லை.அதனை தப்பர்த்தம் எடுத்துக்கொண்டு இவர்கள் வழியில் படமெடுத்து கொச்சைபடுத்துகின்றார்கள்.

  மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னை-வடபழனியில் தங்கியிருக்கையில்-வாயில் எப்போதும் சினிமாவை,ஸ்டுடியோவை பற்றிய பேச்சும்,அழுக்கேறிய ஜீன்சுமாக,சிகரெட்டையே உணவாகக்கொண்டு வாழும்,நல்ல கதையை வைத்துக்கொண்டு சினிமா சான்ஸ் தேடி அலையும் எத்தனையோ இளைஞர்களை பார்த்திருக்கிறேன்.இது போன்று காசை வைத்துகொண்டு சினிமா என்ற பெயரில் ஒன்றை எடுத்து பார்பவர்களை சாகடிப்பதை விட முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு 30-40 லட்சம் உதவி செய்து புண்ணியம் தேடிக்கொள்ளலாம்.

பி.கு:முதன் முதலில் எழுதியிருக்கும் தமிழ் படத்திற்கான விமர்சனம் இது.படத்தை பார்த்த எரிச்சலினாலும்,ஆற்றாமையினாலும் இது போன்ற படைபிற்கு எழுத வேண்டியதாகப் போய்விட்டது.

அன்புடன்
நான்.

2 Responses so far.

  1. cisco says:

    review supper....100% mokkai padam

  2. Thanks for coming Cisco...ippadi oru pera?

- Copyright © துளி கடல் -