கொடுங்காமம்
சில மாதங்களுக்கு முன்பு தி.ஜாவின் "அம்மா வந்தாள்" நாவலை படித்திருந்தேன்.ஆண்-பெண் உறவுகளை பற்றியும்,பெண்ணியம் பற்றி பெருங்கேள்வி எழுப்பிய நாவல் அது.மிகவும் திகைப்படையச்செய்தது.மோகமுள் நாவலையும் ஒரு எதிர்ப் பார்ப்போடுதான் துவங்கினேன்.
   நாவலின் ஆரம்பம் முதல் கும்பகோணத்து வீடுகளும்,தெருக்களும்,கோயில்களும்,நீர் நிறைந்து ஓடிய காவிரியும் படக்காட்சி போல கண்முன்னே விரிகின்றது.கன்னத்தில் கையூன்றி அருகில் அமர்ந்து கதைவாசிகளான பாபு,யமுனா,ரங்காவின் உரையாடல்களை பார்ப்பது போல போன்றொரு அனுபவம் மோகமுள்.
   கதை மிகுதியாக பாபுவின் பார்வையில் வருவதால் மற்றவர்களுடைய இயல்பும்,மனநிலையும் அவன் மூலமாகவே நமக்கு நிறைய இடங்களில் தெரிகின்றது.அதுபோல நடக்கும் எல்லா சம்பவங்களும்,பாத்திரங்களுமே பாபுவின் சிந்தனை ஓட்டத்தையும், மனநிலையையும் நிர்ணயம் செய்கின்றது.அவனுடைய குழப்பமும்,வலியும்,தவிப்பும் நமக்குள்ளே அழகாக கடத்தப்படுகின்றது.
      கும்பகோணத்தில் தங்கிப்படிக்கும் பாபுவிற்கு தனது தந்தையின் நண்பரான சுப்பிரமணிய அய்யரின் இரண்டாம் மனைவி பார்வதி,அவரது மகள் யமுனாவின் அறிமுகம் கிடைக்கிறது.யமுனாவின் அழகும்,லட்சணமும் அவன் மனதில் அவள் தெய்வத்தின் உருவாக குடிகொள்கிறது.மனிதப்பெண்கள் செய்யும் பெண்பார்க்கும் சடங்கு,திருமணம்,குழந்தை பெறுதல்,குடும்பம் இவைகளுக்கு அப்பாற்பட்ட ஜீவனாக அவளை நினைக்கிறான்.ஆனால் அவள் தாயோ அவளுக்கு திருமணம் தள்ளி போவதை நினைத்து வெதும்புகிறாள்.ஒழுக்கம் பற்றியும்,அதனால் உள்ளம் ஒளி பெறுதல் பற்றியும் பாபுவின் தந்தை வைத்தி,அவரின் குரு ராஜுவின் போதனைகளை தெரிவிக்கிறார்.மானிடத்தவறுகளிலிருந்து  விடுபட என்னும் அதே காலகட்டத்தில் பாபுவிற்கு யமுனாவின் பால் தடுமாற்றம் ஏற்படுவது விந்தைதான்.  
                                                                 -----
      பாபு இசை பயிலும் ரங்கண்ணாவின் வாயிலாக தி ஜாவின் இசை மீது கொண்ட மோகம் புத்தகம் முழுவது தெறித்து கிடக்கின்றது.பழைய தஞ்சாவூர்,கும்பகோணத்துக்காரர்களின் வாழ்வோடு குழைந்து கிடந்த கர்நாடக இசை பற்றியும்,அவர்களின் இசையோடிணைந்த வாழ்கை முறை மீதும் நமக்கு தனியார்வம் வருகின்றது. ராகத்தின் உச்சியில் அதிராமல்,குலைக்காமல் பாடும் சாரீரம் தான் தெய்வத்தை தொடும் என்பது ரங்கண்ணாவின் நம்பிக்கை.உலகின் சுத்தங்கள் எல்லாம் ஒருங்கே அமைந்து வந்தவர் ரங்கண்ணா,தன்னுடன் இருக்கும் எல்லோரையும் பாதிக்கும் தன்மையுடைய அவர் இலையில் சொட்டும் நீரிலும்,ஓடும் அணிலிடம் கூட சங்கீதம் கண்டு மகிழும் குழந்தை போன்றவர்.                                                                 
                                                                 -----
    ஒருசமயத்தில் பாபு,பக்கத்துவீட்டு கிழவனின் இளம்மனைவி தங்கம்மாவுடன் தன் நிலை கட்டவிழ்ந்து போய் கூடிவிடுகிறான்.தவறிழைத்து விட்டதாக எண்ணி வாடும் அந்த நேரத்தில் தான் யமுனா மீதான காதல் அவனுக்கு புலனாகிறது.வேறொரு பெண்ணை தொடுகையில் தானே நமக்கான பெண் நினைவுகளில் வருவாள்?.இவ்வளவையும் யமுனாவிற்கு துரோகம் இழைத்த கதையாக யமுனாவிடமே கூறுகின்றான்.ஆனால் யமுனா அவன் வார்த்தைகளை சமுதாயத்தை காரணம் காட்டி அப்போது ஒதுக்கிவிடுகிறாள்.பாபுவை அது பெருந்தவிப்புக்கு ஆளாக்குகிறது.     யமுனாவின் மீதான அவனது மோகம் திசை மாறி இசை மீது பயணிக்கிறது.கண்களை மூடி இசையோடிணைந்து ரங்கண்ணாவிடம் சரணாகின்றான்.நிராகரிப்பின் வலியும்,ஏக்கமும் அவனது ஞானத்தின் மீது படர்ந்து அதை ஒளிவுபெறச்செய்கிறது.தனது குருவிற்கும் இஷ்ட மாணவனாக ஆகின்றான்.                                                                                                                      
                                                            -----
   நாவலின் இரண்டாம் பாகத்தை போன்றது சென்னையில் நிகழும் பாபு-யமுனாவின் மறு சந்திப்பும்,பாபு-ராமுவின் இசை பற்றிய வாதங்களும். ரங்கண்ணாவின் இறப்பிற்கு பின் மெட்ராசுக்கு வந்து பல வருடங்களாக வேலை செய்யும் பாபுவைதேடி யமுனா(வயதயும்,நிறைய பொலிவையும் இழந்து விட்ட யமுனா) உதவி கேட்டு வருகின்றாள்.பெற்றோர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அன்று போலதான் இன்றும் பிடிவாதமாக அதே சிந்தனையுடன் தான் இருக்கிறான் என்பதை அறிகின்றாள்.இதுவரை யாருக்கும் பயன்படாத தன் இளமையை,இத்தனை காலமாய் தனக்காய் எவ்வளவோ செய்துவிட்டு காத்திருக்கும் பாபுவிற்கு கொடுக்க விழைகிறாள்.இந்த இடத்தில் அவர்கள் சேர்வதற்கு தடையாக இருப்பவற்றை தி.ஜா (கொஞ்சம் செயற்கைத்தனமாக) விலக்கிவிடுகிறார்.
  மூச்சும்,வியர்வையும் கலந்து முடிக்கையில்,இத்தனை நாள் காத்திருப்பும்,தவிப்பும் இதற்குத்தான் என்றும் பாபுவை வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறாள் யமுனா.இத்தனை வருடங்களாக குத்திக்கொண்டிருந்த மோகமுள் இனி என்ன செய்யும்?அவளை முதலில் பார்த்த நாளில் இருந்து யமுனாவின் தெய்வீக அழகின்,அம்சத்தின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக மோகத்துடன்(infatuation),காதலும் வளர்ந்திருக்கிறது அதனாலேயே அவளோடு அவன் நிரந்தரமாக வாழ்வை இணைத்துக்கொள்ள நினைக்கிறான்.
     விதியின் கையில் தன்னை கொடுத்து விட்ட "நாளைபோக்கி"களின் சாமான்ய வாழ்கையை அவன் வெறுப்பதாலும்,யமுனாவின் உந்துதலாலும், கலையை காசுக்காக ,ரசிகர்களின் தன்மைக்கொப்ப மாற்றிப்பாடும் ராமுவிடம் (ரங்கண்ணாவின் சீடன்) ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாதிப்படைந்ததாலும் மகாராஷ்டிராவிற்கு தனது ஞானத்தை மெருகேற்றச் செல்கிறான் பாபு.செல்லும் அவனை யமுனா கணவனாக ஏற்றுக்கொண்டதாக கதை முடிகிறது.
                                                                   -----  
 கதையில் தங்கம்மாவின் பாத்திரப்படைப்பு ரொம்பவும் அற்புதமானது,பாபுவின் மீதான தன்னுடைய (கள்ளக்)காதலுக்காக கூட உண்மையாக இருந்து உயிரை விட்டு விடுகிறாள்.தங்கம்மா பாபுவின் மீது கொண்டாடும் காதல் போன்றது தான் தான் பாபு யமுனாவின் மீது கொண்டிருப்பதும்.ஆனால் தங்கம்மாவின் காதலில் அழுத்தமும்,சமுதாயத்தை மதிக்காத தைரியமும் அதிகம் அதனாலேயே அவள் உயிர் போய்விடுகின்றதோ என்னவோ?
  என்னை ரொம்பவும் கவர்ந்தது யமுனா தான்.கதையுடைய மொத்தக்கவர்ச்சியும் அவளை சுற்றியே இருப்பதெல்லாம் காரணமில்லை.கும்பகோணத்திலும் சரி,சென்னையிலும் சரி அவளது மனநிலையை ஆசிரியர் கதை முழுவது ஒளித்தே வைத்திருப்பதால் தான். தாஸ்தாவஸ்கியின் வெண்ணிற இரவுகளின் நாயகி இரு வேறு ஆண்களிடம் மனதை பறிகொடுப்பதை போன்றதொரு சூட்சமம் மிக்க பாத்திரம் யமுனா.
       தெரியாததை எழுதும் மேதாவித்தனத்தை விட்டுவிட்டு தெரிந்ததை மட்டும் வாண்ணமாக குழைத்து நாவல் முழுவதும் பூசியிருக்கிறார் தி.ஜா.கர்நாடக சங்கீதத்தில் ஒரு தேர்ந்த வித்வானுக்குரிய ஞானம் ஆங்காங்கே ஒளிவிட்டு அந்தக்கலையின் மீது நமக்கு ஒரு மரியாதை வருகின்றது.எளிமையான நடையும்,சொல்லழகும்,காமமும் கவர்ச்சியும்,மனதை தொடும் பல இடங்களும் நிரம்பிய இந்நாவல் இன்றளவும் சிலேகிக்கப்படுகின்றது.                                                                                                -----
   கதையை படித்த உடனே படத்தை பார்த்தேன்,நாவலுக்கு மட்டுமே உரிய நுண்ணழகை திரையில் கொண்டுவருவது சிரமம் தான்.ஆனாலும் படத்தில் நிறைய குறைகின்றது,எந்த impact உம் கொடுக்கவில்லை.நாவலின் சாராம்சம் படத்திற்கு முழுமையாக கடத்தப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  
                                                                    -----
மனதிற்கும்,வாழ்கைக்கும் நெருக்கமாக இருப்பது சில இலக்கியங்கள் தான்.மோகமுள் அதிலொன்று.

இந்த பதிவை பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்கவும் :-)

அன்புடன்
நான்.

3 Responses so far.

  1. Roopa says:

    Mogamul is one of the best tamil classic novel i have ever read.Ur review is good.

  2. I too feel so...thanks for coming roopa.

  3. Anonymous says:

    மிக அற்புதமான நாவல்.

- Copyright © துளி கடல் -