Archive for December 2011

ஒரு துளி கடல்

கடலை பார்த்து,கரையில் ஆடி ரொம்ப வருடங்கள் ஆகின்றது. முழித்துக்கொண்டே இருக்கையில் வரும் ஏக்கமான அந்த கனவு,அடிக்கடி என்னை காலத்தின் பின்னோக்கி இழுத்துச்செல்லும்.
        என் சிறு வயதுகளில் வீட்டிற்க்கு மிக அருகில்,எட்டி நடை போட்டு விடும் தூரத்தில் கடல் இருக்கும்.காற்றில் அதன் வாசமும்,கூச்சலும் எப்போதும் இருக்கும்.மழையில்லாத நாட்களின் பொழுது சாயும் நேரங்கள் அந்த கடற்கரையில் தான் செலவாகும்.கால் பாதங்களை நனைத்தலில் தொடங்கும் எங்கள் விளையாட்டு கண்,மூக்கு,வாயெல்லாம் உப்புநீர் ஏறி சிவந்து போய்விடுவதில் தான் முடியும்.பின் கிளம்ப எத்தனித்து சிறிது தூரம் நடந்து விட்டு "மண்ணாயிடுச்சம்மா" என்று புட்டத்தில் கால் தடுக்க ஓடி அந்த இரவின் கடைசி அலையில் காலை நனைத்துவிட்டு திரும்புவேன்.
        கடல் பார்த்திராத ஊரிலிருந்து யாரவது வந்து விட்டால் போதும்,அவர்களை இழுத்துக்கொண்டு ஓடுவேன் என் கடலை  அறிமுகம் செய்ய.அவர்களிடம் என் புதிய காரை,அமெரிக்க விசாவை,ஹோம் தியேட்டரை,எனக்கான பெண்ணை காட்டுவது போல காட்டி பெருமை படுவேன்.ஆழமான பகுதிகளை பற்றியும்,அலைகளின் சீற்றத்தையும் எடுத்துக்கூறி  எனது மேதாவித்தனத்தை நிறுவமுற்படுவேன். கேட்பதில் அவர்களுக்கு சுவாரசியம்  இல்லையென்றாலும்  ஒவ்வொரு  முறையும் அதை எடுத்துரைப்பதில்  அப்படி ஒரு மகிழ்ச்சி எனக்கு. கடலுக்கும் எனக்குமான நெருக்கம் அப்படிதான் இருந்தது.
      கடற்கரைக்கு வரும் யாருடைய மனதையும் பிரதிபலிப்பதில் அது மோனலிசா ஓவியம் போன்றது.நமது இன்பமான தருணங்களில் அதன் ஆட்டம் ஒரு தெருக்கூத்தை போல இருக்கும்.சோகம் கவ்விய  சமயங்களில் "சரி,வா பாத்துக்கலாம்" என்று தோளில் கைபோடும் நண்பனாக தோன்றும்.உற்று அதன் பக்கம் உங்கள் மனதை திருப்பினால் அது உங்களோடு பேச முற்படுவதை உணர முடியும்.பகலில் காணின் அதன் மீது ஒரு வெறுமையும்,இரவில் கவர்ச்சியையும்,நெருக்கத்தையும் தோற்றுவிக்கும்.அதன் பிரமாண்டத்தின் முன்பு மனதிலுள்ள அனைத்தும் கரைந்து போய் ஆடையில்லாத குழந்தை போல நம்மை காட்டும்.
       அதன்பின் வந்த வருடங்களில் கடலை விட்டு தூரம் போக தொடங்கிவிட்டேன்,வீடு மாற்றங்கள்,படிப்பு,இன்ன பிற வலிகளின் காரணமாக.எலிச்சந்துகள் போல கிடைக்கும் நேரத்தில் அங்கே போய் சேர்ந்தால், அலையின் ஆட்டங்களும்,தூரமான நீலமும் , சத்தங்களுக்கு கொஞ்சமும் குறைவின்றி என்னை பொறாமை கொள்ள வைக்கும் கடல்,என்னிடம் எவ்வளவோ மாற்றம் இருக்க,சிறிதும்  சாயம்போகாமல் இருக்கும் கடல் மீது கொண்ட பொறமை அது.
       குதூகலமோ,விளையாட்டோ அற்று போய்,காலத்தின் இருட்டான மூலையில் ஒடுங்கத்தொடங்கிய அந்த நாட்களில்.அந்த மாபெரும் சமுத்திரத்தின் முன் நின்று அதன் அமைதியில் சிலைத்துபோய் "என் இறுதியில் உன்னிடம் தான் வருவேன்,நீ உன் நீண்ட கரங்களில் என்னை வாரி எடுத்து,உன் மடியோடு அனைத்துக்கொள்ள வேண்டும்" என்ற கோரிக்கையை வைப்பேன்.
       கொஞ்சம் யோசித்து பார்த்தல் கடலின் அருகாமையை விட்டு விலகிச் செல்ல செல்ல வேதனைகள்,சுமைகள் கூடிகொண்டே போயிருக்கின்றது. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் பிழைப்புக்காக இப்போதிருக்கும் இந்த ஊரில் வந்து இறங்கிய முதல் நாளே பிடிக்காமல் போய்விட்டது.உயிர் வாழ,பணத்தை வயிறு முட்ட தின்று செரித்தாக வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக இந்த கூட்டத்தையும்,நெரிசலான வீடுகளையும்,கரியை துப்பும் வாகனங்களையும் மூச்சுத்திணறலுடன் பொறுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.இங்கே கடல் என்பது காலையில் தெருக்குழாயில் சொட்டு சொட்டாக வரும் குளோரின் கலந்த நீரின் வடிவே.
     ஒருவகையில் நானும் கடலை போலதான் என்று நினைகிறேன் ,அதன் ஆழத்தில் இல்லை,அமைதியில்லாத அதன் அலைகளில்,அதன் அனாதைத்தன்மையில். 
         அதைத்தவிர, எனக்குள்ளும் இருக்கிறது கொஞ்சம் கடல்.

அன்புடன்
நான்.

ஜெயகாந்தன்:ஒரு மனிதன்,ஒரு வீடு,ஒரு உலகம்

                               

ஜெயகாந்தன் தனது நாவல்களில் தனக்கு ரொம்பவும் விருப்பமான நாவல் என இதை குறிப்பிட்டிருந்தார்.படிக்கும் நமக்கும் அப்படிதான்,நாவலுக்கான வழக்கமான ஏற்றஇறக்கமில்லாத,எவ்வித ஜிகினாத்தனங்களும் இல்லாத
தனித்துவமான படைப்பு.
           ஆங்கிலோ-இந்திய பின்னணியில் வாழ்ந்த ஹென்றி தந்தையின் 
பூர்வீக மலை கிராமத்துக்கு   வந்து    அம்மனிதர்களிடம்     எப்படி ஒன்றிப்போகிறான்,அதனால் அந்த கிராமம் அடையும் பாதிப்பு என்னென்ன என்பதை பற்றியதே நாவல்.ஹென்றி,களிமண்ணை போல,குழந்தையை போல,வாழ்கை அடித்துச்செல்லும் பாதையில் நீந்திப்போகிறான்.ஓடும் ஆற்றையும்,கிணற்றையும் கண்டதும் ஆடையின்றி நீந்திக்களிக்கிறான்.கூழையும்,கிழங்கையும் விரும்பி உண்கிறான்.மின்சாரத்தால் உலகம் எவ்வளவு தான் பயன்பட்டாலும் அகல் விளக்கின் வெளிச்சமே போதும் என்னும் வரிகளை கடக்கும் போது ஏதாவதொரு கிராமத்தில் நிறைய புத்தகங்கள் படித்துக்கொண்டும் ,அன்றைய தேவைகளை மட்டுமே தீர்த்துக்கொள்ள ஒரு பெட்டிக்கடை வைத்து வாழ்கையை ஓட்ட வேண்டும் என என் நினைவில் வரும் ஆசை(பேராசை!) எட்டிப்பார்க்கின்றது. இதெல்லாம் நடைமுறைக்கு சிறிதும் சாத்தியமில்லாத,சோம்பேறித்தனமான யோசனையாவும் வைத்துக்கொள்ளலாம்,ideal thought !
            முதன்முதலில் ஹென்றிக்கு அறிமுகமாகும் தேவராஜ்,அவ்வூரில்
அத்தனை காலமாக இருந்தும் தன் கண்களில் படாத  அழகையும்
வனப்பையும் ஹென்றியின் ரசிப்பாலும்,குதூகலதாலும் அறிந்து வியக்கிறான்.ஹென்றியின் ஒவ்வொரு செயலிலும் பெருதும் ஈர்க்கப்பட்டு பிரிதிருக்கும் தன் மனைவியோடு சேர்ந்துவிடுவது மனிதன் எந்த அளவுக்கு அன்பு நிறைந்தவனாகவும்,positive approch உடன் இருக்கவேண்டும்,அப்படி இருப்பதனால் எதனையும் வெல்லலாம் என்பது விளங்குகிறது.
            சொத்தின் மீதான பாகபிரிவினையின் போது ஊர் பெரியவர்கள் தீவிரமான  வாதத்தில் ஈடுபட்டிருக்கையில்,கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் சிறுவர்கள்  பம்பரம் விடுவதை ரசித்துக்கொண்டிருக்கின்றான் ஹென்றி.தன் தந்தையின் ஏராளமான சொத்துக்கள் மீது அவனுக்கு எவ்வித பற்றும் இல்லை,அதை மீட்டெடுக்க அவன் வரவில்லை என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் ரொம்பவும் அழகாக விளக்கி விடுகிறார் ஜெயகாந்தன்.நம்மில்  நிறைய பேர் வாழத்தவறிய வாழ்கை அது இல்லையா?
          அத்தனை வருடமாக தன் தந்தையின் வீட்டையும் , நிலங்களையும் பாதுகாத்த  ஹென்றியின் தந்தையின் தம்பி அவனை பயத்துடனும் லேசான விரோதத்துடன் எதிர்கொள்ள,ஹென்றியோ எல்லா பொறுப்பையும் அவரிடமே விட்டுவிட்டு அவர் வீட்டுக்கே சென்று உறவாடி மகிழ்கிறான்.
    
       கதையின் இறுதியில் வரும் நிர்வாண,சித்தம் கலங்கிய பெண்ணை பற்றி கொஞ்சம் தீவிரமாக யோசிக்கையில் ஹென்றி என்ற பாத்திரத்தின் miniature ஆக அவள் இருக்கிறாள்.மொத்த கதையுடைய சாராம்சமும் அந்த பெண்ணின் வடிவாகவே இருக்கிறது.

     எனக்கு  ஜெயகாந்தனை படிப்பதில் எப்பொழுதுமே கொஞ்சம் பெருமையும்,ஆர்வமும் உண்டு ஏனெனில் எங்கள் ஊர் மொழி வழக்கில் இருக்கும் உரையாடல்கள்.உ.தா மல்லாட்டை-நிலாக்கடலை,கொறடு-தாழ்வாரம்,வேறெங்கிலும் இப்படி பேசி கேட்க முடியாது.மொத்தமாக சொல்லவேண்டுமெனில் ஜெயகாந்தனுக்காகவும்,நாவலில் சொல்லப்படும் நேர்கருத்துகளுக்காகவும்,பாத்திரங்களும்,அவற்றின் ஈர்ப்புத் தன்மைகளுக்காகவும் "ஒரு மனிதன்,ஒரு வீடு,ஒரு உலகம்" படித்து,பாதுகாக்க வேண்டியதொரு நூலாகிறது.

ஓட்டு போட்டுட்டு முடிஞ்சா கமெண்டும் போட்டுட்டு போங்க!

அன்புடன்
நான்.
     

- Copyright © துளி கடல் -