கடலை பார்த்து,கரையில் ஆடி ரொம்ப வருடங்கள் ஆகின்றது. முழித்துக்கொண்டே இருக்கையில் வரும் ஏக்கமான அந்த கனவு,அடிக்கடி என்னை காலத்தின் பின்னோக்கி இழுத்துச்செல்லும்.
        என் சிறு வயதுகளில் வீட்டிற்க்கு மிக அருகில்,எட்டி நடை போட்டு விடும் தூரத்தில் கடல் இருக்கும்.காற்றில் அதன் வாசமும்,கூச்சலும் எப்போதும் இருக்கும்.மழையில்லாத நாட்களின் பொழுது சாயும் நேரங்கள் அந்த கடற்கரையில் தான் செலவாகும்.கால் பாதங்களை நனைத்தலில் தொடங்கும் எங்கள் விளையாட்டு கண்,மூக்கு,வாயெல்லாம் உப்புநீர் ஏறி சிவந்து போய்விடுவதில் தான் முடியும்.பின் கிளம்ப எத்தனித்து சிறிது தூரம் நடந்து விட்டு "மண்ணாயிடுச்சம்மா" என்று புட்டத்தில் கால் தடுக்க ஓடி அந்த இரவின் கடைசி அலையில் காலை நனைத்துவிட்டு திரும்புவேன்.
        கடல் பார்த்திராத ஊரிலிருந்து யாரவது வந்து விட்டால் போதும்,அவர்களை இழுத்துக்கொண்டு ஓடுவேன் என் கடலை  அறிமுகம் செய்ய.அவர்களிடம் என் புதிய காரை,அமெரிக்க விசாவை,ஹோம் தியேட்டரை,எனக்கான பெண்ணை காட்டுவது போல காட்டி பெருமை படுவேன்.ஆழமான பகுதிகளை பற்றியும்,அலைகளின் சீற்றத்தையும் எடுத்துக்கூறி  எனது மேதாவித்தனத்தை நிறுவமுற்படுவேன். கேட்பதில் அவர்களுக்கு சுவாரசியம்  இல்லையென்றாலும்  ஒவ்வொரு  முறையும் அதை எடுத்துரைப்பதில்  அப்படி ஒரு மகிழ்ச்சி எனக்கு. கடலுக்கும் எனக்குமான நெருக்கம் அப்படிதான் இருந்தது.
      கடற்கரைக்கு வரும் யாருடைய மனதையும் பிரதிபலிப்பதில் அது மோனலிசா ஓவியம் போன்றது.நமது இன்பமான தருணங்களில் அதன் ஆட்டம் ஒரு தெருக்கூத்தை போல இருக்கும்.சோகம் கவ்விய  சமயங்களில் "சரி,வா பாத்துக்கலாம்" என்று தோளில் கைபோடும் நண்பனாக தோன்றும்.உற்று அதன் பக்கம் உங்கள் மனதை திருப்பினால் அது உங்களோடு பேச முற்படுவதை உணர முடியும்.பகலில் காணின் அதன் மீது ஒரு வெறுமையும்,இரவில் கவர்ச்சியையும்,நெருக்கத்தையும் தோற்றுவிக்கும்.அதன் பிரமாண்டத்தின் முன்பு மனதிலுள்ள அனைத்தும் கரைந்து போய் ஆடையில்லாத குழந்தை போல நம்மை காட்டும்.
       அதன்பின் வந்த வருடங்களில் கடலை விட்டு தூரம் போக தொடங்கிவிட்டேன்,வீடு மாற்றங்கள்,படிப்பு,இன்ன பிற வலிகளின் காரணமாக.எலிச்சந்துகள் போல கிடைக்கும் நேரத்தில் அங்கே போய் சேர்ந்தால், அலையின் ஆட்டங்களும்,தூரமான நீலமும் , சத்தங்களுக்கு கொஞ்சமும் குறைவின்றி என்னை பொறாமை கொள்ள வைக்கும் கடல்,என்னிடம் எவ்வளவோ மாற்றம் இருக்க,சிறிதும்  சாயம்போகாமல் இருக்கும் கடல் மீது கொண்ட பொறமை அது.
       குதூகலமோ,விளையாட்டோ அற்று போய்,காலத்தின் இருட்டான மூலையில் ஒடுங்கத்தொடங்கிய அந்த நாட்களில்.அந்த மாபெரும் சமுத்திரத்தின் முன் நின்று அதன் அமைதியில் சிலைத்துபோய் "என் இறுதியில் உன்னிடம் தான் வருவேன்,நீ உன் நீண்ட கரங்களில் என்னை வாரி எடுத்து,உன் மடியோடு அனைத்துக்கொள்ள வேண்டும்" என்ற கோரிக்கையை வைப்பேன்.
       கொஞ்சம் யோசித்து பார்த்தல் கடலின் அருகாமையை விட்டு விலகிச் செல்ல செல்ல வேதனைகள்,சுமைகள் கூடிகொண்டே போயிருக்கின்றது. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் பிழைப்புக்காக இப்போதிருக்கும் இந்த ஊரில் வந்து இறங்கிய முதல் நாளே பிடிக்காமல் போய்விட்டது.உயிர் வாழ,பணத்தை வயிறு முட்ட தின்று செரித்தாக வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக இந்த கூட்டத்தையும்,நெரிசலான வீடுகளையும்,கரியை துப்பும் வாகனங்களையும் மூச்சுத்திணறலுடன் பொறுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.இங்கே கடல் என்பது காலையில் தெருக்குழாயில் சொட்டு சொட்டாக வரும் குளோரின் கலந்த நீரின் வடிவே.
     ஒருவகையில் நானும் கடலை போலதான் என்று நினைகிறேன் ,அதன் ஆழத்தில் இல்லை,அமைதியில்லாத அதன் அலைகளில்,அதன் அனாதைத்தன்மையில். 
         அதைத்தவிர, எனக்குள்ளும் இருக்கிறது கொஞ்சம் கடல்.

அன்புடன்
நான்.

13 Responses so far.

 1. sasikala says:

  கொஞ்சம் யோசித்து பார்த்தல் கடலின் அருகாமையை விட்டு விலகிச் செல்ல செல்ல வேதனைகள்,சுமைகள் கூடிகொண்டே போயிருக்கின்றது.
  மிகவும் அருமை நினைபதைஎல்லாம் சொல்லி விட முடிவதில்ல எங்களால் நீங்கள் சொன்ன விதம் அருமை .

 2. Ibrahim A says:

  வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி சசிகலா.

 3. Ibrahim A says:

  வருகைக்கு நன்றி அருணா.

 4. நண்பரே, தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.

 5. Anonymous says:

  ரோஜாவின் காதலருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 6. Ibrahim A says:

  இன்னும் ஒரு நாள் இருக்கில்ல அதுக்குள்ள என்ன அவசரம்! :-)

 7. Anonymous says:

  அப்போ நான் வாபஸ் வாங்கிக்கிறேன். நாளைக்கு இத போஸ்ட் பண்ணிடுங்கள் சரி தானே.

 8. Anonymous says:

  ரோஜாவின் காதலருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...இப்போ சொல்லலாமா....

 9. Anonymous says:

  ரோஜாவின் காதலருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...இப்போ சொல்லலாமா....

 10. Ibrahim A says:

  .....லாம்.....ஆனா நீங்க யாருன்னு சொல்லிட்டா நல்ல இருக்கும்.....அடி தாங்க முடியல!!!

- Copyright © துளி கடல் -