வேலை தேடித்தேடி நிறைய வியர்வையையும்,உடலையும்,மனதையும் இழந்துவிட்ட காலகட்டமது.சூன்யத்தை வெறித்துக்கொண்டு, தூங்கிப்போகும் முயற்சியில்  பகலும்,இரவும் பசியை உண்டு  படுத்திருப்பேன். வெயில் மங்கும் நேரத்தில் எப்போதாவது பால்கனியில்  வந்து  உட்காருவதுண்டு. மற்ற அறை நண்பர்கள் வேலை தேடி,அல்லது தேடுகின்ற போர்வையில் லால்பாக் பார்க்கில் அன்றைய    காதலர்களின் open prostitution பார்த்துவிட்டு களைத்து வருகின்ற வரையில் அங்கேயே அமர்ந்திருப்பேன்.
    வீட்டின் கீழே தெற்கு-மேற்காக அமைந்திருக்கும் சின்ன ஓட்டலில் இருந்து வரும் மிளகாய் பஜ்ஜி வாசனையை முகர்ந்து கொண்டும், சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து கை கழுவும் திருப்தி பூசிய முகங்களை பார்த்துக்கொண்டு நேரத்தை கடத்துவேன் .மூன்று ரூபாய் பன்னும்,இரண்டு ரூபாய் half -டீயும் வைத்து நாள் முழுதும் ஓட்டும் எனக்கு அவர்களை பார்த்தால் பொறாமையாக இருப்பது வியப்பல்ல. யாராவது உள்ளூர் விருந்தாளிகள் அவர்கள் வீட்டிற்க்கு சாப்பிட அழைத்தால் "யப்பா,இன்னைக்கு சோறு சாப்பிடலாம்" என்று பிச்சைக்காரனை போன்ற எண்ணத்தோடு அரக்கபறக்க செல்வேன்."நல்லா இருக்கிங்களா" என்று உள்ளே நுழையும் போதே மூக்கை தீட்டி வாசனை பிடிக்க ஆரம்பித்துவிடுவேன்.
       சதா பீடாவை மென்று கொண்டு,நினைத்த இடத்தில் துப்பிக்கொண்டு, தொண்ணூறு கிலோ உடம்போடு ஐம்பது கிலோ தொப்பையயும் தூக்கிக்கொண்டு திரியும்  ஓனருக்கு  இருக்கும்  லட்சக்கணக்கான   சொத்துக்களில்  எங்கள் வீடும் ஒன்று.  கீழ்பகுதியில் ஒரு மருத்துவமனையும், மேலே நான்கு போர்ஷன்களை கொண்டதுமானது அது.மாடிக்கு   வர குறுகலான படிகள் ஏறி திரும்புவீர்களேயானால் முதல் மூன்று போர்ஷன்களும், அதன் வாசல்களும் ஒன்றை ஒன்று பார்த்தபடி இருக்கும். திரும்பாமல் நேர சென்று சுவற்றில் முட்டிகொள்ளும் இடத்தில் மற்ற இரு அறைகள்.மேலே சொன்ன மூன்று போர்ஷன்களில் எங்களுடையதும் ஒன்று
       இதில் பான்பராக் போட்டு சுவர் மூலையிலே துப்பி,அதை ரத்தக்களறி ஆக்கி வைத்திருக்கும்  அறையானது   அருகிலுள்ள சேஷாத்ரி  பர்ஸ்டு கிரேடு கல்லூரி மாணவர்களை சேர்ந்தது.எப்போதும் குடியும்,சில சமயங்களில் குட்டியுமாக இருப்பார்கள். எவனாவது கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு அறையில் இருந்தால் அன்று விஷயமிருக்கிறது என்று அர்த்தம்.என்னிடம் ஒரு முறை "அண்ணா,ட்ரை மாடுதீரா?"என்று கேட்க,பாக்கெட்டில் பைசா இல்லாத ஒரே காரணத்தினால்  அதை கேட்டதும்   பதறியதை  போல, அநியாயத்திற்கு  நல்லவனை  போல   காட்டிக்கொள்ள  வேண்டியிருந்தது.
    சனி-ஞாயிறுகளில் திடீரென்று போய் அவர்கள் அறை கதவை திறந்தோமேயானால் கஞ்சாப்புகை மூச்சை அடைக்கும், எப்போதும் "அண்ணா,அண்ணா" என்றழைக்கும் அவர்கள் ஒரு  தெய்வீக நிலையை அடைந்து அக்கா,தங்கையை சம்பந்தப்படுத்தும் ஹிந்தி கெட்டவார்த்தையால் திட்டுவார்கள். மூடிக்கொண்டு வந்துவிட்டால் மானம் காப்பாற்றப்படும், இல்லையேல்  தூக்கில்  தொங்கி நாக்கு தள்ளும் வரை ஏசிவிடுவார்கள்.அடுத்தநாள் எதுவுமே நடக்காததை போல"அண்ணா, அண்ணா". cd -player ,வாட்டர் ஹீட்டர்,சில சமயம் ஓசிக்குடி என்று அவர்கள் மூலம் அனுபவிப்பதால் அவர்களிடம் முட்டிக்கொள்ள விரும்பியதில்லை நாங்கள்.மேலும் வேலை இல்லாமல் வீட்டிலும் வெளியிலும் அசிங்கப்பட்டிருப்பதால் அவை பெரிதாக ஒன்றும் உறுத்தியதில்லை.
      மற்றபடி அறை நண்பர்களுடன் ஒன்றாய் இருக்கும் நேரத்தில் பெங்களூரில் உள்ள எல்லா சாப்ட்வேர் கம்பனிகளின்  வருமானம் என்ன ,எப்போது ஊத்திக்கொள்ளும் என்று சிஇஒ விற்கே தெரியாத விஷயங்களை பேசுவோம்,இலவச பஸ் பாசை வைத்துக்கொண்டு ப்ரிகேட் ரோடிற்கு சென்று,கலர் கலராய் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள போல எல்லா மாலிலும் ஏறி இறங்குவோம்,எங்கள் தலையை அடகு வைத்தாலும் கூட வாங்கமுடியாத ஜீன்ஸ்ன்   விலையை விசாரிப்போம்,மேலேறிய ஸ்கர்ட்டும், கீழிறங்கிய சட்டையுமாக திரியும் பெண்களை "எட்டாக்கனிகளாக" பார்த்துவிட்டு,குளிர் ஏறியதும் அவசரஅவசரமாக அறைக்குசென்று முடங்கிக்கொள்வோம்.
        இப்படி பைசாவிற்கு பிரயோஜனம் இல்லாமல் போய் கொண்டிருந்த எங்கள் பொழுது ஒரு தேவதையின் வருகையால் முதன் முறையாக விடியலை சந்தித்தது.தேவதையின் பெயர் சின்மயி,சின்ன சிவந்த உதடுகளும்,கருமை பூசிய கண்களும்,வெள்ளி காப்பும்,நீலநிற கவுனுடன் எங்கள் வாசலில் ஒரு காலை வைத்து,தாழ்பாளை ஒரு கையால் ஆடிக்கொண்டே எங்களை பார்த்தாள்,அவளிடமிருந்து கண்களை விலக்க முடியாமல் திணறுவதற்குள் "ச்சின்னு,ஈக்கட பன்னி" என்று அவள் தாய் அழைத்து விட,நுனி விரலால் ஆடையை தூக்கிப்பிடித்துக்கொண்டு ஓடிவிட்டாள் தேவதை.
     வெளியே சென்று பார்க்கையில்,குட்டையான இரும்பு பீரோ,கறை பிடித்த சோபா,ஸ்டவ்,முக்காலி இவைகளுடன் இன்னும் சில சாமான்கள்   ஒரு டெம்போ வேன்......அடங்க! எங்களை போல பஞ்சப்பரதேசிகள், கஞ்சாகுடிக்கிகள் இருக்குமிடத்தில்,கக்கூஸ் பக்கத்தில் துளசி செடியை வைத்து போல ஒரு குடும்பத்தை வாடகைக்கு விட்டிருகின்றார்களே என்று பரிதாபப்பட்டோம்.நாட்கள் செல்ல சின்னுவை பற்றி அதிமுக்கியமான தகவல்களை  சேகரித்துவிட்டோம்(வேலையற்றவனின்  பகல்!).சின்னுவின் தாய்,தந்தை இருவரும் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டவர்கள்,அவர்களுக்கு பக்கபலமாய் இருந்தது,இருப்பது ஜித்து என்ற சின்னுவின் தந்தையின் நண்பன்.
      வேலைவெட்டி இல்லாத நாங்கள்,குறிப்பாக நான், வேலைவெட்டி இல்லாத ஒன்றரை வயது சின்னுவுக்கு  துணையாகிப்போனேன்.எங்கள் வீட்டிற்க்கு அவள் விளையாட வருவதே தனியழகுதான்.மேளம் தட்டும் கரடி பொம்மை,பெரிய பல் சீப்பு,மருந்து குப்பி,ஓரிண்டு குட்டிப்பாத்திரங்கள் போன்றவைகளுடன் எங்கள் அறைக்கு வந்து அறையில் இருக்கும் ஷுபாலிஷ்,புத்தகங்கள்,உடைந்த ரேடியோ இவைகளையும் சேர்த்து விளையாடிவிட்டு, போகும்போது சரியாக பிரித்தெடுத்து செல்வாள், அவ்வளவு சமத்து.சில நேரங்களில் அறையிலேயே தூங்கி விடுவதும் உண்டு,அப்படி தூங்கிப்போகையில்,பல்லிடுக்கில் தப்பித்து வரும் பிஞ்சுக்குறட்டையையும் ,அவளது ஏறி இறங்கும் மார்பையும் கன்னத்தில்  கை தாங்கி பார்த்துக்கொண்டிருப்பேன்.
       சின்னுவிடம் நான் கொண்ட நட்பால் வேறு சில ஆதாயங்களும் இருந்தது,அவர்கள் வீட்டு அறையில் இருக்கும் டிவியை எங்கள் ஜன்னலிலிருந்தே பார்த்துக்கொள்ளவும்,கேரம் போர்ட் கடன் வாங்கி விளையாடவும்,மிச்சமான உப்புமாவோ,பிசிபேளாபாத்தோ, குழம்போ...வாங்கி வயிற்றில் போட்டுக்கொள்ளவும் சாத்தியப்பட்டது .
இதற்க்கு மாற்றாக எங்கள் தன்மானம் தாக்கப்படாத அளவிற்கு எங்களால் முடிந்த சம்பில் நீர் ஊற்றுதல்,கரண்ட் பில் கட்டுதல்,சின்னுவை பராமரித்தல் போன்ற உதவிகளை செய்து கொண்டு வந்தோம்.இப்படி வரலாற்றிலோ,நாவலிலோ ஏன் சிறுகதையில்  கூட இடம் பிடிக்க லாயக்கில்லாத எங்கள் குப்பைகுன்று வாழ்கையில் ஒரு நாள்....
      பெருங்குரலெடுத்து சின்னுவின் தாய் அழும் ஓசை கேட்டது, அடித்துபிடித்துக்கொண்டு சென்று பார்க்கையில் தலைவிரிகோலமாக அவள் ,சின்னுவை இடுப்பில் அணைத்துக்கொண்டு சுவரின் மூலையில் உட்கார்ந்திருந்தாள்,ஜித்துவும் மரசேரில் தலையில் கைவைத்து வெறித்துக்கொண்டிருந்தான்.அதன் பின் சின்னுவின் தாய் எங்களிடம் புலம்பியது,காதல் கணவன் மேலிருந்த மரியாதை போய் ஏசியது, ஓடிப்போன நண்பனை ஜித்து பிடித்து உதைக்க திட்டம் போட்டது போன்ற தகவல்களை தவிர்த்து சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் நடந்தது இதுதான்:சின்னுவின் தந்தை கவுடா அவர்கள் இருவரின்  கூட்டு  வங்கி சேமிப்பை,நகைகளை ,பொய் கையெழுத்தை(போர்ஜெரி) போட்டு மொத்தமும் சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டான் என்று  தெரிந்தது.    
       அடுத்து வந்த நாட்கள் அவர்கள் வீடு புலம்பலாலும்,அழுகையாலும் மூழ்கித்தவித்தது .மனைவியையும்,சிட்டு குருவியை போன்ற ஒரு பிள்ளையையும் விட்டு விட்டு எதற்காக இப்படி செய்திருப்பான்?ஒரு   சாதரணமான ஆனால் ரொம்பவும் நிம்மதியான வாழ்கையை மனிதர்கள் எதன் பொருட்டு கெடுத்துக்கொள்கிறார்கள்?விளங்குவதே இல்லை! 
ஏதோ ஒரு பண்டிகைக்கு ஊருக்கு போய் விட்டு திரும்பியபோது சின்னுவின் வீட்டுக்கதவில் பூட்டு தொங்கியது,விசாரித்தபோது
இரவோடிரவாக  சின்னுவின் தாய் வீட்டை காலி செய்துகொண்டு விட்டதாக ஓட்டல்காரர் சொன்னார். கொஞ்ச  நாள்  நாங்களும், பக்கத்து  அறை மாணவர்களும்  அதே பேச்சாக புகையை விட்டு, ஆத்தியும், ஊத்தியும் கடத்திக்கொண்டிருந்தோம்.
       சில மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் வெயிலை போர்த்திக்கொண்டு, பசிக்கு சோளத்தை கொறித்துக்கொண்டே நடக்கையில் அவளை பார்த்தேன்.......சின்னுவை.பெரிய செருப்பொன்றை போட்டுக்கொண்டு, ரோஸ் நிறத்தில் முட்டாய் ஒன்றை மென்று கொண்டு அம்மாவின் கையை பிடித்து நடந்து கொண்டிருந்தாள்.ஓடிச்சென்று ஆசையில் தூக்கிக்கொண்டேன், அவளிடம் ஒட்டிஊர்ந்து அவள்  வீடு வரை சென்று விட்டேன்.சின்னுவுக்கு நாங்கள் கற்று கொடுத்த வார்த்தைகள், விளையாட்டுகள் பெருமளவில் மறந்துபோயிருந்தது,ஒரே வார்த்தையில் ஜல்லியடித்துக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் ஜித்துவும் எங்களோடு வந்து சேர்ந்துகொண்டான்.நானும் சின்னுவும் விளையாட்டு சுவாரசியத்தில் இருக்க,சின்னுவின் அம்மா -ஜித்துவின் உரையாடல் சத்தம் குறைந்து போயிருந்தது. எதிர்பாராவிதமாக திரும்பிய நான் அதை கவனித்தேன்.
    எனக்கு பின்புறம் சேரில் அமர்ந்திருந்த ஜித்துவின் கால்கள் அவன் எல்லையை மீறி சின்னுவின் அம்மாகாரியின் இடையை,பின்புறத்தை கால்களால் தொட்டது.அவளும் தட்டிவிடத்தான் செய்தாள் ஆனால் கண்களில் அதனை பொய்,வெட்கச் சிரிப்பு.நான் கண்ட காட்சியை மனது நம்பாமல்,கண்கள் மட்டும் நம்பி,ஏதோ ஒரு நொடியின் விகிதத்தில் அது பொய்யாக இருக்க மூளை துடித்தது.அந்த காட்சி நிலையில்லாமல் கண்முன்னே ஆடி,தலைசுற்றி வந்தது,வயிற்றில் செரிக்காமல் போன ஏதோ ஒன்று தொண்டையில் வந்து காறியது ........அப்படித்தானா?அதனால் தானா?
        
     உடனே எழுந்து வாசல் நோக்கி கிளம்புகையில், முன்னிரண்டு பற்களால் ரப்பர் பொம்மையை கடித்திழுக்கும் சின்னுவை கண்களில் தேக்கியபடி அவசரமாக வெளியேறினேன்.
அன்புடன்
நான்.

2 Responses so far.

  1. Anonymous says:

    சின்னு போஸ்ட் மூலமாக என்ன தான் சொல்ல வரிங்க.

  2. Ibrahim A says:

    கதை சொல்ல வரேன்...மனுஷங்களை புரிஞ்சிக்கறது கொஞ்சம் கஷ்டம் தான் இன்னும் ஒரு தடவை படிங்க.......
    இல்லேன்னா சொந்தகாரங்ககிட்ட கேளுங்க!!!!

- Copyright © துளி கடல் -