Archive for May 2012

வாழ்வை சொல்லும் சினிமா பாடல்


என்றும் அன்புடன் படத்தில் வரும் பாடல் "துள்ளி திரிந்ததொரு காலம்" ரொம்பவும் அழகான பாடல். நேரடியான அர்த்தத்துடன் ஒரு ஆணின் வாழ்கையை முழுதாய் சொல்லும்.அதென்ன ஆணின் வாழ்கை? என்னை பொருத்தமட்டில் ஆணின் வாழ்கை யாரையும் சார்ந்து இருக்காதது.குழப்பங்களும்,தினறல்களும், வழுக்கல்களும் நிறைந்
தது.பாடலை எழுதியது யார் என்பது தெரியவில்லை ஆனால் பாடல் வரிகளில் வாழ்கையின் மொத்த சாரத்தையும் எழுதி இருப்பதாகவே படுகின்றது. மனதுக்கும்,வாழ்கைக்கும் மிக அருகில் இருக்கும் பாடல் இது

துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்                  (பல்லவி)
...............
...............
...............
அன்னை மடிதனில் சில நாள்,              (சரணம் 1)
அதை விடுத்தொரு சில நாள்  
திண்ணை வெளியினில் சிலநாள்,
உண்ண வழி இன்றி சில நாள் 
நட்பின் அரட்டைகள் சில நாள்,
நம்பித்திரிந்ததும் பல நாள்
கானல் நீரிலும் சில நாள்,
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்,
கையில் குழந்தையும் அதனால்
ஓடி முடிந்தது
காலங்கள் காலங்கள் பூங்கொடியே!
..............
...............
...............
துள்ளும் அலையென அலைந்தேன்      (சரணம் 2)
நெஞ்சில் கனவினை சுமந்தேன்
வாழ்கை பயணத்தை தொடந்தேன்
வானம் எல்லை என நடந்தேன்
காதல் வேள்விதனில் விழுந்தேன்
கேள்விக்குறி என வளைந்தேன்
உன்னை நினைத்திங்கு சிரித்தேன்
உண்மைக்கதை தனை மறைத்தேன்
பதில் சொல்லிட நினைத்தேன்
சொல்ல மொழி இன்றி தவித்தேன்.
வாழ்கின்ற வாழ்வெல்லாம்
நீர்குமிழ் போன்றது பூங்கொடியே!

இளையராஜா இசையில்,மனோவின்  குரலில் இந்த பாடல் பார்ப்பதற்கும் நன்றாகவே இருக்கும்.முரளி அவருடைய trade mark expressionகளில்  அசத்தி இருப்பார். 
பாடலை யூ ட்யூபில் பார்க்க


 அன்புடன் 
நான்

ஐபிஎல் 2012 - சிறந்த வீரர்கள்

கிரிஸ் கைல்
111 மீட்டர் சிக்ஸ்சரை  MG ரோடிற்கு அடித்துவிட்டு "அவ்ளோதானா,போச்சு?நான் இன்னும் தூரம் போகும்னு இல்ல நினைச்சேன்"என்கிறார் அசால்டாக! மிஸ்-ஹிட் என்று சொல்லப்படும் பேட்டில் சரியாக படாத ஷாட்டுகள் கூட பெவிலியனின் இரண்டாம் அடுக்கில் போய் விழுகின்றன,அபாரமான ஆர்ம் பவர்,டைமிங்.இவர் எந்த கவுண்டிக்காக விளையாடினாலும்   எதிரணியை பயமுறுத்தி,சிம்ம சொப்பனமாகவே திகழ்கிறார். இவரை பிடிக்காதவர்கள் கூட இவரது சிக்ஸர்களுக்கு வாயை பிளந்தே ஆகவேண்டும் .இதுவரை ஐபிஎல் தொடரில் நூறு சிக்ஸர்களுக்கு மேல் அடித்து சாதனையை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.இந்த சீசனில் ஆரம்ப ஓவர்களில் அடித்து ஆடாமல் பொறுமையாய் தொடங்கி 7-8 ஓவர்களுக்கு பிறகு சேர்த்துவைத்து அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்,இந்த முடிவு புனே,டெக்கான் அணிகளுக்கு எதிராக தோல்வியும் அடைந்திருக்கிறது.எது எப்படியோ கைல் அடிக்கத்தொடங்கினால் சோறு தண்ணி இல்லாமல் மேட்ச் பார்க்கலாம்.ஆனால் அங்கே மேற்கிந்திய தீவுகளில் அவரது தாய் நாட்டு அணி ஆஸ்திரேலியாவிடம் செமத்தியாக அடிவாங்கி கொண்டிருக்கையில் இவர் இங்கே பெங்களூருக்கு விளையாடுவது கொஞ்சம் நெருடுகிறது.

அஜின்கியா ரைஹானே
ஏதோ பத்தாவது படித்துக்கொண்டு தெருவில் விளையாடும் சிறுவன் போல் தோற்றம்,ஒரு ஜாடையில்  தலைவர் டிராவிட்  போலவே. இந்த ஐபிஎல்லில் ரன்களில் முன்னணியில் இருக்கும் ஆட்டக்காரர்.கிங்க்ஸ் லெவன் அணிக்கு எதிராக 98 ரன்கள்,பெங்களூருக்கு எதிராக அடித்த சதம் அதில் அடங்கும்.20 -20 ஆடும் காட்டான்களை போல் இல்லாமல் கிட்டத்தட்ட எல்லாமே கிரிக்கெட் புத்தக ஷாட்ஸ்.அதிலும் குறிப்பாக பெங்களூர் அணிக்கு எதிராக அரவிந்த் வீசிய ஒரே ஓவரில் ஆறு பவுண்டரிகள்,ஆறுமே அசத்தல் பவுண்டரிகள்.எல்லா ஷாட்டுகளையும் middle of the batல் ஆடுவது (நம்ம விராத் கோலியை போல),நிறைய வகையான innovative ஆக ஆடுவது..அதிலும் டெல்லிக்கு எதிராக பதின்பதாவது ஓவரில் யாதவின் லோ புல்-டாஸ் பந்தை பயின்டிற்கு மேல் சிக்ஸர்கு அனுப்பியது இன்னும் கண்ணுக்குள்ளே இருகின்றது .விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என பட்சி சொல்கிறது .டெஸ்டிலும்,ஒருநாள் போட்டிகளிலும் விளையாட எல்லா தகுதியும் இருப்பதாகவே எனக்கும் படுகின்றது.

சுனில் நாராயண்
கேரம் பால்,லேக் பிரேக்,ஆப் பிரேக்,கூக்லி என அணைத்து வித்தைகளையும் தன் விரல்களில் வைத்திருப்பவர்.கடைசி ஓவராகட்டும் ஆட்டத்தின் எந்த ஒரு ஓவராகட்டும்-பாட்ஸ்மேன் எப்படி சுழற்றினாலும் ..ஹுஹும் ஒன்றும் வேலைக்காவதில்லை.அஸ்வின்,ஹர்பஜன்,சாவ்லா,ராகுல் ஷர்மா போன்ற சுழற்பந்து வீச்சாளர்களின் பருப்புகள் வேகாமல் போய் கொண்டிருக்கும் இந்த சீசனில் இவர் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.கொல்கத்தா அணி பெளலிங்கில்  வலுப்பெறுவதற்கு  காரணமும் இவரே.

சேவாக் & கம்பீர்
பய புள்ளைங்களுக்கு எங்கிருந்து தான் இவ்வளவு வேகம் வந்ததோ?ஆஸ்திரேலியா,பங்களாதேஷ் கொடுத்த அடியோ என்னவோ?
இருவருமே தங்கள் டீமிற்கு முன்னே இருந்து வழிநடத்துகின்றார்கள்.சேவாக் தொடர்ச்சியாக ஐந்து அரை சதங்கள்,அவர் டீம் பெற்ற எல்லா வெற்றிகளிலும் அவர் பங்கு இருக்கிறது,அவரது டீமிற்கு பிளேயர் செலக்ஷனும்,பீல்டில் அவர் எடுக்கும்  முடிவுகளும்  பாராட்ட  கூடியதாகவே இருக்கின்றன .காம்பிரும் அது போலதான்,ஒரு காலத்தில் ஒன்பது மாட்சுகள் வரிசையாக தோற்ற அணி கொல்கத்தா அணி.ஆனால் இன்று நிலைமையே வேறு.கம்பிருடைய தலைமையில் ஒரு அனுபவம் தெரிகின்றது,மேலும் டோனி,கங்குலியை போல் அடுத்தவர்களுடைய திறமையில் குளிர் காயாமல் தன்னுடைய பங்கை சரி வர செய்கிறார்.கொல்கத்தா அணி கம்பீர் தலைமையில்  கப்பை வாங்கி விட்டால்- ரா-ஒன்,டான்-2 போன்ற மொக்கை படங்களை எடுத்தும் கூட அநியாயத்திற்கு சீன் போடும் ஷாருக்கானை கையில் புடிக்க முடியாது.

அம்பதி ராயுடு & ஷிகர் தவான்
தங்களது டீமில் நிறைய ஸ்டார் பிளேயர்கள் இருந்தாலும் எல்லா ஆட்டங்களிலும் தங்கள் கடமையை சரி வர செய்யும் இருவீரர்கள்.எந்த வித சமயத்திலும் ,ஆட்டதிற்கு தகுந்தார் போல் தங்களை மாற்றிக்கொண்டு ஆடுபவர்கள்.நிறைய தோல்விகளை மட்டும் சந்தித்த டெக்கான் அணியில் தவான்,வைட் தான் கொஞ்சம் ஜொலிக்கிறார்கள்.ராயுடுவும் நிலையில்லாத மும்பை பாட்டிங் வரிசையை நிறைய முறை கைதூக்கி விட்டிருக்கிறார்.தவான்ஐ ஓபனிங்கிலும்,ராயுடுவை மிடில் ஆடரிலும்(இவர் கீப்பரும் கூட) கூடியவிரைவில் இந்தில அணியில் பார்க்கலாம் என்று நினைகிறேன்.

இவர்களை தவிர
மோர்கல்,எப்போவாவது து பிளாசி,ஹில்பிநஸ் (சென்னை அணியில் நம் இந்திய வீரர்கள் படு மொக்கை டோனி,விஜய்,அஸ்வின்),பெங்களூரில் வினய்,வாய்ப்பு கிடைக்கையில் முரளி,டி வில்லர்ஸ்(ஸ்டெய்ன் பந்தில் அடித்த இரண்டு சிக்ஸர்கள் மறக்கவே முடியாதது) ,டெக்கான் அணியில் வைட்,ஸ்டெய்ன்,பஞ்சாப் அணியில் அசார்,மந்தீப்,எப்பொழுதும் போல் ஹஸ்ஸி.டெல்லி அணியில் நிறைய காட்டடி கந்த சாமிகள் பீட்டர்சன்,தன்னுடைய இரண்டாவது ஆட்டத்திலேயே சதமடித்த வார்னர்,விக்கெட்டுகளில் முன்னிலையில் இருக்கும் மோர்கல்,நதீம்.அடுத்ததாக கொல்கத்தா அணியில் லீ,ரஜத் பாட்டியா,காலிஸ் என்று இந்த பட்டியல் நீண்டு இருக்கிறது.மேலும் புனேயை சேர்ந்த ,வாட்சன்,ஸ்மித்,ராஜஸ்தானை சேர்ந்த ஹொட்ஜ்,மும்பையில் ரோஹித் ஷர்மா,"மாங்கா" மலிங்கா, முனாப்(ஆச்சர்யமாக!). ஒன்றை கவனித்தால் எல்லா அணியிலும்,மும்பை,பெங்களூர் நீங்கலாக சிறந்த வீரர்கள் ஆஸ்திரேலியர்கள் ஆக இருக்கிறார்கள்.they are made for cricket.

காணாமல் போனவர்கள் 
மனிஷ் பாண்டே,முரளி விஜய்,உத்தப்பா,வால்தட்டி(இவரை ரொம்பவும் எதிர்பார்த்தேன்),சாவ்லா,அமித் மிஸ்ரா,ராகுல் ஷர்மா,மனோஜ் திவாரி,சோரப் திவாரி, அஸ்வின்,அண்ணன் "தான்" தோனி, பத்ரி, சங்ககாரா ,கில்லி,கங்குலி,சச்சினையும் சேர்த்துக்கொள்ளலாம்.இந்த லிஸ்ட் நீளுவதால் இப்படியே விட்டு விடலாம்.
காணமல் போனவர்களில் முக்கியமாக நம்ம யூசுப் பதான் எல்லா பந்தையும் சிக்ஸர்கு விரட்ட நினைத்தால் அது விளங்காமல் தான் போகும்.உலகின் சிறந்த ஹிட்டர்கலான கைல்,டி வில்லேர்ஸ்,பீட்டர்சன் அப்படி விளையாடுவதில்லை ஆதலால் தான் அவர்களால் எங்கும் தாக்கு பிடிக்க முடிகின்றது.எல்லா வகையான கிரிக்கெட்ம் விளையாட முடிகின்றது.அப்படி விளையாடதால்  தான் அப்ரிடியால் இன்று வரை ஒரு நல்ல பாட்ஸ்மேன் ஆக ஜொலிக்க முடியவில்லை.

இந்த வகை விளையாட்டில் பந்து  வீச்சாளர்கள் மீது கொஞ்சம் இறக்கம் காட்டி மன்னித்து விடலாம்.ஏனென்றால் மிகச்சிறந்த பௌலர்களை கூட சில சமயம் துவைத்து எடுத்து விடுகிறார்கள் உதாரணம் ஸ்டெய்ன்,கடைசி மூன்று பந்தில் 14 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் புல் டாசாக வீசிய ஹில்பிநஸ்.அது போல் குறைந்த பந்துகளில் 30-40 என்று எடுப்பவர்களை நல்ல பாட்ஸ்மேன் என்று சொல்லலாம்.

ஐபிஎல்லில் பணம் காசு கொழிக்கிறதோ என்னவோ.அதை விடுங்கள் நிறைய நல்ல வீரர்களை அவரவர் நாட்டுக்கு அடையாளம் காட்டுகின்றது.முக்கியமாக நமக்கு.ஷானே வாட்சன்,அஸ்வின்,பதான்,ராகுல் ஷர்மா,இங்கு விளையாடியதால் வெளிஉலகத்துக்கு தெரிந்தவர்கள்.

அன்புடன்
நான்

ஜெயமோகனின் சிறுகதை "கோட்டி"


    ஜெயமோகனின்  கோட்டி சிறுகதையை சமீபத்தில் படித்தேன்,கதை முடிகையில் இது ஒரு கோட்டியை பற்றியதல்ல  கோட்டிக்கார உலகத்தை பற்றியது  என்பது விளங்கியது."பிழைக்கத்தெரியாத" மனிதர்களை பாத்திரமாகக்கொண்டு தாங்கள் எழுதிய (நான் படித்த) மூன்றாவது சிறுகதை இதுவென்று நினைக்கிறேன்.முதல் இரண்டு "சோற்றுக்கணக்கு","யானை டாக்டர்".

   கணேசன் என்ற ஜூனியர் லாயர் ,தான் பெண்  பார்க்க செல்கையில் பூமேடை என்ற கொள்கைவாதியை சந்திக்கிறான்.(கொள்கைவாதி :அப்படி யாராவது இன்று உயிருடன் இருக்கிறார்களா என்ன?...ஒன்றை கவனித்தால் "வாதி" என்று முடியும் எல்லா வார்த்தைகளும் இன்று கெட்ட  வார்த்தையாய் போய் விட்டன...அரசியல்வாதி,தீவிரவாதி).பின் அவன் பூமேடயோடு   உரையாடத்தொடங்குகையில் அவரை பற்றி கதை விரிவடைகின்றது.

   பூமேடை காந்தியால் ஈர்க்கப்பட்டு,அவரது கொள்கையை விடாதிருப்பவர். சத்தியாக்கிரகம், சிறை,பிரசங்கம்  என்று  வாழ்கையை தேர்ந்தெடுத்துக்கொண்டு தனது சொத்துக்களை விட்டு விட்டு பைத்தியக்காரப்பட்டம் கட்டிக்கொண்டு திரிகின்றார்.
அரசாங்கத்தின் குறையை முதலில் பிரசங்கம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு தர முனைகிறார் ஆனால் அவரையும்  அவரது வார்த்தைகளையும் கோமாளியின் கூற்றாகவே சமூகம் எடுத்துக்கொள்கிறது.ஆனாலும் மக்கள் பிரச்சனைகளை அவர் முதலில் தொடங்குவதால்,சில அரசாங்கத்திடம் ஏதோ ஒரு வகையில் போய் சேர்கின்றது,மாற்றங்களும் நிகழ்கின்றது.

       பூமேடை,காந்தீய கொள்கையுடன்,கம்யுனிசமும் சேர்த்தே பரப்ப முயல்வது கதையெங்கும் தெரிகின்றது. சமுதாய நடப்பை பற்றிய ஓயாத நையாண்டிப்பேச்சுக்களால் அவருக்கு நிறைய அடியும்,சிறை வாசமும் கிடைகின்றது.அதற்கென்றே பிறந்தது போல் அவரது செயலில் சாகும்வரை எந்த மாற்றமும் இருப்பதில்லை,மாற அவர் விரும்பவும் இல்லை.அவருக்கு கிடைக்க தோதுபடும் தியாகி பென்ஷனை செத்தவனுக்கு போடும் வாய்க்கரிசி என்றும்,இன்னமும் சர்வீசில் இருக்கும் தனக்கு அது எதற்கென்றும் கூறி மறுத்துவிடுகிறார்.(அங்கேயும் நக்கல்!)

     இறுதியாக லாயர் கணேசன் மருத்துவமனையில் சேர்த்து அவரின் நோயை குணப்படுத்த முயல்கிறான்.ஆனால் அங்கேயும் அவர் வரிசையில் அனுமதிக்கபடாத ஆளுங்கட்சி ஆட்களிடமும் அந்த டாக்டரிடமும் நையாண்டி செய்வதால் மருத்துவமனையை விட்டே துரத்தப்படுகிறார்.பின்பு அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விடுவதாக முடிகின்றது.

      சகல லட்சணங்களோடு  எழுதப்பட்ட இந்த சிறுகதையில் என்னை மிகவும் கவர்ந்தது பூமேடையின் சமுதாயத்தை சாட்டையால் விளாசும் நக்கல் பேச்சுக்கள் தான். பென்ஷனை "செத்தவனுக்கு போடும் வாய்க்கரிசி" என்றும்,சர்கார் மருத்துவமனையை "அனாதைகள் நிம்மதியாக வந்து சாகும் இடமென்றும்" சொல்லும் அணியை ரசித்தேன்.அரசாங்க ஆஸ்பத்திரிகள் அப்படி இருக்கப்போய் தானே இன்று சாமானியனும் தனியாரை தேடி ஓடுகின்றான்.வியர்வையும்,ரத்தமும்  சிந்தி சேர்த்த பணம் முழுவதையும் காய்ச்சல்,தலை வலி  வைத்தியத்திற்கே செலவு செய்கிறான்.இது ஒரு டிசைன், அரசாங்க ஆஸ்பத்திரி அப்படியும்,தனியார் ஆஸ்பத்திரி இப்படியுமாக இருந்தாக வேண்டும்.

    இந்த சமுதாய அமைப்பில் நம் கண்ணுக்கு தெரியாத  வலை ஒன்று உள்ளது.அதில் நாமெல்லாம் தெரிந்தே பிணைக்கப்பட்டுள்ளோம். விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் அதில் உழன்றே ஆக வேண்டியது தான்.பூமேடையை போல் எதிர்த்து குரல் கொடுக்க முயன்றால் "பிழைக்கதெரியாதவன்" என்று கூறி புறங்கையால் உந்தி விடும் இந்த ஆடையில்லாத ஊர்.

வாழ்த்துக்கள் ஜெயமோகன்!
------------------------------------------
(மேலே எழுதப்பட்ட எனது விமர்சனத்திற்கு திரு.ஜெயமோகன் அவர்களின் பதில் கடிதம்)

அன்புள்ள அகமது இப்ராகீம்,
நன்றி. கோட்டியை மிக நெருக்கமாக உணர்வதற்கு நம்முள் ஒரு கோட்டித்தனம்
இருந்தாகவேண்டும். நீங்கள் சொல்வது உண்மைதான்.  இலட்சியவாதம்
கோட்டித்தனமாக ஆகும் காலகட்டம் இது. ஆனாலும் அவர்களே சிலவற்றை மேலே
கொண்டு செல்கிறார்கள். கிளைகள் வெளியே தெரிகின்றன. வேர்கள்தான் நீரும்
பிடிப்புமாக இருக்கின்றன இல்லையா?
நல்ல மொழியில் சீராக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்
ஜெ
------------------------------
அன்புள்ள ஜெயமோகன்
நீங்கள் சொல்வது சரி தான்.ஆனால்,மேல   கொண்டுவரும்   லட்சியவாதிகளை எல்லாம்  இன்று மைக்ரோ ஸ்கோப் வைத்து தான்
தேட வேண்டியதாக இருகின்றது. கிளைகளில் பூச்சி பிடித்து அரித்துக் கொண்டிருப்பதாகவே படுகின்றது.
------------------------------------
என் பார்வையில் கோட்டி விமர்சனம்:
http://www.jeyamohan.in/?p=25942

கோட்டி சிறுகதையை வாசிக்க:
http://www.jeyamohan.in/?p=13096

அன்புடன்
நான்.

- Copyright © துளி கடல் -