ஜெயமோகனின்  கோட்டி சிறுகதையை சமீபத்தில் படித்தேன்,கதை முடிகையில் இது ஒரு கோட்டியை பற்றியதல்ல  கோட்டிக்கார உலகத்தை பற்றியது  என்பது விளங்கியது."பிழைக்கத்தெரியாத" மனிதர்களை பாத்திரமாகக்கொண்டு தாங்கள் எழுதிய (நான் படித்த) மூன்றாவது சிறுகதை இதுவென்று நினைக்கிறேன்.முதல் இரண்டு "சோற்றுக்கணக்கு","யானை டாக்டர்".

   கணேசன் என்ற ஜூனியர் லாயர் ,தான் பெண்  பார்க்க செல்கையில் பூமேடை என்ற கொள்கைவாதியை சந்திக்கிறான்.(கொள்கைவாதி :அப்படி யாராவது இன்று உயிருடன் இருக்கிறார்களா என்ன?...ஒன்றை கவனித்தால் "வாதி" என்று முடியும் எல்லா வார்த்தைகளும் இன்று கெட்ட  வார்த்தையாய் போய் விட்டன...அரசியல்வாதி,தீவிரவாதி).பின் அவன் பூமேடயோடு   உரையாடத்தொடங்குகையில் அவரை பற்றி கதை விரிவடைகின்றது.

   பூமேடை காந்தியால் ஈர்க்கப்பட்டு,அவரது கொள்கையை விடாதிருப்பவர். சத்தியாக்கிரகம், சிறை,பிரசங்கம்  என்று  வாழ்கையை தேர்ந்தெடுத்துக்கொண்டு தனது சொத்துக்களை விட்டு விட்டு பைத்தியக்காரப்பட்டம் கட்டிக்கொண்டு திரிகின்றார்.
அரசாங்கத்தின் குறையை முதலில் பிரசங்கம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு தர முனைகிறார் ஆனால் அவரையும்  அவரது வார்த்தைகளையும் கோமாளியின் கூற்றாகவே சமூகம் எடுத்துக்கொள்கிறது.ஆனாலும் மக்கள் பிரச்சனைகளை அவர் முதலில் தொடங்குவதால்,சில அரசாங்கத்திடம் ஏதோ ஒரு வகையில் போய் சேர்கின்றது,மாற்றங்களும் நிகழ்கின்றது.

       பூமேடை,காந்தீய கொள்கையுடன்,கம்யுனிசமும் சேர்த்தே பரப்ப முயல்வது கதையெங்கும் தெரிகின்றது. சமுதாய நடப்பை பற்றிய ஓயாத நையாண்டிப்பேச்சுக்களால் அவருக்கு நிறைய அடியும்,சிறை வாசமும் கிடைகின்றது.அதற்கென்றே பிறந்தது போல் அவரது செயலில் சாகும்வரை எந்த மாற்றமும் இருப்பதில்லை,மாற அவர் விரும்பவும் இல்லை.அவருக்கு கிடைக்க தோதுபடும் தியாகி பென்ஷனை செத்தவனுக்கு போடும் வாய்க்கரிசி என்றும்,இன்னமும் சர்வீசில் இருக்கும் தனக்கு அது எதற்கென்றும் கூறி மறுத்துவிடுகிறார்.(அங்கேயும் நக்கல்!)

     இறுதியாக லாயர் கணேசன் மருத்துவமனையில் சேர்த்து அவரின் நோயை குணப்படுத்த முயல்கிறான்.ஆனால் அங்கேயும் அவர் வரிசையில் அனுமதிக்கபடாத ஆளுங்கட்சி ஆட்களிடமும் அந்த டாக்டரிடமும் நையாண்டி செய்வதால் மருத்துவமனையை விட்டே துரத்தப்படுகிறார்.பின்பு அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விடுவதாக முடிகின்றது.

      சகல லட்சணங்களோடு  எழுதப்பட்ட இந்த சிறுகதையில் என்னை மிகவும் கவர்ந்தது பூமேடையின் சமுதாயத்தை சாட்டையால் விளாசும் நக்கல் பேச்சுக்கள் தான். பென்ஷனை "செத்தவனுக்கு போடும் வாய்க்கரிசி" என்றும்,சர்கார் மருத்துவமனையை "அனாதைகள் நிம்மதியாக வந்து சாகும் இடமென்றும்" சொல்லும் அணியை ரசித்தேன்.அரசாங்க ஆஸ்பத்திரிகள் அப்படி இருக்கப்போய் தானே இன்று சாமானியனும் தனியாரை தேடி ஓடுகின்றான்.வியர்வையும்,ரத்தமும்  சிந்தி சேர்த்த பணம் முழுவதையும் காய்ச்சல்,தலை வலி  வைத்தியத்திற்கே செலவு செய்கிறான்.இது ஒரு டிசைன், அரசாங்க ஆஸ்பத்திரி அப்படியும்,தனியார் ஆஸ்பத்திரி இப்படியுமாக இருந்தாக வேண்டும்.

    இந்த சமுதாய அமைப்பில் நம் கண்ணுக்கு தெரியாத  வலை ஒன்று உள்ளது.அதில் நாமெல்லாம் தெரிந்தே பிணைக்கப்பட்டுள்ளோம். விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் அதில் உழன்றே ஆக வேண்டியது தான்.பூமேடையை போல் எதிர்த்து குரல் கொடுக்க முயன்றால் "பிழைக்கதெரியாதவன்" என்று கூறி புறங்கையால் உந்தி விடும் இந்த ஆடையில்லாத ஊர்.

வாழ்த்துக்கள் ஜெயமோகன்!
------------------------------------------
(மேலே எழுதப்பட்ட எனது விமர்சனத்திற்கு திரு.ஜெயமோகன் அவர்களின் பதில் கடிதம்)

அன்புள்ள அகமது இப்ராகீம்,
நன்றி. கோட்டியை மிக நெருக்கமாக உணர்வதற்கு நம்முள் ஒரு கோட்டித்தனம்
இருந்தாகவேண்டும். நீங்கள் சொல்வது உண்மைதான்.  இலட்சியவாதம்
கோட்டித்தனமாக ஆகும் காலகட்டம் இது. ஆனாலும் அவர்களே சிலவற்றை மேலே
கொண்டு செல்கிறார்கள். கிளைகள் வெளியே தெரிகின்றன. வேர்கள்தான் நீரும்
பிடிப்புமாக இருக்கின்றன இல்லையா?
நல்ல மொழியில் சீராக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்
ஜெ
------------------------------
அன்புள்ள ஜெயமோகன்
நீங்கள் சொல்வது சரி தான்.ஆனால்,மேல   கொண்டுவரும்   லட்சியவாதிகளை எல்லாம்  இன்று மைக்ரோ ஸ்கோப் வைத்து தான்
தேட வேண்டியதாக இருகின்றது. கிளைகளில் பூச்சி பிடித்து அரித்துக் கொண்டிருப்பதாகவே படுகின்றது.
------------------------------------
என் பார்வையில் கோட்டி விமர்சனம்:
http://www.jeyamohan.in/?p=25942

கோட்டி சிறுகதையை வாசிக்க:
http://www.jeyamohan.in/?p=13096

அன்புடன்
நான்.

- Copyright © துளி கடல் -