புது வீடு ஒன்றை கட்டுகையில் என்ன தோன்றும்? இது எங்களுடைய அறையாகப்போகின்றது,இங்கே அவளுக்கு பிடித்த வண்ணம் இருக்க வேண்டும்,நம் மனதுக்கு பிடித்தவர்களோடு தனிமையில் இங்கே இருக்கலாம்,நம் குழந்தைகள் இங்கே விளையாடும்,இங்கே தூங்கும்,பெரியவர்களுக்கு இந்த ரூம் தான் வசதி... இப்படியாகத்தானே? ஆகவே மனிதர்கள் தான் ஒரு வீட்டின் அஸ்திவாரம்,கூரை,சுவர் எல்லாம் இல்லையா ? அவர்களது அன்பாலும்,நெருக்கத்தாலும் வண்ணமயமாகிப்போவது தான் வீடு.லட்சங்கள் இழைத்து,சில்லறையை செதுக்கி வீடு வளர்ந்தாலும் அது உடனே அழகாகி விடுவதில்லை.மனிதர்களே அதை அழகாக செய்கின்றனர்.
 
சரி,இப்போது எதற்க்கிதல்லாம்? 
ஆம் நான் வீடொன்றை கட்டிக்கொண்டிருக்கிறேன்.அது சம்பந்தமான புலம்பல் தான் இப்போது.
எல்லா வீட்டிற்க்கும் அது கட்டப்படுவதர்க்கும் ஏதோ ஒரு காரணம் இருக்குமல்லவா? எங்கள் வீடு கட்டப்படுவதற்கு வித்யாசமான காரணமொன்று உண்டு...அது-நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன் என்று என் மீது இன்னும் கொஞ்சம் அன்பு வைத்திருப்பவர்களை நம்பவைத்து அவர்களை சந்தோஷமாக வைக்க நான் செய்த முயற்சி இந்த வீடு.
இன்னும் நான் உயிரோடு இருக்க,எனக்கு வாழ்வின் மீது கொஞ்சமேனும் கொஞ்சம் பற்று இருக்கிறதென்று என்னை நானே நம்பவைத்துக்கொள்ள நான் செய்து கொண்ட ஏற்பாடு இந்த அரைகோடி வீடு என்றும் சொல்லலாம்.

அதன் கூரைகளிலும்,சுவர்களிலும் என் துயரத்தை எங்கேயாவது மறைக்க முடியுமா என்ன முட்டாள் தனமாக தேடி,முடியாமல் திணறுகின்றேன்.எது எனக்கு நிம்மதியை தருமென்று குழந்தை போல் எல்லாவற்றையும் கலைத்து தேடிக்கொண்டிருக்கிறேன்.இல்லாத மூளையை,அதன் திறனை வீட்டு வேலையில் செலுத்தலாம் என்று பார்க்கின்றேன்.அதன் வளர்ச்சியில் என் பங்கு இருக்க வேண்டுமென்று முயல்கிறேன். இதிலெல்லாம் இருந்து நான் மீண்டு நானாவேன் என்று மற்றவர்களை போல் நானும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

அப்படி இருந்தும்  சில நேரங்களில் இதையெல்லாம் தூக்கிபோட்டு விட்டு போகலாம் போல் ஒரு அயர்ச்சி,வெறுப்பு.எதனால்?எதனால் என்றும் புரிகின்றது.நாம் எந்த செயலை செய்தாலும் அதற்க்கு ஒரு காரணம்-destiny இருக்க வேண்டும்.ஒரு செயலை அதுவும் பெரியதொரு செயலை செய்ய முற்படுகின்றோம் என்றால் அதற்க்கு ஒரு உந்துதல், முதற்காரணம்  இருக்கவேண்டுமல்லவா அப்படி எந்த ஒன்றும்-அது எனக்கு இதில் தெரியாததாலோ என்னவோ தான்.

பெரிய அறைகளுடனும்,பூசப்பட்ட சுவர்களுடனும் அழகாக,களையாக தான் இருக்கின்றது,ஆனால் இது எப்படி உயிர் பெறப்போகின்றது என்பது விளங்கவில்லை.
உன் வீட்டையும் உன் நண்பனையும் பார்த்தால் உன்னை புரிந்து கொள்ளலாம் என்பார்கள்.அவ்வகையில் எனக்கு இந்த வீட்டிற்க்கும் ஒரு ஒற்றுமை உண்டு-என்னை போலவே என் வீடும் உயிரற்றது.


அன்புடன்
நான்.

- Copyright © துளி கடல் -