ஒரு தொடக்கம்

என் காதலை  பற்றி 
பெருமை பட ஒன்றும் இல்லை,
என் சுவாசம் போல் 
அதுவும்.

   எந்த காதலிலும் எப்போதும் எந்த பெருமையும்,உயர்வும் இருப்பதே இல்லை ஆனால் சுவாசத்தை விடவும் மிக இன்றியமையாததாக இருக்கின்றது.சிக்கல் படுத்திக்கொள்ள முடியாத ஒரே விஷயம் காதல் மட்டும் தான்.எவ்வளவு முட்டாள் தனமாக அது இருக்கிறதோ அவ்வளவு சிறப்பாக,நெருக்கமாக அது ஆகின்றது இல்லையா?அதென்னதது முட்டாள் தனமான?.....படிக்க படிக்க தெரிந்து கொள்வீர்கள்

   காதலை பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று நினைகிறேன்.எவ்வளவு செருப்படி வாங்கிய பொழுதும் இன்னும் வற்றாமல் ஊறிக்கொண்டே   இருக்கும் அந்த காதலை பற்றி(மட்டும்) அத்தியாய அத்தியாயமாக எழுதலாம் என்று நினைகிறேன்.இருவர் சேர்ந்து படைக்கும் அந்த உலகத்தை நான் படைக்கலாம் என்று நினைகிறேன்.எதையாவது எழுதுவதென்றால் அதை அச்சு இயந்திரம் அச்சடித்து துப்புவதை போல் எழுதிதொலைக்க முடியாது.ஆகவே மனித வாழ்கையிலிருந்து கொஞ்சம்,திருடுபோன என் டைரியிலிருந்து கொஞ்சம்,கற்பனை மிக அதிகமாக கலந்தடித்து எழுதலாம் என்று பார்கின்றேன்.

   எனக்கு உன் வங்கி கணக்குகளில் விருப்பம்,நீ வாங்கும் உன் சொந்த வீட்டில் விருப்பம்,உன் புஜங்களில்,திமிரும் மார்புகளில் விருப்பம் அதனால் உன் மீதும் விருப்பம் என்று எண்ணித்தொடர்ந்த காதலில்லை இது.

      செல்போனும்,கூகுளும்,கேஏப்சியும் தோன்றாத காலகட்டத்தில் நிகழ்ந்த கதையில்லாத கதையிது.அவளை பஸ் ஏற்றி விட்டு விட்டு,பின்னாலேயே நலம் விசாரித்து,கடிதங்கள் எழுதி,கடிதங்களுக்கு காத்து நின்று,எப்போது காண்போம் என்று விழிப்பந்துகளை வழி மீது எறிந்து காத்திருந்த காலம்.
இப்பொழுது போல் எஸ்எம்எஸ்ஸில் அளவுக்கு அதிகாமாக வார்த்தைகளை பேசி பேசி வீணடிக்காமல்,வார்த்தைகளை பார்த்து, பொறுக்கி சேகரித்து-கிடைக்கும் சின்ன சின்ன நேரச்சந்துகளில் பேசி வளர்ந்த (கொஞ்சம் பழைய) காதல்.
நினைக்கும் போது எடுத்து செலவு செய்ய பணமில்லாமல் கொஞ்சம் வறுமையில் உழன்ற நடுத்தரவர்க்க காதல்.
நகர பேருந்துகளிலும்,கடற்கரையிலும்,ரயிலடியிலும் நிகழ்கால சந்தோஷங்களை,எதிர்கால பயங்களை பற்றி பேசி செழித்த காதல்.

    நீ எனக்கு என்ன செய்தாய்,நான் உனக்கு என்ன செய்ய, நீ  என்ன  வாங்கி  கொடுப்பாய்,நீ ஏன் எனக்கு காத்திருக்கவில்லை என்ற புத்தி ஜீவி தனமான கேள்விகளை கேட்காமல் அன்பால் மட்டுமே பின்னப்பட்ட சம்பவங்கள்.

   என் மேல் உண்மையான அன்பிருந்தால்?! உன் பெற்றோர்களை வீட்டை விட்டு துரத்து,என் பெற்றோர்களின் பாதங்களை நக்கு,என் வீட்டில் பன்னி குட்டி ஒன்றை வளர்கிறேன் அதற்க்கு உன்னை பிடித்தால் தான் எனக்கு உன்னை பிடிக்கும் எனவே அதனுடன் சேர்ந்து மலம் தின்னு என்ற ஈனத்தனமான,போலியான விஷயங்கள் எல்லாம் இதிலே வராது.
காதலை  தவிர மற்ற எல்லா விஷயங்களையும் கேட்டு அதி முட்டாள் தனமாக கை கால் உதறி அடம் பிடித்து காதலித்தவனை/வளை   நெஞ்சுவலிக்கும்,தூக்கு கயிற்றிற்கும் தள்ளி ரத்தம் கக்கி சாகடிப்பது போன்ற அதிர்ச்சி காட்சிகளை இதில் எதிர் பார்க்க கூடாது.

    எந்த ஒரு செயல் செய்தாலும் அதில் ஒவ்வொன்றிலும் இவள் நமக்கவே பிறந்தவள் என்று எண்ண வைக்கும் பேரழகும், பேரன்பும்  கொண்ட  காதலியும்.உலகின் மொத்த இன்பங்களையும் அவள் ஒருத்தியிடமே காணும் காதலனும் கதையின் மாந்தர்கள்.இவர்கள் இருவர் மட்டுமே கதையின் மாந்தர்கள் ஆதலால் ,இவர்களை பற்றி இப்போது பெரிதாக சொல்ல வேண்டியதில்லை.

   எந்த அமைப்பும்,வரிசையும்,கதைகுண்டான எந்தவொரு வரைமுறையும், முடிவும் ,தொடக்கமும்,காலமும் இல்லாமல் எழுதவே எண்ணுகின்றேன். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சுவாரசியமான சம்பவம் அல்லது உரையாடல்.அவ்வளவே.

பார்ப்போம் எதுவரைக்கும் போகிறதென்று.அன்புடன் 
நான் 
பின்குறிப்பு:ஏற்கனவே பத்து பதினைந்து அத்தியாயங்களுக்கு மேல் கண் விழித்து,சோறு தண்ணி இல்லாமல் எழுதி விட்ட படியால் அதை போஸ்ட் செய்வது மட்டுமே இனி வேலை.

- Copyright © துளி கடல் -