அத்தியாயம் 1 
பிரிவும்,பிரிதல் நிமித்தமும்

ஊர்ந்துகொண்டிருக்கும் பேருந்து.... 
நான்.கம்பி இடைவெளி விட்டு.நீ.
-------
"என்ன அப்படி முழுங்கற மாதிரி பாக்கற?"
"பாத்துக்கறேன்...பின்ன இனி எப்போ பார்கப்போறேனோ,இப்படி வடித்து வைத்த சிலை மாறி நிற்கும் உன்னை.பஸ்ஸிலெல்லாம் என் கூட இனி வரதே எல்லாம் என்னை பொறாமையோடு எரிக்கிறார்கள்"
"அய்ய..ரொம்ப தான்.நானே நீ ஊருக்கு போற கவலையில்  இருக்கிறேன்.உனக்கென்ன?"
"அடிப்பாவி எனக்கென்னவா?...சொல்கிறேன் கேள்"


நீ பேசாமல் இருக்கும் போதும் கூட பேசிக்கொண்டே இருக்கும் உன் கண்ணாடி வளையல்,

நீ அறையை விட்டு வந்த பின்பும் வெக்கமின்றி அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் உன் கூந்தல் பூ வாசனை,
நீ எழுந்து போன இடத்தில் அமர்ந்திருக்கும் வெப்பம்,
நீ அபூர்வமாய் கொடுக்கும் முத்தத்தின் எச்சில் ஈரம்..
இன்னும் இன்னும்
எவ்வளவு இழக்க போகின்றேன் தெரியுமா?

மீன் சமைத்த பாத்திரத்தின்

வாசனை போல்
உன் நினைவு என்னிடம் அப்படியே இருக்கு.

"ஐயோ கவிதை சொல்ற நேரமா இது....பஸ்சில எல்லாரும் நம்பளையே பாக்கறாங்க" என்று செவ்வானமானாய்.

"நம்பள பாக்கறாங்கனு சொல்லாத..உன்ன பாக்கறாங்கனு சொல்லு...நீ தான் அப்படி இருக்க...எங்க போனாலும் எல்லாரையும் கவர்ந்து கொண்டு....தனிப்பிறவி"
"அள்ளி விடாத! போதும்..இன்னும் ஒரு மணி நேரம் தான் அப்புறம் அய்யா ட்ரைன்ல ஏறி டாட்டா காட்டிட்டு போய்டுவார்".
"ஏண்டி நீ வேற..உன்ன விட்டுட்டு போறத நினைச்சா  ஏதோ எக்ஸாம் போற டென்த் பையன் மாறி வயதை கலக்குது."
"பொய்...பொய் சொல்லாத"
நம்ப மாட்டியே ..ஒண்ணு சொல்லவா?வீட்ல இருக்கும் போது,சமையலறைக்குள் அல்லது வேறு எங்கு நீ நடந்தாலும்,என் பார்வையின் வட்டத்திற்குள் நீ வருகின்றபடியே மாறி மாறி உட்கார்ந்து உன்னை பார்த்துக்கொண்டிருப்பேன்,நீ என்னை கவனிக்காத போது நான் உன்னை பார்க்கையில் நிறைய வசதி இருக்கிறது தெரியுமா?
என்ன வசதி?
"அது வேண்டாம் விடு...சொன்னால் அடிப்பாய்."
என்னான்னு சொல்லேன்?
"அத விடு....அய்யயோ...என் டூத் பிரஷ் எடுத்து வச்சனா..தெரியலையே?"
"நீ வைக்கல...நான் எடுத்து வச்சிருக்கேன்"
-------
கவுண்ட்டரில் டிக்கெட் எடுக்கும் போதும் முகத்தில் இருட்டோடு,வாயில் கடித்த முந்தானையோடு என்னையே பாத்துக்கொண்டிருந்தாய்.
"இன்னும் பதினைந்து நிமிடம் தான் இருக்கு சீக்கிரம் பிளாட்பாரம் போலாம் வா"
"ஐயோ அப்பா..போறதுக்கு எவ்ளோ அவசரம் பாரு,ஆனா வர்றது மட்டும் குதிரை கொம்பு.சரி விட்டு வந்துட்டமே லெட்டர் எழுதுவோம்..ஒரு ஜென்மம் அங்க இருக்கே....ஹுஹும்...இவர் கிட்ட இருந்து லெட்டர் வர தினம் தினம் நாங்க காத்துகிட்டு இருக்கணும்"
"சொல்லிட்ட இல்ல..... இனிமே பாரு நீ தூங்கி எழும் போது ஒன்னு,தூங்கப்போகும் முன் ஒன்னுனு , நாளைக்கு ரெண்டு ஒரு லெட்டர் வரும்"
"அப்போ உலகம் அழிஞ்சிடும்" உதட்டை சுழித்து காட்டினாய்.சிமெண்டு பெஞ்சில் சென்று உட்கார்ந்த போது வழக்கத்திற்கு மாறாக நீயாகவே தோளோடு தோள் உரச அமர்ந்து,என் கைகளை அள்ளி வைத்துக்கொண்டாய்.

"இன்னைக்கு கூட்டமே இல்லை இல்ல?" என்று மௌனத்தை நொறுக்கினேன்.
"போகாதயேன்......போகாம இருந்துடேன் ,என் கூடவே இரேன்...இப்படி இதே மாதிரி பசி,தூக்கம் எதுவுமில்லாம இங்க,இப்படியே சிலையாகவே இருந்துவிடலாம்...இது போதும் இது ஒன்றே போதும்....மூச்சு போற வரைக்கும்"
"என்னப்பா ஆச்சு இப்போ?கொழந்த மாதிரி?...ட்ரைன் வந்துடுச்சு பார்."
ரயில் கடந்து நின்ற போது,பிளாட்பார்மை போல் நெஞ்சும் அதிர்ந்தது.
-------
"ஒரு பத்து நிமிஷம் நிக்கும் ..உள்ள ஏறிக்கோ வா" கை பிடித்து தூக்கி விட்டேன்.உன் கண்ணீர் கண்டு பதறினேன்.
உன் இரண்டு கன்னங்களையும் இரு கைகளில் எந்திக்கொண்டேன்,பூவில் பனித்துளி போல் உன் கண்ணீர் கன்னங்களில் பட்டு சிதறியது.
"ஏய் உடம்ப பாத்துக்கோ என்ன?"கண்களுக்குள் கண்கள் அலைந்தது.
"உனக்கு சொந்தமான எல்லா விஷயத்தையும் நான் நல்ல தான் பாத்துப்பேன்"என்றாய்.
"ஹ்ம்...இன்னும் கொஞ்சம் நெருங்கி தான் வாயேன்" அருகில் இழுத்த போது, அறுந்த கொடியாய் மேலே சாய்ந்தாய்.
உன் மூச்சுக்காற்று என் தொண்டை குழியில் பட்டது.
"ஒன்னு கேக்கட்டுமா?"
"கேளேன்"
"அப்போ நீ சொன்னியே அது உண்மையா?"
"எதுடி?"
"வீட்ல நான் எங்க இருந்தாலும் நீ என்னையே பார்த்துகிட்டு இருப்பேன்னு......சத்தியமா?"
"சத்தியமா"
"நானும் அப்படி தான்...வீட்ல எங்க இருந்தாலும் உன் பார்வையின் எல்லைக்குள்ளவே தான் இருப்பேன்.....நீ என்னை பாக்கும் போது நடு முதுகில் குறுகுறுன்னு இருக்கும்...அப்படியே ஓடி வந்து அள்ளி அணைசுக்கனும்னு தோணும்.....ஆனா செய்ய முடியாது".
"ஹுஹும்....நான் இப்போ,இங்கயே அணைசுக்கவா?...யாரை பத்தியும் கவலை படாமல்?"
"அய்யோ வேண்டாம்...வெக்கம் பிடுங்கி தின்னுது".
"வெட்கப்படாத... இருக்கற கலர் போதாதுன்னு மேல மேல செவந்து கிட்டே போற"சட்டையை பற்றி இழுத்துக்கொண்டாய்."டேய் கண்ணா! என்னையும் கூட்டிட்டு போயிடேன்.....உன் கூட இப்படி ஒட்டிகிட்டே வந்திட்ரேனே...ஏன்டா இப்படி வந்து ஆசை காட்டிட்டு ஓடி போயிடற...?"

"இப்படி எல்லாம் பேசாத...தடுமாறுது எனக்கு....பெட்டியெல்லாம் தூக்கி வெளியே போட்டுட்டு,உன்ன தூக்கிட்டு கீழ குதிச்சிரலாம் போல் இருக்கு...போயிடலாமா?"
"ஒன்னும் வாண்டாம்...நீ ஒழுங்கா போயிட்டு வா,உடம்பை பாத்துக்க....அப்புறம்..."
"நீ முதல்ல சரியா தூங்கு..தூங்கலைன்னு லெட்டர் ல எழுதுனா........"ஒற்றை விரலால் என் வாயை பொத்தினாய்,பேசாதே என்பது போல் தலையாட்டினாய்.
படபடத்து துடிக்கும் பறவையின் சிறகை போல் உன் இமைகள் அடித்துக்கொண்டது.
"டேய்..பாவி..உன் மேல உயிரையே வச்சிருக்கேன்டா"
"தெரியும்டி.நல்லா தெரியும்...மறக்கமாட்டேன்".
அப்புறம் சில வினாடிகள் பேச்சில்லை,செயலில்லை.
"என்னடி யோசனை இப்போ?"
"நீ யோசிக்கறது தான் நானும் யோசிக்கிறேன்"
"என்னது அது?"
-------
"விடேன்....ட்ரைன் நகருது...இறங்கு நீ முதல்ல...பாத்து போ...அழாதே"
எப்படி தான் என் இவ்வளவு பெரிய உருவத்தை உன் துளி கண்ணீரால் நனைத்து,சுருட்டி மொத்தமாக கீழே தள்ளி விடுகின்றாயோ?.....ஆச்சர்யம் தான்!
என்னை உன்னையும் பிரித்த மமதையில் கூக்குரலிட்டு,வெறி பிடித்து ஓடத்துவங்கியது ரயில்.
நீயும்,உன் சிகப்பு புடவையின் நிறமும் புள்ளியாய் கரையும் வரை கண்ணீருடன் வாசலருகே நின்று கொண்டிருந்தேன்-
நான் மறைந்த பின்பு முப்பது நிமிடமாவது அங்கேயே நீ நின்று,நான் போன திசையே பார்த்துக்கொண்டிருப்பாய் என்பதை நினைத்துக்கொண்டு.


அன்புடன்
நான்.

- Copyright © துளி கடல் -