Archive for August 2012

The Way Back (2010):4000 மைல் பயணமும்,வாழ்வின் மீதான ஆசையும்

The Way Back (2010):4000 மைல் பயணமும்,வாழ்வின் மீதான ஆசையும்
அரசியல் எதிரிகள் அடைக்கப்படும் சைபீரிய-ரஷ்ய  சிறையிலிருந்து தப்பித்து,நாலாயிரம் மைல் நடந்தே இந்தியாவிற்கு வரும் ஒரு கூட்டத்தின் கதை.4000 மைல் நடந்தே கடந்தார்கள் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும் ஏனென்றால் இது உண்மையை தழுவி எடுக்கப்பட்ட கதை!

ரஷ்யாவில் இரண்டாம் உலக போருக்கு முன்பு ,விளாதிமிர் லெனின் மறைவுக்கு பின்பு,ஸ்டாலின் புரட்சிகரமான பல மாற்றங்களை அங்கே கொண்டு வந்தார் அதில் மிக முக்கியமானவை - உற்பத்தி முதலீடு சம்பந்தமான அணைத்து நடவடிக்கைகளையும் அரசே நடத்துவது,ஐந்து வருட திட்டங்கள், தொழில்மயமாக்கல்,தனி நபர் நிலங்களை,உழைப்பை அரசுடமயமாக்கல், சீர்திருத்த சிறைச்சாலை கூடங்கள். இப்படிப்பட்ட  சிறைச்சாலைகள் 1930 முதல் ரஷ்யா முழுவதும்  குலாக் எனப்படும் அமைப்பால் நடத்தப்பட்டது.இங்கே சிறு தவறு செய்தவர்கள், போர்க்குற்றவாளிகள்,தேசத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள், உளவாளிகள் கைதிகளாக அடைக்கப்பட்டு,அவர்கள் மரங்களை வெட்டுவதும் ,நிலக்கரி அள்ளுவதுமான கூலிதொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.1930 முதல் 1960 வரை இருந்த குலாக் சிறைகளில் பல லட்சக்கணக்கான கைதிகள் உணவு தட்டுப்பாடு,சுகாதாரம்,விஷப்பனி போன்ற காரணங்களால் இறந்திருகின்றனர்.

அப்படி ஒரு சிறையில் அடைக்கப்படும் போலாந்து உளவாளி யானுஸ் (Jim Sturgess) ,ரஷ்யாவை சேர்ந்த வால்கா (Colin Farrell) -லோக்கல் குற்றவாளி,இந்த கூட்டத்தில் கொஞ்சம் முரடன் இவன் மட்டுமே,அமெரிக்காவை சேர்ந்த ஸ்மித் (ed harris) ,போலாந்தை சேர்ந்த தோமஸ்-அவர் ஒரு ஓவியர்+சமையல் தெரிந்தவர்,லாத்வியாவை சேர்ந்த மதகுரு வோஸ்,ஜோரான் என்னும் கணக்கன் மற்றும் கஜிக்  அரை குருடன் இவர்கள் அங்கிருந்து தப்பிக்கின்றனர்.அங்கிருந்து தப்பியவர்களை ரஷிய ராணுவம் பெரிதாக தேடித்திரிவதில்லை ஏனென்றால் பல ஆயிரக்கணக்கான மைல்கள் சுற்றிலும் ஊசி இலை  காடுகள்,பனி சூழ்ந்த மலைகள்,பனி புயல்,அதில் மீண்டு யாரும் தப்பித்து விட முடியாது என்பதால்.     (கூடுதல் தகவல்-இன்றைய தேதியில் உலக காடுகளின் மொத்தத்தில் 25% சைபீரியாவை சேர்ந்தது.அப்படியென்றால் அதன் பரப்பளவை கணக்கிட்டு கொள்ளுங்கள்.அமெரிக்க கண்டத்தை விட பெரியது!).

தப்பித்த சில நாட்களிலேயே கஜிக் வழிதவறி போய் பனியால் உறைந்து இறக்கிறான்.யானூசின் யோசனைப்படி அவர்கள் பைகால் ஏரி வழியாக மங்கோலியாவிற்கு செல்ல தெற்கு திசையை நோக்கி நடக்க தொடங்குகின்றனர்.கொடுமையான பனிப்பொழிவும்,உணவு தட்டுப்பாடும் அவர்களை மிகுந்த அவலத்திற்கு தள்ளுகின்றது.அவர்களுக்கிடையே சின்ன சின்ன பிரச்சனைகள் நடகின்றது,ஆனாலும் அவர்கள் விடுதலையை நோக்கி நடக்கின்றனர்.

பல மாதங்கள் நடந்த பிறகு அவர்களுடன்  ஐரீனா (Saoirse Ronan) என்னும் சிறு பெண்ணும் ருஷ்ய அரசால் பாதிக்கப் பட்டவள்  என்று (பொய்)சொல்லி சேர்ந்து கொள்கிறாள்.முதலில் அவளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அந்த கூட்டம் பின் அவளோடு பழகத்துவங்குகின்றது. அவள் எல்லாருடனும் பேசுகின்றாள்,நட்பாகின்றாள்.அதுவரை ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ளாமல் இருந்த அவர்களது பின்புலத்தை,குடும்பத்தை பற்றி  ஐரீனா  தெரிந்து கொள்கிறாள்,அனைவரிடமும் அதை பகிர்கிறாள்.நொடித்து சாய்ந்த அவர்கள் வாழ்கையில் அவள் மீது அன்பு மலர்கின்றது.

பைகால் ஏரியை கடந்து மங்கோலியாவிற்கு செல்ல முற்படுகையில் வால்கா தான் அவன் நாட்டிலேயே இருக்க விரும்புவதாக கூறி விடை பெறுகின்றான். பின் முடிவில்லாத நீண்ட வறண்ட பிரதேசத்தில்,பாலைவனத்தில் நடக்கத்தொடங்குகின்றனர்.செத்து கிடக்கும் மானோ,விஷப்பாம்போ,குடிக்க கிடைக்கும் சேற்று நீரோ அதை அனைவரும் பகிர்ந்தே உண்கின்றனர். பொதுவாக இது போன்ற படங்களில் யாராவது யாரையாவது கொல்வார்கள் உணவுக்காகவோ,அல்லது வெறுப்பினாலோ அப்படியெல்லாம் எதுவும் நடப்பதில்லை.

ஒரு கட்டத்தில் ஐரீனா பாலைவனத்தின் வெப்பம் தாங்க மாட்டாமல் sun-stroke வந்து,கால்கள் வீங்கிச்சாகின்றாள்.பின் ஓவியர் தாமசும் சாக,மீதி இருக்கும் நால்வரும் இறுதியாக சைனா-பெருஞ்சுவர் வழியாக திபெத் வந்து பின் அங்கிருந்து யனூஸ்,வோஸ்,ஜோரான் மட்டும் இந்தியா வந்து சேர்கின்றனர். ஆராம்பம் முதலே கதையின் நாயகனான யானூஸ் தப்பித்து,பின் போலாந்துக்கு செல்வதையே அவன் நினைத்து வருகின்றான்.அவனே அந்த கூட்டத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து வழி நடத்துகின்றான்.தன்னால் முடியாது என்று ஒதுங்கி,சாவை அணைக்க விரும்பும் ஸ்மித்திற்கு ஊக்கமளித்து நடக்க வைக்கிறான்.நாலாயிரம் மைல் நடந்த போதும்,சாவை பல தடவை தொட்டு மீண்ட போதும்,வாழ்கையின் மீதான பற்று அவனுக்கு குறையவே இல்லை,ஒரு காட்சியில் "நீ அவ்வளவு தூரம் நடந்து போய் உயிர் பிழைத்தால் என்னை செய்வாய்" என்று கேட்க "மீண்டும் நடக்கவே தொடங்குவேன்" என்கிறான்.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 1945-1948களில் போலாந்து மீது ரஷ்யா கம்யுனிசமை திணித்தது.பின் 1980களில் போலாந்தில் துவங்கிய புரட்சியால் 1989ல் போலாந்து கம்யுனிசத்திலிருந்து விடுபட்டு சுத்திர நாடானது.அதன் பின் வயதான யனூஸ் அவன் மனைவியை போலாந்தில் சென்று சந்திப்பதுடன் படம் முடிகின்றது.

படத்தில் சிறு குறைகள் இருக்கத்தான் செய்கின்றது,முதலில் அவர்கள் போடும் திட்டமும்,அதன் பின் தப்பிப்பதும் சரியாக இல்லை "எப்படியோ தப்பிக்கிறார்கள்" என்று வைத்துக்கொள்ளலாம்.அவர்கள் நடந்து கடக்கும் ஊர்களை,காலத்தை சரியாக காட்டாமல் இருப்பது,அதில் தெளிவு இல்லை(எடிட்டிங்?).மேலும் யாருடைய பின்னணியையும் அழுத்தமாக நமக்கு தெரிவிப்பதில்லை, தெரிவித்திருந்தால் அந்த பாத்திரங்கள் நம் மனதில் நின்றிருப்பார்கள்.உணவின்றி,நீரின்றி சாகும் நிலைக்கு தள்ளப்படும் அவர்களின் சிக்கல்,வலி உணர்ச்சி பூர்வமாக நமக்கு கடத்தப்படவில்லை.

எப்படியானாலும்......உயிரோடிருக்க நடத்தும் போராட்டங்களையும் வலிகளையும்,உயிரின் மகத்துவத்தயும் காட்டும் சர்வைவல் வகை படங்கள் நமக்கு அலுப்பதில்லை,எப்போதும்.


                                                              The Way Back (2010)-Trailer

அன்புடன் 
நான்

மீனின் சிறகுகள் -'செக்ஸ்'பீரியன்ஸ்

                                                                          


காமம் 
உடலுடன் 
உடல் மோதி 
நிகழும் 
தசையின் விசை! 

காமத்தை எழுதுவது ரொம்பவும் சுலபமானது , பெட்டிகடைகளில் பின் அடித்து விற்கப்பட்டுக்கொண்டிருக்கும் "சரோஜாதேவி" வகை  புத்தகங்களில் சாணிப்பக்கங்களில் எழுதும்  காமம் ரொம்பவும் சுலபமானவை அதற்க்கு தேவையெல்லாம் ஆண் பெண் உறுப்புகள் மீதான கொஞ்சம் அறிவு மட்டுமே.அதே காமத்தை இலக்கியமாக எழுதுவது அவ்வளவு சுலபமல்ல.கொஞ்சமே கொஞ்சம் பிசகினாலும் விரசமாகிப்போகக்கூடிய இக்கட்டு இருக்கிறது,மேலும் சரியாக வகுக்கப்படும் பாலியல் மீதான கற்பனையும் வேண்டும். தஞ்சை பிரகாஷ் எழுதி இருக்கும் ஆண்-பெண் இடையேயான உடலசைவு மிகுந்த இலக்கிய நெருக்கத்துடன்,வட்டார வழக்குடனும் மீனின் சிறகுகளில் வெளிப்பட்டிருக்கிறது. சாதாரணமாக இல்லை, ரொம்பவும் காரமாக அடித்தொண்டையில் புரையேறும் அளவுக்கு  உக்கிரமாக வெளிப்பட்டிருக்கிறது.தமிழ் கலாச்சாரத்தின் இணக்கத்திற்கு கொஞ்சமும்  சம்பந்தப்படாமல்,எவ்வித ஒழுங்குணற்சிக்கும் கட்டுப்படாமல் திமிறிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறது.யாரும் பார்க்க விரும்பாத,முகத்தை திருப்பிக்கொள்ள விழையும் இடங்களிலேயே முழு நாவலும் பயணிக்கிறது.

ஒரு நாவலை எழுதுகையில் அதன் ஆசிரியன் ஒரு உலகத்தை படைக்கிறான்,அதன் செயலாக்கத்தை,உள்கட்டமைப்பை வடிக்கிறான்,அதை போலவே அதன் மனிதர்களையும் அவர் குணங்களையும் அமைத்து  பின் அதை எழுத்தாய் கொண்டுவருகின்றான் பின் அதை எட்டிப்பார்க்கும் வாய்ப்பை நமக்கு தருகின்றான்.நாவலில் வரும் அவன் உலகத்தின் சுவையை பற்றி விமர்சனம் செய்ய மட்டுமே நமக்கு உரிமையுள்ளதே தவிர கதையின் மாந்தர்களை "இப்படி இருப்பார்களா?,இதெல்லாம் சாத்தியமில்லை..ச்சே ச்சே..இது தப்பு ,சரி " என்று நாவலின் அடிப்படையை  ஆராய்வதும், அதை எதனுடனும்  ஒப்பிடுவதும், எழுதியவனின் ஒழுக்கத்தை பேசுவதும்  அறிவீனம்  என்பதை முதலில் இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மீனின் சிறகுகளில் வரும் வறுமை வழியும் பெருமாள் ஸ்டாரும் ,அங்கே வாழும் அழுக்கேறிய ஹோட்டல் சர்வர்களும், சமையல்காரர்களும், எண்ணெய் கறையும்,அடுப்பிருட்டு படிந்தவர்கள் வீடுகளும்,வீடுகளின் பெண்களான காமாட்சி, கிருஷ்ணி, மைதி மாமி, வசந்தா, லலிதேச்வரி போன்றவர்களும், சிறுவயது முதலே அவர்களோடு வளர்ந்து , ஆசை  உண்டாக்கி இவர்களோடு எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உடற்தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் பணக்கார வீட்டு பிள்ளை ரங்கமணியும் பிரகாஷால் படைக்கப்பட்ட உலகத்தின் அங்கங்கள்.நம் மேல்தட்டு உலகத்தில் காணக்கிடைக்காத இவர்களை நாம் ஏற்றுக்கொண்டாகவேண்டும்,கொஞ்சம் மனதைரியத்துடன்.காலாச்சார காவலர்கள் ,ரமணி சந்திரனை விட்டு வெளிவராதவர்கள் அப்படியே புத்தகத்தை மூடி வைத்துவிட்டு போய்விடுவது சிறந்தது.கதையின் மையம் ஸெக்ஸ்ஐ வைத்தே நகர்கின்றது. கிட்டத்தட்ட 330 பக்கங்கள் முழுவதும் மனிதர்கள் இருட்டை தேடி உடல்கள் மேல் உடல்களாக பிணங்கள் போல்  ஏறிக்கொண்டே இருக்கின்றார்கள் .கதை நகரும் தஞ்சாவூர் ,பெருமாள் ஸ்டோர் பற்றிய விவரணைகளுக்கு கூட பிரகாஷ் பக்கம் ஒதுக்கவில்லை.பெருமாள் கோயிலும்,இலைகளை உதிர்க்கும் வாதம் மரமும்,உரல் மேடையும் ,சில வீடுகளும்,குடிசைகளும் அந்தந்த காட்சியின் இடத்தை குறிக்க மட்டும் வந்து போகின்றது.

பெருமாள் ஸ்டோர் பெண்கள்-பிரகாஷ் படைத்த பெண்கள் சராசரியை விட ரொம்பவும் வேறுபட்டவர்கள்,பேரதிர்ச்சி தருபவர்கள்.இது போன்றவர்கள் நிஜ உலகில் ஆங்காங்கே  இருப்பவர்கள் தான்,இவர்களை பொதுவாக நாம் கவனிக்காமலே போய் விட முனைவோம்.அவர்கள் மனரீதியான பிரச்சனைகளையும், உடற்தேவைகளையும் சீழ்பிடித்த  கட்டுப்பாடு,சமூகம்,ஆசாரம் இவைகளால் புறங்கையால் தள்ளி வைப்போம்.ஆனால் பிரகாஷின் பெண்கள் இதில் எந்த விதிவிலக்கிற்க்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லை.உதாரணமாக,சிறுவயது முதலே ரங்கமணியை நினைத்து அவனோடு வாழ்வை இணைத்துக்கொள்ள,அவன் எப்படிப்பட்டவன் என்று தெரிந்தும் கூட அவன் பின்னே திரியும் காமாட்சி.ரங்கமணியை எதிர்த்து நின்று பின் அவனிடம் தோற்றுப்போய் பின் சரணடையும் லலிதேச்வரி. இதே லலிதேச்வரி  இன்னொரு பெண்ணான கார்த்தியிடம் காமத்தின் ருசி அறிந்து கொள்கிறாள் (லெஸ்பியனிசம்!- அதையும்  ஆசிரியர் விட்டுவைக்கவில்லை) .புதியதாய் திருமணமாகி அங்கு வரும் பவானி தன் கணவனால் வேறு பலரிடம் விற்கப்படுகிறாள்,அவள் அறியாமலேயே தன் கணவனை போலவே சாராய நாற்றத்தில் வரும் வேறு வேறு ஆண்களுடன் சேர்ப்பிக்கப்படுகிறாள். சதையுடன் சதை சேரும் இந்த அற்ப சுகத்திற்காக எந்த ஒரு கேவலத்தையும், மனிதன் அதற்காக குருடாக திரியும் அவலத்தையும் பவானி கண்டு வெறி கொதித்தெழுகிறாள்.தன் கணவனையே கொன்று உணர்சிகள் மறுத்த ஜடம் போல் தன்னை மாற்றிக்கொள்கிறாள், மொத்த கதையிலும் ஸெக்ஸ்ஐ வெறுத்து, தூற்றி வாரும் ஒரே பெண் ஜென்மம் பவானி மட்டும்தான். விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டதால் வாழ்கை முழுவது கணவனை நெருங்கவே விடாத மைதி மாமி,பின் ரங்கமணியிடம் தன்னை இழக்கிறாள்,குழந்தை பெறுகிறாள்.பிழைப்புக்காக  பெருமாள் ஸ்டோர்   வரும் பகவதி,  கால்கள்  இல்லாத தன் ஊனக்கணவனோடு கூடும் நேரங்களும்,அதற்காக அவள் தேர்ந்தெடுக்கும்  உத்தியை படிக்கும் போதும் , இந்தச்சமுதாயத்தில் எவ்வளவோ இடர்களுக்கு உட்பட்டு,வெந்து,நலிந்து அதனூடே எப்படியாவது வாழ்ந்து பார்த்து விடும் அப்பிறவிகளின் முயற்சியை காணும்போதும் சூட்டுக்கோலை மிதித்தது போல வலி மிகுகின்றது. 

கதையின் ஒரே நாயகனான அய்யங்காரின் மகன் ரங்கமணி வயதில் ஏற்படும் உந்துதலால், வேட்கையினால் பெருமாள் ஸ்டாரின் ஒவ்வொரு பெண்ணாக தேடி சேர்கின்றான்,அவன் ஆளுமைக்கு  எல்லா பெண்களுக்கும் அடி பணிந்து விடுகின்றனர்.அவனை அயோக்கியனாக புரிந்து கொண்டாலும் அவன் மேல் உள்ளூர ஆசையுடன் இருந்தாலும்,வெளிப்படையாக யாரும் அவனை நெருங்கவே விரும்புவதில்லை,ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நெருங்கி தொட்ட பின் அவனை விட்டு விலக மனம் இருப்பதில்லை.ஸ்டாரின் பெரும்பாலான பெண்கள்  ரங்கமணியால் மீனாக நீந்த தெரிந்து பின் செதிலை உதிர்த்து,சிறகு வளர்த்து வானில் பறக்க முயற்சிக்கிறார்கள்.அவர்கள் தங்களை தெரிந்து கொள்ள ரங்கமணி ஒரு கண்ணாடி,ஒரு இன்ஸ்ட்ருமென்ட்,ஒரு செக்ஸ் டூல் பெண்ணுக்கு தேவையான அல்லது தேவையென்று நாம் கருதிக்கொண்டிருக்கும் அனைத்து ஒழுக்கங்களையும் கட்டறுத்துவிட்டு  ரங்கமணி  மீது பாய்கிறார்கள் அல்லது அவனே இழுக்கிறான்.சிலர் அவனை காதலிக்கிறார்கள்,சொந்தமாகிக்கொள்ள விரும்புகிறார்கள் ஆனால் அவன் அதை ஒப்புக்கொள்வதில்லை,அவன் எல்லோரையும் நேசிப்பதாக சொல்கிறான்.நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத பல வாதங்களை ரங்கமணி முன்வைக்கிறான்,அவன் செய்யும் செயல்களுக்கு நியாயஅர்த்தம் கற்பிக்க முயல்கிறான்.கிட்டத்தட்ட எல்லா வகையிலும் அந்த பெருமாள் ஸ்டோருக்கு தனித்த ஒற்றை ஆண்மகனாய் இருக்கின்றான்.அங்கே உள்ள ஆண்களெல்லாம் பெண்களை அறினை போல் நடத்த,அவர்களை முழுதாக புரிந்தவனாக ,அவர்களுக்கு தேவையானவற்றை செய்பவனாக ரங்கமணி இருகின்றான்.

வயிற்றுப்பசியும், உடற்பசியும் மட்டுமே உலகின் பிரதானங்கள்.அவைதான் இவ்வுலகை இயக்கும்,ஓடவைத்துக்கொண்டிருக்கும் எரிபொருள் (Driving Fuel).அதற்க்கு எவ்வித பாகுபாடும்,ஒழுக்கமும் இருப்பதில்லை.அதற்க்கு எந்த எல்லையும் ,தடையும் போடமுடியாது .ஒரு முறை பசித்த பின்,ருசித்த பின் திரும்ப திரும்ப அதை நோக்கியே நாம்  நகர்ந்துகொண்டிருப்போம், மறுப்பதற்கில்லை.பசியை அணைக்கவே முடியாது,போடப்போட நெருப்பை போல அது கேட்டுக்கொண்டே இருக்கும்,எதை போட்டு நெருப்பை அணைக்க?நெருப்பு தான்  எல்லாவற்றையும் எரித்துக்கொண்டு  பரவிக்கொண்டே இருக்கவல்லது.நாவல் முழுக்க முழுக்க இந்த அணையாப்பசியை பற்றி மட்டுமே பேசுகிறது.

ஆண்களால் படைக்கப்பட்ட உலகம் இது -இங்கே காய்ந்த வயிற்றுடன், போர்வைக்கடியில்,கடலை புரட்டும் சாராய நாற்றத்தில்,வியர்வை கசகசப்பில் கூடும் பாவப்பட்ட பெண்கள் , இருட்டு மூலையில்,புகை அடுப்பில் வெந்து வாடும் திக்கற்ற பெண் ஜென்மங்கள் பற்றிய கதையாக  எனக்கு தோன்றுகின்றது.பொதுவாக காமம் என்பதை  மையப்படுத்தி  ஏதாவது சொன்னால் அதிலிருக்கும் "கில்மா" தனங்கள்,துள்ளல்கள்   ஏதுமில்லாத அல்லது அப்படி எதுவும் தோன்றச்செய்யாத நாவல் .ஆங்கிலத்திலோ,பிரெஞ்சிலோ எழுதப்பட்டிருந்தால் இது தொட்டிருக்கும் இடமும்,அடைந்திருக்கும் பேரும் வேறாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. 

நிறைய எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை வைத்து மெஸ்மரைஸ் செய்பவர்கள்,அவர்கள் எதை பற்றி எழுதினாலும்,அவர்கள் எடுத்துக்கொண்ட மையம் எதுவாக இருந்தாலும் சரி ஒரு அழகும்,வார்தைக்கவர்ச்சியும் இருக்கும்.அவர்கள் பெரும்பாலும் எல்லோராலும் விரும்பி படிக்கப்படுவார்கள்.தஞ்சை பிரகாஷ் இதிலிருந்து  முற்றிலும் வேறுபடுகின்றார்-யாரும் பார்க்கவிரும்பாத விஷயங்களை செருப்படியாய் படிப்பவர்கள் மீது இறக்குகின்றார்.கிளர்ச்சியான எழுத்தாக இல்லாமல் அம்மணமான உண்மையை சொல்கின்றார்.

ஒப்புக்கொண்டே ஆகவேண்டிய ஆனால் ஒப்புக்கொள்ள முடியாத (அல்லது) திராணி இல்லாத மனிதர்கள் இவர்கள் எழுத்துக்களை குப்பை என ஒதுக்கிபோகவும் கூடும்.அந்த அசுத்தத்தன்மையும்,உரித்துக்காட்டும் நேர்மையும்,எந்த ஒரு கோட்பாட்டிலும் அடங்காமல்,பெரிதாக இது சரி-இது தவறென்று ஆராய முற்படாமல்,எந்த தீர்வுக்கும் வராமல் இருக்கிறது "மீனின் சிறகுகள்".அது தான் நாவலின் வெற்றி என்று கூட நினைகிறேன்.
புத்தகத்திலிருந்து சில வரிகள்,  

".....ஒவ்வொரு நாளுமா என்னத்தயார் பண்ணி துரையாண்ட அலங்காரமா அனுப்புவா!ராத்திரி சாப்பிட எனக்கு பட்டை சாதம் கூட கிடைக்காது.ஆனா படுத்துக்கணும்! ஆம்படயாங்கிட்ட போகணும்."

"வீட்டுக்கு வீடு ஏராளமான குழந்தைகள்!ஏராளமான வயிறு!வாய் !உடம்பு!மனசுன்னு ஒண்ணுமே இல்லை!"

"என்னோட பயமே அதுதான் ரங்கமணி மாமா,நேக்கு எவன் கிட்ட இருந்தும் தப்பிக்க முடியாதுன்னு தோன்றது ........பொம்மனாட்டிகள் ஜாக்கிரதையா  இருக்கனும்பா!முடியல்லியே!.....பொம்மனாட்டிகள் இப்படியிருக்கத்லெதான்  சந்தோஷப்பட்றான்னு தோன்றது!"

"பசி தான் மூலம் ,பசி தான் உற்சாகம்,பசியிருந்தால் தான் படைப்பு ,பசி தன் கல்வி..காமம் தான் மனுஷ்யன் ,பசி தான் மனுஷ்யனை எழுப்பும்  கனல் ...பசி உந்துதல் ,காமம் கடத்தல்."ரங்கமணி.

பின் குறிப்பு:காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவலில் ஏகப்பட்ட பிழைகள்.எரிச்சலை தரும் ஆண் பால் பெண் பால் மாற்றங்கள்,பத்தி சேராமை ,வார்த்தை பிழைகள்.வேறு ஏதாவது பதிப்பகம் வெளியிட்டுள்ளதா என்று தெரியவில்லை.

தஞ்சை பிரகாஷ்


அன்புடன் 
நான்.

The bounty hunter (2010)- ஹாலிவூட் திரைப்படம்


The bounty hunter (2010)- ஹாலிவூட் திரைப்படம்-என் பார்வையில்இந்த படத்தின் கதையை "கணவன்-மனைவி-பிரிதல்-சேர்தல்" என்ற நான்கு விஷயங்களுக்குள் அடக்கி விடலாம்.விவகாரத்தாகி பிரிந்து போன கணவன் மனைவி சேர்கிறார்கள் அதை கொஞ்சம் காதலுடன் ,கொஞ்சம் நகைச்சுவையுடன்,கொஞ்சம் அடிதடியுடன் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

மைலோ(Gerad Butler 300 படத்தில் சிக்ஸ் பேக்குடன் சண்டை போட்டவர்) ஒரு பௌன்டி  ஹன்டர்,ஜெயிலுக்கு வராமல் பெயிலில் சுற்றிக்கொண்டிருப்பவர்கள் , கோர்ட்டில் ஆஜராகதவர்கள் போன்றவர்களை பிடித்து ஒப்படைப்பவர்களை அமெரிக்காவில் BH என்பார்கள்.நிகோல் (jennifer annitson) ஒரு பத்திரிக்கை நிருபர்,மைலோவின் முன்னால் மனைவியான இவர் ஒரு கார்  விபத்து  விஷயத்திற்காக ஜெயிலுக்கு போய்,சொன்ன தேதியில் கோர்ட்டில் ஆஜராகாமல் திரிபவர்.

நிகோலை பிடித்து கோர்ட்டில் ஆஜர் படுத்தும் பொறுப்பு மைலோவிடம் வருகின்றது. தனக்கு கொஞ்சமும் பிடிக்காத முன்னாள்  மனைவியை பிடித்து ரோட்டில் இழுத்துப்போக வாய்ப்பு கிடைத்ததை எண்ணி சந்தோஷத்துடன் அவளை தேடத்துவங்குகின்றான்.சீக்கிரமே அவளை கண்டுபிடித்து விடுகின்றான்.ஏனென்றால் அவள் எந்த நாளில்,எந்த நேரத்தில் எங்கே இருப்பாள் என்று கணவனான அவனுக்கு தெரிவதால்.(இன்னும் நிகோல் சம்பந்தப்பட்ட எதையும் அவன் மறக்கவில்லை).

தான் ஒரு முக்கியமான கொலை வழக்கை துப்பறிந்து கொண்டிருப்பதால் தன்னை விட்டு விடுமாறு  நிகோலே  கேட்கிறாள்,ஆனால்  மைலோவோ  அவளை ஜெயிலில் தள்ளுவதிலேயே  குறியாக இருக்கிறான் (பின்ன கசக்குமா என்ன?).பின்னர் அந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வில்லன்கள்   நிகோலை துரத்துகின்றார்கள் ,சூதாட்டத்தில் நிறைய தோற்று கடன் வைத்திருக்கும் மைலோவையும் ஒரு கும்பல் துரத்துகிறது. இருவரும் தப்பியோடிக்கொண்டே அந்த கொலை சம்பந்தப்பட்ட  விஷயங்களை தேடுகின்றார்கள் (மைலோவின் நெருக்கமான போலீஸ் நண்பன் அதில் உடன்பட்டிருப்பதாக சந்தேகப்படுவதால் மைலோவும்  நிகோலுடன் இணைந்து கொள்கிறான்).

ஒரு கணவன் மனைவிக்குள் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருப்பினும்  சரி,அடித்துப்புரண்டு ரோட்டில் உருண்டாலும் சரி , அவர்கள் பிரிந்து எத்தனை வருடமானாலும் சரி அவர்கள் சேர ஒன்றே ஒன்று தான் தேவை..ஒன்றே ஒன்று...அது அவர்கள் இருவரும் பேசிக்கொள்ள தனியாக ஒரு ஐந்து நிமிடம்.இது உலகப்பொது.ஏதாவது எப்படியாவது ..அவர்களுக்கு மனிதனலோ, கடவுளாலோ ஏற்படுத்தப்பட்ட ஒரு 300 நொடிகள் போதும். அப்படி ஒரு சில நிமிடங்கள் மைலோவும்,நிகோலும் மனம் விட்டு பேசுகின்றார்கள்,முடிந்த பிரச்சனையை பற்றி பேசாமல், அதற்கான  விளக்கங்களை திரும்பத்திரும்ப நோண்டாமல், ஒருவர் மேல் ஒருவர் பயித்தியமான அன்புடன் வாழ்ந்த வாழ்கையை பற்றி பேசுகின்றார்கள்,எதை இழந்தோம் என புரிந்து கொள்கிறார்கள் (மேலும் இதை தடுக்க எந்த தாடி வைத்த **** பையனும் இங்கு இல்லை).அப்போதே அவர்களுக்கும் நமக்கும் தெரிந்து விடுகின்றது அவர்கள் மீண்டும் சேரப்போகின்றார்கள் என்று.

பின்னர் இருவரும் ஒரு வழியாக கொலைக்கான காரணத்தையும், வில்லனையும் பிடித்து அழித்து,தங்கள் நண்பன் மேல் எந்த குற்றமும் இல்லையென நிரூபித்து ஒருவழியாக..கொஞ்சம் சப்பையாக படத்தை முடித்து விடுகின்றனர்.

வெயிலுக்கு சுருக்கி வைத்திருப்பது போலவே எப்போதும் முகத்தை வைத்துக்கொண்டு திரியும் ஜெரார்ட் பட்லர் பெரிதாக ஒன்றும் செய்வதில்லை,இரு பக்கமும் வாயில் பான் பீடாவை அதக்கி வைத்திருப்பது போலவே இருக்கும் ரொம்பவும் வயதாக தெரியும் ஆனிட்சன்.படத்தில்...ஒரு காட்சியில் "நான் ஒரு மாடல்" என்று ஆனிட்சன் ஒரு பெண்ணிடம் சொல்ல அதற்க்கு அவள் "ஓஹ்..அப்படியா எத்தனை வருடத்திற்கு முன்னால்" என்று நக்கலடிக்கும் அளவுக்கு இவர் வயதாக தெரிகின்றார்.இவர்கள் இருவர் மட்டுமே பிரதான பாத்திரங்கள் என்பதால் அவர்கள் பேசிக்கொள்வது ரொம்பவும் சுவாரசியமாக இல்லாததால் கொஞ்சம் போர் அடிக்கிறது. இதே வருடத்தில் வெளிவந்த Robert Downey Jr. மற்றும் Zach Galifianakis நடித்த due date படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்,அவர்கள் இருவரின் உரையாடல் மட்டும் தான் படத்தின் பலம்.நம்மால் சிரித்து  மாளாது.

மொத்தத்தில் ஆரம்ப நகைச்சுவைக்காக,அங்கங்கே வரும் சில சுவாரசிய காட்சிகளுக்காக ஒரு முறை பார்க்கலாம்.அன்புடன்
நான்.

ஆபீசில் வேலை செய்வது போல் சீன் போடுவது எப்படி?* காலையில்,ஆபீசில் நுழைந்தவுடன் எதிரில் தென்படும் எல்லாருக்கும் புன்னகையுடன்,ஒரு சலாம் போட்டு விடுங்கள்,நீங்கள் பிரெஷ் ஆக இருப்பதாகவும்,இன்று அநியாத்திற்கு வேலை செய்ய போவதை போலவும் ஒரு மாயையை உருவாக்குங்கள்.

* உங்களுக்கு கீழ் வேலை செய்யும் ஜூனியர் எவனாவது தென் பட்டால் "நேற்று அதை சொன்னனே,இதை சொன்னனே...முடிச்சியா? என்று அவன் வயிற்றில் புளியை கரையுங்கள்.நீங்கள் ரொம்ப "ஸ்ட்ரிட்" என்றும் சின்சியர் என்றும் நம்பி விடுவார்கள்.

* உங்கள் மேஜை கன்னா பின்னவென்று பேப்பர்கள்,குப்பைகளால் நிரம்பி வழிய வேண்டும்,அதனால் இரு ஆதாயம் உண்டு 
1.பாவம்!அதை சீர்படுத்தக்கூட உங்களுக்கு நேரமில்லை என்று மற்றவர்களை நினைக்க வைப்பது.
2."இவன் பெரிய அறிவாளி...ஏதோ புதுசா பண்றான்" னு அனைவரையும் நடுங்க செய்வது.

* மானேஜரோ அல்லது மேலதிகாரி யாரவது கூப்பிட்டால்,(ஏன் அலுவலகம் தீ பற்றிக்கொண்டால் கூட)  உடனே எழுந்து போய் விடக்கூடாது ,போனால் நீங்கள் வெட்டியாக தான் உட்கார்ந்து கொண்டிருகிறீர்கள் என்று அரை நொடியில் கண்டு பிடித்துவிடுவார்கள்.
அதே போல் உங்க டேபிள் போன் அடித்தாலும் உடனே எடுத்து விடக்கூடாது....சில நொடிகள் கழித்து எடுத்து .."சாரி....ஐ வாஸ் பிஸி" என்று ஆரம்பிக்க வேண்டும் . (நீங்க அப்போது பேப்பரை சுருட்டி காது குடைந்து கொண்டிருந்தாலும் சரியே!).

* உங்கள் இருப்பிடத்தில் கண்டிப்பாக உங்கள் மனைவி,குழந்தைகளை கட்டியணைத்தபடி ஒரு ப்ரேமிட்ட போட்டோ அவசியம் குறிப்பாக  உங்கள் மேனேஜர் பெண்ணாக இருந்தால் நெக்குருகி(அப்படி என்றால்?) போவார்,உங்கள் மீது பெருமதிப்பு கூட வாய்ப்புள்ளது.(மனைவியின் மூஞ்சை பார்ப்பதிலிருந்து தப்பிக்கவே நீங்கள் லீவ் போடாமல் அலுவலகம் வருகிறீர்கள் என்பது யாருக்கு தெரியப்போகின்றது?).

* பக்கத்துக்கு இருக்கைகளில் யாராவது தங்கள் சொந்த விஷயங்களை பிறருடனோ,அல்லது போனிலோ பேசிக்கொண்டிருந்தால் அதை சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு ஒட்டுக்கேளுங்கள் தவறில்லை (பின்ன எப்படி தான் நேரத்தை கடத்துவதாம்!) ஆனால் ஆர்வக்கோளாரில் அவர்களிடம் அதை பற்றி பேசிவிடாதீர்கள்.

* அடிக்கடி சத்தமாக சிரியுங்கள் (நீங்கள் தூங்கவில்லை என்பதை காட்டிக்கொள்வதற்காக) அல்லது சத்தமாக சில ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளை பிரயோகியுங்கள் (உதாரணம்:sh**,f**k) ,டேபிளை,கீ போர்டை குத்துங்கள்.நீங்கள் படு சின்சியராக,டென்ஷனாக ஏதோ ஒன்றை நோண்டிக் கொண்டிருப்பதாக எல்லோரும் நினைக்க இதை விட வேறு சிறந்த ஆயுதமில்லை.

* எவனாவது சந்தேகம் என்று கேட்டு உங்களிடம் வந்து மாட்டிக்கொண்டால் அவனை தனியறைக்கு அழைத்து போய் "ஏன்டா இவனிடம் வந்தோம் என்று" எண்ணாத அளவிற்கு உங்கள் திறமை முழுவதும் அவனிடம் காட்டுங்கள்.(எப்படி இருந்தாலும் இனி ஒரு முறை எதற்காகவும் உங்களிடம் அவன் வரப்போவதில்லை).
அதே போல் அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்து விடாதீர்கள்.பின்னால்  உங்களுக்கே அவன் கற்பிக்கும் அபாயம் உண்டு,உங்களை மதிக்காமலும் போகலாம்.

* மீட்டிங் என்று கூடிவிட்டால் சில பேப்பர்கள்,காபி சகிதம் அங்கே போய் உட்கார்ந்து விடுங்கள் ,அங்கே நடப்பவை உங்களுக்கு புரியவில்லை  என்றாலும் நடு நடுவே "எஸ்..எஸ்..எஸ்" என்று தலையாட்டுங்கள். யாராவது  உங்களிடம் ஏதாவது கேட்டுவிட்டால் தூக்கத்திலிருந்து விழிப்பவரை போல் முழிகாதீர்கள்.தமிழ்நாடு போலிசை போல் "அதற்கான விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது" பாணியில் எதாவது சொல்லி வையுங்கள்.

* மேனேஜர் எப்போது சாப்பிட,டீ குடிக்க போகிறார் என்று பார்த்துக்கொண்டு அவரோடு சென்று ஒட்டிக்கொளுங்கள்.அவரை நிம்மதியாய் விடாமல் அலுவலக வேலையே பற்றி பேசுங்கள்.ஏதாவது அறிவாளி ஜூனியர் உங்களிடம் சொன்ன ஐடியாக்களை அவரிடம் சொல்லி ஆச்சர்யப்படுத்துங்கள்.

* நீங்கள் எப்போதுமே பேஸ்புக்,ஜிமெயில்,யாஹூ போன்ற தளங்களையே பார்த்துக்கொண்டிருப்பதால் அதற்காகவே சம்பளம் தருகிறார்கள் என்ற எண்ணம் உங்கள் ரத்தத்தில் ஊறிப்போயிருக்கும்.எனவே மறக்காமல் உங்கள் வேலை சம்பத்தப்பட்ட ஏதோ ஒன்றை திறந்து ஒரு ஓரமாக திறந்து வையுங்கள்.

* வீட்டிலிருந்து போன் வந்தால் எடுத்து "நான் ரொம்ப பிஸி ..அப்புறம் பண்றேன்"  என்று சத்தமாக சீன் போட்டு (மனைவியிடம் இதை செய்தல் கூடாது,வீட்டிற்க்கு போனால் "அப்படி என்ன வெட்ற வேலை?" என்று மண்டை வீங்க வாய்ப்புள்ளது) போனை கட் செய்யுங்கள்.(அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பழைய தோழி/தோழனிடம் சாட் செய்து கொண்டிருந்தாலும் சரி).

பின் குறிப்பு:மனேஜருடன்,வருடக்கடைசியில் உங்கள் performance மற்றும் சம்பள உயர்வு சம்பந்தமான பேச்சு வார்த்தையில்,மேலே சொன்ன எல்லா கயவாளித்தனத்தையும் அறிந்து வைத்திருப்பார்.ஜாக்கிரதை!

அன்புடன்
நான்.

நம்ம யூத்து

சமீபத்தில் ஜெயமோகனின் கட்டுரையான "யூத்து" படித்துவிட்டு,எனக்கு தோன்றியவைகளை அவருக்கு அனுப்ப ஒரு நீண்ட கடிதம் எழுதி இருக்கிறேன்.அதன் பிரதி கீழே.

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் நான் படித்த தங்களின் "யூத்து" கட்டுரையை பற்றி எனது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
தங்களின் சிறந்த படைப்பாக நான் கருதும் காடு நாவலில் இயற்கையின் அழகியலை நீங்கள் வர்ணிக்கும் போதும்,யானை டாக்டரில் தற்கால இளைஞர்களை நீங்கள் சாடும் போதும்,இன்னும் பிற நாவல்களிலும் இந்த கட்டுரையில் வரும் விஷயங்களை நீங்கள் முன்னிலை படுத்துவதை கவனித்திருக்கிறேன்.

நீங்கள் சொன்ன பருந்து பாறை இளைஞர் கூட்டத்தை போன்ற ஜென்மங்களை எல்லா ஊரிலும் நம் கைகளுக்கு அருகிலேயே காண முடியும்,அவர்களுக்கு இயற்கையெல்லாம் குரங்கு கையில் பூ மாலை போலத்தான்,வைத்து முகர்ந்து பார்க்க தெரியாது பிரித்து,பிய்த்து தான் எறிவார்கள்.சென்ற வருடம் மனைவியுடன் "மலைகளின் ராணி" ஊட்டிக்கு சென்றேன்....ஊரின் பெயரை மாற்றி "குப்பை மலைகளின் ராணி" என்று வைக்கலாம் போல் அப்படி இருக்கிறது.ஊரின் எல்லை தொடங்குவதற்கு முன்பிருந்தே வழி எங்கும் குப்பை,பிளாஸ்டிக்,பாட்டில் குவியல்கள் தான்.....மனிதனாக இருப்பதற்கு எந்த தகுதியும் இல்லாத ஜென்மங்கள் செய்கையாகவே அது தெரிந்தது.

எங்காவது சுற்றுலா தளங்களுக்கு சென்றால் நமது ஆட்கள் தவறாமல் ஆற்றுபவை,
*துண்டை விரித்து எடுத்து வந்த கட்டு சோற்றை பிரித்து ஒரு கட்டு கட்டுவார்கள்
*மாங்காய் பத்தை,மிளகாய் பஜ்ஜி,சிப்ஸ் என்று நொறுக்கு தீனியாக (நாளைக்கு சாகப்போகிறவர்கள் போல்) தின்று தீர்ப்பார்கள்.
*ஜோடியாக செல்பவர்கள்-அறைக்குள் நடக்கவேண்டிவைகள் சிலவற்றை வெளியிலேயே செய்யத்தொடங்குவார்கள்.(காதலா இருக்காங்களாம்!) ,மனதிற்கு பிடித்தவர்களோடு சூழ்நிலையை அனுபவிப்பதில்லை,அங்கே போயும் இவர்கள் புதரையே தேடுவார்கள். ரசிக்கவோ,யோசிக்கவோ அங்கே அவர்கள் செல்வதே இல்லை,பெட் ரூமிற்கு சென்றவுடன் உடையை கழற்றும் அவசரந்தான்.இது நம் தரம் தாழ்ந்த சினிமா கற்றுக்கொடுப்பது தான்  ,ஏனென்றால் நம் சினிமாக்காரர்கள் தான் செக்ஸையும் காதலையும் போட்டு குழப்பி வைத்திருக்கின்றார்களே! அவர்கள் பாஷையில் இடுப்பில் கை போடுவது,மார்பை குலுக்குவது,முகர்வது,நக்குவது தான் காதல்.
----------
நீங்கள் சொன்னது போல் பணத்திற்கான கல்வி மட்டுமே நமக்கு தெரிந்தது,அதையே ஊட்டி வளர்க்கப்பட்டோம்.நிறைய மார்க் வாங்கவும்,வெளிநாடுகளில் வேலை செய்து பணத்தில் கொழிக்கவும்,வீடு,கார்,கிரீன் கார்டு தான் பிரதானம்,பெருமை என்று நாம் நமது பெற்றோர்களால் mesmerize செய்ய பட்டிருக்கிறோம்.ரசனை சார்ந்த அறிவு,வாழ்வில் ஆங்காங்கே தோன்றவேண்டிய அழகுணர்ச்சி,யோசித்தல்  போன்றவை துளியும் இல்லாத ஒரு வகை தட்டையான வாழ்கை முறையே இங்கு நிலவுகின்றது. 

உண்மையில் யாரும் நம்மையெல்லாம் வளர்க்கவே இல்லை,தொழுவத்து மாடு போல் சாணி போட்ட இடத்தில் உழன்று கொண்டிருக்கிறோம்.(தங்களின் "சோற்றுக்கல்வி" என்ற சொல்லாடலை ரசித்தேன்).குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை,சினிமாவை,வெளி உலகத்தை   அறிமுகப்படுத்த நாம் யாரும் முயல்வதில்லை.இன்று வீடுகளில்,டிவியில் பெரியவர்கள் பார்க்கும் குப்பைகளை குழந்தைகளும் சேர்ந்து பார்த்து வலிப்பு வந்ததை போல் ஆடுகிறார்கள்,அதை பெற்றோர்கள் கை தட்டி ஊக்குவிக்கும் கொடுமை தான் நடந்து கொண்டிருக்கிறது.இப்போதெல்லாம் மண்ணில் இறங்கி,தெருக்களில் எந்த குழந்தையும் விளையாடுவதையே பார்க்க முடிவதில்லை.
--------
எதாவது ஒரு வகையில் தற்கால "யூத்துகளை" விட நாம் கொஞ்சம் வேறு பட்டு இருந்தால்? உதாரணதிற்கு-கொஞ்சம் படிக்கும் பழக்கத்தை வைத்துக்கொண்டு நான் படும் அவதி இருக்கிறதே!
வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வழியில் cabல் எதாவது புத்தகத்தை மேய்ந்து கொண்டே செல்வது என் வழக்கம்.
அப்படி ஒரு நாள்....என்னுடன் வரும் தமிழ் அன்பர் ஒருவர்,நான் அப்போது படித்துக்கொண்டிருந்த தி.ஜா வின் "மோகமுள்" நாவலின் தலைப்பை எழுத்துக்கூட்டி படித்து விட்டு "என்னங்க, பெயரே ஒரு மாதிரி இருக்கு......சீன் புக்கா?" என்றார் சைடாக சிரித்துகொண்டே.
சிலர் புத்தகத்தை வாங்கி ஏதோ அரபு மொழி படிப்பதை போல் இரண்டு வரி தடுமாறி விட்டு "மொக்கையா இருக்குங்க!" என்று கொடுத்து விடுவார்கள்(கோபல்ல கிராமம்!),வீட்டு பெரியவர்கள் "கல்கி மாதிரி எழுதுறவங்க யாராவது இப்போ இருக்கிறாங்களாடா?" என்று எகிறுவார்கள்.ஒரு கூட்டம் ராஜேஷ் குமார்,விமலா ரமணனை மட்டுமே எழுத்தாளராக எண்ணிக்கொண்டிருக்கிறது.இன்னொரு பணக்கார கூட்டம் ஹாரி பாட்டர் புத்தகங்களை வாங்க சிட்டி சென்டரில் நின்று கொண்டிருக்கிறது.
தரமான புத்தகங்கள் படிப்பதால் ஒரு மொழியின் வேரை தொட முடியும்,கலாச்சாரத்தின் அடிப்படையை, அரசியலை, ஆன்மீகத்தை,வரலாற்றை...அதிமுக்கியமாக மனிதர்களை புரிந்து கொள்ள முடியும் என்பது என் நம்பிக்கை.புத்தகங்கள் படிப்பது கஞ்சா,ஒப்பியத்தை விட போதையான சமாச்சாரம்,படிப்பவர்கள் மட்டுமே அதை உணர முடியும்.
--------
மேல் நாடுகளிலிருந்து அவர்களை போல் பர்கர்,பீசா சாப்பிட,உடை அணிய,நைட் கிளப்களில் தண்ணியடித்து விட்டு அரைகுறை ஆட்டம் போடும் வழக்கத்தை மட்டுமே  நம் இளைஞர்கள் கற்றுக்கொண்டது,இதை செய்வதினால் மட்டும் அவர்கள் தங்கள் தரத்தில், கலாசாரத்தில் உயர்ந்து விட்டதாக,மூடத்தனமான! இந்திய சமூகத்திலிருந்து வேறுபடுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நான் இந்தியன் தான் ஆனால் ஒரு இந்தியனை போல் எனது வாழ்கை முறை இல்லை,அது தேவையுமில்லை என்று சொல்லவே பெருமை படுகின்றார்கள்.இந்த விஷயத்தில் வட இந்தியர்களை அடித்துக்கொள்ள ஆளில்லை. இதை செய்வதால் தப்பொன்றும் இல்லை ஆனால் அவர்களிடம் கற்றுக்கொள்ள உருப்படியாக எவ்வளவோ இருக்கிறது.உதாரணமாக, ஐரோப்பியர்களை போல் காலந்தவறாமை,தெரியாததை தெரியாது என ஒத்துக்கொள்ளும் பண்பு,சலிப்பின்மை,சளைக்காமை......இதெல்லாம் நாம் அவர்களிடம் கவனித்ததே இல்லை.
தமிழ் நாட்டில், நமது பெரும்பாலான இளைஞர்களின் ரசனையை இரண்டு வகைகளில் தொகுக்கலாம் ஒன்று X நடிகரின் ரசிகன் அல்லது Y நடிகரின் ரசிகன்.
-------
இதெல்லாம் நம் சமூதாயம் மீதான நிலைப்பாடு மட்டுமே ,இதில் யாரையும் எதுவும் செய்வது சாத்தியமாக தோன்றவில்லை.
இதெல்லாம் நமது மக்களிடம் வேரூன்றி இறுகி விட்டது.வேண்டுமென்றால் இப்போது குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கும் அந்த கூட்டத்திடம் சிலவற்றை புரியவைத்து,சிலவற்றை மருந்தை போல் திணித்து ....வளரவிடலாம்,பார்ப்போம்.

அன்புடன்
நான்.

- Copyright © துளி கடல் -