சமீபத்தில் ஜெயமோகனின் கட்டுரையான "யூத்து" படித்துவிட்டு,எனக்கு தோன்றியவைகளை அவருக்கு அனுப்ப ஒரு நீண்ட கடிதம் எழுதி இருக்கிறேன்.அதன் பிரதி கீழே.

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் நான் படித்த தங்களின் "யூத்து" கட்டுரையை பற்றி எனது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
தங்களின் சிறந்த படைப்பாக நான் கருதும் காடு நாவலில் இயற்கையின் அழகியலை நீங்கள் வர்ணிக்கும் போதும்,யானை டாக்டரில் தற்கால இளைஞர்களை நீங்கள் சாடும் போதும்,இன்னும் பிற நாவல்களிலும் இந்த கட்டுரையில் வரும் விஷயங்களை நீங்கள் முன்னிலை படுத்துவதை கவனித்திருக்கிறேன்.

நீங்கள் சொன்ன பருந்து பாறை இளைஞர் கூட்டத்தை போன்ற ஜென்மங்களை எல்லா ஊரிலும் நம் கைகளுக்கு அருகிலேயே காண முடியும்,அவர்களுக்கு இயற்கையெல்லாம் குரங்கு கையில் பூ மாலை போலத்தான்,வைத்து முகர்ந்து பார்க்க தெரியாது பிரித்து,பிய்த்து தான் எறிவார்கள்.சென்ற வருடம் மனைவியுடன் "மலைகளின் ராணி" ஊட்டிக்கு சென்றேன்....ஊரின் பெயரை மாற்றி "குப்பை மலைகளின் ராணி" என்று வைக்கலாம் போல் அப்படி இருக்கிறது.ஊரின் எல்லை தொடங்குவதற்கு முன்பிருந்தே வழி எங்கும் குப்பை,பிளாஸ்டிக்,பாட்டில் குவியல்கள் தான்.....மனிதனாக இருப்பதற்கு எந்த தகுதியும் இல்லாத ஜென்மங்கள் செய்கையாகவே அது தெரிந்தது.

எங்காவது சுற்றுலா தளங்களுக்கு சென்றால் நமது ஆட்கள் தவறாமல் ஆற்றுபவை,
*துண்டை விரித்து எடுத்து வந்த கட்டு சோற்றை பிரித்து ஒரு கட்டு கட்டுவார்கள்
*மாங்காய் பத்தை,மிளகாய் பஜ்ஜி,சிப்ஸ் என்று நொறுக்கு தீனியாக (நாளைக்கு சாகப்போகிறவர்கள் போல்) தின்று தீர்ப்பார்கள்.
*ஜோடியாக செல்பவர்கள்-அறைக்குள் நடக்கவேண்டிவைகள் சிலவற்றை வெளியிலேயே செய்யத்தொடங்குவார்கள்.(காதலா இருக்காங்களாம்!) ,மனதிற்கு பிடித்தவர்களோடு சூழ்நிலையை அனுபவிப்பதில்லை,அங்கே போயும் இவர்கள் புதரையே தேடுவார்கள். ரசிக்கவோ,யோசிக்கவோ அங்கே அவர்கள் செல்வதே இல்லை,பெட் ரூமிற்கு சென்றவுடன் உடையை கழற்றும் அவசரந்தான்.இது நம் தரம் தாழ்ந்த சினிமா கற்றுக்கொடுப்பது தான்  ,ஏனென்றால் நம் சினிமாக்காரர்கள் தான் செக்ஸையும் காதலையும் போட்டு குழப்பி வைத்திருக்கின்றார்களே! அவர்கள் பாஷையில் இடுப்பில் கை போடுவது,மார்பை குலுக்குவது,முகர்வது,நக்குவது தான் காதல்.
----------
நீங்கள் சொன்னது போல் பணத்திற்கான கல்வி மட்டுமே நமக்கு தெரிந்தது,அதையே ஊட்டி வளர்க்கப்பட்டோம்.நிறைய மார்க் வாங்கவும்,வெளிநாடுகளில் வேலை செய்து பணத்தில் கொழிக்கவும்,வீடு,கார்,கிரீன் கார்டு தான் பிரதானம்,பெருமை என்று நாம் நமது பெற்றோர்களால் mesmerize செய்ய பட்டிருக்கிறோம்.ரசனை சார்ந்த அறிவு,வாழ்வில் ஆங்காங்கே தோன்றவேண்டிய அழகுணர்ச்சி,யோசித்தல்  போன்றவை துளியும் இல்லாத ஒரு வகை தட்டையான வாழ்கை முறையே இங்கு நிலவுகின்றது. 

உண்மையில் யாரும் நம்மையெல்லாம் வளர்க்கவே இல்லை,தொழுவத்து மாடு போல் சாணி போட்ட இடத்தில் உழன்று கொண்டிருக்கிறோம்.(தங்களின் "சோற்றுக்கல்வி" என்ற சொல்லாடலை ரசித்தேன்).குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை,சினிமாவை,வெளி உலகத்தை   அறிமுகப்படுத்த நாம் யாரும் முயல்வதில்லை.இன்று வீடுகளில்,டிவியில் பெரியவர்கள் பார்க்கும் குப்பைகளை குழந்தைகளும் சேர்ந்து பார்த்து வலிப்பு வந்ததை போல் ஆடுகிறார்கள்,அதை பெற்றோர்கள் கை தட்டி ஊக்குவிக்கும் கொடுமை தான் நடந்து கொண்டிருக்கிறது.இப்போதெல்லாம் மண்ணில் இறங்கி,தெருக்களில் எந்த குழந்தையும் விளையாடுவதையே பார்க்க முடிவதில்லை.
--------
எதாவது ஒரு வகையில் தற்கால "யூத்துகளை" விட நாம் கொஞ்சம் வேறு பட்டு இருந்தால்? உதாரணதிற்கு-கொஞ்சம் படிக்கும் பழக்கத்தை வைத்துக்கொண்டு நான் படும் அவதி இருக்கிறதே!
வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வழியில் cabல் எதாவது புத்தகத்தை மேய்ந்து கொண்டே செல்வது என் வழக்கம்.
அப்படி ஒரு நாள்....என்னுடன் வரும் தமிழ் அன்பர் ஒருவர்,நான் அப்போது படித்துக்கொண்டிருந்த தி.ஜா வின் "மோகமுள்" நாவலின் தலைப்பை எழுத்துக்கூட்டி படித்து விட்டு "என்னங்க, பெயரே ஒரு மாதிரி இருக்கு......சீன் புக்கா?" என்றார் சைடாக சிரித்துகொண்டே.
சிலர் புத்தகத்தை வாங்கி ஏதோ அரபு மொழி படிப்பதை போல் இரண்டு வரி தடுமாறி விட்டு "மொக்கையா இருக்குங்க!" என்று கொடுத்து விடுவார்கள்(கோபல்ல கிராமம்!),வீட்டு பெரியவர்கள் "கல்கி மாதிரி எழுதுறவங்க யாராவது இப்போ இருக்கிறாங்களாடா?" என்று எகிறுவார்கள்.ஒரு கூட்டம் ராஜேஷ் குமார்,விமலா ரமணனை மட்டுமே எழுத்தாளராக எண்ணிக்கொண்டிருக்கிறது.இன்னொரு பணக்கார கூட்டம் ஹாரி பாட்டர் புத்தகங்களை வாங்க சிட்டி சென்டரில் நின்று கொண்டிருக்கிறது.
தரமான புத்தகங்கள் படிப்பதால் ஒரு மொழியின் வேரை தொட முடியும்,கலாச்சாரத்தின் அடிப்படையை, அரசியலை, ஆன்மீகத்தை,வரலாற்றை...அதிமுக்கியமாக மனிதர்களை புரிந்து கொள்ள முடியும் என்பது என் நம்பிக்கை.புத்தகங்கள் படிப்பது கஞ்சா,ஒப்பியத்தை விட போதையான சமாச்சாரம்,படிப்பவர்கள் மட்டுமே அதை உணர முடியும்.
--------
மேல் நாடுகளிலிருந்து அவர்களை போல் பர்கர்,பீசா சாப்பிட,உடை அணிய,நைட் கிளப்களில் தண்ணியடித்து விட்டு அரைகுறை ஆட்டம் போடும் வழக்கத்தை மட்டுமே  நம் இளைஞர்கள் கற்றுக்கொண்டது,இதை செய்வதினால் மட்டும் அவர்கள் தங்கள் தரத்தில், கலாசாரத்தில் உயர்ந்து விட்டதாக,மூடத்தனமான! இந்திய சமூகத்திலிருந்து வேறுபடுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நான் இந்தியன் தான் ஆனால் ஒரு இந்தியனை போல் எனது வாழ்கை முறை இல்லை,அது தேவையுமில்லை என்று சொல்லவே பெருமை படுகின்றார்கள்.இந்த விஷயத்தில் வட இந்தியர்களை அடித்துக்கொள்ள ஆளில்லை. இதை செய்வதால் தப்பொன்றும் இல்லை ஆனால் அவர்களிடம் கற்றுக்கொள்ள உருப்படியாக எவ்வளவோ இருக்கிறது.உதாரணமாக, ஐரோப்பியர்களை போல் காலந்தவறாமை,தெரியாததை தெரியாது என ஒத்துக்கொள்ளும் பண்பு,சலிப்பின்மை,சளைக்காமை......இதெல்லாம் நாம் அவர்களிடம் கவனித்ததே இல்லை.
தமிழ் நாட்டில், நமது பெரும்பாலான இளைஞர்களின் ரசனையை இரண்டு வகைகளில் தொகுக்கலாம் ஒன்று X நடிகரின் ரசிகன் அல்லது Y நடிகரின் ரசிகன்.
-------
இதெல்லாம் நம் சமூதாயம் மீதான நிலைப்பாடு மட்டுமே ,இதில் யாரையும் எதுவும் செய்வது சாத்தியமாக தோன்றவில்லை.
இதெல்லாம் நமது மக்களிடம் வேரூன்றி இறுகி விட்டது.வேண்டுமென்றால் இப்போது குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கும் அந்த கூட்டத்திடம் சிலவற்றை புரியவைத்து,சிலவற்றை மருந்தை போல் திணித்து ....வளரவிடலாம்,பார்ப்போம்.

அன்புடன்
நான்.

4 Responses so far.

 1. Ramani says:
  This comment has been removed by the author.
 2. Ramani says:

  அனைவருக்குள்ளும் இருக்கும் ஆதங்கத்தையும்
  மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள்
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

 3. Ibrahim A says:

  வருகைக்கு நன்றி திரு.ரமணி
  tha.ma.1 என்றால்?

- Copyright © துளி கடல் -