காமம் 
உடலுடன் 
உடல் மோதி 
நிகழும் 
தசையின் விசை! 

காமத்தை எழுதுவது ரொம்பவும் சுலபமானது , பெட்டிகடைகளில் பின் அடித்து விற்கப்பட்டுக்கொண்டிருக்கும் "சரோஜாதேவி" வகை  புத்தகங்களில் சாணிப்பக்கங்களில் எழுதும்  காமம் ரொம்பவும் சுலபமானவை அதற்க்கு தேவையெல்லாம் ஆண் பெண் உறுப்புகள் மீதான கொஞ்சம் அறிவு மட்டுமே.அதே காமத்தை இலக்கியமாக எழுதுவது அவ்வளவு சுலபமல்ல.கொஞ்சமே கொஞ்சம் பிசகினாலும் விரசமாகிப்போகக்கூடிய இக்கட்டு இருக்கிறது,மேலும் சரியாக வகுக்கப்படும் பாலியல் மீதான கற்பனையும் வேண்டும். தஞ்சை பிரகாஷ் எழுதி இருக்கும் ஆண்-பெண் இடையேயான உடலசைவு மிகுந்த இலக்கிய நெருக்கத்துடன்,வட்டார வழக்குடனும் மீனின் சிறகுகளில் வெளிப்பட்டிருக்கிறது. சாதாரணமாக இல்லை, ரொம்பவும் காரமாக அடித்தொண்டையில் புரையேறும் அளவுக்கு  உக்கிரமாக வெளிப்பட்டிருக்கிறது.தமிழ் கலாச்சாரத்தின் இணக்கத்திற்கு கொஞ்சமும்  சம்பந்தப்படாமல்,எவ்வித ஒழுங்குணற்சிக்கும் கட்டுப்படாமல் திமிறிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறது.யாரும் பார்க்க விரும்பாத,முகத்தை திருப்பிக்கொள்ள விழையும் இடங்களிலேயே முழு நாவலும் பயணிக்கிறது.

ஒரு நாவலை எழுதுகையில் அதன் ஆசிரியன் ஒரு உலகத்தை படைக்கிறான்,அதன் செயலாக்கத்தை,உள்கட்டமைப்பை வடிக்கிறான்,அதை போலவே அதன் மனிதர்களையும் அவர் குணங்களையும் அமைத்து  பின் அதை எழுத்தாய் கொண்டுவருகின்றான் பின் அதை எட்டிப்பார்க்கும் வாய்ப்பை நமக்கு தருகின்றான்.நாவலில் வரும் அவன் உலகத்தின் சுவையை பற்றி விமர்சனம் செய்ய மட்டுமே நமக்கு உரிமையுள்ளதே தவிர கதையின் மாந்தர்களை "இப்படி இருப்பார்களா?,இதெல்லாம் சாத்தியமில்லை..ச்சே ச்சே..இது தப்பு ,சரி " என்று நாவலின் அடிப்படையை  ஆராய்வதும், அதை எதனுடனும்  ஒப்பிடுவதும், எழுதியவனின் ஒழுக்கத்தை பேசுவதும்  அறிவீனம்  என்பதை முதலில் இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மீனின் சிறகுகளில் வரும் வறுமை வழியும் பெருமாள் ஸ்டாரும் ,அங்கே வாழும் அழுக்கேறிய ஹோட்டல் சர்வர்களும், சமையல்காரர்களும், எண்ணெய் கறையும்,அடுப்பிருட்டு படிந்தவர்கள் வீடுகளும்,வீடுகளின் பெண்களான காமாட்சி, கிருஷ்ணி, மைதி மாமி, வசந்தா, லலிதேச்வரி போன்றவர்களும், சிறுவயது முதலே அவர்களோடு வளர்ந்து , ஆசை  உண்டாக்கி இவர்களோடு எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உடற்தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் பணக்கார வீட்டு பிள்ளை ரங்கமணியும் பிரகாஷால் படைக்கப்பட்ட உலகத்தின் அங்கங்கள்.நம் மேல்தட்டு உலகத்தில் காணக்கிடைக்காத இவர்களை நாம் ஏற்றுக்கொண்டாகவேண்டும்,கொஞ்சம் மனதைரியத்துடன்.காலாச்சார காவலர்கள் ,ரமணி சந்திரனை விட்டு வெளிவராதவர்கள் அப்படியே புத்தகத்தை மூடி வைத்துவிட்டு போய்விடுவது சிறந்தது.கதையின் மையம் ஸெக்ஸ்ஐ வைத்தே நகர்கின்றது. கிட்டத்தட்ட 330 பக்கங்கள் முழுவதும் மனிதர்கள் இருட்டை தேடி உடல்கள் மேல் உடல்களாக பிணங்கள் போல்  ஏறிக்கொண்டே இருக்கின்றார்கள் .கதை நகரும் தஞ்சாவூர் ,பெருமாள் ஸ்டோர் பற்றிய விவரணைகளுக்கு கூட பிரகாஷ் பக்கம் ஒதுக்கவில்லை.பெருமாள் கோயிலும்,இலைகளை உதிர்க்கும் வாதம் மரமும்,உரல் மேடையும் ,சில வீடுகளும்,குடிசைகளும் அந்தந்த காட்சியின் இடத்தை குறிக்க மட்டும் வந்து போகின்றது.

பெருமாள் ஸ்டோர் பெண்கள்-பிரகாஷ் படைத்த பெண்கள் சராசரியை விட ரொம்பவும் வேறுபட்டவர்கள்,பேரதிர்ச்சி தருபவர்கள்.இது போன்றவர்கள் நிஜ உலகில் ஆங்காங்கே  இருப்பவர்கள் தான்,இவர்களை பொதுவாக நாம் கவனிக்காமலே போய் விட முனைவோம்.அவர்கள் மனரீதியான பிரச்சனைகளையும், உடற்தேவைகளையும் சீழ்பிடித்த  கட்டுப்பாடு,சமூகம்,ஆசாரம் இவைகளால் புறங்கையால் தள்ளி வைப்போம்.ஆனால் பிரகாஷின் பெண்கள் இதில் எந்த விதிவிலக்கிற்க்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லை.உதாரணமாக,சிறுவயது முதலே ரங்கமணியை நினைத்து அவனோடு வாழ்வை இணைத்துக்கொள்ள,அவன் எப்படிப்பட்டவன் என்று தெரிந்தும் கூட அவன் பின்னே திரியும் காமாட்சி.ரங்கமணியை எதிர்த்து நின்று பின் அவனிடம் தோற்றுப்போய் பின் சரணடையும் லலிதேச்வரி. இதே லலிதேச்வரி  இன்னொரு பெண்ணான கார்த்தியிடம் காமத்தின் ருசி அறிந்து கொள்கிறாள் (லெஸ்பியனிசம்!- அதையும்  ஆசிரியர் விட்டுவைக்கவில்லை) .புதியதாய் திருமணமாகி அங்கு வரும் பவானி தன் கணவனால் வேறு பலரிடம் விற்கப்படுகிறாள்,அவள் அறியாமலேயே தன் கணவனை போலவே சாராய நாற்றத்தில் வரும் வேறு வேறு ஆண்களுடன் சேர்ப்பிக்கப்படுகிறாள். சதையுடன் சதை சேரும் இந்த அற்ப சுகத்திற்காக எந்த ஒரு கேவலத்தையும், மனிதன் அதற்காக குருடாக திரியும் அவலத்தையும் பவானி கண்டு வெறி கொதித்தெழுகிறாள்.தன் கணவனையே கொன்று உணர்சிகள் மறுத்த ஜடம் போல் தன்னை மாற்றிக்கொள்கிறாள், மொத்த கதையிலும் ஸெக்ஸ்ஐ வெறுத்து, தூற்றி வாரும் ஒரே பெண் ஜென்மம் பவானி மட்டும்தான். விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டதால் வாழ்கை முழுவது கணவனை நெருங்கவே விடாத மைதி மாமி,பின் ரங்கமணியிடம் தன்னை இழக்கிறாள்,குழந்தை பெறுகிறாள்.பிழைப்புக்காக  பெருமாள் ஸ்டோர்   வரும் பகவதி,  கால்கள்  இல்லாத தன் ஊனக்கணவனோடு கூடும் நேரங்களும்,அதற்காக அவள் தேர்ந்தெடுக்கும்  உத்தியை படிக்கும் போதும் , இந்தச்சமுதாயத்தில் எவ்வளவோ இடர்களுக்கு உட்பட்டு,வெந்து,நலிந்து அதனூடே எப்படியாவது வாழ்ந்து பார்த்து விடும் அப்பிறவிகளின் முயற்சியை காணும்போதும் சூட்டுக்கோலை மிதித்தது போல வலி மிகுகின்றது. 

கதையின் ஒரே நாயகனான அய்யங்காரின் மகன் ரங்கமணி வயதில் ஏற்படும் உந்துதலால், வேட்கையினால் பெருமாள் ஸ்டாரின் ஒவ்வொரு பெண்ணாக தேடி சேர்கின்றான்,அவன் ஆளுமைக்கு  எல்லா பெண்களுக்கும் அடி பணிந்து விடுகின்றனர்.அவனை அயோக்கியனாக புரிந்து கொண்டாலும் அவன் மேல் உள்ளூர ஆசையுடன் இருந்தாலும்,வெளிப்படையாக யாரும் அவனை நெருங்கவே விரும்புவதில்லை,ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நெருங்கி தொட்ட பின் அவனை விட்டு விலக மனம் இருப்பதில்லை.ஸ்டாரின் பெரும்பாலான பெண்கள்  ரங்கமணியால் மீனாக நீந்த தெரிந்து பின் செதிலை உதிர்த்து,சிறகு வளர்த்து வானில் பறக்க முயற்சிக்கிறார்கள்.அவர்கள் தங்களை தெரிந்து கொள்ள ரங்கமணி ஒரு கண்ணாடி,ஒரு இன்ஸ்ட்ருமென்ட்,ஒரு செக்ஸ் டூல் பெண்ணுக்கு தேவையான அல்லது தேவையென்று நாம் கருதிக்கொண்டிருக்கும் அனைத்து ஒழுக்கங்களையும் கட்டறுத்துவிட்டு  ரங்கமணி  மீது பாய்கிறார்கள் அல்லது அவனே இழுக்கிறான்.சிலர் அவனை காதலிக்கிறார்கள்,சொந்தமாகிக்கொள்ள விரும்புகிறார்கள் ஆனால் அவன் அதை ஒப்புக்கொள்வதில்லை,அவன் எல்லோரையும் நேசிப்பதாக சொல்கிறான்.நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத பல வாதங்களை ரங்கமணி முன்வைக்கிறான்,அவன் செய்யும் செயல்களுக்கு நியாயஅர்த்தம் கற்பிக்க முயல்கிறான்.கிட்டத்தட்ட எல்லா வகையிலும் அந்த பெருமாள் ஸ்டோருக்கு தனித்த ஒற்றை ஆண்மகனாய் இருக்கின்றான்.அங்கே உள்ள ஆண்களெல்லாம் பெண்களை அறினை போல் நடத்த,அவர்களை முழுதாக புரிந்தவனாக ,அவர்களுக்கு தேவையானவற்றை செய்பவனாக ரங்கமணி இருகின்றான்.

வயிற்றுப்பசியும், உடற்பசியும் மட்டுமே உலகின் பிரதானங்கள்.அவைதான் இவ்வுலகை இயக்கும்,ஓடவைத்துக்கொண்டிருக்கும் எரிபொருள் (Driving Fuel).அதற்க்கு எவ்வித பாகுபாடும்,ஒழுக்கமும் இருப்பதில்லை.அதற்க்கு எந்த எல்லையும் ,தடையும் போடமுடியாது .ஒரு முறை பசித்த பின்,ருசித்த பின் திரும்ப திரும்ப அதை நோக்கியே நாம்  நகர்ந்துகொண்டிருப்போம், மறுப்பதற்கில்லை.பசியை அணைக்கவே முடியாது,போடப்போட நெருப்பை போல அது கேட்டுக்கொண்டே இருக்கும்,எதை போட்டு நெருப்பை அணைக்க?நெருப்பு தான்  எல்லாவற்றையும் எரித்துக்கொண்டு  பரவிக்கொண்டே இருக்கவல்லது.நாவல் முழுக்க முழுக்க இந்த அணையாப்பசியை பற்றி மட்டுமே பேசுகிறது.

ஆண்களால் படைக்கப்பட்ட உலகம் இது -இங்கே காய்ந்த வயிற்றுடன், போர்வைக்கடியில்,கடலை புரட்டும் சாராய நாற்றத்தில்,வியர்வை கசகசப்பில் கூடும் பாவப்பட்ட பெண்கள் , இருட்டு மூலையில்,புகை அடுப்பில் வெந்து வாடும் திக்கற்ற பெண் ஜென்மங்கள் பற்றிய கதையாக  எனக்கு தோன்றுகின்றது.பொதுவாக காமம் என்பதை  மையப்படுத்தி  ஏதாவது சொன்னால் அதிலிருக்கும் "கில்மா" தனங்கள்,துள்ளல்கள்   ஏதுமில்லாத அல்லது அப்படி எதுவும் தோன்றச்செய்யாத நாவல் .ஆங்கிலத்திலோ,பிரெஞ்சிலோ எழுதப்பட்டிருந்தால் இது தொட்டிருக்கும் இடமும்,அடைந்திருக்கும் பேரும் வேறாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. 

நிறைய எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை வைத்து மெஸ்மரைஸ் செய்பவர்கள்,அவர்கள் எதை பற்றி எழுதினாலும்,அவர்கள் எடுத்துக்கொண்ட மையம் எதுவாக இருந்தாலும் சரி ஒரு அழகும்,வார்தைக்கவர்ச்சியும் இருக்கும்.அவர்கள் பெரும்பாலும் எல்லோராலும் விரும்பி படிக்கப்படுவார்கள்.தஞ்சை பிரகாஷ் இதிலிருந்து  முற்றிலும் வேறுபடுகின்றார்-யாரும் பார்க்கவிரும்பாத விஷயங்களை செருப்படியாய் படிப்பவர்கள் மீது இறக்குகின்றார்.கிளர்ச்சியான எழுத்தாக இல்லாமல் அம்மணமான உண்மையை சொல்கின்றார்.

ஒப்புக்கொண்டே ஆகவேண்டிய ஆனால் ஒப்புக்கொள்ள முடியாத (அல்லது) திராணி இல்லாத மனிதர்கள் இவர்கள் எழுத்துக்களை குப்பை என ஒதுக்கிபோகவும் கூடும்.அந்த அசுத்தத்தன்மையும்,உரித்துக்காட்டும் நேர்மையும்,எந்த ஒரு கோட்பாட்டிலும் அடங்காமல்,பெரிதாக இது சரி-இது தவறென்று ஆராய முற்படாமல்,எந்த தீர்வுக்கும் வராமல் இருக்கிறது "மீனின் சிறகுகள்".அது தான் நாவலின் வெற்றி என்று கூட நினைகிறேன்.
புத்தகத்திலிருந்து சில வரிகள்,  

".....ஒவ்வொரு நாளுமா என்னத்தயார் பண்ணி துரையாண்ட அலங்காரமா அனுப்புவா!ராத்திரி சாப்பிட எனக்கு பட்டை சாதம் கூட கிடைக்காது.ஆனா படுத்துக்கணும்! ஆம்படயாங்கிட்ட போகணும்."

"வீட்டுக்கு வீடு ஏராளமான குழந்தைகள்!ஏராளமான வயிறு!வாய் !உடம்பு!மனசுன்னு ஒண்ணுமே இல்லை!"

"என்னோட பயமே அதுதான் ரங்கமணி மாமா,நேக்கு எவன் கிட்ட இருந்தும் தப்பிக்க முடியாதுன்னு தோன்றது ........பொம்மனாட்டிகள் ஜாக்கிரதையா  இருக்கனும்பா!முடியல்லியே!.....பொம்மனாட்டிகள் இப்படியிருக்கத்லெதான்  சந்தோஷப்பட்றான்னு தோன்றது!"

"பசி தான் மூலம் ,பசி தான் உற்சாகம்,பசியிருந்தால் தான் படைப்பு ,பசி தன் கல்வி..காமம் தான் மனுஷ்யன் ,பசி தான் மனுஷ்யனை எழுப்பும்  கனல் ...பசி உந்துதல் ,காமம் கடத்தல்."ரங்கமணி.

பின் குறிப்பு:காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவலில் ஏகப்பட்ட பிழைகள்.எரிச்சலை தரும் ஆண் பால் பெண் பால் மாற்றங்கள்,பத்தி சேராமை ,வார்த்தை பிழைகள்.வேறு ஏதாவது பதிப்பகம் வெளியிட்டுள்ளதா என்று தெரியவில்லை.

தஞ்சை பிரகாஷ்


அன்புடன் 
நான்.

2 Responses so far.

  1. ம்ம் அருமையான விமர்சனம் அன்பரே

  2. Ibrahim A says:

    நன்றி பிரேம் குமார்

- Copyright © துளி கடல் -