* காலையில்,ஆபீசில் நுழைந்தவுடன் எதிரில் தென்படும் எல்லாருக்கும் புன்னகையுடன்,ஒரு சலாம் போட்டு விடுங்கள்,நீங்கள் பிரெஷ் ஆக இருப்பதாகவும்,இன்று அநியாத்திற்கு வேலை செய்ய போவதை போலவும் ஒரு மாயையை உருவாக்குங்கள்.

* உங்களுக்கு கீழ் வேலை செய்யும் ஜூனியர் எவனாவது தென் பட்டால் "நேற்று அதை சொன்னனே,இதை சொன்னனே...முடிச்சியா? என்று அவன் வயிற்றில் புளியை கரையுங்கள்.நீங்கள் ரொம்ப "ஸ்ட்ரிட்" என்றும் சின்சியர் என்றும் நம்பி விடுவார்கள்.

* உங்கள் மேஜை கன்னா பின்னவென்று பேப்பர்கள்,குப்பைகளால் நிரம்பி வழிய வேண்டும்,அதனால் இரு ஆதாயம் உண்டு 
1.பாவம்!அதை சீர்படுத்தக்கூட உங்களுக்கு நேரமில்லை என்று மற்றவர்களை நினைக்க வைப்பது.
2."இவன் பெரிய அறிவாளி...ஏதோ புதுசா பண்றான்" னு அனைவரையும் நடுங்க செய்வது.

* மானேஜரோ அல்லது மேலதிகாரி யாரவது கூப்பிட்டால்,(ஏன் அலுவலகம் தீ பற்றிக்கொண்டால் கூட)  உடனே எழுந்து போய் விடக்கூடாது ,போனால் நீங்கள் வெட்டியாக தான் உட்கார்ந்து கொண்டிருகிறீர்கள் என்று அரை நொடியில் கண்டு பிடித்துவிடுவார்கள்.
அதே போல் உங்க டேபிள் போன் அடித்தாலும் உடனே எடுத்து விடக்கூடாது....சில நொடிகள் கழித்து எடுத்து .."சாரி....ஐ வாஸ் பிஸி" என்று ஆரம்பிக்க வேண்டும் . (நீங்க அப்போது பேப்பரை சுருட்டி காது குடைந்து கொண்டிருந்தாலும் சரியே!).

* உங்கள் இருப்பிடத்தில் கண்டிப்பாக உங்கள் மனைவி,குழந்தைகளை கட்டியணைத்தபடி ஒரு ப்ரேமிட்ட போட்டோ அவசியம் குறிப்பாக  உங்கள் மேனேஜர் பெண்ணாக இருந்தால் நெக்குருகி(அப்படி என்றால்?) போவார்,உங்கள் மீது பெருமதிப்பு கூட வாய்ப்புள்ளது.(மனைவியின் மூஞ்சை பார்ப்பதிலிருந்து தப்பிக்கவே நீங்கள் லீவ் போடாமல் அலுவலகம் வருகிறீர்கள் என்பது யாருக்கு தெரியப்போகின்றது?).

* பக்கத்துக்கு இருக்கைகளில் யாராவது தங்கள் சொந்த விஷயங்களை பிறருடனோ,அல்லது போனிலோ பேசிக்கொண்டிருந்தால் அதை சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு ஒட்டுக்கேளுங்கள் தவறில்லை (பின்ன எப்படி தான் நேரத்தை கடத்துவதாம்!) ஆனால் ஆர்வக்கோளாரில் அவர்களிடம் அதை பற்றி பேசிவிடாதீர்கள்.

* அடிக்கடி சத்தமாக சிரியுங்கள் (நீங்கள் தூங்கவில்லை என்பதை காட்டிக்கொள்வதற்காக) அல்லது சத்தமாக சில ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளை பிரயோகியுங்கள் (உதாரணம்:sh**,f**k) ,டேபிளை,கீ போர்டை குத்துங்கள்.நீங்கள் படு சின்சியராக,டென்ஷனாக ஏதோ ஒன்றை நோண்டிக் கொண்டிருப்பதாக எல்லோரும் நினைக்க இதை விட வேறு சிறந்த ஆயுதமில்லை.

* எவனாவது சந்தேகம் என்று கேட்டு உங்களிடம் வந்து மாட்டிக்கொண்டால் அவனை தனியறைக்கு அழைத்து போய் "ஏன்டா இவனிடம் வந்தோம் என்று" எண்ணாத அளவிற்கு உங்கள் திறமை முழுவதும் அவனிடம் காட்டுங்கள்.(எப்படி இருந்தாலும் இனி ஒரு முறை எதற்காகவும் உங்களிடம் அவன் வரப்போவதில்லை).
அதே போல் அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்து விடாதீர்கள்.பின்னால்  உங்களுக்கே அவன் கற்பிக்கும் அபாயம் உண்டு,உங்களை மதிக்காமலும் போகலாம்.

* மீட்டிங் என்று கூடிவிட்டால் சில பேப்பர்கள்,காபி சகிதம் அங்கே போய் உட்கார்ந்து விடுங்கள் ,அங்கே நடப்பவை உங்களுக்கு புரியவில்லை  என்றாலும் நடு நடுவே "எஸ்..எஸ்..எஸ்" என்று தலையாட்டுங்கள். யாராவது  உங்களிடம் ஏதாவது கேட்டுவிட்டால் தூக்கத்திலிருந்து விழிப்பவரை போல் முழிகாதீர்கள்.தமிழ்நாடு போலிசை போல் "அதற்கான விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது" பாணியில் எதாவது சொல்லி வையுங்கள்.

* மேனேஜர் எப்போது சாப்பிட,டீ குடிக்க போகிறார் என்று பார்த்துக்கொண்டு அவரோடு சென்று ஒட்டிக்கொளுங்கள்.அவரை நிம்மதியாய் விடாமல் அலுவலக வேலையே பற்றி பேசுங்கள்.ஏதாவது அறிவாளி ஜூனியர் உங்களிடம் சொன்ன ஐடியாக்களை அவரிடம் சொல்லி ஆச்சர்யப்படுத்துங்கள்.

* நீங்கள் எப்போதுமே பேஸ்புக்,ஜிமெயில்,யாஹூ போன்ற தளங்களையே பார்த்துக்கொண்டிருப்பதால் அதற்காகவே சம்பளம் தருகிறார்கள் என்ற எண்ணம் உங்கள் ரத்தத்தில் ஊறிப்போயிருக்கும்.எனவே மறக்காமல் உங்கள் வேலை சம்பத்தப்பட்ட ஏதோ ஒன்றை திறந்து ஒரு ஓரமாக திறந்து வையுங்கள்.

* வீட்டிலிருந்து போன் வந்தால் எடுத்து "நான் ரொம்ப பிஸி ..அப்புறம் பண்றேன்"  என்று சத்தமாக சீன் போட்டு (மனைவியிடம் இதை செய்தல் கூடாது,வீட்டிற்க்கு போனால் "அப்படி என்ன வெட்ற வேலை?" என்று மண்டை வீங்க வாய்ப்புள்ளது) போனை கட் செய்யுங்கள்.(அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பழைய தோழி/தோழனிடம் சாட் செய்து கொண்டிருந்தாலும் சரி).

பின் குறிப்பு:மனேஜருடன்,வருடக்கடைசியில் உங்கள் performance மற்றும் சம்பள உயர்வு சம்பந்தமான பேச்சு வார்த்தையில்,மேலே சொன்ன எல்லா கயவாளித்தனத்தையும் அறிந்து வைத்திருப்பார்.ஜாக்கிரதை!

அன்புடன்
நான்.

3 Responses so far.

 1. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

 2. நீங்கள் சொல்லியிருப்பதையெல்லாம் பின்பற்றினால் சீக்கிரமே முன்னுக்கு வந்திரலாம் போலிருக்கே... ஹி ஹி...

 3. Ibrahim A says:

  வரலாம்...ஆனா முன்னுக்கு வர முடியாது! :-)

- Copyright © துளி கடல் -