The Way Back (2010):4000 மைல் பயணமும்,வாழ்வின் மீதான ஆசையும்
அரசியல் எதிரிகள் அடைக்கப்படும் சைபீரிய-ரஷ்ய  சிறையிலிருந்து தப்பித்து,நாலாயிரம் மைல் நடந்தே இந்தியாவிற்கு வரும் ஒரு கூட்டத்தின் கதை.4000 மைல் நடந்தே கடந்தார்கள் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும் ஏனென்றால் இது உண்மையை தழுவி எடுக்கப்பட்ட கதை!

ரஷ்யாவில் இரண்டாம் உலக போருக்கு முன்பு ,விளாதிமிர் லெனின் மறைவுக்கு பின்பு,ஸ்டாலின் புரட்சிகரமான பல மாற்றங்களை அங்கே கொண்டு வந்தார் அதில் மிக முக்கியமானவை - உற்பத்தி முதலீடு சம்பந்தமான அணைத்து நடவடிக்கைகளையும் அரசே நடத்துவது,ஐந்து வருட திட்டங்கள், தொழில்மயமாக்கல்,தனி நபர் நிலங்களை,உழைப்பை அரசுடமயமாக்கல், சீர்திருத்த சிறைச்சாலை கூடங்கள். இப்படிப்பட்ட  சிறைச்சாலைகள் 1930 முதல் ரஷ்யா முழுவதும்  குலாக் எனப்படும் அமைப்பால் நடத்தப்பட்டது.இங்கே சிறு தவறு செய்தவர்கள், போர்க்குற்றவாளிகள்,தேசத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள், உளவாளிகள் கைதிகளாக அடைக்கப்பட்டு,அவர்கள் மரங்களை வெட்டுவதும் ,நிலக்கரி அள்ளுவதுமான கூலிதொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.1930 முதல் 1960 வரை இருந்த குலாக் சிறைகளில் பல லட்சக்கணக்கான கைதிகள் உணவு தட்டுப்பாடு,சுகாதாரம்,விஷப்பனி போன்ற காரணங்களால் இறந்திருகின்றனர்.

அப்படி ஒரு சிறையில் அடைக்கப்படும் போலாந்து உளவாளி யானுஸ் (Jim Sturgess) ,ரஷ்யாவை சேர்ந்த வால்கா (Colin Farrell) -லோக்கல் குற்றவாளி,இந்த கூட்டத்தில் கொஞ்சம் முரடன் இவன் மட்டுமே,அமெரிக்காவை சேர்ந்த ஸ்மித் (ed harris) ,போலாந்தை சேர்ந்த தோமஸ்-அவர் ஒரு ஓவியர்+சமையல் தெரிந்தவர்,லாத்வியாவை சேர்ந்த மதகுரு வோஸ்,ஜோரான் என்னும் கணக்கன் மற்றும் கஜிக்  அரை குருடன் இவர்கள் அங்கிருந்து தப்பிக்கின்றனர்.அங்கிருந்து தப்பியவர்களை ரஷிய ராணுவம் பெரிதாக தேடித்திரிவதில்லை ஏனென்றால் பல ஆயிரக்கணக்கான மைல்கள் சுற்றிலும் ஊசி இலை  காடுகள்,பனி சூழ்ந்த மலைகள்,பனி புயல்,அதில் மீண்டு யாரும் தப்பித்து விட முடியாது என்பதால்.     (கூடுதல் தகவல்-இன்றைய தேதியில் உலக காடுகளின் மொத்தத்தில் 25% சைபீரியாவை சேர்ந்தது.அப்படியென்றால் அதன் பரப்பளவை கணக்கிட்டு கொள்ளுங்கள்.அமெரிக்க கண்டத்தை விட பெரியது!).

தப்பித்த சில நாட்களிலேயே கஜிக் வழிதவறி போய் பனியால் உறைந்து இறக்கிறான்.யானூசின் யோசனைப்படி அவர்கள் பைகால் ஏரி வழியாக மங்கோலியாவிற்கு செல்ல தெற்கு திசையை நோக்கி நடக்க தொடங்குகின்றனர்.கொடுமையான பனிப்பொழிவும்,உணவு தட்டுப்பாடும் அவர்களை மிகுந்த அவலத்திற்கு தள்ளுகின்றது.அவர்களுக்கிடையே சின்ன சின்ன பிரச்சனைகள் நடகின்றது,ஆனாலும் அவர்கள் விடுதலையை நோக்கி நடக்கின்றனர்.

பல மாதங்கள் நடந்த பிறகு அவர்களுடன்  ஐரீனா (Saoirse Ronan) என்னும் சிறு பெண்ணும் ருஷ்ய அரசால் பாதிக்கப் பட்டவள்  என்று (பொய்)சொல்லி சேர்ந்து கொள்கிறாள்.முதலில் அவளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அந்த கூட்டம் பின் அவளோடு பழகத்துவங்குகின்றது. அவள் எல்லாருடனும் பேசுகின்றாள்,நட்பாகின்றாள்.அதுவரை ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ளாமல் இருந்த அவர்களது பின்புலத்தை,குடும்பத்தை பற்றி  ஐரீனா  தெரிந்து கொள்கிறாள்,அனைவரிடமும் அதை பகிர்கிறாள்.நொடித்து சாய்ந்த அவர்கள் வாழ்கையில் அவள் மீது அன்பு மலர்கின்றது.

பைகால் ஏரியை கடந்து மங்கோலியாவிற்கு செல்ல முற்படுகையில் வால்கா தான் அவன் நாட்டிலேயே இருக்க விரும்புவதாக கூறி விடை பெறுகின்றான். பின் முடிவில்லாத நீண்ட வறண்ட பிரதேசத்தில்,பாலைவனத்தில் நடக்கத்தொடங்குகின்றனர்.செத்து கிடக்கும் மானோ,விஷப்பாம்போ,குடிக்க கிடைக்கும் சேற்று நீரோ அதை அனைவரும் பகிர்ந்தே உண்கின்றனர். பொதுவாக இது போன்ற படங்களில் யாராவது யாரையாவது கொல்வார்கள் உணவுக்காகவோ,அல்லது வெறுப்பினாலோ அப்படியெல்லாம் எதுவும் நடப்பதில்லை.

ஒரு கட்டத்தில் ஐரீனா பாலைவனத்தின் வெப்பம் தாங்க மாட்டாமல் sun-stroke வந்து,கால்கள் வீங்கிச்சாகின்றாள்.பின் ஓவியர் தாமசும் சாக,மீதி இருக்கும் நால்வரும் இறுதியாக சைனா-பெருஞ்சுவர் வழியாக திபெத் வந்து பின் அங்கிருந்து யனூஸ்,வோஸ்,ஜோரான் மட்டும் இந்தியா வந்து சேர்கின்றனர். ஆராம்பம் முதலே கதையின் நாயகனான யானூஸ் தப்பித்து,பின் போலாந்துக்கு செல்வதையே அவன் நினைத்து வருகின்றான்.அவனே அந்த கூட்டத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து வழி நடத்துகின்றான்.தன்னால் முடியாது என்று ஒதுங்கி,சாவை அணைக்க விரும்பும் ஸ்மித்திற்கு ஊக்கமளித்து நடக்க வைக்கிறான்.நாலாயிரம் மைல் நடந்த போதும்,சாவை பல தடவை தொட்டு மீண்ட போதும்,வாழ்கையின் மீதான பற்று அவனுக்கு குறையவே இல்லை,ஒரு காட்சியில் "நீ அவ்வளவு தூரம் நடந்து போய் உயிர் பிழைத்தால் என்னை செய்வாய்" என்று கேட்க "மீண்டும் நடக்கவே தொடங்குவேன்" என்கிறான்.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 1945-1948களில் போலாந்து மீது ரஷ்யா கம்யுனிசமை திணித்தது.பின் 1980களில் போலாந்தில் துவங்கிய புரட்சியால் 1989ல் போலாந்து கம்யுனிசத்திலிருந்து விடுபட்டு சுத்திர நாடானது.அதன் பின் வயதான யனூஸ் அவன் மனைவியை போலாந்தில் சென்று சந்திப்பதுடன் படம் முடிகின்றது.

படத்தில் சிறு குறைகள் இருக்கத்தான் செய்கின்றது,முதலில் அவர்கள் போடும் திட்டமும்,அதன் பின் தப்பிப்பதும் சரியாக இல்லை "எப்படியோ தப்பிக்கிறார்கள்" என்று வைத்துக்கொள்ளலாம்.அவர்கள் நடந்து கடக்கும் ஊர்களை,காலத்தை சரியாக காட்டாமல் இருப்பது,அதில் தெளிவு இல்லை(எடிட்டிங்?).மேலும் யாருடைய பின்னணியையும் அழுத்தமாக நமக்கு தெரிவிப்பதில்லை, தெரிவித்திருந்தால் அந்த பாத்திரங்கள் நம் மனதில் நின்றிருப்பார்கள்.உணவின்றி,நீரின்றி சாகும் நிலைக்கு தள்ளப்படும் அவர்களின் சிக்கல்,வலி உணர்ச்சி பூர்வமாக நமக்கு கடத்தப்படவில்லை.

எப்படியானாலும்......உயிரோடிருக்க நடத்தும் போராட்டங்களையும் வலிகளையும்,உயிரின் மகத்துவத்தயும் காட்டும் சர்வைவல் வகை படங்கள் நமக்கு அலுப்பதில்லை,எப்போதும்.


                                                              The Way Back (2010)-Trailer

அன்புடன் 
நான்

3 Responses so far.

  1. Preferred to watch it only for colin farrel and saiorse ronan... Not bad kind of movie...

  2. Ibrahim A says:

    Thanks for visiting shareef.

- Copyright © துளி கடல் -