அத்தியாயம் 2
உன் அழகு படுத்தும் பாடு

சமையலறையில்....
அடுப்பிற்க்கும்
பெருங்காய டப்பாவிர்க்கும்
அம்மிக்குழவிக்குமாக
நீ நடந்து கொண்டிருந்தபோது
உன் பின்னேயே
குதித்தோடிக்கொண்டிருந்தது
என் கண் பந்துகள்.

"ஒன்னு சொல்லணும் இங்கே வா" என்ற போது...முந்தானையில் கைத்துடைத்துக்கொண்டு  பக்கத்தில் வந்தாய்.
கசங்கிய ஆடை,காதோரத்தில் வியர்வை ஈரத்தில் நனைந்த பூனை மயிர்...
என்னத்தை சொல்ல நான்!சொல்லித்தான்  ஆகணும்!
"சுஜாதா யார்னு தெரியுமா?"...யாரந்த பிகர்னு கேட்ராத...நானே சொல்றேன்..தமிழ்ல ஒரு பெரிய ரைட்டர்..நிறைய நாவல் எழுதி இருக்கிறார்...நிறைய பேர்க்கு இன்ஸ்பிரேஷேன்...நிறைய படங்களுக்கு வசனம் எழுதிகிட்டு இருக்கார்.
"அதென்னவோ யாரோ,எனக்கு தெரியாது".
சரி விடு,உனக்கு அதெல்லாம் தெரிஞ்சாதான் ஆச்சரியம்.......அவரோட "ஸ்ரீரங்கத்து தேவதைகள்"ல ஒரு வரி வரும்,எனக்கு ரொம்ப புடிச்ச வரி "தான் அழகாக இருக்கிறோம் என்ற இருமாப்போ,ஏன் பிரஞ்கையோ கூட  இல்லாமல் சில பெண்கள் தான் இருப்பார்கள்,இப்படி பட்ட பெண்களெல்லாம் அபூர்வமாக தான் பிறப்பார்கள்" அப்படின்னு......உன்னை எந்த கோலத்தில் பார்த்தாலும் எனக்கு தோன்றுவது அதுதான்...அப்படி ரொம்ப அபூர்வமா பிறந்தவள் நீ.
"பொய் சொல்ற நீ"
"இல்லை பொய் சொல்லவில்லை..ஒரு வகையில் எல்லா பெண்களும் அழகு தான்.....தலை வாரி,நகை போட்டு,பட்டு புடவை கட்டி,பௌடரும்,மேக்-அப்பும் போட்டு வந்தால் எல்லா பெண்களும் அழகுதான்.நீ அப்படி இல்லை.நீ அவர்களை விட்டு ரொம்ப தூரம் இருக்கிறாய்.

ஒற்றை செயினிலும்,
கற்றை  மல்லிகை பூவிலும்,
கசங்கிய காட்டன் சேலையிலும்
நீ பேரழகியாக தெரியும் விந்தையை-என்னால்
புரிந்துகொள்ளவே முடியவில்லை.

"உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்படிப்பட்ட....."
"ம்?"

"நீ கிடைக்க,
இப்படி உன் அழகை பார்த்துப்பார்த்தே பருக
எத்தனை,எத்தனை ஆண்டுகள் 
முகத்தில் இருந்து தரை வரை தாடி வளர,
செல்கள் எனை மூடி புற்று வைக்க
தவம் செய்தேனோ தெரியாது."

"ஹு..ஹும்...என்ன இன்னைக்கு இஞ்சினியர் சார் ரொம்ப புகழறார்?"
"நிஜமாதான் சொல்றேன்....உன்னுடைய ஒவ்வொரு அசைவிலும்,செய்கையிலும் அழகு ஒளிந்துள்ளது"
"ஹு..ஹும்"
"ஒரு நாள் வரும் இப்படி எட்ட நின்றே பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன் அப்போது.என் புஜங்களின் வலிமையை,உன் தோள்கள் அதை தாங்குவதிலிருந்து தெரிந்து கொள்வாய்.."
 "ஹு..ஹும்...போதும்" +கொள்ளை கொள்ளையாய் வெக்கம்+வெக்கச்சிரிப்பு.
"இப்போது உன்னை பார்கின்ற ஒவ்வொரு கணமும் கொஞ்சம் மிருகமாக ஆகின்றேன்.....நம்மிடம் இருக்கும் இந்த வலுவான காதல் தான் என்னை மனிதனாக்குகின்றது.
"ஹு..ஹும்".

உன் அழகிற்கும்,மலையுச்சிக்கும் ஒரு ஒற்றுமயுண்டு
என்ன தெரியுமா?
விழுந்து விடுவேன் என்ற பயம் இல்லை,
குதித்து விடுவேன் என்ற பயம் தான்!
உனக்கே தெரியாது,
உன் அழகு என்னை
என்ன பாடுபடுத்தும் என்று.

"ஹு..ஹும்"
"அப்படி தெரிந்திருந்தால்,இவ்ளோ பக்கத்தில வந்து உட்காருவாயா.... என்னை சோதிப்பது போல்?"
"ஹு..ஹும்"
கொட்ட கொட்ட கண்ணை சிமிட்டிகிட்டு,நான் சொல்றதை கேட்பது போல் என்னையே உத்து உத்து பார்த்து கொண்டிருப்பியா?
"ஹு..ஹும்"
"நான் சொல்றதை நீ கேக்கறது கொஞ்சம் தான்..என்னை ரசிக்கிறது தான் அதிகம்...இல்லையா ? இதை, நடு நடுவே என் பேச்சுக்கு  சம்பந்தமே  இல்லாமல்  இதழோரமா லேசாய் சிரிப்பதிலிருந்தும்,பின் சிரிப்பை அடக்கிக்கொள்வதிலிருந்தும் தெரிந்து கொள்வேன்"
"ஹு..ஹும்"

"இதற்குமொரு "ஹுஹுமா?"

"ஹுஹும்" என்பது....
ஒற்றை வார்த்தையில்
நீ பேசும் கவிதை,

ஒற்றை வார்த்தையில்
என் உலகத்தை அடக்கிவிடும்  
குழந்தை மொழி,

ஒற்றை வார்த்தையில்
உன்னிடமிருந்து என்னிடம்
காதலை கடத்தும் பாலம்.

உலகத்தின் எல்லா "ஹுஹும்" மிலிருந்து
வேறுபட்டது உன்னது.

செல்லக்கோபத்தில் வரும் அழுத்தமான ஹுஹும்.
பேச முடியா மோனத்தில்
அடித்தொண்டையில் இருந்து காய்ச்சலோடு வரும் ஹுஹும்.
நான் நீள..நீளமாக பேசிக்கொண்டிருக்கையில்,
நடு நடுவே ஆமோதிப்போடு வரும்
அழுத்தமான "ஹு..ஹும்".
இப்போது போல்-உன் அழகை பேசுகையில்
கண்கள் ஒளிர, 
வெக்கத்தோடு வரும் "ஹுஹும்".

"எங்க இன்னொரு தடவை சொல்லு?"
"ஹு..ஹும்...சொல்ல மாட்டேன்...கிச்சன்ல வேலை இருக்கு" என்று எழுந்து ஓடினாய்.
வேறெதிலும் கவனமில்லாமல் உன் பின்னே நானும் வந்து ,உன் வியர்வை வாசனையை சுவைத்தபடி நின்றேன்.
"என்னவாம்?" என்றாய் வாணலியில் கிண்டிக்கொண்டே.
பேச்சற்று நின்று கொண்டிருதேன் நான்.
குறுகுறுப்பிலோ,என் நீண்ட மௌனத்தாலோ என்னவோ,சட்டென்று திரும்பினாய் என்,கண்களுக்குள் பார்த்தாய்.பேசிக்கொண்டே இருப்பாய்

நடுவே நிறுத்தி பேசாமல் ஆகுவாய்.
இடைப்பட்ட மௌனம்....
நொடிகளுக்குள் நிமிஷங்கள்.
நாளின் நீளமான நேரமது.
என்னால் கடக்க முடியா தூரமது.
மனமெங்கும் 
என்ன செய்வானோ என்ற திகில்
ஏதேனும் செய்வானோ என்ற எதிர்பார்ப்பு...
யப்பா!

"ம்" நங்கூரம் போட்ட பார்வையை உன் மீதிருந்து எடுக்கவில்லை.
பௌர்ணமி கடலை போல் கொந்தளிக்கும் என் மனதை கண்டு கொண்டாயோ என்னவோ,
"போ!வேலை இருக்கு" என்று என்னை தள்ளிவிட்டு,உன்னை உன்னிடத்தில் இருந்து காத்துக்கொண்டாய்.
"ஒன்னே ஒன்னு சொல்லிட்டு போயிடறேன்..."
"என்ன?"
"அழகுன்னா என்ன தெரியுமா?"
ஒரு மனிதப்பிறவிக்கு உடம்பில் உள்ள ஒவ்வொரு அம்சமும் சரியான விகிதத்தில் சேர்ந்திருப்பது-அது எப்படிப்பட்ட அளவென்றால் அந்த விகிதத்தில் ஒரு துளியளவும் கூட்டவோ, குறைக்கவோ, மாற்றவோ தேவையே இல்லை.
அது தான் நீ.....பேரழகி!"
"ஹு..ஹும்"

அன்புடன்
நான்.

- Copyright © துளி கடல் -