நம்ம யூத்து- ஒரு எதிர் வினை

பொதுவாக நான் எந்த எழுத்தாளருக்கும் கடிதம் எழுத விரும்புவதில்லை. எழுத்தாளனுக்கும்,வாசகனுக்குமான தொடர்பு அவன் வாசிக்கும் புத்தகத்தின் வரிகள் மட்டுமே என்பது எனது திண்ணம்.ஒரு எழுத்தாளனும் சுயமும்,அவன் பேப்பரில் படைக்கும்  கதாபத்திரங்களும் நேரெதிராக இருக்க நேரிடலாம் (இருக்கும்).அவன் எழுத்துக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.

உதாரணமாக ஊரில்  யாரும் நெருங்கவே பயப்படும் முரட்டு ஆசாமி ஒரு நாள் பேசியபோது "அடி ஆத்தி,ஏன் ஓட்ரீஹ" என்றானாம் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு,பெண் குரலில்.இன்னொன்று சொல்ல வேண்டுமென்றால் கல்லூரி நாட்களில் எப்.எம் மில் பேசும் குறிப்பிட்ட பெண் குரலை கேட்டே பையன்கள் கன்னா பின்னாவென்று அவள் மேல் காதல் வயப்பட்டார்கள், ஒரு முறை அந்த குரலுக்கு சொந்தமான முகத்தை ஒரு மேடை விழாவில் பார்க்க நேர்ந்து,கதறிக்கொண்டு ஓடி வந்தார்கள்....சரி,இப்போ எதற்கு வெட்டிப்பேச்சு....
சொல்ல வந்தது இது தான்.ஒரு நாவலாசிரியர் மேல் கட்டிவைத்த பிம்பம் உடையாமலிருக்க அவருடன் எந்த தொடர்பும்,சந்திப்பும் வைத்துக்கொள்ளாமல்  இருப்பது நல்லது என நினைகிறேன்.

ஆனால் இதையெல்லாம் மீறி சிலருடைய frequency என்னுடையதோடு ஒத்துப்போகும்.நான் மனதிற்குள் காமா சோமா என்று நினைத்த விஷயங்களை அழகான மொழி வடிவுடன் யாராவது எழுதி இருந்தால் "சோக்கா சொன்னயா நீ" என்று தோன்றி படித்த   ருசி போவதற்குள்  பேப்பரை எடுத்து கடகடவென்று எழுதி விட்டு மனதில் எழும் மெயில் அனுப்பும் எண்ணம் மூளைக்கு போய்  "வேண்டாமே..." என்று எண்ணுவதற்குள் மெயில் அனுப்பியாகிவிடுகின்றது.(முற்றுபுள்ளி இல்லாத எவ்வளவு பெரிய பத்தி..சை)
இப்படியாக.... (ஒருவழியாக  பாயிண்டிற்கு வந்தாயிற்று)

சமீபத்தில் திரு.ஜெயமோகனின் "யூத்து" கட்டுரைக்கு எதிர் வினையாற்றி இருந்தேன் அதற்க்கு அவரின் பதில் கடிதம் அவரது வெப் சைட்டில் வெளிவந்திருந்தது.....அதன் நகல் கீழே...(இதற்கான பதிலை தற்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்)

அன்புள்ள இப்ராஹீம்
உங்கள் கருத்துக்களை முழுமையாகவே ஏற்கிறேன். ஒவ்வொருமுறை வெளியே செல்லும்போதும் நம்முடைய பிரச்சினைதான் என்ன என்ற ஆற்றாமைதான் மனதில் எழுகிறது.
சமீபத்தில் ஒரு பொதுச்சேவை தளத்தில் இயங்கும் ஒரு நண்பர் சொன்னார், தமிழகத்தில் மிகப்பெரும்பாலான கிராமங்களில் குப்பைகள் அள்ளப்பட்டு முப்பதாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது என்று. பிரமிப்பாக இருந்தது. ஆனால் யோசித்தபோது தெரிந்தது, அது உண்மை.
நம்முடைய கிராமங்களில் பாரம்பரியமாக குப்பை நீக்கம் செய்யும் அமைப்போ முறைமையோ இல்லை. அதற்கான தேவையும் இல்லை. ஏனென்றால் அன்று மட்காத குப்பை அனேகமாக இல்லை. குப்பை வேளாண் உரமாக இருந்தது.
எழுபதுகளுக்குப்பின் காகித, பிளாஸ்டிக் குப்பைகள் வர ஆரம்பித்தன. எல்லா பொருட்களும் ‘பேக்கிங்’ கில் கிடைக்க ஆரம்பித்தன. அப்படித் திரளும் பெருங்குப்பையை ஒரு கிராமத்தில் இருந்து வெளியே கொண்டு செல்ல, அவற்றை உரியமுறையில் கையாள நம்மிடமும் எந்த அமைப்பும் வழிமுறையும் இல்லை.
நமக்கு பஞ்சாயத்து அமைப்புகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் எந்தப் பஞ்சாயத்திலும் குப்பை அள்ளி முறையாகப் பிரிக்கப்பட்டு மறைவுசெய்யப்படுவதில்லை. அவற்றை சாலையில் இருந்து ஒதுக்கிப்போடுவதையே நாம் சாதாரணமாகச் செய்துகொண்டிருக்கிறோம். எந்தக் கிராமத்தில் இருந்தாவது குப்பை நீக்கம் செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஆகவே நம் கிராமங்கள் எல்லாமே இன்று மாபெரும் குப்பைமேடுகள். ஆனால் எவருக்கும் எந்தப் புகாரும் இல்லை. மக்கள் கண்களில் அவை படுவதே இல்லை. ஊரை இந்த லட்சணத்தில் வைத்திருக்கும் மக்கள் காடுகளை என்ன செய்யமாட்டார்கள்?

ஜெ

கட்டுரைக்கான லிங்க் http://www.jeyamohan.in/?p=30118

அன்புடன்
நான்

- Copyright © துளி கடல் -