Archive for October 2012

The Cabin in the Woods (2011) - ஹாலிவூட் ஹாரர் படம்

The Cabin in the Woods (2011) - நவீன ஹாரர் படம்
கல்லூரியில் படிக்கும் நான்கைந்து பையன்கள்,பெண்கள் விடுமுறை நாளை ஜாலியாக கழிக்க காட்டுக்கு நடுவில் இருக்கும் வீட்டிற்கு  செல்கிறார்கள்,அங்கே அழகான ஏரியின் அருகில் ஜோடி ஜோடியாக குளிக்கிறார்கள்,இரவில் சுற்றி அமர்ந்து பாட்டு பாடிக்கொண்டே பீர் அடிக்கிறார்கள்,அவ்வீட்டில் இருக்கும் ரகசிய கிடங்கிற்கு போய் எதைஎதையோ உருட்டுகிறார்கள்,பின்னர் காட்டுக்குள் இருந்து பேயோ, ஜாம்பியோ என்ன எழவோ வந்து ஒவ்வொருத்தராக கொல்கிறது......நிற்க! இதை தானே Evil Dead,Friday the 13th காலத்திலிருந்து ஆயிரக்கணகான ஹாலிவூட் படங்களில் பார்த்து வருகிறோம்? சாவதற்கென்றே ஒரு கூட்டம், காட்டுக்குள்  சென்று  ரொமான்ஸ்  பண்ணிகொண்டிருக்கும்  போதே வித விதமாக குத்தி,கிழித்து எறியப்படுவதை தானே பல காலமாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்...இந்தப் படத்தில் மட்டும் அப்படி என்ன புதுமை?


மேல சொன்ன கேள்விகள் தான் இயக்குனருக்கும் வந்திருக்கும் என நினைக்கிறன், "you think you know the story" என்ற Tag லைனுடன், "எங்கப்பன்  குதிருக்குள் இல்லை" என்று படத்தை தொடங்கிவிட்டார்..இதுவரை வந்த "கேபின்" படங்களிலிருந்து முற்றிலும் வித்யாசமாக படம் எடுக்க போகிறேன்  என களத்தில் இறங்கிவிட்டார்.பேய்,மிருகம்,கொலை,ரத்தம் இவைகளுடன் சேர்த்து கிராபிக்ஸ் பூவையும் நம் காதில் சரம் சரமாக சுற்றுகிறார்.மருந்துக்கு கூட லாஜிக் என்ற வஸ்து இல்லாமல் ஒரு சுமாரான ஹொரர் படம்.

கதை இதுதான்: உலகத்தை அழிக்க ஏதோ ஒரு பெரிய சைஸ் மிருகக்கடவுள் வெயிட் பண்ணிக்கொண்டிருகிறது.அந்தகடவுளை சாந்தப்படுத்த அரசாங்கம் உலகின் பல நாடுகளிலிருந்து காலங்காலமாக மனிதர்களை பலி கொடுக்கிறார்கள்,அதுவும் எப்படி? அவர்கள் பயந்து,ஓடி ஒளிந்து ,உயிருக்கு போராடி,கொடூரமாய் சாகவேண்டுமாம், அவர்களுடைய ரத்தம் தான் அந்த கடவுளை சாந்தப்படுத்துமாம்.இதனால் எல்லா நாடுகளிலும் பேய்களை பிடித்து அடைத்து,பின் அவைகளை மேற்கண்ட சிச்சுவேஷனில் வெளியே விட்டு அப்பாவிகளை கொல்வார்களாம்! இப்படி செய்யப்படும் முயற்சிகளெல்லாம் எல்லா நாடுகளிலும் தோல்வியடைந்து விட அமெரிக்காவில் இதை அதி நவீன தொழில்நுட்பத்துடன் முயல்கிறார்கள்.(ங்கொய்யால......இவனுங்களை கேட்க ஆளே இல்லையா?)


அந்த கேபினுக்குள்ளும்,அதனை சுற்றி நடப்பவைகளும் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டவை.அந்த வீட்டின் நிலவறைக்கு போகும் பையன்கள் விளையாட்டாக ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து படித்து விட, பூமியிலிருந்து  பேய்கள் எழுந்து ஒவ்வொருத்தராக கொல்ல தொடங்குகின்றது, அதிலிருந்து தப்பிக்கும் ஒரு பெண்ணும் பையனும் மட்டும் எப்படியோ இவைகளை கண்ட்ரோல் செய்யும் இடத்திற்கே சென்று விடுகின்றனர்.அவர்களால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மிருகங்கள்,பேய்கள்,ஜாம்பிகள், அனகோண்டா, மம்மிகள், வேம்பயர்கள்.... இது வரை நாம் ஹாலிவூட் ஹாரர் படங்களில் பார்த்த அத்தனை ஜந்துக்களும் வெளியே விடப்பட்டு அந்த அரசாங்க கம்பெனி ஊழியர்கள் அனைவரும் ரத்தச்சகதியில் கொல்லப்படுகின்றனர்.
இறுதியில் உலகம் அழிந்ததா?மிருகக்கடவுள்கள் சாந்தமடைந்தார்களா என்பதை தைரியமிருந்தால் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தப்படத்துக்கு IMDB யில் 7.3 ரேடிங் வேற...சை.

இந்த ட்ரெய்லரை பார்த்து தான் ஏமாந்தேன்!


பின் குறிப்பு: ஏன் ஹாலிவூட்காரங்கன்னா என்ன கொம்பா  முளைச்சிருக்கு? அவங்கள கலாய்க்க கூடாதா என்ன?

அன்புடன்
நான்.

பிடித்த நடிகர்:கேப்டன் விஜயகாந்த்

பிடித்த நடிகர்:கேப்டன் விஜயகாந்த் இது ஒரு நகைச்சுவை கட்டுரை என நீங்கள் நினைத்து படிக்கத்தொடங்கினால்,மன்னிக்கவும் இது உங்களுக்கானதல்ல.இன்று பல ஊடகங்களில் விஜயகாந்தை தாறுமாறாக கலாய்த்துக்  கொண்டிருப்பதற்கு  முற்றிலும் நேர்மாறான விமர்சனக் கட்டுரை. சிறுவயதில் ரசித்த, சுவற்றில்  கால்  வைத்து  சுற்றி அடிக்கும் முன்னாள் நடிகர் விஜயகாந்தை பற்றி எழுதி இருக்கிறேன்.

1991ல் கேப்டன் பிரபாகரன் படத்தை (ரிலீசான முதல் வாரம் என்று நினைகிறேன்) என் அப்பாவுடன் கடலூர்-வேல்முருகன் தியேட்டருக்கு   பார்க்கச்சென்றேன்.ஒரு சினிமாவிற்கு அவ்வளவு கூட்டம் வரும் என்பதை வாழ்வில் முதல் முதல் அங்கே தான் பார்த்து தெரிந்து கொண்டேன்,அந்த சின்ன தியேட்டரில் அப்படி ஓர் கூட்டம்.என் அப்பா ஒரு சண்டை பட பிரியர் என்பதால் எப்படியோ அடித்து பிடித்து டிக்கெட் வாங்கிவிட்டார்.(அவருக்கு தமிழ் சினிமா தோன்றியதிலிருந்து பிடித்த நடிகர்கள் எம்.ஜி.யார், விஜயகாந்த், அர்ஜுன், விஜய் ...வேறு யாரும் திரையில் தோன்றவே லாயக்கற்றவர்கள் என்பது அவரது கூற்று).என் சீட்டின் ஓரங்களில் இருவர், என் மடியில்  ஒருவர் அமர்ந்து கொள்ள எப்படியோ படத்தை பார்த்து முடித்தேன். ரசிகர்கள் போட்ட விசிலும்,அர்ச்சனையும்,ஆராதனையும்,கூச்சலும் படம் முடிகையில் முடிந்து விட்டது,ஆனால் படம் ரொம்ப நாள் மனதை விட்டு அகலவே இல்லை.

தமிழில் எனக்கு எப்போதுமே பிடித்த நடிகர் கமல்ஹாசன் தான் ( ஒரு தொடர் எழுதலாம் என்றிருக்கிறேன்) ,ரஜினியை பாட்ஷாவுக்கு அப்புறம் தான் பிடிக்கும் ஆகவே என் பிடித்த நடிகர் லிஸ்டின் இரண்டாம் இடத்தை எண்பதுகளின் இறுதியில் விஜயகாந்த் பிடித்துக்கொண்டார்.அப்பா வேலை செய்யும் ஊரிலிருந்து வார இறுதியில் வந்தால் எதாவது ஒரு ஜாக்கி ஜான் படத்திற்கோ அல்லது விஜயகாந்த் படத்திற்கோ சைக்கிளின் முன் கம்பியில் நிற்கவைத்து கூடிக்கொண்டு போவார்.மேலே சொன்ன இருவரின் படம் எத்தனை வாரம் ஓடினாலும்,அத்தனை  வார இறுதியிலும் அதே படம் தான் திரும்ப திரும்ப.ஆகவே எனக்கு விஜயகாந்த் மீது ஈர்ப்பு வந்ததற்கு நதி மூலம்,ரிஷிமூலம் பார்க்கத்தேவையில்லை.

இப்போதைய ஹீரோக்களுக்கு நடிக்க,அழ,காதல் செய்ய,சண்டை போட,நகைச்சுவை செய்ய வருகின்றதோ இல்லையா கண்டிப்பாக உடலை தரையில் போட்டுப்புரட்டி,உடம்பின் எல்லா பாகங்களையும் ஒரே சமயத்தில் ஆட்டி,காற்றை கர்பமாக்கும் நடன அசைவுகள் தெரிந்திருக்க வேண்டும்..."டேய் படம் எப்படி டா?....படத்தை விடு....டான்ஸ் எல்லாம் சூப்பர் மச்சி,என்னா மாறி ஆடுறான்... ..ஒரு பாட்டுல ஒரு பக்கம் மண்ணுக்குள்ள போய்...மறுபக்கம்  வெளியே வரான் பாரு......இதுக்கே படம் இருநூறு நாள் தாண்டி ஓடும்..எளுதி வச்சிக்கோ..."

ரஜினி,சத்யராஜ்,விஜயகாந்த்,கார்த்திக்,முரளி,மோகன்(இவர் வேகமாக கூட நடக்க மாட்டார்) போன்ற கமர்ஷியலாக வெற்றி பெற்ற நடிகர்கள் எந்தப்படத்திலும் பெரிதாக நடனம் ஆடியதில்லை,நடனத்திற்கு முக்கியத்துவமும் தரப்பட்டதில்லை,ஆகவே நாங்களும் அதை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதும் இல்லை.பெயர்  போடுகையில் "சண்டை காட்சி"யாரென்று மட்டும் பாப்போம்.பின்னாளில் தான் "கதாநாயகி(முக்கியமாக),  பாடலாசிரியர், இசை" போன்றவைகளையும் கவனிக்கத்தொடங்கினோம்..... கட்டுரை பாதை மாறுகிறது வேண்டாம்.... விஜயகாந்தின் சண்டை காட்சி என்றால் அப்படி பார்ப்போம்-சத்ரியன் படத்தில்  அடிப்பட்டு படுக்கையில் இருந்து எழுந்து,கன்னம் துடிக்க,கண்கள் சிவக்க உடற்பயிற்சி செய்யும் காட்சி, கேப்டன் பிரபாகரனில் ஓடும் ரயில் மேல் சண்டை செய்யும் காட்சி,புலன் விசாரணை படத்தின் இறுதியில் தலையில் நீரை சிலுப்பிக்கொண்டு சரத்குமாரோடு சண்டையிடும் காட்சி,சேதுபதி IPS படத்தில் சாக்கடைக்குள் நடக்கும் சண்டை போடுவது,ஊமை விழிகள்,செந்தூரப்பூவே....இன்னும் நிறைய படத்தின் காட்சிகள் மறக்கவே முடியாதது.

ரஜினி ரசிகர்களெல்லாம் அப்போது கமல் ரசிகர்களை ஓவராக வெறுப்பேற்றுவார்கள்,நாங்களும் கமல் ரசிகனென சத்தமாக வெளியே சொல்லவும் முடியாது ஏனெனில் தலைவர்,படத்தில் பொம்பளை விஷயத்தில் கொஞ்சம் வீக் ஆகா இருப்பார் மேலும் அவருக்கு  அப்போது பெரிதாக படங்கள் ஓடியது கிடையாது! ஆகவே நாங்க விஜயகாந்தை வைத்து ஈடு கட்டுவோம்.யாரை எப்படி அடித்தார், எத்தனை  பேரை அடித்தார்,மிஷின் கன் போன்ற அதி நவீன! துப்பாக்கி முதலிய வஸ்துக்களை எப்படி ஒரு கையால் தூக்கி சண்டை போட்டார் போன்ற விஷயங்களில் எங்களின் வாக்குவாதம் நடை பெறும். ஹீரோயின்களோடு ஓவராக அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு படுத்துபுரள்வது கிடையாது, எல்லாப்படங்களிலும் வில்லன்களை துவம்சம் பண்ணி,அநியாத்திற்கு நல்லவனாக இருப்பதால் விஜயகாந்த் எங்கள் தானை தலைவனாக ரொம்ப காலம் இருந்துவந்தார்.

பள்ளியில் நட்ராஜ் என்று ஒரு நண்பன் இருந்தான் அவனும்,அவனது அண்ணனும் வெறித்தனமான விஜயகாந்த் ரசிகர்கள்,அவர்கள் வீடு சுவர் முழுக்க விஜயகாந்த் விதவிதமான போஸ்களில் காட்சியளிப்பார்.அவர் படத்தின் முதல் நாள்,முதல் ஷோவை பார்த்துவிட்டு  எங்களுக்கு கதை சொல்வான்,நாக்கில் நீர் ஊற கேட்டுக்கொண்டிருப்போம் ,
தோளில் கை போட்டபடி விஜயகாந்துடன் நடராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாமிபடம் போல் போற்றி தன்னுடைய வேலடில் பாதுகாத்தான்.சமீபத்தில் நடராஜை முகநூலில் கண்டெடுத்தபோது எங்கேயோ வெளிநாட்டில் பைபிங் எஞ்சினியராக பெரிய உத்தியோகத்தில் இருப்பது தெரிந்தது,எதிர்பார்த்தது போல  அவன் ப்ரோபைல் படத்தில் கருப்பு கண்ணாடி போட்ட "சுதேசி" விஜயகாந்த்!

அப்புறம் பிள்ளயறிவு கரையக்கரைய விஜயகாந்த் கொஞ்சமாக அவுட் ஆப் போக்கஸில் மறைந்து விட்டார்.பின்னர் அவரும் சினிமாவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல கள்ளழகர்,பெரியண்ணா,தர்மா என்று தேய்ந்து தேய்ந்து நெறஞ்ச மனசு,சபரி,எங்கள் ஆசான் என கட்டெறும்பாகிவிட்டார்("ரமணா" மட்டும் ஒரு விதிவிலக்கு,கேப்டனின் மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாம்).சரியான படங்கள் தேர்வு,கணிப்பு இல்லாததால் படங்கள் ஊத்திக்கொள்ள,தமிழர்கள் தொன்று தொட்டு கேலி செய்து வரும் மாக் ஹீரோக்கள் (Mock Hero) லிஸ்டில் சேர்ந்து விட்டார்.முன்பொரு  காலத்தில் விஜயகாந்தின் தீவிர ரசிகர்களாக இருந்தவர்களெல்லாம் இப்போது அதை வெளியில் கூட சொல்ல மாட்டார்கள்,நீங்கள் வேண்டுமானால் கேட்டுப்பாருங்களேன்!


பொது வாழ்கை என்று பார்த்தால் 2006 தேர்தலில் ஒரு இடத்தை வென்று சட்டசபைக்கு போனது ,குடிகாரன் என்று தன்னை வர்ணித்த ஜெயலலிதாவை "நீங்கள் அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தீர்களா" என்று கலாய்த்தது,பின் அவருடனே வேண்டாவெறுப்பாக கூட்டணி வைத்து 2011 தேர்தலில்  இருபத்தி ஒன்பது  சீட்டுகள் வென்று,தமிழககட்சிகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்து விட்டது (இது பழம் பெரும் கட்சிகளாலும் தொட முடியாத உச்சம்),இன்னும் 2011 தேர்தல் பிரசாரத்தில் தன் கட்சி வேட்பாளரை அடித்தது,தொண்டர்களை திட்டியது, சமீபத்தில் சட்டசபையில் கொதித்தெழுந்து உறுமியது.அவரும் பிசியாகத்தான் இருக்கிறார்.ஆனால் அரசியல் ஏடுகளில் இதெல்லாம் கொஞ்ச நாளில் அழிந்து,மறைந்து விடும்,இன்னும் அவர் போக வேண்டிய தூரம்,அடைய வேண்டிய உச்சம் வெகுவாக இருக்கிறது.தனிப்பட்ட முறையில் அந்த கட்சியின் மீது பெரிதாக அபிமானம் ஏதும் வரமாட்டேன் என்கிறது.

போனவாரம் எதாவது தமிழ் படம் பார்க்கலாம் என்ற நினைத்து பெட்டியை திறந்து தேடியதில் சிக்கியது கேப்டனின் பிரபாகரன்.இப்போது கிம் கி டுக்,ஜில் ஜங் ஜக்  என பீலா விட்டுக்கொண்டு திரிந்தாலும்  இது போன்ற படங்களை பார்க்கும்போது:போஸ்ட் பாக்ஸ் வைத்த  அரைகால் சட்டை போட்டுக்கொண்டு,கையில் பிசுபிசுத்திருக்கும் கடலை உருண்டயுடன், அப்பாவின் சைக்கிளின் முன் கம்பியில் அவரின் தோளை சுற்றி வளைத்துக் நின்றுகொண்டு ராஜபாட்டையில் சினிமாவுக்கு போன கள்ளங்கபடமில்லா நான் நினைவுக்கு வருகிறேன்.அந்த நினைவு ரொம்ப அழகாக இருக்கிறது.மேலும் அடிக்கடி இது போல பழைய விஷயங்களை சிந்தித்து,தோண்டி எடுத்து எழுதும்போது தான் உயிரோடு இருப்பதே தெரிகின்றது.

அன்புடன்
நான்.

Julia's Eyes (2010) - ஒரு முழுமையான த்ரில்லர் திரைப்படம்

Julia's Eyes (2010) - ஒரு முழுமையான த்ரில்லர் திரைப்படம்


விமர்சனத்திற்கு போவதற்கு முன்னால்,படம் அருமையான த்ரில்லர்  என்பதற்கு ஒரு உதாரணக்காட்சியை சொல்லி விடுகிறேன்."கண்தெரியாத  நான்கைந்து பெண்கள்,குளியலறை பக்கமாக நின்று பேசி கொண்டிருகின்றனர்... அவர்கள் கவனிக்காவண்ணம்  அவர்களூடே   வந்து நிற்கும் ஜூலியா அவர்கள் பேசுவதை  ஒட்டுக் கேட்டுகொண்டிருக்கிறாள். திடீரென்று அந்த குருடிகள் தங்கள் அருகில் இன்னொரு உயிர் இருப்பதை உணர்ந்து கைகளால் துழாவி ஜூலியாவை பிடித்து விடுகின்றனர்,அதன் பின்னர் அவள் தன்னை யாரென்று அறிமுகம்  செய்து கொண்டு அவர்களுக்கு சமாதானம்  சொல்கையில்,ஒரு குருட்டுப்பெண்  கேட்கிறாள்  "சரி,இருக்கட்டும்... யாரவன்?உன்னுடன் இங்கு ஒரு ஆண் வந்திருக்கிறான்..உனக்கு பின்னே தான் நிற்கிறான்....யாரவன்?"

நிறைய த்ரில்லர் வகை படங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன  ஆனால் இப்போதெல்லாம் நிறைய படங்கள் பெரியதாக நம்மை பயமுறுத்துவதே இல்லை,ஒரு ஐம்பது திகில் படங்கள் பார்த்துவிட்டால் போதும் பின் நீங்களாகவே அடுத்தடுத்த  காட்சியை ஊகிக்கத்தொடங்கி விடுவீர்கள்.பேய்ப்பட இயக்குனர்களும் மக்களை பயமுறுத்த எவ்வளவோ முயல்கின்றனர்... ஹுஹும் ரொம்பச்சொற்பமே வெற்றிபெறுகின்றன. (ஆனால் இன்னும் "ஈவில் டெட்" போன்ற ஆதிகாலத்து பேய் படங்களை காணின், திரையில் பேயை பார்ப்பவர்களை விட அதிகமாக கத்துபவர்கள் இருக்கிறார்கள்..என் சகர்தமினி உட்பட).அந்த வகையில் நிறைய "திடுக்" காட்சிகளுடன் ,ஒரு முழுமையான   த்ரில்லர் பார்த்த அனுபவத்தை தருகின்றது....ஜுலியாஸ் ஐஸ் (Julia's Eyes) 

ஜூலியாவின் இரட்டை சகோதரி-பார்வை பறிபோன சாரா தற்கொலை செய்து கொள்ள,அதை சந்தேகிக்கும் ஜூலியா அதனை கொலை என கருதி ஆராயத்தொடங்குகின்றாள் . Degenerative eye disease என்னும் நோயால்  கொஞ்சம் கொஞ்சமாக பார்வை  இழந்து கொண்டே வரும் ஜூலியாவை கொலைகாரனும் பின் தொடர்கிறான்!இந்த தேடும் படலத்தில் ஜூலியா தன் கணவனையும் தொலைத்து விடுகிறாள். பின்னர் எப்படி அந்த கொலைகாரனை கண்டு கொள்கிறாள்,அவன் கண் தெரியாத சாராவையும், பின்னர்  ஜூலியாவையும்  துரத்தக்காரணமென்ன?இறுதியில் ஜூலியா என்ன ஆகிறாள்? என்பதை  அவ்வளவு சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்கள்.

படத்தின் முதல் காட்சியில் கண் தெரியாத சாரா கொலைகாரனிடம் பேசிக்கொண்டே தற்கொலை செய்து கொள்வதிலிருந்தே  நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள்.அதன் பின் ஜூலியா,சாரா சென்ற ஒவ்வொரு இடமாக சென்று விசாரிக்க தொடங்க,அவளை கொலைகாரனும் பின் தொடர்கிறான்.ஒரு கட்டத்தில் கண் பார்வை முற்றிலும் பறி போய், மாற்றுக்கண் பொருத்தப்பட்டு,ஆபரேஷன் செய்து கொண்டு,கண்களில் கட்டு போட்டுக்கொண்டு திரிகிறாள்....அப்போது நடக்கும் காட்சிகள் தான் உச்சக்கட்டம் (எந்தக்காட்சியையும் விவரித்து எழுதப்போவதில்லை,"கிக்"  போய்விடும்!)

படத்தில் இன்னொரு அற்புதமான விஷயமென்னவென்றால் ஜூலியவிற்கு கண் பார்வை குறைந்து கொண்டே வருவதனால் அவள் பார்வை  வழியே  தெரியும் காட்சிகள் எல்லாம் நமக்கும் மங்கலாக,கலங்கலாகவே தெரியும். எனவே ஜூலியா பார்க்க முடியாமல் தடுமாறும் இடங்களில் நாமும் தடுமாறுவோம்.ஒரு கட்டத்தில் ஜூலியாவிற்கு ஆபரேஷன் செய்து கண்களில் கட்டு போட்ட பின்பு அவளால் யார் முகத்தையும் பார்க்க முடியாததால் நமக்கும் யார் முகத்தையும் காட்ட மாட்டார்கள். கொலைகாரனை யூகிக்க முடிந்தாலும் அவன் முகத்தை நாம் பார்க்க முடியாது.

The orphanage படத்தில் நடித்த (வயதான) Belén Rueda தான் நாயகி.கண் தெரியாமல் தடுமாறும் காட்சிகளில்,பின்னர் கொலைகாரனிடம் சிக்கித் தவிக்கையில் நன்றாகவே நடித்திருப்பார்,நல்ல தேர்வு!
குறையென்று சொல்லப்போனால்-கொலைக்கான காரணம் லேசாக உதைக்கிறது,இறுதிக்காட்சிகளில் கொஞ்சமே கொஞ்சம் தொய்வு ஏற்படுகின்றது.ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியே ஏற்படுகின்றது.தவற விடாமல் நிச்சயம் பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்டில் இதனை சேர்த்துக்கொள்ளலாம்.

 படத்தின் ட்ரைலரை காண


அன்புடன்
நான்.

அளவிலாக் காதல்:உன் அழகு படுத்தும் பாடு
அத்தியாயம் 2
உன் அழகு படுத்தும் பாடு

சமையலறையில்....
அடுப்பிற்க்கும்
பெருங்காய டப்பாவிர்க்கும்
அம்மிக்குழவிக்குமாக
நீ நடந்து கொண்டிருந்தபோது
உன் பின்னேயே
குதித்தோடிக்கொண்டிருந்தது
என் கண் பந்துகள்.

"ஒன்னு சொல்லணும் இங்கே வா" என்ற போது...முந்தானையில் கைத்துடைத்துக்கொண்டு  பக்கத்தில் வந்தாய்.
கசங்கிய ஆடை,காதோரத்தில் வியர்வை ஈரத்தில் நனைந்த பூனை மயிர்...
என்னத்தை சொல்ல நான்!சொல்லித்தான்  ஆகணும்!
"சுஜாதா யார்னு தெரியுமா?"...யாரந்த பிகர்னு கேட்ராத...நானே சொல்றேன்..தமிழ்ல ஒரு பெரிய ரைட்டர்..நிறைய நாவல் எழுதி இருக்கிறார்...நிறைய பேர்க்கு இன்ஸ்பிரேஷேன்...நிறைய படங்களுக்கு வசனம் எழுதிகிட்டு இருக்கார்.
"அதென்னவோ யாரோ,எனக்கு தெரியாது".
சரி விடு,உனக்கு அதெல்லாம் தெரிஞ்சாதான் ஆச்சரியம்.......அவரோட "ஸ்ரீரங்கத்து தேவதைகள்"ல ஒரு வரி வரும்,எனக்கு ரொம்ப புடிச்ச வரி "தான் அழகாக இருக்கிறோம் என்ற இருமாப்போ,ஏன் பிரஞ்கையோ கூட  இல்லாமல் சில பெண்கள் தான் இருப்பார்கள்,இப்படி பட்ட பெண்களெல்லாம் அபூர்வமாக தான் பிறப்பார்கள்" அப்படின்னு......உன்னை எந்த கோலத்தில் பார்த்தாலும் எனக்கு தோன்றுவது அதுதான்...அப்படி ரொம்ப அபூர்வமா பிறந்தவள் நீ.
"பொய் சொல்ற நீ"
"இல்லை பொய் சொல்லவில்லை..ஒரு வகையில் எல்லா பெண்களும் அழகு தான்.....தலை வாரி,நகை போட்டு,பட்டு புடவை கட்டி,பௌடரும்,மேக்-அப்பும் போட்டு வந்தால் எல்லா பெண்களும் அழகுதான்.நீ அப்படி இல்லை.நீ அவர்களை விட்டு ரொம்ப தூரம் இருக்கிறாய்.

ஒற்றை செயினிலும்,
கற்றை  மல்லிகை பூவிலும்,
கசங்கிய காட்டன் சேலையிலும்
நீ பேரழகியாக தெரியும் விந்தையை-என்னால்
புரிந்துகொள்ளவே முடியவில்லை.

"உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்படிப்பட்ட....."
"ம்?"

"நீ கிடைக்க,
இப்படி உன் அழகை பார்த்துப்பார்த்தே பருக
எத்தனை,எத்தனை ஆண்டுகள் 
முகத்தில் இருந்து தரை வரை தாடி வளர,
செல்கள் எனை மூடி புற்று வைக்க
தவம் செய்தேனோ தெரியாது."

"ஹு..ஹும்...என்ன இன்னைக்கு இஞ்சினியர் சார் ரொம்ப புகழறார்?"
"நிஜமாதான் சொல்றேன்....உன்னுடைய ஒவ்வொரு அசைவிலும்,செய்கையிலும் அழகு ஒளிந்துள்ளது"
"ஹு..ஹும்"
"ஒரு நாள் வரும் இப்படி எட்ட நின்றே பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன் அப்போது.என் புஜங்களின் வலிமையை,உன் தோள்கள் அதை தாங்குவதிலிருந்து தெரிந்து கொள்வாய்.."
 "ஹு..ஹும்...போதும்" +கொள்ளை கொள்ளையாய் வெக்கம்+வெக்கச்சிரிப்பு.
"இப்போது உன்னை பார்கின்ற ஒவ்வொரு கணமும் கொஞ்சம் மிருகமாக ஆகின்றேன்.....நம்மிடம் இருக்கும் இந்த வலுவான காதல் தான் என்னை மனிதனாக்குகின்றது.
"ஹு..ஹும்".

உன் அழகிற்கும்,மலையுச்சிக்கும் ஒரு ஒற்றுமயுண்டு
என்ன தெரியுமா?
விழுந்து விடுவேன் என்ற பயம் இல்லை,
குதித்து விடுவேன் என்ற பயம் தான்!
உனக்கே தெரியாது,
உன் அழகு என்னை
என்ன பாடுபடுத்தும் என்று.

"ஹு..ஹும்"
"அப்படி தெரிந்திருந்தால்,இவ்ளோ பக்கத்தில வந்து உட்காருவாயா.... என்னை சோதிப்பது போல்?"
"ஹு..ஹும்"
கொட்ட கொட்ட கண்ணை சிமிட்டிகிட்டு,நான் சொல்றதை கேட்பது போல் என்னையே உத்து உத்து பார்த்து கொண்டிருப்பியா?
"ஹு..ஹும்"
"நான் சொல்றதை நீ கேக்கறது கொஞ்சம் தான்..என்னை ரசிக்கிறது தான் அதிகம்...இல்லையா ? இதை, நடு நடுவே என் பேச்சுக்கு  சம்பந்தமே  இல்லாமல்  இதழோரமா லேசாய் சிரிப்பதிலிருந்தும்,பின் சிரிப்பை அடக்கிக்கொள்வதிலிருந்தும் தெரிந்து கொள்வேன்"
"ஹு..ஹும்"

"இதற்குமொரு "ஹுஹுமா?"

"ஹுஹும்" என்பது....
ஒற்றை வார்த்தையில்
நீ பேசும் கவிதை,

ஒற்றை வார்த்தையில்
என் உலகத்தை அடக்கிவிடும்  
குழந்தை மொழி,

ஒற்றை வார்த்தையில்
உன்னிடமிருந்து என்னிடம்
காதலை கடத்தும் பாலம்.

உலகத்தின் எல்லா "ஹுஹும்" மிலிருந்து
வேறுபட்டது உன்னது.

செல்லக்கோபத்தில் வரும் அழுத்தமான ஹுஹும்.
பேச முடியா மோனத்தில்
அடித்தொண்டையில் இருந்து காய்ச்சலோடு வரும் ஹுஹும்.
நான் நீள..நீளமாக பேசிக்கொண்டிருக்கையில்,
நடு நடுவே ஆமோதிப்போடு வரும்
அழுத்தமான "ஹு..ஹும்".
இப்போது போல்-உன் அழகை பேசுகையில்
கண்கள் ஒளிர, 
வெக்கத்தோடு வரும் "ஹுஹும்".

"எங்க இன்னொரு தடவை சொல்லு?"
"ஹு..ஹும்...சொல்ல மாட்டேன்...கிச்சன்ல வேலை இருக்கு" என்று எழுந்து ஓடினாய்.
வேறெதிலும் கவனமில்லாமல் உன் பின்னே நானும் வந்து ,உன் வியர்வை வாசனையை சுவைத்தபடி நின்றேன்.
"என்னவாம்?" என்றாய் வாணலியில் கிண்டிக்கொண்டே.
பேச்சற்று நின்று கொண்டிருதேன் நான்.
குறுகுறுப்பிலோ,என் நீண்ட மௌனத்தாலோ என்னவோ,சட்டென்று திரும்பினாய் என்,கண்களுக்குள் பார்த்தாய்.பேசிக்கொண்டே இருப்பாய்

நடுவே நிறுத்தி பேசாமல் ஆகுவாய்.
இடைப்பட்ட மௌனம்....
நொடிகளுக்குள் நிமிஷங்கள்.
நாளின் நீளமான நேரமது.
என்னால் கடக்க முடியா தூரமது.
மனமெங்கும் 
என்ன செய்வானோ என்ற திகில்
ஏதேனும் செய்வானோ என்ற எதிர்பார்ப்பு...
யப்பா!

"ம்" நங்கூரம் போட்ட பார்வையை உன் மீதிருந்து எடுக்கவில்லை.
பௌர்ணமி கடலை போல் கொந்தளிக்கும் என் மனதை கண்டு கொண்டாயோ என்னவோ,
"போ!வேலை இருக்கு" என்று என்னை தள்ளிவிட்டு,உன்னை உன்னிடத்தில் இருந்து காத்துக்கொண்டாய்.
"ஒன்னே ஒன்னு சொல்லிட்டு போயிடறேன்..."
"என்ன?"
"அழகுன்னா என்ன தெரியுமா?"
ஒரு மனிதப்பிறவிக்கு உடம்பில் உள்ள ஒவ்வொரு அம்சமும் சரியான விகிதத்தில் சேர்ந்திருப்பது-அது எப்படிப்பட்ட அளவென்றால் அந்த விகிதத்தில் ஒரு துளியளவும் கூட்டவோ, குறைக்கவோ, மாற்றவோ தேவையே இல்லை.
அது தான் நீ.....பேரழகி!"
"ஹு..ஹும்"

அன்புடன்
நான்.

I am Sam (2001)- தெய்வத்திருமகள் - "காப்பி"யம்?

பகுதி-3
I am Sam (2001)- தெய்வத்திருமகள் - "காப்பி"யம்?

I am Sam ஆங்கிலப்படத்தின் விமர்சனத்தை இங்கே சென்று படித்துவிடுங்கள்.(பகுதி-1)
I am Sam தெய்வத்திருமகள் -இன்ஸ்பிரேஷன்? இங்கே சென்று படித்துவிடுங்கள்.(பகுதி-2)
இந்த பகுதியில் நேராக சொல்ல வந்த விஷயத்திற்கு வருவோம்.
I am Sam நாயகன் சாம் குழந்தைகளை போல் எந்த ஒரு செயலையும் கவனமாகவும் நேர்மையாகவும் செய்பவன். தான் வேலை செய்யும் இடத்தில் கலந்து கிடக்கும் சாக்லேட்,வெண்ணிலா பவுடர் பாக்கெட்டுகளை நிறம் வாரியாக பிரித்து வைப்பான்,நம்ம கிருஷ்ணாவும் நிறம் வாரியாக சாக்லேட்டுகளை பிரித்து வைப்பான்.அதில் சாம் சிக்னல் பார்த்து கடப்பது ஒரு சின்ன குறிப்பாக வந்து போகும் இதில் படம் முழுக்க அங்கங்கே முக்கிய காட்சியாகவே வரும்.சாமை போல் கிருஷ்ணாவும் "பொய் சொல்ல கூடாது தப்பு" என்கிறான்.

குழந்தை பிறந்ததும் சாமின் மனைவி அவர்களை விட்டு  பிரிந்து  விடுவாள், சாம் வேலைக்கு செல்லும் நேரத்தில் தன் பக்கத்துக்கு வீட்டு பெண்மணியிடம் குழந்தையை கொடுத்து செல்வான். குழந்தையும் ஆனி என்று அவள் பெயரை தான் முதலில் சொல்லும்.ஆனி சாமிற்கு இசை பற்றி கற்றுக்கொடுத்தது போலவே லூசிக்கும் கற்றுக்கொடுப்பாள். இங்கே பெண் வீட்டை விட்டு ஓடினால் அந்த குழந்தையே நம் ரசிகர்கள் மதிக்க மாட்டார்கள், இன்னும் கொஞ்சம் பரிதாபத்தை கூட்ட  அம்மாவை  பிரசவத்தில் கொன்று நிலாவை அனாதயாக்குகின்றனர்.அதே போல் பக்கத்துக்கு வீட்டு பெண் கிருஷ்ணா குழந்தையை வளர்க்க உதவி செய்கிறாள் (இங்கே நகைச்சுவை என்ற பெயரில்,கமர்ஷியல் சினிமா என்ற போர்வையில் கொஞ்சம் ஆபாசம்... இதையெல்லாம் டைரக்டர் விருப்பப்படவில்லயேயானாலும் தயாரிப்பாளர் புகுத்தியிருப்பார்.

சாமின் மனநலம் தவறிய நண்பர்கள் படம் முழுக்க சாமுடனே இருப்பார்கள், கோர்டில் சாம் தடுமாறும் காட்சிகளில் நண்பர்கள் எடுத்துக்கொடுப்பார்கள். அவர்கள் வரும் காட்சிகளில் கதயோடிழைந்த நகைச்சுவையும் இருக்கும். ஆனால் கிருஷ்ணாவின் நண்பர்களை பகடிக்காக மட்டுமே பயன்படுத்தி இருப்பார் இயக்குனர்.

இங்கே ஒரு காட்சியை சொல்கிறேன்,லூசிக்கு ஷூ வாங்க பணம் பற்றாததால்,சாமின் நண்பர்கள் தங்களால் ஆன சில்லறையை பொருக்கி கொடுத்துவிட்டு "சரியாக இருக்கிறதா? என்பார்கள்,அதற்க்கு கடைக்காரன் "கடவுள் என்று ஒருவன் இருந்தால் சரியாக இருக்கும்" என்று நெகிழ்வான். "இந்த ஷூவுடன் பலூன் தருவீர்களா? லூசிக்கு மட்டும் தான் தருவீர்களா? என்பான் சந்தேகத்துடன்  சாமின் நண்பன்.அடுத்த காட்சியில் சாம்,சாமின் நண்பர்கள்,லூசி எல்லோரும் ரோட்டை கடக்கையில் பலூனுடன் நடப்பார்கள். மேலும் இந்த காட்சி Beatles ராக் இசை குழுவினர் ஆபி ரோட்டை கடக்கும் பிரபலமான போட்டோவிற்கு ஒப்பானது(ஆபி ரோடு என்னும் பிரபலமான Beatles குழுவினரின் ஆல்பத்தின் போஸ்டரும் இதுதான்.இன்றும் இந்த ரோடின் அருகில் கேமரா ஒன்று உள்ளதாம், டூரிஸ்டுகள் இந்த ரோட்டில் அது போலவே நடந்து போட்டோ எடுத்துக்கொள்ள!!).உலக ரசிகர்களை கவர்ந்திழுத்த Beatles குழுவினருக்கு  காணிக்கயாகவே இந்த பலூன் காட்சியை இயக்குனர் ஜெசி நெல்சன் வைத்திருப்பார். (படத்தை பாருங்கள்) ஆனால் தெய்வத்திருமகளில் ஏன்? எதற்கு? என்று தெரியாமலேயே ஷூ வாங்கியவுடன் எல்லோரும் பலூனை பிடித்துக்கொண்டு ரோட்டை கடப்பார்கள்.(டைரக்டர்-"பலூனை பிடிச்சிட்டு நடக்கிறது நல்ல இருக்கு,அப்படியே வச்சிடுவோமா? யாருக்கு தெரிய போகுது...")
I  am Samல்  அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறையால் லூசி பிரிக்கப்படுவாள் அவர்கள் மூலமே கோர்ட் கேஸ் நடக்கும், தந்தையும்-மகளும் சந்திக்க கோர்ட் வாரத்திற்கு இரண்டு மணி நேரம் ஒதுக்கும்.பின்னர் லூசி வாடகை தாயிடம் ஒப்படைக்கப்படுவாள்.அதன் பின்னும் இரவில் எழுந்து சாமிடம் ஓடிவருவாள்.ஒரு கட்டத்தில் சாம் தன் குறையை உணர்ந்து அவளை தத்துக்கொடுப்பது தான் சரியென உணர்வான்,அதே நேரத்தில் மற்ற எல்லோரும் தந்தை-மகள் பாசத்தை  கண்டு அவர்கள் சேர்வது தான் உசிதம் என புரிந்து கொள்வார்கள்.

குழந்தைகள் நலத்துறை  எதுவும் நம்மூரில் இல்லாததால்  தெய்வத்திருமகளில் அழகான(அப்படி ஒன்றும் அழகில்லை) சித்தியாக அமலா பால்,லூசியின் பணக்கார தாத்தா (அது சரி மகளையே கை விட்ட தாத்தாவிற்கு எப்படி பேத்தி மேல் இவ்வளவு அக்கறை?).பணக்கார வக்கீல் மூலம் கேஸ் நடத்துகிறார்.இங்கேயும் கோர்ட் இரண்டு மணி நேரம் ஒதுக்குகின்றது(நாசர் ஓடிவந்து விழும் காட்சி),கிருஷ்ணாவும் இரவில் நிலாவிடம்   ஓடிவருகிறான், கிருஷ்ணாவும் குறையை உணர்கிறான்... நாசரும்,நிலாவின் தந்தையும், அமலா பாலும் அவர்கள் பாசத்தை உணர்கிறார்கள்.....உஸ்ஸ் யப்பா!!!!  முடியல!

சில காட்சிகளை இங்கே நம்ம நாட்டில் வைக்கமுடியாது என்று கருதி அதை மற்றும் மாற்றி இருகிறார்கள்..அவ்வளவே.சாமின்  வழக்கை நடத்தும் ரீட்டா தன் ஐந்து வயது மகனுக்கு நேரம்  ஒதுக்காதது கண்டு மனமுடைகிறாள், அவன் மேல் பாசம் கொள்கிறாள்.இங்கே கேசை நடத்தும் அனுஷ்காவிற்கு....(என்னது!!!அனுஷ்காவிர்க்கு ஐந்து வயது மகனா? என்ன விளையாடறீங்களா?  அப்படி வச்சா தமிழ் நாடே பத்தி எறியுமப்பா!!!)   பாசமில்லாத அப்பாவாக 
YG. மகேந்திரன்..பின்னர்...டிட்டோ!!மேலும் அனுஷாவை போல் இளமையான வக்கீலை போட்டால் தானே கிருஷ்ணா தொட்டவுடன் மழையில் நனைந்த படி பாடல் வைக்க முடியும்...(ஆமாம், எதுக்கு இந்த பாட்டு? ஜி.வி பிரகாஷ் விஜயிடம் போய் "சார்..சார் நானே சொந்தமாக போட்ட டுயூன் சார்..படத்தில எங்கயாவது வைங்க சார்..ப்ளீஸ் சார்,சைந்தவிய பாட வைக்கலாம் சார்" என்றிருப்பாரோ?)

இன்னும் நிறைய சொல்லலாம்..ஆனால் போதும்!இவ்வளவையும் செய்து விட்டு படம் ரிலீசாவதற்கு  முன்னும்,பின்னும் விஜய் டிவியில் வந்து உட்கார்ந்து கொண்டு தான் பிறக்கும் போதே  இந்த கதையோடு,பிறந்த மாதிரி ஒரு பில்ட் அப். விக்ரமும் ஏதோ மனநலம் சரி இல்லாத குழந்தைகளை பார்த்து,படித்து நடித்ததாக சொன்னார் ஆனாலும் ஷான் பென் சாயல் நிறைய இருக்கும். எப்படி ஆனாலும் விக்ரமின் மிதமிஞ்சி இராத நடிப்பு தான் படத்தின் ஒரே சிறந்த அம்சம்.

"காப்பி+பேஸ்ட்" ஆட்கள் "ஒரு படம் பார்த்தேன்,என்னை ரொம்ப பாதித்து விட்டது அதனாலேயே அதை தமிழில் எடுக்கிறேன்"என்று கூறி அதை டைட்டிலில் போடலாம்,கொஞ்சம் நேர்மையாக இருக்கும்,நமக்கு ஆறுதலாக இருக்கும்.....ஹுஹும்...செஞ்சிட்டாலும்!!!படத்தை எடுக்க வேண்டுமென்று நினைத்தபின் எதாவது டீவீடீயை தேடத் தொடங்கும்  நமக்கு விமோசனமே கிடையாது.

மற்றபடி I am Sam பார்த்திராத,கேள்விப்பட்டிராத ரசிகர்களுக்கு தெய்வதிருமகளின் நிறைய காட்சிகள் கண்ணீரை வரவழைக்கலாம், பாசத்தை உணர்த்தலாம்,இன்னும் என்னென்னவோ செய்யலாம்.....ஆனால் எல்லாமே இரவல் வாங்கியவை தான்.

தேவையில்லாத குறிப்பு: இத்தனைக்கும் I am Sam படம் ஆகச்சிறந்தது என்று சொல்லிவிட முடியாது.ஒரு சாதாரண சென்டிமென்ட்,பீல்-குட் மூவி அவ்வளவே!

அன்புடன்
நான்.

I am Sam (2001)- தெய்வத்திருமகள் -இன்ஸ்பிரேஷன்?

பகுதி-2
I am Sam (2001)-  தெய்வத்திருமகள் -இன்ஸ்பிரேஷன்?

I am Sam (2001) ,ஆங்கிலப்படத்தின் விமர்சனத்தை இங்கே சென்று படித்துவிடுங்கள்.முதலில் ஒன்றை சொல்லிவிடுகின்றேன் வெறும் ஆங்கிலப்படங்களாக பார்த்துக்கொண்டு,"I dont see taamil films yaar"என்று அல்டாப்பு செய்து புத்திஜீவியாக காட்டிக்கொள்ளும் நோக்கமெல்லாம் இல்லை. சினிமாவின் மீது தீராக்காதல் கொண்டதனால் உலகின் அனைத்து மொழியில் வரும் நல்ல திரைப்படங்களை தேடித்தேடி பார்த்து,தமிழிலும் அது போல் நல்ல படங்கள் வராதா என ஏங்கி ஏமாறுபவன். எப்போதாவது வரும் மாறுபட்ட ,சீரியசான, பொதுவான தமிழ் க்ளிஷே இல்லாத தமிழ்  படங்களை  அநியாத்திற்கு தூக்கி வைப்பேன். தமிழில் இந்தவகை படங்கள் வந்து அது தோல்வியை தழுவினால் அந்த முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டும் என் நினைகிறேன்.அதற்க்கு நல்ல சினிமாவை கணிக்க தெரியவேண்டும்,அதற்க்கு முதலில் பில்லாகளையும், குருவிகளையும் விட்டு வெளியே வர வேண்டும்.

இவை ஒருபுறம் இருக்க மாறுபட்ட சினிமா எடுக்கிறேன் பேர்வழி என்று ஒரே மாதிரி கலைந்த தலையும்,முள்தாடியும்,டிரௌசர் தெரிய கைலியும் கட்டிய ஹீரோக்களையும்,கருப்பு பூசிய ஹீரோயின்களை வைத்து,ஒரே சாயலில் எத்தனை படம் தான் எடுப்பது?அப்படி இல்லையென்றால் ஒரு இயக்குனர் தான் குழுவுடன் உட்கார்ந்து கதையை வடிக்காமல்,தான் பார்த்த ஆங்கிலப்படங்களுக்கு,கொரியப்படங்களுக்கு போய் விடுகிறார். ஆக ஒரு இயக்குனர்&குழு செய்யும் வேலை....ஏதோ ஒரு படத்தை நம் ஊருக்கு தகுந்தார் போல் மாற்றம் செய்வது மட்டுமே.அது  போல் ஒரு வெற்றி படத்தை  கொடுத்து விட்டால் போதும்,அடுத்தும் வெற்றிப்படமாக கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இங்கே,எனவே பதற்ற நிலையில் ஏதாவது ஒரு வெளிநாட்டு படத்தை சுட வேண்டியது.... உதாரணமாக "யோகி"அமீர், "நந்தலாலா" மிஸ்கின் இன்னும் நிறைய பேரை இந்த லிஸ்டில் சேர்க்கலாம்.


அதே போல் வாய்ப்பில்லாமல் சுற்றித்திரியும் காலகட்டத்தில் ஒரு இயக்குனர் தன்னுடைய வறுமையாலும், விரக்தியாலும் வெற்றி பெறவேண்டும் என்ற வெறி அதிகமாக இருக்க மிக அருமையான கதையை ஒன்று புனைந்திருப்பார். வாய்ப்புக் கிடைக்கையில் அது திரையில் மிளிர்ந்து அது மாபெரும் வெற்றி பெற்று விடும்....அதோடு சரி அதற்க்கு பின் தலைக்கனமோ என்னவோ அவருக்கு உழைக்க வளையாது ,சிந்திக்கவும் முடியாது-கால்மேல்கால் போட்டுக்கொண்டு, மீடியாவில் வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டு I am sam,Tsotsi, kukijiro வை உல்டா செய்வார்கள்....இப்படி நம் கலைஞர்கள் பிறபடங்களை நாட தயாரிப்பாளர்கள், ரசிகர்களும் ஒரு காரணம்..அதிக எதிர்பார்ப்பு.இப்படி  ஒன்றுக்குள் ஒன்றாக எப்படியோ   பிணைந்து போய் நாசமாகிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.
உலகின் சிறந்த இயக்குனர்கள் பலர் வாழ்கையில் இருந்தும்,சமுதாய பிரச்சனைகளிலிருந்து கதைகளை எடுக்கிறார்கள்.ஈரானை சேர்ந்த   மஜீத் மஜீதி,அப்பாஸ் கிராஸ்தமி சின்ன சின்ன அழகியலிலிருந்து மகத்தான  கலை படைப்பை அனாயசமாக உருவாக்குகின்றார்கள் இத்தனைக்கும் ஈரான் போன்ற நாடுகளில் படம் எடுப்பதற்கு நிறைய  கட்டுப்பாடு உள்ளது.(ஒரு ஆண் பெண்ணை சும்மா தொடுவதாக கூட காட்சி வைக்க முடியாது!) 

ஹாலிவூட்காரர்கள் தங்களுக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.அவர்கள் நாவல்களிலிருந்து கதையை எடுக்கின்றனர்.உலகத்தரம் வாய்ந்த பல படங்கள் நாவலிலிருந்தும், சிறுகதைகளில் இருந்தும் தான் எடுக்கப்பட்டிருக்கின்றன.ஸ்டீபன் கிங் என்ற எழுத்தாளரின் நாவல்கள்,சிறுகதைகள் Shawshank Redemption,Green Mile,The Shining ஆக மாறி இருக்கின்றன.iRobot,bicentinnial man போன்ற வெற்றிப்படங்கள் ஐசக் அசிமோவின் கதைகளே. ஹாலிவூடில் வித்யாசமான கதைக்கலனுடன், தங்களின் படங்களில் இசை,வசனங்கள்,காட்சியின் அழகு போன்றவை பிரதானமாக இருக்கும் படி பார்த்துக்கொள்கின்றனர்.அதனால் பரந்த ஈர்ப்பை பெறுகின்றனர்.

கொரிய படங்கள் ஒரு தனிவகை,அமெரிக்க திரைப்படங்களுக்கு நேரெதிரானதாக இருக்கும் அவர்களுடைய திரையின் மொழி. கொரியப்படங்களில் வசனம் தனியாக,செயற்கையாக நீட்டிக்கொண்டு தெரியாது.அது போல் அவர்கள் காட்டும் காட்சியின் அழுத்தம்.... பார்ப்பவர்களை மூச்சுத்திணற வைக்கும் அளவுக்கு அழுத்தமாக  இருக்கும்..... அதற்க்கு எந்த பின்னணி இசையும் தேவையிராது.இன்னும் சொல்லபோனால் பின்னணி இசையென்ற ஒன்றை தேடினாலும் கண்டு பிடிக்க முடியாது .இவர்கள் திரையில் காட்டும் உலகம் ரத்தமும்,சதையும் கொண்டதாக இருக்கும்.இவர்களில் பல இயக்குனர்கள் உலகளவில் பேசப்பட்டு வருகின்றனர்.

இன்னும் ஐரோப்பிய இயக்குனர்களில் நிறைய பேரை திரைக்கதைக்கு உதாரணமாக சொல்லலாம் குறிப்பாக ஹென்க்கல்,டாம் டைக்வர்,மைகேல் ஹினகே  போன்றவர்கள் எடுத்துக்கொள்ளும் கதை மிக சாதாரணமாக இருக்கும் ஆனால் அவர்களின் திரைக்கதை உலகத்தரமாக இருக்கும். அதனாலேயே அவர்கள் பேசப்படுவார்கள்.


இப்படி உலகெங்கும் படமெடுக்க விதவிதமான மூலத்தை தேட,நம்மில் சில இயக்குனர்கள் டிவிடிஐ தேடுகின்றார்கள்.மேலே சொன்ன எல்லா இயக்குனர்களும் சினிமாவை ஒரு கலையாக நினைக்கிறார்கள்,இவர்கள் கூட்டாக உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியையும் உளியை வைத்து கல்லை செதுக்குவது போல் செதுக்குவார்கள் என்று நினைகிறேன்.(ஒரு நல்ல காட்சியை பார்க்கும் போது,புத்தகத்தில் ஒரு நல்ல வரிகளை படிக்கும் போதும்...ச்ச!இதை உருவாகியவன் இதை எந்த மாதிரி மனநிலையில் வடித்திருப்பான் என கற்பனை நீளும்,பேராச்சர்யமாக இருக்கும்!!).அதே போல் யாருக்கு எது நன்றாக வருகின்றதோ அதை மட்டுமே செய்வார்கள், நீங்கள் எந்த ஆங்கிலப்படத்தின் டைட்டிலில் ஆவது "கதை,திரைக்கதை,வசனம்,பாடல்,நாடனம்,ஒளிபதிவு,லைட் மேன்,டச் அப் பாய்....." என்று போடுவதை பார்த்திருக்கிறீர்களா? தமிழ் சினிமாவில் மட்டும் தான் இந்த கூத்தெல்லாம் நடக்கும்...இந்தியாவில் புகழ் பெற்ற இயக்குனர் என பெயரெடுத்திருக்கும் மணிரத்னம் கூட தன் மனைவி சுஹாசினியிடம் வசனம் எழுதக்கொடுக்கிறார் ..கொடுமை! (ராவணன்....ஒரு மரண வேதனை),இன்னொரு மோசமான உதாரணம் (எனக்கு ரொம்ப பிடித்த) கமல் ,திரும்ப திரும்ப இதே தவறை இவர் பல ஆண்டுகளாக செய்து வருகிறார்.

ஒன்று தங்கள் இஷ்டத்திற்கு,ரசிகர்கள் இதைதான் விருப்பப்படுகிறார்கள் என்ற புரிதலில் எதையாவது செய்து வைக்க வேண்டியது. இல்லையென்றால் யோசிக்க திராணி இல்லாமல்,எப்படியாவது வெற்றி பெற்றால் போதும் என்று கதயயோ, காட்சிகளையோ எடுத்துப்போட்டுகொள்வது.ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு தமிழ் சினிமாவுக்கு ஏதோ தர விரும்பிகிறேன் என்று நினைத்துக்கொண்டு நேர்மையாக தோல்வியோ,வெற்றியோ பார்க்காமல் படமெடுக்கும் இயக்குனர்களை பாராட்டலாம்.ஆனால் அப்பட்டமாக காப்பியடிக்கும் விஷயத்தை யார் செய்தாலும் மனது ஏற்க மறுக்கிறது.அது சினிமா என்னும் கலைக்கு செய்யும் துரோகம் எனவும் தோன்றுகின்றது.

சரி,இன்ஸ்பிரேஷன்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன?காப்பி அடிப்பதற்கும் ,இன்ஸ்பிரேஷனுக்கும் என்ன வித்யாசம்? சில  உதாரணங்களை இன்ஸ்பிரேஷன் வகையில் எடுத்துக்கொள்ளலாம்.மணிரத்னத்தின் நாயகன்,கமலின் தேவர் மகன்,ஆர்ஜிவீ யின் சர்கார் போன்ற படங்கள் பிரான்சிஸ் கப்போலாவின் காட் பாதரை தழுவி எடுக்கப்பட்டதென்று ஒரு பேச்சு உண்டு,உண்மை தான் ஆனால் அதை நிச்சயமாக காப்பி அடிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. வேலு நாயகர் செய்வது ராபின் ஹூட் வேலை (பணக்காரர்களிடம் சூறையாடி ஏழைகளுக்கு தருவது),தேவர் மகனும் கிட்ட தட்ட இப்படி தான் ,ஆனால் காட் பாதரில் நடப்பது கார்லியோனி குடும்பத்தின் சண்டை, இதில்  சேவையோ பொது ஜனமோ அங்கே எதுவுமில்லை. பொதுவாக எல்லா டான் படங்களையும் -ஒரு சாதாரணன் எப்படி டானாகின்றான் (evolution),டானாக அவன் ஆட்சி,பின்னர் அவன் எப்படி அழிக்கப்படுகின்றான் என்ற மூன்று கோட்பாடுகளுக்குள் அடைக்க முடியும்.கிட்ட தட்ட எல்லா டான் படங்களுக்கும் காட் பாதரின் சாயல் இருக்கும். இன்னும் மணிரத்தினத்தின் ரோஜாவில் "சத்யவான்-சாவித்திரி" கதை,தளபதியில் "மகாபாரதம்",ராவணனில் "ராமாயணம்",அன்பே சிவத்தில் "Trains and Automobiles", பொல்லாதவனில் "bicycle thieves"...... என்று வேறு வேறு தளத்தில் இருந்து கவரப்படதாக இருக்கும்,இது கூட சகிக்ககூடியது தான்.(ஒருவகையில்)

ஆனால் காப்பி அடிப்பது, மொத்தமாக உருவப்பட்டது என்பது என்ன?
I am Sam படத்திற்கும்,தெய்வதிருமகள் படத்திற்கும் உள்ள ஒற்றுமையை பார்த்தால் புரியும்.

பின் குறிப்பு :இந்த பகுதியே வளவளவென்று போய்விட்டதால்,வேறு வழி இல்லாமல் அடுத்த பகுதியில் I am sam படத்திற்கும் தெய்வத்திருமகள் படத்திற்குமான ஒற்றுமையுடன் முடிக்கிறேன்.

அன்புடன்
நான்

அளவிலாக் காதல்:பிரிவும்,பிரிதல் நிமித்தமும்அத்தியாயம் 1 
பிரிவும்,பிரிதல் நிமித்தமும்

ஊர்ந்துகொண்டிருக்கும் பேருந்து.... 
நான்.கம்பி இடைவெளி விட்டு.நீ.
-------
"என்ன அப்படி முழுங்கற மாதிரி பாக்கற?"
"பாத்துக்கறேன்...பின்ன இனி எப்போ பார்கப்போறேனோ,இப்படி வடித்து வைத்த சிலை மாறி நிற்கும் உன்னை.பஸ்ஸிலெல்லாம் என் கூட இனி வரதே எல்லாம் என்னை பொறாமையோடு எரிக்கிறார்கள்"
"அய்ய..ரொம்ப தான்.நானே நீ ஊருக்கு போற கவலையில்  இருக்கிறேன்.உனக்கென்ன?"
"அடிப்பாவி எனக்கென்னவா?...சொல்கிறேன் கேள்"


நீ பேசாமல் இருக்கும் போதும் கூட பேசிக்கொண்டே இருக்கும் உன் கண்ணாடி வளையல்,

நீ அறையை விட்டு வந்த பின்பும் வெக்கமின்றி அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் உன் கூந்தல் பூ வாசனை,
நீ எழுந்து போன இடத்தில் அமர்ந்திருக்கும் வெப்பம்,
நீ அபூர்வமாய் கொடுக்கும் முத்தத்தின் எச்சில் ஈரம்..
இன்னும் இன்னும்
எவ்வளவு இழக்க போகின்றேன் தெரியுமா?

மீன் சமைத்த பாத்திரத்தின்

வாசனை போல்
உன் நினைவு என்னிடம் அப்படியே இருக்கு.

"ஐயோ கவிதை சொல்ற நேரமா இது....பஸ்சில எல்லாரும் நம்பளையே பாக்கறாங்க" என்று செவ்வானமானாய்.

"நம்பள பாக்கறாங்கனு சொல்லாத..உன்ன பாக்கறாங்கனு சொல்லு...நீ தான் அப்படி இருக்க...எங்க போனாலும் எல்லாரையும் கவர்ந்து கொண்டு....தனிப்பிறவி"
"அள்ளி விடாத! போதும்..இன்னும் ஒரு மணி நேரம் தான் அப்புறம் அய்யா ட்ரைன்ல ஏறி டாட்டா காட்டிட்டு போய்டுவார்".
"ஏண்டி நீ வேற..உன்ன விட்டுட்டு போறத நினைச்சா  ஏதோ எக்ஸாம் போற டென்த் பையன் மாறி வயதை கலக்குது."
"பொய்...பொய் சொல்லாத"
நம்ப மாட்டியே ..ஒண்ணு சொல்லவா?வீட்ல இருக்கும் போது,சமையலறைக்குள் அல்லது வேறு எங்கு நீ நடந்தாலும்,என் பார்வையின் வட்டத்திற்குள் நீ வருகின்றபடியே மாறி மாறி உட்கார்ந்து உன்னை பார்த்துக்கொண்டிருப்பேன்,நீ என்னை கவனிக்காத போது நான் உன்னை பார்க்கையில் நிறைய வசதி இருக்கிறது தெரியுமா?
என்ன வசதி?
"அது வேண்டாம் விடு...சொன்னால் அடிப்பாய்."
என்னான்னு சொல்லேன்?
"அத விடு....அய்யயோ...என் டூத் பிரஷ் எடுத்து வச்சனா..தெரியலையே?"
"நீ வைக்கல...நான் எடுத்து வச்சிருக்கேன்"
-------
கவுண்ட்டரில் டிக்கெட் எடுக்கும் போதும் முகத்தில் இருட்டோடு,வாயில் கடித்த முந்தானையோடு என்னையே பாத்துக்கொண்டிருந்தாய்.
"இன்னும் பதினைந்து நிமிடம் தான் இருக்கு சீக்கிரம் பிளாட்பாரம் போலாம் வா"
"ஐயோ அப்பா..போறதுக்கு எவ்ளோ அவசரம் பாரு,ஆனா வர்றது மட்டும் குதிரை கொம்பு.சரி விட்டு வந்துட்டமே லெட்டர் எழுதுவோம்..ஒரு ஜென்மம் அங்க இருக்கே....ஹுஹும்...இவர் கிட்ட இருந்து லெட்டர் வர தினம் தினம் நாங்க காத்துகிட்டு இருக்கணும்"
"சொல்லிட்ட இல்ல..... இனிமே பாரு நீ தூங்கி எழும் போது ஒன்னு,தூங்கப்போகும் முன் ஒன்னுனு , நாளைக்கு ரெண்டு ஒரு லெட்டர் வரும்"
"அப்போ உலகம் அழிஞ்சிடும்" உதட்டை சுழித்து காட்டினாய்.சிமெண்டு பெஞ்சில் சென்று உட்கார்ந்த போது வழக்கத்திற்கு மாறாக நீயாகவே தோளோடு தோள் உரச அமர்ந்து,என் கைகளை அள்ளி வைத்துக்கொண்டாய்.

"இன்னைக்கு கூட்டமே இல்லை இல்ல?" என்று மௌனத்தை நொறுக்கினேன்.
"போகாதயேன்......போகாம இருந்துடேன் ,என் கூடவே இரேன்...இப்படி இதே மாதிரி பசி,தூக்கம் எதுவுமில்லாம இங்க,இப்படியே சிலையாகவே இருந்துவிடலாம்...இது போதும் இது ஒன்றே போதும்....மூச்சு போற வரைக்கும்"
"என்னப்பா ஆச்சு இப்போ?கொழந்த மாதிரி?...ட்ரைன் வந்துடுச்சு பார்."
ரயில் கடந்து நின்ற போது,பிளாட்பார்மை போல் நெஞ்சும் அதிர்ந்தது.
-------
"ஒரு பத்து நிமிஷம் நிக்கும் ..உள்ள ஏறிக்கோ வா" கை பிடித்து தூக்கி விட்டேன்.உன் கண்ணீர் கண்டு பதறினேன்.
உன் இரண்டு கன்னங்களையும் இரு கைகளில் எந்திக்கொண்டேன்,பூவில் பனித்துளி போல் உன் கண்ணீர் கன்னங்களில் பட்டு சிதறியது.
"ஏய் உடம்ப பாத்துக்கோ என்ன?"கண்களுக்குள் கண்கள் அலைந்தது.
"உனக்கு சொந்தமான எல்லா விஷயத்தையும் நான் நல்ல தான் பாத்துப்பேன்"என்றாய்.
"ஹ்ம்...இன்னும் கொஞ்சம் நெருங்கி தான் வாயேன்" அருகில் இழுத்த போது, அறுந்த கொடியாய் மேலே சாய்ந்தாய்.
உன் மூச்சுக்காற்று என் தொண்டை குழியில் பட்டது.
"ஒன்னு கேக்கட்டுமா?"
"கேளேன்"
"அப்போ நீ சொன்னியே அது உண்மையா?"
"எதுடி?"
"வீட்ல நான் எங்க இருந்தாலும் நீ என்னையே பார்த்துகிட்டு இருப்பேன்னு......சத்தியமா?"
"சத்தியமா"
"நானும் அப்படி தான்...வீட்ல எங்க இருந்தாலும் உன் பார்வையின் எல்லைக்குள்ளவே தான் இருப்பேன்.....நீ என்னை பாக்கும் போது நடு முதுகில் குறுகுறுன்னு இருக்கும்...அப்படியே ஓடி வந்து அள்ளி அணைசுக்கனும்னு தோணும்.....ஆனா செய்ய முடியாது".
"ஹுஹும்....நான் இப்போ,இங்கயே அணைசுக்கவா?...யாரை பத்தியும் கவலை படாமல்?"
"அய்யோ வேண்டாம்...வெக்கம் பிடுங்கி தின்னுது".
"வெட்கப்படாத... இருக்கற கலர் போதாதுன்னு மேல மேல செவந்து கிட்டே போற"சட்டையை பற்றி இழுத்துக்கொண்டாய்."டேய் கண்ணா! என்னையும் கூட்டிட்டு போயிடேன்.....உன் கூட இப்படி ஒட்டிகிட்டே வந்திட்ரேனே...ஏன்டா இப்படி வந்து ஆசை காட்டிட்டு ஓடி போயிடற...?"

"இப்படி எல்லாம் பேசாத...தடுமாறுது எனக்கு....பெட்டியெல்லாம் தூக்கி வெளியே போட்டுட்டு,உன்ன தூக்கிட்டு கீழ குதிச்சிரலாம் போல் இருக்கு...போயிடலாமா?"
"ஒன்னும் வாண்டாம்...நீ ஒழுங்கா போயிட்டு வா,உடம்பை பாத்துக்க....அப்புறம்..."
"நீ முதல்ல சரியா தூங்கு..தூங்கலைன்னு லெட்டர் ல எழுதுனா........"ஒற்றை விரலால் என் வாயை பொத்தினாய்,பேசாதே என்பது போல் தலையாட்டினாய்.
படபடத்து துடிக்கும் பறவையின் சிறகை போல் உன் இமைகள் அடித்துக்கொண்டது.
"டேய்..பாவி..உன் மேல உயிரையே வச்சிருக்கேன்டா"
"தெரியும்டி.நல்லா தெரியும்...மறக்கமாட்டேன்".
அப்புறம் சில வினாடிகள் பேச்சில்லை,செயலில்லை.
"என்னடி யோசனை இப்போ?"
"நீ யோசிக்கறது தான் நானும் யோசிக்கிறேன்"
"என்னது அது?"
-------
"விடேன்....ட்ரைன் நகருது...இறங்கு நீ முதல்ல...பாத்து போ...அழாதே"
எப்படி தான் என் இவ்வளவு பெரிய உருவத்தை உன் துளி கண்ணீரால் நனைத்து,சுருட்டி மொத்தமாக கீழே தள்ளி விடுகின்றாயோ?.....ஆச்சர்யம் தான்!
என்னை உன்னையும் பிரித்த மமதையில் கூக்குரலிட்டு,வெறி பிடித்து ஓடத்துவங்கியது ரயில்.
நீயும்,உன் சிகப்பு புடவையின் நிறமும் புள்ளியாய் கரையும் வரை கண்ணீருடன் வாசலருகே நின்று கொண்டிருந்தேன்-
நான் மறைந்த பின்பு முப்பது நிமிடமாவது அங்கேயே நீ நின்று,நான் போன திசையே பார்த்துக்கொண்டிருப்பாய் என்பதை நினைத்துக்கொண்டு.


அன்புடன்
நான்.

I am Sam(2001) - தெய்வத்திருமகள் - ஒரு அலசல்

பகுதி-1
I am Sam - தெய்வத்திருமகள் - ஒரு அலசல்

முன்குறிப்பு:இந்த பதிவின் முதல் பகுதியில் I am Sam மின் விமர்சனத்தையும்,இரண்டாம் பகுதியில் இந்தப்படத்திற்கும் தெய்வதிருமகள் படத்திற்குமான ஒற்றுமையும்,எப்படி தழுவப்பட்டது  என்பதையும், ஈயடிச்சான் காப்பி மற்றும் இன்ஸ்பிரேஷன்  எப்படி  தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றது என்பதை பற்றியும் பார்ப்போம்.


      Developmental Disablity என்னும் மூளை வளர்ச்சி சிக்கலால் பாதிக்கப்பட்டிருக்கும் சாம்(Sean Penn) என்னும் பரிஸ்டா ரெஸ்டாரன்ட் பணியாளன் தனக்கு பிறக்கும் பெண் குழந்தையை எப்படி வளர்கிறான் என்பதும்,பின்னர் சூழ்நிலையால் அந்த குழந்தையை பிரிய நேர்வதும்,ஏழு வயது சிறுவனின் திறனையே உடைய இவன் அந்த குழந்தையிடம் மீண்டும் சேர எடுக்கும் முயற்சிகளே கதை.(எங்கேயோ கேட்ட மாதிரி, பார்த்த மாதிரி இருக்கிறதல்லவா?)

சாமின் குழந்தை லூசி(Dakota Fanning)பிறந்த அன்றே அவர்களை விட்டு பிரிகிறாள் அவள் தாய்.பின்னர் அவளை தனியாக வளர்க்க...ஹுஹும் அவர்கள் இருவரும் ஒன்றாகவே வளர்கிறார்கள்.லூசி சாமின் மீது மிகுந்த அன்போடும்,அவனிடம் இல்லாத அபார மூளை வளர்ச்சியுடன் திகழ்கிறாள்.இதை விளக்க இவை இரண்டையும் ஒரே காட்சியில் வைத்திருப்பார் இயக்குனர்,லூசியின் பாடப்புத்தகத்தை படிக்க முடியாமல் திணறுகிறான் சாம்,அவளை படிக்கசொல்கையில் அவளும் திணறுகிறாள்,தன்னால் முடியாது நான் ஒரு முட்டாள் என்கிறாள்,சாம் திரும்பத்திரும்ப அவளை படிக்கச்சொல்லவே "உங்களால் படிக்க முடியாதாதை நான் படிக்கமாட்டேன்,உங்களை கடந்து போவதை நான் விரும்பவில்லை" என்கிறாள்."How can we be so different and feel so much alike?"

சாமிற்கு ஏழுவயது சிறுவனின் மூளை வளர்ச்சியே இருந்தாலும் அவனுக்கு பீட்டில்ஸ் (The Beatles) என்னும் புகழ் பெற்ற ராக் இசைக்குழு  மீது மட்டும் மிகுந்த ஆர்வமும், அறிவும் இருக்கின்றது.படம் நெடுக்க இந்தக்குழுவை பற்றியும்,அந்த குழுவில் இருந்த ஜான் லென்னன்,மாதிவ் மெக்கார்டினி பற்றிய நிறைய குறிப்புகளை சாமும்,லூசியும்,சாமின் நண்பர்களும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் (பெரும்பாலும் நிறைய ஆங்கில படங்களில் இது போன்ற புகழ் பெற்ற மனிதர்களை,சம்பவங்களை  எடுத்துக்கொண்டு கதை நகர்த்துவதை கவனித்திருக்கலாம்).

1957 ல் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூலில் தொடங்கப்பட்டு 1960 முதல் 1970 வரை உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களை பெரும் போதை கொள்ளச்செய்தது இந்த Beatles.குறிப்பாக அந்த குழுவில் இருந்த ஜான் லென்னன் என்னும் கிடாரிஸ்ட் தெய்வத்தை போலவே பார்க்கப்பட்டார். பீட்டில்ஸ் இசையும்,குழுவும் பல நாட்டு இசை விரும்பிகளின்  மனதுக்கு நெருக்கமானதாக  இருந்திருக்கிறது.இவர்களுக்கப்புறம் தான் எண்பதுகளில் தொடக்கத்தில் மைகேல் ஜாக்சனின் ஆட்டம்,பாட்டம்  ஆரம்பமாகியது.மேலும் படத்தில் வரும் சில பாடல்கள் beatles இடமிருந்து நேரடியாக வாங்கப்பட்டதாகவும்,பல பாடல்களுக்கு எவ்வளவோ முயன்றும் ரைட்ஸ் கிடைக்காததால் அந்த பாணியிலே  இயற்ற  பட்டதாகவும்  இருகின்றது. படத்தில் ஒரு காட்சி இந்த beatles இசை குழுவுக்கு காணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. (அதை பின்னர் பார்ப்போம்) .

பின்னர் நடக்கும் சில சம்பவங்களால் இவர்கள் பிரிக்கப்படுகின்றார்கள்- 
கற்பிக்க ஆளில்லாததாலும்,கவனமின்மையாலும்  படிப்பில் பின்தங்கியே இருக்கும் லூசியை விசாரிக்கும் போது அவள் தந்தையை பற்றி பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவருகின்றது மேலும் லூசியின் பிறந்த நாள் விழாவில் ஒரு சிறுவனிடம் சாம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள இதை கவனிக்கும் குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறை இப்படி உள்ள ஒருவனால் ஒரு குழந்தையை வளர்க்க முடியாது என்று கோர்டுக்கு போகின்றது. (போதைபழக்கத்திர்க்கு அடிமைகள்,அடிக்கடி ஜெயிலுக்கு  செல்பவர்கள்,ஏழைகள்,மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்  போன்றவர்களால்  குழந்தையை வளர்க முடியாது என்று இந்த துறை நினைத்தால் கோர்ட் மூலமாக அந்தக்குழந்தைகளை வேறொருவருக்கு தத்துக்கொடுக்கலாம், இப்படி ஒரு (உருப்படியான) துறை அமெரிக்காவில் இருக்கின்றது).

தனக்காக வாதாட ரீட்டா (Michelle Pfeififfer) என்னும் புகழ் பெற்ற வக்கீலிடம் செல்கிறான் சாம்.முதலில் மறுத்தாலும்,தன் சக ஊழியர்களிடம் ஏழைகளுக்கு இலவசமாகவும் தன்னால் வென்று கொடுக்க முடியும் என்று வெட்டியாக அலட்டிக்கொள்வதால் இந்த கேசை எடுத்துக்கொள்ள நேருகின்றது.இதை pro bono என்பார்கள்,சமுதாயத்தில் நல்ல புகழில் இருக்கும் டாக்டர்கள்,வக்கீல்கள் இப்படி இலவசமாக சில கேஸ்களை எடுத்துக்கொண்டு தங்கள் அந்தஸ்தை உயர்த்திக்கொள்வார்கள். உதாரணமாக அடிக்கடி தலையில் மண்  சட்டியுடனோ அல்லது குடிசைக்குள் குந்திக்கொண்டு கஞ்சி குடிப்பது போல் போட்டோ வெளியிடும் ராகுல் காந்தியை எடுத்துக்கொள்ளலாம்.

ஒருவருடைய செயல் திறனும்,அறிவும் அன்பு செலுத்துவதற்கு  எப்போதும் தடையாக இருப்பதில்லை, அது தேவையுமில்லை என்ற வாதத்தையும், அதற்கு தேவையான சாட்சிகளையும் ரீட்டா கோர்ட்டில் முன்வைக்கிறாள்.வருங்காலத்தில் சாமை விட லூசி அறிவில்  வளர்ந்து விடுவாள்,பெண்ணான அவள் பிரச்சனைகளை   சாம் போன்ற ஒருவனால்  புரிந்துகொள்ள  முடியாது என்று எதிர் கட்சி வக்கீல் வாதிடுகிறார். ஒரு காட்டத்தில் உடைந்து போன சாம் தான் லூசியை வளர்ப்பதற்கு எந்தத்தகுதியும் இல்லாதவன் என்று மனமுடைகிறான். அதனால் வழக்கும் தோற்றுப்போகின்றது. லூசி வேறு ஒரு தாயிடம் ஒப்படைக்கப்படுகின்றாள். இந்த வழக்கு  நடக்கும்   காலகட்டத்தில் சாம்-லூசி  இடையேயான  அதீத அன்பும்,அதை சாம் வெளிப்படுத்த தெரியாமல்  தவிப்பதையும் கண்டு ரீட்டா தன்னுடன்  பிணக்கில் இருக்கும் தன் பிள்ளையின் மீது அன்பு காட்டத்தொடங்குகின்றாள்.அன்பு எந்தப்பரிமானமும் இல்லாதது என்பதை புரிந்து கொள்கிறாள்.

வேறு வீட்டில் வளரும் லூசி தினமும் இரவுகளில் தன் தந்தையின் வீட்டிற்க்கு ஓடி விடுகிறாள்,அவள் தூங்கிய பின் அவளை மீண்டும் தூக்கி வந்து அவளை ஒப்படைக்கிறான் சாம். அந்த வாடகை தாய்க்கும் லூசியையும் சாமையும் பிரிக்கவே முடியாது என்பது புரிகின்றது. தன்னால் லூசிக்கு நல்லதொரு வாழ்கை கொடுக்க முடியாது என்பது சாமிற்கு புரிகின்றது.இறுதியில் மீண்டும்  தந்தையும் மகளும் சேர்ந்தார்களா என்று சன் டிவியில் டப்பிங் செய்து போடும் போது பார்த்துக்கொள்ளுங்கள்.

Milk,21 grams,U turn போன்ற படங்களில் நடித்து அசத்திய ஷான் பென்  சாமாக  இந்தபடத்தில் வாழ்ந்திருப்பவர்.சின்னசின்ன வேலைகளில் கவனமெடுத்து நேர்மையாகவும்  செய்யும் இடமாகட்டும், குழந்தைகள் போல் சொல்லவந்ததை சொல்லதெரியாமல்  வார்த்தைகள் கிடைக்காமல் திணறித்திணறி விட்டத்தை பார்த்து வாயை பிளந்து மூடும் மேனரிசம் ஆகட்டும் ,கோர்ட்டு காட்சிகளில் ரீட்டா மற்றும் அவனுடன்  இருக்கும் மனநலம் குன்றிய நண்பர்கள் எடுத்துக்கொடுப்பதை ஒப்பிப்பதாகட்டும்,   உடைந்து போய் தன்னுடைய குறை தனக்கு நன்றாக தெரிந்து,லூசிக்கு நல்ல வாழ்கை அமைய வேண்டும்,தான் அவளை வளர்க்க தகுதி இல்லாதவன் என்பதை உணர்ந்து நொந்து போவதாகட்டும்...இவரை அடித்துக்கொள்ளவே முடியாது என்று தோன்றுகின்றது.கொஞ்சம் பிசகி இருந்தாலும் ஓவர் ஆக்டிங் ஆக ஆகக்கூடிய காட்சிகள் அதிகம் அதையெல்லாம் மிக கவனமாக தாண்டுகிறார் பென்.உதாரணமாக எதிர் கட்சி வக்கீல் கேள்விகளை அடுக்கிகொண்டே போக,ரீட்டா சொல்லி கொடுத்ததையும் சொல்ல முடியாமல் உதடு துடிக்க அழும் காட்சி....நமக்கு எழுந்து நின்று கை தட்ட தோன்றும். தன்னுடைய பாத்திரத்திற்காக  மூன்று  மாதம்  மனநலம்  குன்றியவர்களோடு  கழித்து அவர்களை படித்திருக்கிறார்
பென்.(இதையும் எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை?).

லூசியாக நடித்திருக்கும் Dakota Fanning (War of the Worlds படத்தில் டாம் க்ரூஸின் மகளாக வரும் சிறுமி),சின்ன சின்ன வெளிப்பாடுகளை கூட தவற விடாமல்,திடீர் திடீரென்று மாறும் பாவங்களுடன் கலக்கி இருக்கிறாள்.குட்டி இதழ்களும்,பளிச் கண்களும்...கொள்ளை அழகு இந்த குட்டிப்பெண்.படத்தில் நான் ரொம்பவும் நேசித்த பாத்திரம் லூசி. 
அன்பு,காதல் போன்ற விஷயங்களை பற்றி பேசும் போது ஒரு வரி தான் ஞாபகம்  வருகின்றது "In life,you might get everything u want,but sooner you realize that all you need is love ".இதுவே வாழ்கையின் அடிநாதமாகவும் இருக்கின்றது இல்லையா?

பின்குறிப்பு:I am Sam - தெய்வத்திருமகள் இரண்டு பாடங்களுக்கிடையேயான ஒற்றுமை பற்றிய கட்டுரை விரைவில்.......

அன்புடன் 
நான்

- Copyright © துளி கடல் -