பிடித்த நடிகர்:கேப்டன் விஜயகாந்த் இது ஒரு நகைச்சுவை கட்டுரை என நீங்கள் நினைத்து படிக்கத்தொடங்கினால்,மன்னிக்கவும் இது உங்களுக்கானதல்ல.இன்று பல ஊடகங்களில் விஜயகாந்தை தாறுமாறாக கலாய்த்துக்  கொண்டிருப்பதற்கு  முற்றிலும் நேர்மாறான விமர்சனக் கட்டுரை. சிறுவயதில் ரசித்த, சுவற்றில்  கால்  வைத்து  சுற்றி அடிக்கும் முன்னாள் நடிகர் விஜயகாந்தை பற்றி எழுதி இருக்கிறேன்.

1991ல் கேப்டன் பிரபாகரன் படத்தை (ரிலீசான முதல் வாரம் என்று நினைகிறேன்) என் அப்பாவுடன் கடலூர்-வேல்முருகன் தியேட்டருக்கு   பார்க்கச்சென்றேன்.ஒரு சினிமாவிற்கு அவ்வளவு கூட்டம் வரும் என்பதை வாழ்வில் முதல் முதல் அங்கே தான் பார்த்து தெரிந்து கொண்டேன்,அந்த சின்ன தியேட்டரில் அப்படி ஓர் கூட்டம்.என் அப்பா ஒரு சண்டை பட பிரியர் என்பதால் எப்படியோ அடித்து பிடித்து டிக்கெட் வாங்கிவிட்டார்.(அவருக்கு தமிழ் சினிமா தோன்றியதிலிருந்து பிடித்த நடிகர்கள் எம்.ஜி.யார், விஜயகாந்த், அர்ஜுன், விஜய் ...வேறு யாரும் திரையில் தோன்றவே லாயக்கற்றவர்கள் என்பது அவரது கூற்று).என் சீட்டின் ஓரங்களில் இருவர், என் மடியில்  ஒருவர் அமர்ந்து கொள்ள எப்படியோ படத்தை பார்த்து முடித்தேன். ரசிகர்கள் போட்ட விசிலும்,அர்ச்சனையும்,ஆராதனையும்,கூச்சலும் படம் முடிகையில் முடிந்து விட்டது,ஆனால் படம் ரொம்ப நாள் மனதை விட்டு அகலவே இல்லை.

தமிழில் எனக்கு எப்போதுமே பிடித்த நடிகர் கமல்ஹாசன் தான் ( ஒரு தொடர் எழுதலாம் என்றிருக்கிறேன்) ,ரஜினியை பாட்ஷாவுக்கு அப்புறம் தான் பிடிக்கும் ஆகவே என் பிடித்த நடிகர் லிஸ்டின் இரண்டாம் இடத்தை எண்பதுகளின் இறுதியில் விஜயகாந்த் பிடித்துக்கொண்டார்.அப்பா வேலை செய்யும் ஊரிலிருந்து வார இறுதியில் வந்தால் எதாவது ஒரு ஜாக்கி ஜான் படத்திற்கோ அல்லது விஜயகாந்த் படத்திற்கோ சைக்கிளின் முன் கம்பியில் நிற்கவைத்து கூடிக்கொண்டு போவார்.மேலே சொன்ன இருவரின் படம் எத்தனை வாரம் ஓடினாலும்,அத்தனை  வார இறுதியிலும் அதே படம் தான் திரும்ப திரும்ப.ஆகவே எனக்கு விஜயகாந்த் மீது ஈர்ப்பு வந்ததற்கு நதி மூலம்,ரிஷிமூலம் பார்க்கத்தேவையில்லை.

இப்போதைய ஹீரோக்களுக்கு நடிக்க,அழ,காதல் செய்ய,சண்டை போட,நகைச்சுவை செய்ய வருகின்றதோ இல்லையா கண்டிப்பாக உடலை தரையில் போட்டுப்புரட்டி,உடம்பின் எல்லா பாகங்களையும் ஒரே சமயத்தில் ஆட்டி,காற்றை கர்பமாக்கும் நடன அசைவுகள் தெரிந்திருக்க வேண்டும்..."டேய் படம் எப்படி டா?....படத்தை விடு....டான்ஸ் எல்லாம் சூப்பர் மச்சி,என்னா மாறி ஆடுறான்... ..ஒரு பாட்டுல ஒரு பக்கம் மண்ணுக்குள்ள போய்...மறுபக்கம்  வெளியே வரான் பாரு......இதுக்கே படம் இருநூறு நாள் தாண்டி ஓடும்..எளுதி வச்சிக்கோ..."

ரஜினி,சத்யராஜ்,விஜயகாந்த்,கார்த்திக்,முரளி,மோகன்(இவர் வேகமாக கூட நடக்க மாட்டார்) போன்ற கமர்ஷியலாக வெற்றி பெற்ற நடிகர்கள் எந்தப்படத்திலும் பெரிதாக நடனம் ஆடியதில்லை,நடனத்திற்கு முக்கியத்துவமும் தரப்பட்டதில்லை,ஆகவே நாங்களும் அதை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதும் இல்லை.பெயர்  போடுகையில் "சண்டை காட்சி"யாரென்று மட்டும் பாப்போம்.பின்னாளில் தான் "கதாநாயகி(முக்கியமாக),  பாடலாசிரியர், இசை" போன்றவைகளையும் கவனிக்கத்தொடங்கினோம்..... கட்டுரை பாதை மாறுகிறது வேண்டாம்.... விஜயகாந்தின் சண்டை காட்சி என்றால் அப்படி பார்ப்போம்-சத்ரியன் படத்தில்  அடிப்பட்டு படுக்கையில் இருந்து எழுந்து,கன்னம் துடிக்க,கண்கள் சிவக்க உடற்பயிற்சி செய்யும் காட்சி, கேப்டன் பிரபாகரனில் ஓடும் ரயில் மேல் சண்டை செய்யும் காட்சி,புலன் விசாரணை படத்தின் இறுதியில் தலையில் நீரை சிலுப்பிக்கொண்டு சரத்குமாரோடு சண்டையிடும் காட்சி,சேதுபதி IPS படத்தில் சாக்கடைக்குள் நடக்கும் சண்டை போடுவது,ஊமை விழிகள்,செந்தூரப்பூவே....இன்னும் நிறைய படத்தின் காட்சிகள் மறக்கவே முடியாதது.

ரஜினி ரசிகர்களெல்லாம் அப்போது கமல் ரசிகர்களை ஓவராக வெறுப்பேற்றுவார்கள்,நாங்களும் கமல் ரசிகனென சத்தமாக வெளியே சொல்லவும் முடியாது ஏனெனில் தலைவர்,படத்தில் பொம்பளை விஷயத்தில் கொஞ்சம் வீக் ஆகா இருப்பார் மேலும் அவருக்கு  அப்போது பெரிதாக படங்கள் ஓடியது கிடையாது! ஆகவே நாங்க விஜயகாந்தை வைத்து ஈடு கட்டுவோம்.யாரை எப்படி அடித்தார், எத்தனை  பேரை அடித்தார்,மிஷின் கன் போன்ற அதி நவீன! துப்பாக்கி முதலிய வஸ்துக்களை எப்படி ஒரு கையால் தூக்கி சண்டை போட்டார் போன்ற விஷயங்களில் எங்களின் வாக்குவாதம் நடை பெறும். ஹீரோயின்களோடு ஓவராக அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு படுத்துபுரள்வது கிடையாது, எல்லாப்படங்களிலும் வில்லன்களை துவம்சம் பண்ணி,அநியாத்திற்கு நல்லவனாக இருப்பதால் விஜயகாந்த் எங்கள் தானை தலைவனாக ரொம்ப காலம் இருந்துவந்தார்.

பள்ளியில் நட்ராஜ் என்று ஒரு நண்பன் இருந்தான் அவனும்,அவனது அண்ணனும் வெறித்தனமான விஜயகாந்த் ரசிகர்கள்,அவர்கள் வீடு சுவர் முழுக்க விஜயகாந்த் விதவிதமான போஸ்களில் காட்சியளிப்பார்.அவர் படத்தின் முதல் நாள்,முதல் ஷோவை பார்த்துவிட்டு  எங்களுக்கு கதை சொல்வான்,நாக்கில் நீர் ஊற கேட்டுக்கொண்டிருப்போம் ,
தோளில் கை போட்டபடி விஜயகாந்துடன் நடராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாமிபடம் போல் போற்றி தன்னுடைய வேலடில் பாதுகாத்தான்.சமீபத்தில் நடராஜை முகநூலில் கண்டெடுத்தபோது எங்கேயோ வெளிநாட்டில் பைபிங் எஞ்சினியராக பெரிய உத்தியோகத்தில் இருப்பது தெரிந்தது,எதிர்பார்த்தது போல  அவன் ப்ரோபைல் படத்தில் கருப்பு கண்ணாடி போட்ட "சுதேசி" விஜயகாந்த்!

அப்புறம் பிள்ளயறிவு கரையக்கரைய விஜயகாந்த் கொஞ்சமாக அவுட் ஆப் போக்கஸில் மறைந்து விட்டார்.பின்னர் அவரும் சினிமாவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல கள்ளழகர்,பெரியண்ணா,தர்மா என்று தேய்ந்து தேய்ந்து நெறஞ்ச மனசு,சபரி,எங்கள் ஆசான் என கட்டெறும்பாகிவிட்டார்("ரமணா" மட்டும் ஒரு விதிவிலக்கு,கேப்டனின் மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாம்).சரியான படங்கள் தேர்வு,கணிப்பு இல்லாததால் படங்கள் ஊத்திக்கொள்ள,தமிழர்கள் தொன்று தொட்டு கேலி செய்து வரும் மாக் ஹீரோக்கள் (Mock Hero) லிஸ்டில் சேர்ந்து விட்டார்.முன்பொரு  காலத்தில் விஜயகாந்தின் தீவிர ரசிகர்களாக இருந்தவர்களெல்லாம் இப்போது அதை வெளியில் கூட சொல்ல மாட்டார்கள்,நீங்கள் வேண்டுமானால் கேட்டுப்பாருங்களேன்!


பொது வாழ்கை என்று பார்த்தால் 2006 தேர்தலில் ஒரு இடத்தை வென்று சட்டசபைக்கு போனது ,குடிகாரன் என்று தன்னை வர்ணித்த ஜெயலலிதாவை "நீங்கள் அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தீர்களா" என்று கலாய்த்தது,பின் அவருடனே வேண்டாவெறுப்பாக கூட்டணி வைத்து 2011 தேர்தலில்  இருபத்தி ஒன்பது  சீட்டுகள் வென்று,தமிழககட்சிகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்து விட்டது (இது பழம் பெரும் கட்சிகளாலும் தொட முடியாத உச்சம்),இன்னும் 2011 தேர்தல் பிரசாரத்தில் தன் கட்சி வேட்பாளரை அடித்தது,தொண்டர்களை திட்டியது, சமீபத்தில் சட்டசபையில் கொதித்தெழுந்து உறுமியது.அவரும் பிசியாகத்தான் இருக்கிறார்.ஆனால் அரசியல் ஏடுகளில் இதெல்லாம் கொஞ்ச நாளில் அழிந்து,மறைந்து விடும்,இன்னும் அவர் போக வேண்டிய தூரம்,அடைய வேண்டிய உச்சம் வெகுவாக இருக்கிறது.தனிப்பட்ட முறையில் அந்த கட்சியின் மீது பெரிதாக அபிமானம் ஏதும் வரமாட்டேன் என்கிறது.

போனவாரம் எதாவது தமிழ் படம் பார்க்கலாம் என்ற நினைத்து பெட்டியை திறந்து தேடியதில் சிக்கியது கேப்டனின் பிரபாகரன்.இப்போது கிம் கி டுக்,ஜில் ஜங் ஜக்  என பீலா விட்டுக்கொண்டு திரிந்தாலும்  இது போன்ற படங்களை பார்க்கும்போது:போஸ்ட் பாக்ஸ் வைத்த  அரைகால் சட்டை போட்டுக்கொண்டு,கையில் பிசுபிசுத்திருக்கும் கடலை உருண்டயுடன், அப்பாவின் சைக்கிளின் முன் கம்பியில் அவரின் தோளை சுற்றி வளைத்துக் நின்றுகொண்டு ராஜபாட்டையில் சினிமாவுக்கு போன கள்ளங்கபடமில்லா நான் நினைவுக்கு வருகிறேன்.அந்த நினைவு ரொம்ப அழகாக இருக்கிறது.மேலும் அடிக்கடி இது போல பழைய விஷயங்களை சிந்தித்து,தோண்டி எடுத்து எழுதும்போது தான் உயிரோடு இருப்பதே தெரிகின்றது.

அன்புடன்
நான்.

2 Responses so far.

  1. Ibrahim A says:

    thanks for visiting samy

- Copyright © துளி கடல் -