பகுதி-2
I am Sam (2001)-  தெய்வத்திருமகள் -இன்ஸ்பிரேஷன்?

I am Sam (2001) ,ஆங்கிலப்படத்தின் விமர்சனத்தை இங்கே சென்று படித்துவிடுங்கள்.முதலில் ஒன்றை சொல்லிவிடுகின்றேன் வெறும் ஆங்கிலப்படங்களாக பார்த்துக்கொண்டு,"I dont see taamil films yaar"என்று அல்டாப்பு செய்து புத்திஜீவியாக காட்டிக்கொள்ளும் நோக்கமெல்லாம் இல்லை. சினிமாவின் மீது தீராக்காதல் கொண்டதனால் உலகின் அனைத்து மொழியில் வரும் நல்ல திரைப்படங்களை தேடித்தேடி பார்த்து,தமிழிலும் அது போல் நல்ல படங்கள் வராதா என ஏங்கி ஏமாறுபவன். எப்போதாவது வரும் மாறுபட்ட ,சீரியசான, பொதுவான தமிழ் க்ளிஷே இல்லாத தமிழ்  படங்களை  அநியாத்திற்கு தூக்கி வைப்பேன். தமிழில் இந்தவகை படங்கள் வந்து அது தோல்வியை தழுவினால் அந்த முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டும் என் நினைகிறேன்.அதற்க்கு நல்ல சினிமாவை கணிக்க தெரியவேண்டும்,அதற்க்கு முதலில் பில்லாகளையும், குருவிகளையும் விட்டு வெளியே வர வேண்டும்.

இவை ஒருபுறம் இருக்க மாறுபட்ட சினிமா எடுக்கிறேன் பேர்வழி என்று ஒரே மாதிரி கலைந்த தலையும்,முள்தாடியும்,டிரௌசர் தெரிய கைலியும் கட்டிய ஹீரோக்களையும்,கருப்பு பூசிய ஹீரோயின்களை வைத்து,ஒரே சாயலில் எத்தனை படம் தான் எடுப்பது?அப்படி இல்லையென்றால் ஒரு இயக்குனர் தான் குழுவுடன் உட்கார்ந்து கதையை வடிக்காமல்,தான் பார்த்த ஆங்கிலப்படங்களுக்கு,கொரியப்படங்களுக்கு போய் விடுகிறார். ஆக ஒரு இயக்குனர்&குழு செய்யும் வேலை....ஏதோ ஒரு படத்தை நம் ஊருக்கு தகுந்தார் போல் மாற்றம் செய்வது மட்டுமே.அது  போல் ஒரு வெற்றி படத்தை  கொடுத்து விட்டால் போதும்,அடுத்தும் வெற்றிப்படமாக கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இங்கே,எனவே பதற்ற நிலையில் ஏதாவது ஒரு வெளிநாட்டு படத்தை சுட வேண்டியது.... உதாரணமாக "யோகி"அமீர், "நந்தலாலா" மிஸ்கின் இன்னும் நிறைய பேரை இந்த லிஸ்டில் சேர்க்கலாம்.


அதே போல் வாய்ப்பில்லாமல் சுற்றித்திரியும் காலகட்டத்தில் ஒரு இயக்குனர் தன்னுடைய வறுமையாலும், விரக்தியாலும் வெற்றி பெறவேண்டும் என்ற வெறி அதிகமாக இருக்க மிக அருமையான கதையை ஒன்று புனைந்திருப்பார். வாய்ப்புக் கிடைக்கையில் அது திரையில் மிளிர்ந்து அது மாபெரும் வெற்றி பெற்று விடும்....அதோடு சரி அதற்க்கு பின் தலைக்கனமோ என்னவோ அவருக்கு உழைக்க வளையாது ,சிந்திக்கவும் முடியாது-கால்மேல்கால் போட்டுக்கொண்டு, மீடியாவில் வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டு I am sam,Tsotsi, kukijiro வை உல்டா செய்வார்கள்....இப்படி நம் கலைஞர்கள் பிறபடங்களை நாட தயாரிப்பாளர்கள், ரசிகர்களும் ஒரு காரணம்..அதிக எதிர்பார்ப்பு.இப்படி  ஒன்றுக்குள் ஒன்றாக எப்படியோ   பிணைந்து போய் நாசமாகிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.
உலகின் சிறந்த இயக்குனர்கள் பலர் வாழ்கையில் இருந்தும்,சமுதாய பிரச்சனைகளிலிருந்து கதைகளை எடுக்கிறார்கள்.ஈரானை சேர்ந்த   மஜீத் மஜீதி,அப்பாஸ் கிராஸ்தமி சின்ன சின்ன அழகியலிலிருந்து மகத்தான  கலை படைப்பை அனாயசமாக உருவாக்குகின்றார்கள் இத்தனைக்கும் ஈரான் போன்ற நாடுகளில் படம் எடுப்பதற்கு நிறைய  கட்டுப்பாடு உள்ளது.(ஒரு ஆண் பெண்ணை சும்மா தொடுவதாக கூட காட்சி வைக்க முடியாது!) 

ஹாலிவூட்காரர்கள் தங்களுக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.அவர்கள் நாவல்களிலிருந்து கதையை எடுக்கின்றனர்.உலகத்தரம் வாய்ந்த பல படங்கள் நாவலிலிருந்தும், சிறுகதைகளில் இருந்தும் தான் எடுக்கப்பட்டிருக்கின்றன.ஸ்டீபன் கிங் என்ற எழுத்தாளரின் நாவல்கள்,சிறுகதைகள் Shawshank Redemption,Green Mile,The Shining ஆக மாறி இருக்கின்றன.iRobot,bicentinnial man போன்ற வெற்றிப்படங்கள் ஐசக் அசிமோவின் கதைகளே. ஹாலிவூடில் வித்யாசமான கதைக்கலனுடன், தங்களின் படங்களில் இசை,வசனங்கள்,காட்சியின் அழகு போன்றவை பிரதானமாக இருக்கும் படி பார்த்துக்கொள்கின்றனர்.அதனால் பரந்த ஈர்ப்பை பெறுகின்றனர்.

கொரிய படங்கள் ஒரு தனிவகை,அமெரிக்க திரைப்படங்களுக்கு நேரெதிரானதாக இருக்கும் அவர்களுடைய திரையின் மொழி. கொரியப்படங்களில் வசனம் தனியாக,செயற்கையாக நீட்டிக்கொண்டு தெரியாது.அது போல் அவர்கள் காட்டும் காட்சியின் அழுத்தம்.... பார்ப்பவர்களை மூச்சுத்திணற வைக்கும் அளவுக்கு அழுத்தமாக  இருக்கும்..... அதற்க்கு எந்த பின்னணி இசையும் தேவையிராது.இன்னும் சொல்லபோனால் பின்னணி இசையென்ற ஒன்றை தேடினாலும் கண்டு பிடிக்க முடியாது .இவர்கள் திரையில் காட்டும் உலகம் ரத்தமும்,சதையும் கொண்டதாக இருக்கும்.இவர்களில் பல இயக்குனர்கள் உலகளவில் பேசப்பட்டு வருகின்றனர்.

இன்னும் ஐரோப்பிய இயக்குனர்களில் நிறைய பேரை திரைக்கதைக்கு உதாரணமாக சொல்லலாம் குறிப்பாக ஹென்க்கல்,டாம் டைக்வர்,மைகேல் ஹினகே  போன்றவர்கள் எடுத்துக்கொள்ளும் கதை மிக சாதாரணமாக இருக்கும் ஆனால் அவர்களின் திரைக்கதை உலகத்தரமாக இருக்கும். அதனாலேயே அவர்கள் பேசப்படுவார்கள்.


இப்படி உலகெங்கும் படமெடுக்க விதவிதமான மூலத்தை தேட,நம்மில் சில இயக்குனர்கள் டிவிடிஐ தேடுகின்றார்கள்.மேலே சொன்ன எல்லா இயக்குனர்களும் சினிமாவை ஒரு கலையாக நினைக்கிறார்கள்,இவர்கள் கூட்டாக உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியையும் உளியை வைத்து கல்லை செதுக்குவது போல் செதுக்குவார்கள் என்று நினைகிறேன்.(ஒரு நல்ல காட்சியை பார்க்கும் போது,புத்தகத்தில் ஒரு நல்ல வரிகளை படிக்கும் போதும்...ச்ச!இதை உருவாகியவன் இதை எந்த மாதிரி மனநிலையில் வடித்திருப்பான் என கற்பனை நீளும்,பேராச்சர்யமாக இருக்கும்!!).அதே போல் யாருக்கு எது நன்றாக வருகின்றதோ அதை மட்டுமே செய்வார்கள், நீங்கள் எந்த ஆங்கிலப்படத்தின் டைட்டிலில் ஆவது "கதை,திரைக்கதை,வசனம்,பாடல்,நாடனம்,ஒளிபதிவு,லைட் மேன்,டச் அப் பாய்....." என்று போடுவதை பார்த்திருக்கிறீர்களா? தமிழ் சினிமாவில் மட்டும் தான் இந்த கூத்தெல்லாம் நடக்கும்...இந்தியாவில் புகழ் பெற்ற இயக்குனர் என பெயரெடுத்திருக்கும் மணிரத்னம் கூட தன் மனைவி சுஹாசினியிடம் வசனம் எழுதக்கொடுக்கிறார் ..கொடுமை! (ராவணன்....ஒரு மரண வேதனை),இன்னொரு மோசமான உதாரணம் (எனக்கு ரொம்ப பிடித்த) கமல் ,திரும்ப திரும்ப இதே தவறை இவர் பல ஆண்டுகளாக செய்து வருகிறார்.

ஒன்று தங்கள் இஷ்டத்திற்கு,ரசிகர்கள் இதைதான் விருப்பப்படுகிறார்கள் என்ற புரிதலில் எதையாவது செய்து வைக்க வேண்டியது. இல்லையென்றால் யோசிக்க திராணி இல்லாமல்,எப்படியாவது வெற்றி பெற்றால் போதும் என்று கதயயோ, காட்சிகளையோ எடுத்துப்போட்டுகொள்வது.ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு தமிழ் சினிமாவுக்கு ஏதோ தர விரும்பிகிறேன் என்று நினைத்துக்கொண்டு நேர்மையாக தோல்வியோ,வெற்றியோ பார்க்காமல் படமெடுக்கும் இயக்குனர்களை பாராட்டலாம்.ஆனால் அப்பட்டமாக காப்பியடிக்கும் விஷயத்தை யார் செய்தாலும் மனது ஏற்க மறுக்கிறது.அது சினிமா என்னும் கலைக்கு செய்யும் துரோகம் எனவும் தோன்றுகின்றது.

சரி,இன்ஸ்பிரேஷன்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன?காப்பி அடிப்பதற்கும் ,இன்ஸ்பிரேஷனுக்கும் என்ன வித்யாசம்? சில  உதாரணங்களை இன்ஸ்பிரேஷன் வகையில் எடுத்துக்கொள்ளலாம்.மணிரத்னத்தின் நாயகன்,கமலின் தேவர் மகன்,ஆர்ஜிவீ யின் சர்கார் போன்ற படங்கள் பிரான்சிஸ் கப்போலாவின் காட் பாதரை தழுவி எடுக்கப்பட்டதென்று ஒரு பேச்சு உண்டு,உண்மை தான் ஆனால் அதை நிச்சயமாக காப்பி அடிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. வேலு நாயகர் செய்வது ராபின் ஹூட் வேலை (பணக்காரர்களிடம் சூறையாடி ஏழைகளுக்கு தருவது),தேவர் மகனும் கிட்ட தட்ட இப்படி தான் ,ஆனால் காட் பாதரில் நடப்பது கார்லியோனி குடும்பத்தின் சண்டை, இதில்  சேவையோ பொது ஜனமோ அங்கே எதுவுமில்லை. பொதுவாக எல்லா டான் படங்களையும் -ஒரு சாதாரணன் எப்படி டானாகின்றான் (evolution),டானாக அவன் ஆட்சி,பின்னர் அவன் எப்படி அழிக்கப்படுகின்றான் என்ற மூன்று கோட்பாடுகளுக்குள் அடைக்க முடியும்.கிட்ட தட்ட எல்லா டான் படங்களுக்கும் காட் பாதரின் சாயல் இருக்கும். இன்னும் மணிரத்தினத்தின் ரோஜாவில் "சத்யவான்-சாவித்திரி" கதை,தளபதியில் "மகாபாரதம்",ராவணனில் "ராமாயணம்",அன்பே சிவத்தில் "Trains and Automobiles", பொல்லாதவனில் "bicycle thieves"...... என்று வேறு வேறு தளத்தில் இருந்து கவரப்படதாக இருக்கும்,இது கூட சகிக்ககூடியது தான்.(ஒருவகையில்)

ஆனால் காப்பி அடிப்பது, மொத்தமாக உருவப்பட்டது என்பது என்ன?
I am Sam படத்திற்கும்,தெய்வதிருமகள் படத்திற்கும் உள்ள ஒற்றுமையை பார்த்தால் புரியும்.

பின் குறிப்பு :இந்த பகுதியே வளவளவென்று போய்விட்டதால்,வேறு வழி இல்லாமல் அடுத்த பகுதியில் I am sam படத்திற்கும் தெய்வத்திருமகள் படத்திற்குமான ஒற்றுமையுடன் முடிக்கிறேன்.

அன்புடன்
நான்

4 Responses so far.

 1. STP says:

  உங்களது பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது. சினிமாவைப் பற்றிய தங்கள் பார்வை மிகத் தெளிவாகவும் சரியாகவும் இருக்கிறது. நீங்கள் சொன்னதுபோல் மற்ற மொழிப்படங்களைப் பார்த்து காப்பி சோதிக்கும் விஷயம், அப்படி காப்பியடித்து படம் எடுப்பவர்கள் ஏதோ தாங்கள்தான் சிறந்த படைப்பாளிகள் என்கிற அளவுக்கு அவர்கள் பேசும் பேச்சுதான். இப்படிப்பட்டவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டவே இந்த மாதிரி பதிவுகளை நீங்கள் எழுத வேண்டும்.
  என்னால் முடிந்த அளவு நானும் சினிமாவைப் பற்றி எழுதியிருக்கிறேன். தாங்கள் படித்துவிட்டு கருத்துக்களைச் சொல்லவும். எனது வலைப்பூ முகவரி stptpathivugal.blogspot.com.

 2. Nice post. Your view on cinema is somewhat similar to me. Visit my site also.
  http://varikudhirai.blogspot.com

 3. வருகைக்கு நன்றி STP. மக்களுக்கு அடையாளம் காட்டும் நோக்கம் பெரியளவு இல்லையென்றாலும்,வயிற்றெரிச்சலால் தான் எழுத வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு படத்துக்காக ஒவ்வொருத்தனும் எவ்வளவு உழைப்பு செய்கிறான்? எவ்வளவு மண்டையை பிடுங்கிக்கொள்கிறான்? ஒரு ஓவியம் வரைகயில்,ஒரு புத்தகம் எழுதுகையில்,கவிதை புனைகையில் கலைஞன் எவ்வளவு பாடுபடுவான்? எத்தனை முறை எழுதி எழுதி கிழிப்பான்? அது போல் தானே சினிமாவும்? எங்கோ எவனோ எடுப்பதை ..இவர்கள் எலி மூளையை வைத்துக்கொண்டு காப்பி அடிப்பார்களாம்.....என்னப்பா நியாயம் இது?
  தங்களுடைய பதிவுகளை நிச்சயம் படிக்கிறேன்..நன்றி!

 4. வருகைக்கு நன்றி வருகைக்கு நன்றி.தங்களுடைய பதிவுகளை நிச்சயம் படித்துவிட்டு சொல்கிறேன்.

- Copyright © துளி கடல் -