பகுதி-3
I am Sam (2001)- தெய்வத்திருமகள் - "காப்பி"யம்?

I am Sam ஆங்கிலப்படத்தின் விமர்சனத்தை இங்கே சென்று படித்துவிடுங்கள்.(பகுதி-1)
I am Sam தெய்வத்திருமகள் -இன்ஸ்பிரேஷன்? இங்கே சென்று படித்துவிடுங்கள்.(பகுதி-2)
இந்த பகுதியில் நேராக சொல்ல வந்த விஷயத்திற்கு வருவோம்.
I am Sam நாயகன் சாம் குழந்தைகளை போல் எந்த ஒரு செயலையும் கவனமாகவும் நேர்மையாகவும் செய்பவன். தான் வேலை செய்யும் இடத்தில் கலந்து கிடக்கும் சாக்லேட்,வெண்ணிலா பவுடர் பாக்கெட்டுகளை நிறம் வாரியாக பிரித்து வைப்பான்,நம்ம கிருஷ்ணாவும் நிறம் வாரியாக சாக்லேட்டுகளை பிரித்து வைப்பான்.அதில் சாம் சிக்னல் பார்த்து கடப்பது ஒரு சின்ன குறிப்பாக வந்து போகும் இதில் படம் முழுக்க அங்கங்கே முக்கிய காட்சியாகவே வரும்.சாமை போல் கிருஷ்ணாவும் "பொய் சொல்ல கூடாது தப்பு" என்கிறான்.

குழந்தை பிறந்ததும் சாமின் மனைவி அவர்களை விட்டு  பிரிந்து  விடுவாள், சாம் வேலைக்கு செல்லும் நேரத்தில் தன் பக்கத்துக்கு வீட்டு பெண்மணியிடம் குழந்தையை கொடுத்து செல்வான். குழந்தையும் ஆனி என்று அவள் பெயரை தான் முதலில் சொல்லும்.ஆனி சாமிற்கு இசை பற்றி கற்றுக்கொடுத்தது போலவே லூசிக்கும் கற்றுக்கொடுப்பாள். இங்கே பெண் வீட்டை விட்டு ஓடினால் அந்த குழந்தையே நம் ரசிகர்கள் மதிக்க மாட்டார்கள், இன்னும் கொஞ்சம் பரிதாபத்தை கூட்ட  அம்மாவை  பிரசவத்தில் கொன்று நிலாவை அனாதயாக்குகின்றனர்.அதே போல் பக்கத்துக்கு வீட்டு பெண் கிருஷ்ணா குழந்தையை வளர்க்க உதவி செய்கிறாள் (இங்கே நகைச்சுவை என்ற பெயரில்,கமர்ஷியல் சினிமா என்ற போர்வையில் கொஞ்சம் ஆபாசம்... இதையெல்லாம் டைரக்டர் விருப்பப்படவில்லயேயானாலும் தயாரிப்பாளர் புகுத்தியிருப்பார்.

சாமின் மனநலம் தவறிய நண்பர்கள் படம் முழுக்க சாமுடனே இருப்பார்கள், கோர்டில் சாம் தடுமாறும் காட்சிகளில் நண்பர்கள் எடுத்துக்கொடுப்பார்கள். அவர்கள் வரும் காட்சிகளில் கதயோடிழைந்த நகைச்சுவையும் இருக்கும். ஆனால் கிருஷ்ணாவின் நண்பர்களை பகடிக்காக மட்டுமே பயன்படுத்தி இருப்பார் இயக்குனர்.

இங்கே ஒரு காட்சியை சொல்கிறேன்,லூசிக்கு ஷூ வாங்க பணம் பற்றாததால்,சாமின் நண்பர்கள் தங்களால் ஆன சில்லறையை பொருக்கி கொடுத்துவிட்டு "சரியாக இருக்கிறதா? என்பார்கள்,அதற்க்கு கடைக்காரன் "கடவுள் என்று ஒருவன் இருந்தால் சரியாக இருக்கும்" என்று நெகிழ்வான். "இந்த ஷூவுடன் பலூன் தருவீர்களா? லூசிக்கு மட்டும் தான் தருவீர்களா? என்பான் சந்தேகத்துடன்  சாமின் நண்பன்.அடுத்த காட்சியில் சாம்,சாமின் நண்பர்கள்,லூசி எல்லோரும் ரோட்டை கடக்கையில் பலூனுடன் நடப்பார்கள். மேலும் இந்த காட்சி Beatles ராக் இசை குழுவினர் ஆபி ரோட்டை கடக்கும் பிரபலமான போட்டோவிற்கு ஒப்பானது(ஆபி ரோடு என்னும் பிரபலமான Beatles குழுவினரின் ஆல்பத்தின் போஸ்டரும் இதுதான்.இன்றும் இந்த ரோடின் அருகில் கேமரா ஒன்று உள்ளதாம், டூரிஸ்டுகள் இந்த ரோட்டில் அது போலவே நடந்து போட்டோ எடுத்துக்கொள்ள!!).உலக ரசிகர்களை கவர்ந்திழுத்த Beatles குழுவினருக்கு  காணிக்கயாகவே இந்த பலூன் காட்சியை இயக்குனர் ஜெசி நெல்சன் வைத்திருப்பார். (படத்தை பாருங்கள்) ஆனால் தெய்வத்திருமகளில் ஏன்? எதற்கு? என்று தெரியாமலேயே ஷூ வாங்கியவுடன் எல்லோரும் பலூனை பிடித்துக்கொண்டு ரோட்டை கடப்பார்கள்.(டைரக்டர்-"பலூனை பிடிச்சிட்டு நடக்கிறது நல்ல இருக்கு,அப்படியே வச்சிடுவோமா? யாருக்கு தெரிய போகுது...")
I  am Samல்  அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறையால் லூசி பிரிக்கப்படுவாள் அவர்கள் மூலமே கோர்ட் கேஸ் நடக்கும், தந்தையும்-மகளும் சந்திக்க கோர்ட் வாரத்திற்கு இரண்டு மணி நேரம் ஒதுக்கும்.பின்னர் லூசி வாடகை தாயிடம் ஒப்படைக்கப்படுவாள்.அதன் பின்னும் இரவில் எழுந்து சாமிடம் ஓடிவருவாள்.ஒரு கட்டத்தில் சாம் தன் குறையை உணர்ந்து அவளை தத்துக்கொடுப்பது தான் சரியென உணர்வான்,அதே நேரத்தில் மற்ற எல்லோரும் தந்தை-மகள் பாசத்தை  கண்டு அவர்கள் சேர்வது தான் உசிதம் என புரிந்து கொள்வார்கள்.

குழந்தைகள் நலத்துறை  எதுவும் நம்மூரில் இல்லாததால்  தெய்வத்திருமகளில் அழகான(அப்படி ஒன்றும் அழகில்லை) சித்தியாக அமலா பால்,லூசியின் பணக்கார தாத்தா (அது சரி மகளையே கை விட்ட தாத்தாவிற்கு எப்படி பேத்தி மேல் இவ்வளவு அக்கறை?).பணக்கார வக்கீல் மூலம் கேஸ் நடத்துகிறார்.இங்கேயும் கோர்ட் இரண்டு மணி நேரம் ஒதுக்குகின்றது(நாசர் ஓடிவந்து விழும் காட்சி),கிருஷ்ணாவும் இரவில் நிலாவிடம்   ஓடிவருகிறான், கிருஷ்ணாவும் குறையை உணர்கிறான்... நாசரும்,நிலாவின் தந்தையும், அமலா பாலும் அவர்கள் பாசத்தை உணர்கிறார்கள்.....உஸ்ஸ் யப்பா!!!!  முடியல!

சில காட்சிகளை இங்கே நம்ம நாட்டில் வைக்கமுடியாது என்று கருதி அதை மற்றும் மாற்றி இருகிறார்கள்..அவ்வளவே.சாமின்  வழக்கை நடத்தும் ரீட்டா தன் ஐந்து வயது மகனுக்கு நேரம்  ஒதுக்காதது கண்டு மனமுடைகிறாள், அவன் மேல் பாசம் கொள்கிறாள்.இங்கே கேசை நடத்தும் அனுஷ்காவிற்கு....(என்னது!!!அனுஷ்காவிர்க்கு ஐந்து வயது மகனா? என்ன விளையாடறீங்களா?  அப்படி வச்சா தமிழ் நாடே பத்தி எறியுமப்பா!!!)   பாசமில்லாத அப்பாவாக 
YG. மகேந்திரன்..பின்னர்...டிட்டோ!!மேலும் அனுஷாவை போல் இளமையான வக்கீலை போட்டால் தானே கிருஷ்ணா தொட்டவுடன் மழையில் நனைந்த படி பாடல் வைக்க முடியும்...(ஆமாம், எதுக்கு இந்த பாட்டு? ஜி.வி பிரகாஷ் விஜயிடம் போய் "சார்..சார் நானே சொந்தமாக போட்ட டுயூன் சார்..படத்தில எங்கயாவது வைங்க சார்..ப்ளீஸ் சார்,சைந்தவிய பாட வைக்கலாம் சார்" என்றிருப்பாரோ?)

இன்னும் நிறைய சொல்லலாம்..ஆனால் போதும்!இவ்வளவையும் செய்து விட்டு படம் ரிலீசாவதற்கு  முன்னும்,பின்னும் விஜய் டிவியில் வந்து உட்கார்ந்து கொண்டு தான் பிறக்கும் போதே  இந்த கதையோடு,பிறந்த மாதிரி ஒரு பில்ட் அப். விக்ரமும் ஏதோ மனநலம் சரி இல்லாத குழந்தைகளை பார்த்து,படித்து நடித்ததாக சொன்னார் ஆனாலும் ஷான் பென் சாயல் நிறைய இருக்கும். எப்படி ஆனாலும் விக்ரமின் மிதமிஞ்சி இராத நடிப்பு தான் படத்தின் ஒரே சிறந்த அம்சம்.

"காப்பி+பேஸ்ட்" ஆட்கள் "ஒரு படம் பார்த்தேன்,என்னை ரொம்ப பாதித்து விட்டது அதனாலேயே அதை தமிழில் எடுக்கிறேன்"என்று கூறி அதை டைட்டிலில் போடலாம்,கொஞ்சம் நேர்மையாக இருக்கும்,நமக்கு ஆறுதலாக இருக்கும்.....ஹுஹும்...செஞ்சிட்டாலும்!!!படத்தை எடுக்க வேண்டுமென்று நினைத்தபின் எதாவது டீவீடீயை தேடத் தொடங்கும்  நமக்கு விமோசனமே கிடையாது.

மற்றபடி I am Sam பார்த்திராத,கேள்விப்பட்டிராத ரசிகர்களுக்கு தெய்வதிருமகளின் நிறைய காட்சிகள் கண்ணீரை வரவழைக்கலாம், பாசத்தை உணர்த்தலாம்,இன்னும் என்னென்னவோ செய்யலாம்.....ஆனால் எல்லாமே இரவல் வாங்கியவை தான்.

தேவையில்லாத குறிப்பு: இத்தனைக்கும் I am Sam படம் ஆகச்சிறந்தது என்று சொல்லிவிட முடியாது.ஒரு சாதாரண சென்டிமென்ட்,பீல்-குட் மூவி அவ்வளவே!

அன்புடன்
நான்.

- Copyright © துளி கடல் -