Julia's Eyes (2010) - ஒரு முழுமையான த்ரில்லர் திரைப்படம்


விமர்சனத்திற்கு போவதற்கு முன்னால்,படம் அருமையான த்ரில்லர்  என்பதற்கு ஒரு உதாரணக்காட்சியை சொல்லி விடுகிறேன்."கண்தெரியாத  நான்கைந்து பெண்கள்,குளியலறை பக்கமாக நின்று பேசி கொண்டிருகின்றனர்... அவர்கள் கவனிக்காவண்ணம்  அவர்களூடே   வந்து நிற்கும் ஜூலியா அவர்கள் பேசுவதை  ஒட்டுக் கேட்டுகொண்டிருக்கிறாள். திடீரென்று அந்த குருடிகள் தங்கள் அருகில் இன்னொரு உயிர் இருப்பதை உணர்ந்து கைகளால் துழாவி ஜூலியாவை பிடித்து விடுகின்றனர்,அதன் பின்னர் அவள் தன்னை யாரென்று அறிமுகம்  செய்து கொண்டு அவர்களுக்கு சமாதானம்  சொல்கையில்,ஒரு குருட்டுப்பெண்  கேட்கிறாள்  "சரி,இருக்கட்டும்... யாரவன்?உன்னுடன் இங்கு ஒரு ஆண் வந்திருக்கிறான்..உனக்கு பின்னே தான் நிற்கிறான்....யாரவன்?"

நிறைய த்ரில்லர் வகை படங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன  ஆனால் இப்போதெல்லாம் நிறைய படங்கள் பெரியதாக நம்மை பயமுறுத்துவதே இல்லை,ஒரு ஐம்பது திகில் படங்கள் பார்த்துவிட்டால் போதும் பின் நீங்களாகவே அடுத்தடுத்த  காட்சியை ஊகிக்கத்தொடங்கி விடுவீர்கள்.பேய்ப்பட இயக்குனர்களும் மக்களை பயமுறுத்த எவ்வளவோ முயல்கின்றனர்... ஹுஹும் ரொம்பச்சொற்பமே வெற்றிபெறுகின்றன. (ஆனால் இன்னும் "ஈவில் டெட்" போன்ற ஆதிகாலத்து பேய் படங்களை காணின், திரையில் பேயை பார்ப்பவர்களை விட அதிகமாக கத்துபவர்கள் இருக்கிறார்கள்..என் சகர்தமினி உட்பட).அந்த வகையில் நிறைய "திடுக்" காட்சிகளுடன் ,ஒரு முழுமையான   த்ரில்லர் பார்த்த அனுபவத்தை தருகின்றது....ஜுலியாஸ் ஐஸ் (Julia's Eyes) 

ஜூலியாவின் இரட்டை சகோதரி-பார்வை பறிபோன சாரா தற்கொலை செய்து கொள்ள,அதை சந்தேகிக்கும் ஜூலியா அதனை கொலை என கருதி ஆராயத்தொடங்குகின்றாள் . Degenerative eye disease என்னும் நோயால்  கொஞ்சம் கொஞ்சமாக பார்வை  இழந்து கொண்டே வரும் ஜூலியாவை கொலைகாரனும் பின் தொடர்கிறான்!இந்த தேடும் படலத்தில் ஜூலியா தன் கணவனையும் தொலைத்து விடுகிறாள். பின்னர் எப்படி அந்த கொலைகாரனை கண்டு கொள்கிறாள்,அவன் கண் தெரியாத சாராவையும், பின்னர்  ஜூலியாவையும்  துரத்தக்காரணமென்ன?இறுதியில் ஜூலியா என்ன ஆகிறாள்? என்பதை  அவ்வளவு சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்கள்.

படத்தின் முதல் காட்சியில் கண் தெரியாத சாரா கொலைகாரனிடம் பேசிக்கொண்டே தற்கொலை செய்து கொள்வதிலிருந்தே  நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள்.அதன் பின் ஜூலியா,சாரா சென்ற ஒவ்வொரு இடமாக சென்று விசாரிக்க தொடங்க,அவளை கொலைகாரனும் பின் தொடர்கிறான்.ஒரு கட்டத்தில் கண் பார்வை முற்றிலும் பறி போய், மாற்றுக்கண் பொருத்தப்பட்டு,ஆபரேஷன் செய்து கொண்டு,கண்களில் கட்டு போட்டுக்கொண்டு திரிகிறாள்....அப்போது நடக்கும் காட்சிகள் தான் உச்சக்கட்டம் (எந்தக்காட்சியையும் விவரித்து எழுதப்போவதில்லை,"கிக்"  போய்விடும்!)

படத்தில் இன்னொரு அற்புதமான விஷயமென்னவென்றால் ஜூலியவிற்கு கண் பார்வை குறைந்து கொண்டே வருவதனால் அவள் பார்வை  வழியே  தெரியும் காட்சிகள் எல்லாம் நமக்கும் மங்கலாக,கலங்கலாகவே தெரியும். எனவே ஜூலியா பார்க்க முடியாமல் தடுமாறும் இடங்களில் நாமும் தடுமாறுவோம்.ஒரு கட்டத்தில் ஜூலியாவிற்கு ஆபரேஷன் செய்து கண்களில் கட்டு போட்ட பின்பு அவளால் யார் முகத்தையும் பார்க்க முடியாததால் நமக்கும் யார் முகத்தையும் காட்ட மாட்டார்கள். கொலைகாரனை யூகிக்க முடிந்தாலும் அவன் முகத்தை நாம் பார்க்க முடியாது.

The orphanage படத்தில் நடித்த (வயதான) Belén Rueda தான் நாயகி.கண் தெரியாமல் தடுமாறும் காட்சிகளில்,பின்னர் கொலைகாரனிடம் சிக்கித் தவிக்கையில் நன்றாகவே நடித்திருப்பார்,நல்ல தேர்வு!
குறையென்று சொல்லப்போனால்-கொலைக்கான காரணம் லேசாக உதைக்கிறது,இறுதிக்காட்சிகளில் கொஞ்சமே கொஞ்சம் தொய்வு ஏற்படுகின்றது.ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியே ஏற்படுகின்றது.தவற விடாமல் நிச்சயம் பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்டில் இதனை சேர்த்துக்கொள்ளலாம்.

 படத்தின் ட்ரைலரை காண


அன்புடன்
நான்.

- Copyright © துளி கடல் -