Archive for November 2012

The Game(1997):மண்டையில் குட்டு வைத்த படம்

The Game(1997):மண்டையில் குட்டு வைத்த படம்


The sixth sense,The usual suspects,old boy,seven,Identity,Seven,Memento,Fight Club இந்தப்படங்களுக்கு உண்டான ஒற்றுமை என்ன?சுமாரான பட்ஜெட்டில்,பெரிய நடிகர்கள் ஏதுமில்லாமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து உலகையே திரும்பி பார்க்க வைத்ததன் காரணமென்ன? ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால்.....பார்த்துக்கொண்டே இருக்கும் போது,எதிர்பாரா வகையில் மண்டையில் நறுக்கென்று குட்டு வைத்து உச்சபட்ச அதிர்ச்சியில் ஆழ்த்தியது தான் காரணம்.உதாரணமாக The Usual suspects படத்தை எடுத்துக்கொள்வோமே, படத்தின் கடைசி ஒரு நிமிடம் மிகப்பெரிய முடிச்சு ஒன்று அவிழும்...மேலும் அந்த ஒரு நிமிடத்திற்கு முன் படத்தின் எல்லா முடிசுகளும் அவிழ்ந்தது என்று நாம் ஆசுவாசப்பட்டுக்கொண்டிருக்கும்  போதே! சமீபத்தில் பார்த்த தி கேம் திரைப்படமும் அந்த வகையை சார்ந்தது, குறிப்பாக "இரண்டு முடிச்சு" வகை!

நிக்கோலஸ் வான் ஒர்டன் (Michael Douglas) ஒரு பிரபலமான பைனான்சியர்,மிகப்பெரிய பணக்காரர்.சமீபத்தில் மனைவியை விவகாரத்து செய்து விட்ட அவர் தினமும் ஜெராக்ஸ் மஷினை போல ஒரே மாதிரியான வாழ்கையை வாழ்ந்து வருகிறார்,எப்படி என்றால் அவரது அலுவலக PA சொல்லி தான் அவரது பிறந்த நாளே அவருக்கு நினைவுக்கு வருகின்றது.பிறந்த நாள் அன்று அவரது தம்பி கொனார்ட் (ஷான் பென்) அவரை சந்தித்து பிறந்த நாள் பரிசாக CRS (customer recreation service) என்ற பொழுதுபோக்கு அமைப்பின் அட்ரஸையும், கூப்பனையும் கொடுக்கிறான்.இங்கே ஒரு முறை சென்று பார் உன் வாழ்கை எப்படி மாறுகிறதென கூறி தானும் அங்கு உறுப்பினர் என்கிறான்.

சிஆர்எஸ் செல்லும் நிக்கோலசிற்கு "இது ஒரு விளையாட்டு சம்பந்தமான சர்வீஸ் கம்பெனி,இதற்க்கு சில தகுதிகள் வேண்டும்" என கூறப்பட்டு,அவரை பல வித சைக்கோ மற்றும் உடல் சம்பந்தமான டெஸ்டுகளுக்கு ஆட்படுத்துகின்றார்கள்,பின் அந்த டெஸ்டிற்கான ரிப்போர்ட்களுடன்,நீங்கள் தேர்ச்சி பெறவில்லை என்று கூறி அனுப்பிவைக்கின்றனர்.ஆனாலும் அந்த "கேம்" துவங்கி விடுகின்றது(நமக்கும் தான்) அங்கிருந்து அவரது தலையில் ஏறி உட்கார்ந்து விடுகின்றது ஏழரை நாட்டு சனி.

ஒரு நிமிடம் கண்ணை மூடி நினைத்து பாருங்கள்,காலையில் எழுந்து நீங்கள் வேலைக்கு போகையில் உங்களோடு பழகும் நண்பர்கள்,எதிர்படும் மனிதர்கள்,டாக்ஸி ட்ரைவர்கள்,உங்கள் அலுவலகத்தில்,உணவகத்தில் என எல்லா இடங்களிலும் எல்லோரும் உங்களை ஏமாற்றவோ, துரத்தவோ செய்ய முயன்றால் எப்படி இருக்கும்? டார்ச்சர் தாங்க முடியாமல் நீங்கள் போலீசிடம் போனால் அவர்களும் அது போலவே நடந்து கொண்டால்?திடீரென உலகின் அணைத்து மனிதர்களும் உங்களுக்கு எதிராக சதி செய்வது போல மாறி விட்டால் உங்கள் நிலை என்ன? எல்லாருமே உங்களை ஆட்டிவைத்து,விளையாட வைக்க முயன்றால் என்ன ஆகும்? மயிர் பீய்த்துக் கொள்ளத்தோன்றுகிறதல்லவா? ஜாடிக்குள் அடைக்கப்பட்ட எலிக்குஞ்சு போலாகிவிடுவோம் இல்லையா?அப்படி தான் ஆகின்றது நிகோலசிற்கும்.ரொம்பச்சாதாரணமாக போய்க்கொண்டிருந்த அவரது வாழ்கையில் சின்ன சின்ன திருப்பங்கள்,துரத்தல்கள் வரத்தொடங்குகின்றன.அந்தக்காரணங்களுக்கு நூல் பிடித்துப்போனால் அவை சிஆர்எஸ்ஐயும்,அதன் ஊழியர்களையும் போய் சேர்கின்றன.வேறு வழியின்றி ஓடத் தொடங்குகின்றார்!


இப்படி ஓடிக்கொண்டே இருக்கும் நிகோலசிற்கு ஒரு ஹோட்டல் பணிப்பெண் கிறிஸ்டினின்  நட்பும் கிடைக்கிறது.இந்த விளையாட்டு மேலும் தீவிரமடைந்து சீரியாசாக போய் அவரது உயிருக்கு ஆபத்தும் வரத்தொடங்குகின்றது,அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க அவருக்கு சிறு சிறு உதவிகளும்,க்ளுவும் கிடைக்கிறது, வெறுத்துப்போன நிக்கோலஸ் இந்த அபத்த விளையாட்டை நிறுத்த சிஆர்எஸ் அலவலகம் செல்கிறார் ஆனால் எதிர் பார்த்தது போல அப்படி ஒரு நிறுவனமே அங்கு இல்லை. நிகோலசின் தம்பியான கொனார்டும் இந்த விளையாட்டால் வெகுவாக பாதிக்கப்பட்டு தலை மறைவாகின்றான்.

ஒரு கட்டத்தில் தன்னுடன் ஓடிக்கொண்டிருந்த கிறிஸ்டினும் சிஆர்எஸ்ன்  அங்கம் எனத் தெரிய வருகின்றது, அவளை  மிரட்டி கேட்கையில்"ஒரு பணக்காரனை  தேர்ந்தெடுத்து அவனை காரணமின்றி துரத்தி,துரத்தி அவன் பைத்தியம் பிடித்து ஓடிக்கொண்டிருக்கும் போது, அவனது  மொத்த கவனமும்  உயிரை காத்துக்கொள்ள இருக்கும் போது  அவனது வங்கிக்கணக்கில் கைவைத்து விடுவோம்..இதற்க்கு தான் முதன் முதலில் வைத்த  சைக்கோ பரீட்சைகள்  ...நீங்கள் வேண்டுமானால்  சோதித்து பாருங்கள்"என்கிறாள்.பதட்டத்தில் தன்னுடைய சுவிஸ் அகௌண்டை போனில் சோதிக்கும் நிகோலஸ் பணம்  அனைத்தும்  பறிபோயிருப்பதை அறிந்து நொந்து போகின்றார்.பின்னர் மயக்க மருந்துகலந்த காபியை கொடுத்து  அவரை வீழ்த்தும் கிறிஸ்டின்  "சற்று நேரம் முன்பு போனில் உங்கள் அகௌண்டை சோதித்தீர்களே,நீங்கள் பேசியது  எங்கள் ஆளுடன் தான் , அப்போது தான் உண்மையாகவே உங்கள் வங்கி விபரகளை அறிந்து கொண்டோம் எனக்கூறி டாட்டா காட்டி விட்டு போய் விடுகிறாள்.

 மெக்சிகோவில் ஒரு திறந்த கல்லறையில் இருந்து கண்விழிக்கும் நிகோலஸ்,கிட்ட தட்ட பிச்சை எடுத்து அமெரிக்க வருகிறார் தீராத ஆத்திரத்துடன்.பின்னர் அவர் சிஆர்எஸ்ன் மேனேஜர் என்று சொல்லிக்கொண்டு வந்த ஒரு ஊழியனை பிடித்து விடுகிறார்,அவனை வைத்து அந்த பெரும் கும்பலை பிடித்தாரா?இல்லை வீழந்தார என்பதை கண்டிப்பாக பாருங்கள்!

இது போன்ற படங்களை தருவதில் டேவிட் பிஞ்சர் வல்லவர் என்பதை அவரின் படைப்புகளான seven,fight club இல் இருந்தே தெரியும்.ஆனால் அந்த அளவுக்கு தரத்தை எட்டவில்லை என்றாலும்   இதுவும் ஒரு சிறந்த படம் எனலாம் .மேலும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நறுக்கென்று "மண்டையில் குட்டு வைக்கும்" என்பதிலும் சந்தேகமில்லை!

ஆங்....முக்கியமான விஷயமொன்றை சொல்லத்தவறிவிட்டேன்......மேல சொன்ன எல்லாமும்........சரி வேண்டாம் படத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.


The Game (1997) ட்ரைலர் கீழே,
அன்புடன் 
நான்.

அளவிலாக் காதல்:தனித்திருக்கிறேன் வா!-1அத்தியாயம்-4
தனித்திருக்கிறேன் வா!

"ஹலோ"
"ஹலோ ...ஏய் என்ன இது நீ பாட்டுக்கும் கால் பண்ற ..வீட்ல வேற யாரவது எடுத்தா என்னை ஆவறது?" 
"நீ தான் எடுப்பேன்னு தெரியும்"
"அதெப்படி தெரியும்?"
"ம்..பட்சி சொல்லியது"
"சரி விஷயமென்ன சொல்லு "
"யப்பா ஏன் இப்படி விரட்ரியாம்...ஆசையா பேச நினைச்சா..."
"சொல்லேண்டி சீக்கிரம்"
"ஒண்ணுமில்ல.....நாளைக்கு காலைல எங்க அப்பா,அம்மா ரெண்டு பெரும் கிளம்பி ஊருக்கு போறாங்க ,நைட் தான் வருவாங்க,நான் தனியாதான் இருப்பேன்,நீ வேணும்னா வீட்டுக்கு கிளம்பி வாயேன்....."(மேலே உள்ள வாக்கியத்தில் காற்புள்ளிக்கு முன்னே வரும் இடங்களை லேசாய் இழுத்து படிக்க வேண்டும்....நீ பேசுவதை எழுதுவது எளிதா என்ன?) 
"......"
"என்ன பேச்சையே காணோம்?வருவியா?"
"ஒண்ணுமில்லை ...அதுக்குள்ள நான் நாளைக்கு போய் விட்டேன்...கண்டிப்பா வரேன்...கடவுள் வந்து என்னை பார்க்க வரிசையில் காத்திருந்தால்  கூட வரேன்
---------
இரவு,அடி பட்ட மிருகமாய் நொண்டி நொண்டி ஓடியது.ஒரு வழியாய் விடிந்து தொலைத்தது.
இன்றைய தினம்,இதோ தொடங்கி விட்டது,மனம் உலகத்தின் கடைசி நாளை எதிர்கொள்வது போல் துடித்தது.அதே துடிப்புடன்,மூன்று மணி நேர பயணத்திற்கு பின்,உன் வீட்டு வாசலில் நின்றேன்.அவ்வளவு நேரம் கூடவே இருந்த "தைரியம்" உன் ஊருக்கு வெளியே இறங்கிக்கொண்டது. அச்சமும்,தயக்கமும் என் தோள் மீது பாரமாய் ஏறிகொண்டது.என் கைகுட்டை கசங்கி,பிழியப்பட்டு என் கைகளில் சின்னாபின்னப்பட்டது. வரவழைத்துக்கொண்ட வீரத்துடன்(!)நடந்து.....பெரிய முற்றம் தாண்டி, ரெட்டை தேக்கு மரக்கதவை தட்டிய போது,அதன் சத்தம் எனக்கே கேட்கவில்லை!
பளிச்சென்று கதவு திறந்து கொள்ள.....மேகம் விலகிய நிலவாக நீ நின்று கொண்டிருந்தாய்.

வெயிலை கலந்து செய்த
மஞ்சள் நிற தாவணியும்,
உனக்காகவே பட்டுபுழுக்கள் 
விட்டுசென்ற கூட்டை எடுத்து 
வனைந்து வனைந்து செய்த 
பச்சை நிற பட்டுப்பாவாடையும் 
அதன் ஓரங்களில் 
மயில்களாக,மாங்காய்களாக ஓடிய 
தங்க நிற ஜரிகையும்,
மின்னல் துணுக்குக்கு
அடர் ஓரம் வரைந்ததை போல்-உன் 
மை தீட்டிய கண்களும் 
ரேகைகளுடன் கூடிய இதழ்களும்,
இவை போதாதென்று-உன் வாசனை
என்  கல்லறைக்குள்ளும் வீசும் 
உன் வாசனையும்,
ஹுஹும்...
நான் தோற்பேன் என்று தெரிந்தே 
ஆண்டவன் வைத்த சோதனை நாளிது!

"வா" என்றாய்.
நீ வாவெனும் போது நான் எதை பார்க்க?
உன் வாய் பிளந்து மூடுவதையா?
உன் கண்களும் சேர்ந்து வாவென்பதயா?
உன் கையால்,என் கையை பற்றி அழைத்தலையா?
ஒற்றை சொல்லுக்கு 
இத்தனை கவர்ந்திழுத்தலும்,காட்சி நாடகமுமா?

என்னை அமரவைத்து,தண்ணீரை நீட்டினாய் "ரொம்ப வெயில் இல்லை?" என்றாய்.
"வெளியில் பரவாயில்லை ,இங்கு உன்னருகே எனக்கு வியர்த்து ஊற்றுகின்றது" என்றபடியே மறைத்து வைத்திருந்த அதை எடுத்து நீட்டினேன் "உன் வீட்டிற்க்கு முதல் முறை வரேன் அல்லவா ....ஒரு சின்ன பரிசு".
கண்கள் விரிய  அவசரமும், ஆசையுமாக  பிரித்தாய்..."ஹ..கண்ணாடி வளையல்.!!!!"
எப்படி இப்படி அற்பமானவைகளுக்கெல்லாம் உன்னால் குதூகலிக்க முடிகிறது?அந்த அற்ப விஷயம் என்னிடமிருந்து வந்ததாலா?உன்  குழந்தை மனது என்னை லேசாய் பொறாமை கொள்ள வைக்கிறது... உலகில் சின்ன சின்ன விஷயங்களிலெல்லாம் பெரிய பெரிய சந்தோஷம் ஒளிந்திருக்குமென்பதை எனக்கு காட்டியவள் நீ.எனக்குள் நானே பார்த்துக்கொள்ளாமல் காற்றில் இறகை போல் வாழக்காட்டியவள் நீ.

"கண்ணாடி வளையல்னா எனக்கு உசிரு...உனக்கு எப்படி தெரியும்?"

தெரியும்.
நீ ஆழ்ந்து தூங்குகையில் 
எப்போது புரண்டு படுப்பாய் 
என்று கூட தெரியும்.

இன்னும் தெரியும்....சொல்லவா?
மழைக்கால இரவுகளில் 
போர்வை இல்லாமல் -உன் கைகளாலேயே
உன்னை அணைத்துக்கொண்டு

ஜன்னல் வழித்தெருவை
ரசிப்பாய்.

உன் சுட்டு விரல்
நகம் வெட்டுகையில்
வலிக்குமோ என
முகத்தை சுருக்கி
கண்களை மூடிக்கொள்வாய்.

பஸ்ஸ்டாண்டில்
நொண்டிக்கிழவனோ 
பிச்சைகாரசிறுமியோ...
காசை கொடுத்த பின்னும் 
கொஞ்சம் கலங்குவாய்.

தேநீரை 
கையில் கொடுத்தபின் - என் 
முகத்திருப்பதியை படிக்க 
அங்கேயே சிறிது நிற்பாய்.

கண்ணாடி முன் 
நிற்கும் போதெல்லாம் 
என்னிடம் பேசுவது போல் உன்னிடமே 
பேசிக்கொள்வாய்.

நம்முடைய
முதல் சந்திப்பை 
தினம் தினம் 
ஓட்டிப்பார்ப்பாய். 
நகைத்துக்கொள்வாய்.

நீயோ,நானோ
முத்தமிட யார் முதலில்
தொடங்கினாலும்
நீ முதலில் விலக மாட்டாய்.

இன்னும் 
பகலில் தூங்க மாட்டாய்,
உன் பெயரை எழுதுகையில் 
என் முதலெழுத்தை சேர்த்தெழுதுவாய், 
காபியின் மேலாடையை 
விலக்காமல் குடிப்பாய் 
மல்லிகை பூச்சரத்தை -தோளின்
வலது புறம் மட்டும் தொங்க விடுவாய்.
கரப்பானுக்கோ-பல்லிக்கோ,இடி-மின்னலுக்கோ
பயமில்லாத போதும் என்னோடு 
ஒன்றிக்கொள்வாய்.

இன்னும் இன்னும் இன்னுமாக 
லட்சம் தெரியும் 
உன்னை பற்றி.

ஏனென்றால் 
உன்னை ஒவ்வொரு முறை 
பார்க்கும் போதும் -பார்ப்பது மட்டுமல்ல... 
நினைக்கும் போது -நினைப்பது மட்டுமல்ல....
உள்ளிருந்து உணர்கிறேன்.


எல்லா வளையல்களையும்  நீ போட்டுக்கொண்ட போது,உன் கைகளில் ஏறிய குஷியால் அவை சலசலத்து பேசின!
இருபது ரூபாய்க்கு கூட பொறாத இவைகளுக்கா உன் முகத்தில் நூறு வாட்ஸ் பிரகாசம்?
அடங்காப்பணமும்,நகையும்,தோட்டமும்,செல்வமும் இருந்தாலும்,
என்னருகில்  என்னை போலவே நீ மாறுவது ஏன்?
நான் கோணையோ,கிறுக்கனோ,நல்லவனோ,முரடனோ என்னை அப்படியே ஏற்றுக்கொள்வது ஏன்? உன் பணத்தின் நிழல் உன் மீது விழாதது ஏன்?
ஒரு ஆணான என்னை ஆணாகவே எப்போதும் வைத்திருக்க நினைப்பதேன்?


"அதோ அது தான் என்னுடைய அறை,கட்டிலின் மேல் நீல அட்டை போட்ட நோட்டுப்புத்தகம் ஒன்று வைத்திருக்கிறேன் வாசித்திரு,வருகிறேன்" என்றபடி மறைந்தாய்.
                                                    -**-

உன் அறைக்குள் நுழைந்த போது 
உன்னை விட அது அழகாக இருப்பது தெரிந்தது....
ஒரு மரஅலமாரி,கண்ணாடி,ஒற்றை கட்டில்,மேஜை....
மேஜையில் 
உன் கறுங்கூந்தல் ஒன்றிரண்டை 
கட்டிப்பிடித்துகொண்டிருந்த சீப்பு.
உன் பொய் கண்களுக்கு
மை எழுதும் பென்சில்.
கொண்டை ஊசிகள்,ரப்பர் வளையங்கள்,
தங்கத்தில் ஜோடித்தோடுகள்தோடுகள்-இவையெல்லாம்
உன்னை அழகுபடுத்துவதாக நினைத்துக்கொண்டு
தாங்கள் அழகாகின்றன.

புத்தகவரிசைகளில்
பாலகுமாரன்கள்,கண்ணதாசன்கள் நீங்கலாக
சமயல் குறிப்பு நூல்கள்.

உன் படுக்கையில் அமர்ந்து ,உன் டைரியை புரட்டத்துவங்கினேன்.மெய் மறந்தேன்.
கையில் காப்பி டம்பளருடன் அருகில் வந்து நீட்டினாய்.
"என்ன இப்படி எழுதி இருக்கிறாய்?

படித்த டைரியின் வரிகளிலிருந்து கொஞ்சம்.....
மார்ச் 22
"காலை எழுகையில் உன்னை காண இன்னும் பத்தொன்பது நாட்கள் பொறுக்க வேண்டுமே என்ற கவலையும்,பத்தொன்பது  நாட்கள் தானே என்ற  சந்தோஷமும் சேர்ந்து தாக்கியது.
குளிப்பதையும்,உடை மாற்றுவதையும் வேகமாக செய்ய முற்படுகின்றேன் ஏனெனில் நீ நூறு கண்களுடன் என்னையே பார்த்துக்கொண்டிருப்பது போல் கற்பனை தோன்றி,வெட்கம் சூழ்ந்து தடுமாறச்செய்கிறது.

ஜூன் 19  
அரிசிக்களைகயிலும்,சாம்பார் கொதிக்கயிலும் தூக்கமில்லா தூக்கத்துடன் தூங்கிப்போகின்றேன்.
தோழியுடன் பேசுகையில் உன்னை பற்றியே பேசி,அவர்களை போரடிக்கிறேன்.


செப்டம்பர் 3
இரவில்-விளக்கை அணைத்து விட்டு,
உன்னை தேடுகின்றேன்!
உத்திரத்தின் இருள் மூலையிலிருந்து
நீ காற்றாய் இறங்குகிறாய்.
என் கண்களை தழுவி தூங்கச் செய்கின்றாய்....
தூங்காமல் அடம்பிடிக்கிறேன்.
உன் வெற்று மார்பில் சாய்ந்து கொள்ளச்சொல்கிறாய் 
சாய்ந்து கொள்கிறேன் ....உயிரை விடுகிறேன்.

டைரி முழுக்க என்னிடமே பேசி இருக்கிறாய்?ஒரு நாளை என்னில் தொடங்கி என்னிலேயே முடித்திருக்கிறாய்....பயித்தியமா நீ?" 
"ஆமாம் கொஞ்சமே கொஞ்சம்.....நானென்ன உன்னை போல ஆயிரத்தெட்டு வேலைகளுக்கு மத்தியிலா  காதலிக்கிறேன்?
எனக்கு இருப்பது ஒரே ஒரு வேலை தான்..அது உன்னை நினைப்பது தான்...."
"இதற்கொன்றும் குறைவில்லை ஆனால் இது பரவாயில்லை உன் டைரியில் நீ என்னை நினைக்க மட்டும் செய்கின்றாய்...என்னுடைய  டைரியை பார்த்தால் அவ்வளவு தான்"
"ஏன் அப்படியென்ன இருக்கிறது..ஒருமுறை காட்டேன் பார்க்கலாம்?"
"வேண்டாம்...எனக்கு டைரி என்பது என்னுடைய மோசமான அந்தரங்கம்,சாத்திய அறைக்குள் நிர்வாணமாக அலையும் சுதந்திரம், செயல்படுத்தவியலாத கனவுகளை வரையும் வெள்ளைப்படுதா....அதில் உன்னோடு குடும்பம் நடத்தி,குழந்தை பெற்று...வேண்டாம் உனக்கு அதை காட்டவே மாட்டேன்....இப்போது நீ பார்க்கும்,பழகும் நான் தான்-உண்மையான நான்.என் பேச்சு,செயல் எல்லாம் உன்னிடம்....உனக்கு நேர்மையாக தோன்றுகிறதல்லவா? அது தான் நான்...அதீத அன்பால் உன்னை அணைக்கவோ,அதட்டவோ செய்கிற நான் தான் நிதர்சனம்..நீ பார்க்ககாத எதுவும் நான் இல்லை..நம்பலாம்.....இறுதி வரை என்னிடம் நீ இதை எதிர் பார்க்கலாம்.
"நான் உன்னை எப்பவும் நம்புகிறேன்....நீ மறைக்கும் எல்ல விஷயங்களுக்கும் காரணமுண்டு என்று தெரியும்"
சரி அதை விடு......இங்கே எழுந்து வாயேன்" திறந்து வைத்திருந்த மர அலமாரிக்கு அருகில் அழைத்தாய்.


(தொடரும்)

அன்புடன்
நான்.

The Raid(2010):அதிரடி ஆக்ஷன் திரைப்படம்

The Raid(2010):அதிரடி ஆக்ஷன்  திரைப்படம்


இது போல ஒரு பரபரப்பான சண்டை படத்தை பார்த்து எத்தனை நாளாகி விட்டது.இப்போதெல்லாம் ஹாலிவூடில் மிருகங்கள்,ரோபோக்கள் வகை வகையாக சிஜியில் அடித்துக்கொள்வதை மட்டுமே பார்க்க முடிகின்றது.ஆனால் இந்தப்படத்தில் உண்மையாகவே சண்டை கலை தெரிந்த ஹீரோ-வில்லன்கள் சண்டைகள்,பெரிதாக கேமரா கிம்மிக்ஸ் எதுவும் இல்லாமல் நேருக்குநேர் வன்மத்துடன்,முழு வேகத்துடன்,அப்பட்டமாக மோதிக்கொள்ளும் காட்சிகள் ,மயிர்கூசச்செய்கின்றது.மேலும்  சண்டை போடுகையில் யாரும் வெட்டி ஸ்டைல் எல்லாம் காட்டுவதில்லை,அங்கு சீரியஸ் ஆக இருக்க வேண்டும்,ஏனென்றால் அடிபட்டால் வலிக்கும்,உயிர் போகின்றது போல வலிக்கும்.ஒரு சுமாரான பாக்சர் அப்பர்-கட் முறையில் நெஞ்ஜெலும்புக்கு கீழ் ஒரு குத்து விட்டானேயானால், அப்புறம் வாழ்கை முழுக்க படுக்கையில் தான் கிடக்க வேண்டும்.அதனால் அங்கு ஜில்பான்ஸ் வேலை எல்லாம் காட்ட முடியாது.

கதை ரொம்பவும் எளிது- ஒரு போலீஸ் படை நகரத்தின் முக்கியமான டானை பிடிக்க அவன் தங்கி இருக்கும் முப்பது மாடி கட்டிடத்திற்கு ரைடு போகின்றது.அந்த டானுக்கு இரண்டு வலுவான காவலர்கள்-ஒருவன் மாஸ்டர் மைன்ட், இன்னொருவன்  முரடன்(MadDog), இவர்களுடன் பதினைந்து  மாடிகளிலும் ஏராளமான அடியாட்கள்,கண்காணிப்பு கேமராக்கள்.ஒரு கட்டத்தில் இவர்கள் கீழிருந்து ஒவ்வொரு மாடியாக ரகசியமாக ஏறிக்கொண்டிருக்க அதை அந்த டான் கண்டபிடித்து விடுகிறான்,தன்னுடைய எல்லா ஆட்களையும் மற்றும் அங்கு குடி இருக்கும் சாதாரண மனிதர்களையும் ஏவி விடுகின்றான்.இது போதாதென்று அந்த போலிஸ் கூட்டத்தில் ஒரு ஆள்காட்டியும் இருக்கிறான்.இவ்வளவு பேர்களையும் அந்த போலீஸ் குழு சமாளித்ததா?அந்த டானை பிடித்தார்களா? என்பதை துப்பாக்கி செல்கள் பறக்க,ரத்தம் தெறிக்க,வியர்வை வழிய சொல்லி இருகின்றார்கள்.(நமக்கே வியர்த்து வழிகின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!)

எதிராளியை அடித்துக்கொன்று தப்பித்தால் தான் பிழைக்க முடியும்  என்று "Survival of the Fittest" வகையான, உண்மையை போன்ற  சண்டை  காட்சிகள்.முறையாக கற்றவர்கள் சண்டை போடுவது போல அவ்வளவு இயற்கை,அவ்வளவு வேகம். படத்தை பார்பவர்கள் எல்லா  காட்சிகளிலும்   சீட்டு நுனியில் தான் உட்காரவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு எடுத்தது போல படம் அவ்வளவு சீரியசாக, பதட்டத்தோடு பயணிக்கிறது.


போலீஸ் கட்டடத்திற்குள் நுழைந்ததை அறியும் டான் தன் ஆட்களை வைத்து ஒவ்வொருத்தராக கொன்று விடுகிறான் ,இறுதியில் மிஞ்சும் நாலைந்து பேர் இரு அணிகளாக பிரிந்து தப்பிக்க முயற்சி செய்கின்றனர்,அதில் ரமாவும் ஒருவன்(நம்ம ஹீரோ).அங்கிருந்து வெளியேற அவனுக்கு ஒரே வழிதான் தோன்றுகின்றது அது பதினைந்தாம் மாடியில் இருக்கும் தலைவனை பிடித்து அவன் மூலமாக தப்புவது.சிறுவயதில் பிரிந்த ரமாவின் அண்ணன் அந்த டானிர்க்கு ஒரு முக்கிய கையாள்,தம்பியை காப்பாற்ற அவனுக்கு உதவி செய்கிறான்.இறுதியில் இருவரும் அவ்வளவு பெரிய படையை சாய்ப்பதை அவ்வளவு வேகமாய் சொல்லி இருகின்றார்கள்.
அவ்வளவாக பிரபலமில்லாத இந்தோனிஷிய திரையுலகில் இருந்து இந்தபடைப்பு.சிறிய பட்ஜெட்டில் வெறும் ஸ்டான்டை மட்டும் நம்பி எடுத்த படம் இன்று உலகம் முழுவதும் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றிருப்பதாக கேள்வி.

படத்தில் சகோதரர்களுடன்  டானின்  முக்கிய  அடியாளான MadDog போடும் முக்கியமான சண்டை காட்சியை இங்கே தருகிறேன்..பாருங்கள்.வாயை பிளக்க நேரும்!


அன்புடன்
நான்.

மெர்குரிப்பூக்கள்:பாலகுமாரன்

மெர்குரிப்பூக்கள்:பாலகுமாரன்
மெர்குரிப்பூக்கள் பாலகுமாரனின் முக்கியமான படைப்பு.ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு,அதனால் சுற்றி நடக்கும் பிரச்சனைகளும், உரையாடல்களும்,தீர்வுகளும்,மனமாற்றங்களும் தான் கதை. சரியாகச்சொல்ல வேண்டுமென்றால் அமேரோஸ் பெரோஸ் (Ameros Perros-"காதல் ஒரு பொட்டை நாய்"என்று அர்த்தம்) ஸ்பானிஷ் திரைபடத்தில் ஒரு கார்  ஆக்சிடென்டால் பாதிக்கப்படும் பாத்திரங்கள் பார்வையில் கதை நகரும் மேலும் அவர்கள்  வாழ்க்கையும்  ஏதோ  ஒரு  வகையில்  நாய்களோடு இணைந்திருக்கும் அது  போல  இந்த நாவலிலும் ஒரு ட்ராக்டர் தயாரிக்கும் தொழிற்சாலையின்  ஊதிய உயர்வு ஸ்ட்ரைக்கை சுற்றி நடக்கும் சம்பவங்களிலும்,அதை பார்க்கும்  கதாபாத்திரங்கள்  பார்வையிலும்  கதை நகர்கிறது.
சாவித்திரியின் கணவன் கணேசன் வேலைநிறுத்தக்கலவரத்தில் தேவையில்லாமல் கொல்லப்படுகிறான்,தனிமரமாகும் அவளுக்கு தொழிற்சங்கமும்,அதன் தலைவன் கோபாலனும்  உதவ முற்படுகிறார்கள்.பின்னர் கோபாலன் கணேசனின் சாவிற்காகவும்,சம்பள உயர்வு கேட்டும் ஒரு அரசியல் கட்சியின் ஆதரவுடன் தொழிற்சாலை முதலாளியை,போலிசை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றான்,நடத்தும் பேரணி ரஸாபாசமாக,ஓடி ஒளிந்து சாவித்திரியின் வீட்டிலேயே அடைக்கலாமாகின்றான்.
இன்னொரு தொழிளிலாளியான ஷங்கர்,இந்த போராட்டத்தில் சரி வர பட்டுக்கொள்ளாதவன்.அவனுக்கும் அவன் வீட்டின் கீழ் போர்ஷனில் இருக்கும் ஷாமளிக்கும்(அடுத்தவன் மனைவி) தொடர்பு ஏற்படுகின்றது. அவளுடன் ஓடிப்போக எத்தனித்து அது தோல்வியில் முடிந்து, வாழ்கையை வெறுத்து தற்கொலைக்கு முயன்று பின் தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபாடு கொள்கிறான்,அவன் வாழ்கை பாதை மாறுகின்றது , சுயநலத்துடன் சிந்தித்து வாழ்கையை  முடித்துக்கொள்ள  எண்ணியது  தவறென  உணர்ந்து தொழிற்சங்கத்திற்காக வாசகம், கவிதைகள்,நோட்டீஸ் எழுதி ஜெயிலுக்கு செல்கிறான்.
இந்த போராட்டம் குறித்து பாக்டரி முதலாளி ரங்கசாமியின் கூற்று வேறாக இருக்கிறது-முதலாளி வர்க்கமும் சமுதாயத்தின், கம்யுனிசத்தின் அங்கம் தானே,அதை முரட்டு தனமாக தொழிலாளிகள் எதிர்ப்பதேன்?முதல் போட்ட நான் எல்லா லாபத்தையும் தொழிலாளிகளுக்கு பிரித்துக்கொடுத்துவிடவேண்டும் என அவர்கள் நினைப்பதேன்? உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் எப்போதும் போராட்டம் என நினைப்பதேன்? என்று நினைத்து உள்ளம் குமுறுகிறார் ரங்கசாமி.பாக்டரி பிரச்சனையையும்,கணேசனின் கொலை வழக்கையும் எடுத்துக்கொண்ட முரட்டு இன்ஸ்பெக்டர் துரை சிங்க பெருமாள் இந்த முதலாளி-தொழிலாளி பிரச்சனை,அரசாங்கம் இவைகளுக்கிடையில் சிக்கி,அவர்களோடு வேறுபடவும் முடியாமல்,ஒத்துப்போகவும் முடியாமல் திணறுகிறார்.

எனக்கு தெரிந்த வகையில் இன்றைய இந்தியாவில் கம்யுனிச சங்கங்கள்,கட்சிகள் தொழிலாளிகளுக்கு போனஸ் வாங்கிதரவே பயன்படுகின்றது.இங்கிருக்கும் சங்கங்கள் பெரிதாக புரட்சிகளை, மாறுதல்களை ஏற்படுத்தவில்லை.அவர்களிடம் தீவிர போக்கு இல்லை, சரியான புரிதல் இல்லை.கையில் சிகப்பு துணி சுற்றிகொண்டால் ஆயிற்று,முதலாளி வர்க்கத்தை இடித்துப்பேசினால் அது தான் கொள்கை என முடிவு செய்து கொள்கின்றனர்.கார்ல் மார்க்ஸ் வளர்த்த கம்யுனிசம் அதுவல்ல,அதன் கட்டுமானம் மிக ஆழமானது.வெறும் முரட்டு கோஷம் மட்டும் கம்யுனிசம் ஆகாது.இதை பாலகுமாரன் அழகாக கையாண்டிருக்கிறார்,கம்யுனிசம் மீதான ஆராய்ச்சியில் ரொம்பவும் உள்ளே போகாமல் எளிதாய் விளக்கி இருக்கிறார்.இது தான் விஷயம்,இதை இப்படியும் அணுகலாம், நல்ல தீர்வு கிடைக்க, பொருட்ச்சேதம் தவிர்க்க,சமமான நியாயம் கிடைக்க கொஞ்சம்  கொடியை இறக்கினால் தப்பில்லை என்கிறார்.ஆனால் எதையும் தீர்மானமாய் சொல்லவில்லை.இந்தக்கதைக்கு பாலகுமாரனுக்கு வந்த வாசகக்கடிதங்களில் சிலர் அவரை "நீங்கள் anti-கம்யூனிஸ்டா?" என்று கேட்டிருக்கின்றனர்,நிச்சயம் எனக்கு அப்படி தோன்றவில்லை.

ஆரம்பத்தில் கூட்டங்கள் சேர்த்து,புரட்சி பேசி முதலாளியை எதிர்க்கும் கோபாலன் பின் கொஞ்சம் கொஞ்சமாக போராட்டம் என்பது சரியான தீர்வாகாது இறங்கிப்போதலும்,சகித்துக்கொள்வதும் இங்கு அவசியம் என்பதை உணர்கிறான்.முதலாளி ரங்கசாமியும் தன்  சுயகவுரவத்தில்  இருந்து இறங்கி வருகிறார்,தொழிலாளிகளின் அவசியத்தை உணர்கிறார் , தொழிற்சாலையை திறக்கும் முயற்சியில் ஊதிய உயர்வு கொடுக்கிறார், இறுதியில் பாக்டரி திறந்த பின்பு டீ-காபி வர தாமதமாகி அந்த சின்ன பிரச்சனைக்காக சில தொழிலாளிகள் கூச்சலிட அதை கோபாலனும்-ரங்கசாமியும் சமாளிக்கும் இடத்தில் கம்யுனிசத்திற்கான முழுவிளக்கமும் அழகாக நமக்கு கிடைக்கிறது.முடிவில் எல்லாருமே  (நினைத்தபடி  இல்லாவிட்டாலும்) ஏதோ ஒருவகையில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள்.

நாவலில் வரும் இரண்டு பெண்களும்,அவர்களின் காதலும் நிச்சயம் சொல்லப்பட வேண்டிய ஒன்று.தண்டபாணியின் மனைவியாக வரும் ஷ்யாமளி மேல் வீட்டில் இருக்கும் சங்கருடன் தொடர்பு வைக்கிறாள்.கதை,கவிதை என ரசனையாக இருக்கும் ஷங்கர் தான் தனக்கு பொருத்தமானவன்,தனக்கு ஈடானவன்,சிதைந்து கிடக்கும் தன வாழ்கையை இவனால் தான் சரி செய்ய முடியும் என எண்ணி அவனோடு ஓடிவிடத் தீர்மானிக்கிறாள்.அவனையும் அதற்க்கு தயார் படுத்துகிறாள்.இறுதியில் போட்ட திட்டம் அவளாலேயே குலைந்து போய் விட,நொந்து போன ஷங்கர் அவளை விட்டு விலகுகின்றான்.இறுதில் ஷ்யாமளி வாழ்கை எப்போதும் நேராக இருக்காது, அது முள்ளையும் மலரையும் மாற்றி மாற்றி தரக்கூடியது.மலரை போலவே முள்ளையும் ஏற்கும் பக்குவம் வேண்டும், அதுவே பழகி,பின் இனிமையாகும் என்பதை உணர்கிறாள். மனம்  திருந்தி  தனக்கு விதித்திருக்கும்  கணவனை,குழந்தையை ஏற்று வாழ முற்படுகிறாள்.
கொல்லப்பட்டு இறக்கும் கணேசனின் மனைவி சாவித்திரி,தான் தன் கணவனுடன் வாழ்ந்த வாழ்கை ரொம்பவும் திருப்திகரமானது,அவன் மீதான காதல் பூரணமானது,அவனை இழந்ததால் பிறர் சொல்வது போல தான் அபச்சாரத்திர்க்குள்ளாகி விடவில்லை, சஞ்சலமின்றி  தன்னால்  வாழ முடியும்.அத்துடனே தன்னால் காலம் கடத்த முடியும்,இது தான் எனக்கு விதித்தது என்று பக்குவமாக தன்னிடம் காதலை சொல்லும்  கோபாலனிடம் சொல்கிறாள்.ஷ்யாமளிக்கு நேரெதிரான வகை இவள்.

ஆசிரியர் கூற்று என்று தனி பத்தியாக எதுவும் தெரியாமல் கதாபாத்திரங்களின் உரையாடல்கள்,எண்ணெங்கள் வாயிலாக தான் நினைப்பதை சொல்வது பாலகுமாரனின் பாணி.எடுத்த கருத்தை எளிதாக,அழகாக குட்டி குட்டி உதாரண சம்பவங்களுடன்,அதன் Ifs and Buts உடன் அழகாக சொல்லி இருக்கின்றார்.முக்கியமாக அறிவுக்கரசு எப்படி சிறுவனிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரியவனாகி,  ரௌடியாகி, மிருகமாகின்றான் என்பதை ஒவ்வொரு நிலையிலும் அவனுக்கு கிடைக்கும் பட்டபெயரிலிருந்து விளக்குவதை ரொம்பவும் ரசித்தேன்.

எழுத்துச்சுவையில் திளைக்க வைத்த புத்தகத்தில் இருந்து ஒரு கவிதை,
உனக்கென்ன
சாமி,பூதம்
கோவில்,குளம் ஆயிரமாயிரம்
ஜாலியாய் பொழுது போகும்.
வலப்பக்கக் கடல் மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக் கணுக்கள் வலிக்கின்றன
அடியே!
நாளையேனும் மறக்காமல்
வா.


பாலகுமாரனின் சில புத்தகங்களை வாசித்தால் "ச்ச..எப்படி இந்தாள் இப்படி எழுதுகிறார்?" என்று தோன்றும்.அது தான் இவரின் வெற்றி. 

             (பிடிக்காத தாடிகள் பல இருக்க,எனக்கு பிடித்த தாடிகளுள் ஒரு ஆள்)

அன்புடன்
நான்.

- Copyright © துளி கடல் -