மெர்குரிப்பூக்கள்:பாலகுமாரன்
மெர்குரிப்பூக்கள் பாலகுமாரனின் முக்கியமான படைப்பு.ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு,அதனால் சுற்றி நடக்கும் பிரச்சனைகளும், உரையாடல்களும்,தீர்வுகளும்,மனமாற்றங்களும் தான் கதை. சரியாகச்சொல்ல வேண்டுமென்றால் அமேரோஸ் பெரோஸ் (Ameros Perros-"காதல் ஒரு பொட்டை நாய்"என்று அர்த்தம்) ஸ்பானிஷ் திரைபடத்தில் ஒரு கார்  ஆக்சிடென்டால் பாதிக்கப்படும் பாத்திரங்கள் பார்வையில் கதை நகரும் மேலும் அவர்கள்  வாழ்க்கையும்  ஏதோ  ஒரு  வகையில்  நாய்களோடு இணைந்திருக்கும் அது  போல  இந்த நாவலிலும் ஒரு ட்ராக்டர் தயாரிக்கும் தொழிற்சாலையின்  ஊதிய உயர்வு ஸ்ட்ரைக்கை சுற்றி நடக்கும் சம்பவங்களிலும்,அதை பார்க்கும்  கதாபாத்திரங்கள்  பார்வையிலும்  கதை நகர்கிறது.
சாவித்திரியின் கணவன் கணேசன் வேலைநிறுத்தக்கலவரத்தில் தேவையில்லாமல் கொல்லப்படுகிறான்,தனிமரமாகும் அவளுக்கு தொழிற்சங்கமும்,அதன் தலைவன் கோபாலனும்  உதவ முற்படுகிறார்கள்.பின்னர் கோபாலன் கணேசனின் சாவிற்காகவும்,சம்பள உயர்வு கேட்டும் ஒரு அரசியல் கட்சியின் ஆதரவுடன் தொழிற்சாலை முதலாளியை,போலிசை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றான்,நடத்தும் பேரணி ரஸாபாசமாக,ஓடி ஒளிந்து சாவித்திரியின் வீட்டிலேயே அடைக்கலாமாகின்றான்.
இன்னொரு தொழிளிலாளியான ஷங்கர்,இந்த போராட்டத்தில் சரி வர பட்டுக்கொள்ளாதவன்.அவனுக்கும் அவன் வீட்டின் கீழ் போர்ஷனில் இருக்கும் ஷாமளிக்கும்(அடுத்தவன் மனைவி) தொடர்பு ஏற்படுகின்றது. அவளுடன் ஓடிப்போக எத்தனித்து அது தோல்வியில் முடிந்து, வாழ்கையை வெறுத்து தற்கொலைக்கு முயன்று பின் தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபாடு கொள்கிறான்,அவன் வாழ்கை பாதை மாறுகின்றது , சுயநலத்துடன் சிந்தித்து வாழ்கையை  முடித்துக்கொள்ள  எண்ணியது  தவறென  உணர்ந்து தொழிற்சங்கத்திற்காக வாசகம், கவிதைகள்,நோட்டீஸ் எழுதி ஜெயிலுக்கு செல்கிறான்.
இந்த போராட்டம் குறித்து பாக்டரி முதலாளி ரங்கசாமியின் கூற்று வேறாக இருக்கிறது-முதலாளி வர்க்கமும் சமுதாயத்தின், கம்யுனிசத்தின் அங்கம் தானே,அதை முரட்டு தனமாக தொழிலாளிகள் எதிர்ப்பதேன்?முதல் போட்ட நான் எல்லா லாபத்தையும் தொழிலாளிகளுக்கு பிரித்துக்கொடுத்துவிடவேண்டும் என அவர்கள் நினைப்பதேன்? உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் எப்போதும் போராட்டம் என நினைப்பதேன்? என்று நினைத்து உள்ளம் குமுறுகிறார் ரங்கசாமி.பாக்டரி பிரச்சனையையும்,கணேசனின் கொலை வழக்கையும் எடுத்துக்கொண்ட முரட்டு இன்ஸ்பெக்டர் துரை சிங்க பெருமாள் இந்த முதலாளி-தொழிலாளி பிரச்சனை,அரசாங்கம் இவைகளுக்கிடையில் சிக்கி,அவர்களோடு வேறுபடவும் முடியாமல்,ஒத்துப்போகவும் முடியாமல் திணறுகிறார்.

எனக்கு தெரிந்த வகையில் இன்றைய இந்தியாவில் கம்யுனிச சங்கங்கள்,கட்சிகள் தொழிலாளிகளுக்கு போனஸ் வாங்கிதரவே பயன்படுகின்றது.இங்கிருக்கும் சங்கங்கள் பெரிதாக புரட்சிகளை, மாறுதல்களை ஏற்படுத்தவில்லை.அவர்களிடம் தீவிர போக்கு இல்லை, சரியான புரிதல் இல்லை.கையில் சிகப்பு துணி சுற்றிகொண்டால் ஆயிற்று,முதலாளி வர்க்கத்தை இடித்துப்பேசினால் அது தான் கொள்கை என முடிவு செய்து கொள்கின்றனர்.கார்ல் மார்க்ஸ் வளர்த்த கம்யுனிசம் அதுவல்ல,அதன் கட்டுமானம் மிக ஆழமானது.வெறும் முரட்டு கோஷம் மட்டும் கம்யுனிசம் ஆகாது.இதை பாலகுமாரன் அழகாக கையாண்டிருக்கிறார்,கம்யுனிசம் மீதான ஆராய்ச்சியில் ரொம்பவும் உள்ளே போகாமல் எளிதாய் விளக்கி இருக்கிறார்.இது தான் விஷயம்,இதை இப்படியும் அணுகலாம், நல்ல தீர்வு கிடைக்க, பொருட்ச்சேதம் தவிர்க்க,சமமான நியாயம் கிடைக்க கொஞ்சம்  கொடியை இறக்கினால் தப்பில்லை என்கிறார்.ஆனால் எதையும் தீர்மானமாய் சொல்லவில்லை.இந்தக்கதைக்கு பாலகுமாரனுக்கு வந்த வாசகக்கடிதங்களில் சிலர் அவரை "நீங்கள் anti-கம்யூனிஸ்டா?" என்று கேட்டிருக்கின்றனர்,நிச்சயம் எனக்கு அப்படி தோன்றவில்லை.

ஆரம்பத்தில் கூட்டங்கள் சேர்த்து,புரட்சி பேசி முதலாளியை எதிர்க்கும் கோபாலன் பின் கொஞ்சம் கொஞ்சமாக போராட்டம் என்பது சரியான தீர்வாகாது இறங்கிப்போதலும்,சகித்துக்கொள்வதும் இங்கு அவசியம் என்பதை உணர்கிறான்.முதலாளி ரங்கசாமியும் தன்  சுயகவுரவத்தில்  இருந்து இறங்கி வருகிறார்,தொழிலாளிகளின் அவசியத்தை உணர்கிறார் , தொழிற்சாலையை திறக்கும் முயற்சியில் ஊதிய உயர்வு கொடுக்கிறார், இறுதியில் பாக்டரி திறந்த பின்பு டீ-காபி வர தாமதமாகி அந்த சின்ன பிரச்சனைக்காக சில தொழிலாளிகள் கூச்சலிட அதை கோபாலனும்-ரங்கசாமியும் சமாளிக்கும் இடத்தில் கம்யுனிசத்திற்கான முழுவிளக்கமும் அழகாக நமக்கு கிடைக்கிறது.முடிவில் எல்லாருமே  (நினைத்தபடி  இல்லாவிட்டாலும்) ஏதோ ஒருவகையில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள்.

நாவலில் வரும் இரண்டு பெண்களும்,அவர்களின் காதலும் நிச்சயம் சொல்லப்பட வேண்டிய ஒன்று.தண்டபாணியின் மனைவியாக வரும் ஷ்யாமளி மேல் வீட்டில் இருக்கும் சங்கருடன் தொடர்பு வைக்கிறாள்.கதை,கவிதை என ரசனையாக இருக்கும் ஷங்கர் தான் தனக்கு பொருத்தமானவன்,தனக்கு ஈடானவன்,சிதைந்து கிடக்கும் தன வாழ்கையை இவனால் தான் சரி செய்ய முடியும் என எண்ணி அவனோடு ஓடிவிடத் தீர்மானிக்கிறாள்.அவனையும் அதற்க்கு தயார் படுத்துகிறாள்.இறுதியில் போட்ட திட்டம் அவளாலேயே குலைந்து போய் விட,நொந்து போன ஷங்கர் அவளை விட்டு விலகுகின்றான்.இறுதில் ஷ்யாமளி வாழ்கை எப்போதும் நேராக இருக்காது, அது முள்ளையும் மலரையும் மாற்றி மாற்றி தரக்கூடியது.மலரை போலவே முள்ளையும் ஏற்கும் பக்குவம் வேண்டும், அதுவே பழகி,பின் இனிமையாகும் என்பதை உணர்கிறாள். மனம்  திருந்தி  தனக்கு விதித்திருக்கும்  கணவனை,குழந்தையை ஏற்று வாழ முற்படுகிறாள்.
கொல்லப்பட்டு இறக்கும் கணேசனின் மனைவி சாவித்திரி,தான் தன் கணவனுடன் வாழ்ந்த வாழ்கை ரொம்பவும் திருப்திகரமானது,அவன் மீதான காதல் பூரணமானது,அவனை இழந்ததால் பிறர் சொல்வது போல தான் அபச்சாரத்திர்க்குள்ளாகி விடவில்லை, சஞ்சலமின்றி  தன்னால்  வாழ முடியும்.அத்துடனே தன்னால் காலம் கடத்த முடியும்,இது தான் எனக்கு விதித்தது என்று பக்குவமாக தன்னிடம் காதலை சொல்லும்  கோபாலனிடம் சொல்கிறாள்.ஷ்யாமளிக்கு நேரெதிரான வகை இவள்.

ஆசிரியர் கூற்று என்று தனி பத்தியாக எதுவும் தெரியாமல் கதாபாத்திரங்களின் உரையாடல்கள்,எண்ணெங்கள் வாயிலாக தான் நினைப்பதை சொல்வது பாலகுமாரனின் பாணி.எடுத்த கருத்தை எளிதாக,அழகாக குட்டி குட்டி உதாரண சம்பவங்களுடன்,அதன் Ifs and Buts உடன் அழகாக சொல்லி இருக்கின்றார்.முக்கியமாக அறிவுக்கரசு எப்படி சிறுவனிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரியவனாகி,  ரௌடியாகி, மிருகமாகின்றான் என்பதை ஒவ்வொரு நிலையிலும் அவனுக்கு கிடைக்கும் பட்டபெயரிலிருந்து விளக்குவதை ரொம்பவும் ரசித்தேன்.

எழுத்துச்சுவையில் திளைக்க வைத்த புத்தகத்தில் இருந்து ஒரு கவிதை,
உனக்கென்ன
சாமி,பூதம்
கோவில்,குளம் ஆயிரமாயிரம்
ஜாலியாய் பொழுது போகும்.
வலப்பக்கக் கடல் மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக் கணுக்கள் வலிக்கின்றன
அடியே!
நாளையேனும் மறக்காமல்
வா.


பாலகுமாரனின் சில புத்தகங்களை வாசித்தால் "ச்ச..எப்படி இந்தாள் இப்படி எழுதுகிறார்?" என்று தோன்றும்.அது தான் இவரின் வெற்றி. 

             (பிடிக்காத தாடிகள் பல இருக்க,எனக்கு பிடித்த தாடிகளுள் ஒரு ஆள்)

அன்புடன்
நான்.

One Response so far.

  1. நண்பரே,

    தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
    http://www.tamilkalanchiyam.com

    - தமிழ் களஞ்சியம்

- Copyright © துளி கடல் -