அத்தியாயம்-4
தனித்திருக்கிறேன் வா!

"ஹலோ"
"ஹலோ ...ஏய் என்ன இது நீ பாட்டுக்கும் கால் பண்ற ..வீட்ல வேற யாரவது எடுத்தா என்னை ஆவறது?" 
"நீ தான் எடுப்பேன்னு தெரியும்"
"அதெப்படி தெரியும்?"
"ம்..பட்சி சொல்லியது"
"சரி விஷயமென்ன சொல்லு "
"யப்பா ஏன் இப்படி விரட்ரியாம்...ஆசையா பேச நினைச்சா..."
"சொல்லேண்டி சீக்கிரம்"
"ஒண்ணுமில்ல.....நாளைக்கு காலைல எங்க அப்பா,அம்மா ரெண்டு பெரும் கிளம்பி ஊருக்கு போறாங்க ,நைட் தான் வருவாங்க,நான் தனியாதான் இருப்பேன்,நீ வேணும்னா வீட்டுக்கு கிளம்பி வாயேன்....."(மேலே உள்ள வாக்கியத்தில் காற்புள்ளிக்கு முன்னே வரும் இடங்களை லேசாய் இழுத்து படிக்க வேண்டும்....நீ பேசுவதை எழுதுவது எளிதா என்ன?) 
"......"
"என்ன பேச்சையே காணோம்?வருவியா?"
"ஒண்ணுமில்லை ...அதுக்குள்ள நான் நாளைக்கு போய் விட்டேன்...கண்டிப்பா வரேன்...கடவுள் வந்து என்னை பார்க்க வரிசையில் காத்திருந்தால்  கூட வரேன்
---------
இரவு,அடி பட்ட மிருகமாய் நொண்டி நொண்டி ஓடியது.ஒரு வழியாய் விடிந்து தொலைத்தது.
இன்றைய தினம்,இதோ தொடங்கி விட்டது,மனம் உலகத்தின் கடைசி நாளை எதிர்கொள்வது போல் துடித்தது.அதே துடிப்புடன்,மூன்று மணி நேர பயணத்திற்கு பின்,உன் வீட்டு வாசலில் நின்றேன்.அவ்வளவு நேரம் கூடவே இருந்த "தைரியம்" உன் ஊருக்கு வெளியே இறங்கிக்கொண்டது. அச்சமும்,தயக்கமும் என் தோள் மீது பாரமாய் ஏறிகொண்டது.என் கைகுட்டை கசங்கி,பிழியப்பட்டு என் கைகளில் சின்னாபின்னப்பட்டது. வரவழைத்துக்கொண்ட வீரத்துடன்(!)நடந்து.....பெரிய முற்றம் தாண்டி, ரெட்டை தேக்கு மரக்கதவை தட்டிய போது,அதன் சத்தம் எனக்கே கேட்கவில்லை!
பளிச்சென்று கதவு திறந்து கொள்ள.....மேகம் விலகிய நிலவாக நீ நின்று கொண்டிருந்தாய்.

வெயிலை கலந்து செய்த
மஞ்சள் நிற தாவணியும்,
உனக்காகவே பட்டுபுழுக்கள் 
விட்டுசென்ற கூட்டை எடுத்து 
வனைந்து வனைந்து செய்த 
பச்சை நிற பட்டுப்பாவாடையும் 
அதன் ஓரங்களில் 
மயில்களாக,மாங்காய்களாக ஓடிய 
தங்க நிற ஜரிகையும்,
மின்னல் துணுக்குக்கு
அடர் ஓரம் வரைந்ததை போல்-உன் 
மை தீட்டிய கண்களும் 
ரேகைகளுடன் கூடிய இதழ்களும்,
இவை போதாதென்று-உன் வாசனை
என்  கல்லறைக்குள்ளும் வீசும் 
உன் வாசனையும்,
ஹுஹும்...
நான் தோற்பேன் என்று தெரிந்தே 
ஆண்டவன் வைத்த சோதனை நாளிது!

"வா" என்றாய்.
நீ வாவெனும் போது நான் எதை பார்க்க?
உன் வாய் பிளந்து மூடுவதையா?
உன் கண்களும் சேர்ந்து வாவென்பதயா?
உன் கையால்,என் கையை பற்றி அழைத்தலையா?
ஒற்றை சொல்லுக்கு 
இத்தனை கவர்ந்திழுத்தலும்,காட்சி நாடகமுமா?

என்னை அமரவைத்து,தண்ணீரை நீட்டினாய் "ரொம்ப வெயில் இல்லை?" என்றாய்.
"வெளியில் பரவாயில்லை ,இங்கு உன்னருகே எனக்கு வியர்த்து ஊற்றுகின்றது" என்றபடியே மறைத்து வைத்திருந்த அதை எடுத்து நீட்டினேன் "உன் வீட்டிற்க்கு முதல் முறை வரேன் அல்லவா ....ஒரு சின்ன பரிசு".
கண்கள் விரிய  அவசரமும், ஆசையுமாக  பிரித்தாய்..."ஹ..கண்ணாடி வளையல்.!!!!"
எப்படி இப்படி அற்பமானவைகளுக்கெல்லாம் உன்னால் குதூகலிக்க முடிகிறது?அந்த அற்ப விஷயம் என்னிடமிருந்து வந்ததாலா?உன்  குழந்தை மனது என்னை லேசாய் பொறாமை கொள்ள வைக்கிறது... உலகில் சின்ன சின்ன விஷயங்களிலெல்லாம் பெரிய பெரிய சந்தோஷம் ஒளிந்திருக்குமென்பதை எனக்கு காட்டியவள் நீ.எனக்குள் நானே பார்த்துக்கொள்ளாமல் காற்றில் இறகை போல் வாழக்காட்டியவள் நீ.

"கண்ணாடி வளையல்னா எனக்கு உசிரு...உனக்கு எப்படி தெரியும்?"

தெரியும்.
நீ ஆழ்ந்து தூங்குகையில் 
எப்போது புரண்டு படுப்பாய் 
என்று கூட தெரியும்.

இன்னும் தெரியும்....சொல்லவா?
மழைக்கால இரவுகளில் 
போர்வை இல்லாமல் -உன் கைகளாலேயே
உன்னை அணைத்துக்கொண்டு

ஜன்னல் வழித்தெருவை
ரசிப்பாய்.

உன் சுட்டு விரல்
நகம் வெட்டுகையில்
வலிக்குமோ என
முகத்தை சுருக்கி
கண்களை மூடிக்கொள்வாய்.

பஸ்ஸ்டாண்டில்
நொண்டிக்கிழவனோ 
பிச்சைகாரசிறுமியோ...
காசை கொடுத்த பின்னும் 
கொஞ்சம் கலங்குவாய்.

தேநீரை 
கையில் கொடுத்தபின் - என் 
முகத்திருப்பதியை படிக்க 
அங்கேயே சிறிது நிற்பாய்.

கண்ணாடி முன் 
நிற்கும் போதெல்லாம் 
என்னிடம் பேசுவது போல் உன்னிடமே 
பேசிக்கொள்வாய்.

நம்முடைய
முதல் சந்திப்பை 
தினம் தினம் 
ஓட்டிப்பார்ப்பாய். 
நகைத்துக்கொள்வாய்.

நீயோ,நானோ
முத்தமிட யார் முதலில்
தொடங்கினாலும்
நீ முதலில் விலக மாட்டாய்.

இன்னும் 
பகலில் தூங்க மாட்டாய்,
உன் பெயரை எழுதுகையில் 
என் முதலெழுத்தை சேர்த்தெழுதுவாய், 
காபியின் மேலாடையை 
விலக்காமல் குடிப்பாய் 
மல்லிகை பூச்சரத்தை -தோளின்
வலது புறம் மட்டும் தொங்க விடுவாய்.
கரப்பானுக்கோ-பல்லிக்கோ,இடி-மின்னலுக்கோ
பயமில்லாத போதும் என்னோடு 
ஒன்றிக்கொள்வாய்.

இன்னும் இன்னும் இன்னுமாக 
லட்சம் தெரியும் 
உன்னை பற்றி.

ஏனென்றால் 
உன்னை ஒவ்வொரு முறை 
பார்க்கும் போதும் -பார்ப்பது மட்டுமல்ல... 
நினைக்கும் போது -நினைப்பது மட்டுமல்ல....
உள்ளிருந்து உணர்கிறேன்.


எல்லா வளையல்களையும்  நீ போட்டுக்கொண்ட போது,உன் கைகளில் ஏறிய குஷியால் அவை சலசலத்து பேசின!
இருபது ரூபாய்க்கு கூட பொறாத இவைகளுக்கா உன் முகத்தில் நூறு வாட்ஸ் பிரகாசம்?
அடங்காப்பணமும்,நகையும்,தோட்டமும்,செல்வமும் இருந்தாலும்,
என்னருகில்  என்னை போலவே நீ மாறுவது ஏன்?
நான் கோணையோ,கிறுக்கனோ,நல்லவனோ,முரடனோ என்னை அப்படியே ஏற்றுக்கொள்வது ஏன்? உன் பணத்தின் நிழல் உன் மீது விழாதது ஏன்?
ஒரு ஆணான என்னை ஆணாகவே எப்போதும் வைத்திருக்க நினைப்பதேன்?


"அதோ அது தான் என்னுடைய அறை,கட்டிலின் மேல் நீல அட்டை போட்ட நோட்டுப்புத்தகம் ஒன்று வைத்திருக்கிறேன் வாசித்திரு,வருகிறேன்" என்றபடி மறைந்தாய்.
                                                    -**-

உன் அறைக்குள் நுழைந்த போது 
உன்னை விட அது அழகாக இருப்பது தெரிந்தது....
ஒரு மரஅலமாரி,கண்ணாடி,ஒற்றை கட்டில்,மேஜை....
மேஜையில் 
உன் கறுங்கூந்தல் ஒன்றிரண்டை 
கட்டிப்பிடித்துகொண்டிருந்த சீப்பு.
உன் பொய் கண்களுக்கு
மை எழுதும் பென்சில்.
கொண்டை ஊசிகள்,ரப்பர் வளையங்கள்,
தங்கத்தில் ஜோடித்தோடுகள்தோடுகள்-இவையெல்லாம்
உன்னை அழகுபடுத்துவதாக நினைத்துக்கொண்டு
தாங்கள் அழகாகின்றன.

புத்தகவரிசைகளில்
பாலகுமாரன்கள்,கண்ணதாசன்கள் நீங்கலாக
சமயல் குறிப்பு நூல்கள்.

உன் படுக்கையில் அமர்ந்து ,உன் டைரியை புரட்டத்துவங்கினேன்.மெய் மறந்தேன்.
கையில் காப்பி டம்பளருடன் அருகில் வந்து நீட்டினாய்.
"என்ன இப்படி எழுதி இருக்கிறாய்?

படித்த டைரியின் வரிகளிலிருந்து கொஞ்சம்.....
மார்ச் 22
"காலை எழுகையில் உன்னை காண இன்னும் பத்தொன்பது நாட்கள் பொறுக்க வேண்டுமே என்ற கவலையும்,பத்தொன்பது  நாட்கள் தானே என்ற  சந்தோஷமும் சேர்ந்து தாக்கியது.
குளிப்பதையும்,உடை மாற்றுவதையும் வேகமாக செய்ய முற்படுகின்றேன் ஏனெனில் நீ நூறு கண்களுடன் என்னையே பார்த்துக்கொண்டிருப்பது போல் கற்பனை தோன்றி,வெட்கம் சூழ்ந்து தடுமாறச்செய்கிறது.

ஜூன் 19  
அரிசிக்களைகயிலும்,சாம்பார் கொதிக்கயிலும் தூக்கமில்லா தூக்கத்துடன் தூங்கிப்போகின்றேன்.
தோழியுடன் பேசுகையில் உன்னை பற்றியே பேசி,அவர்களை போரடிக்கிறேன்.


செப்டம்பர் 3
இரவில்-விளக்கை அணைத்து விட்டு,
உன்னை தேடுகின்றேன்!
உத்திரத்தின் இருள் மூலையிலிருந்து
நீ காற்றாய் இறங்குகிறாய்.
என் கண்களை தழுவி தூங்கச் செய்கின்றாய்....
தூங்காமல் அடம்பிடிக்கிறேன்.
உன் வெற்று மார்பில் சாய்ந்து கொள்ளச்சொல்கிறாய் 
சாய்ந்து கொள்கிறேன் ....உயிரை விடுகிறேன்.

டைரி முழுக்க என்னிடமே பேசி இருக்கிறாய்?ஒரு நாளை என்னில் தொடங்கி என்னிலேயே முடித்திருக்கிறாய்....பயித்தியமா நீ?" 
"ஆமாம் கொஞ்சமே கொஞ்சம்.....நானென்ன உன்னை போல ஆயிரத்தெட்டு வேலைகளுக்கு மத்தியிலா  காதலிக்கிறேன்?
எனக்கு இருப்பது ஒரே ஒரு வேலை தான்..அது உன்னை நினைப்பது தான்...."
"இதற்கொன்றும் குறைவில்லை ஆனால் இது பரவாயில்லை உன் டைரியில் நீ என்னை நினைக்க மட்டும் செய்கின்றாய்...என்னுடைய  டைரியை பார்த்தால் அவ்வளவு தான்"
"ஏன் அப்படியென்ன இருக்கிறது..ஒருமுறை காட்டேன் பார்க்கலாம்?"
"வேண்டாம்...எனக்கு டைரி என்பது என்னுடைய மோசமான அந்தரங்கம்,சாத்திய அறைக்குள் நிர்வாணமாக அலையும் சுதந்திரம், செயல்படுத்தவியலாத கனவுகளை வரையும் வெள்ளைப்படுதா....அதில் உன்னோடு குடும்பம் நடத்தி,குழந்தை பெற்று...வேண்டாம் உனக்கு அதை காட்டவே மாட்டேன்....இப்போது நீ பார்க்கும்,பழகும் நான் தான்-உண்மையான நான்.என் பேச்சு,செயல் எல்லாம் உன்னிடம்....உனக்கு நேர்மையாக தோன்றுகிறதல்லவா? அது தான் நான்...அதீத அன்பால் உன்னை அணைக்கவோ,அதட்டவோ செய்கிற நான் தான் நிதர்சனம்..நீ பார்க்ககாத எதுவும் நான் இல்லை..நம்பலாம்.....இறுதி வரை என்னிடம் நீ இதை எதிர் பார்க்கலாம்.
"நான் உன்னை எப்பவும் நம்புகிறேன்....நீ மறைக்கும் எல்ல விஷயங்களுக்கும் காரணமுண்டு என்று தெரியும்"
சரி அதை விடு......இங்கே எழுந்து வாயேன்" திறந்து வைத்திருந்த மர அலமாரிக்கு அருகில் அழைத்தாய்.


(தொடரும்)

அன்புடன்
நான்.

- Copyright © துளி கடல் -