அட்டகத்தி-தோல்வியின் அழகு 


    காதல் மேல் விடாப்படியாக நம்பிக்கை வைத்து காதலித்துக்கொண்டே இருக்கும் வட சென்னை இளைஞனின் கதை.படத்தின் ஹீரோ தினேஷ்.இவ்வளவு சிறப்பாக நடிக்கும் ஒரு நடிகரை சமீபத்தில் பார்த்ததாக நினைவில்லை..பள்ளி நாட்களின் இறுதியில்,கல்லூரியில் சேர்ந்த புதிதில் மெச்சூர் ஆகாத  பையன்களுக்கு  சில பொதுவான அம்சங்கள் உண்டு கவனித்திருக்கிறீர்களா? உடலை ஆட்டாமல், அசைக்காமல் ஒரே இடத்தில் நிற்க மாட்டார்கள், யாருடைய கண்களையும் பார்த்து அவர்களால் பேசமுடியாது பார்வை அங்கும் இங்கும் ஓடும்,நண்பர்களோடு இருக்கையில் உதார்விடுவார்கள்,யாரிடமாவது அடிவாங்க நேர்ந்தால் தேம்பி தேம்பி சிறுவனை போல அழுவார்கள்,அப்பா அம்மாவிடம்  கோபத்தை காட்டுவார்கள்,எப்போதும் பெண்களை  பற்றியே  பேசிக்கொண்டிருப்பார்கள்,குறிப்பிட்ட தூரத்தில் இருந்து சைட் அடிப்பார்கள் ஆனால் அவள் பேச அருகில் வந்தால் போதும் எவ்வளவு  பெரிய  தில்லானாக இருந்தாலும் உருகி விடுவார்கள்,பெண் சும்மா சிரித்தாலே அது காதல் என்று அப்பாவியாய் நம்பி விடுவார்கள், உலகிலேயே அவர்கள் அதிகம் கவலைப்படும் விஷயம் நேற்று ஓரக்கண்ணால் பார்த்த பெண் இன்றும் பார்க்குமா என்பதும், தங்களுடைய  ஹேர்ஸ்டைலுமாகதான்  இருக்கும் தான்.மேலே சொன்ன அணைத்து அம்சங்களும் நூறு சதவீதம் பொருந்தி இருக்கிறது தினேஷிர்க்கு,அப்படி ஒரு யதார்த்தமான நடிப்பு.திரைக்கதை அவரை மட்டும் வைத்தே எழுதப்பட்டிருக்கிறது,அதை கொஞ்சமும் சிதைக்காமல் படம் முழுவதையும் ஒரே ஆளாக தூக்கிச் செல்கிறார்.நல்ல பாத்திரங்களை தேர்வு செய்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு.

    +2 பாஸாக டுடோரியல் காலேஜ் போகும் நம்ம அட்டகத்திக்கு காதலிப்பது ஒன்றே வாழ்கையின் லட்சியம்,பள்ளி படிக்கும் பெண்ணை காதலிப்பதாக பின்னால் சுற்றி லவ் லெட்டர் கொடுக்கப்போகயில் அவள் "அண்ணா..ஏண்ணா ஏன் பின்னாடியே வரீங்க?" என்று விடுகிறாள்.இங்கே ஒரு காட்சி: இந்த காதல் தோல்வியால் வாழ்கையே வெறுத்து விட்டதாக சொல்லிக்கொண்டு,தாடியை சொரிந்து கொண்டு நண்பனுடன் டீ கடையில் நிற்கிறார் தினா,கூட இருக்கும் நண்பன் மெதுவாக அவரிடம் "மச்சான் வடை சாப்படறியா?" என்று கேட்க, "ப்ச்..வேண்டாம்டா.. இப்போ எப்படி டா என்னால சாப்பிட முடியும்..."என்று சோகம் கவ்வ சொல்லிவிட்டு,வாயில் வைத்த வடையை கூட துப்பி விட்டு நண்பரோடு சைக்கிளில் சென்று விடுகிறார்...கொஞ்ச தூரம் போனதும் முக்கியமான வேலை இருப்பதாக நண்பனை பாதியில் இறக்கிவிட்டு  மீண்டும் அதே கடைக்கு வந்து அவசர அவசரமாக வடையை உள்ளே தள்ளுகிறார்.படத்தை பற்றி சொல்ல இந்த ஒரு காட்சியே போதுமானது.

    அதன் பின்னரும் சளைக்காமல் பெண்களின் பின்னால் ஓடி,அடி வாங்கி,பாஸாகி ஆர்ட்ஸ் காலேஜ் சேர்ந்து "ரூட்டு தலையாகி" அடிதடி என்று சட்டை காலரை இழுத்து பின்னால் போட்டுக்கொண்டு, மீண்டும் "அண்ணா"  என்ற அதே பெண்ணின் பின்னால் போய்  இந்த முறை கொஞ்சம் சீரியசாகவே காதலித்து,அவளுக்காக நடை,உடை ,கிராப்பு(அதாங்க பாவனை)எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு திரிகிறார்,அந்த பெண்ணும் இவனோடு மட்டும்  சிரித்து  பேசுகின்றது, தனியக்கறை  காட்டுகின்றது. "நான் இல்லன்ன  அவ செத்துடுவா மச்சான்" என்று நண்பர்களோடு  சேர்ந்து  அவளை கடத்தி அவளோடு  ஓடிப்போக முயற்சிகளை எடுக்கிறான் தினா.அவன் காதல் மேல் அவ்வளவு நம்பிக்கை!

   ஆனால் அதே நேரத்தில் சிறுவயதில் இருந்தே காதலித்து வந்தவனுடன் திருமணம் நடந்து விடுகின்றது.அதற்க்கு முன்பே வரும் சில காட்சிகளில் அந்த காதலனின் முகத்தை காட்டுகிறார்கள்,ஹீரோவை போலவே நாமும் அவனை கவனிக்கத்தவறிவிடுகின்றோம்.பின் பஸ்ஸில் தன் ஜோடியோடு தினாவை பார்க்கும் ஹீரோயின் தேவையில்லாமல் நிறைய டைலாக் பேசுகிறார்.திரைப்படத்தில் வளவளவென்று எல்லா தகவல்களையும் சொல்ல வேண்டும் என்று அவசியமே இல்லை. காட்சிகளிலேயே புரிந்து விடும்,ரசிகன் தானாகவே கிரஹித்துக்கொள்வான்.அப்புறமென்ன தினா மீண்டும் அட்டகத்தி ஆகின்றார் எப்போதும் போலவே.

  குத்து பாட்டு போட நிறைய வாய்ப்பிருந்தும் நல்ல வேளை அப்படி எதுவும் வரவில்லை.ரொம்ப கிராமியத்தனம் இல்லாமல் ஒரு விதமான கூலான,கேஷுவலான  இசை.முழுக்க முழுக்க கிடாரிலேயே வரும் "ஆசை ஒரு புல்வெளி"பாடல் நல்ல மெலடி.நிறைய குறைகள் படத்தில் இருக்கத்தான் செய்கிறது ஆனால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஹீரோ தினேஷிர்காகவும்,ஜெயிப்பதை மட்டுமல்ல தோற்பதையும் கூட அழகாக சொல்ல முடியும் என்று இயக்குனர் எடுத்துக்கொண்ட வித்யாசமான கதைகலனுக்காகவும் அவற்றை மன்னிக்கலாம்.

P.S: "ரூட்டு தலை" அப்படின்னா? பள்ளிபடிக்கையில் எங்களூரிலும் அவ்வப்போது சில ரூட்டு தலைகள் இருந்ததுண்டு. நிறுத்தத்தில்  நிற்காமல் போகும் பஸ்களை நடு ரோட்டில் டயர்களை எறிந்து நிற்பாட்டுவார்கள்(பெண்களெல்லாம் "டாங்க்ஸ்" என்று சிரித்தபடி  சொல்லி  வண்டியில் ஏறிக்கொள்ளும்) ,வண்டி குடை சாய்ந்து விட்டால்(ப்ரேக்-டௌன்?) வேறு வண்டிகளை நிறுத்தி எல்லோரையும் ஏற்றிவிடுவார்கள். கலாட்டா, கிண்டல் செய்பவர்களை செய்பவர்களை செல்லாமாக ரெண்டு தட்டு தட்டுவார்கள்.அவர்களுக்கு பஸ் என்பது  பூட் போர்ட்  மட்டும்  தான் அதை தாண்டி உள்ளே வரமாட்டார்கள். அப்போது நாங்கள்  அவர்களை  ரூட்டு தலை என்றெல்லாம் அழைக்கவில்லை.ஆனால் இப்போது தோன்றுகிறது ரூட்டு தலைக்கு உண்டான எல்லா குணாதிசயங்களும் பொருந்தியவர்கள் அவர்கள் என்று.

அன்புடன்
நான் 

- Copyright © துளி கடல் -