பீட்சா(2012)- பேய் இருக்கா?இல்லையா?

 
    பேய் இருக்கா?இல்லையா?என்று தொன்று தொட்டு கேட்டு வரும் கேள்வி  எல்லோற்குள்ளும்  பேயை  போலவே அலைந்து  கொண்டிருக்கிறது (ஆனால் திருமணமானவர்களுக்கு இந்த    சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை).எந்த ஒரு திரைப்படத்திலும் சரி பேயின் இருதலியலை பற்றி தெளிவான ஒரு முடிவை சொல்லவே மாட்டார்கள். நிஜத்திலும் அது போலதான் நம்முடைய பாட்டி,தாத்தா காலத்திலிருந்து இருந்து  வாழ்ந்து  வரும்  கொல்லிவாய்ப்பிசாசு (மீதேன் வாயு), மரத்தடியில்  தூங்கினால்  ஆளை  அமுக்கும்  (கார்பன் டை ஆக்சைடு!) பேய், நடு இரவில் ஒத்தயடிப்பாதையில் போவோர் வருவோரை அரையும் முனி வகை,செத்தவர்களை காண்பது,அவர்களோடு பேசுவது,பேய் பிடிப்பது, பேயோட்டுவது இன்னும் எத்தனையோ விதமான பேய்கதைகளை,கேட்டு வந்திருக்கிறோம்.கல்லூரி விடுதியில் தூங்காத இரவுகளில் நண்பர்கள் அனைவரும் ஒரே கட்டிலில் சுற்றி அமர்ந்து கொண்டு தங்கள் பார்த்த பேய்கள்,தங்கள் ஊரில் பிரபலமான பேய்க்கதைகளை பரிமாறிக்கொள்ளாதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா?அந்த கதைகளை கேட்ட பின் அன்றிரவு பாத்ரூமிற்கு கூட தனியாக போக முடியாது,இல்லையா?ஆனால் எவ்வளவு  தான் பேய்கதைகளை  கேட்டாலும்   பேயின் எக்சிஸ்டன்ஸ் பற்றிய   கேள்விக்கு விடை இது வரை கிடைக்கவில்லை,இனியும் கிடைக்காமலே தான் இருக்கும். எவ்வளவோ பெரிய தைரியசாலியாக இருந்தாலும்,அவன் வாழ்வில் ஒருமுறையேனும் "இருக்குமோ?" என்ற சந்தேகம் வராமல் இருந்திருக்காது.

    சமீபத்தில் பார்த்த பீட்சா படத்திலும் இதே கருவை எடுத்துக்கொண்டு நம்மை ஏகத்துக்கும் பயமுறுத்துகிறார்கள். லிவிங் டூ  கெதராக  வாழும் மைக்கேல்(விஜய் சேதுபதி)- அனு(ரம்யா நம்பீசன்) ஜோடியில்,ரம்யா பேய் இருக்கிறதென நம்புபவர்,விஜயையும் அதே போல கதைகள் சொல்லி பயமுறுத்துகிறார்,சாதாரண காதல் காட்சிகள் போல வந்தாலும் படத்தின் ரொம்பவும் முக்கியமான காட்சிகள் இவை.ஏனென்றால் இவை ஒரு பேய் படம் பார்பதற்காக நம்மை தயார்படுத்தும்.அதற்க்கு பிறகு வரும் மைக்கேலின் முதலாளியின்  பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பது போன்ற காட்சிகள் மேலும் நம்மை உணரவைப்பதர்க்கே!

   மைக்கேல் பிட்சா டெலிவரி செய்ய ஒரு பங்களாவிற்கு செல்கிறார், அங்கிருந்து தீப்பற்றி கொள்கிறது படம்.நிறைய ஆங்கில ஹாரர்,பேய் வகையற படங்கள் பார்த்து புளித்துப்போனவர்களை என்ன செய்தாலும் பயமுறுத்த முடியாது,அவர்கள் இது போன்ற காட்சிகளை "சுமார்"ரகம் என்பார்கள்.ஆனால் தமிழ் திரைபடங்கள் மட்டுமே பார்க்கும் சாதாரண தமிழ் சினிமா ரசிகனை நிச்சயம்  இந்த காட்சிகளின் வீரியம்,திடீர் திடீர் திருப்பங்கள் அநியாத்திற்கு திகிலடைய வைக்கும்.விஜய் சேதுபதி படம்  முழுக்க  ரொம்பவும்  இயல்பான  நடிப்பை  வெளிப்படுத்தி இருக்கிறார்,அதிலும் பங்களாவிற்குள் மாட்டிக்கொள்ளும் காட்சிகளில்  கனைக்ஷன்  இல்லாத போனில்  பயந்து  கொண்டே  பேசுவதாகட்டும்,கதவுக்கு வெளியே இருப்பவனிடம் "கத தொறங்க சார்..ப்ளீஸ் சார்" என  உயிருக்கு  பயந்து  கெஞ்சுவதாகட்டும் மனிதன் பீய்த்து  உதறுகிறார்.அதே போல  மைகேலுடைய பீட்சா கடை நண்பர்கள்,முதலாளி அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

    அது எப்படி இருட்டு பங்களாவில் நுழைந்தவுடன் எல்லா சம்பவங்களும் இவ்வளவு செயற்கையாக நடக்கிறது? என்று எண்ணத்தோன்றும். இயக்குனர் வேண்டுமென்றே அபத்தமான திகில் காட்சிகளை, பார்ப்பவன்  பதற வேண்டும் என்றே திணித்திருக்கிறார் என்று அறிவுஜீவித்தனமாக  யோசிக்கவும் தோன்றும்....அதை தான் இயக்குனர் விரும்பி இருக்கிறார்,அங்கே தான் படம் மொத்த மதிப்பெண்ணையும் பெறுகின்றது.

  
மேலே எங்கேயும் படத்தின் கதையை சொல்லவில்லை,கதையை கண்டு பிடிக்க ஒரே ஒரு க்ளூ  மட்டும் கொடுக்கிறேன், "Usual suspects படத்தின் கடைசி டயலாக் மற்றும் படத்தின் Tag லைன் என்ன தெரியுமா?"

    சரி ,உண்மையாகவே பேய் இருக்கிறதா?இல்லையா? இருக்கிறது என்பேன் நான்......எல்லோர் உள்ளத்திலும் எதையாவது ஒன்றை பிடித்து ஆட்டிக்கொண்டே இருக்கும் பேய் ஒன்று நிச்சயம் இருக்கிறது.அதை வைத்து தான் "பிட்சா" படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

அன்புடன்
நான். 

- Copyright © துளி கடல் -