அத்தியாயம்-4
தனித்திருக்கிறேன் வா! 

முதல் பகுதி http://www.ibbuonline.com/2012/11/blog-post_20.html

(தொடர்ச்சி)

மர அலமாரியின் உள்ளே 
பச்சை,நீலம்,சிவப்புமாக-ஆடைகள்
உன்னை தழுவிக்கொள்ள என்னை விட 
அதிக உரிமை பெற்ற ஆடைகள்.

ஒவ்வொன்றிலும் 
உன் வாசனை கொஞ்சம் மிச்சமிருந்தது
உன் அழகில் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது.

அதன் மேல் கைகளை ஓட்டிப்பார்த்தேன்..."ஹே என்ன இது சுடிதாரெல்லாம் வைத்திருக்கிறாய்...ஆனால் ஒரு நாள் கூட உன்னை இதில் பார்த்ததில்லையே ?"....."பார்ப்பாய் விரைவில் பார்ப்பாய்"என்றாய்.

உள்ளிருந்து துணிக்கற்றை ஒன்றை எடுத்து கையில் தந்தாய்.....வெள்ளை துணியில் பூக்கள்,பறவைகள்,மலர்கள் செடிகளாக நூற்கோலங்கள்   வரைந்திருந்தது.ஒவ்வொன்றாய் புரட்டிக்கொண்டே வந்தேன்....
"வருங்காலத்தில் நாம்  புதுவீடு கட்டினால் அங்கே ஒவ்வொரு அறைவாசலிலும் என்னுடைய பூத்தையல் தான் தொங்க வேண்டும்..சரியா?"
"பார்க்கலாம்..."
"என்னது?" இடுப்பில் கை வைத்து முறைத்தாய்.
"இல்லை..வீடு வாங்குவேனான்னு  பார்க்கலாம்னு சொன்னேன்"
ஒரு துணியில்,நிறைய பூக்களுக்கு மத்தியில்,இரு பறவைகள் தூக்கிப்பிடிக்க என்னுடைய பெயர் எழுதப்பட்டிருந்தது...ஆங்கிலத்தில்..தவறாக!!!
"பனிரெண்டாம் கிளாஸ் தாண்டாத நமக்கெல்லாம் எதற்கு இந்த வேலை? ம்?......என் பெயரில் எங்கே  'Z' வருகின்றது 'S' தானே வரவேண்டும்?.. காந்தியால் இல்லை உன்னை போல ஆட்கள் இருப்பதால் தான் வெள்ளையன் ஓடிப்போய்விட்டான்"
"அய்யயோ ..தப்பா? இதை உனக்கு தரலாம் என்று பார்த்தேனே....சரி விடு அடுத்த முறை சரியாக போட்டுத்தருகிறேன்"

வேண்டாம் வேண்டாம் 
இதையே வைத்துக்கொள்கிறேன்
நீ செய்யும் தவறுகள் கூட அழகு தான்.
ஸ்டாம்ப் ஒட்டாமல் அனுப்பிய கடிதங்கள்....
இல்லாத வார்த்தைகளில் பேசும் ஆங்கிலம்....

"இதையே வைத்துக்கொள்கிறேன்...என் பெயரை இப்படியும் எழுதலாம் என்று முதன் முதலில் காட்டி இருக்கிறாய்"
"வேற ஒன்னும் உனக்கு காட்ட வச்சிருக்கேன்....இரு வரேன்" என்று எழுந்தாய்.....கூடவே நிழல் போல நானும் எழுந்தேன்.
உன் அழகின் மீதான போதையோ,தனிமை தந்த தைரியமோ,உரிமையோ....
பட்டென்று எழுந்து பின்னாலிருந்து உன் தோள்களை சுற்றி இறுக்கிக்கொண்டேன்,
என் மூச்சுக்காற்று உன் காது மடலை தீண்டி சிவக்க வைத்து,
காத்திருந்ததுபோல் வேரறுந்த கொடியாய் 
என் தோளில் சாய்ந்து கொண்டாய்.
நீருக்குள் எறிந்த அம்பாய் நான் லேசாகிப் போனேன் .
"எவ்வளவு நேரம் தான் நானும் இந்த சிறு தீண்டலுக்காக உள்ளே உலை போல கொதித்துக்கொண்டு, அதை வெளிக்காட்டாமல் நடித்து மறைப்பது"
"எவ்வளவு நேரம் தான் நானும் நல்லவன் போல் நடிப்பது?சதையும் ரத்தமும் கொண்ட மனிதன் தானே நானும்?...வந்ததிலிருந்து உன் பாவாடை, தாவணி அழகை பார்த்து பார்த்து வெந்துகொண்டே இருக்கிறேன்.....தேவியை போல் இருக்கும் நீ இன்றென்னவோ தேவிகளின் தேவி போல இருக்கிறாய்!
"ஒன்று சொல்லவா?"என்றாய்.
உனக்காகவென்று 

கண்ணாடி முன்னின்று 

மணிக்கணக்காக அலங்காரம் செய்து முடித்தேன்

ஏதோ யோசனை வர மீண்டும் வந்து

ஆடையை சரி செய்து கொண்டேன்

ஏதோ குறைவதாக தோன்றவே மீண்டும்.....

கூந்தலை வாரிக்கொண்டேன் மீண்டும்.....
கண் மை திருத்திக் கொண்டேன் மீண்டும்
இப்படி பொழுது முழுக்க அதன் எதிரிலேயே நின்றேன்.
முதலில் என்னை ரசித்த கண்ணாடி 
பின்னர் நகைத்தது-பின்னர் 
சலித்து போய் திரும்பிக்கொண்டது.
அழகாக இருந்தும் அழகாக தெரியவேண்டுமே என்ற பதைப்பு இல்லையா? ஆனால் கண்ணாடியை போல நான் சலித்து போகமாட்டேன்....உன் உள்ளங்கை மச்சம் போல உன்னை பார்த்துக்கொண்டே இருப்பேன்.
"இன்னும் இறுக்கட்டுமா?" என்றபடி இறுக்கினேன்.
"ம்"
"இன்னும் கொஞ்சம்?"
"ம்"
"உன் தோள்கள் இரண்டும் சேர்ந்து கொள்ளும் அளவுக்கு இறுக்கட்டுமா?"இறுக்கினேன்,"மூச்சு திணறும் பரவாயில்லையா?"
,"மூச்சுத்திணறி இறந்தால் கூட என்ன?இப்படி,இந்த கணத்திலேயே"
"சாக வேண்டாம்,நிறைய வாழலாம்" என்றபடி மல்லிகை வாசம் வீசும் கூந்தல் காட்டில் மறைந்து கொண்டேன்.
"இது தான் உன்னிடம் பிடிக்காதது" என்றாய்.
"வந்து அணைத்துக்கொள்வாயோ என்று
புரியாத திகிலையும்,வெக்கத்தையும் ஏற்படுத்தி-நெருங்கியபின்
எங்கே விலகிப் போய்  விடுவியோ  
என்ற தவிப்பையும் ஒரே கணத்தில் உண்டாக்குவது.
-------
"இதெல்லாம் என் குழந்தையில் பருவத்தில் இருந்து எடுத்த போட்டோக்கள்.....பாரேன்!"
புகைப்படத்தில் விதவிதமாய் நீ 

கண்,மூக்கு எல்லாம் சிவந்து போய் நீர்கசிய
புதுத்தோடுடன் ஒன்று.
நெறுக்கி போட்ட சடை,கால் சட்டை,பையுடன்
பள்ளிக்கோலத்தில் முழித்தபடி ஒன்று.
தலையில் கணக்கும் பூப்பந்துடன்,
கரைந்து வழியும் கண் மையுடன் மற்றொன்று.
ஏதோ ஒரு திருமணத்தில் 
பட்டு சட்டையுடன் 
பட்டையாய் தொங்கும் சங்கிலியுடன் 
தொலைந்த பிள்ளை பார்வையுடன் 
ஓரமாய் நீ!
எல்லா பிறந்த நாளன்றும்  
அப்பா அம்மாவிற்கு நடுவில் 
அணைத்து நின்றபடி பல.

"மீதமுள்ள காலி பக்கங்கள் நமக்காக....ஒரு சின்ன சம்பவத்தை,சந்தோஷத்தை கூட விடாமல் பதிவு செய்து வச்சுக்கணும்" என்றாய்.
"நீ ரொம்ப செல்வமாகவும்,செல்லமாகவும் வளர்ந்திருக்கிறாய்..உன் மேல் உன் வீட்டில் உயிரையே வைத்திருப்பார்கள் இல்லையா?" உன்னை அவர்களிடமிருந்து வெட்டுகிறேனா? பாதை மாற்றுகிறேனா? உன் புத்தியை மழுங்கடிக்கிறேனா?
"அப்படியெல்லாம் இல்லை ...நானாய் தானே உன்னை ஏற்றுக்கொண்டேன்....உன் மீது காதல் வளர்த்தேன்...இப்போது நீ இல்லாமல் நான் இல்லை என்ற நிலைக்கு தள்ளிக்கொண்டேன்" 
"பார்...இது கூட..இப்படி நீ பேசுவது கூட....நான் உன்னை மாற்றியதன் விளைவு தான்..இல்லையா?...பிறந்து,வளர்கையில் மொழியும்,அறிவும், யாரோ கற்பிப்பதால் வருகின்றது..யாருமே கற்பிக்காமல் இந்த காதல் எப்படி வந்தது? வெறும் சுரப்பிகளின் விளையாட்டா?உடற் கவர்ச்சியா? என்றாவது ஒரு நாள் படுக்கையில்   சேர்ந்து விடுவோம் என்ற  கிளர்ச்சி தான் காதலா? சில சமயம் குழப்பம் மேலிடுகிறது? ஒருவேளை பெண் புலியை தேடும் ஆண் புலியை போல .....காளையை தேடும் பசுவை போல..ஆண் பெண்ணை ,பெண் ஆணை தேடுவது நம் ஜீனிலேயே இருக்கிறதா? நாம் படைக்கப்பட்டதே அதற்க்கு தானா?உடை,நடை,அலங்காரம்,கல்வி என எதனை போர்வை போர்த்துக்கொண்டு நம்மை மறைத்துக்கொண்டாலும் நாம் வெறும் சமுதாய மிருகம் தானா? கலாசாரம் எனும் சாயம் பூசித்திரியும் நரிகள் தானா?கூடல் என்ற மழையில் நாம் நனைந்து ஒன்று போல் ஆகின்றோமா? ஆனால் ஒன்று மட்டும் உறுதி எந்தக் காதலிலும் தெய்வீகம் என்று ஒன்றும் இல்லை,அப்படி சொல்வதும் மகாஅபத்தம் ...உடற்பசியும் காதலில் ஒரு பகுதி தான்.அதன் விளைவுகளை பற்றி யோசித்து,தெளிந்து கொண்டபின்.....உடல் அன்பை  மறைத்து அழிக்காத வரையில்,அலுக்காத வரையில்... "எப்போது உடல் வேட்கை மட்டும் அதிகமாகின்றதோ அல்லது எப்போது அது அலுத்து சலிக்கின்றதோ அப்போது காதல் பொய்யாகின்றது" சரியாகச்சொல்ல வேண்டுமென்றால் கூடலுக்கும்,குழந்தை பெறுவதற்கும் உடல் ரீதியாக தயாரான பின்பு தானே காதலே வருகிறது ....... ரொம்ப பேசிட்டனோ? இப்படி தான் எதையாவது சொல்லிகொண்டிருப்பேன்,கண்டுக்காத"

"ச்சே..ச்சே.நீ சொன்னது போல யாரும் சொல்லித்தராமல் வருவது தான்,வயதின் உந்துதல் தான்,படைப்பின் காரணம் அதுவாக இருக்கலாம் 
ஆனால் உடற்பலன்களை  அடைவது மட்டுமில்லை..."இன்னும் எத்தனை  வருடங்கள் உயிரோடு இருக்க வேண்டுமோ, அதுவரை  பிடித்துக்கொள்ள,தோள்கொடுக்க, பாதுகாக்க ஒரு உயிரை தேடும் சுயநலக்கலவை தான் காதல்.இன்னும் என்னிடம்,உன்னிடம் வற்றாமல் இருக்கும் நேசம்,அன்பு இதேல்லாம் காட்ட,பிரகடனப்படுத்த ஒரு ஜீவன்.....சிறு குழந்தைகள் தனெக்கென பொம்மை ஒன்றை வைத்துக்கொண்டு அதற்க்கு குளிப்பாட்டி,தலை சீவி,ஆடை உடுத்திப்பார்க்குமே அதுபோல...வாழ்வை கடத்த மனிதனுக்கு மனிதன் வேண்டும், மனதிற்கு நெருக்கமான ஒரு ஆள்.இறைவன் ஆதாமை படைத்து,சொர்க்கத்தில் அவனை உலாவ விட்ட பின்பும் அவன் சோர்ந்து போகக்காரணமென்ன?எல்லாமே இருக்கையில் ஏதோ ஒன்று குறைவதாக அவன் நினைத்ததேன் ?

இது மட்டுமில்லாது சின்ன சின்ன பேச்சு,சிரிப்பு, ஸ்நேஹம், அழுகை இவைகளை பங்கீட்டுக் கொள்வதும்  காதல் தானே! மனசுக்கு பிடிக்கிறதா?உடம்புக்கு பிடிக்கிறதா என ஏன் குழப்பிக்கொள்ள வேண்டும்? "பிடிக்கிறது" என்று வைத்துக்கொண்டால் என்ன? இதெல்லாம் ஆண்டவன் ஏற்படுத்தியதா,ஆதியில் இருந்து வந்ததா என்பதை ஏன் கணிக்க வேண்டும்?
மெதுவாக கைகளை தட்டினேன் "அற்புதம்...நீ சொன்னது தான் சரி...ஒரு "துணை" என்பது தான் பிரதானம் மற்றவை எல்லாம் அதன் பின்னே மறைந்து கிடக்கிறது...ரொம்ப சரி"

அன்றைய தினத்தின்
மீதமுள்ள பொழுதை
வார்த்தைகளால் நிரப்பினோம்.

பேசிய வார்த்தைகளை
நேராக அடுக்கி இருந்தால்-அவை
நிலவை தொட்டிருக்கும்

அந்த வார்த்தைகள்
நாடுகளுக்கிடையேயான
சண்டைகளை தீர்த்திருக்காது,
தொழிலாளர்களுக்கு
ஊதிய உயர்வு தந்திருக்காது
செல்லாக் காசிற்கு கூட
அவ்வார்த்தைகளை விற்க முடியாது-ஆனாலும்

நீயும் நானும்
தொடர்வண்டியாய்
வண்டி வண்டியாய் 
பேசிக்கொண்டே இருந்தோம்.

வார்த்தைகள் பாலம் போட்டு
நம் இருவருக்கும் உள்ள 
இடைவெளியில் சுற்றித் திரிந்தது.
நிரம்பி வழிந்து,அறையை நிரப்பியது.

வார்த்தைகளில் சில 
மோதி விலகிக்கொண்டன-சில 
சேர்ந்து பிணைந்து கொண்டன.

இன்னும் பல 
வருடங்கள் ஓடி 
அவ்வார்த்தைகள்
மறந்து போகக்கூடும்-ஆனால்
நீ ஒரு கால் மடித்து
கண்கள் தாழ்த்தி
எனை பார்த்தமர்ந்திருந்த  தோரணையும்,
என் விரல்களை பிடித்திருந்த
உன் விரல்களின் மென்மையும்
நீ பேசுகையில் ஆடிய
கம்மலின் நடனமும்-செத்து
புளியமரப்பேயானாலும் மறக்காது!

(தொடரும்)

அன்புடன் 
நான்.

- Copyright © துளி கடல் -