அத்தியாயம்-4
தனித்திருக்கிறேன் வா!

முதல் பகுதி http://www.ibbuonline.com/2012/11/blog-post_20.html
இரண்டாம் பகுதி http://www.ibbuonline.com/2012/12/blog-post.html

(தொடர்ச்சி)

சூரியன் சாயத்தொடங்கும் நேரமானது,

பின் தோட்டத்து படிகளில் இரண்டாவதில் நானும்,மூன்றாவதில் நீயும் அமர்ந்திருந்தோம்.

"பசிக்கலையா?".
"சாப்பிட வா என்பதை பசிக்கலையா என்பதாக கேட்கிறாயா?...நான் அதை செய்ய மாட்டேன் என்று தெரிந்தும்?"
"உன்னோடு நான் இரண்டு காரணங்களுக்காக தான் சேரத்துடிக்கிறேன்,காதல் என்று பொய் முலாம் பூசுகின்றேன் என்று அவர்கள் சொன்னதை இங்கே ருசுப்படுத்த வேண்டுமா?"
"நான் அந்த அர்த்தத்தில் சொல்ல வில்லை...தப்பாக எதுவும் சொல்லும் எண்ணமும் இல்லை"
"ஒன்றை சொல்கிறேன் மனதில் போட்டுக்கொள்.....என்னுடைய எல்லாமும் உன்னுடையது.....ஆனால் உன்னுடையது எதுவும் என்னுடையதல்ல உன்னை தவிர" கொஞ்சம் கோபமாகவே சொல்லி இருப்பேன் போல.
"......."
"என்ன எதுவும் பேச வேண்டாமா? என்னாச்சு?எனக்கு தெரியாமல் வாயில் எதையாவது வைத்து தின்று கொண்டிருக்கிறயா?...கோபமாக இருக்கிறேன் என்று மட்டும் சொல்லி விடாதே....அது கறுப்பா,சிகப்பா என்று கூட உனக்கு தெரியாது"
"இவருக்கு தான் தெரியும் .....இவருக்கு மட்டும் மூக்கின் நுனியில் தாவக்காத்திருக்கும் கோபம்......யப்பா..நான் ஒரு பேச்சுக்கு தான் கேட்டேன்"
"நான் அப்படித்தான் என்று தெரியும் தானே?"
"அய்யே ரொம்ப தான் திமிர்"
".........."
ரொம்ப அழகான திமிர்...ஆண்மைத்தனமான திமிர்"
"..........."
"பேசேன்டா"
"உண்மையிலேயே என் கோபத்தை ரசிக்கிறாயா?"
"நீ நீயாக இருக்கும் எல்லா கணங்களையும் ரசிக்கிறேன்... நீ உரிமையோடு கோபப்படும் நேரத்தில் தான் உன் மீதான நம்பிக்கை அதிகமாகின்றது
நீ என்னிடம் எப்போதும் நடிப்பதில்லை என்று புலனாகின்றது...."

சூரியப்பறவை
பறந்து களைத்து
மேகக்கூட்டிற்குள்   
திரும்பிக்கொண்டிருந்தது,
அதன்  எச்சங்களை    
மஞ்சள்கூழாய்
தொட்டித்தண்ணீரிலும் 
இலை,கிளைகள் மேலும் 
தூவி இருந்தது.
பவழமல்லி பூக்கள் 
கிணற்று மேட்டிலும் 
ஈரத் தரையிலும்-வெள்ளை 
படுக்கை விரித்திருந்தது.
காளைக்கன்றொன்று 
தாய்ப்பசுவின் மடி முட்டியது.

நீ நடந்து போய் 
துணி துவைக்கும் கல்லில் 
அமர்ந்து கொண்டாய் 
உன் கருங்கூந்தல்
காற்றில் அலைந்து,
வெயிலை குடித்து,
தங்க ஜரிகையாய் நீண்டது.

உன் கழுத்தும்
கைகளும்,தோளும்-பல
வண்ணங்கள் பூசிக்கொண்டன.

மெதுமெதுவாய்
ஒரு ஓவியத்தை-அந்தி
வரைந்து கொண்டிருந்தது.
உன்னையும் அடக்கியதால்
அவ்வோவியம் 
முழுமையானது.

"எழுந்து வாயேன் ஒரு ரகசியம் சொல்கிறேன்" அருகில் உன்னை அழைத்தேன்.
"என்ன விஷயம்" நடுவிரல்-கட்டை விரலால் பாவாடையை கிள்ளிப்பிடித்துக்கொண்டே வந்தாய்.
"ரகசியம்னு சொன்னல்ல....இன்னும் கிட்ட வா"  
"ம்....போதுமா"
................
...............
உன் கை கற்றை வளையல் சப்தமிடத்தொடங்கி பின் வெக்கத்தில் அமைதியானது.
.............
"ஐயோ......ரகசியத்தை என் காதில் சொல்லாமல் வாயில் சொல்வது என்ன பழக்கமோ?.....ராஸ்கல்" கண்களை விட்டு கண்களை எடுக்காமல் சொன்னாய்.

கொடுக்கும் முத்தம் 
பாம்புக்கடி விஷம் போல,
கொடுத்த இடத்தில துவங்கி-நொடியில்
உடம்பில்  பரவி 
இருதயத்தை நிறுத்துகிறது.

அதி முக்கியக்குறிப்பு: இப்போதெல்லாம் காதல் கதை என்றாலே அதில் ஒன்றிரண்டு படுக்கை அறை  காட்சியை எதிர் பார்கிறார்கள் நம்ம ஆட்கள். அது போல எல்லாம் இந்தக்கதையில் எதுவும் இராது.இங்கு இதற்க்கு ஒரு சின்ன விளக்கம் கொடுக்க நினைக்கிறன்..சமீபத்தில் இந்த கதையின்  ஆசிரியன்,நான்,கதையின் நாயகன் (நாயகர்....இவருக்கு தற்போது 40 வயதிற்கு மேல் ஆகின்றது அதனால் மரியாதை) மூவரும் மான்சஸ்டர் யுநைட்டட் பார் ளொஞ்சில் வாட்காவை சீப்பிக்கொண்டிருந்த போது (எனக்கு பழக்கம் இல்லாததால் நான் கோழிக்காலை கடித்து இழுத்துக்கொண்டிருந்தேன்)...நாயகர் சரியான போதையில் இருக்கும் போது ஆசிரியன் இந்த குறிப்பின் முதல் வரியை சொல்லி நம்முடைய கதையிலும் ஒன்றிரண்டு படுக்கை காட்சி அல்லது அதற்க்கு ஒப்பான காட்சியை சேர்த்துக்கொள்ளலாமா என்றார்..வந்ததே கோபம் நம்ம நாயகருக்கு ங்***** என்று கெட்ட வார்த்தையில் ஆரம்பித்து நடுநடுவே அதை மீண்டும் சேர்த்துக்கொண்டு திட்ட தொடங்கினார்....."ஏதோ கத எழுதனும்னு ஆசைப்பட்டியேன்னு தான் என்னுடைய  காதலை பற்றி சொன்னேன்,அதுல  வேணும்னா  கொஞ்சம் கற்பனை சேர்த்துக்கோ..ஆனா என் தேவதையோ ,என் காதலையோ பத்தி யாராவது  தப்பா நினைக்கிற மாறி எழுத ஒப்புக்கொள்ள மாட்டேன்...ஏதோ புதர் மறைவிலேயும்,கடல் மணல்லயும் வளர்ந்த காதல்னு  நினைச்சியா ? " என்று பொரிந்தார். எழுத்தாளனும் விடவில்லை "ஏன்யா நானென்ன 'உதடை கடித்தான், கவ்வினாள், மென்றான்,துப்பினாள்'  அப்படின்னா எழுதப்போறேன்? அதுக்குன்னு ஒரு தன்மை இருக்கு...குடிகாரப்பய உனக்கு என்ன தெரியும்" என்று எகிறினார். இருவரும் கட்டி புரளாதது  தான் பாக்கி,இவர்கள் பஞ்சாயத்திற்கு நடுவே கோழிகாலுக்கு ஆசை பட்டு வந்த நான் மாட்டிக்கொண்டேன்.
தற்சமயம் பெருங்குடிகாரனாக இருக்கும் கதாநாயகரின்  கூற்றை கதையாசிரியர் (இரண்டு பீங்கான் தட்டு,பெப்பர் டப்பி உடைந்ததும்)ஒப்புக்கொண்டார் (ஆனால்  அவர் மனம் போகும்  போக்கு படி  தான்  எழுத  விழைவார்).வேறு வழி? தன்னுடைய காதல் நாட்களை பற்றிய டைரிக்குறிப்புகள்,கடிதங்கள் எல்லாவற்றையும் அவர் திருப்பிக்கேட்டால்? இந்த ஆசிரியனுக்கு சார்ந்து எழுதும் சிற்றறிவே தான் தவிர புதிதாக எதையும் வடிக்க மாட்டான். அப்படி இருக்க நாயகருடைய தயை இவனுக்கு தேவையே தேவை. ஆக இந்தக்கதையில் "அந்த மாதிரி"  விவகாரங்கள் வராது,மேலே வருவது போல சுமாரான ரொமான்ஸ் எதிர் பார்க்கலாம் என்பதை என்மூலமாக இந்தக்கதையின் ஆசிரியன் இங்கே தெரிவிக்கிறான்.
---------
"நேரமாகின்றது நான் போகணும் தெரியுமில்லை?"என்றேன்.
"அய்யோ போகணுமா?...ஆமாம் போகத்தான் வேணுமில்லை?

உன்னோடு இந்த நாள் 
வாலில் தீ பிடித்த குரங்காய்  
வேகமாய் ஓடிவிட்டது-ஆனால் 
நீ இல்லாமல் அது 
பாறாங்கல்லை சுமக்கும் 
நத்தை பூச்சியாய் நகர்வது,
என்ன விந்தையோ?

"ஐன்ஸ்டினின் ரிலேட்டிவிட்டி தியரியை போல..இல்லை?"
-----
வாசலருகே வந்து நின்றோம்.
காலையில் விலகிக்கொண்டு உன்னை கண்களுக்கு காட்டிய அதே கதவு,இப்போது நம்மை பிரித்து தள்ளி மூடக்காத்திருந்தது.

"ஒரு நாள் முழுக்க கூடவே இருந்து,பேசி சிரித்து....ஹ்ம்ம் வாழ்கை முழுக்கும் இப்படியே இருந்தால்?"என்றாய்.
"இருக்கலாம் ..ஆனால் கொஞ்சம் சலிப்பாகுமே?"
"அதெல்லாம் ஆகாது....ஆனால் கூட என்ன? அவ்வப்போது கொஞ்சம் சண்டை போட்டு சுவை சேர்த்துக்கொள்ளலாம்"
"நேரமாகின்றது வரட்டுமா?" வாய் சொன்னதே தவிர கைக்குள் இருந்த கை விடவில்லை.
"இப்போ உன்னை கட்டிக்கொள்ளனும் போல இருக்கு.....ஆனால் நீ கொடுத்த வளையல் உடைந்து விடும் என்பதால் விலகி நிற்கிறேன்"
"வரேன்" தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினேன்...உன்னை திரும்பிப் பார்த்தால்  மீண்டும் அருகே வரத்துடிப்பேன் என்று திரும்பாமலே நடந்தேன்....எப்போதும் போல.
--------
பயணம் செய்து வீடு வந்து சேர்ந்ததும் சில நிமிடங்களில் போன் மணி ஒலித்தது
யாரோ எவரோ.....எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி எடுத்து "ஹலோ"என்றேன்
"நான் தான்" என்றாய்...மீண்டும் நீ!!!!
"என்னாச்சுடி உனக்கு?"ஆச்சர்யமாய் கேட்டேன்.
"ஒன்று சொல்ல நினைத்தேன்....."
"சொல்லு என்னதது?"
"என் வீட்டில்,என் அறையில் கிட்ட தட்ட இருபத்தி இரண்டு  வருடங்கள் புழங்கி வருகின்றேன்...ஆனால் இப்போது என்னால் அங்கு ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லை....தனியாக"
"டொக்".

அன்புடன் 
நான்.

- Copyright © துளி கடல் -