Duel(1971) - ஸ்பீல்பெர்க்கின் முதல் படம்


ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-அமெரிக்க திரைத்துறையின் மிகபெரிய ஆளுமை,வசூலில்  மன்னன்,உலகிலேயே சினிமாவில் அதிகம் சம்பாதிப்பவர் சினிமாவின் மீது தீராக்காதல் கொண்டவர்,குழந்தைகள் முதல் அனைவரும் பார்க்கும் வண்ணம் பொழுது போக்கு படங்களை எடுப்பவர்.Indiana Jones, Schindler's List,Saving Private Ryan,E.T  முதலான காலத்தால் அழியாத படங்களையும்,அனிமேஷன் (Animatronics) டெக்னாலஜியில் பெரும் புரட்சி ஏற்படுத்திய ஜுராசிக் பார்க் முதலிய படங்களை உருவாக்கியவர்.பொதுவாக இவர் படங்களில் பெரிதாக டுவிஸ்ட்,மிஸ்டரி எதுவும் இருக்காது,ஆனால்   திரைக்கதை அநியாய வேகமாக இருக்கும்.காட்சிகளின் சுவாரசியம்,பிரமாண்டம்,காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் தன்மை இவைகள் பொதுவாக இருக்கும்.

ஜுராசிக் பார்க் படத்தில் சிறுவனாக வரும் ஜோசப்,ஒரு டைனோசரின் மேல் அமர்ந்து சவாரி செய்வதை போல சில நிமிடக்காட்சி ஒன்று உருவாக்கப்பட்டது.இது அப்போது டெக்னிகலாக ரொம்பவும் சிரமமான காட்சி,இதற்காக ஸ்பீல்பெர்க்கின் கூட்டாளிகள் கிட்டதட்ட ஒரு வருடம் உழைத்திருக்கின்றார்கள்.படம் ரிலீசாவதற்கு சில நாட்கள் முன்பு இந்தக் காட்சி டைனோசர்களின் மீதான பயத்தை குறைக்கிறதென கருதி அந்த காட்சிக்கு கத்தரி போட்டு விட்டார்! ஸ்பீல்பெர்க் ஒரு perfectionist என்பதற்கு இதை விட வேறென்ன சொல்ல முடியும்.

இன்று கோடி கோடியான பட்ஜெட்டில் படமெடுத்து தள்ளும்  ஸ்பீல்பெர்க்கின் முதல் படமும்,மிக லோ-பட்ஜெட் படமான Duel பற்றி பார்ப்போம்,பெரிய புயலுக்கு முன் பெய்யும் மழையை போல ஒரு அறிவு ஜீவிக்கு உண்டான அத்தனை தன்மையும் படத்தில் நிறைந்திருந்தது.படத்தின் கதையை லே-மேன் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால்...... "ஒருத்தவன் ஓடுறான்,அவனை ஒருத்தவன் தொரத்துறான்.ஓடுறவன் நின்னா தொரத்துரவனும் நிக்கிறான்.திரும்ப ஓடத்துவங்கினா  திரும்பவும் தொரத்துரான்....."என்ன ஒரு வித்யாசமென்றால்  ஓடுகின்றவன்  ப்ளேமௌத் காரிலும்,அவனை துரத்துகின்றவன் ஒரு ராட்சஷ ட்ரக்கிலும் இந்த வேலையை  செய்கின்றனர்.

தன்னுடைய பிஸ்னெஸ் நிமித்தமாக நெடுந்தூரம் காரில் பிரயாணிக்கும் டேவிட் வழியில் ஒரு பெரிய ட்ரக்கை ஓவர்-டேக் செய்கிறான்,அட ரொம்ப சாதாரணமாக தான்.அதுக்கு அந்த ட்ரக் டிரைவர்...படம் முடியறவரை நம்ம டேவிடை பயித்தியம் பிடிக்கும் அளவுக்கு துரத்தி டார்ச்சர் செய்கிறான்......("வந்து நின்னது குத்தமாடா!").விளையாட்டாக ஆரம்பிக்கும் துரத்தல்  ஒரு கட்டத்தில் மரண சீரியசாகின்றது. டேவிட் பொறுமையாக வண்டியை ஓட்டினால்,ட்ரக் ட்ரைவரும் அதே செய்கிறான்,அவன் கடக்கட்டும் என்று காரை ஓரம் கட்டினால்,நகராமல் அங்கேயே நிற்கிறான்.பெட்ரோல் போடவோ,அல்லது உணவகத்தில் காரை நிறுத்தினால் அவனும் அதையே செய்கிறான்.தன்னை துரத்தும் ட்ரைவர் யாரென்று தெரியாமல் ஹோட்டலில் எல்லோரையும் சந்தேகத்தோடு பார்த்து,தவறான ஆளிடம் சண்டைக்கு போய் கட்டி புரள அதே நேரத்தில் வெளிய அந்த கொலைகார ட்ரக் புறப்படுகின்றது!

இந்த கேட்&மௌஸ் துரத்தலின் உச்சகட்டமாக,ரயில்வே க்ராசிங் ஒன்றில் நின்று கொண்டிருக்கும் டேவிடின் காரை,ஓடிக் கொண்டிருக்கும் ரயிலின் நடுவே இடித்து தள்ளி கொல்ல முயற்சிக்கிறான்  அந்த சைக்கோ. இவனிடமிருந்து தப்பிக்கும் முயற்சியாக ஓடி ஓடி ஒரு குறுக்கு பாதையில் சென்று தன் காரோடு ஒளிந்து கொள்கிறான் டேவிட்...கிட்ட தட்ட 2-3 மணி நேரம் கழித்து வெளியே ஹாயாக வந்து சில தூரம் சென்றதும்(வேறென்ன?).....பாதைக்கு குறுக்கே ஸ்டைலாக நிற்கிறது ட்ரக்! மீண்டும் தொடங்குகின்றது "ஓடல்-துரத்தல்" நாடகம், ஒரு  கட்டத்தில் டேவிடின் என்ஜின் சூடாகி,கார் பழுதாகி,புகை வரத்தொடங்க....படம் சூடு பிடிக்கிறது. இறுதியில் ட்ரக் ட்ரைவர் டேவிடை பிடித்தானா அல்லது பிடிபட்டானா என்பதை நிச்சயம் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


அகஸ்மாத்தாக ஓவர் டேக் செய்ததற்கா இவ்வளவு போராட்டம்,சுத்தப் பேத்தனமாக தனமாக இருக்கிறதே என்று நினைக்க தோன்றுகிறதல்லவா?ஆனால் படத்தின் விறுவிறுப்பில் அந்த லாஜிக்கயெல்லாம் மறந்து விடுவோம் என்பதே உண்மை.ஒரு ட்ரக் ஒரு காரை நெடுஞ்சாலையில் துரத்துவது தான் கிட்டதட்ட படம் முழுக்கவே,இதனை சலிக்காமல் எடுக்க கேமரா  கோணங்களில் வித்யாசங்காட்டுவது தான்  ஒரே வழி.ஓடிக்கொண்டிருக்கும் காரின் பின் பானட்டில் துவங்கும் கேமரா,காரை கடந்து ட்ரக்கின் நீளத்தை கடந்து,முன் பக்கம் போய், சுற்றிக்கொண்டு வந்து காரின் முன் பக்கம் முடிகின்றது.... ஒரே ஷாட்டில்!(இந்த கேமரா கம்பசூத்திரமெல்லாம் எனக்கு  பெரிதாக தெரியாது,  நிறைய படங்கள் பார்ப்பதால் வந்த சிற்றறிவு).படம் முழுக்க மாவு மில்லுக்குள் நுழைந்ததை போல வண்டியோடும் ஒரே ஒரு சத்தம் (இசை?) தான்,ஒரே ஒரு பாத்திரம் தான் (ட்ரக் ட்ரைவரை கடைசி வரை காட்டுவதில்லை).ஆனால் ஒரு இடத்தில்  கூட தொய்வில்லாமல், சுவாரசியம் குறையாமல் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு த்ரில்லர் படம்.பார்க்க வேண்டிய படம்!

P.S :பொதுவாக ரோடு ட்ரிப் படங்கள் எப்போதும் ரசிக்கும் படியாக இருக்கும், நமக்குள் கொஞ்சம் ஆசையையும் கிளப்பி விடும்  .நம்மூரிலேயே பைக் கிளப் போன்றவைகளெல்லாம் இருக்கிறது,பைக்கை வைத்துக்கொண்டு இந்தியா முழுக்க சுற்றுவார்கள்.நான் கூட என் நொந்து போன கால காட்டத்தில் பைக்கை எடுத்துக்கொண்டு எங்கனயாவது போய்த் தொலயலாமா என்று கிளம்பினேன்..ஓசூர் தாண்டுவதற்குள் முதுகு வலி வந்துவிட்டதால், ரோட்டோர கடையில் புரோட்டா சாப்பிட்டு விட்டு திரும்பி விட்டேன் என்பது இங்கு தேவையில்லாத விஷயம்.ஆனால் ஒரு நாள் நிச்சயம் பைக்கில்/காரில் நெடுந்தூரம் போகவேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா.

மிக ரசித்த ரோடு ட்ரிப் படங்கள் என்றால் தெல்மா-லூயிஸ்,ஜாம்பி லேன்ட்,லிட்டில் மிஸ் சன்ஷைன்.தமிழில் இந்த வகை படங்கள் ரொம்பவும் கம்மி "மதராஸ் டூ பாண்டிச்சேரி",""திருமலை தென்குமரி" (சாமி படம்),"பையா"(இது விளங்கவில்லை!) போன்றவைகளை இந்த வகையில் சேர்க்கலாம்.

Duel(1971) முழு படமும் இந்த Youtube லிங்கில் இருக்கின்றது 
https://www.youtube.com/watch?v=pnHjfGaN3kw

Duel(1971) படத்தின் ட்ரைலர் இங்கே 

அன்புடன்
நான்.

2 Responses so far.

  1. Before getting much exposure foreign cinema, I watched this film given by my friend.. It was really an edgy thriller.. But at that time I didn't even know who Spielberg is.

  2. Ibrahim A says:

    yes...thanks for visiting shareef.

- Copyright © துளி கடல் -