Archive for 2013

"செம்பருத்தி"- தி.ஜானகிராமன்: பெண் செய்த உலகம்


   


வெற்றி என்பது எதைக்குறிக்கிறது?பணம்,புகழ் சேர்த்தல்,இறைவனை அடைதல் இவைகளின் மூலம் வாழ்வில் உச்ச நிலைக்கு போதல்... எதைக்குறிக்கிறது?தத்துவங்களை புரட்டிப்பார்த்தால் மனிதர்களை சம்பாதிப்பது தான் வெற்றி என்கிறது தீர்க்கமாக இன்னும் சொல்லப்போனால் நம்மை சுற்றி நம்மை நம்பி இருக்கும் மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்தியமாவது.காலங்கள் கடந்த போதும் அந்த அன்பு மாறாமல் ஒருவரை இருக்கச்செய்வதே உண்மையான வெற்றி."செம்பருத்தி" கதையில் வரும் சட்டநாதன் இந்த வெற்றிக்கு தான் பாடுபடுவதாக தெரிகின்றது. பெண்கள் நிரம்பிய உலகத்தில் அவர்களூடே பயணித்து,அவர்களை புரிந்து கொள்ள முயலும் வெற்றி,அதை தான் தி.ஜா நாவலாக்கியிருக்கிறார் .

சட்டநாதன் படித்துக்கொண்டிருக்கும் வயதில்,மளிகைக்கடை நடத்தி வரும் சின்ன அண்ணன் முத்துசாமி காய்ச்சலில் இறந்து விடுகிறான். அதிகாலை வலியன் கத்தல்களையும்,வரப்பு பூக்களையும்,திருவாசகத்தையும்,இராமாயணத்தையும் படித்தபடி  திரிபவனுக்கு  கடைப்பொறுப்பும் , குடும்பப்பொறுப்பும் தலையிலேற்றப்படுகிறது.அங்கு தொடங்கி அவன் பாதுகாப்பில் இருக்க நேரும் அவனது மனைவி புவனா,விதவையான சின்ன அண்ணி குஞ்சம்மாள், பெரிய அண்ணன்-அண்ணி,குழந்தைகள்-இவர்களோடு கொண்ட உறவு/பிணக்கு,மளிகைக்கடை வியாபாரம் மூலமாக அவனுடைய குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்துதல்,சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் சிற்றூர்களில் ஏற்பட்ட மாற்றங்கள்,சந்தித்த மனிதர்கள் என்று அவனே சொல்வது போல மூன்று பாகமாக கதை நகர்கின்றது.குறிப்பாக அவன் கடந்து வரும் மூன்று பெண்களும் அவனது வாழ்வில் என்னமாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகின்றனர் என்பதை கூறுவதன் மூலம் குடும்பம்,சமுதாயம் முதலான கட்டமைப்பில் பெண்களின் பங்கு எவ்வளவு என்று புலனாகின்றது.

சட்டநாதனின் படிக்கும் வயதில் ஆசிரியரான தாண்டவ வாத்தியாரின் பெண்ணான குஞ்சம்மாளை ஊமையாக காதலிக்கிறான் ஆனால் அது நிறைவேறாமல் அவள் அவனுக்கு அண்ணியாக ஆக நேருகின்றது.ஆனால் அவள் தன்னுடைய கணவனின் இறப்புக்கு பிறகு சட்டனாதனை மோகிக்க  முயல்கிறாள், அவன் மிரண்டு ஒதுங்கவே,அவனை காலம் பூராவும் அவனருகே இருந்து அவனை பார்த்துக்கொண்டே இருக்கப்போவதாக கூறுகிறாள். ஆனால் வருடங்கள் கடந்து போகப்போக அவன் மீது அர்த்தமில்லாக்கோபம் ஏற்படுகின்றது. என்னை நீ நேசித்தபோதும் அதை வெளிய சொல்லாமல் என்னை வேறொருவன் மணப்பதை ஏற்றுக்கொண்டாய்,இந்த சமுதாயத்திற்கு பயந்து,நீயும்  உன் குடும்பமும்  முன்னேற, நெறி  தவறாத  நல்லவனாய்  காட்டிக்கொள்ள  உன் ஆசைகளை பூட்டி வைத்து என்னை நோகச்செய்துவிட்டதாக கூறி அவனை விட்டு விலகுகிறாள்.

சட்டனாதனுக்கு தன்னுடைய குடும்பம்,வியாபாரம் உளைச்சல் போன்ற அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு ஜீவனாக அவனுடைய மனைவி புவனா இருக்கிறாள்.அவள் அவனுடைய தேவைகளையும்,அவன் குடும்பத்தை தன்னுடைய குடும்பமாய் எண்ணி ஜீவிதம் செய்கிறாள்.ஆனால் அவளும் கூட வயதான(மாத விலக்கு நிற்கும்) காலத்தில் புத்திகெட்டு போய் அவன் மீது சந்தேகம் கொள்கிறாள்.கணவன் மனைவி இருவருக்குள் -ஒருவருக்கு உடலுறவு வறண்டு போய் மனவெருட்சி  ஏற்படும் காலம் எல்லோருக்கும் நிகழும் பிரச்சனை தான்,அதை எப்படி கடக்கிறோம் என்பதே உறவின் உண்மையான கட்டம்.  மிகுந்த அன்பும்  காதலும்  கொண்டிருந்த தன்னுடைய மனைவியின் மாற்றம்  சட்டனாதனிர்க்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது,பின்னர் அமைதியாக அதையும் கடக்கின்றான்.

பணமும்,ஊர்ப்புகழுடனும் நன்றாக வாழ்ந்து வரும் சட்டநாதனின் பெரிய அண்ணன்,சாட்சிக்கையெழுத்து பிரச்சனையால் சொத்துக்களை இழந்து-அவரும்,பெரிய அண்ணியும்,குழந்தைகளுமாக செம்பானூருக்கு வந்து சட்டநாதனின் உழைப்பில் வாழ்கின்றனர்.நாவில் தேள் கொடுக்கை வைத்து அலையும் பெரிய அண்ணி அவளுடைய வறுமையினாலும்,இயலாமையினாலும் வீட்டில் உள்ள எல்லோரையும் கொட்டிச்சாய்க்கிறாள்.குறிப்பாக சின்ன அண்ணியையும்,அவள் பெண்ணையும் சட்டனாதனையும் இணைத்து திரித்து பேசுகிறாள்.அந்த வீட்டில் ஒவ்வொருவர்  செயல்பாடுகளையும் அளப்பவளாக,எதையும் தவறாய் கணித்து வார்த்தையால் தீண்டுபவளாகவும் அவள் இருக்கிறாள்.

ஜானகிராமன் - ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதை சுற்றியே நாவல் பயணம் செய்யும்-மோகமுள்ளிலும்,அம்மா வந்தாளிலும்,மரப்பசுவிலும் அது தெளிவாக தெரியும்.இந்நாவலில் அவர் எடுத்துக்கொண்டது பெண்களின் உலகத்தில் நீந்தித்தவிக்கும் ஒரு ஆணின் கதை என்பது தான்,கிட்ட தட்ட தொண்ணூறு சதவிகித நாவலும் அப்படியே இருக்கிறது,அப்படியே முடித்தும் இருக்கலாம் ஆனால் கம்யுனிசம்,சுதந்திரபோராட்டம் முதலானவற்றை தேவையில்லாமல் திணிக்க முயன்றிருப்பதும்,சில இடங்களில் வேறு தளத்தில் பயணிப்பதும் ஏன் என்று தெரியவில்லை?ஒரு வேளை அந்த காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டவைகளை இணைக்க வேண்டிய எண்ணமோ என்னவோ?பெரிய அண்ணி இறந்ததுமே முடித்து விட்டிருக்கலாம்,இறுதி அத்தியாயங்களை கொஞ்சம் இழுத்தாற் போல தோன்றுகிறது (என்னை பொருத்தமட்டில் ஒரு எழுத்தாளனை இப்படி சொல்வது  மிகப்பெரிய தவறு!)

தி.ஜா வின் நாவல்களுக்கு எப்போதும் ஒரு  ஈர்க்கும் தன்மை உண்டு.ஒரு ஊரை,கடைத்தெருவை,வயலை,ஆற்றங்கரையை அவர் விவரிக்கும் பாணி தனி அழகு,அங்கே நாம் செல்ல வேண்டும் என்ற விழைவை தூண்டும் அளவிற்கு அழகு.இயற்கையில் நிகழும் நிகழ்சிகளின் வழியாகவே பாத்திரங்களின் மனவோட்டத்தை சொல்லும் திறமை,மரபை மீறின பெண்கள்,ஆங்காங்கே தூவப்பட்ட எல்லை மீறாத கிளுகிளுப்பு தன்மை- தி.ஜானகிராமனை படிக்க எப்போதும் அலுப்பதே இல்லை."செம்பருத்தி" அவரின் மாஸ்டர் பீஸ் நாவலில்லை ஆனால் மேல சொன்ன காரணங்களுக்காக படிக்க வேண்டியவை.

அன்புடன் 
நான்.


நத்தைச்சுமை:கவிதை




நத்தைச்சுமை

இப்பெரு வெளியில்,
எங்கோ,
தன்னைத்தானே 
பெருங்கூடாய் சுமந்து 
நத்தயொன்று   
மெதுமெதுவாய் 
நகர்ந்து கொண்டிருக்கிறது-
அதையும் சேர்த்து  சுமந்தபடி
நகர்ந்துகொண்டே இருக்கிறது
பூமி.

அன்புடன் 
நான் 

The Silence (2010):தனிமையின் பசி



தனிமை தான் உலகிலேயே மிகக்கொடிய நோயாக இருக்க முடியும்.தனிமை என்பது இருளை போல சூழ்ந்து கொண்டு பித்து பிடிக்கவைக்க வல்லது.அதன் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்தவர்களையும்,தப்பி வெளிவந்தவர்களையும் முதல் பார்வையிலேயே கண்டு கொள்ள முடியும். தனிமையில் வாடும் மனது எந்த கருப்பொருளும்,காரணமும்,நோக்கமும் இன்றி எதனையும் செய்யும்.Baran bo Odar இயக்கிய  The Silence என்ற ஜெர்மானிய மொழி திரைப்படம் இதையே கருவாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் மீது காமம் கொள்ளும் மனவியாதிக்கு பிடோபிலியா (pedophilia) என்று பெயர்.இதன் பாதிப்பிற்கு உள்ளான பீர் அவனது நண்பன்  ப்ரைட்ரீச் ஒரு சிறு பெண்ணை துரத்தி சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமான கோதுமை வயலில் வைத்து பீர் அவளை கற்பழித்து கொன்று விடுகிறான்.பிறகு அவளது சைக்கிளை அந்த வயலிலேயே தூக்கி எரிந்து,அவளது சடலத்தை அருகில் உள்ள ஏரியில் வீசிச்சென்று விடுகின்றனர்.அத்தோடு ப்ரைட்ரீச் பீரை விட்டு விலகிச்சென்று விடுகின்றான்.இந்த வழக்கை துப்பறியும் மிட்டிச் எவ்வளவும் முயன்றும் கொலைகாரனை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் நடந்து 23  வருடங்கள் கழித்து,அதே நாளில்,அதே இடத்தில் ஒரு சைக்கிள் கிடக்கிறது ,கொலை நடந்த அடையாளங்கள் தெரிகின்றது, சிநிக்கா என்ற பெண்ணும் காணாமல் போயிருக்கிறாள்.ஒரு த்ரில்லர் படத்திற்கு தேவையான அணைத்து அம்சங்களுடன் முதல் பத்து   நிமிடத்திலேயே  விறுவிறுப்பு தொடங்கிவிடுகின்றது  ஆனால் காட்சி நகரும் விதமும்,கதாபாத்திரங்களின் நடிப்பும், சம்மட்டியாய் இறங்கும் இறுதிக்காட்சியும் இது மொன்னையான அமெரிக்க வகை த்ரில்லர் இல்லை இது ஒரு உலகத்திரைப்படம் என்பதை உணர்த்திவிடுகின்றது. நாம் யூகிப்பதையும் தாண்டி மிகச்சிக்கலான வாதங்களை அடுத்தடுத்த காட்சிகள் எடுத்துவைத்தபடியே  இருக்கின்றன.

நடந்திருக்கும் சம்பவத்தால் 23 வருடங்களுக்கு முன் நடந்த கொலைக்கு தொடர்புடையவர்களின் மனவோட்டம் சீர்குலைகின்றது: துப்பு துலக்கிய அதிகாரி மிட்டிச் தற்போது நடந்திருக்கும் கொலையை பற்றி தெரிந்த கொள்ள முற்படுகிறார் ஆனால் அவர் ஓய்வு பெற்று விட்டதால் அவரை வழக்கிற்குள் அனுமதிப்பதில்லை,இறந்த பெண்ணினுடைய தாயாருக்கு பத்திரிக்கை,தொலைகாட்சி மூலமாகவும்,அதிகாரிகள் மூலமாகவும் தொல்லை நேருகின்றது,தேவையில்லாமல் மீண்டும் அவளது நினைவு தூண்டப்படுகின்றது. சிநிக்காவின் தாயும் தந்தையும் முன்பு நடந்த சம்பவத்திற்கும் இதற்கும் எதுவும் தொடர்பு இருந்துவிடக்கூடாது எனவும் அதே நிலை தன மகளுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என எண்ணி பதைபதைக்கின்றனர்.

இரண்டு பெண் குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ப்ரைட்ரீச்,தொலைகாட்சிகளில் இந்த செய்தியை பார்த்து விட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றான்.ஏதோவொரு எண்ணம் உந்தவே 23 வருங்களுக்கு முன் இறந்த பெண்ணின் தாயை தேடிப்போய் சந்திக்கிறான்,மகள் இறந்த போது அவள் எந்த நிலைக்கு ஆளானாள் என்பதை கேட்டு தெரிந்து கொள்கிறான். மிகுந்த தயக்கத்துடன்  ப்ரைட்ரீச் தன்னுடைய பழைய நண்பனான பீரை தேடிச்செல்கிறான்.பல வருட நண்பனை கண்டதும் பீர் மகிழ்ந்து போகின்றான்.பின்னர் அவனுக்கும் பீருக்கும் நடக்கும் அந்த சில நிமிடக்காட்சிகளில் சிநிக்கா கொலை செய்யப்பட்டிருப்பதற்கான காரணம் விளக்கப்படுகிறது.(அற்புதம்!)

இதற்கிடையில் இந்த வழக்கை துப்பறியும் டேவிட் இரண்டு கொலைகளுக்குமான ஒற்றுமையை கண்டறிவதன் மூலம் கொலைகாரனை நெருங்கி விடலாம் என்று விசாரணை நடத்துகிறார்.பழைய கேசை தூசு தட்டி,சில தடயங்களை வைத்து இறுதியாக கொலைக்கு துணையிருந்த ப்ரைட்ரீச்ஐ நெருங்கி விடுகிறார்.ஆனால் அவன் குற்றவுணர்வு தாங்காமல் தன் காருடன் ஆற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறான்,கொலைகாரனை கண்டுபிடித்த திருப்தியுடன் அரசாங்கமும்,பத்திரிக்கைகளும் ஓய்ந்து விடுகிறது.ஆனால் டேவிட், கொலை நடந்த இடத்தில்  இருவர் இருந்ததை கண்டறிகிறார் மேலும் ப்ரைட்ரீச் இருபத்தி மூண்டு வருடங்கள் கழித்து அதே போல வேறொரு பெண்ணை கொன்று,பின் தானும் மடிவது முரணாக இருக்கிறதென கருதுகிறார்.ஆனால் அவரால் தன் உயர் அதிகாரியை எதிர்த்து எதுவும் செய்ய முடிவதில்லை.

மிஷ்கினின் அஞ்சாதே படத்தின் இறுதிக்காட்சிகளில் வரும் கரும்புக்காடு படம் முடிந்த பின்னும் நம் நினைவை விட்டு அகலாது அதே போல இதில்  வரும் கோதுமை வயல்-முடிவில்லாமல் நீண்டிருக்கும் அந்த வயலும்,அதன் ஆழ் நிசப்தமும் ஒரு பயத்தை ஏற்படுத்தியபடி இருக்கின்றது,அப்படி ஒரு அழகான ஒளிபதிவு.கூராக நீட்டிக்கொண்டு வெளியே தெரியாததால் இசையை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.கிட்டத்தட்ட படம் முழுவதுமே வேகமாக நகர்ந்து இருக்கையின் நுனியில்  அமரச்செய்தாலும் கதாபாத்திரங்களின் உணர்ச்சியின் வெளிப்பாடுகள் மற்றும் அவர்கள் படும் அல்லல்களையும்,மனப்பிறழ்வுகளையும்  பதிவு செய்ய தவறுவதில்லை அதனாலேயே இது "The Silence" உலகப்படமாக ஆகின்றது.




அன்புடன் 
நான்.

ஜனித்தலின் விதி:கவிதை



















படத்தை க்ளிக்கி பெரிதாக்கி படிக்கவும்

கவிதைகளுக்கான என்னுடைய முகநூல் பக்கம்,

Kavithai கவிதை-என்றும்-சொல்லலாம்ஜெனீ 


அன்புடன் 
நான்.

எளிதாக டைவர்ஸ் பெறுவது எப்படி?

எளிதாக டைவர்ஸ் பெறுவது எப்படி?



விடுமுறை நாட்களில் என் வக்கீல் தோழனின் அறைக்கு சென்று,பொழுதுபோகாமல் அவனது கிளையன்ட் கேஸ் கட்டுகளை புரட்டியபோது கிடைத்த சுவாரசியமான வழக்குகளை கற்பனை கலந்து என்  மொழியில் தொகுத்து வழங்கியிருக்கிறேன்.இங்கே கொடுக்கப்பட்டிருப்பவை ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுவானவை.இதை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக்கொள்ளவும்.சீரியசாக வீட்டில் முயன்று பார்த்து மனது உடைந்தால் நிர்வாகம் பொறுப்பாகாது!
பொதுவாக எல்லா விவாகரதிர்க்கும் ஏதாவது வலுவான காரணம் இருக்கும்-போதைப்பழக்கம்,அளவுக்கு மிஞ்சிய சைக்கோத்தனம்,குருரம், கள்ளத்தொடர்பு, பணம் இல்லாமை இப்படி.உண்மையாகவே சேர்ந்தே வாழமுடியாத ஒரு நிலையில் இருப்பவர்கள்,  விருப்பமில்லாமல்  ஒரு "drag" வாழ்கை வாழ்பவர்கள் அவர்கள்  விவாகரத்தில் தவறேதும் இல்லை.நான் சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாவிட்டால்  ஜீ தமிழ் சானலில் ஒளிபரப்பாகும்  "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியை பாருங்கள்,நிறைய நிறைய பெண்களும்,சில ஆண்களும் திருமணம் என்ற பந்தத்தில் சிக்கி எவ்வளவு கொடுமையான துன்பம் அனுபவிக்கிறார்கள் என்பது புரியும்.
ஆனால் நான் படித்தது இந்த மேல்வர்க்க டைவர்சுகளை பற்றி....அதில் காரணங்கள் எல்லாம் காமெடி வகை தான்!!! பார்த்த முக்கால்வாசி பிரிவுகள் எல்லாம் பெண்/ஆணுடைய அற்ப"கன்டிஷன்" நிறைவேற்றப்படாமல் போனதால் தான்,இவர்களுக்கு குடும்பம் என்ற அமைப்பின் அடிப்படையே புரியாததால் தான்,திருமணம் என்பது ஏதோ பைவ் ஸ்டார் ஹோட்டல் போய் தங்குவது போல நினைத்துக் கொண்டிருப்பார்கள்,ஏனென்றால் அங்கே தான் நாம் எந்த வேலையும்,உழைப்பும் போடத்தேவையில்லை,என்ன வேண்டுமோ எந்த நேரத்துக்கு சொல்கிறோமோ அதது அப்பொழுது கிடைக்கும்,பாத்ரூமில் வைக்கும் சோப்பிலிருந்து, படுக்கை துணி, எல்லாமே  நம் மனதுக்கு பிடித்தவையாய் இருக்கும் ,ஏதாவது குறை,பிரச்சனை என்று வந்தால் அதை அட்ஜஸ்ட் பண்ண வேண்டியதில்லை ஒன்று ஹோட்டல் நிர்வாகத்தை பிடித்து கத்தலாம்,இல்லையென்றால் வேறு ஹோட்டல் பார்த்து போகலாம்.இன்றைய நவீன உலகில் இப்படிதான் இருக்கிறார்கள்,இவர்களுக்கான சில நல்ல! ஐடியாக்களை தான் இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறேன். 
ப்ளான் பண்ணனும்
* நீங்கள் வாழ ஆரம்பித்த கொஞ்ச வருடத்திலேயே தெரிந்து விடும் இவன் நமக்கு ஒத்துவருவானா மாட்டானா  என்று,அப்போதிலிருந்தே நீங்கள் காரணத்தை தேடத்துவங்கவேண்டும்.அம்சமாக ஒரு காரணம் கிடைத்து விட்டால் போதும்  அதை  வைத்து  போகப்போக   டெவலப் செய்து கொள்ளலாம் ஒரு நாள் திடீரென்று ஏன்?எதற்கு என்று எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பெண்ணாக இருந்தால் அம்மா வீட்டிற்க்கும்,ஆணாக இருந்தால் நண்பன் வீட்டிற்க்கும் ஓடி ஒளிந்து கொள்ளவேண்டும்.
*வாழும் காலத்திலேயே உங்கள் துணையை பற்றி தவறானதொரு பிம்பத்தை அவருடைய சொந்தங்களிடம் உருவாக வேண்டும் (இதனால் பின்னர் பெரும் லாபமுண்டு) .உ.தா "அவர் என் அம்மா வீட்டுடனான  தொடர்பை அறுத்துவிட்டார்,என்னை அங்கே அனுப்பியதே இல்லை" என்று உங்கள் கணவரின் சொந்தங்களிடம்  சொல்லி வைக்கலாம் அல்லது உங்கள்  சித்தப்பாவை  உங்கள்  மனைவிக்கு  பிடிக்காமல்  இருக்கும், நீங்கள் அவருக்கே போன் செய்து "டேய்,என் பொஞ்சாதிக்கு உன்னை பிடிக்கவே பிடிக்காது டா" என்று சொல்ல வேண்டும். அதாவது அவரது சொந்த குடும்பத்திலேயே நீங்கள் உங்கள் துணைக்கு குழி வெட்ட வேண்டும்.."மார்பில் சாய்ந்து கொண்டே காலுக்கடியில் குழி வெட்டுவது"
*உங்கள் கணவன்/மனைவி கடந்த காலத்தை திடீரென்று ஆராய்வது-அதாவது உங்கள் துணை- கல்லூரி காலத்தில் ரகசியமாக இழுத்த சிகிரெட்,சப்பிப்பார்த்த பியர்,பேசிய/பழகிய/சந்தித்த/வழிந்த/கடலை போட்ட/கடிதம் கொடுத்த பெண் பற்றிய விபரங்கள் உங்கள் துணையின் பழைய டைரிகளில் இது கிடைக்ககூடும் தேடி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கு தேவையானவைகளை நிறைவேற்றிக்கொள்ள சமயம் பார்த்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
*நீங்கள் உங்கள் துணையுடன் நன்றாகவே வாழ்ந்து வந்தாலும்,உங்கள் அம்மா அப்பாவிடம் பேசும் போது  அடிக்கடி ஒப்பாரி வைக்கவேண்டும்,தினமும் உங்கள் கணவர் வீட்டில் பத்து லாரி மண் சுமப்பது போல ஒரு ஸீன் போட வேண்டும்.அது போல சின்ன சின்ன பிட்டுகளை அங்கங்கே போடவேண்டும் "என் மாமியார் எப்போதும் சிவப்பு புடவை தான் கட்டுகிறார்,அதனால் எனக்கு பார்வை மங்கி விட்டது" எனலாம்."என்னை எந்த வேலையும் செய்ய விடாமல் எல்லா வேலையும் அவரே செய்கிறார்,இதனால் சும்மா சாப்பிட்டு, தூங்கி எனக்கு தொப்பை விழுந்து விட்டது" என்று கூட காரணம் சொல்லலாம்.

*நீங்கள் விலக முடிவு செய்து விட்டீர்களேயானால் எந்த அசிங்கமான செயலை செய்யவும் தயாராக இருக்க வேண்டும்....உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்கொண்டு அதற்க்கு அடுத்தவர்கள் மீது பழி போட வேண்டும்.(குறிப்பாக கணவனின் நண்பர்கள்/வீட்டார்கள் மீது)

வழக்கு நடக்கும் காலகட்டத்தில்...  
*நன்றாக வாழ்ந்த காலத்தில் நீங்களும் உங்கள் துணையும் எத்தனையோ சுவையான விஷயங்களை பாரிமாறிக் கொண்டிருந்திருப்பீர்கள்
அதையெல்லாம் சுத்தமாக மறந்து விடவேண்டும்,யார் கேட்டாலும் நீங்கள் தீயில் உழன்று கொண்டிருந்ததாக சீன்  போட வேண்டும். உதாரணமாக நீங்கள் வாழ்ந்த காலத்தில் உங்கள் துணையை சக்கையாக பிழிந்திருப்பீர்கள்,ஏன் வீட்டை விட்டு வெளியேறும் கடைசி தினமன்று கூட அவனிடமுள்ள எல்லாவற்றையும் சுருட்டியிருப்பீர்கள்,ஆனால் அதை யாரிடமும் சொல்லி விடக்கூடாது!
* உங்கள் சொந்தங்களில் எவனாவது மகாகிறுக்கனாக இருப்பான்,மடத்தனமாக உங்களுக்கு சப்போர்ட் பண்ணுபவனாக,அடுத்தவர் வாழ்கையை பற்றி கவலை படாத அயோக்கியனாக இருப்பான் அவனை தான் நீங்கள் வழக்கு காலத்தில்  உதவிக்கு  வைத்துக்கொள்ளவேண்டும் (ஏனெனில் உங்கள் தாய் தந்தை கூட சில நேரத்தில் மனம் மாறக்கூடும்).
*உங்கள் துணை எவ்வளவு தான் கெஞ்சினாலும்,கதறினாலும் நீங்கள் அவரை தனிமையில்/பொது வெளியில் சந்தித்து விடக்கூடாது. ஏனென்றால் கணவன் மனைவி உறவுக்குள் ஒரு பார்வையோ,பேச்சோ எல்லாவற்றையும் மறக்கச்செய்யும்,எல்லாவற்றையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் ஈர்ப்பு ஒன்று உண்டு (காதலில் கூட இது கிடையாது) அது உங்கள் விவாகரத்திருக்கு வினை விளைவிக்கலாம் எனவே உங்கள் துணை உங்களை தொடர்பு கொள்ள எவ்வகையில் முயன்றாலும்,உங்கள் வீடு/அலுவலக வாசலில் நாயாக நின்று கொண்டிருந்தாலும், தொலைபேசினாலும் அல்லது உங்களுக்கு சம்பந்தமானவர்களோடு பேசி ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ய முயன்றாலும் நீங்கள் ஒப்புக்கொள்ளக்கூடாது...நீங்கள் உங்கள் அடுத்த வாழ்கைக்கு அப்போதிருந்தே தயாராவது நல்லது! (இதை ஆங்கிலத்தில் Waiting for Gods next plan)  என்று சொல்லலாம்)
*ஒரு விஷயத்தில் இறங்கி விட்டால் அதன் ஆழத்திற்கு செல்ல தயங்குதல் கூடாது அது போல no turning back! தம்பதியருக்குள்ளான எல்ல ரகசியங்களையும் (படுக்கையறை) யாரிடமும் பகரிந்து கொள்ளலாம்,குறிப்பாக நீங்கள் தேர்ந்தெடுத்த "ஈனப்பிறப்பிடம்" எல்லாவற்றையும் பிட்டு பிட்டு வைக்க வேண்டும்.வாழ்ந்த காலத்தில் செமத்தியாக காதல் டயலாக் அடித்திருப்பீர்கள் அதையெல்லாம் தூக்கிப்போட்டு விட்டு உங்கள் துணையை கழுவி கழுவி ஊத்தவேண்டும்.உங்களுக்கு உங்கள் கணவன் எழுதிய காதல் கடிதங்கள் முதலானவற்றை கண்டவர்களுக்கெல்லாம் (தோழி, தோழர்கள், தோழியின் கணவர்கள்,டோபிவாலா ) என பார்வர்ட் செய்து படிக்கச்சொல்லி உங்கள் வன்மத்தை தீர்த்துக்கொள்ளலாம் ,அது அவனை மேலும் மேலும் புண்படுத்தும்.
*முக்கியமான ஒன்று,ரெகார்ட் ஏற்படுத்துதல்......அதாவது வழக்கு நடக்கும் காலத்தில் உங்கள் துணையிடம் சம்பந்தமில்லாமல் கோபம்  வரும்படி  பேசி வெறி ஏற்ற வேண்டும்,உன் பெற்றவர்களை கழுத்தை பிடித்து கொன்று போடு,அடி உதை,தலையால் நட,உனக்கு 99 வயது கிழவியிடமும்,இரண்டு வயது குழந்தையிடம் கூட தொடர்பிருக்கிறது என்று சம்பந்தமிலாமல் பேசிக்கொண்டிருந்தால் ,அவர் எதாவது ஒரு கட்டத்தில் மனமுடைந்து போய் கண் மண் தெரியாமல் கத்தும் போது அதை தவறாமல் பதிவு செய்து கொள்ள வேண்டும்(ஹை டெக் மொபைல் அவசியம்),நீங்கள் பேசியதை எடிட் செய்து கொள்ள வேண்டும்,இவ்வளவு கோபப்படுபவன்,உணர்ச்சிமிக்கவன் எவ்வளவு கொடுமை படுத்தி இருப்பான் என்று ஜட்ஜ் நினைக்க இது உதவும்.
*சில தவறுகளை உங்கள் துணையே மறந்து விட நினைக்கையில்,அதெல்லாம் (உதாரணமாக குடிபழக்கம்) விட்டு அவர்  முற்றிலும்   வெளிவந்து உங்களோடு அதன் சாயல் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த போதும்,அல்லது வாழ முயற்சிக்கும் போதும் அதை இப்போது அடிக்கடி நீங்கள் அவருக்கு நியாபகப்படுத்தவேண்டும்.இது உங்கள் துணைக்கு பைத்தியம் பிடிக்க உதவும்.எந்த ஒரு தவறுக்கும் தண்டனை உண்டு,அந்த தண்டனைக்கு அளவும் உண்டு நீங்கள் உங்கள் கேவலமான கண்டிஷகளை (fulfilling the demands-அடிங்)  நிறைவேற்றிக்கொள்ள ஒருவரை ஆழம் நிறைந்த இருட்டுக்கு கொண்டு போய் விட்டு விடுகிறீர்கள்.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன்: உங்கள் கணவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாக சிகிரெட் பிடிக்கும் பழக்கம் இருந்ததென்று வைத்துக்கொள்வோம்.. அதெயெல்லாம் விட்டு விட்டு அதன் சாயல் கொஞ்சமும் இல்லாமலே உங்களோடு வாழ்ந்து வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.அந்த பழைய விஷயத்தை உங்கள் தற்சமய வழக்கில் நேக்காக பயன்படுத்தவேண்டும் "அவர் மீண்டும் சிகிரெட் குடிக்க ஆரம்பித்தால் என்ன செய்வது?அத்தோடு நீயும் குடி என்று என்னையும் ரெண்டு பப் இழுக்கவைத்தால் என்னாவது?..என் பிள்ளையும் இழுக்கவைத்தால்..புற்றுநோய் வரவழைத்தால் என்னாவது..என்று அழுது அரற்ற வேண்டு.கூட்டமாக அமர்ந்திருக்கும் வழக்கு கேட்பவர்கள் துடைத்துக்கொள்ள போர்வை கேட்டாலும் கேட்கலாம்.

வழக்கு கேட்பவர்கள் மத்தியில் பேசும் போது ஓவராக கத்தி ஊரை கூட்டாதீர்கள் ...ஏனென்றால் நான் படித்த வழக்கொன்றில் ஊர்த்தலைவர்களிடம்  அதீதமாக மரியாதை இல்லாத வார்த்தைகளை பயன்படுத்தி,நான்கைந்து பிளாக்குகளுக்கு கேட்டு கார் கண்ணாடி எல்லாம் உடைந்து போகுமாறு கத்தியதால் (பாதிக்கப்பட்டிருக்காங்களாம் !?-ஆனால் அதற்க்கு ஒரு வாரம் முன்பு தான் நீங்கள் சிம்லா அல்லது ஊட்டிக்கு டூர் சென்று வந்திருப்பீர்கள்!) எப்ப இந்த மாதிரி மரியாதை கெட்ட பெண்ணோடு வாழ்வதிலிருந்து இவன் தப்பிச்சதே புண்ணியம் என்று back fire ஆகக்கூடும்!

உங்கள் துணையை பற்றி பேசும் போது அவன் இவன் என்று ஏக வசனத்திலோ,கெட்ட வார்த்தைகளிலோ பேச வேண்டும் ..அந்த அளவுக்கு அவள் கொடுமைக்காரி/காரன்  என்று கேட்பவர்கள் நினைக்கக்கூடும் ..அதுவுமில்லாமல் இனி அவள்/அவனிடமிருந்து பணமோ,நகையோ வேறு எந்த ______ ம்  கிடைக்கப்போவதில்லையே!

வழக்கு நடக்கும் காலகட்டத்தில் செய்யவேண்டிய மற்றொரு காரியம்: விதவிதமாக போடோக்கள் எடுத்து ..(அதுவும் உங்கள் துணைக்கு பிடிக்காத வண்ணம்) facebook ,twitter ல்  போடவேண்டியது அவசியம் ..அதாவது உங்கள் துணை இல்லாமல் நீங்கள் ரொம்பவும் நன்றாக இருக்கின்றீர்கள் என்பதை காட்ட! இன்னொரு விஷயம் வாழ்கின்ற காலத்தில் உங்கள் கணவன்/மனைவி உங்களை பொத்தி பொத்தி வைத்திருப்பார் உதாரணமாக உங்கள் உடை விஷயத்தில் உங்கள் மானம் காப்பாற்றப்படவேண்டி ரொம்பவும் கறாராக இருந்திருப்பார்.வழக்கு நடக்கும் காலகட்டத்தில் மிகக்கேவலமாக ஜீன்ஸ்,அரை கை,சுடிதாரின் மேலாடை இல்லாமல்  முகநூலில் போஸ் கொடுக்க வேண்டும்.ஆணாக இருந்தால் ஸ்விம்மிங் பூலில் ஜட்டியோடு நின்றபடி போஸ் குடுக்கலாம்.நான் ஒரு சுதந்திரப்பறவை..என்னை எவனாலும் எவளாலும் ஒன்றும் செய்ய முடியாது ....எவனுக்கும்/எவளுக்கும் நான் அடங்கிப்போகவேண்டியதில்லை... நீ இல்லாவிட்டாலும் நான் நன்றாகத்தான் இருப்பேன் என்று பிரிவதற்கு முன்பே காட்டிவிடுவது.

பின்குறிப்பு:பெரிய கட்டுரையாக எழுதி வைத்த நோட்டு புத்தகம்(டைரி என்றும் சொல்லலாம்) எங்கேயோ தொலைந்து விட்டது தற்காலிகமாக அதனால் முதல் பாகம் இத்தோடு முடிந்தது.....இரண்டாம் பாகம் இன்னும் நிறைய அறிவுரைகளோடு! நிறைய உண்மைச்சம்பவங்களை உதாரணமாக கொண்டு ரணகொடூரமாக வெளிவரும்.

கோபத்துடன் 
நான்.

மழை நனைதல்:கவிதை








 Facebook ல் "கவிதை-என்றும்-சொல்லலாம்:ஜெனீ" என்று தேடினால் என்னுடைய பக்கம் கிடைக்கும்.

அன்புடன் 
நான். 



முடியக்கூடாத பாடல்:இளையராஜா



எவ்வளவோ சிறந்த பாடல்கள் இருந்தாலும் ,உள்வரை சென்று தொடக்கூடிய பாடல்கள் வெகு சிலதே.இது ஆளாளுக்கு வேறுபடும், நம்முடைய வாழ்கை அனுபவங்களை,சோகங்களை,                பிரிவுகளை வைத்து நம் மனதே அந்தப்பாடல்களை தெரிவு செய்துகொள்ளும் ஆச்சர்யமாக! சினிமா பாடல் தானே என்று ஒதுக்கி விட முடியாது,நம்முடைய வாழ்வில் அதன் பங்களிப்பு அசாத்தியமானது.தூக்கமில்லா நீண்ட இரவுகளின் பெருவெளியில் நமக்குள்ளேயும்,வெளியேயும் காற்றாய் அலைந்து கொண்டிருப்பது இந்தப் பாடல்களே!

அப்படி நான் நினைக்கும் ஒரு பாடல் அவதாரம் படத்தில் இளையராஜா,ஜானகி குரலில் வரும் "தென்றல் வந்து தீண்டும் போது", இந்தப்பாடல் தொடங்கும் போதே இது முடியாமல் இருந்து கொண்டே இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் தரும்.பாடலில் பயணப்பட்டிருப்பது என்ன ராகம் என்றெல்லாம் தெரியாது.ஆனால்  இழுத்து இழுத்து பாடல் இளையராஜாவின் குரலை கேட்கும் போது: காதலன் நிரம்பவும் சோகமாக இருக்கையில் காதலி அவன்  கன்னங்களை கைகளில் ஏந்திக்கொண்டு,கண்களை நோக்கி "ஏன்டா,என்ன ஆச்சு?" என்று கேட்பது போல இருக்கும் அந்த இழுவை.அந்த இழுவைக்கு அப்படி ஒரு தலைகோதும் சக்தி உண்டு.மிகைப்படுத்தவில்லை உண்மையாகத்தான் சொல்கிறேன்.சில பாடல்களுக்கு இது போன்ற சக்தி உண்டு தெரியுமா? - "செனோரீட்டா" பாடலை கேட்கும் போது கைகளை அகல விரித்து வானில் பறப்பது போலவும்,குறிப்பாக "ஆனந்தம் ஒன்றல்ல,ஆரம்பம் இன்றல்ல" வரிகளில்......"பூங்கதவே தாழ்திறவாய்" பாடலை கேட்கும் போது பெரிய தாழ்வாரக்கதவுகள் வழியே காற்று பாய்ந்து வருவது போலவும் தோன்றும்.இது இளையராஜவிர்க்கே உண்டான தனித்தன்மையோ என்னவோ?

இந்தப்பாடலை பற்றி படத்தின் இயக்குனர் நாசர் சொல்லும் போது முதலில் இந்த டியுனை கேட்டு சுமாராக இருக்கிறது என்றெண்ணி அதில் சில மாற்றங்களை கொண்டுவரும்படி இளையராஜாவை கேட்டாராம்.எதுவும் சொல்லாமல் ரெகார்டிங் தியேட்டருக்கு வரும்படி சொல்லிவிட்டு போய் விட்டாராம் இசைஞானி.பின்னர் அந்த பாடலின் உருவான விதத்தை கண்கொண்டு தான் கொண்ட ஆச்சர்யத்திலிருந்து தாம் இன்னும் விலகவில்லை என்று நாசர் சொன்னார்.அது போல யுவனை ஏதோ ஒரு மேடையில் பாராட்டியபோது "தென்றல் வந்து தீண்டும் போது" பாடலுக்கு நிகரான பாடலை எப்போது இயக்குகிறேனோ அப்போது தான் நான் இசையமைப்பாளராக ஆனதாக தோன்றும் என்றாராம்.ராஜாவை விமர்சிக்கும் சாருவே மிக ரசித்த பாடல் இது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

பிறவிகுருடான ரேவதி வண்ணங்களை பற்றிக்கேட்கையில்,தென்றல் தீண்டும் போதும்,திங்கள் காயும் போதும் என்ன வண்ணம் இருக்கும் மனதில்? வண்ணம் என்பது எண்ணங்களுக்கேற்றபடி மாறக் கூடியது என்று புலப்படுத்துகிறார் நாசர்.தானத் தந்தத் தானத் தந்தத் தனனா"என்ற கோரசிலேயே நானெல்லாம் பூமியை விட்டு இரண்டடி மேலே போய் விடுவேன்.இந்தப்பாடல் இளையராஜாவின் ஸ்டைலிலேயே இருக்காது,அவருக்குள் இருக்கும் இன்னொரு இளையராஜா போட்டது போல இருக்கும்.ஒரு இடத்தில கூட தூக்கலான இசை,குரல் உயர்த்தல் இருக்காது..வார்த்தையால் விவரிக்க முடியாத அளவுக்கு அழகான பாடல்.என்னளவில் சந்தேகமே இல்லாமல் ராஜாவின் மாஸ்டர் பீஸ்.

பாடலின் காட்சிகளில்  வண்ணங்களை குழைத்து ஊற்றியும்,கண்ணிலாத பெண்ணோவியம்,நிறம் நிறமான பூக்கள்  என நாசர் பாடலை படமாகி இருக்கும் விதமும் அழகாக இருக்கும்.

என்னுடைய செல் பேசியில் இருக்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களில் கிட்டத்தட்ட 95% மேல் ராஜாவின் பாடல்களே ஆக்கிரமித்திருக்கும்.ஆலுவலக நண்பர் ஒரு முறை "இளையராஜாவை விட்டு வெளியே வாங்க,அவர் காலமெல்லாம் முடிந்து விட்டது" என்றார்.நான் எதுவும் பேசாமல் இந்தப்பாடலை போட்டு காட்டி "இதை விட சிறந்த பாடலை எனக்கு காட்டுங்கள்,அப்போது நான் அவரை விட்டு  வெளியே வர முயற்சிக்கிறேன் " என்றேன்.

இன்னும் இளையராஜாவை மட்டும் கேட்டுக்கொண்டிருப்பதால் மற்றவர்கள் என்னை வயதானவனாக நினைகிறார்கள்,ஆனால் உண்மையில் அதனால் தான் நான் இளமையாகவே இருக்கிறேன்.




அன்புடன் 
நான். 

ஆஸ்பத்திரி:சுதேசமித்திரன் நாவல்



அப்பா என்பவர் யார்? நம்முடைய வயதான,தேய்ந்த எதிர்கால பிம்பம் தான் அப்பா.இன்று எந்த ஒரு செயலையும் சரிவரச்செய்ய முடியாமல் கை கால்கள் நடுங்கிக்கொண்டு,வாய் குழறிப்பேசிக்கொண்டு நிலைமாறி படுக்கையும்,கழிப்பறையுமே வீடாய் கிடக்கும் ஜென்மம் முன்பொரு காலத்தில் அகண்ட தோள்களுடன்,சுருள் முடியுடன் பல பெண்களை கவர்ந்த ஆண்மகனாய்,எடுத்த எந்தவொரு செயலையும் முடிக்கும் ஆளாய்,பலசாலியாய்,புத்திசாலியாய் இருந்திருக்கக்கூடும்.இது எல்லா அப்பாக்களுக்கும் பொருந்தும்.இப்படி ஒரு அப்பா தான் "ஆஸ்பத்திரி" யில் வரும் சிவன்,விஷ்ணுவின் அப்பா.

இளவயதில் அரசு உத்தியோகத்தில் இருக்கும் விஷ்ணுவின் அப்பா தான் மாற்றலாகிப்போகும் ஊரில் நாடகங்கள் நடத்தி  பல  இளைஞர்களை  கவர்ந்தவராக,பல நண்பர்கள் கொண்டவராகவும் இருக்கிறார்.தன்னுடைய பேச்சு திறமையால் நிறைய பெரிய மனிதர்களின் செல்வாக்கு பெற்றவராகவும்  சமுதாயத்தில் திகழ்கிறார்.பின்னர் வயதான கால கட்டத்தில் விதவிதமான நோயால் விழுகிறார்.அவரை வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு தங்கள் சூழலுக்கேற்ப மாற்றும்  இரண்டு மகன்கள் வாயிலாக நோய் ஏற்படுத்தும் தாக்கங்கள்,அதனால் உறவுகளுக்குள் வரும் குழப்பங்கள், பொருட்ச்செலவுகள்,மருத்துவர்கள் நோயாளிகளை அணுகும் பாங்கு,மருத்துவமனை மீதான தாக்குதல்கள் போன்றவைகளை நமக்கு முன் வைக்கிறார் சுதேசமித்திரன்.சிவன் விஷ்ணுவின் அப்பா எலும்பு முறிவு,பர்கின்சன்,நெஞ்சுக்கபம் போன்ற வியாதிகளால் தாக்கப்பட்டுக்கொண்டே இருப்பதால் இந்த வியாதிகள் மற்றும் இதன் துணை வியாதிகள் மீதான குறிப்புகளும் அதை சரிசெய்யும் மருந்துகள்,மருத்துவ முறைகள்,உபகரணங்கள் போன்ற தகவல்கள் நமக்கு நிறைய கிடைகின்றன.

பொதுவாக நாவல் எழுதுபவர்கள் கடைபிடிக்கும் எந்த ஒரு protocol லிற்கும் கட்டுப்படாமல் முன்னுக்கு பின் முரணாக ஓடுகிறது "ஆஸ்பத்திரி".அதுபோல ஆசிரியர் நேரடியாக சம்பவங்களை பார்த்தது போலவும்,கதாபாத்திரங்களோடு மற்றும் வாசகனோடு உரையாடுவது போலவும் இருக்கிறது.அது சில இடங்களில் லேசான அலுப்பையும் தருகின்றது.நான் ரசித்த விஷயம் ஒன்று உண்டென்றால் அது பக்கங்கள் முழுவதும் விரவிக்கிடக்கும் பகடி,இது மிகவும் அசாத்தியமாக சுதேசமித்ரனால் கையாளப்படுகிறது.சில தொலைக்காட்சி விளம்பரங்களில் நுகர்வோரை (customer) பொருள் தயாரிப்பாளன் அடிப்பது,நக்கல் செய்வது போல வருமே? அது போல படிக்கும் நம்மையும்,சில இடங்களில் நாவலின் உண்மைத்தன்மையையும்,அவரையும் வஞ்சப்புகழ்ந்து கொள்கிறார்.இது பொதுவாக நிறைய எழுத்தாளர்களிடம் பார்க்க முடியாதது.கிட்டத்தட்ட சுதேசமித்ரனின் எல்லா நாவல்களிலும் இந்த முறை பின்பற்றி வரப்படுகின்றது.

"ஆஸ்பத்திரி"யை முடிக்கையில் ஒன்று புலனாகிறது:மருந்துவாசனையும், புரியாத மருத்துவமொழியும் மொழியும்,சிடு சிடு மருத்துவர்களும் அவர்கள் கொடுக்கும் மருந்துகளும்,விலையுயர்ந்த சாதனங்களும்,சிகிச்சை முறைகளும்,சொஸ்தப்படுத்தும் இடமும் ஆஸ்பத்திரி ஆகாது.
நாம் வாழ்கின்ற காலத்திற்கும்,நம் சுற்றுப்புறத்திற்கும் தகுந்தார் போலவும்,முன்பே வந்த நோய்களின் பலனாகவும் சில நோய் எதிர்ப்பு சக்திகளை நம் உடலே உருவாக்கிக்கொள்கிறது. நம் உடலுக்குள்ளிருந்து போராடிக்கொண்டே இருக்கும் அந்த சக்தி தான் ஆஸ்பத்திரியாக இருக்க முடியும்.இல்லையா?


அன்புடன் 
நான்.  

உதவி வேண்டுமா??




பணம் சேர்த்து சேர்த்து வைப்பதில் எப்போதும் நாட்டம் இருந்ததில்லை,அது போல அடுத்தவர் பணமாக இருந்தால், ஏன் மனைவியின் வழி வந்த நகை,பணமாகவே இருந்தாலும் அதை எனக்காக உபயோகம் செய்து கொள்ள விரும்பியதில்லை.எதுவும்,யாரிடமும் வாங்கிக்கொண்டதுமில்லை (அது அரை கோடிக்கு மேல் செலவு செய்து வீடு கட்டிக்கொண்ட போதும் கூட) பணத்தின் மீதான என் மதிப்பு அவ்வளவே.அது வருவதை பற்றியும் அலட்டிக்கொள்வதில்லை,போவதை பற்றியும் கவலை கொள்வதில்லை.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை இப்படி ஒரு பதிவு எழுதியாக வேண்டியிருக்கிறது.இப்படி எழுதுவதாலோ அல்லது சைட்டின் ஓரத்தில் விளம்பரம் செய்வதாலோ ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா என்றால் இருக்கிறது.முன்பெல்லாம் ரொம்பத்தீவிரமாக இல்லையென்றாலும்  ஏதோ முடிந்த அளவிற்கு பண்ணிக்கொண்டிருந்தேன்.ஆனால் சமீபகாலமாக என்னை என்னிடமிருந்தே காத்துக்கொள்ள ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயம்,அந்த "ஏதாவதில்" உருப்படியான ஒன்றே ஒன்று தான் இந்த "உதவி வேண்டுமா?"
கடந்த ஒருவருடத்தில் கீழ்கண்ட சில உதவிகளை செய்து வந்திருக்கிறேன்,
1.திருச்சிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து இன்ஜினியரிங் படிக்கும் ஒரு ஒரு பெண்.தந்தை இல்லை,ஏதோ ஒரு கூலிவேலை செய்து குடும்பத்தின் வயிற்றை கழுவும் தாய் இத்துடன் அந்தப்பெண் கால்களை இழந்து நடக்க முடியாதது,மிகக்கொடுமையான வறுமை.சென்ற வருடத்தின் நடுவில் என்னை தொடர்பு கொண்டு தன் நிலையை விளக்கி பின்னர் தன்னுடைய எல்லா சர்டிபிகேடின் நகல்களையும்,அரசு கொடுக்கும் மாற்று திறனாளிகளுக்கான ஐடி கார்டும்,கல்லூரி கட்டணம்,கடந்த செமஸ்டர்களின் மார்க் ஷீட் எல்லாவற்றையும் அனுப்பி அதை சரி பார்த்து,கல்லூரியில் விசாரித்த பின்னர் என்னால் முடிந்த தொகையை அனுப்பி வைத்தேன். இங்கே இன்னொரு விஷயத்தை சொல்கிறேன்,
அப்போது வீடு கட்டிக்கொண்டிருந்ததால் பணநெருக்கடியில் கொஞ்சம் இருந்தேன்.ஆனால் இந்தப்பெண்ணுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் விட்டகலாது இருந்தது. முதல் முறையாக யாரோ ஒரு ஊர் பேர் தெரியாத பெண்ணுக்காக அலுவலகத்தில் கையேந்தினேன்,எனக்கு தெரிந்தவர்களை எல்லாம் கூட்டி பொறுமையாக எல்லாவற்றையும் விளக்கினேன் முதலில் வந்த விமர்சனம் என்ன தெரியுமா? "இப்படி கேட்கிறவர்கள் எல்லாம் நிச்சயம் ப்ராடாக தான் இருப்பார்கள்..நீங்களும் ஏமாறாதீர்கள்" என்று கலைந்து  சென்று விட்டனர்.அடப்பாவிங்களா,இவர்கள் ஒரு முறை அருகில் இருக்கும் உணவு மாளிகைக்கு சென்றார்களேயானால் குறைந்த பட்சம் மூவாயிரத்திற்கு தின்பார்கள்.அதுவும் எவனாவது ட்ரீட் என்று சொல்லிவிட்டால் போதும் ஏதோ சிறுவயதில் இருந்து அவனை எடுத்து வளர்த்தது போல அன்று மட்டும் அவனிடம் குழைந்து பேசுவார்கள்.(இந்த எழவிற்கு தான் ஏற்கனவே இருக்கும் நாலைந்து நண்பர்களை தவிர வேறு யாரிடமும் பேச்சு வைத்துக்கொள்வதே இல்லை)  ஜெயிலில் இருப்பவர்கள், திருடர்கள், கற்பழிப்பவர்கள், கொலைகாரர்கள் இவர்களையெல்லாம் விட பெரிய அயோக்கியர்கள் கோட்டிலும்,சூட்டிலும் இங்கே  திரிகிறார்கள். நான் கருணை பிரபுவோ அல்லது கருணை சிவாஜியோ அல்ல ,ஆனால் கலங்கும் மனம் இருக்கிறது.
வீடு வேலை முடிந்து ,இப்போது கொஞ்சம் பணம் இருப்பதால் மீண்டும் இந்த செமஸ்டருக்கு பணம் அனுப்பினேன்,அத்துடன் ரிசல்டை அனுப்புமாறும் கேட்டுக்கொண்டேன்...ஆச்சர்யமாக! அதுவரை 65-70 சதவீதம் எடுத்துவந்த பெண்,தற்போது 80 திற்கு மேல் எடுத்திருக்கிறது! ஊக்கம்!
2.கிட்ட தட்ட இதே நிலைமையில் இருக்கும்  திண்டிவனத்தை  சேர்ந்த இன்ஜினியரிங் படிக்கும்  மாணவனுக்கும்  இரண்டு  செமஸ்டருக்கு  பணம் அனுப்பியுள்ளேன்.அவன் கொஞ்சம் சுமாராய் தான் படிக்கிறான்,இனி நன்றாக படிப்பான் என்று நம்புகிறேன்.இது இல்லாமல் வேறு இரண்டொரு பெரும் என்னை தொடர்பு கொண்டார்கள் ஆனால் அவர்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. 
ஆகவே
இதைப்படிக்கும் உங்களுக்கு தெரிந்த யாரவது இருந்தால்,அவர்களுக்கு உண்மையாகவே உதவி வேண்டி இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.நான் தனியாள் தான் என்னுடைய சம்பளத்தை தவிர எனக்கு வேறெதுவும் வருமானம் இல்லை ஆகவே ஐந்து,ஆறு பேர் தொடர்பு கொண்டால் அதிலிருந்து ஒருவரைதான் என்னால் தேர்வு செய்ய முடியும்.மேலும் படிப்பு விஷயம், உண்மையாகவே  கஷ்ட  ஜீவனம் என்றால் மட்டுமே என்னால் உதவி செய்ய முடியும்,மருத்துவ உதவி என்றால் ஒரு லம்ப் அமௌண்ட் தேவைப்படும்,அதனால் உறுதியாக சொல்ல முடியாது.
மொபைல்      :91 9663001111
மெயில் ஐடி : ahamed.ibrahim7@gmail.com
குறிப்பு: சொந்தங்களில் சில நிறைய நகை போட்டு,பணம் போட்டு திருமணம் செய்ய முற்படுவார்கள் அதற்க்கு உதவி கேட்பார்கள்.ஏம்ப்பா உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா? (இதை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்)
அன்புடன்
நான்

சிரிபென்னும் மாமருந்து




சமீபத்தில் ஒரு நாள் ஆபீசிலிருந்து வீடு திரும்புகையில்,உடன் வேலை செய்பவர் "நீங்கள் போகிற வழி தானே,என்னை அப்படியே வைட் பீல்டில் விட்டு விடுகிறீர்களா?அவசரமாய் போக வேண்டும்" என்றார்.அவரை ட்ராப் பண்ணி விட்டு அந்தப்பக்கமாக இருந்த ஒரு பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போடப்போனேன் (பின்ன அங்க என்ன பாமாயிலா போடுவாங்க).அந்த மதிய நேரத்தில் கூட்டம் ஏதுமில்லை பெரிய கேனை வைத்துக்கொண்டு பெட்ரோல் வாங்க ஒரு ஆள்,அவன் பின்னே ஆக்டிவாவை தள்ளிக்கொண்டு ஜீன்ஸ் அணிந்த நவீன யுவதி ஒருத்தி,இரண்டு பங்க் ஊழியர்கள் அப்புறம் கொஞ்சம் தூரத்தில் செல்போனில் பேசியபடி, கையெல்லாம் மோதிரமாக முதலாளி,நான் மட்டுமே இருந்தோம்.
 
பெரிய கேனில் பெட்ரோல் நிரப்ப எத்தனித்த ஊழியன் தவறுதலாக பைப்பை கீழே விட்டுவிட,அது பாம்பு போல நெளிந்து நிறைய பெட்ரோல் கீழி கொட்டி,நின்றிருந்த பெண்ணின் கால்களையும் நனைத்து விட்டது.அந்தப்பெண் கோபமாக கத்தத்தொடங்கினாள்,கேன்காரனும் ஏதோ சொல்லவந்தான், இந்தக்காட்சியை  கண்ட முதலாளி செல்போனை அணைத்து விட்டு கோபமாக அவனை நோக்கி வரத்தொடங்கினார்...ஏதோ ஆகப்போகிறது,பையன்  செமத்தியாய் அடி  வாங்க போகிறான் என்று நான் நினைத்த போது ,கூட இருந்த இன்னோரு பங்க் ஊழியன் கன்னடத்தில் "நன்மகனே....நம்ம பெட்ரோல் பங்கிற்கு அழகான  பொண்ணுங்க எப்போவாவது தான் வராங்க,சரிதான்.அதுக்காக நீ இப்படியா தடுமாறுவ" என்றானே பார்க்கலாம்,அந்தப் பெண்ணை பார்த்துக்கொண்டே.. அவ்வளவு தான் அந்தச்சூழ்நிலை அப்படியே மாறிப்போனது. அந்த பெண் அடக்க முடியாமல் வெட்கப்பட்டு சிரிக்கத்தொடங்கினாள்.பங்க் முதலாளியும் கோபம் மறந்து பலமாக சிரித்தபடி அவன் முதுகில் லேசாக தட்டி "அவங்களுக்கு துடைக்க ஏதாவது துணி கொடு,அப்புறம் பெட்ரோல் போட்டு அனுப்பு" என்றார்."அது தான் ஏற்கனவே போட்டுடீங்களே" என்று வாயில் வந்ததை சொல்லவில்லை நான்.
 
பின் வீடு வந்து சேரும் வரை பலமுறை அந்த நிகழ்ச்சியை நினைத்து சிரித்தபடியே வந்தேன்.எப்படி ஒரே ஒரு வார்த்தை ஒரு பெரும் கோபச்சூழ்நிலையை தகர்க்கிறது,ஒரு சோகக்கூட்டத்தை சிரிப்பில் ஆழ்த்துகிறது,மனதில் உள்ள காதலை முழுக்கச்சொல்லும் சிறு தீண்டல், கேட்கவேண்டிய மன்னிப்பை காட்டும் ஒரு பார்வை, கண்ணீர்த்துளி**,நம்பிக்கையை ஏற்படுத்தும் தோள் தட்டல் இப்படி உலகின் எல்லா அற்புதங்களும்  சின்னஞ்சிறு  விஷயங்களிலிருந்தே  தொடங்கி நிகழ்வதெப்படி? ஏனென்றால்  அந்த  நிகழ்வில் இருக்கும்  பாசிடிவ் எனர்ஜி, முன்னெடுத்து வைத்தல்-முனைப்பு.
 
மேற்சொன்ன சம்பவத்தை போல நான் ஏதாவது செய்திருக்கிறேனா   என்று வீட்டில் கேட்டபோது சிறுவயதில் என் கொள்ளு தாத்தா இறந்து கூடத்தில்  கிடத்தப்பட்டு  எல்லோரும்  சுற்றி  அமர்ந்து  அழுது கொண்டிருந்தார்களாம்,அருகில் சென்று அவர் முகம் பார்த்த நான் "அய்யோ ஏன் இப்படி எல்லோரும் கத்தறீங்க,தாத்தா முழிச்சிக்கப்போறார்" என்று மழலையாக சொல்ல நிறையபேர் துக்கம் மறந்து சிரித்தார்களாம்.(நாங்கல்லாம் அப்போவே அப்படி...இப்போ கேக்கவா  வேணும்)
 
** கண்ணீர்துளியா? இப்போவெல்லாம் காலில் விழுந்து கதறி அழுதாலும் சில ஜென்மங்கள் கண்டுகொள்வதில்லை.நேருக்கு நேர் நின்று சிறு பார்வை பார்த்துக்கொள்ளவும் விரும்புவதில்லை.....selfish buggers!
 
 
அன்புடன் 
நான்.


"தமிழ்பேப்பர்" மின் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரை


டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவத்தை பற்றியும்,இந்தியாவில் நடக்கும் வல்லுறவு சம்பவங்களை பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரையை "தமிழ்பேப்பர்"(நியூ ஹொரிசான் மீடியா (NHM) வின் அங்கம்) மின் பத்திரிக்கைக்கு அனுப்பி இருந்தேன்(முதல் முறையாக).என்னுடைய இந்த முயற்சியை ஊக்குவிக்கும் வகையாக எனது கட்டுரையை பதிப்பித்த "தமிழ் பேப்பர்" குழுவுக்கும், பொறுப்பாசிரியர் திரு.மருதன் அவர்களுக்கும், "இன்னொருத்திக்கும்"** நன்றி! 

எழுதிய கட்டுரை பெரிய அளவில் தணிக்கை செய்யப்படவில்லை (கீழ்கண்ட வரிகளை தவிர) "இது போன்ற சட்டங்கள் ஏழை பெண்களுக்கோ, உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமோ இல்லையோ,பணத்தின் பொருட்டும்,தங்கள் சொகுசாக வாழ நினைக்கும் பெண்களுக்கும்,தான் நினைத்ததை நடத்திக்கொள்ள(கண்டிஷன்!) எதையும் வெளியில் சொல்லும்/செய்யும் பெண்கள் இதை நிச்சயம் பயன்படுத்திக்கொள்வார்கள்" (Ironic!)

**இன்னொருத்தி- இப்போதும் என்னுடைய முகநூலில்,ஜிமெயில் "தேடல்"லில் ,உலகின் எந்த ஆங்கிலக் கீபோர்டுகளிலும் "D"கும்,"G"கும் நடுவில் இருக்கும் எழுத்தை டைப் செய்ய ஆரம்பித்தால் வரும்.அது சரி இப்போ நன்றி எல்லாம் எதுக்காம்? எழுதுபவனுக்கு (கவனிக்கவும் எழுதுபவன்....எழுத்தாளன் எனவில்லை) திமிரும்,நெருப்பும் அவசியம்..திமிர் ஏற்கனவே கொஞ்சம் இருந்ததுதான்.ஆனால் நெருப்பை தந்தவள் அவள் தான்.அதற்குத்தான் இந்த நன்றி.("விடவே மாட்டியா நீ?...விட்டுத்தொலையேண்டா...உன் வாழ்கையை மட்டும் பார்த்துக்கொண்டு போ" என்றும் இன்னும் எழுத முடியாத வார்த்தைகளில் அர்ச்சனை செய்யும் கூட்டாளிகள் சொல்வது காதில் விழத்தான் செய்கிறது.

கட்டுரைக்கான லிங்க் http://www.tamilpaper.net/?p=7474

அன்புடன் 
நான் 

எவன் இறைவன்:கவிதை



எவன் இறைவன்

கோயில் வாசற்படியில்,

சிரங்கை சொறிந்தபடி யிருந்த 
கிழிசலுடைப்பிச்சைக்காரன்-என்னிடம்
"அய்யா" என்றபடி
எச்சில் பாத்திர மேந்தினான்

சில்லறை இல்லையென
பொய் சொல்லி-உள்ளே
நடந்தேன்.

உள்ளே
சந்நிதானத்தில்,
பிரகாரத்தில்,

எங்கு தேடியும்,
இருக்க வேயில்லை
கடவுள்.

அன்புடன்
நான்.

அமைதியில்லாத குளம்:கவிதை





அமைதியில்லாத குளம்


என் சோகமான பொழுதொன்றில்
சூன்யத்தை நோக்கி நடந்தபடி இருந்தேன்-வழியில்
கூழாங்கற்கள் தூங்கும்
அமைதியான குளமொன்றை கண்டேன்-அதில்
சிறு  கல்லொன்றை  எறிந்தேன்,
கலங்கித்துடித்தது குளம்-எழுந்த
அலைகளை ரசித்தபடி நின்றேன் 
அமைதியானது மனம்.

அன்புடன் 
நான்.

வன்புணர்ச்சி:ஒரு பார்வை

வன்புணர்ச்சி:ஒரு பார்வை



இந்தியக்கலாச்சாரம் 

பள்ளி பயின்ற காலத்தில் எல்லா பாடப்புத்தகத்தின் அட்டையிலும் இந்திய வரைபடத்தில் வெள்ளை புடவை சுற்றிய பெண்,கையில் கொடியுடனும், தலையில் கிரீடத்துடனும் காட்சியளிப்பாள்,அவளை நாம் இந்தியத்தாய் என்போம்.நிலத்தை உழுவதற்கு முன் பூமி மாதாவை வணங்குவோம், பூஜையறையில், கோயில்களில் விதவிதமான பெண் தெய்வங்களை வழிபடுவோம்.பெண் கடவுளுக்கு நிகரானவள் என்று நமக்கு எப்போதும் போதிக்கப்படுகின்றது. வழக்கம் உலகில் வேறெங்கும் இல்லையென்றே எண்ணுகிறேன்.(யேசுநாதரின் தாயாக இருப்பதால் மட்டும் மேரி மாதாவிற்கு சிறப்பு)


ஐரோப்பாவிலும்,அமரிக்காவிலும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் பிள்ளைகள் அவர்கள் தாய் தந்தையுடன் வசிப்பது இல்லை,வேலை கிடைத்தவுடன் தனியாகத்தான் இருப்பார்கள்,திருமணம் செய்து கொள்வார்கள்,சொந்த வீட்டிற்கே விருந்தாளிகள் போலதான் வருவார்கள் ஆனால் இந்தியர்களான  நாம் அப்படி வளர்வதில்லை.அம்மா என்பவள் தெய்வம்,அவள் சொல்லே வேதம் என்று அவள் பாதங்களிலே கிடப்போம் அல்லது அப்படி சொல்வதில் பெருமை கொள்வோம்.மேலும் அக்காவை இன்னொரு தாயாகவும்,தங்கையை பிள்ளையாகவும்  பாவிப்போம்.ஒரு இந்தியக்குடும்பத்தில் இருக்கும்  ஆணுக்கு தன் குடும்பத்து பெண்களுடனான தொடர்பு மிகுந்த  நெருக்கமானது. எனவே பெண்களின் உளவியலை புரிந்து கொள்ள நமக்கு வாய்ப்பு மிக அதிகம்,இல்லையா?அவர்கள் சந்திக்கும் உடல் ரீதியான பிரச்சனைகளையும்,வெளியே அவர்கள் சந்திக்கும் பாலியல் வன்முறைகளும் அதனால் அவர்கள் படும் பாதிப்பு இவைகளை நாம் நன்கு அறிந்துகொண்டே தான் வளர்கிறோம்,இந்தப்பெண்களின் மூலமாக நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் நம்மை பக்குவப்படுத்தத்தான் வேண்டுமில்லையா? ஆனாலும் பள்ளிப்போகும் 8 வயது  சிறுமியை  கற்பழித்து,கழுத்தை நெறித்து கொன்று போடும் சம்பவங்களும்,தாழ்ந்த ஜாதி மக்கள்  வசிக்கும்  கிராமத்தில்  புகுந்து சிறுமிகள்  முதல் கிழப்பெண்கள்  வரை  கூட்டுப்புணர்ச்சி  செய்யும் போலீஸ்காரர்களும்,ஒரு  பெண்ணை  தாக்கி  அவளை  பலரும் கற்பழித்து  வீசியெறிந்து விட்டு குற்ற உணர்வே இல்லாமல் திரியும் மனிதர்கள் பலர் இந்நாட்டில் பெருகக்காரணமென்ன?

நம்மிடத்தில் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் பெருகிக்கொண்டே வருவதன் காரணம் பெண்ணின் அவசியத்தை உணர்ந்த அளவிற்கு அவளின் மதிப்பை,அவளின் சரிசமத்துவத்தை உணரவில்லை.அவள் என்னவாக இருந்த போதிலும் அவள் நமக்கு ஒரு படி கீழ் தான் என்ற எண்ணம் நம் ஜீனிலேயே பதிவாகி இருக்கின்றது.பெண்களாலே பிறந்து,பெண்களாலே வளர்ந்து,பெண்களுடனே வளர்ந்து அவர்களையே நாம் ஏய்க்கக்காரணம்  அதுவே.அவளை வெறும் உழைத்துக்கொட்டும் இயந்திரமாகவோ அல்லது செக்ஸ் டூலாக மட்டுமே நாம் பாவிக்கிறோம்.

மேலும் பெண் என்பவள் வீக்கர் செக்ஸ் (வீக்கர் செக்ஸ் என்றால் செக்ஸ்இல்  வீக்கர் என்று அர்த்தமல்ல) ஆக இருப்பதால் அவர்களை ஏறி மிதிக்கும் மனோபாவம்.இந்த அலட்சியம் இது இந்தியாவின் தேசிய வியாதி. எங்கு சுவர் கிடைத்தாலும் ஜிப்பை இறக்கி மூத்திரம் பெய்யும் திமிர்,அதனால் தான் பெண்களை ஆபாசமாக கேலிகிண்டல் செய்வதெல்லாம்  நமக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. என்ன செய்தும் பேசாமல் போய்விடுவாள் என்ற சிந்தனையும்,தீவிரமற்ற  சட்டங்கள்  ஒன்றும்  பெரிதாக செய்யாது  என்பது  இது போன்ற  ஆண்களுக்கு  சாதகமாக இருக்கிறது. பாட்டன் முப்பாட்டன் காலப்பெண்கள் தொடங்கி இன்று நம் தாய் வரை பெரும்பாலும் வீட்டினுள் அடங்கியே இருக்கிறார்கள் அவர்களையே நாம் பார்த்து வந்திருக்கிறோம்,திடீரென்ற இன்றைய பெண்களின் நாகரீக முன்னேற்றத்தை நம்மால் சகித்துக்கொள்ள நிறைய வகையில் முடியவில்லை.சகோதரியையும்,மனைவியையும் இந்த விஷயத்தில் அடக்கி வைக்கவே  நினைக்கிறோம் .அலுவலகத்தில்,பள்ளியில் கல்லூரியில் எதிர்த்தோ, துணிச்சலாகவோ  பேசும்  பிற பெண்களை அசிங்கமான பெயர் வைத்து அழைப்போம்.ஏனென்றால் ஒரு பெண்ணை கேவலப்படுத்த,மட்டந்தட்ட,குத்திக்கிழிக்க  நாம் எடுத்துக்கொள்ளும் ஆயுதம் அவள் சென்சிடிவாக வைத்திருக்கும் கற்பு மட்டுமே.டெல்லியில் மிகக்கொடூரமான வன்புணர்ச்சி நடந்ததற்கு வித்தே மேலே சொன்ன விஷயங்கள் தான்.தன் நண்பனுடன் இரவில் பஸ்ஸில் ஏறிய பெண்ணை, வெளியே ஆணுடன் இந்த நேரத்தில் உனக்கு என்ன வேலை என்று அகங்காரமாக கேட்கப்பட்டு கடுமையாக இரும்புக்கம்பியால் தாக்கப்படுகிறாள்.அதுமட்டுமல்லாமல் அந்தப்பெண்ணை நாசப்படுத்தியதிற்கு காரணம் நிச்சயமாக செக்ஸ் வறட்சி இல்லை,அந்த இரவில்  அந்த மிருகங்களின்  நோக்கம் தங்களுடைய செக்ஸ் இச்சைகளை பூர்த்தி செய்துகொள்வது இல்லை ,சகமனிதனை பற்றி சிந்திக்காத திமிர்,நாலு பேர் சேர்ந்துவிட்டால் எந்த பொறுக்கித்தனமும் செய்யலாம்  என்கிற திமிரின் நீட்சி தான் முழுக்காரணம்.

உயர்குடி,பதவித்திமிர்

இந்தியாவில் நடக்கும் முக்கால்வாசி வன்கொடுமைகளுக்கு காரணம் ஜாதி வெறியும்,பதவித்திமிரும் தான்.இதை நிறைய உண்மைச்சம்பவங்கள் நிரூபிக்கின்றன,இந்தியாவை உலுக்கிய அணைத்து சம்பவங்களும் தாழ்ந்த சாதிக்கோ,ஏழை மக்களுக்கோ தான் நடந்தேறி இருக்கின்றன.ஒரே ஒரு உண்மை கதையை இங்கே சொல்கிறேன்,
1992ல் ராஜஸ்தானிலுள்ள பத்தேரி என்ற கிராமத்தில் 'குஜ்ஜார்' உயர் குடியை சேர்ந்த ராம் கரன் என்பவன் தன்னுடைய ஒன்பது மாதக்குழந்தைக்கு திருமணம் (சரியாகத்தான் எழுதி இருக்கிறேன் வருடம் அல்ல மாதம் தான்!) செய்ய வைக்க முயன்றான்.அதே ஊரில்  பெண்கள் முன்னேற்றத்திற்கு, ஏழை மக்களுக்கென்று சுய உதவிக்குழு நடத்திவந்த வந்த பன்வாரி தேவி என்ற தாழ்ந்த ஜாதிப்பெண் அதை போலீசில் சொல்லி திருமணத்தை நிறுத்திவிட்டாள்,(ஆனால் மீண்டும் அடுத்த நாளில் அது போலீஸ் உதவியுடன் நடந்தது என்பது வேறு விஷயம்).பின்னர் ராம் கரனும் அவன் கூட்டாளி ஐந்து பேரும் பன்வாரி தேவியை அவள் வீட்டிலேயே அவன் கணவன் எதிரிலேயே கற்பழித்துச்சென்றனர்.உடனே அங்கிருந்து தன கணவனுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்ற பெண்ணை விசாரித்த போலீஸ் அவளின் இரத்தம் தோய்ந்த கீழாடையை சாட்சிக்காக வாங்கி வைத்துக்கொண்டது (தன் கணவனின் முண்டாசை இடையில் சுற்றிக்கொண்டே அவள் அதற்க்கு பிறகு பயணப்பட்டிருக்கிறாள்) மேலும் உண்மையாகவே அவள் கெடுக்கப்பட்டாளா என்று சந்தேகித்த போலீஸ் அவளை ஆஸ்பத்ரிக்கு போய் டெஸ்ட் எடுத்து ரிப்போர்ட் வாங்கிவரச் சொன்னது,அங்கே லேடி டாக்டர்கள் வேலைக்கு வராததால் (சட்டப்படி ஆண் டாக்டர்கள் பரிசோதனை செய்யக்கூடாது) ,அங்கிருந்து அவள் 55 கி.மீ தூரத்தில் உள்ள சவாய் மான்சிங்(ஜெய்பூர்) மருத்துவமனைக்கு cervical smear டெஸ்டிற்கு அனுப்பப்பட்டாள்.அங்கே மாஜிஸ்ட்ரேடின் அனுமதி வேண்டும் என்று கூறி காலம் கடத்தப்பட்டது 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்படவேண்டிய சோதனை 52 மணி நேரம் கழித்து தான் செய்ய முடிந்தது.

இந்த கேஸ் மாவட்ட கோர்டிற்கு போய் கீழ்கண்டவாறு தீர்ப்பு வந்தது:"குஜ்ஜார் உயர் குடியை சேர்ந்தவர்கள் ஒரு தலித் பெண்ணை கற்பழித்திருக்க வாய்ப்பில்லை,குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும்  ஒருவருக்கொருவர் சொந்தம் என்பதால் அவர்கள் கூட்டுப்புணர்ச்சியில் ஈடுபட வாய்ப்பில்லை, பல மணி நேரங்களுக்குபிறகு செய்யப்பட்ட செர்விகல் சோதனை பொய்த்துப்போனதால் பன்வாரி பொய் சொல்கிறாள்" என்று தீர்ப்பானது. விடுதலையான ஐந்து பேருக்கும் ஊர் MLA தலைமையில் விழா எடுக்கப்பட்டது.அதன் பின் அந்த ஊரில் பன்வாரி குடும்பம் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டது. பின்னாளில் பன்வாரி தேவியின் கதை முந்திரா என்ற டைரக்டரால் படமாக எடுக்கப்பட்ட போதும்,நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் தோண்டித்துருவி எடுத்து எழுதிய போதும் இந்தியா முழுக்க பரவலாக அறியப்பட்டது. ஒரு  பெண் கற்பழிக்கப்பட்டபின் தானே முன் வந்து இவ்வளவு தைரியமாக கோர்ட் கேஸ் என்று அலைந்து போராடியது இந்தியாவிலேயே இது தான் முறை.இதன் பின் ராஜஸ்தானில் பெண்கள் மத்தியில் நிறைய மாற்றங்கள் வரத்தொடங்கியது,பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான நிறைய பெண்கள் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க முன்வந்தனர்.பின்னாளில் பன்வாரி தேவி ஐநா அரசின் பெண்கள் விருதை பெற்றாள்.ஆனால்  கடைசி வரைக்கும் அவள் கேட்ட நியாயம் மட்டும் கிடைக்கவே இல்லை.

மேலே சொன்னது லட்சத்தில் ஒன்று தான் இன்னும் கஷ்மீர்,மிசோரம் போன்ற பார்டர்களில் இந்திய ராணுவ வீரர்கள் விசாரணை என்ற பெயரில் துப்பாக்கி முனையில் கிராமப்பெண்களை கூட்டம் கூட்டமாக அவர்கள் கன்னிகளா,கிழவிகளா,கர்ப்பமானவர்களா என்ற பாகுபாடில்லாமல் செய்த கொடுமைகள் ஏராளம்.1992ல் தமிழ் நாட்டில் தருமபுரி-வாச்சாத்தியில் 259 போலீஸ் மற்றும்,வனத்துறை அதிகாரிகள் சந்தன கடத்தல் சோதனை என்ற பெயரில் உரை அடித்து நாசம் செய்து இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக பதினெட்டு பெண்களை கூட்டுப்புணர்ச்சி செய்திருக்கிறது.இவர்களுக்கு 2011ம் வருடம் தான் தீர்ப்பு கிடைத்திருக்கிறது,அதற்குள் 50 பேருக்கு மேல் இறந்து விட்டனர். 

மிகுநாகரீகம் 

டிவியில் பார்த்தபோது "எங்கள் ஆடைகளை சரி செய்யச்சொல்லாதீர்கள்,உங்கள் பையன்களை கண்டித்து வையுங்கள்" என்ற வாசகம் தாங்கிய அட்டைகளை ஏந்தியபடி பெண்கள் கூட்டம் கோஷமிட்டுக்கொண்டிருந்தது.பெண்கள் கவர்ந்திழுக்கும் உணர்சிகளை  தூண்டும்  ஆடைகளை அணிவது தான் பாலியல் அத்துமீறலுக்கு,கற்பழிப்புக்கு மூலக்காரணமா? இருக்க முடியாது,ஏனென்றால் பள்ளி செல்லும் நான்கு வயது சிறுமி எந்த மாதிரியான கவர்ச்சியான உடை அணிகிறாள்,தலித்பெண்ணோ,பழங்குடிப்பெண்ணோ என்ன கவர்ச்சியான உடை அணிந்து விடப்போகிறாள்? ஆனால் நகரத்தில் வசிக்கும் பெண்களை பற்றி பேசினால் ஒன்று சொல்லத்தோன்றுகிறது- நகரமோ,கிராமமோ பெண்களின் மீதான ஆண்களின் மனோபாவம் ஒன்று போலவே இருக்கிறது.பீட்சா,கோக் தின்று கொண்டு,நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு  காரில் சென்றாலும் அவர்கள் மனதளவில் கற்கால மனிதர்களாகவே இருக்கின்றனர்.மேலும் அமெரிக்க,ஐரோப்பாவின் நகரங்களில் நூற்றுக்கு ஐந்து பேர்கள் தான் படிப்பறிவில்லாதவர்களாக இருப்பார்கள்  ஆனால் இந்தியாவின் பெருநகரங்களில் அப்படி இல்லை இங்கே பல தரப்பட்ட மக்கள் வசிகின்றார்கள், கிராமப்புறங்களில் இருந்து கூலிப்பிழைப்புக்கும்,சிறு தொழில்களுக்கும் வந்தவர்களும் தான் ஏராளம்.இவர்களுக்கும் பணத்தில் புரளும் மேல்தட்டு மக்களுக்கும் சமுதாய இடைவெளி ரொம்ப அதிகம்.உதரணாமாக பெங்களூரில் ஆறு ஏழு வருடங்களுக்கு முன்பு IT கம்பனிகளில்,வேலை முடிந்து நடு  இரவில் கம்பெனி கார்களில் வீடு திரும்பும் பெண்கள் நிறைய பேர் அந்த டிரைவர்களால் கற்பழித்து கொல்லப்பட்டனர்,காரணம் சமுதாய அந்தஸ்து மற்றும் இடைவெளியால் வரும் காழ்ப்புணர்ச்சி.

இப்போது தான் ஒரு புரட்சி ஒன்று கிளம்பி பெண்கள் பாதுகாப்புக்கென்று  பல புதிய சட்டங்கள் வரப்போவதாக  தெரிகின்றது,இதன் மூலம் தண்டனைகள் கடுமையாகலாம்,ஆகவேண்டும்.எப்போதும் இல்லாத அளவுக்கு  Gender Equality and the Empowerment of Women என்ற ஐநா அமைப்பு பெண்கள் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்தியஅரசை வலியுறுத்தி இருக்கிறது.எத்தனையோ  கிராமங்களில், எத்தனை எத்தனையோ  பெண்கள்  கூட்டம் கூட்டமாக  நாசமாகிக்கொண்டிருக்கிறார்கள்,அப்போதெல்லாம் விழிக்காத இந்தியா, டெல்லி போன்ற பெருநகரத்தில் ஒரு மேல்வர்கப்பெண் வன்கொடுமையால் கொல்லப்பட்டபோது விழித்திருக்கிறது.இனி கடுமையான சட்டங்கள், தண்டனைகள்,பெண்களுக்கு 24 மணிநேர சேவை மையம்,இரவில் ரோந்து போலீஸ் அதிகரிப்பு என்று பரபரப்பாக சட்டங்கள் ஏற்படுத்தப்படலாம்,அவை   நகர்புற பெண்களின் பாதுகாப்பை கூட்டலாம்.ஆனால் கீழ்நிலை மக்களுக்கும்,பழங்குடி இனத்தவருக்கும் இதனால் எந்த விதவிடிவும் வரப்போவதில்லை.ஏனென்றால் சட்டத்தை நடத்தும் துறைகள் தான் பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்களை செய்திருக்கின்றன.அப்படி உண்மையான சீர்திருத்தம்  கொண்டு வரவேண்டுமென்றால்  மொத்தமாகவே  இதை  வேறு  பார்வை  கொண்டு  பார்க்க வேண்டும்.

மேலும்  என்னதான் சட்டங்கள் வந்தாலும் வன்முறையில் புரையோடிப்போன நாடு இது  அவ்வளவு சீக்கிரம் திருந்திவிடாது,இங்கே வளர்ச்சி என்பது வளர்ச்சியாக இல்லாமல் வீக்கமாக இருக்கிறது ஆகவே  பெண்கள்  குறிப்பாக வேலையின் காரணமாகவும்,படிப்பின் காரணமாகவும் சமுதாயத்தோடு அதிக புழக்கம் இருப்பவர்கள் அவர்களின் மிகு நாகரீகங்களை முழுமூச்சுடன் பேணி வளர்க முயற்சிக்காமல் இருக்கலாம்.அழகாக உடையணிந்து கொள்வதில்,தம்மை அழகாய் காட்டிக்கொள்ள முயர்சசிப்பதில் தவறேதும் இல்லை,ஆபாசமாக அணிவது தான் ஆபத்து,அவசியமில்லாதது கூட.சௌகரியத்திற்க்கு உடையணிபவர்களை காட்டிலும் அடுத்தவர்களை சஞ்சலப்படுத்த  உடையணிபவர்களே  அதிகம்.உள்ளத்திலும்,சிந்தனையாலும் உறுதியாக நிற்பவர்கள்,சமுதாயத்தை சந்திக்க தைரியமிருப்பவர்கள் உடையை பற்றி பெரிதாக கவனமெடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. உடை,உணவு,படிப்பு முதலான விஷயங்களில் மட்டும் மாற்றம் கொண்டு நாகரீக வளர்ச்சியடைந்து விட்டதாக மார் தட்டிக்கொள்ளும் இந்த தேசத்தில் பெண் சுதந்திரம் என்பது எட்டாப்பழம் தான்,ஆகவே உண்மையான மாற்றம் வரும் வரை (வருமா?) இதில் கவனமெடுத்துக்கொள்வதில் தவறேதும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து .இதெல்லாம் நாகரீகள் வளர்ச்சி,வெளிநாட்டுக்கலாசாரம் என்று கேட்பவர்களிடம் ஒன்றே ஒன்று தான் திரும்பக்கேட்டாக வேண்டும்.....அவர்களிடம் எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறது,அதில் எத்தனையை நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம்? ஒன்றுமே இல்லை! இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டு பெண்களிடம் கூட ட்ரெஸ்-கோடு என்று ஒன்று இருக்கிறது,அதை அவர்கள் மீறினால் பெற்றோர்களும்,கல்வி நிர்வாகமும் அதை நிச்சயம் கண்டிப்பார்கள்.

தூக்கு தண்டனை

தற்போது தண்டனைக்கு காத்திருக்கும் அந்த மிருகங்கள் அன்றிரவு அப்பெண்ணை இரும்புக்கம்பியால் அடித்து பின் பலமுறை புணர்ந்திருகின்றனர், அதோடல்லாமல் கம்பியை அவள் பெண்ணுறுப்பின் உள்ளே செலுத்தி பலமாக இழுத்ததால் அவள் சிறுகுடல்,பெருங்குடல் வெளியே சரிந்திருக்கிறது(5%குடல் பகுதிதான் வயிற்றுக்கு உள்ளே இருந்ததாக சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர் ஒருவர் தெரிவிக்கிறார்.மேலும் பஸ்ஸில் இருந்து வெளியே தூக்கிப்போடப்பட்டதால் தலையில் பலமாக அடி பட்டு மூளையில் ரத்தம் உறைந்து,உடலின் முக்கிய பாகங்கள் செயலிழந்து மரணமெய்தி இருக்கிறாள்.இந்த ஆறு பேரில் ஒருவன் மைனர் பய்யன்,அவன் செய்த செயலால் தான் அந்தப்பெண் சாகும் நிலைக்கு தள்ளப்பட்டாள் (அதை  என்னால் இங்கே எழுத முடியவில்லை).இவ்வளவு கொடூரத்தை செய்தவர்களுக்கு மரணதண்டனை தான் கொடுக்கவேண்டும் என்பது பலரும் உணர்ச்சிக் கொந்தளிப்பில்  சொல்வதாக இருக்கலாம்.ஆனால் இது போன்ற குற்றங்களுக்கு இந்த வழக்கில் மரணதண்டனை கொடுத்து பெஞ்ச்மார்க் அமைக்கலாம்.பொதுவாக திட்டமிட்டு, தெளிவான சிந்தனையுடன்,தீர்மானமாக செய்யும் குற்றங்களுக்கு,பதவி திமிரில் செய்யப்படும் குற்றங்களுக்கு மரணதண்டனை விதிப்பதில் தவறேதுமில்லை என்பது என் தாழ்மையான கருத்து.இதுதொடர்பாக இந்தியாமுழுவதும் பல போராட்டங்கள் நடந்தது,குறிப்பாக டெல்லியில் அடிதடியுடன் கூடிய  போராட்டம்,அதில் அநியாயமாக ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார், பொதுச்சொத்து நாசமானது.யாரோ ஒருவருடய மகளை/சகோதரியை  வலிய இழுத்து நாசப்படுத்திய ஈனப்பிறப்புகளுக்கும்,யாரோ ஒருவருடைய கார்களையும்,பஸ்களையும் அடித்து நாசம் செய்பவர்களுக்கும்  என்ன வித்யாசம் இருக்க முடியும்?என்ன இருந்தாலும் சம்பவம் நடந்த அடுத்து நாளே தீர்ப்பு வந்து அதற்க்கு அடுத்த நாளே குற்றவாளிகள் தூக்கில் போடப்பட்டுவிடப் போவதில்லை அது சாத்தியமும் இல்லை.இதுவே நாடு முழுக்க பல இடங்களில் பல கோடிப்பேர் உண்ணாவிரதம் இருக்க அமர்ந்தால்,கடுமையான தீர்ப்பு வரும் வரை உண்ணாமல் இருப்பதென்று இளைஞர் பட்டாளம் உறுதியெடுத்திருந்தால் அது அரசாங்கத்தை இன்னும் பாதித்திருக்குமல்லவா? உண்மையான கொந்தளிப்பை கோபத்தை இப்படி காட்டி இருக்கலாமே. 

கர்நாடகா,தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் பெண்கள் பாதுகாப்புக்கென்று அவசரச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. (இது போன்ற சட்டங்கள் ஏழை பெண்களுக்கோ,உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமோ இல்லையோ,பணத்தின் பொருட்டும்,தங்கள் சொகுசாக வாழ நினைக்கும் பெண்களுக்கும்,தான் நினைத்ததை நடத்திக்கொள்ள(கண்டிஷன்!) எதையும் வெளியில் சொல்லும்/செய்யும் பெண்கள் இதை நிச்சயம் பயன்படுத்திக்கொள்வார்கள்.

கட்டுரைக்கு சம்பந்தமில்லாத பின் குறிப்பு :இந்தச்சம்பவம் பற்றி கேள்விப்பட்ட முதல் நாளிலிருந்து அவ்வளவு கோபப்பட்டவனாக இருந்தேன்.உடனே பேப்பரை எடுத்து யோசிக்காமல் நிறையவிஷயங்களை எழுதியும் விட்டேன்.அப்புறம் தான் உணர்சிவசத்தால் செய்யும் எந்த செயலும் முழுமையாக இருக்காது என்ற  ஞானோதயத்தை சமீபத்தில் உலகின் மிகப்பெரிய முட்டாளிடம் இருந்து தெரிந்து கொண்டதால் அமைதியானேன்.அதன் பின்பு டெல்லி வழக்கை பத்திரிக்கைகளில்,இணையத்தில் நெருக்கமாக தொடரத்தொடங்கினேன்.அதன் விளைவாகத்தான் இத்தனை நாள் கழித்து இந்த கட்டுரை.

கோபத்துடன்
நான்.

அளவிலாக் காதல்:அளவிலாக்காதல் செய்வேன்



அத்தியாயம்-4
அளவிலாக்காதல் செய்வேன்

ஏதோ ஒரு சாயங்காலவேளை சந்திப்பில்(எதுவென்று தற்சமயம் சரியாக நினைவில் இல்லை) கேட்டேன்.இப்படி விழுந்து, அலைந்து, பேயை போல சுற்றித்திரிந்து வளரும் நம் காதல் இதே வீரியத்துடன் எப்போதும் இருக்குமா? இல்லை திருமணம் ஆனா பின் பொழுது முச்சூடும் அருகருகே இருக்க நேர்வதால் காதல் லேசாய் சவர்த்து போய்விடுமா?

ஹுஹும்..எனக்கு அப்படி ஒன்றும் ஆகாது...உன் மீதான காதல் கூடிக்கொண்டே போகும் வானம் வரை,நீ எல்லா காலகட்டங்களிலும்  எனக்கு புதிது புதிதாகவே தோன்றுவாய்,என்னை  அதிசயித்துக்கொண்டே  இருப்பாய்.....சேர்ந்து வாழத்தொடங்கிய பின் ஒரு நாளின் முழு நேரமும் உன்னோடு இருக்க நேர்ந்தால் என்னவெல்லாம் செய்வதென்று எத்தனை நாள் கனா கண்டிருக்கிறேன் தெரியுமா?

மனைவி என்னும் காதலி

எழுந்தாக வேண்டிய காலைகளில்-நீ 
களைப்பின் மிகுதியால் தூங்குகையில், 
உன் காதில் "உப்" என்று ஊதி,
தலை முடியை கலைத்து விளையாடி
உன்னை எழச்செய்வேன்.

நீ உடை மாற்றிக்கொண்டிருக்கையில் 
பின்னாலிருந்து  இறுக்கிக்கொள்வேன் ,
ஆடை கசங்கும் விடு என நீ கூச்சலிட்டால் 
மாட்டேன் என்று 
மேலும் இறுக்குவேன்.

விடைபெறும் முத்தங்கள் தர
நீ மறந்து போனால்-
அலுவலகத்திற்கு போன் செய்து
உன்னை திட்டி தீர்ப்பேன்.

வேலை முடிந்து
நீ வீடு திரும்புகையில்-நான் 
கதவின் பின்னே மறைந்திருந்து,
ஆச்சர்ய உடையில் வெளிவந்து
உன்னை அசத்துவேன்.

கோபமோ,சோகமோ
"என்னை தனியே விடு"
என்று நீ சொன்னால்-விலகிப்போகாமல்
என் கழுத்தில் உன்
முகம் புதைக்கச்செய்வேன்.

தொப்பை வளருகிறதென
நீ வயிற்றை  காட்டினாலும்
இளைத்து வருகிறாயோ என-நான்
கவலை கொள்வேன்.

மொட்டை மாடி,
தூக்கமில்லா இரவுகளில்-உன்னை
மடியில் போட்டு,நிலவை காட்டி
என்னை ஊட்டுவேன்.

போலியான
ஊடல் கொண்டு-உனக்கு
முதுகு காட்டி அமர்ந்து கொண்டு
நீ அணைக்கப்போகும் நொடிக்கு
உள்ளூர காத்திருப்பேன்.

நீ செல்லமாய் திட்டவே
கொஞ்சமாய் அடம்பிடிப்பேன்
நடுச்சாமம் எழுப்பிவிட்டு
என்னை எவ்வளவு பிடிக்கும்? 
என்பேன்.

கரப்பானுக்கோ,பல்லிக்கோ
இடி மின்னலுக்கோ
பயமில்லாத போதும்
நடுங்கியதாய் காட்டிக்கொண்டு,
உன்னை கட்டிக்கொள்வேன்.

ஜீன்ஸ்,டாப்ஸில்
தோழி என்று
எவளாவது கை கொடுத்தால்
கண்களால் எரித்தே
துரத்தியடிப்பேன்.

நீ நாள் முழுதும் 
விலகாமல்,
நெற்றி வருடியபடி  
என்னருகே இருக்கவே 
காய்ச்சல் வந்து படுத்துக்கொள்ள 
வேண்டிக்கொள்வேன்.

உனக்கு முன்னே தூங்கியெழுந்து
உன் தூக்கம் ரசிப்பேன்.
கழற்றிப்போட்ட உன் சட்டையின்
வியர்வை வாசனை பிடிப்பேன்.
நீ அமர்ந்த இடத்தில்
நான் அமர்ந்து பார்ப்பேன்,
உன் வெப்பம் உணர்வேன். 
நீ இல்லாத நேரத்திலும்
உன்னோடு பேசுவேன்...

உன் புருவங்கள் சேரும்
இடத்தில் தெரியும் கொஞ்சம் பெண்மையில்
உன் சின்னக்கண்களில்,விரிந்த தோள்களில் 
தெரியும் ஆண்மையில்-விழுந்து
எழமுடியாமல் தவிக்கிறேன்.

வானத்தில் புதிய
மேகங்கள் போல-நீயெனக்கு
மாறிக்கொண்டே இருப்பாய்.
ஓடையில் ஓடும்
நீர் போல-நீயென்னுள் 
ஊறிக்கொண்டே இருப்பாய்.

சுவாசிப்பது
என்றாவது சலிக்கிறதா என்ன?
உன்னை
நேசிப்பது மட்டும்
எப்படி சலிக்குமெனக்கு?

உனக்காக பிறந்தேன்
உனக்காக மட்டும் பிறந்தேன்
உனக்காகவே பெண்ணானேன்
உன்னாலே பெண்ணானேன்

எனக்கான ஆண் நீ-
உன்னோடு
அளவிலாக்காதல் செய்வேன்.

இறந்து மண்ணில்
புதைந்தாலும்
உன் காலடியில் வேராவேன்.


அன்புடன் 
நான் 

- Copyright © துளி கடல் -