அத்தியாயம்-4
அளவிலாக்காதல் செய்வேன்

ஏதோ ஒரு சாயங்காலவேளை சந்திப்பில்(எதுவென்று தற்சமயம் சரியாக நினைவில் இல்லை) கேட்டேன்.இப்படி விழுந்து, அலைந்து, பேயை போல சுற்றித்திரிந்து வளரும் நம் காதல் இதே வீரியத்துடன் எப்போதும் இருக்குமா? இல்லை திருமணம் ஆனா பின் பொழுது முச்சூடும் அருகருகே இருக்க நேர்வதால் காதல் லேசாய் சவர்த்து போய்விடுமா?

ஹுஹும்..எனக்கு அப்படி ஒன்றும் ஆகாது...உன் மீதான காதல் கூடிக்கொண்டே போகும் வானம் வரை,நீ எல்லா காலகட்டங்களிலும்  எனக்கு புதிது புதிதாகவே தோன்றுவாய்,என்னை  அதிசயித்துக்கொண்டே  இருப்பாய்.....சேர்ந்து வாழத்தொடங்கிய பின் ஒரு நாளின் முழு நேரமும் உன்னோடு இருக்க நேர்ந்தால் என்னவெல்லாம் செய்வதென்று எத்தனை நாள் கனா கண்டிருக்கிறேன் தெரியுமா?

மனைவி என்னும் காதலி

எழுந்தாக வேண்டிய காலைகளில்-நீ 
களைப்பின் மிகுதியால் தூங்குகையில், 
உன் காதில் "உப்" என்று ஊதி,
தலை முடியை கலைத்து விளையாடி
உன்னை எழச்செய்வேன்.

நீ உடை மாற்றிக்கொண்டிருக்கையில் 
பின்னாலிருந்து  இறுக்கிக்கொள்வேன் ,
ஆடை கசங்கும் விடு என நீ கூச்சலிட்டால் 
மாட்டேன் என்று 
மேலும் இறுக்குவேன்.

விடைபெறும் முத்தங்கள் தர
நீ மறந்து போனால்-
அலுவலகத்திற்கு போன் செய்து
உன்னை திட்டி தீர்ப்பேன்.

வேலை முடிந்து
நீ வீடு திரும்புகையில்-நான் 
கதவின் பின்னே மறைந்திருந்து,
ஆச்சர்ய உடையில் வெளிவந்து
உன்னை அசத்துவேன்.

கோபமோ,சோகமோ
"என்னை தனியே விடு"
என்று நீ சொன்னால்-விலகிப்போகாமல்
என் கழுத்தில் உன்
முகம் புதைக்கச்செய்வேன்.

தொப்பை வளருகிறதென
நீ வயிற்றை  காட்டினாலும்
இளைத்து வருகிறாயோ என-நான்
கவலை கொள்வேன்.

மொட்டை மாடி,
தூக்கமில்லா இரவுகளில்-உன்னை
மடியில் போட்டு,நிலவை காட்டி
என்னை ஊட்டுவேன்.

போலியான
ஊடல் கொண்டு-உனக்கு
முதுகு காட்டி அமர்ந்து கொண்டு
நீ அணைக்கப்போகும் நொடிக்கு
உள்ளூர காத்திருப்பேன்.

நீ செல்லமாய் திட்டவே
கொஞ்சமாய் அடம்பிடிப்பேன்
நடுச்சாமம் எழுப்பிவிட்டு
என்னை எவ்வளவு பிடிக்கும்? 
என்பேன்.

கரப்பானுக்கோ,பல்லிக்கோ
இடி மின்னலுக்கோ
பயமில்லாத போதும்
நடுங்கியதாய் காட்டிக்கொண்டு,
உன்னை கட்டிக்கொள்வேன்.

ஜீன்ஸ்,டாப்ஸில்
தோழி என்று
எவளாவது கை கொடுத்தால்
கண்களால் எரித்தே
துரத்தியடிப்பேன்.

நீ நாள் முழுதும் 
விலகாமல்,
நெற்றி வருடியபடி  
என்னருகே இருக்கவே 
காய்ச்சல் வந்து படுத்துக்கொள்ள 
வேண்டிக்கொள்வேன்.

உனக்கு முன்னே தூங்கியெழுந்து
உன் தூக்கம் ரசிப்பேன்.
கழற்றிப்போட்ட உன் சட்டையின்
வியர்வை வாசனை பிடிப்பேன்.
நீ அமர்ந்த இடத்தில்
நான் அமர்ந்து பார்ப்பேன்,
உன் வெப்பம் உணர்வேன். 
நீ இல்லாத நேரத்திலும்
உன்னோடு பேசுவேன்...

உன் புருவங்கள் சேரும்
இடத்தில் தெரியும் கொஞ்சம் பெண்மையில்
உன் சின்னக்கண்களில்,விரிந்த தோள்களில் 
தெரியும் ஆண்மையில்-விழுந்து
எழமுடியாமல் தவிக்கிறேன்.

வானத்தில் புதிய
மேகங்கள் போல-நீயெனக்கு
மாறிக்கொண்டே இருப்பாய்.
ஓடையில் ஓடும்
நீர் போல-நீயென்னுள் 
ஊறிக்கொண்டே இருப்பாய்.

சுவாசிப்பது
என்றாவது சலிக்கிறதா என்ன?
உன்னை
நேசிப்பது மட்டும்
எப்படி சலிக்குமெனக்கு?

உனக்காக பிறந்தேன்
உனக்காக மட்டும் பிறந்தேன்
உனக்காகவே பெண்ணானேன்
உன்னாலே பெண்ணானேன்

எனக்கான ஆண் நீ-
உன்னோடு
அளவிலாக்காதல் செய்வேன்.

இறந்து மண்ணில்
புதைந்தாலும்
உன் காலடியில் வேராவேன்.


அன்புடன் 
நான் 

- Copyright © துளி கடல் -