வன்புணர்ச்சி:ஒரு பார்வைஇந்தியக்கலாச்சாரம் 

பள்ளி பயின்ற காலத்தில் எல்லா பாடப்புத்தகத்தின் அட்டையிலும் இந்திய வரைபடத்தில் வெள்ளை புடவை சுற்றிய பெண்,கையில் கொடியுடனும், தலையில் கிரீடத்துடனும் காட்சியளிப்பாள்,அவளை நாம் இந்தியத்தாய் என்போம்.நிலத்தை உழுவதற்கு முன் பூமி மாதாவை வணங்குவோம், பூஜையறையில், கோயில்களில் விதவிதமான பெண் தெய்வங்களை வழிபடுவோம்.பெண் கடவுளுக்கு நிகரானவள் என்று நமக்கு எப்போதும் போதிக்கப்படுகின்றது. வழக்கம் உலகில் வேறெங்கும் இல்லையென்றே எண்ணுகிறேன்.(யேசுநாதரின் தாயாக இருப்பதால் மட்டும் மேரி மாதாவிற்கு சிறப்பு)


ஐரோப்பாவிலும்,அமரிக்காவிலும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் பிள்ளைகள் அவர்கள் தாய் தந்தையுடன் வசிப்பது இல்லை,வேலை கிடைத்தவுடன் தனியாகத்தான் இருப்பார்கள்,திருமணம் செய்து கொள்வார்கள்,சொந்த வீட்டிற்கே விருந்தாளிகள் போலதான் வருவார்கள் ஆனால் இந்தியர்களான  நாம் அப்படி வளர்வதில்லை.அம்மா என்பவள் தெய்வம்,அவள் சொல்லே வேதம் என்று அவள் பாதங்களிலே கிடப்போம் அல்லது அப்படி சொல்வதில் பெருமை கொள்வோம்.மேலும் அக்காவை இன்னொரு தாயாகவும்,தங்கையை பிள்ளையாகவும்  பாவிப்போம்.ஒரு இந்தியக்குடும்பத்தில் இருக்கும்  ஆணுக்கு தன் குடும்பத்து பெண்களுடனான தொடர்பு மிகுந்த  நெருக்கமானது. எனவே பெண்களின் உளவியலை புரிந்து கொள்ள நமக்கு வாய்ப்பு மிக அதிகம்,இல்லையா?அவர்கள் சந்திக்கும் உடல் ரீதியான பிரச்சனைகளையும்,வெளியே அவர்கள் சந்திக்கும் பாலியல் வன்முறைகளும் அதனால் அவர்கள் படும் பாதிப்பு இவைகளை நாம் நன்கு அறிந்துகொண்டே தான் வளர்கிறோம்,இந்தப்பெண்களின் மூலமாக நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் நம்மை பக்குவப்படுத்தத்தான் வேண்டுமில்லையா? ஆனாலும் பள்ளிப்போகும் 8 வயது  சிறுமியை  கற்பழித்து,கழுத்தை நெறித்து கொன்று போடும் சம்பவங்களும்,தாழ்ந்த ஜாதி மக்கள்  வசிக்கும்  கிராமத்தில்  புகுந்து சிறுமிகள்  முதல் கிழப்பெண்கள்  வரை  கூட்டுப்புணர்ச்சி  செய்யும் போலீஸ்காரர்களும்,ஒரு  பெண்ணை  தாக்கி  அவளை  பலரும் கற்பழித்து  வீசியெறிந்து விட்டு குற்ற உணர்வே இல்லாமல் திரியும் மனிதர்கள் பலர் இந்நாட்டில் பெருகக்காரணமென்ன?

நம்மிடத்தில் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் பெருகிக்கொண்டே வருவதன் காரணம் பெண்ணின் அவசியத்தை உணர்ந்த அளவிற்கு அவளின் மதிப்பை,அவளின் சரிசமத்துவத்தை உணரவில்லை.அவள் என்னவாக இருந்த போதிலும் அவள் நமக்கு ஒரு படி கீழ் தான் என்ற எண்ணம் நம் ஜீனிலேயே பதிவாகி இருக்கின்றது.பெண்களாலே பிறந்து,பெண்களாலே வளர்ந்து,பெண்களுடனே வளர்ந்து அவர்களையே நாம் ஏய்க்கக்காரணம்  அதுவே.அவளை வெறும் உழைத்துக்கொட்டும் இயந்திரமாகவோ அல்லது செக்ஸ் டூலாக மட்டுமே நாம் பாவிக்கிறோம்.

மேலும் பெண் என்பவள் வீக்கர் செக்ஸ் (வீக்கர் செக்ஸ் என்றால் செக்ஸ்இல்  வீக்கர் என்று அர்த்தமல்ல) ஆக இருப்பதால் அவர்களை ஏறி மிதிக்கும் மனோபாவம்.இந்த அலட்சியம் இது இந்தியாவின் தேசிய வியாதி. எங்கு சுவர் கிடைத்தாலும் ஜிப்பை இறக்கி மூத்திரம் பெய்யும் திமிர்,அதனால் தான் பெண்களை ஆபாசமாக கேலிகிண்டல் செய்வதெல்லாம்  நமக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. என்ன செய்தும் பேசாமல் போய்விடுவாள் என்ற சிந்தனையும்,தீவிரமற்ற  சட்டங்கள்  ஒன்றும்  பெரிதாக செய்யாது  என்பது  இது போன்ற  ஆண்களுக்கு  சாதகமாக இருக்கிறது. பாட்டன் முப்பாட்டன் காலப்பெண்கள் தொடங்கி இன்று நம் தாய் வரை பெரும்பாலும் வீட்டினுள் அடங்கியே இருக்கிறார்கள் அவர்களையே நாம் பார்த்து வந்திருக்கிறோம்,திடீரென்ற இன்றைய பெண்களின் நாகரீக முன்னேற்றத்தை நம்மால் சகித்துக்கொள்ள நிறைய வகையில் முடியவில்லை.சகோதரியையும்,மனைவியையும் இந்த விஷயத்தில் அடக்கி வைக்கவே  நினைக்கிறோம் .அலுவலகத்தில்,பள்ளியில் கல்லூரியில் எதிர்த்தோ, துணிச்சலாகவோ  பேசும்  பிற பெண்களை அசிங்கமான பெயர் வைத்து அழைப்போம்.ஏனென்றால் ஒரு பெண்ணை கேவலப்படுத்த,மட்டந்தட்ட,குத்திக்கிழிக்க  நாம் எடுத்துக்கொள்ளும் ஆயுதம் அவள் சென்சிடிவாக வைத்திருக்கும் கற்பு மட்டுமே.டெல்லியில் மிகக்கொடூரமான வன்புணர்ச்சி நடந்ததற்கு வித்தே மேலே சொன்ன விஷயங்கள் தான்.தன் நண்பனுடன் இரவில் பஸ்ஸில் ஏறிய பெண்ணை, வெளியே ஆணுடன் இந்த நேரத்தில் உனக்கு என்ன வேலை என்று அகங்காரமாக கேட்கப்பட்டு கடுமையாக இரும்புக்கம்பியால் தாக்கப்படுகிறாள்.அதுமட்டுமல்லாமல் அந்தப்பெண்ணை நாசப்படுத்தியதிற்கு காரணம் நிச்சயமாக செக்ஸ் வறட்சி இல்லை,அந்த இரவில்  அந்த மிருகங்களின்  நோக்கம் தங்களுடைய செக்ஸ் இச்சைகளை பூர்த்தி செய்துகொள்வது இல்லை ,சகமனிதனை பற்றி சிந்திக்காத திமிர்,நாலு பேர் சேர்ந்துவிட்டால் எந்த பொறுக்கித்தனமும் செய்யலாம்  என்கிற திமிரின் நீட்சி தான் முழுக்காரணம்.

உயர்குடி,பதவித்திமிர்

இந்தியாவில் நடக்கும் முக்கால்வாசி வன்கொடுமைகளுக்கு காரணம் ஜாதி வெறியும்,பதவித்திமிரும் தான்.இதை நிறைய உண்மைச்சம்பவங்கள் நிரூபிக்கின்றன,இந்தியாவை உலுக்கிய அணைத்து சம்பவங்களும் தாழ்ந்த சாதிக்கோ,ஏழை மக்களுக்கோ தான் நடந்தேறி இருக்கின்றன.ஒரே ஒரு உண்மை கதையை இங்கே சொல்கிறேன்,
1992ல் ராஜஸ்தானிலுள்ள பத்தேரி என்ற கிராமத்தில் 'குஜ்ஜார்' உயர் குடியை சேர்ந்த ராம் கரன் என்பவன் தன்னுடைய ஒன்பது மாதக்குழந்தைக்கு திருமணம் (சரியாகத்தான் எழுதி இருக்கிறேன் வருடம் அல்ல மாதம் தான்!) செய்ய வைக்க முயன்றான்.அதே ஊரில்  பெண்கள் முன்னேற்றத்திற்கு, ஏழை மக்களுக்கென்று சுய உதவிக்குழு நடத்திவந்த வந்த பன்வாரி தேவி என்ற தாழ்ந்த ஜாதிப்பெண் அதை போலீசில் சொல்லி திருமணத்தை நிறுத்திவிட்டாள்,(ஆனால் மீண்டும் அடுத்த நாளில் அது போலீஸ் உதவியுடன் நடந்தது என்பது வேறு விஷயம்).பின்னர் ராம் கரனும் அவன் கூட்டாளி ஐந்து பேரும் பன்வாரி தேவியை அவள் வீட்டிலேயே அவன் கணவன் எதிரிலேயே கற்பழித்துச்சென்றனர்.உடனே அங்கிருந்து தன கணவனுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்ற பெண்ணை விசாரித்த போலீஸ் அவளின் இரத்தம் தோய்ந்த கீழாடையை சாட்சிக்காக வாங்கி வைத்துக்கொண்டது (தன் கணவனின் முண்டாசை இடையில் சுற்றிக்கொண்டே அவள் அதற்க்கு பிறகு பயணப்பட்டிருக்கிறாள்) மேலும் உண்மையாகவே அவள் கெடுக்கப்பட்டாளா என்று சந்தேகித்த போலீஸ் அவளை ஆஸ்பத்ரிக்கு போய் டெஸ்ட் எடுத்து ரிப்போர்ட் வாங்கிவரச் சொன்னது,அங்கே லேடி டாக்டர்கள் வேலைக்கு வராததால் (சட்டப்படி ஆண் டாக்டர்கள் பரிசோதனை செய்யக்கூடாது) ,அங்கிருந்து அவள் 55 கி.மீ தூரத்தில் உள்ள சவாய் மான்சிங்(ஜெய்பூர்) மருத்துவமனைக்கு cervical smear டெஸ்டிற்கு அனுப்பப்பட்டாள்.அங்கே மாஜிஸ்ட்ரேடின் அனுமதி வேண்டும் என்று கூறி காலம் கடத்தப்பட்டது 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்படவேண்டிய சோதனை 52 மணி நேரம் கழித்து தான் செய்ய முடிந்தது.

இந்த கேஸ் மாவட்ட கோர்டிற்கு போய் கீழ்கண்டவாறு தீர்ப்பு வந்தது:"குஜ்ஜார் உயர் குடியை சேர்ந்தவர்கள் ஒரு தலித் பெண்ணை கற்பழித்திருக்க வாய்ப்பில்லை,குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும்  ஒருவருக்கொருவர் சொந்தம் என்பதால் அவர்கள் கூட்டுப்புணர்ச்சியில் ஈடுபட வாய்ப்பில்லை, பல மணி நேரங்களுக்குபிறகு செய்யப்பட்ட செர்விகல் சோதனை பொய்த்துப்போனதால் பன்வாரி பொய் சொல்கிறாள்" என்று தீர்ப்பானது. விடுதலையான ஐந்து பேருக்கும் ஊர் MLA தலைமையில் விழா எடுக்கப்பட்டது.அதன் பின் அந்த ஊரில் பன்வாரி குடும்பம் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டது. பின்னாளில் பன்வாரி தேவியின் கதை முந்திரா என்ற டைரக்டரால் படமாக எடுக்கப்பட்ட போதும்,நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் தோண்டித்துருவி எடுத்து எழுதிய போதும் இந்தியா முழுக்க பரவலாக அறியப்பட்டது. ஒரு  பெண் கற்பழிக்கப்பட்டபின் தானே முன் வந்து இவ்வளவு தைரியமாக கோர்ட் கேஸ் என்று அலைந்து போராடியது இந்தியாவிலேயே இது தான் முறை.இதன் பின் ராஜஸ்தானில் பெண்கள் மத்தியில் நிறைய மாற்றங்கள் வரத்தொடங்கியது,பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான நிறைய பெண்கள் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க முன்வந்தனர்.பின்னாளில் பன்வாரி தேவி ஐநா அரசின் பெண்கள் விருதை பெற்றாள்.ஆனால்  கடைசி வரைக்கும் அவள் கேட்ட நியாயம் மட்டும் கிடைக்கவே இல்லை.

மேலே சொன்னது லட்சத்தில் ஒன்று தான் இன்னும் கஷ்மீர்,மிசோரம் போன்ற பார்டர்களில் இந்திய ராணுவ வீரர்கள் விசாரணை என்ற பெயரில் துப்பாக்கி முனையில் கிராமப்பெண்களை கூட்டம் கூட்டமாக அவர்கள் கன்னிகளா,கிழவிகளா,கர்ப்பமானவர்களா என்ற பாகுபாடில்லாமல் செய்த கொடுமைகள் ஏராளம்.1992ல் தமிழ் நாட்டில் தருமபுரி-வாச்சாத்தியில் 259 போலீஸ் மற்றும்,வனத்துறை அதிகாரிகள் சந்தன கடத்தல் சோதனை என்ற பெயரில் உரை அடித்து நாசம் செய்து இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக பதினெட்டு பெண்களை கூட்டுப்புணர்ச்சி செய்திருக்கிறது.இவர்களுக்கு 2011ம் வருடம் தான் தீர்ப்பு கிடைத்திருக்கிறது,அதற்குள் 50 பேருக்கு மேல் இறந்து விட்டனர். 

மிகுநாகரீகம் 

டிவியில் பார்த்தபோது "எங்கள் ஆடைகளை சரி செய்யச்சொல்லாதீர்கள்,உங்கள் பையன்களை கண்டித்து வையுங்கள்" என்ற வாசகம் தாங்கிய அட்டைகளை ஏந்தியபடி பெண்கள் கூட்டம் கோஷமிட்டுக்கொண்டிருந்தது.பெண்கள் கவர்ந்திழுக்கும் உணர்சிகளை  தூண்டும்  ஆடைகளை அணிவது தான் பாலியல் அத்துமீறலுக்கு,கற்பழிப்புக்கு மூலக்காரணமா? இருக்க முடியாது,ஏனென்றால் பள்ளி செல்லும் நான்கு வயது சிறுமி எந்த மாதிரியான கவர்ச்சியான உடை அணிகிறாள்,தலித்பெண்ணோ,பழங்குடிப்பெண்ணோ என்ன கவர்ச்சியான உடை அணிந்து விடப்போகிறாள்? ஆனால் நகரத்தில் வசிக்கும் பெண்களை பற்றி பேசினால் ஒன்று சொல்லத்தோன்றுகிறது- நகரமோ,கிராமமோ பெண்களின் மீதான ஆண்களின் மனோபாவம் ஒன்று போலவே இருக்கிறது.பீட்சா,கோக் தின்று கொண்டு,நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு  காரில் சென்றாலும் அவர்கள் மனதளவில் கற்கால மனிதர்களாகவே இருக்கின்றனர்.மேலும் அமெரிக்க,ஐரோப்பாவின் நகரங்களில் நூற்றுக்கு ஐந்து பேர்கள் தான் படிப்பறிவில்லாதவர்களாக இருப்பார்கள்  ஆனால் இந்தியாவின் பெருநகரங்களில் அப்படி இல்லை இங்கே பல தரப்பட்ட மக்கள் வசிகின்றார்கள், கிராமப்புறங்களில் இருந்து கூலிப்பிழைப்புக்கும்,சிறு தொழில்களுக்கும் வந்தவர்களும் தான் ஏராளம்.இவர்களுக்கும் பணத்தில் புரளும் மேல்தட்டு மக்களுக்கும் சமுதாய இடைவெளி ரொம்ப அதிகம்.உதரணாமாக பெங்களூரில் ஆறு ஏழு வருடங்களுக்கு முன்பு IT கம்பனிகளில்,வேலை முடிந்து நடு  இரவில் கம்பெனி கார்களில் வீடு திரும்பும் பெண்கள் நிறைய பேர் அந்த டிரைவர்களால் கற்பழித்து கொல்லப்பட்டனர்,காரணம் சமுதாய அந்தஸ்து மற்றும் இடைவெளியால் வரும் காழ்ப்புணர்ச்சி.

இப்போது தான் ஒரு புரட்சி ஒன்று கிளம்பி பெண்கள் பாதுகாப்புக்கென்று  பல புதிய சட்டங்கள் வரப்போவதாக  தெரிகின்றது,இதன் மூலம் தண்டனைகள் கடுமையாகலாம்,ஆகவேண்டும்.எப்போதும் இல்லாத அளவுக்கு  Gender Equality and the Empowerment of Women என்ற ஐநா அமைப்பு பெண்கள் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்தியஅரசை வலியுறுத்தி இருக்கிறது.எத்தனையோ  கிராமங்களில், எத்தனை எத்தனையோ  பெண்கள்  கூட்டம் கூட்டமாக  நாசமாகிக்கொண்டிருக்கிறார்கள்,அப்போதெல்லாம் விழிக்காத இந்தியா, டெல்லி போன்ற பெருநகரத்தில் ஒரு மேல்வர்கப்பெண் வன்கொடுமையால் கொல்லப்பட்டபோது விழித்திருக்கிறது.இனி கடுமையான சட்டங்கள், தண்டனைகள்,பெண்களுக்கு 24 மணிநேர சேவை மையம்,இரவில் ரோந்து போலீஸ் அதிகரிப்பு என்று பரபரப்பாக சட்டங்கள் ஏற்படுத்தப்படலாம்,அவை   நகர்புற பெண்களின் பாதுகாப்பை கூட்டலாம்.ஆனால் கீழ்நிலை மக்களுக்கும்,பழங்குடி இனத்தவருக்கும் இதனால் எந்த விதவிடிவும் வரப்போவதில்லை.ஏனென்றால் சட்டத்தை நடத்தும் துறைகள் தான் பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்களை செய்திருக்கின்றன.அப்படி உண்மையான சீர்திருத்தம்  கொண்டு வரவேண்டுமென்றால்  மொத்தமாகவே  இதை  வேறு  பார்வை  கொண்டு  பார்க்க வேண்டும்.

மேலும்  என்னதான் சட்டங்கள் வந்தாலும் வன்முறையில் புரையோடிப்போன நாடு இது  அவ்வளவு சீக்கிரம் திருந்திவிடாது,இங்கே வளர்ச்சி என்பது வளர்ச்சியாக இல்லாமல் வீக்கமாக இருக்கிறது ஆகவே  பெண்கள்  குறிப்பாக வேலையின் காரணமாகவும்,படிப்பின் காரணமாகவும் சமுதாயத்தோடு அதிக புழக்கம் இருப்பவர்கள் அவர்களின் மிகு நாகரீகங்களை முழுமூச்சுடன் பேணி வளர்க முயற்சிக்காமல் இருக்கலாம்.அழகாக உடையணிந்து கொள்வதில்,தம்மை அழகாய் காட்டிக்கொள்ள முயர்சசிப்பதில் தவறேதும் இல்லை,ஆபாசமாக அணிவது தான் ஆபத்து,அவசியமில்லாதது கூட.சௌகரியத்திற்க்கு உடையணிபவர்களை காட்டிலும் அடுத்தவர்களை சஞ்சலப்படுத்த  உடையணிபவர்களே  அதிகம்.உள்ளத்திலும்,சிந்தனையாலும் உறுதியாக நிற்பவர்கள்,சமுதாயத்தை சந்திக்க தைரியமிருப்பவர்கள் உடையை பற்றி பெரிதாக கவனமெடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. உடை,உணவு,படிப்பு முதலான விஷயங்களில் மட்டும் மாற்றம் கொண்டு நாகரீக வளர்ச்சியடைந்து விட்டதாக மார் தட்டிக்கொள்ளும் இந்த தேசத்தில் பெண் சுதந்திரம் என்பது எட்டாப்பழம் தான்,ஆகவே உண்மையான மாற்றம் வரும் வரை (வருமா?) இதில் கவனமெடுத்துக்கொள்வதில் தவறேதும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து .இதெல்லாம் நாகரீகள் வளர்ச்சி,வெளிநாட்டுக்கலாசாரம் என்று கேட்பவர்களிடம் ஒன்றே ஒன்று தான் திரும்பக்கேட்டாக வேண்டும்.....அவர்களிடம் எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறது,அதில் எத்தனையை நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம்? ஒன்றுமே இல்லை! இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டு பெண்களிடம் கூட ட்ரெஸ்-கோடு என்று ஒன்று இருக்கிறது,அதை அவர்கள் மீறினால் பெற்றோர்களும்,கல்வி நிர்வாகமும் அதை நிச்சயம் கண்டிப்பார்கள்.

தூக்கு தண்டனை

தற்போது தண்டனைக்கு காத்திருக்கும் அந்த மிருகங்கள் அன்றிரவு அப்பெண்ணை இரும்புக்கம்பியால் அடித்து பின் பலமுறை புணர்ந்திருகின்றனர், அதோடல்லாமல் கம்பியை அவள் பெண்ணுறுப்பின் உள்ளே செலுத்தி பலமாக இழுத்ததால் அவள் சிறுகுடல்,பெருங்குடல் வெளியே சரிந்திருக்கிறது(5%குடல் பகுதிதான் வயிற்றுக்கு உள்ளே இருந்ததாக சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர் ஒருவர் தெரிவிக்கிறார்.மேலும் பஸ்ஸில் இருந்து வெளியே தூக்கிப்போடப்பட்டதால் தலையில் பலமாக அடி பட்டு மூளையில் ரத்தம் உறைந்து,உடலின் முக்கிய பாகங்கள் செயலிழந்து மரணமெய்தி இருக்கிறாள்.இந்த ஆறு பேரில் ஒருவன் மைனர் பய்யன்,அவன் செய்த செயலால் தான் அந்தப்பெண் சாகும் நிலைக்கு தள்ளப்பட்டாள் (அதை  என்னால் இங்கே எழுத முடியவில்லை).இவ்வளவு கொடூரத்தை செய்தவர்களுக்கு மரணதண்டனை தான் கொடுக்கவேண்டும் என்பது பலரும் உணர்ச்சிக் கொந்தளிப்பில்  சொல்வதாக இருக்கலாம்.ஆனால் இது போன்ற குற்றங்களுக்கு இந்த வழக்கில் மரணதண்டனை கொடுத்து பெஞ்ச்மார்க் அமைக்கலாம்.பொதுவாக திட்டமிட்டு, தெளிவான சிந்தனையுடன்,தீர்மானமாக செய்யும் குற்றங்களுக்கு,பதவி திமிரில் செய்யப்படும் குற்றங்களுக்கு மரணதண்டனை விதிப்பதில் தவறேதுமில்லை என்பது என் தாழ்மையான கருத்து.இதுதொடர்பாக இந்தியாமுழுவதும் பல போராட்டங்கள் நடந்தது,குறிப்பாக டெல்லியில் அடிதடியுடன் கூடிய  போராட்டம்,அதில் அநியாயமாக ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார், பொதுச்சொத்து நாசமானது.யாரோ ஒருவருடய மகளை/சகோதரியை  வலிய இழுத்து நாசப்படுத்திய ஈனப்பிறப்புகளுக்கும்,யாரோ ஒருவருடைய கார்களையும்,பஸ்களையும் அடித்து நாசம் செய்பவர்களுக்கும்  என்ன வித்யாசம் இருக்க முடியும்?என்ன இருந்தாலும் சம்பவம் நடந்த அடுத்து நாளே தீர்ப்பு வந்து அதற்க்கு அடுத்த நாளே குற்றவாளிகள் தூக்கில் போடப்பட்டுவிடப் போவதில்லை அது சாத்தியமும் இல்லை.இதுவே நாடு முழுக்க பல இடங்களில் பல கோடிப்பேர் உண்ணாவிரதம் இருக்க அமர்ந்தால்,கடுமையான தீர்ப்பு வரும் வரை உண்ணாமல் இருப்பதென்று இளைஞர் பட்டாளம் உறுதியெடுத்திருந்தால் அது அரசாங்கத்தை இன்னும் பாதித்திருக்குமல்லவா? உண்மையான கொந்தளிப்பை கோபத்தை இப்படி காட்டி இருக்கலாமே. 

கர்நாடகா,தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் பெண்கள் பாதுகாப்புக்கென்று அவசரச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. (இது போன்ற சட்டங்கள் ஏழை பெண்களுக்கோ,உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமோ இல்லையோ,பணத்தின் பொருட்டும்,தங்கள் சொகுசாக வாழ நினைக்கும் பெண்களுக்கும்,தான் நினைத்ததை நடத்திக்கொள்ள(கண்டிஷன்!) எதையும் வெளியில் சொல்லும்/செய்யும் பெண்கள் இதை நிச்சயம் பயன்படுத்திக்கொள்வார்கள்.

கட்டுரைக்கு சம்பந்தமில்லாத பின் குறிப்பு :இந்தச்சம்பவம் பற்றி கேள்விப்பட்ட முதல் நாளிலிருந்து அவ்வளவு கோபப்பட்டவனாக இருந்தேன்.உடனே பேப்பரை எடுத்து யோசிக்காமல் நிறையவிஷயங்களை எழுதியும் விட்டேன்.அப்புறம் தான் உணர்சிவசத்தால் செய்யும் எந்த செயலும் முழுமையாக இருக்காது என்ற  ஞானோதயத்தை சமீபத்தில் உலகின் மிகப்பெரிய முட்டாளிடம் இருந்து தெரிந்து கொண்டதால் அமைதியானேன்.அதன் பின்பு டெல்லி வழக்கை பத்திரிக்கைகளில்,இணையத்தில் நெருக்கமாக தொடரத்தொடங்கினேன்.அதன் விளைவாகத்தான் இத்தனை நாள் கழித்து இந்த கட்டுரை.

கோபத்துடன்
நான்.

3 Responses so far.

 1. Anonymous says:

  unga kovam niyamanathu thaan...innum theerpu kodukama yen iluthadikuraanga...thaanga mudiyathathu minornu oruthana othikki vachathu thaan...ippolam ulahathula uyiroda mathippey koranjuttu varuthu...itha vida koduma sontha appavey ponnukitta nadanthukurathu thaan...nalla theerpu kidaikanum...

 2. Ibrahim A says:

  varugaikku nandri anaani....

 3. Kripa says:

  Dear Admin,
  You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

  நன்றிகள் பல...
  நம் குரல்

- Copyright © துளி கடல் -