சமீபத்தில் ஒரு நாள் ஆபீசிலிருந்து வீடு திரும்புகையில்,உடன் வேலை செய்பவர் "நீங்கள் போகிற வழி தானே,என்னை அப்படியே வைட் பீல்டில் விட்டு விடுகிறீர்களா?அவசரமாய் போக வேண்டும்" என்றார்.அவரை ட்ராப் பண்ணி விட்டு அந்தப்பக்கமாக இருந்த ஒரு பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போடப்போனேன் (பின்ன அங்க என்ன பாமாயிலா போடுவாங்க).அந்த மதிய நேரத்தில் கூட்டம் ஏதுமில்லை பெரிய கேனை வைத்துக்கொண்டு பெட்ரோல் வாங்க ஒரு ஆள்,அவன் பின்னே ஆக்டிவாவை தள்ளிக்கொண்டு ஜீன்ஸ் அணிந்த நவீன யுவதி ஒருத்தி,இரண்டு பங்க் ஊழியர்கள் அப்புறம் கொஞ்சம் தூரத்தில் செல்போனில் பேசியபடி, கையெல்லாம் மோதிரமாக முதலாளி,நான் மட்டுமே இருந்தோம்.
 
பெரிய கேனில் பெட்ரோல் நிரப்ப எத்தனித்த ஊழியன் தவறுதலாக பைப்பை கீழே விட்டுவிட,அது பாம்பு போல நெளிந்து நிறைய பெட்ரோல் கீழி கொட்டி,நின்றிருந்த பெண்ணின் கால்களையும் நனைத்து விட்டது.அந்தப்பெண் கோபமாக கத்தத்தொடங்கினாள்,கேன்காரனும் ஏதோ சொல்லவந்தான், இந்தக்காட்சியை  கண்ட முதலாளி செல்போனை அணைத்து விட்டு கோபமாக அவனை நோக்கி வரத்தொடங்கினார்...ஏதோ ஆகப்போகிறது,பையன்  செமத்தியாய் அடி  வாங்க போகிறான் என்று நான் நினைத்த போது ,கூட இருந்த இன்னோரு பங்க் ஊழியன் கன்னடத்தில் "நன்மகனே....நம்ம பெட்ரோல் பங்கிற்கு அழகான  பொண்ணுங்க எப்போவாவது தான் வராங்க,சரிதான்.அதுக்காக நீ இப்படியா தடுமாறுவ" என்றானே பார்க்கலாம்,அந்தப் பெண்ணை பார்த்துக்கொண்டே.. அவ்வளவு தான் அந்தச்சூழ்நிலை அப்படியே மாறிப்போனது. அந்த பெண் அடக்க முடியாமல் வெட்கப்பட்டு சிரிக்கத்தொடங்கினாள்.பங்க் முதலாளியும் கோபம் மறந்து பலமாக சிரித்தபடி அவன் முதுகில் லேசாக தட்டி "அவங்களுக்கு துடைக்க ஏதாவது துணி கொடு,அப்புறம் பெட்ரோல் போட்டு அனுப்பு" என்றார்."அது தான் ஏற்கனவே போட்டுடீங்களே" என்று வாயில் வந்ததை சொல்லவில்லை நான்.
 
பின் வீடு வந்து சேரும் வரை பலமுறை அந்த நிகழ்ச்சியை நினைத்து சிரித்தபடியே வந்தேன்.எப்படி ஒரே ஒரு வார்த்தை ஒரு பெரும் கோபச்சூழ்நிலையை தகர்க்கிறது,ஒரு சோகக்கூட்டத்தை சிரிப்பில் ஆழ்த்துகிறது,மனதில் உள்ள காதலை முழுக்கச்சொல்லும் சிறு தீண்டல், கேட்கவேண்டிய மன்னிப்பை காட்டும் ஒரு பார்வை, கண்ணீர்த்துளி**,நம்பிக்கையை ஏற்படுத்தும் தோள் தட்டல் இப்படி உலகின் எல்லா அற்புதங்களும்  சின்னஞ்சிறு  விஷயங்களிலிருந்தே  தொடங்கி நிகழ்வதெப்படி? ஏனென்றால்  அந்த  நிகழ்வில் இருக்கும்  பாசிடிவ் எனர்ஜி, முன்னெடுத்து வைத்தல்-முனைப்பு.
 
மேற்சொன்ன சம்பவத்தை போல நான் ஏதாவது செய்திருக்கிறேனா   என்று வீட்டில் கேட்டபோது சிறுவயதில் என் கொள்ளு தாத்தா இறந்து கூடத்தில்  கிடத்தப்பட்டு  எல்லோரும்  சுற்றி  அமர்ந்து  அழுது கொண்டிருந்தார்களாம்,அருகில் சென்று அவர் முகம் பார்த்த நான் "அய்யோ ஏன் இப்படி எல்லோரும் கத்தறீங்க,தாத்தா முழிச்சிக்கப்போறார்" என்று மழலையாக சொல்ல நிறையபேர் துக்கம் மறந்து சிரித்தார்களாம்.(நாங்கல்லாம் அப்போவே அப்படி...இப்போ கேக்கவா  வேணும்)
 
** கண்ணீர்துளியா? இப்போவெல்லாம் காலில் விழுந்து கதறி அழுதாலும் சில ஜென்மங்கள் கண்டுகொள்வதில்லை.நேருக்கு நேர் நின்று சிறு பார்வை பார்த்துக்கொள்ளவும் விரும்புவதில்லை.....selfish buggers!
 
 
அன்புடன் 
நான்.


2 Responses so far.

  1. சூழ்நிலையைக் கலகலப்பாக்கியதை மிக ரசித்தேன்;
    சிரிப்பு மாமருந்தாவது;அது அடுத்தவர் மனதை இம்சைப்படுத்தாதிருக்கும்போதே என்பதைப் பலர் அறிவதில்லை.

  2. Ibrahim A says:

    நன்றி யோகன்

- Copyright © துளி கடல் -