Archive for April 2013

முடியக்கூடாத பாடல்:இளையராஜாஎவ்வளவோ சிறந்த பாடல்கள் இருந்தாலும் ,உள்வரை சென்று தொடக்கூடிய பாடல்கள் வெகு சிலதே.இது ஆளாளுக்கு வேறுபடும், நம்முடைய வாழ்கை அனுபவங்களை,சோகங்களை,                பிரிவுகளை வைத்து நம் மனதே அந்தப்பாடல்களை தெரிவு செய்துகொள்ளும் ஆச்சர்யமாக! சினிமா பாடல் தானே என்று ஒதுக்கி விட முடியாது,நம்முடைய வாழ்வில் அதன் பங்களிப்பு அசாத்தியமானது.தூக்கமில்லா நீண்ட இரவுகளின் பெருவெளியில் நமக்குள்ளேயும்,வெளியேயும் காற்றாய் அலைந்து கொண்டிருப்பது இந்தப் பாடல்களே!

அப்படி நான் நினைக்கும் ஒரு பாடல் அவதாரம் படத்தில் இளையராஜா,ஜானகி குரலில் வரும் "தென்றல் வந்து தீண்டும் போது", இந்தப்பாடல் தொடங்கும் போதே இது முடியாமல் இருந்து கொண்டே இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் தரும்.பாடலில் பயணப்பட்டிருப்பது என்ன ராகம் என்றெல்லாம் தெரியாது.ஆனால்  இழுத்து இழுத்து பாடல் இளையராஜாவின் குரலை கேட்கும் போது: காதலன் நிரம்பவும் சோகமாக இருக்கையில் காதலி அவன்  கன்னங்களை கைகளில் ஏந்திக்கொண்டு,கண்களை நோக்கி "ஏன்டா,என்ன ஆச்சு?" என்று கேட்பது போல இருக்கும் அந்த இழுவை.அந்த இழுவைக்கு அப்படி ஒரு தலைகோதும் சக்தி உண்டு.மிகைப்படுத்தவில்லை உண்மையாகத்தான் சொல்கிறேன்.சில பாடல்களுக்கு இது போன்ற சக்தி உண்டு தெரியுமா? - "செனோரீட்டா" பாடலை கேட்கும் போது கைகளை அகல விரித்து வானில் பறப்பது போலவும்,குறிப்பாக "ஆனந்தம் ஒன்றல்ல,ஆரம்பம் இன்றல்ல" வரிகளில்......"பூங்கதவே தாழ்திறவாய்" பாடலை கேட்கும் போது பெரிய தாழ்வாரக்கதவுகள் வழியே காற்று பாய்ந்து வருவது போலவும் தோன்றும்.இது இளையராஜவிர்க்கே உண்டான தனித்தன்மையோ என்னவோ?

இந்தப்பாடலை பற்றி படத்தின் இயக்குனர் நாசர் சொல்லும் போது முதலில் இந்த டியுனை கேட்டு சுமாராக இருக்கிறது என்றெண்ணி அதில் சில மாற்றங்களை கொண்டுவரும்படி இளையராஜாவை கேட்டாராம்.எதுவும் சொல்லாமல் ரெகார்டிங் தியேட்டருக்கு வரும்படி சொல்லிவிட்டு போய் விட்டாராம் இசைஞானி.பின்னர் அந்த பாடலின் உருவான விதத்தை கண்கொண்டு தான் கொண்ட ஆச்சர்யத்திலிருந்து தாம் இன்னும் விலகவில்லை என்று நாசர் சொன்னார்.அது போல யுவனை ஏதோ ஒரு மேடையில் பாராட்டியபோது "தென்றல் வந்து தீண்டும் போது" பாடலுக்கு நிகரான பாடலை எப்போது இயக்குகிறேனோ அப்போது தான் நான் இசையமைப்பாளராக ஆனதாக தோன்றும் என்றாராம்.ராஜாவை விமர்சிக்கும் சாருவே மிக ரசித்த பாடல் இது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

பிறவிகுருடான ரேவதி வண்ணங்களை பற்றிக்கேட்கையில்,தென்றல் தீண்டும் போதும்,திங்கள் காயும் போதும் என்ன வண்ணம் இருக்கும் மனதில்? வண்ணம் என்பது எண்ணங்களுக்கேற்றபடி மாறக் கூடியது என்று புலப்படுத்துகிறார் நாசர்.தானத் தந்தத் தானத் தந்தத் தனனா"என்ற கோரசிலேயே நானெல்லாம் பூமியை விட்டு இரண்டடி மேலே போய் விடுவேன்.இந்தப்பாடல் இளையராஜாவின் ஸ்டைலிலேயே இருக்காது,அவருக்குள் இருக்கும் இன்னொரு இளையராஜா போட்டது போல இருக்கும்.ஒரு இடத்தில கூட தூக்கலான இசை,குரல் உயர்த்தல் இருக்காது..வார்த்தையால் விவரிக்க முடியாத அளவுக்கு அழகான பாடல்.என்னளவில் சந்தேகமே இல்லாமல் ராஜாவின் மாஸ்டர் பீஸ்.

பாடலின் காட்சிகளில்  வண்ணங்களை குழைத்து ஊற்றியும்,கண்ணிலாத பெண்ணோவியம்,நிறம் நிறமான பூக்கள்  என நாசர் பாடலை படமாகி இருக்கும் விதமும் அழகாக இருக்கும்.

என்னுடைய செல் பேசியில் இருக்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களில் கிட்டத்தட்ட 95% மேல் ராஜாவின் பாடல்களே ஆக்கிரமித்திருக்கும்.ஆலுவலக நண்பர் ஒரு முறை "இளையராஜாவை விட்டு வெளியே வாங்க,அவர் காலமெல்லாம் முடிந்து விட்டது" என்றார்.நான் எதுவும் பேசாமல் இந்தப்பாடலை போட்டு காட்டி "இதை விட சிறந்த பாடலை எனக்கு காட்டுங்கள்,அப்போது நான் அவரை விட்டு  வெளியே வர முயற்சிக்கிறேன் " என்றேன்.

இன்னும் இளையராஜாவை மட்டும் கேட்டுக்கொண்டிருப்பதால் மற்றவர்கள் என்னை வயதானவனாக நினைகிறார்கள்,ஆனால் உண்மையில் அதனால் தான் நான் இளமையாகவே இருக்கிறேன்.
அன்புடன் 
நான். 

ஆஸ்பத்திரி:சுதேசமித்திரன் நாவல்அப்பா என்பவர் யார்? நம்முடைய வயதான,தேய்ந்த எதிர்கால பிம்பம் தான் அப்பா.இன்று எந்த ஒரு செயலையும் சரிவரச்செய்ய முடியாமல் கை கால்கள் நடுங்கிக்கொண்டு,வாய் குழறிப்பேசிக்கொண்டு நிலைமாறி படுக்கையும்,கழிப்பறையுமே வீடாய் கிடக்கும் ஜென்மம் முன்பொரு காலத்தில் அகண்ட தோள்களுடன்,சுருள் முடியுடன் பல பெண்களை கவர்ந்த ஆண்மகனாய்,எடுத்த எந்தவொரு செயலையும் முடிக்கும் ஆளாய்,பலசாலியாய்,புத்திசாலியாய் இருந்திருக்கக்கூடும்.இது எல்லா அப்பாக்களுக்கும் பொருந்தும்.இப்படி ஒரு அப்பா தான் "ஆஸ்பத்திரி" யில் வரும் சிவன்,விஷ்ணுவின் அப்பா.

இளவயதில் அரசு உத்தியோகத்தில் இருக்கும் விஷ்ணுவின் அப்பா தான் மாற்றலாகிப்போகும் ஊரில் நாடகங்கள் நடத்தி  பல  இளைஞர்களை  கவர்ந்தவராக,பல நண்பர்கள் கொண்டவராகவும் இருக்கிறார்.தன்னுடைய பேச்சு திறமையால் நிறைய பெரிய மனிதர்களின் செல்வாக்கு பெற்றவராகவும்  சமுதாயத்தில் திகழ்கிறார்.பின்னர் வயதான கால கட்டத்தில் விதவிதமான நோயால் விழுகிறார்.அவரை வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு தங்கள் சூழலுக்கேற்ப மாற்றும்  இரண்டு மகன்கள் வாயிலாக நோய் ஏற்படுத்தும் தாக்கங்கள்,அதனால் உறவுகளுக்குள் வரும் குழப்பங்கள், பொருட்ச்செலவுகள்,மருத்துவர்கள் நோயாளிகளை அணுகும் பாங்கு,மருத்துவமனை மீதான தாக்குதல்கள் போன்றவைகளை நமக்கு முன் வைக்கிறார் சுதேசமித்திரன்.சிவன் விஷ்ணுவின் அப்பா எலும்பு முறிவு,பர்கின்சன்,நெஞ்சுக்கபம் போன்ற வியாதிகளால் தாக்கப்பட்டுக்கொண்டே இருப்பதால் இந்த வியாதிகள் மற்றும் இதன் துணை வியாதிகள் மீதான குறிப்புகளும் அதை சரிசெய்யும் மருந்துகள்,மருத்துவ முறைகள்,உபகரணங்கள் போன்ற தகவல்கள் நமக்கு நிறைய கிடைகின்றன.

பொதுவாக நாவல் எழுதுபவர்கள் கடைபிடிக்கும் எந்த ஒரு protocol லிற்கும் கட்டுப்படாமல் முன்னுக்கு பின் முரணாக ஓடுகிறது "ஆஸ்பத்திரி".அதுபோல ஆசிரியர் நேரடியாக சம்பவங்களை பார்த்தது போலவும்,கதாபாத்திரங்களோடு மற்றும் வாசகனோடு உரையாடுவது போலவும் இருக்கிறது.அது சில இடங்களில் லேசான அலுப்பையும் தருகின்றது.நான் ரசித்த விஷயம் ஒன்று உண்டென்றால் அது பக்கங்கள் முழுவதும் விரவிக்கிடக்கும் பகடி,இது மிகவும் அசாத்தியமாக சுதேசமித்ரனால் கையாளப்படுகிறது.சில தொலைக்காட்சி விளம்பரங்களில் நுகர்வோரை (customer) பொருள் தயாரிப்பாளன் அடிப்பது,நக்கல் செய்வது போல வருமே? அது போல படிக்கும் நம்மையும்,சில இடங்களில் நாவலின் உண்மைத்தன்மையையும்,அவரையும் வஞ்சப்புகழ்ந்து கொள்கிறார்.இது பொதுவாக நிறைய எழுத்தாளர்களிடம் பார்க்க முடியாதது.கிட்டத்தட்ட சுதேசமித்ரனின் எல்லா நாவல்களிலும் இந்த முறை பின்பற்றி வரப்படுகின்றது.

"ஆஸ்பத்திரி"யை முடிக்கையில் ஒன்று புலனாகிறது:மருந்துவாசனையும், புரியாத மருத்துவமொழியும் மொழியும்,சிடு சிடு மருத்துவர்களும் அவர்கள் கொடுக்கும் மருந்துகளும்,விலையுயர்ந்த சாதனங்களும்,சிகிச்சை முறைகளும்,சொஸ்தப்படுத்தும் இடமும் ஆஸ்பத்திரி ஆகாது.
நாம் வாழ்கின்ற காலத்திற்கும்,நம் சுற்றுப்புறத்திற்கும் தகுந்தார் போலவும்,முன்பே வந்த நோய்களின் பலனாகவும் சில நோய் எதிர்ப்பு சக்திகளை நம் உடலே உருவாக்கிக்கொள்கிறது. நம் உடலுக்குள்ளிருந்து போராடிக்கொண்டே இருக்கும் அந்த சக்தி தான் ஆஸ்பத்திரியாக இருக்க முடியும்.இல்லையா?


அன்புடன் 
நான்.  

- Copyright © துளி கடல் -