அப்பா என்பவர் யார்? நம்முடைய வயதான,தேய்ந்த எதிர்கால பிம்பம் தான் அப்பா.இன்று எந்த ஒரு செயலையும் சரிவரச்செய்ய முடியாமல் கை கால்கள் நடுங்கிக்கொண்டு,வாய் குழறிப்பேசிக்கொண்டு நிலைமாறி படுக்கையும்,கழிப்பறையுமே வீடாய் கிடக்கும் ஜென்மம் முன்பொரு காலத்தில் அகண்ட தோள்களுடன்,சுருள் முடியுடன் பல பெண்களை கவர்ந்த ஆண்மகனாய்,எடுத்த எந்தவொரு செயலையும் முடிக்கும் ஆளாய்,பலசாலியாய்,புத்திசாலியாய் இருந்திருக்கக்கூடும்.இது எல்லா அப்பாக்களுக்கும் பொருந்தும்.இப்படி ஒரு அப்பா தான் "ஆஸ்பத்திரி" யில் வரும் சிவன்,விஷ்ணுவின் அப்பா.

இளவயதில் அரசு உத்தியோகத்தில் இருக்கும் விஷ்ணுவின் அப்பா தான் மாற்றலாகிப்போகும் ஊரில் நாடகங்கள் நடத்தி  பல  இளைஞர்களை  கவர்ந்தவராக,பல நண்பர்கள் கொண்டவராகவும் இருக்கிறார்.தன்னுடைய பேச்சு திறமையால் நிறைய பெரிய மனிதர்களின் செல்வாக்கு பெற்றவராகவும்  சமுதாயத்தில் திகழ்கிறார்.பின்னர் வயதான கால கட்டத்தில் விதவிதமான நோயால் விழுகிறார்.அவரை வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு தங்கள் சூழலுக்கேற்ப மாற்றும்  இரண்டு மகன்கள் வாயிலாக நோய் ஏற்படுத்தும் தாக்கங்கள்,அதனால் உறவுகளுக்குள் வரும் குழப்பங்கள், பொருட்ச்செலவுகள்,மருத்துவர்கள் நோயாளிகளை அணுகும் பாங்கு,மருத்துவமனை மீதான தாக்குதல்கள் போன்றவைகளை நமக்கு முன் வைக்கிறார் சுதேசமித்திரன்.சிவன் விஷ்ணுவின் அப்பா எலும்பு முறிவு,பர்கின்சன்,நெஞ்சுக்கபம் போன்ற வியாதிகளால் தாக்கப்பட்டுக்கொண்டே இருப்பதால் இந்த வியாதிகள் மற்றும் இதன் துணை வியாதிகள் மீதான குறிப்புகளும் அதை சரிசெய்யும் மருந்துகள்,மருத்துவ முறைகள்,உபகரணங்கள் போன்ற தகவல்கள் நமக்கு நிறைய கிடைகின்றன.

பொதுவாக நாவல் எழுதுபவர்கள் கடைபிடிக்கும் எந்த ஒரு protocol லிற்கும் கட்டுப்படாமல் முன்னுக்கு பின் முரணாக ஓடுகிறது "ஆஸ்பத்திரி".அதுபோல ஆசிரியர் நேரடியாக சம்பவங்களை பார்த்தது போலவும்,கதாபாத்திரங்களோடு மற்றும் வாசகனோடு உரையாடுவது போலவும் இருக்கிறது.அது சில இடங்களில் லேசான அலுப்பையும் தருகின்றது.நான் ரசித்த விஷயம் ஒன்று உண்டென்றால் அது பக்கங்கள் முழுவதும் விரவிக்கிடக்கும் பகடி,இது மிகவும் அசாத்தியமாக சுதேசமித்ரனால் கையாளப்படுகிறது.சில தொலைக்காட்சி விளம்பரங்களில் நுகர்வோரை (customer) பொருள் தயாரிப்பாளன் அடிப்பது,நக்கல் செய்வது போல வருமே? அது போல படிக்கும் நம்மையும்,சில இடங்களில் நாவலின் உண்மைத்தன்மையையும்,அவரையும் வஞ்சப்புகழ்ந்து கொள்கிறார்.இது பொதுவாக நிறைய எழுத்தாளர்களிடம் பார்க்க முடியாதது.கிட்டத்தட்ட சுதேசமித்ரனின் எல்லா நாவல்களிலும் இந்த முறை பின்பற்றி வரப்படுகின்றது.

"ஆஸ்பத்திரி"யை முடிக்கையில் ஒன்று புலனாகிறது:மருந்துவாசனையும், புரியாத மருத்துவமொழியும் மொழியும்,சிடு சிடு மருத்துவர்களும் அவர்கள் கொடுக்கும் மருந்துகளும்,விலையுயர்ந்த சாதனங்களும்,சிகிச்சை முறைகளும்,சொஸ்தப்படுத்தும் இடமும் ஆஸ்பத்திரி ஆகாது.
நாம் வாழ்கின்ற காலத்திற்கும்,நம் சுற்றுப்புறத்திற்கும் தகுந்தார் போலவும்,முன்பே வந்த நோய்களின் பலனாகவும் சில நோய் எதிர்ப்பு சக்திகளை நம் உடலே உருவாக்கிக்கொள்கிறது. நம் உடலுக்குள்ளிருந்து போராடிக்கொண்டே இருக்கும் அந்த சக்தி தான் ஆஸ்பத்திரியாக இருக்க முடியும்.இல்லையா?


அன்புடன் 
நான்.  

- Copyright © துளி கடல் -