Archive for June 2013

எளிதாக டைவர்ஸ் பெறுவது எப்படி?

எளிதாக டைவர்ஸ் பெறுவது எப்படி?விடுமுறை நாட்களில் என் வக்கீல் தோழனின் அறைக்கு சென்று,பொழுதுபோகாமல் அவனது கிளையன்ட் கேஸ் கட்டுகளை புரட்டியபோது கிடைத்த சுவாரசியமான வழக்குகளை கற்பனை கலந்து என்  மொழியில் தொகுத்து வழங்கியிருக்கிறேன்.இங்கே கொடுக்கப்பட்டிருப்பவை ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுவானவை.இதை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக்கொள்ளவும்.சீரியசாக வீட்டில் முயன்று பார்த்து மனது உடைந்தால் நிர்வாகம் பொறுப்பாகாது!
பொதுவாக எல்லா விவாகரதிர்க்கும் ஏதாவது வலுவான காரணம் இருக்கும்-போதைப்பழக்கம்,அளவுக்கு மிஞ்சிய சைக்கோத்தனம்,குருரம், கள்ளத்தொடர்பு, பணம் இல்லாமை இப்படி.உண்மையாகவே சேர்ந்தே வாழமுடியாத ஒரு நிலையில் இருப்பவர்கள்,  விருப்பமில்லாமல்  ஒரு "drag" வாழ்கை வாழ்பவர்கள் அவர்கள்  விவாகரத்தில் தவறேதும் இல்லை.நான் சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாவிட்டால்  ஜீ தமிழ் சானலில் ஒளிபரப்பாகும்  "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியை பாருங்கள்,நிறைய நிறைய பெண்களும்,சில ஆண்களும் திருமணம் என்ற பந்தத்தில் சிக்கி எவ்வளவு கொடுமையான துன்பம் அனுபவிக்கிறார்கள் என்பது புரியும்.
ஆனால் நான் படித்தது இந்த மேல்வர்க்க டைவர்சுகளை பற்றி....அதில் காரணங்கள் எல்லாம் காமெடி வகை தான்!!! பார்த்த முக்கால்வாசி பிரிவுகள் எல்லாம் பெண்/ஆணுடைய அற்ப"கன்டிஷன்" நிறைவேற்றப்படாமல் போனதால் தான்,இவர்களுக்கு குடும்பம் என்ற அமைப்பின் அடிப்படையே புரியாததால் தான்,திருமணம் என்பது ஏதோ பைவ் ஸ்டார் ஹோட்டல் போய் தங்குவது போல நினைத்துக் கொண்டிருப்பார்கள்,ஏனென்றால் அங்கே தான் நாம் எந்த வேலையும்,உழைப்பும் போடத்தேவையில்லை,என்ன வேண்டுமோ எந்த நேரத்துக்கு சொல்கிறோமோ அதது அப்பொழுது கிடைக்கும்,பாத்ரூமில் வைக்கும் சோப்பிலிருந்து, படுக்கை துணி, எல்லாமே  நம் மனதுக்கு பிடித்தவையாய் இருக்கும் ,ஏதாவது குறை,பிரச்சனை என்று வந்தால் அதை அட்ஜஸ்ட் பண்ண வேண்டியதில்லை ஒன்று ஹோட்டல் நிர்வாகத்தை பிடித்து கத்தலாம்,இல்லையென்றால் வேறு ஹோட்டல் பார்த்து போகலாம்.இன்றைய நவீன உலகில் இப்படிதான் இருக்கிறார்கள்,இவர்களுக்கான சில நல்ல! ஐடியாக்களை தான் இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறேன். 
ப்ளான் பண்ணனும்
* நீங்கள் வாழ ஆரம்பித்த கொஞ்ச வருடத்திலேயே தெரிந்து விடும் இவன் நமக்கு ஒத்துவருவானா மாட்டானா  என்று,அப்போதிலிருந்தே நீங்கள் காரணத்தை தேடத்துவங்கவேண்டும்.அம்சமாக ஒரு காரணம் கிடைத்து விட்டால் போதும்  அதை  வைத்து  போகப்போக   டெவலப் செய்து கொள்ளலாம் ஒரு நாள் திடீரென்று ஏன்?எதற்கு என்று எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பெண்ணாக இருந்தால் அம்மா வீட்டிற்க்கும்,ஆணாக இருந்தால் நண்பன் வீட்டிற்க்கும் ஓடி ஒளிந்து கொள்ளவேண்டும்.
*வாழும் காலத்திலேயே உங்கள் துணையை பற்றி தவறானதொரு பிம்பத்தை அவருடைய சொந்தங்களிடம் உருவாக வேண்டும் (இதனால் பின்னர் பெரும் லாபமுண்டு) .உ.தா "அவர் என் அம்மா வீட்டுடனான  தொடர்பை அறுத்துவிட்டார்,என்னை அங்கே அனுப்பியதே இல்லை" என்று உங்கள் கணவரின் சொந்தங்களிடம்  சொல்லி வைக்கலாம் அல்லது உங்கள்  சித்தப்பாவை  உங்கள்  மனைவிக்கு  பிடிக்காமல்  இருக்கும், நீங்கள் அவருக்கே போன் செய்து "டேய்,என் பொஞ்சாதிக்கு உன்னை பிடிக்கவே பிடிக்காது டா" என்று சொல்ல வேண்டும். அதாவது அவரது சொந்த குடும்பத்திலேயே நீங்கள் உங்கள் துணைக்கு குழி வெட்ட வேண்டும்.."மார்பில் சாய்ந்து கொண்டே காலுக்கடியில் குழி வெட்டுவது"
*உங்கள் கணவன்/மனைவி கடந்த காலத்தை திடீரென்று ஆராய்வது-அதாவது உங்கள் துணை- கல்லூரி காலத்தில் ரகசியமாக இழுத்த சிகிரெட்,சப்பிப்பார்த்த பியர்,பேசிய/பழகிய/சந்தித்த/வழிந்த/கடலை போட்ட/கடிதம் கொடுத்த பெண் பற்றிய விபரங்கள் உங்கள் துணையின் பழைய டைரிகளில் இது கிடைக்ககூடும் தேடி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கு தேவையானவைகளை நிறைவேற்றிக்கொள்ள சமயம் பார்த்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
*நீங்கள் உங்கள் துணையுடன் நன்றாகவே வாழ்ந்து வந்தாலும்,உங்கள் அம்மா அப்பாவிடம் பேசும் போது  அடிக்கடி ஒப்பாரி வைக்கவேண்டும்,தினமும் உங்கள் கணவர் வீட்டில் பத்து லாரி மண் சுமப்பது போல ஒரு ஸீன் போட வேண்டும்.அது போல சின்ன சின்ன பிட்டுகளை அங்கங்கே போடவேண்டும் "என் மாமியார் எப்போதும் சிவப்பு புடவை தான் கட்டுகிறார்,அதனால் எனக்கு பார்வை மங்கி விட்டது" எனலாம்."என்னை எந்த வேலையும் செய்ய விடாமல் எல்லா வேலையும் அவரே செய்கிறார்,இதனால் சும்மா சாப்பிட்டு, தூங்கி எனக்கு தொப்பை விழுந்து விட்டது" என்று கூட காரணம் சொல்லலாம்.

*நீங்கள் விலக முடிவு செய்து விட்டீர்களேயானால் எந்த அசிங்கமான செயலை செய்யவும் தயாராக இருக்க வேண்டும்....உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்கொண்டு அதற்க்கு அடுத்தவர்கள் மீது பழி போட வேண்டும்.(குறிப்பாக கணவனின் நண்பர்கள்/வீட்டார்கள் மீது)

வழக்கு நடக்கும் காலகட்டத்தில்...  
*நன்றாக வாழ்ந்த காலத்தில் நீங்களும் உங்கள் துணையும் எத்தனையோ சுவையான விஷயங்களை பாரிமாறிக் கொண்டிருந்திருப்பீர்கள்
அதையெல்லாம் சுத்தமாக மறந்து விடவேண்டும்,யார் கேட்டாலும் நீங்கள் தீயில் உழன்று கொண்டிருந்ததாக சீன்  போட வேண்டும். உதாரணமாக நீங்கள் வாழ்ந்த காலத்தில் உங்கள் துணையை சக்கையாக பிழிந்திருப்பீர்கள்,ஏன் வீட்டை விட்டு வெளியேறும் கடைசி தினமன்று கூட அவனிடமுள்ள எல்லாவற்றையும் சுருட்டியிருப்பீர்கள்,ஆனால் அதை யாரிடமும் சொல்லி விடக்கூடாது!
* உங்கள் சொந்தங்களில் எவனாவது மகாகிறுக்கனாக இருப்பான்,மடத்தனமாக உங்களுக்கு சப்போர்ட் பண்ணுபவனாக,அடுத்தவர் வாழ்கையை பற்றி கவலை படாத அயோக்கியனாக இருப்பான் அவனை தான் நீங்கள் வழக்கு காலத்தில்  உதவிக்கு  வைத்துக்கொள்ளவேண்டும் (ஏனெனில் உங்கள் தாய் தந்தை கூட சில நேரத்தில் மனம் மாறக்கூடும்).
*உங்கள் துணை எவ்வளவு தான் கெஞ்சினாலும்,கதறினாலும் நீங்கள் அவரை தனிமையில்/பொது வெளியில் சந்தித்து விடக்கூடாது. ஏனென்றால் கணவன் மனைவி உறவுக்குள் ஒரு பார்வையோ,பேச்சோ எல்லாவற்றையும் மறக்கச்செய்யும்,எல்லாவற்றையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் ஈர்ப்பு ஒன்று உண்டு (காதலில் கூட இது கிடையாது) அது உங்கள் விவாகரத்திருக்கு வினை விளைவிக்கலாம் எனவே உங்கள் துணை உங்களை தொடர்பு கொள்ள எவ்வகையில் முயன்றாலும்,உங்கள் வீடு/அலுவலக வாசலில் நாயாக நின்று கொண்டிருந்தாலும், தொலைபேசினாலும் அல்லது உங்களுக்கு சம்பந்தமானவர்களோடு பேசி ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ய முயன்றாலும் நீங்கள் ஒப்புக்கொள்ளக்கூடாது...நீங்கள் உங்கள் அடுத்த வாழ்கைக்கு அப்போதிருந்தே தயாராவது நல்லது! (இதை ஆங்கிலத்தில் Waiting for Gods next plan)  என்று சொல்லலாம்)
*ஒரு விஷயத்தில் இறங்கி விட்டால் அதன் ஆழத்திற்கு செல்ல தயங்குதல் கூடாது அது போல no turning back! தம்பதியருக்குள்ளான எல்ல ரகசியங்களையும் (படுக்கையறை) யாரிடமும் பகரிந்து கொள்ளலாம்,குறிப்பாக நீங்கள் தேர்ந்தெடுத்த "ஈனப்பிறப்பிடம்" எல்லாவற்றையும் பிட்டு பிட்டு வைக்க வேண்டும்.வாழ்ந்த காலத்தில் செமத்தியாக காதல் டயலாக் அடித்திருப்பீர்கள் அதையெல்லாம் தூக்கிப்போட்டு விட்டு உங்கள் துணையை கழுவி கழுவி ஊத்தவேண்டும்.உங்களுக்கு உங்கள் கணவன் எழுதிய காதல் கடிதங்கள் முதலானவற்றை கண்டவர்களுக்கெல்லாம் (தோழி, தோழர்கள், தோழியின் கணவர்கள்,டோபிவாலா ) என பார்வர்ட் செய்து படிக்கச்சொல்லி உங்கள் வன்மத்தை தீர்த்துக்கொள்ளலாம் ,அது அவனை மேலும் மேலும் புண்படுத்தும்.
*முக்கியமான ஒன்று,ரெகார்ட் ஏற்படுத்துதல்......அதாவது வழக்கு நடக்கும் காலத்தில் உங்கள் துணையிடம் சம்பந்தமில்லாமல் கோபம்  வரும்படி  பேசி வெறி ஏற்ற வேண்டும்,உன் பெற்றவர்களை கழுத்தை பிடித்து கொன்று போடு,அடி உதை,தலையால் நட,உனக்கு 99 வயது கிழவியிடமும்,இரண்டு வயது குழந்தையிடம் கூட தொடர்பிருக்கிறது என்று சம்பந்தமிலாமல் பேசிக்கொண்டிருந்தால் ,அவர் எதாவது ஒரு கட்டத்தில் மனமுடைந்து போய் கண் மண் தெரியாமல் கத்தும் போது அதை தவறாமல் பதிவு செய்து கொள்ள வேண்டும்(ஹை டெக் மொபைல் அவசியம்),நீங்கள் பேசியதை எடிட் செய்து கொள்ள வேண்டும்,இவ்வளவு கோபப்படுபவன்,உணர்ச்சிமிக்கவன் எவ்வளவு கொடுமை படுத்தி இருப்பான் என்று ஜட்ஜ் நினைக்க இது உதவும்.
*சில தவறுகளை உங்கள் துணையே மறந்து விட நினைக்கையில்,அதெல்லாம் (உதாரணமாக குடிபழக்கம்) விட்டு அவர்  முற்றிலும்   வெளிவந்து உங்களோடு அதன் சாயல் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த போதும்,அல்லது வாழ முயற்சிக்கும் போதும் அதை இப்போது அடிக்கடி நீங்கள் அவருக்கு நியாபகப்படுத்தவேண்டும்.இது உங்கள் துணைக்கு பைத்தியம் பிடிக்க உதவும்.எந்த ஒரு தவறுக்கும் தண்டனை உண்டு,அந்த தண்டனைக்கு அளவும் உண்டு நீங்கள் உங்கள் கேவலமான கண்டிஷகளை (fulfilling the demands-அடிங்)  நிறைவேற்றிக்கொள்ள ஒருவரை ஆழம் நிறைந்த இருட்டுக்கு கொண்டு போய் விட்டு விடுகிறீர்கள்.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன்: உங்கள் கணவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாக சிகிரெட் பிடிக்கும் பழக்கம் இருந்ததென்று வைத்துக்கொள்வோம்.. அதெயெல்லாம் விட்டு விட்டு அதன் சாயல் கொஞ்சமும் இல்லாமலே உங்களோடு வாழ்ந்து வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.அந்த பழைய விஷயத்தை உங்கள் தற்சமய வழக்கில் நேக்காக பயன்படுத்தவேண்டும் "அவர் மீண்டும் சிகிரெட் குடிக்க ஆரம்பித்தால் என்ன செய்வது?அத்தோடு நீயும் குடி என்று என்னையும் ரெண்டு பப் இழுக்கவைத்தால் என்னாவது?..என் பிள்ளையும் இழுக்கவைத்தால்..புற்றுநோய் வரவழைத்தால் என்னாவது..என்று அழுது அரற்ற வேண்டு.கூட்டமாக அமர்ந்திருக்கும் வழக்கு கேட்பவர்கள் துடைத்துக்கொள்ள போர்வை கேட்டாலும் கேட்கலாம்.

வழக்கு கேட்பவர்கள் மத்தியில் பேசும் போது ஓவராக கத்தி ஊரை கூட்டாதீர்கள் ...ஏனென்றால் நான் படித்த வழக்கொன்றில் ஊர்த்தலைவர்களிடம்  அதீதமாக மரியாதை இல்லாத வார்த்தைகளை பயன்படுத்தி,நான்கைந்து பிளாக்குகளுக்கு கேட்டு கார் கண்ணாடி எல்லாம் உடைந்து போகுமாறு கத்தியதால் (பாதிக்கப்பட்டிருக்காங்களாம் !?-ஆனால் அதற்க்கு ஒரு வாரம் முன்பு தான் நீங்கள் சிம்லா அல்லது ஊட்டிக்கு டூர் சென்று வந்திருப்பீர்கள்!) எப்ப இந்த மாதிரி மரியாதை கெட்ட பெண்ணோடு வாழ்வதிலிருந்து இவன் தப்பிச்சதே புண்ணியம் என்று back fire ஆகக்கூடும்!

உங்கள் துணையை பற்றி பேசும் போது அவன் இவன் என்று ஏக வசனத்திலோ,கெட்ட வார்த்தைகளிலோ பேச வேண்டும் ..அந்த அளவுக்கு அவள் கொடுமைக்காரி/காரன்  என்று கேட்பவர்கள் நினைக்கக்கூடும் ..அதுவுமில்லாமல் இனி அவள்/அவனிடமிருந்து பணமோ,நகையோ வேறு எந்த ______ ம்  கிடைக்கப்போவதில்லையே!

வழக்கு நடக்கும் காலகட்டத்தில் செய்யவேண்டிய மற்றொரு காரியம்: விதவிதமாக போடோக்கள் எடுத்து ..(அதுவும் உங்கள் துணைக்கு பிடிக்காத வண்ணம்) facebook ,twitter ல்  போடவேண்டியது அவசியம் ..அதாவது உங்கள் துணை இல்லாமல் நீங்கள் ரொம்பவும் நன்றாக இருக்கின்றீர்கள் என்பதை காட்ட! இன்னொரு விஷயம் வாழ்கின்ற காலத்தில் உங்கள் கணவன்/மனைவி உங்களை பொத்தி பொத்தி வைத்திருப்பார் உதாரணமாக உங்கள் உடை விஷயத்தில் உங்கள் மானம் காப்பாற்றப்படவேண்டி ரொம்பவும் கறாராக இருந்திருப்பார்.வழக்கு நடக்கும் காலகட்டத்தில் மிகக்கேவலமாக ஜீன்ஸ்,அரை கை,சுடிதாரின் மேலாடை இல்லாமல்  முகநூலில் போஸ் கொடுக்க வேண்டும்.ஆணாக இருந்தால் ஸ்விம்மிங் பூலில் ஜட்டியோடு நின்றபடி போஸ் குடுக்கலாம்.நான் ஒரு சுதந்திரப்பறவை..என்னை எவனாலும் எவளாலும் ஒன்றும் செய்ய முடியாது ....எவனுக்கும்/எவளுக்கும் நான் அடங்கிப்போகவேண்டியதில்லை... நீ இல்லாவிட்டாலும் நான் நன்றாகத்தான் இருப்பேன் என்று பிரிவதற்கு முன்பே காட்டிவிடுவது.

பின்குறிப்பு:பெரிய கட்டுரையாக எழுதி வைத்த நோட்டு புத்தகம்(டைரி என்றும் சொல்லலாம்) எங்கேயோ தொலைந்து விட்டது தற்காலிகமாக அதனால் முதல் பாகம் இத்தோடு முடிந்தது.....இரண்டாம் பாகம் இன்னும் நிறைய அறிவுரைகளோடு! நிறைய உண்மைச்சம்பவங்களை உதாரணமாக கொண்டு ரணகொடூரமாக வெளிவரும்.

கோபத்துடன் 
நான்.

- Copyright © துளி கடல் -