Archive for November 2013

The Silence (2010):தனிமையின் பசிதனிமை தான் உலகிலேயே மிகக்கொடிய நோயாக இருக்க முடியும்.தனிமை என்பது இருளை போல சூழ்ந்து கொண்டு பித்து பிடிக்கவைக்க வல்லது.அதன் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்தவர்களையும்,தப்பி வெளிவந்தவர்களையும் முதல் பார்வையிலேயே கண்டு கொள்ள முடியும். தனிமையில் வாடும் மனது எந்த கருப்பொருளும்,காரணமும்,நோக்கமும் இன்றி எதனையும் செய்யும்.Baran bo Odar இயக்கிய  The Silence என்ற ஜெர்மானிய மொழி திரைப்படம் இதையே கருவாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் மீது காமம் கொள்ளும் மனவியாதிக்கு பிடோபிலியா (pedophilia) என்று பெயர்.இதன் பாதிப்பிற்கு உள்ளான பீர் அவனது நண்பன்  ப்ரைட்ரீச் ஒரு சிறு பெண்ணை துரத்தி சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமான கோதுமை வயலில் வைத்து பீர் அவளை கற்பழித்து கொன்று விடுகிறான்.பிறகு அவளது சைக்கிளை அந்த வயலிலேயே தூக்கி எரிந்து,அவளது சடலத்தை அருகில் உள்ள ஏரியில் வீசிச்சென்று விடுகின்றனர்.அத்தோடு ப்ரைட்ரீச் பீரை விட்டு விலகிச்சென்று விடுகின்றான்.இந்த வழக்கை துப்பறியும் மிட்டிச் எவ்வளவும் முயன்றும் கொலைகாரனை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் நடந்து 23  வருடங்கள் கழித்து,அதே நாளில்,அதே இடத்தில் ஒரு சைக்கிள் கிடக்கிறது ,கொலை நடந்த அடையாளங்கள் தெரிகின்றது, சிநிக்கா என்ற பெண்ணும் காணாமல் போயிருக்கிறாள்.ஒரு த்ரில்லர் படத்திற்கு தேவையான அணைத்து அம்சங்களுடன் முதல் பத்து   நிமிடத்திலேயே  விறுவிறுப்பு தொடங்கிவிடுகின்றது  ஆனால் காட்சி நகரும் விதமும்,கதாபாத்திரங்களின் நடிப்பும், சம்மட்டியாய் இறங்கும் இறுதிக்காட்சியும் இது மொன்னையான அமெரிக்க வகை த்ரில்லர் இல்லை இது ஒரு உலகத்திரைப்படம் என்பதை உணர்த்திவிடுகின்றது. நாம் யூகிப்பதையும் தாண்டி மிகச்சிக்கலான வாதங்களை அடுத்தடுத்த காட்சிகள் எடுத்துவைத்தபடியே  இருக்கின்றன.

நடந்திருக்கும் சம்பவத்தால் 23 வருடங்களுக்கு முன் நடந்த கொலைக்கு தொடர்புடையவர்களின் மனவோட்டம் சீர்குலைகின்றது: துப்பு துலக்கிய அதிகாரி மிட்டிச் தற்போது நடந்திருக்கும் கொலையை பற்றி தெரிந்த கொள்ள முற்படுகிறார் ஆனால் அவர் ஓய்வு பெற்று விட்டதால் அவரை வழக்கிற்குள் அனுமதிப்பதில்லை,இறந்த பெண்ணினுடைய தாயாருக்கு பத்திரிக்கை,தொலைகாட்சி மூலமாகவும்,அதிகாரிகள் மூலமாகவும் தொல்லை நேருகின்றது,தேவையில்லாமல் மீண்டும் அவளது நினைவு தூண்டப்படுகின்றது. சிநிக்காவின் தாயும் தந்தையும் முன்பு நடந்த சம்பவத்திற்கும் இதற்கும் எதுவும் தொடர்பு இருந்துவிடக்கூடாது எனவும் அதே நிலை தன மகளுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என எண்ணி பதைபதைக்கின்றனர்.

இரண்டு பெண் குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ப்ரைட்ரீச்,தொலைகாட்சிகளில் இந்த செய்தியை பார்த்து விட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றான்.ஏதோவொரு எண்ணம் உந்தவே 23 வருங்களுக்கு முன் இறந்த பெண்ணின் தாயை தேடிப்போய் சந்திக்கிறான்,மகள் இறந்த போது அவள் எந்த நிலைக்கு ஆளானாள் என்பதை கேட்டு தெரிந்து கொள்கிறான். மிகுந்த தயக்கத்துடன்  ப்ரைட்ரீச் தன்னுடைய பழைய நண்பனான பீரை தேடிச்செல்கிறான்.பல வருட நண்பனை கண்டதும் பீர் மகிழ்ந்து போகின்றான்.பின்னர் அவனுக்கும் பீருக்கும் நடக்கும் அந்த சில நிமிடக்காட்சிகளில் சிநிக்கா கொலை செய்யப்பட்டிருப்பதற்கான காரணம் விளக்கப்படுகிறது.(அற்புதம்!)

இதற்கிடையில் இந்த வழக்கை துப்பறியும் டேவிட் இரண்டு கொலைகளுக்குமான ஒற்றுமையை கண்டறிவதன் மூலம் கொலைகாரனை நெருங்கி விடலாம் என்று விசாரணை நடத்துகிறார்.பழைய கேசை தூசு தட்டி,சில தடயங்களை வைத்து இறுதியாக கொலைக்கு துணையிருந்த ப்ரைட்ரீச்ஐ நெருங்கி விடுகிறார்.ஆனால் அவன் குற்றவுணர்வு தாங்காமல் தன் காருடன் ஆற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறான்,கொலைகாரனை கண்டுபிடித்த திருப்தியுடன் அரசாங்கமும்,பத்திரிக்கைகளும் ஓய்ந்து விடுகிறது.ஆனால் டேவிட், கொலை நடந்த இடத்தில்  இருவர் இருந்ததை கண்டறிகிறார் மேலும் ப்ரைட்ரீச் இருபத்தி மூண்டு வருடங்கள் கழித்து அதே போல வேறொரு பெண்ணை கொன்று,பின் தானும் மடிவது முரணாக இருக்கிறதென கருதுகிறார்.ஆனால் அவரால் தன் உயர் அதிகாரியை எதிர்த்து எதுவும் செய்ய முடிவதில்லை.

மிஷ்கினின் அஞ்சாதே படத்தின் இறுதிக்காட்சிகளில் வரும் கரும்புக்காடு படம் முடிந்த பின்னும் நம் நினைவை விட்டு அகலாது அதே போல இதில்  வரும் கோதுமை வயல்-முடிவில்லாமல் நீண்டிருக்கும் அந்த வயலும்,அதன் ஆழ் நிசப்தமும் ஒரு பயத்தை ஏற்படுத்தியபடி இருக்கின்றது,அப்படி ஒரு அழகான ஒளிபதிவு.கூராக நீட்டிக்கொண்டு வெளியே தெரியாததால் இசையை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.கிட்டத்தட்ட படம் முழுவதுமே வேகமாக நகர்ந்து இருக்கையின் நுனியில்  அமரச்செய்தாலும் கதாபாத்திரங்களின் உணர்ச்சியின் வெளிப்பாடுகள் மற்றும் அவர்கள் படும் அல்லல்களையும்,மனப்பிறழ்வுகளையும்  பதிவு செய்ய தவறுவதில்லை அதனாலேயே இது "The Silence" உலகப்படமாக ஆகின்றது.
அன்புடன் 
நான்.

- Copyright © துளி கடல் -