வெற்றி என்பது எதைக்குறிக்கிறது?பணம்,புகழ் சேர்த்தல்,இறைவனை அடைதல் இவைகளின் மூலம் வாழ்வில் உச்ச நிலைக்கு போதல்... எதைக்குறிக்கிறது?தத்துவங்களை புரட்டிப்பார்த்தால் மனிதர்களை சம்பாதிப்பது தான் வெற்றி என்கிறது தீர்க்கமாக இன்னும் சொல்லப்போனால் நம்மை சுற்றி நம்மை நம்பி இருக்கும் மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்தியமாவது.காலங்கள் கடந்த போதும் அந்த அன்பு மாறாமல் ஒருவரை இருக்கச்செய்வதே உண்மையான வெற்றி."செம்பருத்தி" கதையில் வரும் சட்டநாதன் இந்த வெற்றிக்கு தான் பாடுபடுவதாக தெரிகின்றது. பெண்கள் நிரம்பிய உலகத்தில் அவர்களூடே பயணித்து,அவர்களை புரிந்து கொள்ள முயலும் வெற்றி,அதை தான் தி.ஜா நாவலாக்கியிருக்கிறார் .

சட்டநாதன் படித்துக்கொண்டிருக்கும் வயதில்,மளிகைக்கடை நடத்தி வரும் சின்ன அண்ணன் முத்துசாமி காய்ச்சலில் இறந்து விடுகிறான். அதிகாலை வலியன் கத்தல்களையும்,வரப்பு பூக்களையும்,திருவாசகத்தையும்,இராமாயணத்தையும் படித்தபடி  திரிபவனுக்கு  கடைப்பொறுப்பும் , குடும்பப்பொறுப்பும் தலையிலேற்றப்படுகிறது.அங்கு தொடங்கி அவன் பாதுகாப்பில் இருக்க நேரும் அவனது மனைவி புவனா,விதவையான சின்ன அண்ணி குஞ்சம்மாள், பெரிய அண்ணன்-அண்ணி,குழந்தைகள்-இவர்களோடு கொண்ட உறவு/பிணக்கு,மளிகைக்கடை வியாபாரம் மூலமாக அவனுடைய குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்துதல்,சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் சிற்றூர்களில் ஏற்பட்ட மாற்றங்கள்,சந்தித்த மனிதர்கள் என்று அவனே சொல்வது போல மூன்று பாகமாக கதை நகர்கின்றது.குறிப்பாக அவன் கடந்து வரும் மூன்று பெண்களும் அவனது வாழ்வில் என்னமாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகின்றனர் என்பதை கூறுவதன் மூலம் குடும்பம்,சமுதாயம் முதலான கட்டமைப்பில் பெண்களின் பங்கு எவ்வளவு என்று புலனாகின்றது.

சட்டநாதனின் படிக்கும் வயதில் ஆசிரியரான தாண்டவ வாத்தியாரின் பெண்ணான குஞ்சம்மாளை ஊமையாக காதலிக்கிறான் ஆனால் அது நிறைவேறாமல் அவள் அவனுக்கு அண்ணியாக ஆக நேருகின்றது.ஆனால் அவள் தன்னுடைய கணவனின் இறப்புக்கு பிறகு சட்டனாதனை மோகிக்க  முயல்கிறாள், அவன் மிரண்டு ஒதுங்கவே,அவனை காலம் பூராவும் அவனருகே இருந்து அவனை பார்த்துக்கொண்டே இருக்கப்போவதாக கூறுகிறாள். ஆனால் வருடங்கள் கடந்து போகப்போக அவன் மீது அர்த்தமில்லாக்கோபம் ஏற்படுகின்றது. என்னை நீ நேசித்தபோதும் அதை வெளிய சொல்லாமல் என்னை வேறொருவன் மணப்பதை ஏற்றுக்கொண்டாய்,இந்த சமுதாயத்திற்கு பயந்து,நீயும்  உன் குடும்பமும்  முன்னேற, நெறி  தவறாத  நல்லவனாய்  காட்டிக்கொள்ள  உன் ஆசைகளை பூட்டி வைத்து என்னை நோகச்செய்துவிட்டதாக கூறி அவனை விட்டு விலகுகிறாள்.

சட்டனாதனுக்கு தன்னுடைய குடும்பம்,வியாபாரம் உளைச்சல் போன்ற அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு ஜீவனாக அவனுடைய மனைவி புவனா இருக்கிறாள்.அவள் அவனுடைய தேவைகளையும்,அவன் குடும்பத்தை தன்னுடைய குடும்பமாய் எண்ணி ஜீவிதம் செய்கிறாள்.ஆனால் அவளும் கூட வயதான(மாத விலக்கு நிற்கும்) காலத்தில் புத்திகெட்டு போய் அவன் மீது சந்தேகம் கொள்கிறாள்.கணவன் மனைவி இருவருக்குள் -ஒருவருக்கு உடலுறவு வறண்டு போய் மனவெருட்சி  ஏற்படும் காலம் எல்லோருக்கும் நிகழும் பிரச்சனை தான்,அதை எப்படி கடக்கிறோம் என்பதே உறவின் உண்மையான கட்டம்.  மிகுந்த அன்பும்  காதலும்  கொண்டிருந்த தன்னுடைய மனைவியின் மாற்றம்  சட்டனாதனிர்க்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது,பின்னர் அமைதியாக அதையும் கடக்கின்றான்.

பணமும்,ஊர்ப்புகழுடனும் நன்றாக வாழ்ந்து வரும் சட்டநாதனின் பெரிய அண்ணன்,சாட்சிக்கையெழுத்து பிரச்சனையால் சொத்துக்களை இழந்து-அவரும்,பெரிய அண்ணியும்,குழந்தைகளுமாக செம்பானூருக்கு வந்து சட்டநாதனின் உழைப்பில் வாழ்கின்றனர்.நாவில் தேள் கொடுக்கை வைத்து அலையும் பெரிய அண்ணி அவளுடைய வறுமையினாலும்,இயலாமையினாலும் வீட்டில் உள்ள எல்லோரையும் கொட்டிச்சாய்க்கிறாள்.குறிப்பாக சின்ன அண்ணியையும்,அவள் பெண்ணையும் சட்டனாதனையும் இணைத்து திரித்து பேசுகிறாள்.அந்த வீட்டில் ஒவ்வொருவர்  செயல்பாடுகளையும் அளப்பவளாக,எதையும் தவறாய் கணித்து வார்த்தையால் தீண்டுபவளாகவும் அவள் இருக்கிறாள்.

ஜானகிராமன் - ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதை சுற்றியே நாவல் பயணம் செய்யும்-மோகமுள்ளிலும்,அம்மா வந்தாளிலும்,மரப்பசுவிலும் அது தெளிவாக தெரியும்.இந்நாவலில் அவர் எடுத்துக்கொண்டது பெண்களின் உலகத்தில் நீந்தித்தவிக்கும் ஒரு ஆணின் கதை என்பது தான்,கிட்ட தட்ட தொண்ணூறு சதவிகித நாவலும் அப்படியே இருக்கிறது,அப்படியே முடித்தும் இருக்கலாம் ஆனால் கம்யுனிசம்,சுதந்திரபோராட்டம் முதலானவற்றை தேவையில்லாமல் திணிக்க முயன்றிருப்பதும்,சில இடங்களில் வேறு தளத்தில் பயணிப்பதும் ஏன் என்று தெரியவில்லை?ஒரு வேளை அந்த காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டவைகளை இணைக்க வேண்டிய எண்ணமோ என்னவோ?பெரிய அண்ணி இறந்ததுமே முடித்து விட்டிருக்கலாம்,இறுதி அத்தியாயங்களை கொஞ்சம் இழுத்தாற் போல தோன்றுகிறது (என்னை பொருத்தமட்டில் ஒரு எழுத்தாளனை இப்படி சொல்வது  மிகப்பெரிய தவறு!)

தி.ஜா வின் நாவல்களுக்கு எப்போதும் ஒரு  ஈர்க்கும் தன்மை உண்டு.ஒரு ஊரை,கடைத்தெருவை,வயலை,ஆற்றங்கரையை அவர் விவரிக்கும் பாணி தனி அழகு,அங்கே நாம் செல்ல வேண்டும் என்ற விழைவை தூண்டும் அளவிற்கு அழகு.இயற்கையில் நிகழும் நிகழ்சிகளின் வழியாகவே பாத்திரங்களின் மனவோட்டத்தை சொல்லும் திறமை,மரபை மீறின பெண்கள்,ஆங்காங்கே தூவப்பட்ட எல்லை மீறாத கிளுகிளுப்பு தன்மை- தி.ஜானகிராமனை படிக்க எப்போதும் அலுப்பதே இல்லை."செம்பருத்தி" அவரின் மாஸ்டர் பீஸ் நாவலில்லை ஆனால் மேல சொன்ன காரணங்களுக்காக படிக்க வேண்டியவை.

அன்புடன் 
நான்.


One Response so far.

  1. அன்புடையீர்.
    தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

- Copyright © துளி கடல் -