Archive for 2014

திரைப்படங்களில் அனிமேஷன்:ஒரு பார்வை


அனிமேஷன் படங்கள் என்றால் எல்லோருக்கும் தனிப்பிரியமும்,குழந்தைகள் போல இன்னும் குதூகுலமும்,அது எடுக்கப்படும் விதம் குறித்து அதன் மீது தீராவியப்பும், உண்டு.இன்றைய அனிமேஷன் படங்கள் வெறும் பொம்மைகளின் கேலிக்கூத்தாக இல்லாமல் தீவிர சினிமா  ரசிகர்கள் கூட  ஒதுக்கிப்போக முடியாமல்  உன்னதமான சினிமாவுக்கு உண்டான ஆழமான கதை,திரைக்கதை,வசனங்கள் போன்றவைகளுடன் ஒரு மாயையான உலகை ஒன்றரை மணி நேரம் மட்டும் உண்மையென நம்பவைப்பதர்க்கான அணைத்து  முயற்சிகளுடன்  எடுக்கப்படுகின்றது.இதனாலேயே அனிமேஷன் படங்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது மேலும்  நடிகர்களின் தேதிக்கு காத்திராமல்,கால்ஷீட் பிரச்சனை இல்லாமல் இயக்குனர்/தயாரிப்பாளர் தான் நினைத்தபடி படமெடுக்க களத்தில் இருக்கும் அதி நவீன அனிமேஷன் தொழிற்நுட்பங்கள் கைகொடுக்கின்றன. அதுமாட்டுமின்றி அனிமேஷன் படங்களுக்கென ஆஸ்கர் உட்பட பல பெரிய விருதுகளும் கொடுக்கப்படுகின்றது,இவ்வகை படங்களில் உரையாடலை  விட  காட்சிகளே  பிரதானம் என்பதால் பலநாடுகளில் மொழி பெயர்க்கப்படுகின்றது. 

சரி,இப்படி வளர்ந்து நிற்கும் அனிமேஷன் தொழிற்நுட்பத்தின் ஆரம்பம் தான் என்ன?

சராசரி மனிதக்கண்களுக்கு 12 அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட  பிரேம்களை (பிரேம் என்றால் போட்டோ எடுத்தது போல ஒரு  அசையாக்காட்சி) ஒரு நொடிப்பொழுதில் தொடந்து ஓட்டினால் அது ஒரு தொடர்காட்சியாக தெரியும்.கம்ப்யூட்டரால் தற்போது உருவாக்கப்படும் அனிமேஷன் படங்கள்  வருவதற்கு முன்பு ,காட்சிகள் எல்லாம் ஓவியங்களாக வரையப்பட்டு அது நொடிக்கு 15 frames ஓடவிடப்பட்டு  ஒரு நகரும் படமாக அதை கேமராவில் பதிவு செய்து கொள்வார்கள்.http://www.cinemateca.rg/movies/animation.htm, இதை Hand Drawn Animation என்பார்கள்.1920 களின் இறுதியில் எல்சி கிறிஸ்லெர் செகார்(Elzie Crisler Segar) உருவாகிய பாப்பை (popeye) பரவலான வரவேற்பை பெற்றது பின்னர் இதே துறையில் தோன்றிய டிஸ்னி சகோதரர்கள் சினிமா உலகில் மிகப்பெரிய இடத்தை பிடித்ததற்கு அவர்கள் உருவாக்கிய மிக்கி மௌஸும் அதை தொடந்து எடுத்த Snow white and seven dwarfs படங்கள் தான் காரணம்.இவர்களை போல பலர்  கார்ட்டூன் படங்களை  எடுக்க  முன்வந்ததால் MGM cartoon Studio வும்,Walt-Disney Studioவும் தொடங்கப்பெற்று நிறைய படங்களை,கார்ட்டூன் பாத்திரங்களை தயாரிக்கத்தொடங்கின.அதன் பயனாக டாம் & ஜெர்ரி,மிக்கி மௌஸ்,டொனால்ட் டக் என்று குழந்தைகளை கவரும்(ஏன் பெரியவர்களையும் தான்) வண்ணம் உருவாக்கப்பட்டு உலகளவில்  சினிமாவிலும், டிவியிலும்  பிரபலமாக தொடங்கியது  ஆரம்பகால அனிமேஷன்.

பின்னர் stop -motion  தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட "clay-toon" வகை கார்டூன்கள் உருவாகின.திரைத்துறைக்கு stop-motion என்பது புதிதல்ல 1900 களிலேயே பொது அமெரிக்க சினிமாக்களில் தொடங்கப்பெற்ற ஒரு தொழிற்நுட்பம் தான்,பழைய அமெரிக்க கருப்பு-வெள்ளை பிக்ஷன் படங்களில் வரும் காட்ஸில்லாவும், டைனோசர்களும்,கிங்காங்கும்,ஈவில் டெட் பேய்களும் ஏதோ வாதம் வந்தவர்கள் நகர்வதை போல் நகர்வதை காணலாம் அதற்க்கு காரணம் இந்த stop-motion வகை தொழிற்நுட்பம் தான். விட்டலாச்சார்யாவின் ஜெகன் மோகினி வகை பேய்  படங்கள் இது  போன்ற  காட்சிகளால் நிறைந்திருக்கும்.

அதே நுட்பம் கார்டூன் படங்களுக்கும் கொண்டு வரப்பெற்று "clay-toon" வகை படங்கள் உருவாகின,அதாவது ஒரு உருவத்தை(பொம்மையை போல)  செய்து   அதை அடுத்தடுத்த இடத்திற்கு இன்ச் இன்ச்சாக நகர்த்தி கேமராவில் பதிவு செய்து கொள்வார்கள். சாதாரண அனிமேஷன்  போல் அல்லாமல்  பார்ப்பவர்களுக்கு நகரும் படமாக தோன்ற இதில் கொஞ்சம் அதிகமான frame கள் ஓட்டப்படவேண்டும். இங்கிலாந்தில் தொடங்கப்பெற்று புகழ்பெற்ற Wallace and Gromit என்ற   தொலைகாட்சிதொடரை எடுத்த ஆர்ட்மான் (Aardman)  ஸ்டுடியோஸ்  தன்னுடைய  எல்லா படங்கள்,விளம்பரப்படங்கள்,  தொலைக்காட்சி  தொடர்களிலும்  இன்றுவரை Stop-Motion தொழிற்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி எடுத்து வந்திருக்கின்றன.இதற்க்கு மிகுந்த பொருட்செலவும்,நிறைய நுணுக்கமான வேலைகளை  கொண்டபடியால்  பொதுவாக யாரும் இதன் பக்கம் போவதில்லை(வெறும் 30 நிமிட காட்சிக்கு கிட்ட தட்ட 30,000 முறை உருவங்களை நகர்த்தி  ஷாட் எடுக்க வேண்டும்!) .கடைசியாக வெஸ் ஆண்டர்சன் இயக்கிய "Fantastic Mr.Fox" மட்டும் கார்ட்டூன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது,ஆஸ்காருக்கும் தேர்வானது.

பின்னர்  கம்ப்யூட்டர் என்ற எலக்ட்ரானிக் தெய்வம் கண்டுபிடிக்கப்பட்டு அது வணிக நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டபின்   சினிமா உலகம் அதை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டது எனலாம்.அதிலும் குறிப்பாக இந்த கம்ப்யூட்டர் அனிமேஷன் அல்லது சிஜி(computer Generated) திரைத்துறையில் செய்திருக்கும் புரட்சி மகத்தானது.பெரும் கட்டிடங்கள் சரிவதும்,நாடுகள் அழிவதும்,பீட்டர் ஜாக்சனின் படங்களில் வரும் சொர்க்கம் போன்ற நகரங்களை உருவாக்கவும்,அதிதத்ரூப போர்க்காட்சிகளையும்,சண்டை காட்சிகளையும்,ரோபாட்டுகளை  மனிதர்களை போல செயலாற்ற வைக்கவும், லட்சக்கணக்கான வருங்களுக்கு முன் அழிந்து போன டைனோசர்களும்,மம்மிகளும் உயிரோடு நம் கண்முன்னே நடமாட வைத்த CG என்னவென்று சொல்வது?

இப்போது பரவலாக  இருப்பது இந்த Computer animation வகை தான்.இதிலும் கண்களையும்,மூளையையும் ஏமாற்றும் அதே 24 Frames/Sec  வேலை தான்.  காட்சிக்கு தேவையான காடு,மலை,ஆறு,வீடுகள்,சாலைகள்,மனிதர்கள்  என்று அனைத்தையும் CGI ஆக கம்ப்யூட்டர் மூலம் வரைந்து கொண்டு, அதற்க்கு வடிவமும்,செயலும் செதுக்கப்படும்,குறிப்பாக மனிதர்கள்,விலங்குகள் தான்  CGIயின்  பிரதான   வேலை.பாத்திரங்கள் எலும்பும் சதையுமாக உயிர்ப்புடன் தெரிய எலும்பை போல குச்சியாக ஒரு  உருவத்தை  வரைந்து கொண்டு அதற்க்கு  சதை, தோல் எல்லாம் போர்த்தப்படும்(கம்ப்யூட்டரில் தான்), பின்னர் கைகால் அசைவுகளுக்கெல்லாம் அந்த உருவத்தின் உடம்பில் நிறைய புள்ளிகளாக குறிக்கப்பட்டு தேவையானபோது அது அசைவிக்கப்படும்.இதனை அவர்(Avar-animation Variable) என்பார்கள்,இந்த Avar இன் அளவுகளை மாற்றுவதன் மூலம் ஒரு நிலையான உருவத்தை நடக்கவோ,நகரவோ வைக்க முடியும். முகத்தின் அசைவுக்கும், பாவனைகளுக்கு மட்டும் இந்த அவர்(Avar) பாயிண்டுகள் நிறைய தேவைப்படும்.

1980 களின்  ஆரம்பத்தில் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் மட்டுமே இருந்த CGI தொழிற்நுட்பத்தை  வைத்து PIXAR நிறுவனம் "Toy story"  என்ற முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் அனிமேஷனால் உருவாக்கப்பட்ட முழுநீளபடத்தை எடுத்து மகத்தான வெற்றி கண்டு CGIயின் புரட்சியை தொடங்கியது. சினிமாவில்,டிவியில்,வீடியோ கேம்களில் பயன்படுத்தப்படும் CGI பற்றி படிப்புகளும் கூடின. சினிமாவில்  இந்த தொழில் நுட்பத்தை  பயன்படுத்தக் கூடிய வேலை வாய்ப்பு  பல்கிப்பெருகியது அமெரிக்க படங்கள் மட்டுமல்லாது இன்று  உலகில்  பல  நாடுகளின் ஆக்க்ஷன்,பாண்டஸி,கார்டூன் ஜானரில்  எடுக்கப்படும்  திரைப்படங்கள் CGIஐ மட்டுமே நம்பி வருகின்றன. அதுமட்டுமில்லாது சினிமாவில் தொழிற்நுட்ப மேதைகளான ஸ்பீல்பெர்கும், கேமரூனும்,பீட்டர் ஜாக்சனும் அது வரை இருந்து வந்த அடிப்படை அனிமேஷனில் திருப்தி அடையாமல், பார்வையாளர்களுக்கு  நம்பகத்தன்மையை  பெருக்கும் வண்ணம் புதிது புதிதாக பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டு இதை கூர்த்திட்டிக்கொண்டிருக்கிறார்கள்.இதற்க்கு அவசியமான மென்பொருளை உருவாக்கி தர மைக்ரோசாப்ட் உட்பட பல முன்னணி நிறுவனங்கள் தயாராக உள்ளன.

இந்த கம்ப்யூட்டர் அனிமேஷன் தொழிற்நுட்பத்தில் மிக முக்கிய வகையான Motion-Capture டெக்னாலஜியை பற்றி அவசியம் சொல்லியாக வேண்டும்-பாண்டஸி படங்களில் அகோர முகம் கொண்ட மனிதர்கள்,பேசும் விலங்குகள்,பாதி சிதைந்த மம்மி போன்றவைகளுக்கெல்லாம் மனிதர்கள் போல முகஅசைவும்,செயல்பாடுகளும் எப்படி வருகின்றன?ஒரு நடிகரை தேவையான காட்சிகளில் நடிக்க வைத்து அவரது முக பாவனைகளை, செயல்கள், நுணுக்கமான உடல் மொழியை கேமராவால்  பதிந்து  கொண்டு  அதை கம்ப்யூட்டரால் உருவாக்கப்பட்ட உருவத்திற்கு பொருத்துவதுதான் Motion-capture technology. சில இடங்களில் தேவைப்பட்டால் அந்த  அனிமேஷன் பாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் நடிகரின் முக அமைப்பை/பாவனைகளையே  கூட   (Motion-Capture) முறையில் பயன்படுத்திக்கொள்வார்கள்."The Mummy" படத்தில் வரும் மம்மி,Lord of the Ring ல் வரும் கோலும்(gollum) ,pirates of caribbean 2 படத்தில் வரும் டேவி ஜோன்ஸ் பாத்திரம்  (POC-2 மிகப் பெரிய வெற்றி அடைந்ததற்கு காரணமே அந்த பாத்திரம் தான் என்கிறார்கள் விமர்சகர்கள்) இதற்க்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இதே performance-capture டெக்னாலஜியின் உச்சகட்டம் தான் 2009ல் வெளிவந்து உலகெங்கும் பெரும் வெற்றி பெற்ற அவதார்.1995 லேயே கதையை தயார் செய்து வைத்துக்கொண்டு அப்போதிருந்த அனிமேஷனில்  திருப்தி அடையாமல் தொழில்நுட்பவளர்சிக்காக காத்திருந்தார் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். எடுக்கப்படப்போகும் படம் அனிமேஷனாக இருந்தாலும் அவை மிகவும் துல்லியமாகவும், நிஜத்தை ஒத்ததாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் தன்னுடைய குழுவினருடன்/கேமராமேன் வின்சென்ட் பேசுடன் பல பரீட்சித முயற்சிகள் மேற்கொண்டு இறுதியாக  மனிதக்கண்களுக்கு  நிகரான ஒரு 3-D கேமராவை கண்டுபிடித்தார் (Pace/cemaron fusion camera).இந்த கேமராவின் லென்சுகள் மனிதனின் இருகண்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை விட நெருக்கமாக இருக்கும் இதனால் நம் கண்களை போலவே கிட்டத்தில் இருக்கும் பொருட்களை  தெளிவாக பார்க்கவும் உடனே தூரத்தில் இருப்பவைகளை மையப்படுத்தி பார்க்கவும் உதவியது.அதோடு நடிப்பவர்களுக்கு சென்சார்களுடன் கூடிய விசேஷ  உடை அணிவிக்கப்பட்டு டைரக்டரின் கையில் இருக்கும் கேமராக்கள்   மனித அசைவுகளை விட்டு அந்த  சென்சார்களின் அசைவுகளை  மட்டுமே பதிவு செய்து கொள்ளும்.

மற்ற அனிமேஷன் பட பாத்திரங்களை விட அவதார்-நா'வி கிரகத்து மக்கள் தனித்து நிற்ப்பதற்கு ஒரு காரணம் முகத்தின் அசைவுகளை படம்பிடிக்கும் ஸ்கல் கேமரா(skull camera) கண்களை நுண்ணிய அசைவுகளை அதிகம்  கவனித்து  பதிக்கும்படி இருந்ததால் அந்த பாத்திரம் மிகவும் உயிர்ப்புடன் திரையில் தெரிந்தது.மேலும் முன்பிருந்த அனிமேஷன் தொழிற்நுட்பத்தில் நடிகர்களின் நடிப்பை கேமராவில் பதித்து அதை கணினியின்  மூலம் கார்டூன் பாத்திரங்களின் மீது ஏவி ஒழுங்கமைக்க(Rendering) ரொம்ப நாட்கள் பிடிக்கும் ஆனால் அவதார் அப்படி எடுக்கப்படவில்லை-மனிதஅசைவுகளை கேமராவில் படம் பிடிக்க பிடிக்கவே அதை கணினி உடனடியாக காட்சிகளாக எடுத்து துப்பும்(இதனை ப்ராசஸ் செய்ய 1 கிலோமீட்டர் சுற்றளவுள்ள சர்வர் ரூமில் 10,000 ப்ராசஸர்களும்,கிட்டத்தட்ட 32,00,000 GB மெமரியும் தேவைப்பட்டது).இதனால் தவறுகளை உடனடியாக திருத்திக்கொள்ளவும்,திருப்தியில்லா காட்சிகளை உடனடியாக மாற்றவும் முடியும்.இந்த லிங்கில் உள்ள வீடியோவில் 3:12 இல் இருந்து பாருங்கள்ஸ்பீல் பெர்க் "அவதார்" படத்தின் மிக அதிநவீன தொழில் நுட்பத்தை கண்டு வியந்து அதை பீட்டர் ஜாக்சனின் WETA(ஸ்டுடியோ ) உதவியுடன்  தன்னுடைய முழு நீள அனிமேஷன் படமான "The Adventures of TinTin" , படத்தில் பயன்படுத்தி வெற்றி கண்டார்.மேலே சொன்ன அதே பாணியில் நடிகர்களின் நடிப்பை,செயலை படம்பிடித்து அதை அந்த கார்டூன் உருவத்தின் மீது பதிவு செய்து அதை ஒரு டிஜிட்டல் சூழலில் பொருத்திவிடுவார்கள் (திரைக்கதைக்கு ஏற்றார் போல அந்த பாத்திரம் காரில் பறப்பது,மலைகளில் தாவுவது போல) . இந்த வீடியோவை (https://www.youtube.com/watch?v=5OGWPtaUOok) பாருங்கள் Motion-Capture Technology ஐ பற்றி தெளிவாகப்புரியும்.

நடிகர்களின் கால்ஷீட் பிரச்சனை,இயக்குனர் தான் நினைத்த கதையை எந்த இடருமின்றி தன் விருப்பம் போல எடுக்க,லொகேஷன் என்ற பெயரில் அலையவேண்டி இல்லாமல் நினைத்த மாதிரியான உலகத்தை CG மூலம் உருவாக்கலாம்.வருங்காலத்தில் எல்லா படங்களும் இது போலவே வந்தால் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை, நடிகர்களின்  நடிப்புத்திறனை கூட கிராபிக்ஸ் உதவியால் செம்மைபடுத்திவிடலாம்-(தமிழுக்கு அவசியம் தேவை!).

சினிமாவில் அனிமேஷன் கிராபிக்ஸ் தேவை அதிகமாகி விட்டது அதனால் அந்த தொழிற்நுட்பமும் அபரீதமாக வளர்ந்து  கொண்டே  போகின்றது.எந்தவொரு துறையை மெருகேற்ற புகுக்கப்படும் எந்தவொரு தொழிற்நுட்பமும் வரவேற்று போற்றப்படவேண்டியது தான் இல்லையா?

எனது இந்தக்கட்டுரையை திண்ணை இதழில் பதிப்பித்த ஆசிரியருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
நான்.


அளவிலாக் காதல்:பரிசு ஒன்றை கேள்அத்தியாயம் 5
பரிசு ஒன்றை கேள்

ஊர் பஸ் ஸ்டாண்ட்,மசமசப்பானதொரு காலை நேரம்
அந்த வேகாத வெயிலிலும்,கசகசப்பிலும்,கூட்ட மிகுதியிலும் நீ மட்டும் திருஷ்டியை போல்,நீர்ப்பரப்பின் மீது வீசும் தென்றலை போல நடந்து வந்தாய்.நெருங்கி வந்த போது,ஒரு புன்னகையை அணிந்து கொண்டு ஏறிட்டாய்.
"பிறந்த நாள் வாழ்த்துக்கள்." என்று கைகளை பிடித்து குலுக்கினேன்.
"அப்பாடா...காலையிலிருந்து யார் யாரோ சொன்னார்கள் ஆனால் நீ சொன்னதை தான் முதலில் கேட்கவேண்டுமென இப்போது தான் காதை திறக்கிறேன்!"
"உடனே கிளம்புவோம் அப்போதுதான் சாயங்காலத்திற்குள் திரும்பி,உன்னை வீட்டில் கொண்டு சேர்க்க முடியும்,என்ன சொல்லி சமாளித்து வந்தாய்?" 
"எப்படியோ...உன்னை பார்க்க கிளம்ப வேண்டுமெனில் ஏதோ ஒரு பொய் வாயில் வருகிறது,அது பொருத்தமாகவும் அமைந்துவிடுகிறது"
-----------
 கூட்டமே இல்லாத பஸ்ஸில் ஏறி சீட்டில் அருகருகே உட்கார்ந்த போது,ஏதோ அரியணை ஏறும் ராஜாவை போல் கெத்தாக இருந்தது. 
நீ பேசத்தொடங்கி இருந்தாய் 
ஆனால் நான் எங்கே?
தேடுகிறேன்.....
இதோ!
எப்போதாவது சேர்ந்து கொள்ளும்
பேரை பெற்ற நம் தோள்கள்,
ஆடை மூடாத இடங்களில்
தொட்டுக்கொண்டு தீப்பிடிக்கும் கைகள்,
உரசி,பின் விலகிக்கொள்ளும் கால்கள்.
பறந்து பறந்து என் முகத்தில் விழுந்து
கூசச்செய்யும் உன் கற்றை கருங்கூந்தல்
என் மடி மீது உரிமையாய் கிடக்கும்
உன் ஆடைப்பகுதி.
இவற்றுக்கிடையில் நான் இன்பமாய் சிக்கிக்கிடந்தேன்.
உன் அண்மை,
ஊசியால் செலுத்தப்படும் கஞ்சா,அபினை போல்
கொஞ்சம் கொஞ்சமாக என்னை நினைவிழக்க வைத்துக்கொண்டிருந்தது. 
நீ பேசுவதெல்லாம் வெறும் வாயசைவாகவே காதில் விழுந்தது!
என் நிலைமை புரியாமல் பேசிக்கொண்டே இருக்கும் உன் மீது கோபம் வந்தது!

"இல்லையா?" என்ற கேள்வியுடன் நீ முடிக்கும் போது மாட்டிக்கொண்டேன்.
"உண்மையில் நான் இங்கு இல்லவே இல்லை"
"ஹும்..அப்போ நான் பேசியது?"
உன் பேச்செல்லாம் எனக்கு தேவையில்லை,கொஞ்சம் பேசாமலிரு!உன் ஸ்பரிசம் படும் போது என் காதுகள் செவிடாகி போகின்றன.
இன்றைய நாளை இப்படித்  தான் கழிக்க போகிறோம் என்று முடிவு செய்த பின்,இப்படி நீயும் நானும் அருகருகே அமர்ந்திருக்கும் காட்சி..அங்கே இங்கே நீங்காமல்-நீங்கமுடியாமல் இப்படி பக்கத்தில் இருக்கும் காட்சி-கட்டாய இருத்தல் தான் தினம் தினம் நினைவில் வந்தது.
"என்னை எங்கே கூடீட்டு போறியாம்?"
"போறோம்...பஸ் ஸ்டாண்ட்ல எறங்கறோம்,எதையாவது வயிற்றுக்கு போட்டுக்கொண்டு மறுபடியும் பஸ் ஏறுவோம்,ஊருக்கு 
திரும்ப வரோம்.இருக்கிற நேரம் அவ்ளோதான்....அப்புறம் உனக்கு எதாவது நான் வாங்கி தருவேன்..என்ன வேணுன்னு கேள்?"
"இப்படி அள்ளி அணைத்துக்கொள்ளும் தூரத்தில்..
கண்கொள்ளாக்காட்சியாக நீ இருக்கையில்..
கண்ணுக்கு தெரியாத சங்கிலியில் என்னை பிணைத்துக்கொண்டிருக்கையில்....
உன் வாசனையை சுவாசித்துக்கொண்டு  இருப்பதை விட
என்ன கேட்டு விடப் போகின்றேன்?
"இந்த நாஸ்டால்ஜியா டைலாக் எல்லாம் வேண்டாம் ......எதாவது கேக்கணும்...கேட்டு அடம் பிடித்து,தொல்லை செய்து,
கொஞ்சமாய்  எரிச்சல் மூட்டி என்னை முறைக்க வைத்து,ஏதாவது ஒன்றை கேட்டு வையேன் .......கேளேன்"
"மாட்டேன்......உனக்கு வாய்த்த நான் அப்படி தான்னு வச்சிக்கோயேன்.....எனக்கு நீ மட்டும் தான் தெரிவாய்....உன்னை சுத்தி இருப்பவையெல்லாம் எண்ணை காகிதத்தின் வழியாக பார்ப்பது போல் மங்கலாய் தான் தெரியும்"

பிறந்த நாள் பரிசு ஒன்றை 
நான் கேட்டே ஆகவேண்டுமென்கிறாய் நீ.

உன்னையே நான் 
என்னிடத்தில் வைத்திருக்கிறேன்.
அதை விட சிறந்த பரிசு ஒன்றை-முடிந்தால் 
கொடேன் பார்ப்போம்?
"முதன் முதலில் பார்த்த போது எப்படி இருந்தாய் நீ.....ஊமை பிள்ளையை போல்!
காதல் ரொம்ப பேச வைக்கிறது உன்னை" என்றேன். 
--------------------
பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்த போது,ஜனங்கள் வாலில் தீப்பற்றிக்கொண்ட மாதிரி ஓடிக்கொண்டிருக்க நீயும்,நானும் மட்டும் ஏதோ குளிர் பிரதேசத்து சுற்றுலா பயணிகள் போல மெதுவாய் நடந்தோம்.முதன் முதலில் நீ என்னோடு தனியாக இவ்வளவு தூரம்,இவ்வளவு நேரம்...அந்த நினைப்பே இனித்தது.

உன் கையை பிடித்து பொதுவில் நடக்கும் போது,
அழுக்குடை டிரைவர்கள்,
நொண்டிப்பிச்சைகாரன்,
பழக்கூடை சிறுமி,
ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்
இன்னும் உலகின் எல்லா மனிதர்களையும் 
ஒவ்வொருத்தராய் கூப்பிட்டு சொல்ல வேண்டும் போல் இருந்தது,
இதோ இந்த பேரழகி தான் என் காதலி,என் உயிர்,என் எல்லாமும்.
இவள் எனக்காகவே பிறந்தவள்,
எனக்காக மட்டும் பிறந்தவள்.
இவள் காற்றை போல்,
என் உள்ளும் இருக்கிறாள்,புறமும் இருக்கிறாள்.
இவள் என்னை நம்பி,என்னோடு கை கோர்த்து வீதியில் நடக்க...
இனம்புரியாத பெருமை,விளங்காத்திமிர்
காதலுக்கே உரிய திமிர்.

வில்லியம்ஸ் ரோட்டில் நடந்து,கண்டோன்மென்ட் வரை வந்து விட்டோம்,பேச்சுப்போக்கில்.
நாமிருவரும் சேர்ந்து நடக்கையில்
நீ வலது காலை முன்னெடுத்து வைக்கையில்
நான் இடது காலை எடுத்து வைப்பேன்.
ஏன் தெரியுமா?
அப்பொழுது தான்
ஒவ்வொரு அடி வைத்தலுக்கும்
நம் தோள்கள்
சாய்ந்து,நெருங்கி,உரசி,விலகும்
===================
வழியில்...
குப்பலான உடைகளுடன்,குச்சி கைகால்களுடன்,ஒடுங்கிய முகத்துடன் ஒரு பிச்சைக்காரப்பெண்,பசிக்கிறதென காசு கேட்டாள்.மூன்று நான்கு நாள் சாப்பிடாததன் தாக்கம் அவள் கண்களில் தெரிந்தது.
" ஏதாவது வாங்கிக்கொடுத்தால் சாப்படறிங்களாம்மா ?" என்று கேட்டு,கையோடு அந்த பெண்ணை அழைத்துக்கொண்டாய்,ஹோட்டலில் காவலாளி தடுத்தபோது "என்னோடு வந்திருக்காங்க" என்று தயக்கமின்றி சொன்னாய்.பணியாளன் அந்தப்பெண்ணை வேரிடத்தில் அமர வைத்தபோது "அவங்க என்ன கேட்டாலும் கொடுங்க" என்று விட்டு,என்னெதிரே வந்து அமர்ந்து கொண்டு "ச்ச...ரொம்ப பாவமில்லை?" என்றாய்.வைத்த கண்ணெடுக்காமல்,பேச்சில்லாமல் தலையாடினேன்.
----
கழுவிய தட்டை மீண்டும் ஒரு முறை கழுவி தந்தாய்.....நீ சாப்பிடுவதை விட்டு நான் சாப்பிடுவதையே நிறைய நேரம் கவனித்துக்கொண்டிருந்தாய்...சரிந்து விழும் கை வளையல்களை அடிக்கடி உன் தந்தக்கைகளில் ஏற்றிக்கொண்டபடியே நறுவிசாக உணவை எடுத்து வாய் பிளந்து ஊட்டிக்கொண்டாய்.....
"எப்படி அதை செய்யத் தோன்றியது உனக்கு...பணமிருந்தால் கூட அதை செய்ய ஒரு மனது வேண்டும்... நானும்  எப்போதாவது  சில்லறையை வீசி எறிவதுண்டு...பைசா இல்லாத போது வேறு பக்கம் திரும்பிக்கொள்வேன்"
"ஒரு நாள் முழுக்க சில்லறை சேர்த்தாலும் அவர்கள் ஒரு வேளை தானே சாப்பிட முடியும்....நம்மால் செய்ய முடிந்த உதவி,ரொம்பச்சாதாரண உதவி..ஒரு வேளை உணவு.....எல்லாருக்கும் இதையே செய்ய, இதை தொடர்ந்து செய்ய நாம்  இன்னும்  மகான்களாக ஆகவில்லை ஆனால் பசியென்று கேட்டு வந்தபின் அவர்களை கண் கொண்டு பார்க்க முடிகிறதா? எனக்கு தாங்காதுப்பா"  

இதனை நாள் சதையும் ரத்தமுமான ஒரு பெண்ணை நேசித்து,பித்து பிடித்து அவள் பின்னால் அலைவதாக நினைத்துக்கொண்டிருந்தேன்,அது தவறு....நான் நேசிப்பது ஒரு தேவதையை.
வெளியில்  வந்த  போது ஜனங்களை  ஜாதி,மதம் பார்க்காமல் வெயில் வாட்டிக்கொண்டிருந்தது.
 ----
"ஏதாவது கேளேன்" என்றேன்.
"கேட்கட்டுமா..நான் உன்னிடமிருந்து எதிர்ப்பார்ப்பதை?"
"கார்,பஸ்,வண்டிகள்,ஜனங்கள்,கூட்டம்,கடைத்தெரு-இவை நம் மூளையில் இருந்து கழண்டகல்வது போல என்னை இறுக்கிக்கட்டிக்கொள்ளேன்,இரண்டு  நிமிடம் கழித்து விட்டு விலகினால் போதுமானது.
"செய்யட்டுமா?" நெருங்கி வந்தேன்.
"ரொம்ப தைரியம் தான்" நெஞ்சில் கைவைத்து தள்ளி விட்டாய்.."தப்பு....இவ்வளவு பக்கத்தில் வரவே கூடாது"
"ஏதாவது கேளேன்...உண்மையாக...கெஞ்சுகிறேன் அல்லவா?"
"உலகின் சிறந்த பரிசுகள் எதுவும் விலை கொடுத்து வாங்கப்பட்டதில்லை"
"தெரியும்.ஆனால் இந்த நாளை,உன் பிறந்த நாளை நாள்காட்டியில் பேனாவால் வட்டமிட்டு குறிப்பது போல்  போல் ஏதேனும் ஒரு பொருளால் குறித்துக்கொள்வோமே!"
"அச்சோ.... ரொம்பக்கெஞ்சாதே நீ என்னிடம்.....இதை எடுத்துக்கறேனே"
தங்கநிறத்தில்,லேசான பூ வேலைப்பாடுகளுடன் கூடிய மரத்தாலான ஒரு போட்டோ ப்ரேம்.வாங்கி கையிடுக்கில் வைத்துக்கொண்டாய்.
"இதென்னதுக்கு?நம் படங்களை மாட்டி வைத்துக்கொள்வாயா? உன் வீட்டில் அதுவும் முடியாதே?,பிரச்சனை ஆகுமே?!"
"இல்லை இதை காலியாகவே மாட்டி வைத்துக்கொள்வேன்,என் உளச்சிந்தனையை பிரதிபலிக்கும் உன் முகம் உள்ளே இருப்பதை போல் கற்பனை செய்து கொள்வேன் நேரத்திற்கு தகுந்தாற்போல...அது போதுமே"
பணம் கொடுத்து நடக்கும் போது  கேட்டாய் "இதுவரை சிறந்த பரிசாக எதை நீ நினைக்கிறாய்?"
"ஒரு திருமண விழா,அங்கே உன்னை காணும் ஆவலில் ஒளிந்து ஒளிந்து உன் பின்னேயே  வந்து  கொண்டிருந்தேன், அப்போது உனக்கு அது தெரியாது.திடீரென நீ ஜனச்சந்தையில் மறைந்து போனாலோ,அல்லது  நான் உன்னை தவறவிட்டாலோ வலியெடுக்கும் நீ மறைந்த அந்த நொடிகள் தாளாத  தாகத்தை ஏற்படுத்தும்....இன்று வரையில் நீ எனக்கு  தந்த மிகச்சிறந்த பரிசு அந்த வலி தான். 
-----
ஜுரம் வந்த முதியவன் போல அந்த பஸ் கூட உன் ஊரை நோக்கி மெதுவாய் தான் நகர்ந்தது.
"இன்றைக்கு முழுதும் சந்தோஷமாக இருந்தியா?"
"என்ன கேள்வி இது? நீ என்னருகில் இல்லாத போது,உன் நினைவுகள் ஒன்றே அளவில்லா சந்தோஷத்தை தரும்,சில நேரங்களில் யாராவது என்னிடம் பேச முனைகையில், நான் அவர்களுக்கு  பதிலளிக்க  வேண்டிய கட்டாயத்தில்  உன்  நினைவுகள்  தடைபடும்...அப்படி எந்தத்தொல்லையும் இல்லாமல் இன்று முழுவதும் குரங்கு குட்டியை போல என்னை சுமந்து அலைந்து  கொண்டிருந்தாய்...பின்னே?அதுவுமில்லாமல் உன்னுடைய ஒவ்வொரு செயலையும் உன் மீதான பார்வையை நொடி கூட விலக்காது எவ்வளவு ரசித்தேன் தெரியுமா?

உன்னுடைய எல்லா செயலிலும் 
நான் ரசிக்கும் நீ 
தெரிந்து கொண்டே இருக்கிறாய்.

இன்று எத்தனை முறை
பார்த்து நட,பார்த்து வா,பார்த்து இறங்கு-என்று
என் மீது அக்கறை காட்டினாய்
என்பதை எண்ணத்தொடங்கி
எண்ணிக்கை விட்டுப்போனது.

சாலையை கடக்கையில்
என்னை சிறுமியென ஆக்கி-தோள்களை பற்றி
பதற்றமாய் இழுத்துச்சென்றாய்.

பக்கம் பக்கமாய் நடக்கையில்
போக்குவரத்து இல்லா பக்கம்
என்னை நடக்க வைத்தாய்,
ஏதாவது இடித்தாலும்
உன்னை இடிக்கட்டுமென்று.

இதோ இப்போதும் கூட
ஒவ்வொருமுறையும்
பேருந்து அதிர்ந்து குலுங்குகையில்
அனிச்சை செயலாய்-என்னை
பாதுகாக்கும் பதற்றம்
தோன்றுகிறது உன்னில்.

இன்று முழுக்க நீ  

என்னை நெருங்கவுமில்லை.
என்னை விட்டு விலகவுமில்லை

இருட்டத்தொடங்கியது.பேருந்து வெளிச்சம் நெடுஞ்சாலை புளியமரங்களின் மீது பட்டுத்தெறித்து அடுத்த மரம் அதற்க்கடுத்தது என்று தாவியோடியது. விளையாட்டு போல நானும் அதை தொடர்ந்தேன்.நீ என் தோள்  மீது சாய்ந்து கண்களை மூடியிருந்தாய்.இன்னும் சில மணி நேரங்களில் உன்னை பிரியும் வலியை  மறைக்க நான் என் விளையாட்டை தொடந்தேன்.

பேருந்து இப்போது வேகமெடுத்திருந்தது.  


அன்புடன் 
நான் 

Headhunters(2011): எலி-பூனை துரத்தல்:த்ரில்லர் சினிமாHeadhunters என்பவர்கள் யார்? பெரும் தொழிற்ஸ்தாபனங்கள்,பன்னாட்டு நிறுவங்களுக்கு தேவைப்படும் திறமையான உயர் அதிகாரிகளை (CEO) கண்டறிந்து தேர்வு செய்து  தனிப்பட்ட நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுப்பவர்கள்.(ஆனால் படத்திற்கு இப்பெயர் வைக்கக்காரணம் இது மட்டுமல்ல)  .

ரோஜர் ப்ரௌன் (Askel Hennie) ஒரு Headhunter பணக்காரனாக வாழவும்,பலகோடி பங்களாவில் வாசிக்கவும் தன்னுடைய  மனைவி  டயானா  ப்ரௌனை(Synnøve Macody Lund)  சந்தோஷப்படுத்த அவள் நடத்தும் ஆர்ட் கேலரிக்கு,நகைக்கு செலவு செய்ய திருடுகிறான். தன்னுடைய வேலையின் நிமித்தமாக  பணக்கார   நிர்வாகிகளை சந்தித்து உரையாடும் அவன் அவர்களிடம் இருந்து , அவர்கள் வீட்டில்  இருக்கும்  ஓவியங்கள்  தொடர்பான விபரங்களை  கறந்து கொள்கிறான்(திறம்பட பேசுவதே தானே அவன் வேலையே).விலையுயர்ந்த அந்த ஓவியங்களுக்கு போலி ஒன்றை தயார் செய்து வீட்டுக்காரன் இல்லாத சமயத்தை கணக்கிட்டு செக்யூரிட்டி கம்பெனியில் வேலை செய்யும் ஓவெ-(இவனது வேலை ப்ரௌன்  வீட்டினுள் நுழையும் சமயம் அங்குள்ள செக்யூரிட்டி கேமராக்களை தற்காலிகமாக செயலிழக்க வைப்பது)  என்பவனுடன் சேர்ந்து அசலை மாற்றி வைத்து திருடுகிறான்.

ப்ரௌனின் மனைவி டயானா பிள்ளை பெற்றுக்கொள்ள நினைக்கிறாள் ஆனால் அதில் அவனுக்கு விருப்பம் இருப்பதில்லை,அது சம்பந்தமாக அவர்களுக்குள்ளே அடிக்கடி சண்டை நிகழ்கிறது.மேலும் பிரௌனிற்கு லோட்டே(Lotte) என்ற பெண்ணுடனும் தொடர்பு உண்டு.ஒரு முறை டயானா,தன்னுடைய ஓவியக்கண்காட்சியின் போது பெரும் பணக்காரனான க்ளாஸ் கிரேவே(Nikolaj Coster) என்பவனை ரோஜர் பிரௌனிற்கு அறிமுகப்படுத்துகிறாள்.பாத்பைண்டர் (pathfinder) என்ற கம்பெனிக்கு CEO தேவை இருக்கிறது அதற்க்கு  இவர் பொருத்தமாக இருப்பார் என்று கூறி,க்ளாசை  தனியாக சந்தித்து  உரையாடுகையில் அவனிடம் பீட்டர் பால் ருபென்ஸ்(http://en.wikipedia.org/wiki/Peter_Paul_Rubens) என்ற புகழ் பெற்ற ஓவியர் வரைந்த விலை உயர்ந்த ஓவியம் ஒன்று இருப்பதை தெரிந்து கொள்கிறான்.

சரியாக திட்டமிட்டு க்ளாஸ்  இல்லாத நாளில் அவனது வீட்டிற்க்கு சென்று எப்போதும் போல ஒவியத்தை மாற்றுகிறான். பின்னர் அங்கிருந்து விலக எத்தனிக்கும்  பிரௌனிற்கு ஜன்னலருகே ஏதோ சத்தம் கேட்கிறது,போய் பார்க்கையில் வீதியில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.தன மனைவி குழந்தை பெறுவதை பற்றி பேசியதை நினைத்தவனாக அவன் மனைவியின் செல்போனை தொடர்பு கொள்ள முயல்கிறான்.....அது கிளாசின்  வீட்டு படுக்கை அறையில் ஒலிக்கிறது!தன்னுடைய மனைவிக்கும் அவனுக்கும் தொடர்பிருப்பது தெரிந்து நொந்தவனாக வீட்டிற்க்கு  வருகிறான்.அடுத்தநாள் ரோஜருடன் பணி புரிந்த ஓவெ அவனுடைய வீட்டில், அவனுடைய காரில் இறந்து கிடக்கிறான்,அவனை ஏரியில் வீசப்போய் அவன் உயிரோடு இருப்பது தெரிந்து அவனது வீட்டிற்க்கு கொண்டு செல்கிறான்.அங்கே க்ளாஸ் துப்பாக்கியுடன் வருகிறான்,அவனிடம் இருந்து தப்பி ப்ரௌன் ஓடத்தொடங்குகிறான்....அங்கே ஆரம்பித்து படம் முடியும் வரை இந்த ஓடல்-துரத்தல் நாடகம் தொடர்கின்றது அசாத்தியமான வேகத்துடன்,புதுவகையான காட்சியமைப்புகளுடன்.

க்ளாஸ் பணக்காரன் மாத்திரமல்ல,ராணுவ உளவாளியாக இருந்து பின் பதவி விலகியவன்.ராணுவத்திற்கு தேவையான பல ஆயுதங்களை தன்  முயற்சியில் கண்டுபிடித்தவன்,மிகவும் திறமைசாலி.இப்போது கிளாஸ் ஏன் ப்ரௌனை கொல்ல முயற்சிக்கிறான்?அவனுடைய விலையுர்ந்த ஓவியத்தை திருடியது தெரிந்து விட்டதா இல்லை டயானா மீதான மோகத்தாலா?அல்லது வேறு காரணம் எதாவதா?ப்ரௌன் தப்பிக்க ஒவ்வொரு ஊராக செல்லும் போது சரியாக அவனை தேடி க்ளாஸ் வருவதெப்படி?(இதற்க்கு க்ளு மேலே காணும் போஸ்டரில் இருக்கிறது),இதற்க்கு ப்ரௌனின் மனைவியும் டயானாவும் உடந்தையா?பிரௌனின்  காதலி  லோட்டே, உண்மையில் யார்? இப்படி எல்ல கேள்விகளுக்கும் உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டே ப்ரௌன் விடையை கண்டறிகிறான்.

த்ரில்லர் படங்கள் எல்லாம் மேஜிக் ஷோவை போல இருக்க வேண்டும்.முதலில் ஒன்றை காட்டி பின் அதை மறையவைக்க வேண்டும்,பின் அதை மீண்டும் தோன்ற வைக்க வேண்டும்.Headhunters இதை சரியாக செய்கிறது.ரோஜர் ப்ரௌன் ஒரு பெரும் அபாயத்தில் சிக்கி சாகும் அளவிற்கு போகிறான் பின் அதிலிருந்து மீண்டு,நிதானமாய் நிறைய யோசித்து தான் சிக்கிக்கொண்ட தளைகளை ஒவ்வொன்றாய் அகற்றுகிறான்.தன்னை சிக்க வைத்தவனை கிடுக்கிப்பிடியில் சிக்க வைக்கிறான்.அமெரிக்க வகை த்ரில்லர்களில் காணப்படும் மிகத்திறமையான சேஸிங்,நெருப்பை கக்கும் வெடிகுண்டு காட்சிகள்,தேவையில்லாத கிராபிக்ஸ் கிறுக்குத்தனங்கள் எதுவுமில்லை வெறும் இயல்பான காட்சிகளாலேயே,அதன் வேகத்தாலேயே, நடிகர்களின் நடிப்பாற்றலாலேயே  நாற்காலியின் நுனிக்கு கொண்டுவரும் படம்.

படத்தில் முக்கிய பாத்திரங்கள் மூன்று தான்-பிரவுன்,அவன் மனைவி டயானா,க்ளாஸ்.அதிலும் ரோஜர் பிரௌனாக நடித்திருக்கும் அக்சல் ஹென்னி யின் நடிப்பு அபாரம். ஆரம்பத்தில் வித்தகராக, புத்திஜீவியாக வருபவர் பின் மலத்தில்  புரண்டு, மலையில் இருந்து விழுந்து நம்மை பரிதாபம் கொள்ள  வைத்து,பின்னர் வேறு ரூபம் எடுக்கிறார். இவர் ஹாலிவூட் காரர்கள் கண்ணில் படாமல் இருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்.ஏனென்றால் அவரவர்களுடைய மொழியில் நன்றாக நடித்துக்கொண்டிருக்கும் ஹீரோக்களை "உலகப்புகழ்" ஆசையில் கூட்டி வந்து நாலு கை,மூன்று கண் மிருகத்தை சுடச்சொல்வார்கள் (உ.ம் A bitter Sweet Life படத்தில் நடித்த பயுங் ஹன் லீ என்ற அற்புதமான நடிகரை கூட்டிவந்து இதைத்தான் செய்யவைத்துக்கொண்டிருக்கிறார்கள்-நம்மூரிலும் இது உண்டு உ.ம் சாயாஜி ஷிண்டே,ஆஷிஷ் வித்யார்த்தி)

"ஹார்ட் இன் மௌத்" என்பார்களே அப்படி ஒரு படம் ஜோ லெஸ்போ எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட "Headhunters".

படத்தின் ட்ரைலர்

அன்புடன்
நான்.

செல்பேசி:கவிதை (இணையத்தில் வெளியானது)
http://www.tamilauthors.com/03/562.html

செல்பேசி 

இந்த
விடுமுறை
நாட்களை
ஏதாவது ஒரு
மலை காட்டுப்பக்கம்
செலவிடலாமென
அலுவலக நண்பர்கள் கூடி
இடத்தை
முடிவு செய்தோம்.
-
"அங்கே செல்போன்
டவர் கிடைக்குமா?"
என்று ஒருவன் 
சந்தேகக்கேள்வி எழுப்ப,
உடனடியாக
பயணம்
கைவிடப்பட்டது!

அன்புடன்
நான்.

அச்சச்சோ மழை:கவிதை"அச்சச்சோ மழை"
என்று பதறியபடி
நீ  
வீட்டிற்க்குள் ஓடினாய்.
அத்தோடு
நின்று விட்டது
மழை!

அன்புடன்
நான்.

- Copyright © துளி கடல் -