Headhunters என்பவர்கள் யார்? பெரும் தொழிற்ஸ்தாபனங்கள்,பன்னாட்டு நிறுவங்களுக்கு தேவைப்படும் திறமையான உயர் அதிகாரிகளை (CEO) கண்டறிந்து தேர்வு செய்து  தனிப்பட்ட நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுப்பவர்கள்.(ஆனால் படத்திற்கு இப்பெயர் வைக்கக்காரணம் இது மட்டுமல்ல)  .

ரோஜர் ப்ரௌன் (Askel Hennie) ஒரு Headhunter பணக்காரனாக வாழவும்,பலகோடி பங்களாவில் வாசிக்கவும் தன்னுடைய  மனைவி  டயானா  ப்ரௌனை(Synnøve Macody Lund)  சந்தோஷப்படுத்த அவள் நடத்தும் ஆர்ட் கேலரிக்கு,நகைக்கு செலவு செய்ய திருடுகிறான். தன்னுடைய வேலையின் நிமித்தமாக  பணக்கார   நிர்வாகிகளை சந்தித்து உரையாடும் அவன் அவர்களிடம் இருந்து , அவர்கள் வீட்டில்  இருக்கும்  ஓவியங்கள்  தொடர்பான விபரங்களை  கறந்து கொள்கிறான்(திறம்பட பேசுவதே தானே அவன் வேலையே).விலையுயர்ந்த அந்த ஓவியங்களுக்கு போலி ஒன்றை தயார் செய்து வீட்டுக்காரன் இல்லாத சமயத்தை கணக்கிட்டு செக்யூரிட்டி கம்பெனியில் வேலை செய்யும் ஓவெ-(இவனது வேலை ப்ரௌன்  வீட்டினுள் நுழையும் சமயம் அங்குள்ள செக்யூரிட்டி கேமராக்களை தற்காலிகமாக செயலிழக்க வைப்பது)  என்பவனுடன் சேர்ந்து அசலை மாற்றி வைத்து திருடுகிறான்.

ப்ரௌனின் மனைவி டயானா பிள்ளை பெற்றுக்கொள்ள நினைக்கிறாள் ஆனால் அதில் அவனுக்கு விருப்பம் இருப்பதில்லை,அது சம்பந்தமாக அவர்களுக்குள்ளே அடிக்கடி சண்டை நிகழ்கிறது.மேலும் பிரௌனிற்கு லோட்டே(Lotte) என்ற பெண்ணுடனும் தொடர்பு உண்டு.ஒரு முறை டயானா,தன்னுடைய ஓவியக்கண்காட்சியின் போது பெரும் பணக்காரனான க்ளாஸ் கிரேவே(Nikolaj Coster) என்பவனை ரோஜர் பிரௌனிற்கு அறிமுகப்படுத்துகிறாள்.பாத்பைண்டர் (pathfinder) என்ற கம்பெனிக்கு CEO தேவை இருக்கிறது அதற்க்கு  இவர் பொருத்தமாக இருப்பார் என்று கூறி,க்ளாசை  தனியாக சந்தித்து  உரையாடுகையில் அவனிடம் பீட்டர் பால் ருபென்ஸ்(http://en.wikipedia.org/wiki/Peter_Paul_Rubens) என்ற புகழ் பெற்ற ஓவியர் வரைந்த விலை உயர்ந்த ஓவியம் ஒன்று இருப்பதை தெரிந்து கொள்கிறான்.

சரியாக திட்டமிட்டு க்ளாஸ்  இல்லாத நாளில் அவனது வீட்டிற்க்கு சென்று எப்போதும் போல ஒவியத்தை மாற்றுகிறான். பின்னர் அங்கிருந்து விலக எத்தனிக்கும்  பிரௌனிற்கு ஜன்னலருகே ஏதோ சத்தம் கேட்கிறது,போய் பார்க்கையில் வீதியில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.தன மனைவி குழந்தை பெறுவதை பற்றி பேசியதை நினைத்தவனாக அவன் மனைவியின் செல்போனை தொடர்பு கொள்ள முயல்கிறான்.....அது கிளாசின்  வீட்டு படுக்கை அறையில் ஒலிக்கிறது!தன்னுடைய மனைவிக்கும் அவனுக்கும் தொடர்பிருப்பது தெரிந்து நொந்தவனாக வீட்டிற்க்கு  வருகிறான்.அடுத்தநாள் ரோஜருடன் பணி புரிந்த ஓவெ அவனுடைய வீட்டில், அவனுடைய காரில் இறந்து கிடக்கிறான்,அவனை ஏரியில் வீசப்போய் அவன் உயிரோடு இருப்பது தெரிந்து அவனது வீட்டிற்க்கு கொண்டு செல்கிறான்.அங்கே க்ளாஸ் துப்பாக்கியுடன் வருகிறான்,அவனிடம் இருந்து தப்பி ப்ரௌன் ஓடத்தொடங்குகிறான்....அங்கே ஆரம்பித்து படம் முடியும் வரை இந்த ஓடல்-துரத்தல் நாடகம் தொடர்கின்றது அசாத்தியமான வேகத்துடன்,புதுவகையான காட்சியமைப்புகளுடன்.

க்ளாஸ் பணக்காரன் மாத்திரமல்ல,ராணுவ உளவாளியாக இருந்து பின் பதவி விலகியவன்.ராணுவத்திற்கு தேவையான பல ஆயுதங்களை தன்  முயற்சியில் கண்டுபிடித்தவன்,மிகவும் திறமைசாலி.இப்போது கிளாஸ் ஏன் ப்ரௌனை கொல்ல முயற்சிக்கிறான்?அவனுடைய விலையுர்ந்த ஓவியத்தை திருடியது தெரிந்து விட்டதா இல்லை டயானா மீதான மோகத்தாலா?அல்லது வேறு காரணம் எதாவதா?ப்ரௌன் தப்பிக்க ஒவ்வொரு ஊராக செல்லும் போது சரியாக அவனை தேடி க்ளாஸ் வருவதெப்படி?(இதற்க்கு க்ளு மேலே காணும் போஸ்டரில் இருக்கிறது),இதற்க்கு ப்ரௌனின் மனைவியும் டயானாவும் உடந்தையா?பிரௌனின்  காதலி  லோட்டே, உண்மையில் யார்? இப்படி எல்ல கேள்விகளுக்கும் உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டே ப்ரௌன் விடையை கண்டறிகிறான்.

த்ரில்லர் படங்கள் எல்லாம் மேஜிக் ஷோவை போல இருக்க வேண்டும்.முதலில் ஒன்றை காட்டி பின் அதை மறையவைக்க வேண்டும்,பின் அதை மீண்டும் தோன்ற வைக்க வேண்டும்.Headhunters இதை சரியாக செய்கிறது.ரோஜர் ப்ரௌன் ஒரு பெரும் அபாயத்தில் சிக்கி சாகும் அளவிற்கு போகிறான் பின் அதிலிருந்து மீண்டு,நிதானமாய் நிறைய யோசித்து தான் சிக்கிக்கொண்ட தளைகளை ஒவ்வொன்றாய் அகற்றுகிறான்.தன்னை சிக்க வைத்தவனை கிடுக்கிப்பிடியில் சிக்க வைக்கிறான்.அமெரிக்க வகை த்ரில்லர்களில் காணப்படும் மிகத்திறமையான சேஸிங்,நெருப்பை கக்கும் வெடிகுண்டு காட்சிகள்,தேவையில்லாத கிராபிக்ஸ் கிறுக்குத்தனங்கள் எதுவுமில்லை வெறும் இயல்பான காட்சிகளாலேயே,அதன் வேகத்தாலேயே, நடிகர்களின் நடிப்பாற்றலாலேயே  நாற்காலியின் நுனிக்கு கொண்டுவரும் படம்.

படத்தில் முக்கிய பாத்திரங்கள் மூன்று தான்-பிரவுன்,அவன் மனைவி டயானா,க்ளாஸ்.அதிலும் ரோஜர் பிரௌனாக நடித்திருக்கும் அக்சல் ஹென்னி யின் நடிப்பு அபாரம். ஆரம்பத்தில் வித்தகராக, புத்திஜீவியாக வருபவர் பின் மலத்தில்  புரண்டு, மலையில் இருந்து விழுந்து நம்மை பரிதாபம் கொள்ள  வைத்து,பின்னர் வேறு ரூபம் எடுக்கிறார். இவர் ஹாலிவூட் காரர்கள் கண்ணில் படாமல் இருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்.ஏனென்றால் அவரவர்களுடைய மொழியில் நன்றாக நடித்துக்கொண்டிருக்கும் ஹீரோக்களை "உலகப்புகழ்" ஆசையில் கூட்டி வந்து நாலு கை,மூன்று கண் மிருகத்தை சுடச்சொல்வார்கள் (உ.ம் A bitter Sweet Life படத்தில் நடித்த பயுங் ஹன் லீ என்ற அற்புதமான நடிகரை கூட்டிவந்து இதைத்தான் செய்யவைத்துக்கொண்டிருக்கிறார்கள்-நம்மூரிலும் இது உண்டு உ.ம் சாயாஜி ஷிண்டே,ஆஷிஷ் வித்யார்த்தி)

"ஹார்ட் இன் மௌத்" என்பார்களே அப்படி ஒரு படம் ஜோ லெஸ்போ எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட "Headhunters".

படத்தின் ட்ரைலர்

அன்புடன்
நான்.

4 Responses so far.

  1. விமர்சனம் அருமை. டிரைலரே மிரட்டலாக இருக்கிறது... படத்தை பார்த்துவிட வேண்டியதுதான்...

  2. Ibrahim A says:

    thanks for comments tamillinks360

  3. ரைட்டு... இந்த weekend-க்கு இன்னொரு படம் ரெடி...

  4. Ibrahim A says:

    வருகைக்கு நன்றி

- Copyright © துளி கடல் -