Archive for May 2014

அளவிலாக் காதல்:பரிசு ஒன்றை கேள்அத்தியாயம் 5
பரிசு ஒன்றை கேள்

ஊர் பஸ் ஸ்டாண்ட்,மசமசப்பானதொரு காலை நேரம்
அந்த வேகாத வெயிலிலும்,கசகசப்பிலும்,கூட்ட மிகுதியிலும் நீ மட்டும் திருஷ்டியை போல்,நீர்ப்பரப்பின் மீது வீசும் தென்றலை போல நடந்து வந்தாய்.நெருங்கி வந்த போது,ஒரு புன்னகையை அணிந்து கொண்டு ஏறிட்டாய்.
"பிறந்த நாள் வாழ்த்துக்கள்." என்று கைகளை பிடித்து குலுக்கினேன்.
"அப்பாடா...காலையிலிருந்து யார் யாரோ சொன்னார்கள் ஆனால் நீ சொன்னதை தான் முதலில் கேட்கவேண்டுமென இப்போது தான் காதை திறக்கிறேன்!"
"உடனே கிளம்புவோம் அப்போதுதான் சாயங்காலத்திற்குள் திரும்பி,உன்னை வீட்டில் கொண்டு சேர்க்க முடியும்,என்ன சொல்லி சமாளித்து வந்தாய்?" 
"எப்படியோ...உன்னை பார்க்க கிளம்ப வேண்டுமெனில் ஏதோ ஒரு பொய் வாயில் வருகிறது,அது பொருத்தமாகவும் அமைந்துவிடுகிறது"
-----------
 கூட்டமே இல்லாத பஸ்ஸில் ஏறி சீட்டில் அருகருகே உட்கார்ந்த போது,ஏதோ அரியணை ஏறும் ராஜாவை போல் கெத்தாக இருந்தது. 
நீ பேசத்தொடங்கி இருந்தாய் 
ஆனால் நான் எங்கே?
தேடுகிறேன்.....
இதோ!
எப்போதாவது சேர்ந்து கொள்ளும்
பேரை பெற்ற நம் தோள்கள்,
ஆடை மூடாத இடங்களில்
தொட்டுக்கொண்டு தீப்பிடிக்கும் கைகள்,
உரசி,பின் விலகிக்கொள்ளும் கால்கள்.
பறந்து பறந்து என் முகத்தில் விழுந்து
கூசச்செய்யும் உன் கற்றை கருங்கூந்தல்
என் மடி மீது உரிமையாய் கிடக்கும்
உன் ஆடைப்பகுதி.
இவற்றுக்கிடையில் நான் இன்பமாய் சிக்கிக்கிடந்தேன்.
உன் அண்மை,
ஊசியால் செலுத்தப்படும் கஞ்சா,அபினை போல்
கொஞ்சம் கொஞ்சமாக என்னை நினைவிழக்க வைத்துக்கொண்டிருந்தது. 
நீ பேசுவதெல்லாம் வெறும் வாயசைவாகவே காதில் விழுந்தது!
என் நிலைமை புரியாமல் பேசிக்கொண்டே இருக்கும் உன் மீது கோபம் வந்தது!

"இல்லையா?" என்ற கேள்வியுடன் நீ முடிக்கும் போது மாட்டிக்கொண்டேன்.
"உண்மையில் நான் இங்கு இல்லவே இல்லை"
"ஹும்..அப்போ நான் பேசியது?"
உன் பேச்செல்லாம் எனக்கு தேவையில்லை,கொஞ்சம் பேசாமலிரு!உன் ஸ்பரிசம் படும் போது என் காதுகள் செவிடாகி போகின்றன.
இன்றைய நாளை இப்படித்  தான் கழிக்க போகிறோம் என்று முடிவு செய்த பின்,இப்படி நீயும் நானும் அருகருகே அமர்ந்திருக்கும் காட்சி..அங்கே இங்கே நீங்காமல்-நீங்கமுடியாமல் இப்படி பக்கத்தில் இருக்கும் காட்சி-கட்டாய இருத்தல் தான் தினம் தினம் நினைவில் வந்தது.
"என்னை எங்கே கூடீட்டு போறியாம்?"
"போறோம்...பஸ் ஸ்டாண்ட்ல எறங்கறோம்,எதையாவது வயிற்றுக்கு போட்டுக்கொண்டு மறுபடியும் பஸ் ஏறுவோம்,ஊருக்கு 
திரும்ப வரோம்.இருக்கிற நேரம் அவ்ளோதான்....அப்புறம் உனக்கு எதாவது நான் வாங்கி தருவேன்..என்ன வேணுன்னு கேள்?"
"இப்படி அள்ளி அணைத்துக்கொள்ளும் தூரத்தில்..
கண்கொள்ளாக்காட்சியாக நீ இருக்கையில்..
கண்ணுக்கு தெரியாத சங்கிலியில் என்னை பிணைத்துக்கொண்டிருக்கையில்....
உன் வாசனையை சுவாசித்துக்கொண்டு  இருப்பதை விட
என்ன கேட்டு விடப் போகின்றேன்?
"இந்த நாஸ்டால்ஜியா டைலாக் எல்லாம் வேண்டாம் ......எதாவது கேக்கணும்...கேட்டு அடம் பிடித்து,தொல்லை செய்து,
கொஞ்சமாய்  எரிச்சல் மூட்டி என்னை முறைக்க வைத்து,ஏதாவது ஒன்றை கேட்டு வையேன் .......கேளேன்"
"மாட்டேன்......உனக்கு வாய்த்த நான் அப்படி தான்னு வச்சிக்கோயேன்.....எனக்கு நீ மட்டும் தான் தெரிவாய்....உன்னை சுத்தி இருப்பவையெல்லாம் எண்ணை காகிதத்தின் வழியாக பார்ப்பது போல் மங்கலாய் தான் தெரியும்"

பிறந்த நாள் பரிசு ஒன்றை 
நான் கேட்டே ஆகவேண்டுமென்கிறாய் நீ.

உன்னையே நான் 
என்னிடத்தில் வைத்திருக்கிறேன்.
அதை விட சிறந்த பரிசு ஒன்றை-முடிந்தால் 
கொடேன் பார்ப்போம்?
"முதன் முதலில் பார்த்த போது எப்படி இருந்தாய் நீ.....ஊமை பிள்ளையை போல்!
காதல் ரொம்ப பேச வைக்கிறது உன்னை" என்றேன். 
--------------------
பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்த போது,ஜனங்கள் வாலில் தீப்பற்றிக்கொண்ட மாதிரி ஓடிக்கொண்டிருக்க நீயும்,நானும் மட்டும் ஏதோ குளிர் பிரதேசத்து சுற்றுலா பயணிகள் போல மெதுவாய் நடந்தோம்.முதன் முதலில் நீ என்னோடு தனியாக இவ்வளவு தூரம்,இவ்வளவு நேரம்...அந்த நினைப்பே இனித்தது.

உன் கையை பிடித்து பொதுவில் நடக்கும் போது,
அழுக்குடை டிரைவர்கள்,
நொண்டிப்பிச்சைகாரன்,
பழக்கூடை சிறுமி,
ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்
இன்னும் உலகின் எல்லா மனிதர்களையும் 
ஒவ்வொருத்தராய் கூப்பிட்டு சொல்ல வேண்டும் போல் இருந்தது,
இதோ இந்த பேரழகி தான் என் காதலி,என் உயிர்,என் எல்லாமும்.
இவள் எனக்காகவே பிறந்தவள்,
எனக்காக மட்டும் பிறந்தவள்.
இவள் காற்றை போல்,
என் உள்ளும் இருக்கிறாள்,புறமும் இருக்கிறாள்.
இவள் என்னை நம்பி,என்னோடு கை கோர்த்து வீதியில் நடக்க...
இனம்புரியாத பெருமை,விளங்காத்திமிர்
காதலுக்கே உரிய திமிர்.

வில்லியம்ஸ் ரோட்டில் நடந்து,கண்டோன்மென்ட் வரை வந்து விட்டோம்,பேச்சுப்போக்கில்.
நாமிருவரும் சேர்ந்து நடக்கையில்
நீ வலது காலை முன்னெடுத்து வைக்கையில்
நான் இடது காலை எடுத்து வைப்பேன்.
ஏன் தெரியுமா?
அப்பொழுது தான்
ஒவ்வொரு அடி வைத்தலுக்கும்
நம் தோள்கள்
சாய்ந்து,நெருங்கி,உரசி,விலகும்
===================
வழியில்...
குப்பலான உடைகளுடன்,குச்சி கைகால்களுடன்,ஒடுங்கிய முகத்துடன் ஒரு பிச்சைக்காரப்பெண்,பசிக்கிறதென காசு கேட்டாள்.மூன்று நான்கு நாள் சாப்பிடாததன் தாக்கம் அவள் கண்களில் தெரிந்தது.
" ஏதாவது வாங்கிக்கொடுத்தால் சாப்படறிங்களாம்மா ?" என்று கேட்டு,கையோடு அந்த பெண்ணை அழைத்துக்கொண்டாய்,ஹோட்டலில் காவலாளி தடுத்தபோது "என்னோடு வந்திருக்காங்க" என்று தயக்கமின்றி சொன்னாய்.பணியாளன் அந்தப்பெண்ணை வேரிடத்தில் அமர வைத்தபோது "அவங்க என்ன கேட்டாலும் கொடுங்க" என்று விட்டு,என்னெதிரே வந்து அமர்ந்து கொண்டு "ச்ச...ரொம்ப பாவமில்லை?" என்றாய்.வைத்த கண்ணெடுக்காமல்,பேச்சில்லாமல் தலையாடினேன்.
----
கழுவிய தட்டை மீண்டும் ஒரு முறை கழுவி தந்தாய்.....நீ சாப்பிடுவதை விட்டு நான் சாப்பிடுவதையே நிறைய நேரம் கவனித்துக்கொண்டிருந்தாய்...சரிந்து விழும் கை வளையல்களை அடிக்கடி உன் தந்தக்கைகளில் ஏற்றிக்கொண்டபடியே நறுவிசாக உணவை எடுத்து வாய் பிளந்து ஊட்டிக்கொண்டாய்.....
"எப்படி அதை செய்யத் தோன்றியது உனக்கு...பணமிருந்தால் கூட அதை செய்ய ஒரு மனது வேண்டும்... நானும்  எப்போதாவது  சில்லறையை வீசி எறிவதுண்டு...பைசா இல்லாத போது வேறு பக்கம் திரும்பிக்கொள்வேன்"
"ஒரு நாள் முழுக்க சில்லறை சேர்த்தாலும் அவர்கள் ஒரு வேளை தானே சாப்பிட முடியும்....நம்மால் செய்ய முடிந்த உதவி,ரொம்பச்சாதாரண உதவி..ஒரு வேளை உணவு.....எல்லாருக்கும் இதையே செய்ய, இதை தொடர்ந்து செய்ய நாம்  இன்னும்  மகான்களாக ஆகவில்லை ஆனால் பசியென்று கேட்டு வந்தபின் அவர்களை கண் கொண்டு பார்க்க முடிகிறதா? எனக்கு தாங்காதுப்பா"  

இதனை நாள் சதையும் ரத்தமுமான ஒரு பெண்ணை நேசித்து,பித்து பிடித்து அவள் பின்னால் அலைவதாக நினைத்துக்கொண்டிருந்தேன்,அது தவறு....நான் நேசிப்பது ஒரு தேவதையை.
வெளியில்  வந்த  போது ஜனங்களை  ஜாதி,மதம் பார்க்காமல் வெயில் வாட்டிக்கொண்டிருந்தது.
 ----
"ஏதாவது கேளேன்" என்றேன்.
"கேட்கட்டுமா..நான் உன்னிடமிருந்து எதிர்ப்பார்ப்பதை?"
"கார்,பஸ்,வண்டிகள்,ஜனங்கள்,கூட்டம்,கடைத்தெரு-இவை நம் மூளையில் இருந்து கழண்டகல்வது போல என்னை இறுக்கிக்கட்டிக்கொள்ளேன்,இரண்டு  நிமிடம் கழித்து விட்டு விலகினால் போதுமானது.
"செய்யட்டுமா?" நெருங்கி வந்தேன்.
"ரொம்ப தைரியம் தான்" நெஞ்சில் கைவைத்து தள்ளி விட்டாய்.."தப்பு....இவ்வளவு பக்கத்தில் வரவே கூடாது"
"ஏதாவது கேளேன்...உண்மையாக...கெஞ்சுகிறேன் அல்லவா?"
"உலகின் சிறந்த பரிசுகள் எதுவும் விலை கொடுத்து வாங்கப்பட்டதில்லை"
"தெரியும்.ஆனால் இந்த நாளை,உன் பிறந்த நாளை நாள்காட்டியில் பேனாவால் வட்டமிட்டு குறிப்பது போல்  போல் ஏதேனும் ஒரு பொருளால் குறித்துக்கொள்வோமே!"
"அச்சோ.... ரொம்பக்கெஞ்சாதே நீ என்னிடம்.....இதை எடுத்துக்கறேனே"
தங்கநிறத்தில்,லேசான பூ வேலைப்பாடுகளுடன் கூடிய மரத்தாலான ஒரு போட்டோ ப்ரேம்.வாங்கி கையிடுக்கில் வைத்துக்கொண்டாய்.
"இதென்னதுக்கு?நம் படங்களை மாட்டி வைத்துக்கொள்வாயா? உன் வீட்டில் அதுவும் முடியாதே?,பிரச்சனை ஆகுமே?!"
"இல்லை இதை காலியாகவே மாட்டி வைத்துக்கொள்வேன்,என் உளச்சிந்தனையை பிரதிபலிக்கும் உன் முகம் உள்ளே இருப்பதை போல் கற்பனை செய்து கொள்வேன் நேரத்திற்கு தகுந்தாற்போல...அது போதுமே"
பணம் கொடுத்து நடக்கும் போது  கேட்டாய் "இதுவரை சிறந்த பரிசாக எதை நீ நினைக்கிறாய்?"
"ஒரு திருமண விழா,அங்கே உன்னை காணும் ஆவலில் ஒளிந்து ஒளிந்து உன் பின்னேயே  வந்து  கொண்டிருந்தேன், அப்போது உனக்கு அது தெரியாது.திடீரென நீ ஜனச்சந்தையில் மறைந்து போனாலோ,அல்லது  நான் உன்னை தவறவிட்டாலோ வலியெடுக்கும் நீ மறைந்த அந்த நொடிகள் தாளாத  தாகத்தை ஏற்படுத்தும்....இன்று வரையில் நீ எனக்கு  தந்த மிகச்சிறந்த பரிசு அந்த வலி தான். 
-----
ஜுரம் வந்த முதியவன் போல அந்த பஸ் கூட உன் ஊரை நோக்கி மெதுவாய் தான் நகர்ந்தது.
"இன்றைக்கு முழுதும் சந்தோஷமாக இருந்தியா?"
"என்ன கேள்வி இது? நீ என்னருகில் இல்லாத போது,உன் நினைவுகள் ஒன்றே அளவில்லா சந்தோஷத்தை தரும்,சில நேரங்களில் யாராவது என்னிடம் பேச முனைகையில், நான் அவர்களுக்கு  பதிலளிக்க  வேண்டிய கட்டாயத்தில்  உன்  நினைவுகள்  தடைபடும்...அப்படி எந்தத்தொல்லையும் இல்லாமல் இன்று முழுவதும் குரங்கு குட்டியை போல என்னை சுமந்து அலைந்து  கொண்டிருந்தாய்...பின்னே?அதுவுமில்லாமல் உன்னுடைய ஒவ்வொரு செயலையும் உன் மீதான பார்வையை நொடி கூட விலக்காது எவ்வளவு ரசித்தேன் தெரியுமா?

உன்னுடைய எல்லா செயலிலும் 
நான் ரசிக்கும் நீ 
தெரிந்து கொண்டே இருக்கிறாய்.

இன்று எத்தனை முறை
பார்த்து நட,பார்த்து வா,பார்த்து இறங்கு-என்று
என் மீது அக்கறை காட்டினாய்
என்பதை எண்ணத்தொடங்கி
எண்ணிக்கை விட்டுப்போனது.

சாலையை கடக்கையில்
என்னை சிறுமியென ஆக்கி-தோள்களை பற்றி
பதற்றமாய் இழுத்துச்சென்றாய்.

பக்கம் பக்கமாய் நடக்கையில்
போக்குவரத்து இல்லா பக்கம்
என்னை நடக்க வைத்தாய்,
ஏதாவது இடித்தாலும்
உன்னை இடிக்கட்டுமென்று.

இதோ இப்போதும் கூட
ஒவ்வொருமுறையும்
பேருந்து அதிர்ந்து குலுங்குகையில்
அனிச்சை செயலாய்-என்னை
பாதுகாக்கும் பதற்றம்
தோன்றுகிறது உன்னில்.

இன்று முழுக்க நீ  

என்னை நெருங்கவுமில்லை.
என்னை விட்டு விலகவுமில்லை

இருட்டத்தொடங்கியது.பேருந்து வெளிச்சம் நெடுஞ்சாலை புளியமரங்களின் மீது பட்டுத்தெறித்து அடுத்த மரம் அதற்க்கடுத்தது என்று தாவியோடியது. விளையாட்டு போல நானும் அதை தொடர்ந்தேன்.நீ என் தோள்  மீது சாய்ந்து கண்களை மூடியிருந்தாய்.இன்னும் சில மணி நேரங்களில் உன்னை பிரியும் வலியை  மறைக்க நான் என் விளையாட்டை தொடந்தேன்.

பேருந்து இப்போது வேகமெடுத்திருந்தது.  


அன்புடன் 
நான் 

- Copyright © துளி கடல் -